புதன், ஜூன் 04, 2008

ஆக்ஸிஜன் வாங்கலியோ.....ஆக்ஸிஜன்

"உனகென்னப்பா.. பிள்ளைகளை நல்லாப் படிக்கவச்சு, கல்யாணமும் செய்துவைத்துவிட்டு ஆளுக்கொரு வீடும் வாங்கிக் கொடுத்தாச்சு... பதவி ஒய்வு காலத்தை ":ஹாயாக" கழிக்கவேண்டியதுதானே" என்று இனிமேல் யாரையாவது கேட்கும்போது, கூடவே இதையும் கேட்கவேண்டிய காலம் வந்து விட்டது "உன் பிள்ளைகளுக்கும் வரவிருக்கும் சந்ததியினருக்கும், அவர்கள் காலம் முழுதும் குடிக்க நீரும், சுவாசிக்க ஆக்சிஜனும் மீதம் வைத்திருக்கிறீர்களா? " என்று!
.
ஆம் ... உலகின் நிலமை நாளுக்கு நாள், மோசமாகிக் கொண்டே வருகிறது.
.
எத்தனை அழகான பூமி இது? நீர் நிலைகள் எத்தனை விதம்! உயரத்திலிருந்து கொட்டும் அருவி, பூமியிலிருந்து வரும் நீருற்று, சல சல நீரோடை, பாய்ந்து வரும் ஆறுகள், இன்னும் குளம், ஏரி, வாய்க்கால், குட்டை, பனியாக மாறி மலையின் தலையில் தொப்பி, வான் மழை, எல்லாவற்றுக்கும் மேல் நம் பூமியைய் பெரும் பகுதி சூழ்ந்திருக்கும் கடல், அதுவும் கம்மென்று சாதாவான நீர்ப் பரப்பாக இல்லாமல் சத்தத்துடன் ஓடி விளையாடும் அலைகளுடன் கூடிய ஸ்பெஷல் மசாலா போன்ற சமுத்திரம்!
.
இவை மட்டுமா? மண், மலை, வானம், ஒரு நொடிப் பொழுதே வீசினாலும் இதம் கொடுக்கும் தென்றல், தாவரங்கள், பூக்கள், காய், கனி, கிழங்கு, பறப்பன, ஊர்வன, நீரில் உள்ள உயிரினங்கள், கொசுறாய் பட்டாம்பூச்சி, வானவில், இது எல்லவற்றுக்கும் மேல், மனிதர்களாகிய நாம்!
.
இத்தனை அழகான பூமி இரண்டு நூற்றாண்டுகளாக கொஞ்சம் வேகமாகவே அழிந்து வருகிறது."நான் இல்லப்பா..." இப்படிச் சொல்லி யாரும் தப்பிக்க்க முடியாது. நாம் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்- டை-ஆக்ஸ்ட் முதல் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்களும் உலகத்திற்கு கேடு விளைவிக்கிறது.
.
சரி, என்னாச்சு இந்த பூமிக்கு?
.
பூமிக்கு நம் மேல் செல்லக் கோபம் வந்து விட்டது! தென்றல் புயல் காற்றாகவும், சூரைக்காற்றாகவும், அலைகடல் சுனாமி போன்ற ருத்ர ரூபம் எடுக்கத் தொடங்கி விட்டது. ஒரே நேரத்தில் ஒரு தேசத்தில் வெள்ளக் காடாகவும் பக்கத்திலேயே உள்ள இன்னொரு தேசத்தில் வறட்சியாகவும் மாறி வருகிறது. மெல்ல மெல்ல உலகம் சூடாகி கொண்டே வருவதால் துருவங்களில் பனி பாறைகள் உருக ஆரம்பித்துவிட்டன. இதனால் கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும் அபாயம் எற்பட்டுள்ளது. இதனால் முதலில் பாதிக்கப் படுவது மாலத்தீவு போன்ற தீவு நாடுகள்தான். அப்படியே வருடப் போக்கிலோ, சில நூற்றண்டுகளிலோ எல்லா கடலோர பிரதேசங்களும் கடல் ஏப்பம் விடும் என்பது ஆரய்ச்சியாளர்களின் கணிப்பு!
.
ஏன் இப்படி?....
.
முதற்காரணம், இரண்டாம் உலகப்போருக்குப் பின் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு ஜனத்தொகை கன்னாபின்னாவென்று எகிறிவிட்டது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது தவிர சின்னதும் பெரிதுமாய் நிறைய காரணங்கள் இருந்தாலும் மிகப்பெரிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதுதான்!
.
வீட்டிலிருந்த ஒரு மரத்தையும் கார் நிறுத்துவதற்காக வெட்டுவதில் தொடங்கி, வீடெல்லாம் இலைக் குப்பை, விறகுக்காக, மரச்சாமான்கள் செய்ய, இப்படி எதுகெடுத்தாலும் "வெட்டு மரத்தை" என்று நம்மையறியாமல் உலகிற்கே குழி வெட்ட ஆரம்பித்து இப்போது பூதமே கிளம்பிவிட்டது நம் உலகை அழிக்க!
.
வெட்டாமல் விட்டு வைத்தாலோ, அல்லது மரம் வளர்த்தாலோ என்ன நன்மை? ... தெரிந்தால் யாரையும் "மரம் போல் நிற்காதே" என்று சொல்லவே மாட்டோம்.
.
காய், கனி, நிழல், நாம் சுவாசிக்க ஆக்சிஜன் மற்றும் உலகை உஷ்ணம் தாக்காமல் காக்கும் போர்வையாகவும், ஏன் அரணாகவும் இருக்கிறது மரங்கள். இந்த அரண் உடைய உடைய, பூமி உஷ்ணம் அதிகரித்துக் கொண்டே வரும். என்ன செய்வதென்று குழம்பி பூமி ஏடாகூடமாக "ரியாக்ட்" செய்யும் விளைவு... நமக்கே தெரியும்.
.
நம் முன்னோர்கள்தான் எத்தனை புத்திசாலிகள்! அரச மரம், வேப்ப மரம் என்று மரங்களை தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்! ஒரு ஆறுதலான விசயம் என்னவென்றால் இன்னமும் நம்மில் ஒரு சிலர் மரங்களை போற்றி பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் பொருட்டு இன்னமும் எல்லோர்க்கும் கொஞ்சமேனும் பெய்கிறது மழை!
.
சரி புலம்பி என்ன செய்வது, இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நம்மால் முடிந்த வரை மரங்களை காப்போம்.
.
இன்னொரு முக்கியமான விசயம். அமெரிக்க முன்னால் துணை ஜனாதிபதி "அல் கோர்" அளித்திருக்கும் "இன்கன்வீனியன்ட் ட்ருத்" என்ற டாகுமென்டரி படத்தை பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்கும்படி செய்யவேண்டும்! எதிர்காலம் குழந்தைகள் கையில்! கட்டாயம் அவர்கள் பார்த்துகொள்வர்கள்.
.
உலகைப் பற்றிய கவலை இப்பொது பலரையும் தொற்றிக்கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை விஷயங்களும் பலருக்கும் தெரிந்ததுதான். அதற்குண்டான தீர்வும் பலர் மனதிலும் இருக்கும். தீர்வுகளை பகிர்ந்துகொள்ளுங்களேன்..ப்ளீஸ்...

-நிலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக