.
பகுத்தறிவின் பயனாய், ஆளுமைத்திறனால், கொஞ்சம் கொஞ்சமாய் உலகை வசப்படுத்தி, காட்டு உயிர்களைக் கட்டுப்படுத்தி மனித விலங்கின் ஆளுமை பேரளவில் கூடி, இன்று மனிதன் பூவுலகின் 'தாதா' ஆகிவிட்டான் என்றால் அது மிகையாகாது. தன் அன்றாட வாழ்வின் வசதிக்காக, நாளும் இப்புவியைச் சுரண்டும், சீரழிக்கும் வேகம், ஒரு நாள் புவியின் பெருங்கோபத்தைச் சந்திக்க வழிவகுத்து வருகிறது. சென்ற காலத்து சுனாமியும், நர்கீஸூம் அவற்றின் சொற்ப முன்னோடிகள் தாம்.
.
எல்லா வளமும் ஆற்றலும் எடுத்துத்தரும் இப் புவியின் ஒரு கூறாய் இருந்து நாமும் சுகித்து, நம் சந்ததிக்கும் இவற்றை விட்டுச் செல்ல மெனக்கிடுதல் காலத்தின் கட்டாயம். கடைசி அறைகூவலும் கூட. 'சுற்றுச்சூழல்' அக்கறைகள் என்றாலே, சுடச்சுட பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு, ஒரு சில மேதாவிகள் மட்டும் மோவாய்க்கட்டையை சொரிந்து கொண்டு நட்சத்திர விடுதிகளில் விவாதிக்கும் விஷயம் என்று தான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். வைரமுத்து சொன்னதுபோல, "ஊரை பற்றி எரியும் நெருப்பு தன் சட்டைப் பைக்கு எட்டாதவரை எட்டிப்பார்க்காத இனம் - நாம்'' என இருப்பதில் அர்த்தமில்லை. நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோரின் INCONVENIENT TRUTH என்னும் ஆவண குறும்பட கூற்றுப்படி மயிலாப்பூரும் தற்போது வரிந்துகட்டிக்கொண்டு வளரும் சென்னையின் Old Mahabalipuram Road கணினி நகரங்களும் முல்லைத் தீவாய், கச்சத்தீவாய் பிரியும் சாத்தியம் அதிகம்தான்.
.
மழை மறுக்கிறது, மான்சூன் பொய்க்கிறது, வேனில் கொதிக்கிறது, நீர் வற்றுகிறது, நிலம் நகர்கிறது, கடல் உள்வாங்குகிறது, வானத்தில் ஓட்டை என்று புலம்பிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தனிநபராகிய நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் எப்படி பங்களிக்க முடியும் என்று பார்க்கலாம். .
வீட்டிலுள்ள ஒரு குண்டு பல்பை அகற்றிவிட்டு C.F.L (Compact Fluroscent Light) என்னும் குறுங்குழல் பல்பை போடுவதன் மூலம் ஒரு வருடத்துக்கு 75 கிலோ கார்பன் - டை - ஆக்ஸைடை தடுக்கலாம். புவி வெப்பமடைதலுக்கு இந்த கார்பன் கழிவுதான் தலையாய காரணம்.
.
கைக்கு எட்டும் தூரத்துக்கெல்லாம் வண்டியைக் கிளப்பாமல், வேக நடையில் செல்வது உலகுக்கும் நல்லது, உடலுக்கும் நல்லது. 45 நிமிட நடைப்பயணம் 1 கிலோ கார்பன் - டை - ஆக்ஸைடில் இருந்து உலகைக் காக்கும். 100 கலோரியைச் செலவழித்து உடலைக் காக்கும்.
.
உங்கள் பயணம் பெரும்பாலும் பொது வாகனத்தில் அமைவது (பேருந்து, மின்சார ரயில்) சிறப்பு. பெரிய சொகுசு காரில் தனி ஆவர்த்தனம் செய்வது உங்களுக்கு வியர்க்காமலிருக்கக் கூடும். ஆனல் உலகையே வியர்க்க வைக்கிறது. கூட்டாகப் பயணிப்பது இதைத் தடுக்கும்.
.
அன்றெல்லாம் கடைக்குப் போகும்போது பழங்கள் வாங்க கூடை, காய்கறி வாங்க தனிப் பை, கிழங்கு வாங்க துணிப் பை என பயணித்தோம். ஆனால் இன்று நாம் பிளாஸ்டிக் பைகளில்' அள்ளி வருவதால், மறுசுழற்சியற்ற பிளாஸ்டிக்குகள் உலகை மக்க' வைக்கின்றன. 'மஞ்சப் பை'க்கு மாற மனசு மறுக்கிறதென்றால், அழகியல் பொருந்திய துணிப் பைகள், நார் பைகளைப் பயன்படுத்துங்கள்.
.
வீட்டில் குளிக்க வெந்நீரைப் பயன்படுத்துவதில் அதிகம் மின்சாரம் செலவாகிறது. வெந்நீர் உடலுக்குக் கெடுதி, வெதுவெதுப்பான நீரைக் குளிர் காலத்தில் மட்டும் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் குளிர்நீரே உடலுக்கு நல்லது. உங்கள் வீட்டு, அலுவலக குளிர்சாதனப் பெட்டியில் வெளி வெப்பநிலைக்கு 2 டிகிரி மட்டும் குறைவாக வையுங்கள். வெளியில் 30 டிகிரி என்றால் 28 டிகிரியில் சுகமாய்' இருக்க இயலும். இதன்மூலம் ஏறத்தாழ ஒரு நபர் 1 டன் கார்பன் கழிவைத் தடுக்க முடியும்.
.
ஒரு மரம் தன் வாழ்நாளில் 1 டன் கார்பனை உறிஞ்சிவிடும். புவி வெப்பமடைதலை குறைக்க முதல் வழி, வீட்டைச் சுற்றி அல்லது பிளாட்டைச் சுற்றி மரம் வளர்ப்போம். உங்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயர் காற்றைச் சரிபார்த்து சீராக வையுங்கள். இதன்மூலம் 3 சதவீத மைலேஜ்' ஐ கூட்டி கார்பன் கழிவைத் தடுக்க முடியும்.
.
மேலே சொன்ன எல்லாம், செய்யத் தேவை முனைப்பு, அக்கறை, மெனக்கெடல் மட்டுமே. அப்படிச் செய்ய மறுத்தால் உங்கள் பேரனுக்கோ பேத்திக்கோ "ஓர் ஊரில் ஒரு பூமி இருந்துச்சாம். அங்கே நிறைய மரம் செடி, காக்கா இருந்துச்சாம்'' என நிலவிருந்து கொண்டு கதை சொல்ல வேண்டியிருக்கும்.
(இன்று சுற்றுச்சூழல் தினம்)
-மரு. கு. சிவராமன்
நன்றி தினமணி, 05-06-2008
1 கருத்து:
//'சுற்றுச்சூழல்' அக்கறைகள் என்றாலே, சுடச்சுட பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு, ஒரு சில மேதாவிகள் மட்டும் மோவாய்க்கட்டையை சொரிந்து கொண்டு நட்சத்திர விடுதிகளில் விவாதிக்கும் விஷயம் என்று தான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டுள்ளனர்.//
உண்மைதான்.
நடைமுறை வாழ்வி்ல் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.
நல்ல பதிவு.
கருத்துரையிடுக