சனி, அக்டோபர் 29, 2011

காங்கிரஸ்காரர்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் பதில் அளிக்கவும்!#தூக்குக் கயிறே என் கதை கேள்! (11)

எங்களின் தூக்குக்கு எதிராக மொத்தத் தமிழகமும் கைகோத்தபோது, காங்கிரஸ் காரர்கள் மட்டும் கோபத்தோடு எதிர்த் தார்கள். 'மறக்க முடியுமா... மன்னிக்க முடியுமா?’ என உரக்கக் குரல் எழுப்பினர். ராஜீவ் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் திரட்டி வந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்மையாகவே ராஜீவ் காந்தியின் மீது நேசமும் பாசமும் பூண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களே... மாண்பையும் மனிதநேயத்தையும் மறவாதிருக்கும் நியாயவாதிகளே... உங்களிடம் எனது நீதிக்கான - உண்மைக்கான சில கேள்விகளை சமர்ப்பிக்கிறேன். உங்களை நீதிபதிகளாக மாறும்படி நான் வேண்ட வில்லை. குறைந்தபட்சம் நீங்கள் உண்மை என்று தவறாக நம்பிக்கொண்டு இருக்கிற... எம்மைப்பற்றிய முடிவிலும் அபிப்ராயத்திலும் சிறு மாறுதல் ஏற்பட்டால்கூட, எமக்கு அதில் நிறைவுதான்.

இதை வாசிக்கும் கணத்தில் மட்டும் என்னை ராஜீவ் காந்திக் கொலையாளி எனப் பார்க்காது, தூக்குக் கயிற்றின் கீழ் நிற்கும் ஒரு துரதிர்ஷ்டக்காரனாக மட்டுமே பாருங்கள். என்றோ ஒரு நாள் உங்களது நெஞ்சத் தராசுகளில் எங்களின் நியாயத் தட்டு ஜெயிக்கும். உங்களது மனச்சாட்சிக் கதவுகள் எங்க ளின் ஒப்பாரிகளால் உடைபடும். அன்று எம்மை நிரபராதிகள் என்று நிச்சயம் நீங்கள் நம்புவீர்கள். இதோ என் கேள்விகள்...

1. 'இனிமேல் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்கு வர மாட்டார்’ என 11.5.91 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் அந்த முடிவை மாற்றி ராஜீவை தமிழ்நாட்டுக்கு கூட்டிவரக் காரணமானவர் யார்? அது ஏன் இன்று வரை மறைக்கப்படுகிறது? ராஜீவ் வந்தபோது வாழ்ந்த காங்கிரஸ் தலைவர்கள் யாருமே இப்போது இல்லையா? இல்லை, உண்மையைச் சொல்லும் வல்லமை அவர்களுக்கு இல்லையா?

2. ராஜீவ் தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகிறார் என்ற முடிவு மிக ரகசியமாகவே இருந்தது. பத்திரிகைகளில் அதுபற்றி அனுமானச் செய்திகூட வெளிவராத நிலையில், சிவராசனுக்கு மட்டும் ராஜீவ் வருகை குறித்து எப்படித் தெரிந்தது? முன்கூட்டியே அதை சிவராசனிடம் சொன்ன காங்கிரஸ் கறுப்பு ஆடு யார்?

3. 21.05.91 அன்று ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியின் பொதுக் கூட்டத்துக்கு போலீஸார் முதலில் அனுமதி அளித்த இடத்தை திடீரென ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஏன் மாற்றினார்கள்? இடத்தை மாற்றச் சொன்னவர்கள் யார்? ராஜீவ் வழக்கைத் துப்புத் துலக்கிய அறிவார்ந்த பெருமக்கள் ஏன் இடமாற்றம் செய்தவர்களைப்பற்றி விசாரிக்கவில்லை?

4. ராஜீவ் ஒரு சாதாரணத் தலைவர் இல்லை. அவர் ஒரு கூட்டத்துக்கு வருகிறார் என்றால், அவரை நேரில் யார் யார் பார்க்க முடியும், அவருக்கு மரியாதை செலுத்தும் அனுமதி யாருக்கெல்லாம் உண்டு என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது வழக்கம். ஆனால், ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் அத்தகைய முன்னேற்பாடுகளை ஏன் செய்யவில்லை? ராஜீவுக்கு மாலை அணிவிப்பவர்களின் பட்டியலை ஏன் முறையாகப் பதிவு செய்யவில்லை?

5. அகில இந்தியத் தலைவருக்கு மாலை அணிவிப்பவர்களை பரிசோதனை செய்வது எப்போதுமே வழக்கம். ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் உரிய பரிசோதனை நடத்த ஏன் பெண் போலீ ஸாரையும், மெட்டல் டிடெக்டரையும் ஏற்பாடு செய்யவில்லை? உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

6. ராஜீவ் காந்தியின் மெய்க்காவல் அதிகாரியிடம் அவரது கைத்துப்பாக்கி இல்லாமல் இருந்தது எப்படி? கைத்துப்பாக்கியை வைத்துக் குண்டு வெடிப்பை எப்படித் தடுத்திருக்க முடியும் என நீங்கள் கேள்வி எழுப்பலாம்... தணு இடுப்பில் கட்டிய குண்டுடன் வருவது தெரிந்திருந்தால், நிச்சயம் அவரைச் சுட்டாவது வீழ்த்தி இருக்க முடியும். மெய்க்காவலர்களை நம்பித்தானே தலைவர்கள் வெளியில் செல்கிறார்கள். அப்படி இருக்க, கைத்துப்பாக்கி எடுத்து வராமல் அந்த அதிகாரி எப்படி பாதுகாப்புக்கு வந்தார்? கைத்துப்பாக்கி எடுத்து வராதபடி அவரைத் தடுத்தவர்கள் யார்?

7. தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து உண்டு என உளவுத் துறை அறிக்கைகள் முன்னதாகவே அனுப்பப்பட்டு உள்ளன. இருந்தும் உரிய பாதுகாப்பு வழங்கப்படாதது எப்படி? உளவுத் துறை தகவல்களையே உதாசீனப்படுத்திய சக்தி எது?

8. ராஜீவைக் கொலை செய்ய வந்த தணு, லதா பிரியகுமாரின் காரில் வந்து இறங்கியதையும், பின்பு அவருடனும் லதா கண்ணனுடனும் தணு பேசிக்கொண்டு இருந்ததையும் சம்பவ இடத்தில் பார்த்ததாக காங்கிரஸ் பெண்மணி குமுதவல்லி பத்திரிகைகளில் பேட்டி அளித்தார். அதோடு, வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன்களிலும் வாக்குமூலம் அளித்தார். சி.பி.ஐ., எஸ்.ஐ.டி-யினர் அவரைச் சாட்சியாகச் சேர்த்து இருந்தும், நீதிமன்றத்துக்கு சாட்சியாக அழைத்து விசாரிப்பதை தவிர்த்துவிட்டனர். இந்த விடயங்கள் ஏன் கண்டுகொள்ளப்படவில்லை? யாரைக் காப்பாற்றுவதற்காக இந்த முக்கிய விடயங்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டன?

9. சம்பவ இடத்தில் இறந்த ஹரிபாபு எடுத்த புகைப்படங்களின், இறுதிப் படத்தில் தணு தோளின் முதுகுப் பக்கத்தில் இருந்து யாரோ ஒருவர் கைவைத்து தள்ளிக்கொண்டு இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அவர் யார்? தணுவை ராஜீவ் காந்தியின் அருகில் நெருங்கவைத்த அவரைப்பற்றி ஏன் சி.பி.ஐ-யினர் விசாரிக்கவில்லை? விசாரிக்க முடியாத அளவுக்கு அந்த நபரைக் காப்பாற்றியவர்கள் யார்?

10. சம்பவ இடத்தில் ஒரு போலீஸ்காரருக்கு 750 ரூபாய் பணம் கொடுத்துத்தான் ராஜீவ் காந்தி அருகில் போக முடிந்தது என சிவராசன் சொன்னதாக ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தில் சி.பி.ஐ-யினர் எழுதி வைத்துள்ளனர். அந்த போலீஸ்காரர் யார் என்று சி.பி.ஐ. விசாரிக்காதது ஏன்?

11. ராஜீவ் காந்தியைப் பொதுக் கூட்ட இடத்துக்கு அழைத்து வந்த கார், குண்டு வெடித்த மறுகணமே அந்த இடத்தைவிட்டு மறைந்துபோனதே... ராஜீவ் காந்திக்கு என்ன ஆனது என்றுகூடப் பார்க்காமல் அந்த கார் பறந்தது எப்படி? ஒருவேளை காயப்பட்ட நிலையில் ராஜீவ் கிடந்தால், அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டுபோக வாகனம் கிடைக்கக் கூடாது என்று விரும்பியவர்கள்தான் அந்த காரை உடனடியாகக் கிளம்பிப் போகவைத்திருக்க வேண்டும். ராஜீவ் காந்தி மீது பேரன்புகொண்ட காங்கிரஸ் பெரியவர்கள் இதுபற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை? ராஜீவ் காந்தி இறந்தாலும் பரவாயில்லை... தான் தப்பித்தால் சரி என எந்த ஓட்டுநராவது நினைப்பார்களா? கார் உடனடியாகக் கிளம்பிப் போனதுபற்றி ஏன் இந்தப் புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கவில்லை?

12. இது மிக முக்கியமான கேள்வி. ஓர் உள்ளூர் தலைவர் பொதுக் கூட்டத்துக்கு வந்தாலே, அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட அந்தத் தலைவரைச் சுற்றி இருப்பார்கள். ஆனால், ராஜீவ் காந்தி என்கிற மாபெரும் தலைவர் அந்தப் பொதுக் கூட்ட இடத்துக்கு வந்து இறங்கி மேடையை நோக்கி நடந்து போனபோதும், குண்டு வெடித்தபோதும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர்கூட அவருக்கு அருகில் இல்லாமல் போனது எப்படி? மற்றக் கூட்ட இடங்களில் எல்லாம் ராஜீவ் காந்தியைச் சுற்றி முண்டியடிக்கும் உள்ளூர்த் தலைவர்கள் அன்று மட்டும், அங்கு விலகி இருந்ததின் மர்மத்தை ஏன் காங்கிரஸ் அபிமானிகள் உணரவில்லை? இப்போது நான் சொல்வது கற்பனைகூட செய்யக் கூடாதது. ஆனாலும், ராஜீவ் கொலைச் சதியின் பின்னணியை விளக்க எனக்கு வேறு வழி இல்லை.

இன்றைக்குப் பிரசித்தியாக இருக்கும் ஏதாவது ஒரு அரசியல் தலைவரை மனதுக்குள் பாவித்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு கூட்டத்துக்கு வரும்போது குண்டுவைத்துக் கொல்லப்படுகிறார் என்றால், அவரை அடுத்திருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எத்தனை பேர் இறப்பார்கள்? நீங்கள் நினைக்கும் தலைவரோடு இரண்டாம் கட்டத் தலைவர்களையும் மனதுக்குள் நினைத்துப் பாருங்கள். ஆனால், ராஜீவ் என்கிற மாபெரும் தலைவனின் படுகொலை தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எந்தத் தலைவர்களையும் இம்மி அளவும் பாதிக்காதது எப்படி? மரணத்தை விடுங்கள்... சம்பவத்தின்போது அங்கே இருந்த காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் சிறு கீறல்கூட ஏற்படாதது எப்படி? சாதாரண மக்களையும் அப்போது ஆச்சரியப்படுத்திய - அதிரவைத்த கேள்வி இது. ஆனால், நாளாக ஆக இந்தக் கேள்வி எல்லோருடைய மனங்களில் இருந்தும் மறைந்துவிட்டது. ராஜீவ் காந்தி இறந்த துக்கம் தாங்காமல் இன்றைக்கும் கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்காரர்களின் மனங்களில் மட்டும் இந்தக் கேள்வி ஏன் எழவில்லை?

13. குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயம் அடையாத லலித் சந்திரசேகர் காயம் அடைந்ததாக மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்ட மர்மத்தையும், அவரது சிங்கள நண்பர் சம்பவ இடத்தில் இருந்து மாயமான மர்மத்தையும், அதுபற்றி உண்மைகளைக் கண்டறியாது சி.பி.ஐ. தவிர்த்துக்கொண்ட மர்மத்தையும்பற்றி ஏன் ஒரு காங்கிரஸ்காரர்கூட கேள்வி எழுப்பவில்லை?

14. அந்த பாரதூரமான சம்பவம் நடந்தவுடன் அந்த இடத்தில் இருந்த ஹரிபாபுவின் கேமராவில் இருந்த புகைப்படச் சுருள் முதன்முதலில் ஒரு பத்திரிகை வசம் போனதும், அதைப் பெறத் தாம் படாதபாடுபட்டதாகவும் இந்த வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரி கூறி இருக்கிறார். அப்படி என்றால், அந்தச் சம்பவ இடம் உடனே பாதுகாக்கப்படவில்லை என்றுதானே அர்த்தம்? இதைவைத்தே உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டதாக ஏன் குற்றம் சொல்ல முடியாது?

15. சம்பவ இடத்தில் ஹரிபாபுவால் எடுக்கப் பட்டதாகச் சொல்லப்படும் புகைப்படத்தில் உள்ள தணுவின் நெற்றியில் பொட்டு கிடையாது. ஆனால், அவர் இறந்துகிடக்கும் படத்தில் அவர் நெற்றியில் பொட்டு இருக்கிறது. ஒன்று, புகைப்படத்தில் இருக்கும் பெண்ணும் இறந்த பெண்ணும், வெவ்வேறு பெண்ணாக இருக்க வேண்டும். அல்லது, அந்த சம்பவம் நடந்த பின் இறந்த பெண்ணின் நெற்றில் யாரோ பொட்டு வைத்திருக்க வேண்டும். இந்த உண்மை குறித்து ஏன் விசாரிக்கப்படவில்லை? ஒரு மிக முக்கியக் கொலை வழக்கில் புகைப்பட ஆதாரங்களைக்கூட புலனாய்வு அதிகாரிகள் பொருட்படுத்தாமல் போனது எப்படி?

16. மேற்படி அதே புகைப்படத்தில் இருக்கும் தணுவின் தோளில் கைப்பை உள்ளது. அது சம்பவ இடத்தில் கைப்பற்றப்படவும் இல்லை; அதுபற்றி விசாரணை செய்யப்படவும் இல்லை. கொலை யாளியின் கைப்பை எவ்வளவு முக்கியமான ஒன்று... அது எப்படி மாயமானது? அந்தக் கைப்பை பற்றிய விசாரணை உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கலாம் என்பது சி.பி.ஐ-யினருக்கு எப்படித் தோன்றாமல்போனது? அந்தக் கைப்பையில் இருந்த ஏதாவது ஒரு பொருளாவது உண்மைக் குற்றவாளிகளை நோக்கி விசாரணை அதிகாரிகளைத் திருப்பி இருக்குமே... அப்படி இருக்க, அந்தக் கைப்பை குறித்த கவலை எவருக்குமே இல்லாது போனது ஏன்?

17. இத்தனை கேள்விகளுக்குப் பிறகும், 'சி.பி.ஐ-யினர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும்’ என கறைபடியாத காங்கிரஸ்காரர்கள் நம்பலாம். இதே சி.பி.ஐ. அதிகாரிகள்தான் யார் யாரையோ காப்பாற்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மீது பொய் வழக்குப் புனைந்து, பின்பு அம்பலப்பட்டுப்போனார்கள். ஒரு முன்னாள் பிரதமருக்கு எதிராகவே சி.பி.ஐ-யினரால் பொய் வழக்குப் புனைய முடியும் என்றால், கொடூர, காட்டுமிராண்டித்தனமான தடா சட்டத்தின் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அப்பாவிகள் எங்களை அதிகாரிகள் ஏன் பலிகடாக்கள் ஆக்கி இருக்க முடியாது? எங்களின் நிலையில் இருந்து ஒரு நிமிடம் யோசித்தாலே, உங்களின் மனோபாவம் மாற வாய்ப்பு இருக்கிறதே... அதை ஏனய்யா செய்ய மறுக்கிறீர்கள்? 21 வருடங்களை இழந்து தவிக்கும் எங்களுக்காகச் சில நிமிடங்களை இழக்கக்கூட உங்களின் இதயம் இடம் கொடுக்கவில்லையா?

காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர்விகடன், 02-நவம்பர்-2011

புதன், அக்டோபர் 26, 2011

முருகன் சொல்லும் கண்ணீர்... #தூக்குக் கயிறே என் கதை கேள்! (10)

ன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் என்கிற காரணத்துக்காகவே நளினி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். சம்பவ இடத் தில் நளினி எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த் தாலே, இது அவரைச் சிக்கவைப்பதற்காகவே புனையப்பட்ட கதை என்பது புலனாகும்.

அரசுத் தரப்பு ஆவணத்தில் 77-வது பக்கத்தில், 'சிவராசன் தமிழ்நாட்டுக்காரர் போல் பேசக்கூடிய ஆற்றல்கொண்டவர்’ என எழுதப்பட்டு உள்ளது. அவரே நன்கு தமிழ் பேசும்போது, மொழிப் பிரச்னைக்காக ஏன் நளினியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? அரசுத் தரப்பு சான்றுகளின்படி, குற்றமுறு சதியின் உறுப்பினர் ஹரிபாபுவும் (பத்திரிகைப் புகைப்படக்காரர்) அங்கு கூடவே இருந்துள்ளார். அவருக்கும் நன்றாகத் தமிழ் பேசத் தெரியும். 'காங்கிரஸ் பிரதேசப் பொறுப்பாளர் லதா கண்ணன் மற்றும் அவர் மகள் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்தில் நட்பாக இருந்தனர். (இதற்கு ஹரிபாபு எடுத்த புகைப்படமும் ஆதாரமாக உள்ளது). ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க நின்ற கூட்டத்துக்குள் சிவராசன், தணுவை நிறுத்த அவர்கள் முயற்சி செய்தார்கள். அதே நேரம் நளினியும் சுபாவும் கூட்ட இடத்துக்குப் போன பின் அங்கு இருந்த பெண்கள் பகுதியில் போய் அமர்ந்துகொண்டனர். ராஜீவ் காந்தி வந்து இறங்கிய வுடன் நளினியை சுபா அவசரகதியில் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டார். அப்போதுதான் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது!’ என்று அரசுத் தரப்பு ஆவணங்களிலேயே எழுதப்பட்டு உள்ளது.

சிவராசனுக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே உதவக்கூடிய நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? ராஜீவ் காந்தியை தணு நெருங்க சிவராசனே முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். தணு மாலை அணிவிக்க அனுமதி வாங்கியதும், ராஜீவ் காந்தி அருகில் அவர் நெருங்க மறைப்புக் கொடுத்ததும் சிவராசன்தான். ராஜீவ் காந்தி வந்து இறங்கிய உடனேயே நளினி அந்த இடத்தில் இருந்து சுபாவினால் வேகமாகக் கூட்டி வரப்பட்டார். இத்தனை விடயங்களையும் அடித்துச் சொல்லும் அரசுத் தரப்பு, எந்த விதத்தில் ராஜீவ் கொலையில் நளினிக்கும் பங்களிப்பு இருப்பதாகச் சொல்கிறது? நளினிக்கே கொலைச் சதி தெரிந்திருக்கவில்லை என்கிறபோது, எனக்கு எப்படி இதுபற்றித் தெரிந்திருக்கும்? நான் எந்த விதத்தில் அவரைக் கட்டாயப்படுத்தி இருக்க முடியும்?

7.5.91 அன்று சிவராசன், சுபா, தணு ஆகியோருடன் நானும் நளினியும் சென்னையில் நடந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பொதுக் கூட்டத்துக்குப் போனோம் என்றும், அங்கே கொலைச் சதிக்கான ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும் சித்திரிக்கிறது அதிகாரிகள் தரப்பு. அந்த கூட்டத்துக்குப் போனோம் என்பதற்கு எங்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும்தான் அதிகாரிகள் ஆதாரமாக வைக்கிறார்கள். ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய அந்தக் கூட்டத்தில் ஒத்திகை நடந்ததாகச் சொல்வது கொஞ்சமாவது பொருந்தக்கூடியதா? சரி, சிவராசன் அதனை ஒத்திகைத் தளமாகவே பாவித்து இருந்தாலும், அதை உறுதியாகச் சொல்ல அரசுத் தரப்பில் என்ன சாட்சி இருக்கிறது? ஆனால், என்னையும் நளினியையும் திட்டமிட்டு ஏமாற்றவே வி.பி.சிங் கூட்டத்துக்கு சிவராசன் அழைத்துக்கொண்டு போனார் என்பதற்கு நிறையச் சான்றுகள் இருக்கின்றன. கொடூரப் படுகொலையை நிகழ்த்த, தான் வரவில்லை என்பதையும், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் தனது எண்ணம் என்பதையும் சிவராசன் எங்களிடம் ஏற்படுத்த முயன்று இருக்கிறார். அதில், வெற்றியும் பெற்றார். 'வி.பி.சிங் கூட்டத்துக்குப் போனது மாதிரிதான் ராஜீவ் காந்தி கூட்டத்துக்கும் போக இருக்கிறோம்’ என்பதையும் சிவராசன் நம்பவைத்தார்.

சிவராசன் மேலிடத்துக்கு அனுப்பிய வயர்லெஸ் செய்தியைச் சுட்டிக்காட்டும் அரசுத் தரப்பு, 'எதிர் காலத்தில் இயக்கத்துக்கான ஆதரவை வளர்க்க மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கிறோம் என்று தான் சொல்லி இருக்கிறோம். எம் மூவரைத் தவிர (சிவராசன், தணு, சுபா) வேறு யாருக்கும் விஷயம் தெரியாது’ என 7.5.91 அன்று வி.பி.சிங் பொதுக் கூட்டத்துக்குப் போய் வந்த பிறகு தகவல் அனுப்பியதாக சொல்லப்பட்டு இருக்கிறது. கொலைச் சதி குறித்தோ, அதற்கான ஏற்பாடு கள் குறித்தோ சிவராசன் எங்களிடம் ஏதும் சொல்லவில்லை என்பதற்கு, இந்த வார்த்தைகள் போதாதா?

போலிப் புகைப்படக்காரர் அடையாள அட்டை, ஹரிபாபுவினால் எனக்குத் தயார் செய்து தரப்பட்டதாக அரசுத் தரப்பு சொல்கிறது. எதற்காக அந்த அடையாள அட்டை எனக்கு? அதை எங்கு, எப்போது, யார் தயார் செய்து கொடுத்தது? அதில் உள்ள எனது புகைப்படம் எங்கு எடுக்கப் பட்டது? யாரால் எடுக்கப்பட்டது? அதில் உள்ள கையப்பம் யாருடையது? எனது கைரேகை ஏதும் இருந்ததா? இப்படி எத்தனை எத்தனைக் கேள்விகள்... இது குறித்த விசாரணைகளை அதிகாரிகள் ஏன் மேற்கொள்ளவில்லை? சரி, அதெல்லாம் கிடக்கட்டும். ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் அந்த அடையாள அட்டையை எந்த விதத்தில் நான் பயன்படுத்தினேன்? இந்தியாவின் மிக உயரிய தலைவர் கொலை யான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவனின் போலியான அடையாள அட்டை கிடைத்தால், அது சம்பந்தமான அனைத்து ரிஷிமூலங்களையும் அதிகாரிகள் தோண்டித் துருவி இருக்க மாட்டார்களா?

எங்களைக் குற்றவாளியாக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக, விசாரணை அதிகாரிகள் விரித்த வலைகளில் ஒன்றுதான் அந்த அடையாள அட்டையும். இதை எல்லாம் சொல்வதால், என் மீதான தவறுகளை நான் சரிக்கட்ட நினைப்பதாகவோ, சிவராசன் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்வதாகவோ தயவுசெய்து யாரும் நினைக்க வேண்டாம். இனி தப்பித்து நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? காலையில் அலுவலகத்துக்கு வந்து மாலை 6 மணிக்குள் இல்லம் திரும்பத் தாமதமானால் உங்கள் மனம் எப்படி எல்லாம் தவித்துவிடுகிறது... 'அப்பா கிளம்பிட்டேன்டா செல்லம்... 10 நிமிஷத்தில் வந்துடுவேன்’ எனக் குழந்தைகளை சமாதானப் படுத்துவதும், 'கோவிச்சுக்காதம்மா, இந்தா வந்துட்டேன்’ என மனைவியிடம் உருகுவதும் ஒவ்வொரு குடும்பத் தலைவனும் நடத்தும் பாசப் பகிர்வுதானே? 21 வருடங்களாக என் குடும்பத்தைப் பிரிந்துகிடக்கிற நான் எத்தகைய வார்த்தைகளால் அவர்களை சமாதானப்படுத்த முடியும்? 'அப்பா...’ எனத் தெளிவான உச்சரிப்பில் அழைக்கும் குரலைக் கேட்பதற்கு முன்னரே மகளைப் பிரிந்து தவித்தோமே... இரண்டு வயதில் எங்களிடம் இருந்து ஆரித்ரா பிரித்து அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வை ஒரு தகப்பனாக தயைகூர்ந்து நினைத்துப் பாருங்கள். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அவள் இருக்கிறாள் என்பதைத் தவிர்த்து, எங்களுக்கு என்ன ஆறுதல்? ஒருவன் கொலையே செய்திருந்தாலும், அதற்கான தண்டனையைக் காட்டிலும், அதிகமான தண்டனையை நாங்கள் அனுபவித்துவிட்டோம். இளமை தொலைத்து - இல்லம் இழந்து - உலகம் பாராது - உணர்வுகள் மழுங்கிய உயிராக வாழும் வாழ்வெல்லாம் ஒரு வாழ்வா? அடைபட்டு வாழ்தல்தான் அதிகபட்சத் துயரம். உலகத்தின் மிகச் சிறிய கூண்டுக்குள் முடங்கி எதையுமே பாராது வாழும் வாழ்க்கை எவருக்குமே அமையக் கூடாது. 'நல்லவர்கள்’ எனச் சொல்லி இனி தப்பிப்பதால் மட்டும் நாங்கள் இழந்த எல்லாமும் எங்களுக்குக் கிடைத்துவிடப்போகிறதா? விசாரணை அதிகாரிகளிடம் எவ்வளவோ விளக்கிச் சொல்லியும், கடிதமாக மனுவாகக் கதறித் தீர்த்தும் நீங்காத எங்களின் சோதனை இப்போது விளக்கமாக எழுதுவதால் நீங்கப்போகிறதா? தண்டனைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக எங்களின் நியாயங்களை நாங்கள் எழுதவில்லை. மரணமே நிகழ்ந்தாலும், என்றைக்காவது எங்களின் விளக்கம் ஏற்கப்படும் என்கிற நிறைவுக்காகவே இதைச் சொல்கிறேன்.

நாங்கள் அணு அணுவாக மரணத்தை அனுபவித்தாயிற்று... 'இன்று, நாளை’ என ஏங்கி ஏங்கியே எல்லாத் துயரங்களையும் கடந்தாயிற்று... வெளியே வந்தாலும் 'உயிர் மட்டும் மிச்சம்’ என்கிற எண்ணத்தைத் தவிர, எங்களிடத்தில் வேறு என்ன உணர்வு ஏற்பட்டுவிடப் போகிறது? ஆனாலும், இந்த உலகத்தின் வெளிப்பரப்பில் நீந்த முடியாதா என்கிற ஏக்கம் அடிமனதில் இப்போதும் கிடக்கிறது. அதற்குக் காரணம், எங்களின் அன்பு மகள் ஆரித்ரா.

''அப்பா உங்களை எப்போ நான் பார்ப்பேன்? உங்களின் தூக்குக்கு நாள் குறிக்கப்பட்டது தெரிந்து நான் எப்படி எல்லாம் அழுதேன் என்பது தெரியுமா அப்பா? பாட்டிம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை... யாருமே இங்கு சாப்பிடவில்லை; தூங்கவில்லை. நமக்கு ஏன் அப்பா இப்படி ஒரு வாழ்க்கை? இரவு முழுக்கத் தூக்கம் இல்லாததால், உங்களின் கடிதங் களையும் ஓவியங்களையும் மட்டுமே தடவிப் பார்க்கிறேன். கற்பனைக் கதைகளில்கூட இப்படி ஒரு துயர வாழ்க்கை இருக்குமா என்பது தெரியவில்லை அப்பா. அம்மா ஓர் இடத்தில்... அப்பா ஓர் இடத்தில்... மகள் ஓர் இடத்தில் என எதற்காக இந்த வாழ்க்கையை வாழ்கிறோம்? நீங்கள் ஒரு தந்தையாக எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் உறவுகளே எனக்குச் செய்கிறார்கள். ஆனால், அப்பா எனக் கட்டிப் பிடித்து உங்கள் மடியில் புரளும் நாளுக்காக ஏங்கும் என் பாசத்தைக் குடும்பத்தினரால் கொடுக்க முடியுமா? உலகத்திலேயே இப்படி ஒரு பாவப்பட்ட ஜென்மம் என்று என்னைத் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்கள் அப்பா. உங்களைப் பார்க்காத ஒவ்வொரு நாளுமே எனக்கு நரகம்தான். சாப்பாடு, படிப்பு, தூக்கம் என எதையுமே செய்ய முடியாமல் தவிக்கும் என் நிலைமை என்றைக்குத்தான் சரியாகுமோ?''

- இப்படி ஒரு கடிதம் எழுதி இருக்கிறாள் ஆரித்ரா. வரிக்கு வரி அப்பா என்கிற வார்த்தையை அவள் சேர்த்து எழுதி இருக்கும் பக்குவத்தில் அவளுடைய அபரிமிதமான பாசத்தை உணர்கிறேன். மகளின் கையெழுத்தை மடியில்வைத்துத் தடவிப் பார்க்கிறேன். அதில் உள்ள ஒவ்வோர் எழுத்திலும் வழிகிற துயரத்துக்கு பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்கிறேன். 'அப்பா...’ என அழைக்கிற மறு கணத்திலேயே அவள் முன்னால் போய் நிற்க முடியாதா என தடுமாறித் தவிக்கிறது மனது. மகளே... நீ இருக்கும் திசை நோக்கி மண்டியிட்டு அழுகிறேன். உன் ஒவ்வொரு நாள் வளர்ச்சியிலும் உச்சி முகர்ந்து சிலிர்த்திருக்க வேண்டியவன், உன்னைக் காணாது கம்பிகளுக்குள் கதறிக்கிடக்கிறேன். 'எங்க அப்பாவைக் காப்பாத்துங்க’ என மீடியாக்களிடம் நீ கதறியதாகக் கேள்விப்பட்டேன். அம்மாவின் வயிற்றில் இரு மாதக் கருவாக இருந்தபோது குண்டு வெடிப்பு சத்தத்தில் உனக்கு என்ன ஆனதோ எனப் பயந்தேன். அம்மாவின் கருப்பைச் சுவரைக் கெட்டியாகப் பிடித்தபடி, உம்மைக் காத்துக்கொண்ட எம் மகளே... இரு மாதக் கருவிலேயே கற்றுக்கொண்ட அந்தப் பக்குவம்தான் இப்போதும் உன்னைக் காப்பாற்றுகிறதோ என்னவோ... எங்கள் வயிற்றில் பிறந்த பாவத்தாலே இத்தனை சுமைகளுக்கு ஆளாகித் தவிக்கிறாயே... உன்னை நோக்கி அழ மட்டுமே இந்த அப்பனால் முடிகிறது.

(காயங்கள் ஆறாது)

நன்றி: ஜூனியர்விகடன் 30-10-2011

திங்கள், அக்டோபர் 24, 2011

ஏன் மறைத்தார் சிவராசன்? #தூக்குக் கயிறே என் கதை கேள்! (9)

அரிபாபு நினைவுகளை என்னால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது! அவரைப் போல் சிவராசன் என்னை அழைத்திருந்தாலும், அன்றைக்கு ஸ்ரீபெரும்புதூருக்கு நானும் போயிருப்பேன். அங்கே அரிபாபு உடன் நானும் சிதறித் செத்திருந்தாலும், தினம் தினம் இன்றைக்கு இவ்வளவு உளைச்சலுக்கு ஆளாகிச் சாக வேண்டிய நிலை வந்திருக்காது.

சம்பவ இடத்துக்குப் போயும் உயிர் தப்பியவள் என் மனைவி நளினி. 'ராஜீவ் காந்தியைக் கொலை செய்யப்போகிறார்கள் என்பது நளினிக்குத் தெரியாது. சுபாவும் தணுவும் இலங்கைத் தமிழில் பேசினால் சந்தேகம் வரும் என்பதால்தான், தமிழ்ப் பெண்ணான நளினி அவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்’ என அரசுத் தரப்பு ஆவணங்களிலேயே எழுதப்பட்டு உள்ளது. சம்பவத்தை நிறைவேற்றும் கடைசிக் கணத்தில் கூட தனது திட்டத்தை சிவராசன் சொல்லவில்லை என்பது இதில் இருந்தே அப்பட்டமாகத் தெரிகிறது. 'நளினிக்குத் தெரியாமல் அது எப்படி நடந்திருக்கும்?’ எனக் கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்துக்குப் போனபோது, நளினியின் வயிற்றில் கரு உருவாகி இருந்த நேரம். வெடிச் சத்தத்தைக் கேட்டால்கூட விபரீதமாகும் என்கிற நிலையில்... அப்படி ஒரு சம்பவம் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் எப்படி நளினி அங்கே போயிருப்பார்? எங்கள் காதலின் அடையாளச் சின்னத்தை நாங்கள் எப்படிப் பூரிப்போடும் பெருமிதத்தோடும் பார்த்தோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். கரு உருவாகி வளர்வது தெரிந்து, வயிற்றின் சிறு மேடு தடவிச் சிலிர்த்த கணங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டத்துக்கு ராஜீவ் காந்தி வருகிறபோது அலையடித்த மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி நின்றவள் நளினி. நல்லெண்ண அடிப்படையில் ராஜீவுக்கு தணு மாலை அணிவிப்பதும், அதைப் புகைப்படம் எடுப்பதும்தான் சிவராசன் நளினியிடம் சொல்லி இருந்த தகவல். ராஜீவ் வந்தபோதோ, மக்கள் ஆரவாரித்தபோதோ இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்பது நளினிக்குத் தெரியாது. பதற்றமோ பரபரப்போ இல்லாமல் மிகச் சாதாரணமான முக பாவத்தோடு சிவராசன் இருந்திருக்கிறார். 'ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிப்பது மட்டுமே வேலை’ என்பதை நம்பவைக்க பல நாடகங்களையும் அவர் நடத்தி இருக்கிறார். அவருக்கு எதிராக நான் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். நிகழ்ந்த உண்மைகளை இறக்கிவைக்கிற நேரம் இது.

சிவராசன் செயல்பாட்டில் நல்ல எண்ணம் இருந்தது என்பதை நான் நம்புவதற்கு காரணம் என்ன? அந்த எண்ணத்தில் செயல்பட ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணின் உதவி எதற்கு? சிவராசன் என்னிடம் உண்மை நோக்கத்தை மறைப்பதில் உறுதியாக இருந்தமைக்கு காரணம் என்ன? எனப் பல கேள்விகள் உங்களிடத்தில் இருந்து எழலாம்.

'என்னைவிட சிவராசன் புலிகள் இயக்கத்தில் மூத்த உறுப்பினர். எனக்கு இங்கு ஒரு கமாண்டராகவும் பாஸாகவும் இருந்தார்!’ - இது அரசுத் தரப்பே சொல்லும் விளக்கம். ஒரே இயக்கத்தில் உள்ள என் போன்று கீழ் நிலையில் உள்ளவர்கள், மேல் நிலையில் உள்ள ஒருவரை எப்படி சந்தேகப்பட முடியும்? இயக்கம் கற்றுக்கொடுத்த கட்டுப்பாடும் பக்குவமும் மேல் நிலையில் உள்ளவர்களை சந்தேகப்படவைக்குமா? மேல் நிலையில் உள்ள சிவராசனிடம், 'ஏன்... எதற்கு... எப்படி?’ என்கிற சந்தேகங்களைக் கேட்பது சாத்தியமா? 'ராஜீவ் காந்தியுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்’ என சிவராசன் சொல்கிறபோது, அதில் சந்தேகப்பட ஒன்றுமே இல்லை. காரணம், ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியதும், அவர்களின் வெறியாட்டங்கள் எங்கள் மண்ணையும் மக்களையும் துண்டாடியதும், அதனால் அவர் மீது எங்கள் மண் ஆற்ற முடியாத ஆத்திரத்தில் இருந்ததும் எல்லோரும் அறிந்ததுதான். மறுபடியும் ராஜீவ் காந்தியுடன் நல்லெண்ணத்தை ஏற்படுத்த அரசியல்ரீதியான காரணங்கள் இருக்கலாம். அவருக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நல்லது என நம்பியதால்தானே, சிவராசன் சொன்னதற்கு எல்லாம் நாங்கள் தலையாட்டினோம். 'ராஜீவ் காந்தியைக் கொல்ல வந்த சிவராசன் உன்னை ஏன் சந்திக்க வேண்டும்?’ என்கிற கேள்வியும் உங்களிடத்தில் இருந்து எழலாம்.

இப்போது இருக்கும் சூழல் அன்றைக்குத் தமிழகத்தில் இல்லை. உணர் வாளர்களின் எழுச்சியான முன்னெடுப்புகள் விடுதலைப் புலிகள் மீதான கெடுபிடிகளையும், கண்காணிப்புகளையும் குறையவைத்து இருக்கின்றன. ஆனால், அன்றைக்கு புலி உறுப்பினர்கள் தமிழகத்தில் உலவுவது சாதாரணக் காரியம் இல்லை. மறைமுகமாகவும் ரகசியமாகவும் செய்ய வேண்டிய இக்கட்டுகள் அப்போது இருந்தன. கோடம்பாக்கத்தில் நடந்த பத்மநாபா கொலைக்குப் பின் இந்தியாவில் இருந்த விடுதலைப் புலிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே எழுதப்பட்டு உள்ளது. இலங்கையில் இந்திய ராணுவத்துக்கும் (மிறிரிதி), விடுதலைப் புலிகளுக்கும் சண்டை நடந்ததும் அத்தகைய கெடுபிடிகளுக்கு மிக முக்கியக் காரணம். கண்காணிப்புகள் அதிகம் இருந்த அப்போதைய காலச் சூழலில், எந்த அரசியல் தலை வருக்கும் பொதுக் கூட்ட மேடையில் மாலை போடுவது சுலபம் அல்ல. அதுவும் இலங்கைத் தமிழர் என்றால் சொல்ல வேண்டியதே இல்லை. எத்தகைய காரணத்தைச் சொன்னாலும், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகக் காவல் துறை இரக்கம் காட்டாது. இலங்கைத் தமிழர் எனத் தெரிந்தாலே, 'நீ புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன்தானே... யாரைக் கொலை செய்ய இங்கே வந்தாய்... பெட்ரோல் கடத்த வந்தாயா? பால்ரஸ் கொண்டுபோக வந்தாயா?’ எனத் துளைத்துவிடுவார்கள். அதனால், சிவராசன், தணு, சுபா மூவராலும் எந்தப் பொதுக் கூட்டத்துக்கும் போய் மாலை அணிவிக்க சாத்தியம் இல்லை. தமிழ்நாட்டுப் பெண் ஒருவர் உடன் இருந்தால் அதற்கு உதவியாக இருக்கும் என்பதை சிவராசன் சரியாகத் திட்டமிட்டு இருந்தார். அதற்குத்தான் அவர் எங்களைப் பயன்படுத்த நினைத்தார். 'இந்தியாவின் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லை. அதற்காக இந்தியத் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவது எமக்கு அவசியம். அந்த வேலைகளில் நான் தீவிரமாக இருக்கிறேன்’ என சிவராசன் என்னிடம் சொன்னார். அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அந்தக் கருத்தில் நான் மட்டும் எப்படி பிறழ்வு காட்ட முடியும்? இந்திய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுகிற அளவுக்கு அவர்கள் முன்வந்திருப்பதில் அப்போது எனக்கு ஏகோபித்த மகிழ்ச்சி. அதைத் தாண்டிய சந்தேகங்கள் எனக்கு ஏற்படவில்லை. புலிகள் இயக்கத்தின் கொள்கை குறித்த ஆராய்வுகளையோ, இந்தியத் தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்த பேரறிவோ எனக்கு அப்போது இல்லை. காரணம், அப்போது எனக்கு வயது 20. இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த என்னால் அப்போது எந்த அளவுக்கு சிந்தித்திருக்க முடியும் என்பதை மட்டும் மனக்கண்ணில் நிறுத்திப் பாருங்கள்.

'ராஜீவ் காந்தியைக் கொல்லப்போகும் விஷயத்தை சிவராசன் முருகனிடம் ஏன் மறைக்க வேண்டும்? புலிகள் இயக்கத்தைப்பற்றி நன்கு அறிந்த முருகனிடம், ராஜீவ் கொலை குறித்து சிவராசன் ரகசியம் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...’ எனப் புலனாய்வை மட்டுமே புத்தி யாக வைத்திருப்பவர்கள் கேள்வி கேட்கலாம். சந்தேகப்படுவதும் கேள்வி எழுப்புவதும்தான் இங்கே மிகச் சுலபமான வேலை. நம்முடைய கேள்வி அடுத்தவர் மனத்தை எப்படித் துன்புறுத்தும் என நெஞ்சுக்குள் ஒரு கணம் நினைத்துப் பார்க்கிற பழக்கம் குறைவாகிவிட்டது. சிவராசனைப்பற்றி இது காலம் வரை நான் வெளிப்படையாகப் பேசவில்லை. இறந்தவர்களை நோக்கிக் கை காட்டுவது ஈனத்தனம் என்பதை இறக்கும் சூழலில் இருக்கிற நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். 'ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய சிவராசன் ஏன் வந்தார்? அவரை இங்கே அனுப்பியவர்கள் யார்? அவருடைய கண்களில் நான் ஏன் சிக்கினேன்?’ இதற்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை. ஆனால், சிவராசன் என்னிடம் ராஜீவ் கொலைச் சதியை மறைத்ததற்கு இரண்டு காரணங்களை என்னால் சொல்ல முடியும். ஒன்று, சிவராசன் என்னை நம்பவில்லை; என் மீது அவருக்கு அதிருப்தி இருந்தது. இரண்டாவது, இந்த சதித் திட்டம் மிகவும் பாரதூரமானது. சிறிய அளவில் கசிந்தாலும் குறிக்கோள் நிறைவேறாமல் போகும்; அதோடு மட்டும் அல்ல... அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஆளை நெருங்கவே முடியாத அளவுக்குப் போய்விடும். சிவராசனின் பின்னணிகள் தோண்டப்பட்டு, அதன் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்குப் பேராபத்து நிகழவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் ராஜீவ் காந்தி கொலைச் சதியை மிகுந்த ரகசியத்தோடு சிவராசன் காத்துவந்தார். இலக்கை மிகச் சரியாக நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற தீவிரமும் எச்சரிக்கையுமே அவரிடம் இருந்தது. யார் மனம் எல்லாம் நோகும் என்பதை உணரும் நிலையில் அவர் இல்லை. எந்த ஒரு திட்டத்தையும் மிக மிக முக்கியமானவர்களுக்கு இடையிலும், அதை நேரடியாகச் செயல்படுத்துபவர்களுக்கு இடையிலும் மட்டுமே பகிர்ந்துகொள்வது, ஒவ்வோர் இயக்கத்திலும் பின்பற்றக்கூடிய வழக்கம்தான். அநாவசியமாக ஒரு நபரிடம் விஷயம் கசிந்தாலும் அது திட்டத்துக்கான பின்னடைவாக அமைந்துவிடும் என்பதுதான் சதிக் குழுக்களின் பால பாடம். இதையட்டிய கருத்துகளை நீதிபதி தாமஸ் அவர்களே, தீர்ப்பு பக்கங்கள் 84, 85-ல் கூறி இருக்கிறார். அதோடு, 'எல்.டி.டி.ஈ-யினர் தாம் இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இந்தியாவில் தமது அடையாளத்தை மறைத்துச் செயல்படுகின்றனர்!’ என்றும் நீதிபதி தாமஸ் அவர்கள் கூறி இருக்கிறார். இதை எல்லாம்விட தீர்ப்பில் மிக முக்கியமான பகுதி ஒன்று இருக்கிறது. 'முருகனுக்கும் நளினிக்கும் இருந்த ரகசிய உறவை அறிந்த சிவராசன், அதுபற்றி மேலிடத்துக்கு புகார் செய்தார். அதனால், முருகனை நம்பக் கூடாது என்றும் மேலிடத்துக்கு சிவராசன் செய்தி அனுப்பினார்!’ என தீர்ப்பு பக்கம் 320-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிவராசனுக்கும் எனக்கும் சரியான இணக்கம் இல்லை என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவை இல்லை. ஒரு விடுதலைப் புலி உறுப்பினர், பெண்களுடன் உறவு வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது என்பது அந்தக் காலகட்டத்தில் அனைவரும் அறிந்திருந்த ஒன்று.

'பொதுக் கூட்ட இடத்தில் சுபாவோ, தணுவோ பேசக் கூடாது. அவர்களுக்காக நளினிதான் பேசி ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க அனுமதி வாங்க வேண்டும். சுபாவும் தணுவும் இலங்கைத் தமிழர்கள் என்பது அங்கு யாருக்கும் தெரிந்துவிடாமல் இருக்க, நளினி அவர்களை மறைத்தபடி நிற்க வேண்டும்!’ என அரசுத் தரப்பு வாதம் சொல்கிறது.

21.05.91 அன்று மாலை சிவராசன் குழுவுடன் ஸ்ரீபெரும்புதூர் செல்ல நளினி உடன்பட்டார் என்று ஒப்புதல் வாக்குமூலத்தில் எழுதப்பட்டு உள்ளது. உண்மையிலேயே நளினி சுய விருப்பத்துடன்தான் சிவராசன் குழுவுடன் ஸ்ரீபெரும்புதூர் சென்றாரா?

(காயங்கள் ஆறாது)

நன்றி: ஜூனியர்விகடன், 26-10-2011

புதன், அக்டோபர் 19, 2011

சதியை மறைத்த சிவராசன்! #தூக்குக் கயிறே என் கதை கேள்! (8)

நான் ஓர் ஈழத் தமிழன். எமக்கு எனத் தனித்துவமான பேச்சுத் தமிழ் உண்டு. தமிழ்நாட்டுத் தமிழர்கள் பேச்சுத் தமிழில் பயன்படுத்துகிற பல சொற்களை நாம் பயன்படுத்த மாட்டோம். சொற்களைப் பயன் படுத்துவதில் இரு பிரதேசத் தமிழர்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. நான் தமிழ்நாட்டுக்கு வந்த ஆறு மாத காலத்துக்குள் இங்கு உள்ள பேச்சுத் தமிழ் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், அரசுத் தரப்பு சித்திரிப்புகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலங்கைத் தமிழர் பயன்படுத்தாத, தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள சொற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில் இருந்தே ஒப்புதல் வாக்குமூலம் என் சொல் படி எழுதப்படவில்லை என்பதும், அவர்களின் இஷ்டத்துக்குத் தகுந்தபடி எழுதப்பட்டது என்பதும் அப்பட்டமாகத் தெரியவரும். 'சொற்களின் பிரயோ கத்தைக்கூட அப்படியே பதிவு செய்வது அவசியமா?’ என யாரும் கேட்கலாம். நடந்தது சாதாரண நபரின் கொலை விவகாரம் அல்ல. இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் தலைவர். நாட்டையே உலுக்கிய வழக்கில் குற்றவாளியின் ஒப்புதல் வாக்கு மூலம் என்பது எந்த அளவுக்கு முக்கியமானது? ஒவ்வொரு வார்த்தையும் மிக நுணுக்கமாகவும், அச்சு அசலாகவும் பதிவு செய்யப்பட வேண்டும் அல்லவா? 'ஒப்புதல் வாக்குமூலம் ஓர் எதிரியால் சொல்லப் படும்போது எவ்வித மாற்றமும் இல்லாமல், அவரது சொந்தச் சொற்களில் உரைநடையில் அப்படியே பதிவு செய்யப்பட வேண்டும்’ என்பது தடா சட்டத்தின் 15-வது பிரிவின் விதியாகும். இதுபோல், எத்தனையோ விதிமுறை மீறல்கள்... கட்டுக்கதைகள்... தில்லுமுல்லுத் திணிப்புகள்!

ஒருவேளை மேற்சொன்ன அனைத்தும் ஏற்பதற்கு இல்லை என்று சொன்னால்கூட, அரசுத் தரப்பு காட்டிய குற்றச்சாட்டுகளுக்கு போதிய அளவு சாட்சியச் சான்றுகள் உள்ளனவா? அவை, உரிய முறையில் திறந்த மனதுடன், நடுநிலைமையுடன் பரிசீலிக்கப்பட்டனவா? காட்டிய நிரூபணங்கள் சட்டப்படியும், நியாயப்படியும், உண்மையின்படியும் ஏற்கத்தக்கனவா? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வல்லமை நெஞ்சுரம் படைத்த எவருக் கேனும் இருக்கிறதா?

இறுதியாக, எம் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். ராஜீவ் கொலை வழக்கு உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை என்பதற்கும், போகிற போக்கில் யாரை எல்லாமோ குற்றவாளிகளாகச் சித்திரித்தார்கள் என்பதற்கும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைவிட வேறு உதாரணம் வேண்டியது இல்லை. குற்றச் சதியின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்தே, நாங்கள் தண்டிக்கப்பட்டு இருக்கிறோம்.

விடுதலை செய்யப்பட்டவர்களுக்குச் சொல்லப் பட்ட தீர்ப்பு எங்களுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தும். ஆனால், குற்றச் சதியின் உறுப்பினர்களாக நாங்கள் நிறுத்தப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் கருணைக் கதவுகள் எங்களுக்காகத் திறக்கவில்லை.

'இந்திரா காந்தி கொலை வழக்கில் ஹேகர் சிங் என்பவருக்கு வெளியார் தலையீடு காரணமாக மரண தண்டனை கொடுத்தேன்; அது எனது மனசாட்சியை இன்றைக்கும் உறுத்துகிறது!’ - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியே மனசாட்சியின் முன்னால் மண்டியிட்டுச் சொன்ன வார்த்தைகள் இவை. அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் உச்ச நீதிமன்றம் என்கிற உயரிய கோபுரமே தப்ப முடியவில்லை என்கிறபோது, சாதாரண நபர்களாகிய எமக்கு எதிராக அதிகாரங்கள் விளையாடியதில் ஆச்சர்யம் இல்லை.

சரி, என் மீது அப்படி என்னதான் குற்றச்சாட்டு? சிவராசனுக்கும் எனக்குமான தொடர்புதான் புலனாய்வுப் புள்ளிகளின் கண்ணுக்குக் கிடைத்த முதல் பொறி. சிவராசனோடு பேசியதையோ, பழகியதையோ, நான் மறுக்கவில்லை. நம்மோடு பழகுபவர்களின் அத்தனை விதமான நகர்வுகளும் நமக்குத் தெரிந்தே நடக்கும் என நினைப்பது எப்படி சாத்தியமாகும்? சிவராசனுக்கும் எனக்கும் எப்படிப்பட்ட தொடர்பு? ராஜீவ் கொலை சம்பந்தமான அத்தனை விடயங்களையும் அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டாரா? அவர் ராஜீவைக் கொல்லப்போகிறார் என்பது எனக்குத் தெரியுமா... தெரியாதா? இப்படி எத்தனையோ கேள்விகள் 21 வருடங்களாக பதில் இல்லாமல் அலைகின்றன; என்னை அலைக்கழிக்கின்றன. சிவராசனுக்கும் எனக்குமான பழக்கம் எத்தகையது என்பதை இங்கே மனம் திறந்து உடைக்கப்போகிறேன். சாவின் தலைக் குள் வாய்விட்ட நிலையில் இருப்பவன் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அரசுத் தரப்பு தயாரிப்புகளில், 'எதிர் காலத்தில் நல்லெண்ண உறவினை வளர்க்க உதவும் என்பதி னால், ராஜீவ் காந்திக்கு எமது சார்பில் மாலை அணிவிக்க ஓர் இந்தியப் பெண் வேண்டும்’ என்று சிவராசன் என்னிடம் மார்ச் மாதம் கேட்டதாகவும், 'முயற்சி செய்கிறேன்’ என்று நான் கூறியதாகவும் எழுதப்பட்டு இருக்கிறது. நல்ல உறவினை வளர்க்க அவசியம் என்று சொல்லிக் கேட்கும்போது அதற்கு முயற்சி செய்கிறேன் என்று சொல்வதில் என்ன தவறு? நல்ல விடயத்துக்கு என்னால் உதவ முடியாது என்று தடாலடியாக பதில் சொல்வது முறையா? 'ராஜீவைக் கொல்வதற்கு உதவுங்கள்’ என சிவராசன் என்னிடம் கேட்டு, அதற்கு நான் உதவி இருந்தால்தானே தவறு? தனது உண்மையான திட்டம் எனக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் சிவராசன் உறுதியாக இருந்தார் என்பதற்கு அரசுத் தரப்பு ஆவணங்களே சாட்சி. கொலைத் திட்டத்தை சிவராசன் என்னிடம் மறைத்து இருந்தாலும், நானே அதைச் சரியாக யூகித்து, 'முயற்சி செய்கிறேன்’ என்று சிவராசனுக்கு பதில் சொன்னதாகவும், அதில் இருந்தே அந்தத் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இருந்ததாக உறுதியாகத் தெரிவதாகவும் அதிகாரிகள் தரப்பு இப்போதும் வாதிடலாம். அப்படி எனக்கு (நல்லதோ கெட்டதோ) உடன்பாடு இருந்து இருந் தால், அந்த சம்பாஷணைக்குப் பிறகு நான் நளினி யிடம் இதுபற்றிப் பேசி இருப்பேனே... அந்தத் திட்டத்துக்கு நளினியின் சம்மதத்தைப் பெற்று இருப்பேனே... அதைப் பெருமிதமாக சிவராசனிடம் சொல்லி இருக்கலாமே... இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தரப்பால் சொல்ல முடியுமா? என் பெயரில் அதிகாரிகள் இயற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தில்கூட இப்படிப்பட்ட சம்பவங்கள் ஜோடிக்கப்படவில்லையே... அவசர கதியில் கதாசிரியர்கள் (அதிகாரிகளைத்தான் சொல் கிறேன்!) மறந்து இருக்கலாம்.

ராஜீவ் கொலைத் திட்டத்தில் தனது உண்மையான செயல்பாடுகள் எனக்குத் தெரியக் கூடாது எனவும், என்னை நம்பவைத்து, தனது வேலைக்காகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சிவராசன் உறுதியாக இருந்தார். என்னுடைய வார்த்தைகளாக இதை நம்ப வேண்டியது இல்லை. என் வழக்கில் அரசுத் தரப்பு அடுக்கி இருக்கும் ஆவணங்களையும், விசாரணைக் குறிப்புகளையும் படித்தாலே, இது தெரியும்.

'7.5.91 வரை தனக்கும் சுபா, தணு தவிர வேறு யாருக்கும் எமது திட்டம் தெரியாது’ என்று சிவரா சன் அனுப்பிய செய்தியை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, 'மேற்படி மூவரைத் தவிர, அந்தத் தேதி வரை வேறு யாருக்கும் தெரியாது’ என்று பக்கம் 357, 402 ஆகியவற்றில் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த இடத்தில் சிவராசன் என்னைப் பொய்யாக நம்பவைக்கச் சொன்னவை, செய்தவை உரிய பலனை அளித்துள்ளன என்பதனை அப்பட்டமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

21.05.91 அன்று (என்னை சந்தித்துவிட்டுப் போன பிறகு ) மாலை சுபாவும் தணுவும் தமது கொலைத் திட்டத்தைச் சொன்னதாகவும், 'கூட வந்தால் சந்தோஷப்படுவோம்’ என அவர்கள் கேட்க, அதற்கு நளினி உடன்பட்டதாகவும் அரசுத் தரப்பில் எழுதப்பட்டு உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பக்கங்கள் 356, 357 ஆகியவற்றில் 19.05.91 அன்று சிவராசனின் இலக்கு ராஜீவ் காந்திதான் என தான் உணர்ந்ததாகவும், தனக்கு ஒரு பீதி உணர்வு ஏற்பட்டதால், பொதுக் கூட்டத்துக்கு வர நளினி தயங்கியதாகவும் நீதிபதிகள் சொல்லி இருக்கி றார்கள். ஆனால், 21.05.91 அன்று மாலைதான் நளினி குற்றச் சதியின் (சுபா, தணு சொல்லி உடன்பட்டபோது) உறுப்பினர் ஆனார் என்றும் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். அரசுத் தரப்பின் இந்த வாதங்களே நளினி விவகாரத்தில் நான் தலையிடவில்லை என்பதற்கான சாட்சி. நளினியை எந்த இடத்திலும் நான் வற்புறுத்தியது இல்லை. அப்படி இருக்க இந்த வழக்கில் நான் எப்படி குற்றவாளி ஆக்கப்பட்டேன்?

ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிப்பதும், புகைப்படம் எடுப்பதும்தான் அவசியம் என எம்மை நம்பவைப்பதற்கு சிவராசன் எவ்வளவுஉறுதியாக இருந்தார் என்பதற்கு அரசுத் தரப்பு சாட்சியங்களே சான்றாக உள்ளன. 18.05.91 அன்று மெரினா கடற் கரையில் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பேசிய கூட்டத்துக்கு நான், நளினி, அரிபாபு ஆகியோர் போனதாகவும், அங்கு எடுத்த புகைப்படங்களை சிவராசன் கேட்டுப் பெற்றதாகவும், சிவராசனோடு நான் அங்கே நெருக்கமாகப் பேசி வலம் வந்ததாகவும் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளன.

7.5.91 அன்று சென்னை நந்தனத்தில் நடந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பொதுக் கூட்டத் துக்கு சிவராசன், சுபா, தணுவுடன், நானும், நளினியும், அரிபாபுவும் கூடப் போனதாகவும், அங்கு மேடையில் ஏறி மாலை அணிவிக்கத் தவறியமைக்கும், போட்டோ எடுக்க முடியாமல் போனதற்கும் சிவராசன் என்னையும் நளினியையும் திட்டி எச்சரித்ததாகவும் அரசுத் தரப்பில் சான்றுகள் வைக்கப்பட்டு உள்ளன.

என்னிடமோ, புகைப்படக்காரர் அரிபாபுவிடமோ, சிவராசன் எந்த ரகசியத்தையும் சொல்லவில்லை என்பதற்கு ஒரே சாட்சி அரிபாபுவின் மரணம்தான். 'புகைப்படங்கள் முக்கியம்’ எனச் சொன்னதால்தான் அரிபாபு ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் ராஜீவ் காந்தியை நெருங்கிப் போய் படம் எடுத்தார். தணுவின் உடலில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருப்பது தெரிந்தால், அரிபாபு எப்படி அந்த இடத்தில் முன்னேறி இருப்பார்? தணு, சுபாவுடன் எந்தச் சலனத்தையும் வெளிப்படுத்தாதவராக எப்படி உரையாடி இருப்பார்? எம்மை எப்படி நம்பவைத்துத் தனது வேலைகளுக்கு சிவராசன் பயன்படுத்தினாரோ... அதேபோல்தான் அரிபாபுவையும் பயன்படுத்தினார். 'யாருக்கும் தெரியக் கூடாது; அதே நேரம் திட்டமும் கச்சிதமாக நிறைவேற வேண்டும்’ என்பதில் மட்டுமே சிவராசன் உறுதியாக இருந்தார். குண்டுவெடிப்பு நிகழ இருந்த கடைசி நிமிடம் வரை அரிபாபுவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கப்போவது தெரியாது. இந்த விடயத்தை அரசுத் தரப்புச் சான்றுகளே உறுதியாகச் சொல்கின்றன.

சிவராசனின் வார்த்தைகளுக்காக புகைப்படங் களை நல்லபடி எடுக்க வேண்டும் என நினைத்த அரிபாபு சிதறிக்கிடந்த காட்சி இன்றைக்கும் என்னை உலுக்குகிறது. அவர் எடுத்த புகைப்படங்கள்தான் ராஜீவ் கொலையை யார் செய்தது என்பதற்கான ஒரே சாட்சி. வாழைக் குருத்தாக வாழ்ந்திருக்க வேண்டிய அரிபாபு, சடலமாகக் கிடந்த கோலம் இன்றைக்கும் நெஞ்சை அறுக்கிறது.

காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர் விகடன், 23-10-2011

போலி மருந்து மாத்திரைகள் - நமது உயிரின் விலை ஒரு BMW கார்

2009 ம் ஆண்டு இறுதியில் தமிழக ஊடகங்களில் மிக பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு செய்தி சென்னையில் ஒரு சிறுமி காலாவதி மருந்தை உட்கொண்டதால் இறந்துவிட்டால் என்று . உடனே அத்தனை சமூக ஆர்வலர்கள்,ஊடகங்கள்,பொது மக்கள், அரசியல்வாதிகள்,அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குச் சென்று ஆறுதல்,நஷ்ட ஈடு எல்லாம் கொடுத்தார்கள் சென்றார்கள். சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட மெடிக்கல் ஷாப் இல் சோதனை நடத்தினார்கள் அப்புறம்தான் தெரிந்தது, இந்தக் காலாவதி மாத்திரைகளின் வர்த்தகம் புற்றீசல் போல் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்று இதில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டான் மீனாட்சி சுந்தரம் என்ற மொத்த மருந்து விற்பனையாளன்.

போலி மருந்து மாத்திரைகள் என்றதும் அது அரசாங்கத்துக்குத் தெரியாமல் தயாரிக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். மருந்து நிறுவனங்களின் கள்ள சந்தையே போலி மருந்து, காலாவதி மாத்திரைகள் எல்லாம். அது என்னவென்று பார்ப்போம்.

நாம் ஏற்கனவே மருந்து மாத்திரைகள் வர்த்தகம் எவ்வாறு நடைபெறுகிறது என்று படித்திரருந்தோம் அதில் super stockist ,stockist என்றும் நாம் அறிந்திருதோம் அல்லவா,இவர்களின் மூலமாகவே தான் காலாவதி மருந்துகள் வர்த்தகத்தில் வலம் வருகின்றன.

பொதுவாக எந்தவொரு மருந்து மாத்திரைக்கும் அதன் ஆயுள்காலம் ( expiry date ) இருக்கும். இந்த expiry date முடிவடையும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே இது medical shop இல் இருந்து ,stockist க்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ,stockist என்பவர் sub stockist எனப்படும் சிறு மொத்த விற்பனையாளர்களிடம் அனுப்புகிறார். மிகக் குறைந்த விலைக்கு.(இதில் medical repகளின் பங்கு மிக முக்கியமான ஒன்று அதனை பற்றிய விவரங்கள் தனியாக எழுதப்படும். ஆதலால் இதைக் கவனமாகப் படிக்கவும் ).

இந்த sub stockist கள் அவர்களுக்குத் தெரிந்த medical shop களில் தள்ளிவிடுகிறார்கள். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அதிகம் படிப்பு அறிவு இல்லாத இடங்களில் இருக்கும் medical shop களில்தான் விற்பனை செய்கிறார்கள்.

sub stockist கள் சென்னையில் மட்டுமில்லை, தமிழகம் முழுவதும் நல்ல முறையில் விற்பனையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் வாங்குவதை வாங்கிக்கொண்டு தொழிலில் எந்த ஒரு இடைஞ்சலும் கொடுக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்

இந்தக் காலாவதி மருந்து விற்பனையில் ஒரு சிறுமி பலியானவுடன் பல உத்தம மருத்துவர்கள் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் நோயாளியே நேரடியாக மருந்து மாத்திரை வாங்கி உட்கொள்ளவதால்தான் இது போன்ற விபத்துகள் நடைபெறுகின்றது என்று கிழியக் கிழியப் பேசியதை நாம் கேட்டிருப்போம். அப்படியானால் 2010 ம் வருடம் சென்னை நங்கநல்லூரில் ஒரு பெண்மணி டாக்டரின் தவறான பரிந்துரையாலும் எழுதிக் கொடுத்த மாத்திரையை உண்டதாலும் முடிகொட்டி உடல்வீங்கி இறந்தாரே அது ஏன், அந்த மருத்துவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது?

ஒன்றுமட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். expiry date ஆன மருந்து மாத்திரைகளின் label களை எடுத்துவிட்டு அழகாக வேறொரு லேபிள்களை ஒட்டி வைத்து வியாபாரம் பார்ப்பது தமிழகத்தில் 30 வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது.

சரி, இந்த மீனாட்சி சுந்தரம் மாட்டியவுடன் தமிழகத்தில் உள்ள எல்லா super stockist , stockist , sub stockist ,மெடிக்கல் ஷாப்களில் நமது அதிகாரிகள் பரிசோதனை செய்தார்கள். அதன் விளைவாக ஒவ்வொரு ஊரின் புறநகரிலும் அதிகாலையில் மூட்டை மூட்டையாக காலாவதி மருந்துகள் சிக்கின. ஆனால் வழக்கம் போல் ஊடகங்களில் மர்ம நபர்கள் கொட்டி விட்டு சென்றுள்ளனர் என்றனர். அதன்பின்பு அவ்வளவுதான், நாமும் நமது வேலையைப் பார்த்துகொண்டு உடம்பு சரியில்லை என்றால் டாக்டர் எழுதித் தருவதை சாப்பிட்டுவிட்டு என் குடும்பம்,என் புள்ளைங்க, எந்த நாய் செத்தா என்ன, புழைச்சா என்ன என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருந்தாலும் அந்த சம்பவம் எப்படி முற்றுப் பெற்றது என்பதை நான் சொல்லியேதான் ஆக வேண்டும்.

மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் , மருந்துக் கடைகளின் சங்கம் இன்னும் பல யோக்கியமான கழகம் , சங்கம், யூனியன் என பலதரப்பட்ட கண்ணியவான்கள் அன்றைய அரசின் முக்கிய அமைச்சரின் மருமகனுக்கு ஒரே ஒரு BMW கார் வாங்கிக்கொடுத்து பழையபடி போலி மருந்து மாத்திரை வியாபாரத்தை அமோகமாக, பிரமாதமாக, ஆர்ப்பாட்டமாக- தீபாவளி தமாக்காவாகப் வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார்கள் .

ஆகா, நமது உயிரின் விலை ஒரு BMW காரின் விலை.

-எர்னஸ்டோ குவேரா

நன்றி: உயிர்மை இணையம்

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

பொட்டு அம்மான் பேசினாரா? #தூக்குக் கயிறே என் கதை கேள்! (7)

மேஜர் சபர்வால் என்பவர் இந்திய ராணுவத்தின் ஓர் உயர் அதிகாரி. வெடிகுண்டு, வெடி மருந்துத் துறையில் முக்கிய வல்லுனரும்கூட. இவர் தனது அறிக்கையில், 'ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவந்தன’ என்றும், 'ராஜீவ்காந்தியைப் புலிகள்தான் கொன்றனர் என முடிவு செய்துகொள்ள இதுவும் ஒரு காரணம்’ எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் என்பது வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பகுதி என்று அவர் நினைத்திருப்பார் போலும்!

ஆனால், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளரும், இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்தவருமான மதுரம் என்பவர், 'ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒருபோதும் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது கிடையாது!’ என உறுதியாக எனது குறுக்கு விசாரணையில் கூறி இருக்கிறார்.

தவறான சாட்சியங்களை வழங்கிய மருத்துவர் கிளாட் பெர்னாண்டஸ், தடயவியல் பேராசிரியர் திருநாவுக்கரசு, மேஜர் சபர்வால் ஆகிய மூன்று நபர்களுமே சாதாரண அந்தஸ்தில் உள்ளவர்கள் அல்ல. யாருக்கும் பயப்படக்கூடியவர்களும் அல்ல. இவர்களுக்கு எம்மீது தனிப்பட்ட விரோதம் ஏதும் கிடையாது. அப்படி இருந்தும், எமக்கு எதிராக இவர்கள் ஏன் அப்பட்டமான பொய் சாட்சியம் சொல்ல வேண்டும்? சட்டத்தின் மாண்பு அறிந்த இத்தகைய உயரிய புள்ளிகளையே எமக்கு எதிராகப் பொய் சாட்சியம் சொல்லவைக்க அதிகாரிகளால் முடிகிறது என்றால், ஏழைகளையும், அறியாமையில் உள்ளவர்களையும், பயந்த சுபாவம்கொண்டவர்களையும், பணம், பதவிகளுக்கு ஆசைப்​படுபவர்​களையும் ஏன் எமக்கு எதிராக சாட்சியம் சொல்ல​வைக்க இயலாது? எமக்கு எதிரான சித்திரிப்புகள் எவ்வளவு குரூரமாக நடத்தப்பட்டன என்பதற்​கான சாட்சியமாகவே இந்த உதாரணங்களை உங்​களிடம் சொல்கிறேன். எந்த சாட்சியத்​தையும் குற்றம் சொல்வது என் நோக்கம் அல்ல; எத்தகைய புள்ளிகளையும் எமக்கு எதிராக நிற்கவைக்கிற சக்தி அதிகாரிகளுக்கு இருந்​தது என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சாட்சியங்களில் மட்டும் அல்ல... நாங்கள் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஒப்புதல் வாக்கு​மூலங்களிலும் நிறையக் குளறுபடிகள்! எதிரிகளிடம் இருந்து பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களில் உள்ள முக்கியமான விடயங்கள் அனைத்தும் மற்ற சான்றுகளுடன் ஒத்துப்போக வேண்டும். முரண்பாடுகள்கொண்டதாக இருந்தால், அந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கிய சட்ட விதி. என்னுடைய வாக்குமூலத்திலும் நளினியின் வாக்குமூலத்திலும் சுமார் 35 முக்கிய முரண்பாடுகள் உள்ளன.

23.5.91 அன்று ராயப்பேட்டை வீட்டில் (என் மாமியார் பத்மா அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருந்த வீடு) நான் தங்கி இருந்ததாகவும், மறுநாள் நானும் நளினியும் வில்லிவாக்கம் வீட்டுக்கு (நளினி வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த வீடு) சென்று தங்கியதாகவும், 25.05.91 அன்று திருப்பதி போனதாகவும் எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அரசு சாட்சிகளில் ஒருவரான ராணி என்பவர், 23.05.91 அன்று நானும் நளினியும் வில்லிவாக்கம் வீட்டில் தங்கி இருந்ததாகச் சொல்லி இருக்கிறார். 96-வது அரசு சாட்சி சுஜா என்பவர், '24.05.91 அன்று நளினி வழக்கம் போல் அலுவலகம் வந்து வேலை செய்துவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பினார்’ என்று சொல்லி இருக்கிறார். எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்.

18.5.91 அன்று சென்னை திரும்பி நளினியின் அலுவலகத் தொலைபேசி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு நான் பேசியதாகவும், அன்று இரவு அவரது வில்லிவாக்கம் வீட்டில் தங்கியதாகவும், மறுநாள் 19.5.91 அன்று ராயப்பேட்டை வீட்டுக்கு, சிவராசன், சுபா, தணு ஆகியோர் வருவதாக இருந்ததால், நான் அங்கு போன​தாகவும் எழுதப்பட்டு உள்ளது.

18.5.91 அன்று மாதத்தின் 3-வது சனிக்கிழமை ஆகும். அன்றும் முதலாவது சனிக்கிழமையும் அலுவலக விடுமுறை என்பது அந்த அலுவலக நடைமுறை விதி. அப்படி இருக்க, நான் எப்படி அவருடன் அலுவலகத் தொலைபேசியில் பேசியிருக்க முடியும்? எப்படி அவருடைய வீட்டுக்கு நான் போயிருக்க முடியும்?

18.2.91 அன்று நளினி, வில்லி​வாக்கம் வீட்டில் தங்கி இருந்ததாகவும், அங்கு சிவராசன், சுபா, தணு ஆகியோர் வந்ததாகவும், அன்று மாலை சுபா, தணுவுடன் சினிமா பார்க்கப் போனதாகவும், இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் (19.5.91) மூவரும் மகாபலிபுரம் போனதாகவும், மாலை வில்லிவாக்கம் வீட்டுக்கே திரும்பியதாகவும் அரசுத் தரப்பு ஆவணங்களில் எழுதப்பட்டு உள்ளது.

மேற்படி உள்ளவற்றில் நான் (மட்டும்) 18.5.91 அன்று இரவு முதல் நளினியுடன் தங்கி இருந்தேன் என்பது உண்மையா? அல்லது நளினியுடன் அன்று நான் இல்லாது சுபா, தணு மட்டும் தங்கி இருந்தார்கள் என்பது உண்மையா? அடுத்து 18.5.91 அன்று நளினி அலுவலகத்தில் இருந்தார் என்பது உண்மையா? அல்லது அன்று அவர் சுபா, தணுவுடன் தனது வீட்டில் இருந்து சினிமாவுக்குப் போய் வந்தார் என்பது உண்மையா? 19.5.91 அன்று சுபா, தணு ஆகியோர் வில்லிவாக்கம் வீட்டில் இருந்தார்கள் என்பது உண்மையா? அல்லது அன்று வேறு இடத்தில் இருந்து ராயப்பேட்டை வீட்டுக்கு சுபா, தணு, சிவராசன் ஆகியோர் வந்தார்கள் என்பது உண்மையா?

அரசுத் தரப்பு சித்திரிப்புகள் சிலவற்றைப் படிக்கும்போதே எத்தனை விதமான குழப்பங்கள் வருகின்றன பார்த்தீர்களா? ஒரே தேதியில் ஒன்பது விதமான நிகழ்வுகளை அதிகாரிகள் சித்திரித்தார்கள். அத்தனையும் லாஜிக்கே இல்லாத சித்திரிப்புகள் .

என் விவகாரத்தில் மட்டும் அல்ல... தம்பி பேரறிவாளனும் இத்தகைய சித்திரிப்புகளுக்குத் தப்பவில்லை. அரசுத் தரப்பு ஆவணங்களில், '21.5.91 அன்று சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய அறிவு, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கிப் பார்த்தார்’ என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால், அதே வீட்டில் தங்கி இருந்த அரசாங்க சாட்சியான பாரதி என்பவர், '21.5.91 அன்று இரவு வீடு திரும்பிய அறிவும் பாக்கியநாதனும் மின் விளக்கினை அணைத்துவிட்டுப் படுத்துவிட்டார்கள்’ என எழுதப்பட்டு உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த விஷயத்தில் அதிக முரண்பாடு ஏதும் இல்லை என்றுதான் தோன்றும். ஆனால், மேற்படியான சூழ்நிலையைவைத்தே, எனக்கு எதிரான சில விளையாடல்களை அரசுத் தரப்பு செய்தது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்களே... அதேபோல் சிறுசிறு சித்திரிப்புகளும் ஒருவனைச் சிதைக்க உதவும் என நம்பியது அரசுத் தரப்பு.

வேலூர் கோட்டைச் சிறையின் கட்டமைப்பு மற்றும் இட அமைவு ஆகியவற்றின் வரைபடங்களை வயர்லெஸ் தகவல் ஊடாக பொட்டு அம்மானுக்கு நான் அனுப்பியதாக அரசுத் தரப்பு எழுதி உள்ளது. ஆனால், இன்னோர் இடத்தில் வேலூரில் எனக்கு எவ்வித வேலையும் தரப்படவில்லை என்றும், அங்கு நான் எந்த வேலையும் செய்யக் கூடாது என பொட்டு அம்மான் எனக்கு கட்டளை இட்டதாகவும் எழுதப்பட்டு உள்ளது. இதில் எது உண்மை? பொட்டு அம்மான் அப்படி ஓர் உத்தரவை எனக்குப் பிறப்பித்து இருந்தால், வேலூர் கோட்டை சிறையின் கட்டமைப்பு குறித்து நான் ஏன் அவருக்குத் தகவல் அனுப்ப வேண்டும்? இதில், பெரிய வேடிக்கை என்னவென்றால், வயர்லெஸ் மூலமாக சிறையின் படங்களை நான் அனுப்பியதாக போலீஸ் தரப்பு சொல்கிறது. வயர்லெஸ் என்கிற கருவி மூலமாக தகவல்களை மட்டும்தான் சொல்ல முடியுமே தவிர, எந்த விதமான படங்களையும் அனுப்ப முடியாது. இந்த விஷயத்தைக்கூட போராடித்தான் என்னால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடிந்தது.

அரசுத் தரப்பு வழக்கின்படி சிவராசன் எனக்கு மிகவும் மூத்த உறுப்பினர் என்றும் இங்கு அவர் எனக்கு கமாண்டராகவும் பாஸ் ஆகவும் இருந்தார் எனக் கூறப்பட்டு உள்ளது. ஆனால், அரசுத் தரப்பு ஆவணம் 81-ல் சிவராசனைப் பற்றி குறிப்பு வருகிற இடங்களில் எல்லாம் 'அவன்’, 'அவன்’ எனப் பல இடங்களில் நான் சொன்னதாக எழுதப்பட்டு உள்ளது. உண்மையில், சிவராசன் எனக்கு பாஸாகவோ அல்லது கமாண்டராகவோ இருந்திருந்தால், அவரை நான் எப்படி அவன் எனக் குறிப்பிட்டு இருப்பேன்?

...காயங்கள் ஆறாது...


நன்றி: ஜூனியர் விகடன், 19-10-11

வியாழன், அக்டோபர் 13, 2011

தூக்குக்கயிறே என் கதை கேள்! (6) அனுதின அலறல்கள்!

கைது செய்யப்பட்டபோது என் மனைவி நளினி, 50 கிலோ எடை இருந்தார். நான் 60 கிலோ. இரண்டு மாத கர்ப்பிணியாக 'மல்லிகை’யின் குரூர அறைகளுக்குள் அடி எடுத்துவைத்த நளினி, அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து ஜுடிஷியல் கஸ்டடியில் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது நளினியின் எடை எவ்வளவு தெரியுமா? வெறும் 35 கிலோ. 15 கிலோ எடையைக் குறைக்கிற அளவுக்கு சித்ரவதைகள் குரூரமாகவும் கொடுமையாகவும் இருந்தன. நான் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது, வெறும் 30 கிலோதான் இருந்தேன். பாதியாக என்னைக் கழித்து, வெறி தீர்த்திருந்தார்கள். வெறும் வார்த்தைகளுக்காக இதை நான் சொல்லவில்லை. ராஜீவ் வழக்கில் நாங்கள் வளைக்கப்பட்டபோது எவ்வளவு எடை இருந்தோம், சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது எந்த அளவுக்கு எடை குறைக்கப்பட்டு இருந்தோம் என்பதற்கு அரசுத் தரப்பு குறிப்புகளே ஆதாரமாக இருக்கின்றன. பிரிசன் அட்மிஷன் ரெஜிஸ்டரில் எங்களின் எடை அளவு குறிக்கப்பட்டு உள்ளது. மல்லிகை விசாரணைகளுக்குப் பிறகு சப்பி எறியப்பட்ட மாங்கொட்டையாகத்தான் நாங்கள் சிறைக்குள் தள்ளப்பட்டோம். கைதுக்கு முன் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும், போலீஸ் காவலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, நாங்கள் எப்படி எல்லாம் சிதைக்கப்பட்டோம் என்பது புரியும்.

ராஜீவ் கொலை வழக்கில் நான் வளைக்கப்பட்டபோது, வாழைக்குருத்து வயது. கோபம் பொறுக்காத ஆவேசம் பொங்கி எழுகிற வயது. மல்லிகை அலுவலகத்தில் நடந்த கொடூரங்கள் என் வயதுக்குரிய கோபத்தையும் ஆவேசத்தையும் பொசுக்கிப் போட்டது. என்ன செய்தாலும் தாங்கிக்கொள்ளக்கூடிய சொரணையற்ற மனப் பக்குவத்தைப் பழகவைத்தது. 'கத்திக் கதறினாலும் யாருக்குமே கேட்காது’ என்கிற கையறு நிலையை என் நாடி நரம்புகள் பழகிக்கொண்டன. மரணத்தைவிடக் கொடூரமானது மரண பயம் என்பதை நினைத்து நினைத்து என் அனுதினங்கள் அலறத் தொடங்கின.

இரவானால், தூக்கம் வராது. அதிகாரிகள் கயிறோடு துரத்துவதைப்போல் இருக்கும். எங்கேயோ தப்பி ஓடுகிற என்னை சுலபமாக அதிகாரிகள் வளைத்து விடுவது போல் கனவு வரும். தூக்குக் கயிற்றின் முன்னால் என்னை நிறுத்தி அதிகாரிகள் கைகொட்டிச் சிரிப்பது கனவாக விரியும். கனவில்கூட துயரத்தின் துரத்தல்களையே அனுப வித்த அபாக்கியவான் நான். என் வடுக்களையும் வருத்தங்களையும் இங்கே இறக்கிவைக்கிற நேரத்தில், சிறு ஆறுதலை என் சிறகுகள் சுமப்பது போன்ற நிம்மதி!

சில தினங்களுக்கு முன் வேலூர் சிறையில் என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். மிக இளம் வயதுக்காரர். ''ஜூ.வி-யில் உங்களைப் பத்திப் படிச்சேண்ணா... தாங்க முடியலை. இப்படி எல்லாம் குரூரமா அதி காரிகள் செயல்பட்டதை நம்பவே முடியலை. இவ்வளவு சித்ரவதைகள் கடந்து நீங்க நிக்கிறதைப் பார்க்கிறப்ப, ஏதோ மறுஜென்மம் மாதிரி இருக்கு!'' என்றார் கலங்கிய கண்களோடு. நான் இறக்கிவைப்பது வெளியே சொல்லக்கூடிய துயரங்களை மட்டுமே. சொல்ல முடியாததை, எழுத்தில் வார்த்தால் இன்றைக்கும் ஈரக்குலையைத் துடிக்கவைக்கும் கோரங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றைப் பற்றி நினைத் தாலே, என்னுடைய சிறு நிம்மதியும் சிதைந்துபோகும். ராஜீவ் கொலை வழக்கின் புலனாய்வின்போது மொத்தமாக 35 பேர் வரை தற்கொலை செய்து கொண்டனர். அதிகாரிகளின் சித்ரவதைகளுக்கு ஆளா வதைக் காட்டிலும் இறப்பதே மேல் என எண்ணியதால்தானே இத்தனை தற்கொலைகள்?

ஒவ்வொரு நாள் உறக்கத்திலும் எம்மை வருத்துகின்ற கேள்வி ஒன்று உண்டு. குற்றச் சதிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது எங்களை விசாரித்த அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் எங்களைச் சிக்கவைக்க அவர்கள் இவ்வளவு வெறித்தனம் காட்டியது ஏன்? எங்களைப் பலிகடாவாக்க அவர்கள் இந்த அளவுக்குப் போராடியது ஏன்? ராஜீவ் என்கிற மாபெரும் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யாரையும் பிடிக்க இயலாமல் போனது அவர்களுக்குப் பெருத்த அவமானமாகிவிட்டது. அவர்களின் தேடுதலுக்கு நாங்கள் தீனியாகிப்போனோம். அவர்களுடைய வெறித்தனமான விளையாட்டுக்கு எங்களின் முதுகுகள் தோதான களமாகிவிட்டன.

இந்த விவகாரத்தில் தடா வழக்கின் கீழ் போலீஸ் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் இல்லை என்றால், யாரையும் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் தண்டித்திருக்க முடியாது. ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டப் பின்னணியை அறிந்தவர்களாகச் சொல்லுங்கள்... இந்த விவகாரத்தில் நாங்கள் பலிகடாவாக்கப்பட்டதை உங்களால் உணர முடிகிறதா? சித்ரவதைகளும் குரூரங்களும்தான் எங்களைக் குற்றவாளிகளாக நிற்கவைத்ததே தவிர, உண்மைகள் இல்லை. சாட்சி, ஆதாரம் என எங்களுக்கு எதிராக எதையுமே சமர்ப்பிக்க முடியாதவர்கள், எங்களின் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்தே மரண நிழலில் எங்களை நிறுத்தினார்கள். அது எங்களின் ஒப்புதல் வாக்குமூலம் அல்ல... ஒப்புக்காக வாங்கப்பட்ட வாக்குமூலம். அதிகாரிகளின் அளவற்ற கற்பனைக் கதைகளுக்கு எங்களின் உயிர் விற்பனைப் பொருளானது.

சாட்சியங்கள், சான்றுகள், ஆவணங்கள் ஆகியவை இந்த வழக்குக்காகவே பொய்யாக உருவாக்கப்பட்டன. உதாரணமாக, இரண்டு சான்றுக் குறிப்புகளைச் சுட்டிக் காட்டுகிறேன்...

கிளாட் பெர்னாண்டஸ் என்பவர் ஒரு மருத்துவர். இவர் என்னை ஒரு போதும் பார்த்தது கிடையாது. ஆனால், எனக்கு ஒரு செயற்கைப் பல்லைக் கட்டியதாக அவர் சாட்சியத்தில் சொல்லி இருந்தார். எனக்கு அனைத்துப் பற்களுமே நல்ல நிலையில் இருக்கின்றன. இதுவரை நான் செயற்கைப் பல் கட்டிக் கொண்டது கிடையாது. இது பற்றி மேற்படி சாட்சியிடம் எனது இயற்கைப் பல்லைக் காட்டி விவரமாகக் குறுக்கு விசாரணை செய்துள்ளேன். எம்மிடம் நீதிபதி கேள்வி கேட்டபோதும் எனக்கு அந்த மருத்துவர், பிடுங்கியதாகச் சொல்லும் இடத்தில் எனது இயற்கைப் பல் இருப்பதைச் சுட்டிக் காட்டினேன். இன்றைக்கு வேண்டுமானாலும் அதிகாரி கள் என் பல்லைப் பரிசோதனை செய்து கொள்ளட்டும்.

திருநாவுக்கரசு என்பவர் கர்நாடகத் தடயவியல் (மருத்துவப் பிரிவில்) கல்லூரியின் பேராசிரியர். இவரும் ஒரு முன்னாள் மருத்துவ இயக்குநர்தான். இவர் தனது சாட்சியத்தில் பக்கம் 41-ல் (தானாக முன்வந்து) என் மனைவி நளினியை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்து வந்ததாகவும், அங்கு இறந்து கிடந்த சிவராசன், சுபா ஆகியோரை நளினி அடை யாளம் காட்டினார் எனவும் சாட்சியம் சொல்லி இருந்தார். பின்பு அரசுத் தரப்பு வழக்கறிஞரின் மறுவிசாரணையில் 'இந்தப் பெண்ணைத்தான் எஸ்.ஐ.டி-யினர் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து வந்து அடையாளம் காட்டவைத்தனர்’ என என் மனைவி நளினியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார்.

ஆனால், 9.8.91-ல் இருந்து 1992 இறுதி வரை நானும் என் மனைவியும் செங்கல்பட்டு சிறையில் இருந்தோம். என் மனைவியைக் குறிப்பிட்ட காலத்தில் மேற்படி மருத்துவமனைக்கு யாரும் அழைத்துப் போகவும் இல்லை; யாரையும் அடையாளம் காட்டவும் இல்லை. இதனை இந்த வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியே குறுக்கு விசாரணையில் ஏற்றுக்கொண்டு உள்ளார். சிறையைவிட்டே வெளியே வராத நளினி, சிவராசன், சுபாவை அடையாளம் காட்டினார் என்றால், அதிகாரிகளின் ஜோடிப்புக்கு ஓர் அளவு இல்லையா?

மேஜர் சபர்வால் என்ற இந்திய ராணுவ அதிகாரி சொன்ன ஜோக் என்ன தெரியுமா?

- காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர்விகடன், 16-10-2011

சனி, அக்டோபர் 08, 2011

தூக்குக்கயிறே என் கதை கேள்! (5) ஒப்புதல் வாக்குமூலம்... உலுக்கும் உண்மைகள்!

ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டதுதான் நான் செய்த பெரும் பிழை. எவ்வளவோ அடி, உதை சித்ரவதை​களைச் சுமந்தவன் அன்றைக்கும் பல்லைக் கடித்தபடி அவர்களின் தாக்குதலைத் தாங்கி இருக்கலாம்; இல்லையேல், அவர்களின் தாக்குதலில் உயிரையே விட்டிருக்கலாம். அன்றைக்கே மண்ணோடு மண்ணாகிப் போயிருந்தால், இன்றுவரை மரணத்தின் துரத்தலுக்கு ஆளாகித் தவித்திருக்க வேண்டியது இல்லை. ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைப்பதைவிட செத்து ஒழிந்துவிடுவதே மேல்.

'ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டதன் மூலமாக ராஜீவ் கொலை விவகாரத்தில் தனக்கு இருக்கும் பங்களிப்பை முருகன் ஒப்புக்கொண்டு இருக்கிறார்’ என மீடியாக்​களிடம் அறிக்கை வாசித்தார்கள் அதிகாரிகள். எத்தனையோ சித்ரவதைகளை நடத்தி, அவர்​களின் புனைவுக் கதைகளுக்குக் கையெழுத்து வாங்கினார்கள் என்பது எங்களுக்குத்தான் தெரியும். பிரம்புகளின் பின்னணியில் எங்​களிடம் கையெழுத்து வாங்கப்பட்ட அன்றைய சூழலிலும்கூட நான் சமயோசி​தமாக ஒரு காரியத்தைச் செய்தேன். என் கையப்பம் நான் விரும்பிப் போட்டது அல்ல என்பதை நிரூபிக்க ஐ.பி.சி. செக்ஷன் 29 மற்றும் இண்டியன் எவிடென்ஸ் ஆக்ட் செக்ஷன் 15-ன் படி எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சான்றுக் குறியீடுகளைப் போட்டு வைத்தேன். அந்தக் குறியீடு​களைப்​பற்றி என்னிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அங்கும் இது கேட்கப்படவில்லை.

'விசாரணையின் போது நடந்த சித்ரவதைகளைப்பற்றி நீதிபதியிடம் முறையிட்டு இருக்கலாமே?’ என்று சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். ஒரு எலியைப் பூனையின் காவலில் வைத்துவிட்டு, அந்த எலியிடமே 'பூனை உன்னை துன்புறுத்தியதா?’ என வீட்டு எஜமான் கேட்டால் எப்படி இருக்கும்? அதுபோல்தான் அப்போது எமக்கிருந்த நிலையும். அதிகாரிகளின் சித்ரவதைகளைப்பற்றிச் சொல்லிவிட்டு திரும்பவும் அவர்களின் பிடிக்குத்​தானே நாங்கள் வரவேண்டும்? அப்படியிருக்க வாய் திறந்த பாவத்துக்காக மேலும் தாக்குவார்களே... உடல் முழுக்கக் காயங்கள் இருந்தாலும், வாய்விட்டுக் கதறக்கூட அப்போது எங்களுக்குத் தைரியம் இல்லை.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எங்களால் நீதிபதியின் முகத்தைக்கூட தெளிவாகப் பார்க்க முடியவில்லை. தவறியும் அவர் எங்களையோ, நாங்கள் அவரையோ பார்த்துவிடாதபடி 10-15 அதிகாரிகள் எங்களை வளையம்போல் சுற்றி நின்றனர். நீதிமன்றம் என்றுகூடப் பார்க்காமல், 'ஏதாச்சும் பேசுனீங்கன்னா......!’ என மிரட்டினார்கள். அதையும் மீறி என் மனைவி நளினி, நீதிபதியின் முகத்தைப் பார்க்கப் போராடியபடி இருந்தாள். அடி, உதைகள் இல்லாத ஒரே இடம் எங்களுக்கு அந்தக் கூண்டுதான். எங்களின் சோகத்தைச் சொல்வதற்கான கடைசி வாய்ப்பிடமும் அதுதான். நீதிபதியைப் பார்க்க என் மனைவி போராடுவதும், அதிகாரிகள் சுற்றிச் சுற்றி அவரை மறைப்பதுமாக இருந்தார்கள். ஒருகட்டத்தில், 'அரசாங்க செலவில் எங்களுக்கு வக்கீல் நியமிச்சு கொடுங்க...’ என நீதிபதியிடம் கைகூப்பியபடி வேண்டினாள் நளினி. இத்தனைப் போராட்டங்களைக் கடந்து அந்தக் குரல் வருகிறது என்பதை அந்த நீதிபதி அறிந்திருக்க வாய்ப்பில்லை. 'பார்க்கலாம்’ என்றபடியே ஏதோ எழுதினார். ஆனால், அடுத்த ஒரு வருடம் முடியும் வரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

நீதிபதி முன் எங்களை ஆஜர்படுத்த அழைத்துவரும்போது எல்லாம் அதிகாரிகளின் பூச்சாண்டித்தனம் அப்பட்டமாகவே தெரியும். 'நீதிபதியிடம் ஏதாவது சொன்னா, சண்முகத்துக்கு ஏற்பட்ட நெலமைதான் உங்களுக்கும்’ என மிரட்டுவார்கள். அடி, உதைகள் வாங்கி மிரண்டுகிடக்கும் எங்களால் இதையும் தாண்டி என்ன பேசிவிட முடியும்?!

3.8.91 அன்று ஒப்புதல் வாக்குமூலத் தாள்களில் எனது கையப்​பத்தினை பெற்றுவிட்டு மறுநாள் எம்மை ஒருவர் முன் ஆஜர்படுத்தினார்கள். அதற்கு முன்னர் அவரை நான் பார்த்தது இல்லை. சைதாப்பேட்டை சிறையில் சிறிய அறையில் ஒரு பக்கம் அரசு வக்கீலும், இன்னொரு பக்கம் வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியும் அமர்ந்து இருந்தனர். புதுமுகமாகத் தெரிந்த அவர் தலை குனிந்தபடி எமது காவல் நீடிப்பு திகதியைச் சொன்னார். உண்மையில் அவர்தான் நீதிபதி என்றே எனக்குத் தெரியாது. அவர் உத்தரவிட்டது போலீஸ் காவலுக்கா அல்லது நீதிமன்றக் காவலுக்கா என்பதும் எனக்கு விளங்கவில்லை. நான் நிறுத்தப்பட்ட இடம் ஒரு நீதிமன்றம் என்பதுகூட எனக்குத் தெரியாது. அங்கே அப்படி ஒரு சூழ்நிலையும் இல்லை. எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்பதை அதிகாரிகள் தொடர்ந்து ரகசியமாகவே வைத்திருந்தார்கள். நீதிமன்றம் எனச் சொன்னால் அங்கே சகலத்தையும் கொட்ட நாங்கள் ஆயத்தமாகிவிடுவோம் என்கிற பயம் அதிகாரிகளுக்கு.

ஜுடிஷியல் கஸ்டடியில் சிறைக்கு அனுப்பப்பட்ட பின்புகூட அங்கு அதிகாரி ஒருவர் வந்து எங்களை மிரட்டினார். ஜுடிஷியல் கஸ்டடிக்கு வந்த பின்னர் போலீஸார் எங்களைச் சித்ரவதை செய்ததுபற்றியும், பல தாள்களில் எமது கையப்பத்தினை அனுமதி இன்றிப் பெற்றதுபற்றியும் முறையீட்டு மனு அனுப்பினோம். இந்த மனுக்களின் நகல் மற்றும் அதன்மீது நீதிமன்றம் போட்ட உத்தரவு நகல் ஆகியவை அனைத்தையும் நீ2.ஜீ.நீ.313 செக்ஷன் கீழ் சமர்ப்பித்த வாக்கு மூலத்தின் கீழ் சேர்த்து இணைத்துள்ளோம்.

இந்த வழக்கில் 20.5.1992 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 16.5.92 வரை இந்த வழக்கில் 20 எதிரிகள்தான் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 16 பேர்களிடம் ஒப்புதல் வாக்குமூலத் தாள்களிடம் கையப்பம் பெற்று இருந்தனர். (ஏ-7) கனகசபாபதி, (ஏ-14) பாஸ்கரன், (ஏ-22) சுபா சுந்தரம், (ஏ-26) ரங்கநாத் ஆகியோரிடம் ஒப்புதல் வாக்குமூலக் கையெழுத்து வாங்கப்படவில்லை. கனகசபாபதி, பாஸ்கரன் இருவரும் மிகவும் வயதான​வர்கள். சுபா சுந்தரம் வயோதிகப் பருவத்தினை நெருங்கிக்கொண்டு இருந்தவர். நமது கால நேரத்துக்கு எதுவெல்லாம் கைகொடுக்கும் என்பதற்கு உதாரணம் சொல்கிறேன். சுபா சுந்தரத்தை அதிகாரிகள் பெரிதாக விசாரிக்கவில்லை. எங்கள் மீது பாய்ச்சப்பட்டது போன்ற கொடூர சித்ரவதைகளுக்கும் அவரை ஆளாக்கவில்லை. காரணம், அப்போது அவருடைய உடல் எடை 130 கிலோ. அதனால், அவரைப் பிறர் உதவி இல்லாமல் எழ வைக்கவோ, அமர வைக்கவோ முடியாது. அதனாலேயே அவர் கொடூர சித்ரவதைகளில் இருந்து தப்பினார்.

கனகசபாபதி ஓர் அரசு ஊழியர், சுபா சுந்தரம் ஒரு பத்திரிகையாளர் என்பதால் விசாரணை அதிகாரிகள் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போட அவர்கள் ஒத்துழைக்கவில்லை. கையெழுத்து என்று ஒன்று கிடைத்துவிட்டால், அதைவைத்தே எத்தகைய திரைக்கதையையும் அதிகாரிகள் அச்சேற்று​வார்கள் என்பதை அந்த இருவரும் அறிந்து வைத்திருந்​தார்கள்.

ரங்கநாத் (ஏ-26) அவர்களை பெங்களூரு நீதிமன்​றத்தில் ஆஜர் செய்தபோது, தனக்கு நேர்ந்த சித்ரவதை​களை அவர் ஆதாரத்துடன் சொன்​னார். அவருடைய பல் உடைக்கப்பட்டதை அவர் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டி​னார். இதனாலேயே ஒப்புதல் வாக்குமூலத்தில் ரங்கநாத்திடம் கெடுபிடி காட்டப்படவில்லை. அவரது மனைவியையே அவருக்கு எதிராக மாற்றி வாக்குமூலம் கொடுக்க வைத்துவிட்டமையால், அவர்களுக்கு ரங்கநாத்தின் ஒப்புதல் வாக்குமூலம் தேவை இல்லாமல் போய்விட்டது.

மேற்படி 16 எதிரிகளும் 60 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்தோம். ஒவ்வொருவரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கு​வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப்பற்றி அதிகாரிகள் எழுதி இருந்த விவரங்களைப் பார்த்தோம். மூன்று மணி நேரம் முதல் ஒன்பது மணி நேரம் வரை ஒப்புதல் வாக்குமூலம் வாங்கச் செலவானதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை நாமாக முன்வந்து சொல்லியிருந்தோம் என்பது உண்மையானால், அதே தகவல்களை போலீஸாரிடம் சொல்லவும் அதே அளவு நேரம்தான் செலவாகி இருக்க வேண்டும். அதிகபட்சம் அதனைப்போல் 10 மடங்கு நேரம் செலவானது எனக் கொண்டால்கூட மொத்தம் ஆறு நாட்கள்தானே ஆகும். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்க 60 நாட்களாக போலீஸார் எங்களைப் படுத்தி எடுத்தது ஏன்? அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதால்தானே... பொய்யான கற்பனைகளில் நாங்கள் கையெழுத்திட மாட்டோம் என்பது தெரிந்துதானே இத்தனை சித்ரவதைகள்? இந்த 60 நாட்களில் எங்களின் உடலும் மனமும் எத்தனைவிதமான குரூரங்களுக்கு ஆளாகி இருக்கும்? மரணத்தையும் ஒப்புக்கொள்ளும் மனநிலையை உருவாக்கத்தான் அதிகாரிகளுக்கு இந்த 60 நாள் அவகாசம்?

16.05.92-ல் இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட ஆறு எதிரிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அதிலும், நால்வர் எந்த வகையிலும் ராஜீவ் காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல எனச் சொல்லி விடுவிக்கப்பட்டனர். நியாயமாக நாங்கள் சொல்லிய உண்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தால், இவர்களைப்போல் வெளியே வந்திருக்க வேண்டியவர்கள்தான் நாங்களும்... ஆனால், சித்திரிப்புகளுக்கும், சித்ரவதைகளுக்கும் எங்களைப் பலிகொடுக்க அதிகாரிகள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற்றுவிட்டன. ஒப்புதல் வாக்குமூலம் என்கிற பெயரில் அதிகாரிகள் எங்களின் தலை எழுத்தை தண்டனைகளாலேயே நிரப்பினர்.

மரணம், பனை மர நிழலைப்போல் எங்களைச் சுற்றி அங்கும் இங்குமாக நகர்ந்து வருகிறது. அதன் துரத்தலுக்குப் பயந்து நாங்களும் அங்கும் இங்குமாக ஓடுகிறோம். இன்னும் முழுவதுமாக மரண பயம் எங்களைவிட்டு நீங்கவில்லை. குற்றவாளிகளாக நாங்கள் கொத்தாக வளைக்கப்பட்ட நேரம் நெஞ்சத்துக்குள் அப்படியே நீள்கிறது. ராஜீவ் காந்தி இந்தியாவின் பலம் பொருந்திய தலைவர். அவர் கொலை செய்யப்பட்ட செய்தி பரவியபோது மொத்த இந்தியாவும் ஸ்தம்பித்துப் போனது. தமிழ்நாடு முழுக்க கொந்தளிப்பு... பல இடங்களில் நாசகார வேலைகள் நிகழ்ந்தன. வீதிகள் முழுக்க வெட்டுக் குத்து... தீக்குப் பயந்து பேருந்துகள் பதுங்கிக்கொண்டன. 'அவ்வளவு பெரிய தலைவரைக் கொன்னுட்டாங்களே...’ என்கிற ஆதங்கமும் பரிதவிப்பும் எல்லோருடைய மனங்களிலும் எதிரொலித்த நேரம்.

அப்போதுதான் நாங்கள் ராஜீவ் கொலையின் காரணகர்த்தாக்களாக வளைக்கப்பட்டோம். நாடே கோபாவேசமாகி இருந்த நிலையில் எங்களை நோக்கியப் பார்வை மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்? 'தலைவரைக் கொன்ன பாவிகள் இவங்கதானா?’ எனப் பத்திரிகைகளில் வெளியான எங்களது படங்களைப் பார்த்து மக்கள் எப்படி எல்லாம் கர்ஜித்து இருப்பார்கள்? அந்த நேரத்தில் நாங்கள் எந்தவித நியாயத்தைச் சொன்னாலும், அது மக்களால் ஏற்கப்பட்டிருக்காது. எங்களுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் முன்வரவில்லை. ராஜீவ் கொலையின் நிஜப் பின்னணி என்ன என்பதை அறிந்துகொள்ளக்கூட வழக்கறிஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. அப்படியே அவர்கள் எங்களுக்காக ஆஜராகி இருந்தாலும், மக்கள் மன்றத்தில் அவர்களையும் அவமானப்பேய் சூழ்ந்திருக்கும்.

மிகப் பெரிய தலைவர் கொல்லப்பட்ட பரபரப்பும் பதற்றமும் நிலவிய நிலையில், கண்ணியில் சிக்கியக் காடைக் குருவிகளாய் நாங்கள் அதிகாரிகளின் பிடியில் இருந்தோம். கதறினால்கூட தவறு என்கிற நிலையில், எங்களால் என்ன செய்திருக்க முடியும்? எங்களை விசாரித்த அதிகாரிகள் இந்நேரம் பணி ஓய்வில் வீட்டுக்குப் போயிருப்பார்கள். ஆனால் எங்களின் வாழ்க்கையில் அதிகாரம் அள்ளிப்போட்ட மண், மரண மேடாக எங்களை விழுங்கத் துடிக்கிறது. மரணம் வெல்கிறதோ, வீழ்கிறதோ... ஆனால், அதற்குள், எங்கள் நெஞ்சக் கூட்டுக்குள் இருக்கும் அத்தனை உண்மைகளையும் உரக்கச் சொல்லிவிட வேண்டும் எனத் துடிக்கிறது மனது!

- காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர் விகடன், 12-10-11

வியாழன், அக்டோபர் 06, 2011

தூக்குக்கயிறே என் கதை கேள்! (4) காவு வாங்கும் கையெழுத்து!

லங்கையில் நான் இருந்தபோது போலீஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கேள்விப்​பட்டதுகூட இல்லை. காரணம், அங்கே அந்தக் கட்டமைப்புகள் அரிது. ஆனால் ராஜீவ் வழக்கில் சிக்கி, அனுதினமும் போலீஸின் கையில் நான் அனுபவித்த சித்ரவதைகளும், ஏறி இறங்கிய நீதிமன்ற அவஸ்தைகளும் கொஞ்ச

நஞ்சம் அல்ல. 'குற்றம் சாட்டுபவர்கள் அதற்குரிய தகுந்த, நம்பகமான உண்மைகளை சாட்சியச் சான்றுகளை முன்வைத்து நிரூபணம் செய்ய வேண்டும்!’ என்பதுதான் உலகம் முழுக்கப் பின்பற்றப்படும் குற்ற நடைமுறைச் சட்டங்களின் அடிப்படைக்கூறு! ஆனால், எமது விடயத்தில் இந்த அதிமுக்கியமான மனித சமூக விழுமியத்தினைப் பாதுகாக்கும் இந்த சட்டக் கோட்பாடு, கருணை இன்றி தவறாகக் கையாளப்பட்டது. சட்டக் கோட்பாடு மீறப்பட்டதற்கும், அதன் குரூர நாக்குகள் எங்களைக் கொத்தியதற்கும் காரணம், எம்மையோ அல்லது வேறு யாரையோ தண்டித்துவிட வேண்டும் என்ற அதிகாரப் பேராசைதான்! ஒரு மனிதன் தான் செய்யாத தவறுக்கு அநேகமான சூழ்நிலைகளில் சாட்சிய சான்றுகள் காட்ட முடியாது என்பது இயற்கையின் நியதி மட்டும் அல்ல; அறிவியல், தர்க்கவியல் உண்மையும்கூட!

குறிப்பிட்ட குற்றம் நடந்த இடத்தில் நான் இல்லை என்றும், அந்த நேரத்தில் நான் என் வீட்டில்தான் இருந்தேன் என்றும் நிரூபணம் செய்ய என் வீட்டார்தான் சாட்சியம் சொல்ல வேண்டும். ஆனால், என் வீட்டாரையே குற்றவாளிப் பட்டியலிலும் அரசுத் தரப்பு சாட்சிப் பட்டியலிலும் சேர்த்துவிட்டு, 'உன்னை நிரபராதி என நிரூபி’ என்றது சட்டம். யாரைப் பிடித்து நான் நிரூபிக்க முடியும்? நடந்தது சாதாரண சம்பவம் அல்ல. நாட்டையே குலுங்கவைத்த கொலை. தமிழகத்தின் சட்ட நிலைமைகள், நீதிமன்ற விவகாரங்கள், போலீஸ் நடவடிக்கைகள் எல்லாம் எப்படி இருக்கும் என்றுகூட எனக்குத் தெரியாது. சிக்கிச் சின்னாபின்னமாகி, மரணத்தின் வாசலை அனுதினமும் தொட்டுத் திரும்பிய வேளையில்தான், போலீஸ் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பது புரியத் தொடங்கியது.

அதில், அதிகாரிகளின் குரூரச் சித்ரவதை ஒன்றை உங்களிடம் அவசியம் சொல்ல வேண்டும். ஒப்புதல் வாக்குமூலத்தில் என்னிடம் வற்புறுத்திக் கையெழுத்து வாங்கு​வதற்காக அதிகாரிகள் இந்தச் சித்ரவதையை என் மீது பாய்ச்சினார்கள். அதாவது, ஒரு மேஜை மீது என்னைக் குப்புறத் தள்ளி, இரு பாதங்களும் வெளியே தொங்கும்படி படுக்கவைத்து, இரு கால்களையும் கட்டுவார்கள். பின்னர் என் மீது நாலைந்து பேர் ஏறி அமர்ந்துகொள்ள, குதியில் (பாதத்தில்) கட்டையால் தொடர்ச்சியாகப் பலமாக அடிப்பார்கள். உச்சி மண்டையே உடைந்து சிதறும் அளவுக்கு வலி பெருக்கெடுக்கும். இன்னும் ஓர் அடி அடித்தால் உயிர் நின்றுவிடும்போல் தோன்றும். இந்தச் சித்ரவதையின் விளைவு என்ன என்றால், குறைந்தது மூன்று நாட்களுக்கு எழுந்து நிற்கவே முடியாது. காலைத் தரையில் வைத்தால் உயிரே போய்விடும். அது மட்டும் அல்ல... இந்த சித்ரவதைக்கு அடிக்கடி ஆளாகுபவர்களால் ஜென்மத்துக்கும் ஓடவோ, வேகமாக நடக்கவோ முடியாது. பாத நரம்புகள் முழுமையாக செயல் இழந்துவிடும்.

இந்தச் சித்ரவதையின் இன்னொரு பகுதியாகத் தலைகீழாக அந்தரத்தில் கட்டித் தொங்கவிட்டு அடிப்பார்கள். பின்பக்கம் பழுத்து வீங்கிவிடும். அன்றாடக் கடன்களைக் கழிக்கக்கூட திண்டாடித் தவிக்க வேண்டிய நிலையாகிவிடும். ஒருவரை அடிக்கும்போது, மற்ற ஓர் எதிரியை அழைத்துவந்து காட்டுவார்கள். அப்போது ஏற்படும் பீதி, அடி வாங்குவதைவிடக் கொடுமையானது. என்னைத் தலைகீழாகக் கட்டும்போது மரண ஓலமிடத் தோன்றும். ஆனாலும், பல்லைக் கடித்தபடி அடக்கிக்கொள்வேன். காரணம், என் அலறல் என் கர்ப்பிணி மனைவிக்குக் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக. ஆனால், நகக் கணுவின் இடுக்கைக்கூட ஆராய்ந்து கண்டுபிடித்துவிடும் அதிகாரிகளுக்கு நான் அலறாமல் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாது. தலைகீழாகத் தொங்கவிட்டு, அடி, உதைகளை அரங்கேற்றியபடியே, 'உன் எதிரே யார் நிக்கிறதுன்னு பார்’ என்றார்கள். அடி, உதையின் மயக்கமும், தலைகீழாகத் தொங்கும் அவஸ்தையும் கண்களைக் கிறுகிறுக்க வைத்திருக்க, எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. விம்மி வெடிக்கும் அழுகுரல் கேட்டு, கண்களைத் திறந்தால் எதிரே என் கர்ப்பிணி மனைவி நளினி.

'என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடி​யுங்கள்... கொல்லுங்கள். ஆனா, அவளை அனுப்பிடுங்க சார்... அவளால தாங்க முடியாது!’ எனக் கதறினேன். அந்தக் கதறல் அதிகாரிகளுக்குப் பிடித்திருந்தது. நளினியை பார்க்கவைத்தபடியே தொடர்ந்து என்னை அடித்தார்கள். கதறக் கதற எனது விரல்களைப் பின்னோக்கி வளைத்தார்கள். இதேபோல் எந்தப் பக்கம் எல்லாம் வளைக்க முடியாதோ, விரிக்க முடியாதோ... அந்தப் பக்கம் எல்லாம் உறுப்புகளை வளைத்து அலற வைத்​தார்கள்.

என் விரல் இடுக்குகளில் குச்சிகள், பென்சில்கள், பேனாக்களைவைத்து புண்ணாகும் வரை நெரித்தார்கள். இந்தச் சித்ரவதைகளை நளினிக்கும் செய்தார்கள். சிமென்ட் தரையில் சிறு கற்களைத் தூவி அதன் மீது முட்டிபோட்டு, மணிக்கணக்கில் கைகளை முன்பே நீட்டியபடி நிற்க வைப்பார்கள். கற்கள் முழங்கால்களை ரத்தமாக்க, கைகள் ஒடிந்துவிடுவதுபோல் வலிக்கும். முழங்காலை ஒரு பாகை கோணத்தில் மடித்து கைகளை முன்பே நீட்டிய வண்ணம் (நாற்காலி வடிவில்) மணிக்கணக்கில் நிற்க வைப்பார்கள். ஆரம்பத்தில் ஏதோ உடற்பயிற்சி போலத்தான் இருக்கும். ஆனால், நேரம் ஆக ஆக நரம்புகளே அறுந்துபோகிற அளவுக்கு வலி எடுக்கும். சிறிது நேரத்திலேயே நிற்க முடியாமல் கீழே விழுந்துவிடுவேன். அதற்காகவே காத்திருந்தவர்களைப்போல் சரமாரியாகத் தாக்குவார்கள்.

இன்னொரு விசாரணை அதிகாரிக்கு சினிமாக்​களில் வரும் சண்டைக் காட்சிகளைப்போல் செய்து காட்ட ஆசை. அதற்காக என்னை நிலத்தில் அமரவைத்து, அவர் ஒரு சுழல் நாற்​காலியில் அமர்ந்துகொள்வார். அவர் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதே, 'எங்கிட்​டேயே பொய் சொல்றியா நாயே...’ என்றபடியே நாற்காலியைச் சுழற்றிச் சுழற்றி காலால் உதைப்பார். முடிவில், பெரிதாக எதையோ சாதித்துக் கிழித்துவிட்டவரைப்போல், 'எப்படி நம்ம அடி?’ என என்னிடமே கருத்துக் கேட்பார்.

விசாரணை அலுவலகத்தில் வெறும் ஆறு அடி நிலப்பரப்பில்தான் என் வாழ்க்கை. புரண்டு படுக்கக்கூட இடம் இருக்காது. போய்ச் சேரும் காலத்தில்தான் ஆறு அடி நிலம் தேவை என்பார்கள். வாழும் காலத்திலேயே அந்த அவஸ்தையை அனுபவித்தவன் நான். மூன்று பக்கம் இரும்பு அலமாரியின் கதவுகளும், ஒரு பக்கம் நாற்காலியும் போடப்பட்டு இருந்தன. தொடர்ந்து 60 நாட்களாக அதே குறுகிய இடம்தான்... அதே அவல வாழ்க்கைதான்!

கையில் விலங்கு மாட்டி, அதற்கு ஒரு தொடர்பு சங்கிலி போட்டு அருகில் உள்ள நாற்காலியின் காலில் கட்டி வைத்திருந்தனர். சாப்பிடும் போதுகூட என் இரு கைகளிலும் அந்த விலங்கு அப்படியே இருக்கும். 15 நாட்கள் வரை என்னைக் குளிக்கக்கூட அனுமதிக்கவில்லை.

எங்களுக்கான சித்ரவதைகள் எப்படிப்பட்டவை என்பதைச் சொல்ல ஒரே ஆதாரம் கோடியக்கரை சண்முகம். ராஜீவ் கொலை வழக்கில் தானாக முன்வந்து சரண் அடைந்த தொழில் அதிபர் அவர். 14.6.91 அன்று முதல் நாங்கள் அவருடன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்தோம். சண்முகம் மிகுந்த பணக்காரர். அரசியல்வாதிகள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அவர் மர்மமான முறையில் 19.7.91 அன்று இறந்துபோனார். அவர் இறந்த பின்னணி குறித்து அப்போதே மீடியாக்கள் பல விதமான சந்தேகங்களையும் பட்டியல் இட்டன.

சண்முகம் மரணத்துக்குப் பின்னர் அவர் குடும்பத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வீரசேகரன் அவர்கள் மீது தடா வழக்கின் கீழ் பொய் வழக்குப்போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். மிகவும் பண வசதியும், செல்வாக்கும்கொண்ட சண்முகத்துக்கும், அவருக்காக ஆஜரான ஒரு வழக்கறிஞருக்குமே இப்படியான கதி என்றால், என்னைப்போன்ற வெகு சாதாரண ஜீவன்களை எல்லாம் ஒரு புழுவுக்கு நிகராகத்தானே அதிகாரிகள் பார்த்திருப்பார்கள்?!

60 நாள் போலீஸ் காவல் முடிவதற்கு முதல் நாள் ஒப்புதல் வாக்குமூலம் எனப்படும் தாள்களில் என்னிடம் கையெழுத்து வாங்க வந்தார்கள். அதாவது, அடிக்க வேண்டிய அத்தனைவிதமான அடிகளையும் அடித்து, உடலின் அத்தனை பாகங்களையும் சொரணை இழக்கவைத்து, 'உயிர் மட்டுமே மிச்சம்’ என்கிற நிலையில் 8.8.91 அன்று மாலை 6.30 மணி அளவில் ஓர் அதிகாரி முன்னிலையில் என்னைக் கொண்டுபோய்விட்டனர். என்னை எதிரே நிற்க வைத்துவிட்டு, அவர் வெள்ளை பேப்பரில் அவர் மனதுக்குத் தோன்றிய கற்பனைகளை எல்லாம் எழுதினார். எழுதிய பகுதிகளை என்னிடம் காட்டாமல் மறைத்தபடி என்னிடம் கையெழுத்து கேட்டார். அவர் எழுதியதை என்னிடம் காட்டாவிட்டாலும், என்னை வசமாகச் சிக்கவைக்கும் விதமாகவே அது எழுதப்பட்டது என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அதனால், கையெழுத்துப்போட மறுத்துக் கதறினேன்.

கேட்கக் கூசும் ஆபாச வார்த்தைகளால் என் மனைவியையும், தாயாரையும் கேவலப்படுத்திப் பேசினார்கள்.

'இத்தனை நாள் அடி வாங்கியும் நீ திருந்தலையா... உன்கிட்ட எப்படிக் கையெழுத்து வாங்குகிறேன் பார்!’ என்றபடி என்னைத் தனி அறைக்கு அனுப்பிவைத்தார். மீண்டும் இரவு 8 மணிக்கு என்னை அழைத்தார். அந்த அறையில் அவரது கையின் அருகில் ஏற்கெனவே என்னை அடித்து சிதைந்துபோன ஒரு தடியும், ஒரு புதிய தடியும் வைக்கப்பட்டு இருந்தன. அவருடன் என்னை மிகக்கொடுமையாக அடித்த இன்னொரு அதிகாரியும் உடன் இருந்தார். அவர்களின் விஷமத்தனமான பார்வையே அவர்கள் நிகழ்த்தப்போகும் பேராபத்தை எனக்குப் புரியவைத்தது. கையெழுத்துப் போடாவிட்டால், அந்த இடத்திலேயே என்னைக் கொலை செய்ய முடிவு எடுத்துவிட்டார்கள்.

'கையெழுத்துப் போடுறியா... இல்லை, உயிரை விடுறியா?’ என உக்கிர வெறியோடு கேட்டார்கள். உயிரை விடுவதற்கா இத்தனை நாட்கள் இவர்களிடம் உதை வாங்கிக்கிடந்தேன்? சிறு குழந்தையாக நளினியின் வயிற்றில் வளரும் என் தளிரின் முகத்தை எப்போது பார்ப்பேன்... சிறைக் கொட்டடியில் இருந்து என் தளிரை வெளியே அனுப்பிவைக்கும் வரை எப்படி என் உயிரை இழப்பேன்? என் குழந்தையின் முகத்தைக் காணும் வரை என்னைக் கொன்றுவிடாதீர்கள் என்று அவர்களிடம் எப்படிச் சொல்வேன்? இனியும் தயங்கினால், கோடியக்கரை சண்முகத்துக்கு ஏற்பட்ட சாவே எனக்கும் ஏற்படும் என்பது உறுதியானது.

என் வாரிசின் முகம் பார்க்காமல் உயிரைவிட எனக்கு விருப்பம் இல்லை. அதேநேரம், அவர்கள் அடித்தே கொன்றுவிடுவார்களே என்கிற பயத்துக்கும் பதில் இல்லை. என்னைக் காத்துக்கொள்ள அப்போது எனக்கு இருந்த ஒரே வழி... அவர்கள் சித்திரித்திருந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடுவதுதான். 'ஏதோவொரு ஆபத்து என்னைச் சூழ்கிறது’ என்கிற நடுக்கத்துடனேயே கைகள் துடிக்கக் கையெழுத்துப் போட்டேன். எட்டு வருடங்களுக்கு முன்னால் என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நான் போட்ட கையெழுத்தே, என் உயிரைக் காவு வாங்கும் சாட்சியாக மாறிப்போனதுதான் என் ஜென்மத் துயரம்!

- காயங்கள் ஆறாது


நன்றி: ஜூனியர் விகடன், 09-10-11

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

மிஸ்டர் 4G ப.சிதம்பரம்!

.ராசாவையும் கனிமொழியையும் லபக்கிய ஸ்பெக்ட்ரம் பூதம்... தயாநிதி மாறன் மீது லேசான பல் தடத்தை மட்டும் பதித்துவிட்டு, இப்போது ப.சிதம்பரம் பக்கம் திரும்பி இருக்கிறது!

ப.சி. மாட்டினால், 2ஜி-யில் சிக்கப்போகும் '4-வது ஜி’-யாகச் சொல்லலாம். 5-வது ஜி-யாக பிரதமர் மன்மோகன் சிங்கே இருக்கலாம்!

இந்தியாவின் தொலைத் தொடர்பு வளத்தை எவ்வித விதிமுறையும் இல்லாமல் பட்டா போட்டுப் பண்ணையம் பண்ணிய கதையின் க்ளைமாக்ஸ் இன்னமும் தெரிய வில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களை திஹார் சிறையில்வைத்து, விவகாரத்தை பாட்டியாலா கோர்ட்டில் விசாரித்தாலும், ஏக இந்தியாவும் ஒரே மூச்சாக நம்புவது இந்தியாவின்உச்ச நீதிமன்றத்தைத்தான். அதன் மாட்சிமை தாங்கிய நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வியும் ஏ.கே.கங்குலியும் மட்டும் இல்லாவிட்டால், எப்போதோ ஸ்பெக்ட்ரம் 'ஸ்வாகா’ ஆகி இருக்கும்.

மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவுசெய்கிறது. இரண்டு, மூன்று முறை விசாரிக்கிறது. 'அவர் மீது தவறு இருக்கிறது’ என்று 'நம்பிய’ மன்மோகன் சிங், பதவி விலகச் சொல்கிறார். ராசா ராஜினாமா நடக்கிறது. சி.பி.ஐ. அவரைக் கைது செய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொலைத் தொடர்பு அமைச்சராக வந்த கபில்சிபல், ''எந்தத் தவறும் நடக்கவில்லை'' என்று அடம்பிடித்தார். அப்படியானால், ஆ.ராசாவை எதற்கு ராஜினாமா செய்யச் சொன்னார் பிரதமர்? மத்திய அமைச்சராகவே அவரை வைத்துக்கொண்டு, மத்திய அரசே வழக்கை நடத்தி இருக்கலாமே? என்ற கேள்விக்குப் பதில் இல்லாத நிலையில், ப.சிதம்பரம் வருகிறார்.

''2 ஜி அலைக்கற்றையை ஏல முறையில் அல்லாமல், முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்க, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான் அனுமதி தந்தார். எனவே, இந்த வழக்கில் அவரையும் சேர்க்க வேண்டும்; கைது செய்ய வேண்டும்'' என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்ல ஆரம்பித்தபோது, சுவாமியின் வழக்கமான 'மிரட்டல்’ என்றே எல்லோரும் நினைத்தார்கள். இதை ஆ.ராசாவே பாட்டியாலா நீதிமன்றத்தில் படிக்க ஆரம்பித்தபோது, வழக்கு 'ட்விஸ்ட்’ அடித்தது. ''இது பிரதமருக்கும் தெரியும்'' என்று சேர்த்துச் சொன்னார் ராசா. ஆனால், மன்மோகன் அப்பாவி என்கிறார் சுவாமி!

''பிரதமரையும் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்'' என்று ஆ.ராசா சொன்னதாகப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ''விசாரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்'' என்று மறுநாளே ராசா விளக்கம் அளித்தார். ஆனாலும், சி.பி.ஐ-யும் மத்திய அரசும், மன்மோகன் குறித்தும் ப.சிதம்பரம் குறித்தும் வாயைத் திறக்க மறுத்தன.

சுவாமிக்கு வேறு வாசல் இல்லை. உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டினார். '2 ஜி வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும்’ என்பது சுவாமி மனுவின் சாராம்சம். நீதிபதிகள் சிங்வியும் கங்குலியுமே இதை விசாரித்தார்கள். ''உச்ச நீதிமன்றத்துக்கு இதுபற்றி விசாரிக்க அதிகாரமே இல்லை'' என்று மத்திய அரசு வழக்கறிஞர் பி.பி.ராவ் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம். இந்த வழக்குக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்ததில் தொடங்கி, விசாரணைத் தகவல்களை எங்களுக்குத் தொடர்ந்து தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டபோது எல்லாம் மவுனமாக இருந்த மத்திய அரசு, ப.சிதம்பரம் தலையில் கை வைக்கிறார்கள் என்றதும் பதறிப்போனது.

''உச்ச நீதிமன்றம் லட்சுமணன் கோட்டைத் தாண்டக் கூடாது'' என்று மத்திய அரசு வழக்கறிஞர் சொன்னபோது, ''லட்சுமணன் கோட்டை சீதை தாண்டவில்லை என்றால், ராவண வதம் நடந்திருக்காது. லட்சுமணன் கோடு தாண்டப்பட்டதால்தான் அரக்கர்கள் அழிக்கப்பட் டார்கள்'' என்று நீதிபதிகள் சொன்னார்கள். ''உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையே கேள்வி கேட்கக் காரணம், ப.சிதம்பரத்தைக் காப்பாற்றும் முயற்சியே'' என்று டெல்லி பத்திரிகையாளர்கள் சொல்ல ஆரம்பித்து உள்ளனர்.

''ப.சிதம்பரத்தைப் பொறுத்த வரையில், அவர் நிதி அமைச்சராக இருந்தபோதும் உள்துறை அமைச்சராக ஆன பிறகும், எனது முழு நம்பிக்கைக்கு உரியவர்'' என்று பிரதமர் வக்காலத்து வாங்கியுள்ளார். ஆனால், பி.ஜே.பி. முதல் ஜெயலலிதா வரை அனைவருமே ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக ஒரு கடிதம் காட்டப்படுகிறது!

மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் பி.ஜி.எஸ்.ராவ், பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குநர் வினி மகாஜனுக்குக் கடந்த மார்ச் மாதம் ஒரு கடிதம் அனுப்புகிறார். '2ஜி அலைக்கற்றையை ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், அதில் ஊழலே நடந்திருக்காது’ என்கிறது அந்தக் கடிதம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்தக் கடிதம், சுப்பிரமணியன் சுவாமி கைக்குக் கிடைத்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இன்றைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலைப் பெற்ற பிறகே, இந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ''ப.சிதம்பரத்துக்குத் தெரிவிக்காமல் எதுவும் நடக்கவில்லை'' என்று ஆ.ராசா வாதிடுவதற்கு முக்கிய ஆதாரமாக இது இருக்கப்போகிறது.

இந்தக் கடிதத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழு கேட்டுள்ளது. எனவே, அங்கு விரைவில் ப.சிதம்பரம் அழைக்கப்பட்டு, விசாரிக்கப்படலாம். உச்ச நீதிமன்றம் கொடுக்கும் அழுத்தத்தைப் பொறுத்து, சி.பி.ஐ. முன் ப.சிதம்பரமும் ஆஜராக வேண்டிய நிர்பந்தம் வரலாம். இதில் துரதிருஷ்டம், அவரது உள்துறையின் கண்காணிப்பில் தான் சி.பி.ஐ. உள்ளது. ஆ.ராசா மீது சீறிப் பாய்ந்த சி.பி.ஐ, சிதம்பரம் விஷயத்தில் சிணுங்கிப் பதுங்குமானால், ''இந்த வழக்கே அரசியல் உள்நோக்கம்கொண்டது'' என்று கருணாநிதி சொல்லிவந்த குற்றச்சாட்டு உண்மை ஆகிப்போகும். இந்த விவகாரம் வெடித்து, ராசா கைதுசெய்யப்படும்போது, ''தனி ஒருவரால் இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்ய முடியுமா?'' என்ற தொனியில் கருணாநிதி கேட்ட கேள்விக்கு இப்போதுதான் அர்த்தம் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.

மொத்தத்தில், ராஜீவ் காந்தியின் முகமூடி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கிழிந்து தொங்கியதைப்போல, சோனியாவின் முகமூடி 2ஜி ஊழலில் கிழிந்துவிட்டது!

-ப. திருமாவேலன்

நன்றி: ஆனந்தவிகடன், 05-10-2011

தூக்குக்கயிறே என் கதை கேள்! (3) சிசுவை சிதைப்பதுதான் விசாரணையா?

டந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்... இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம். மனதுக்குள் ஆயிரமாயிரம் கற்பனைகள். சினிமா காதலுக்கே உரிய கனவுகளைப் போல் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்​கொள்ளவும், கொஞ்சி மகிழவும் ஆசைப்பட்டோம். ஆனால், தலைப்பிள்ளையைத் தக்கவைக்கக்கூட போராட வேண்டிய நிலை வரும் என்பதை எந்த சொப்பனமும் எங்களுக்குச் சொல்லவில்லை. அதிகாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நானும் நளினியும் மசியாத நிலையில்... அவர்களின் கவனம் எங்களின் இரண்டரை மாத சிசுவின் மீது திரும்பியது.

'இதுவரை நடந்த விசாரணைகள் எல்லாம் சாதாரணம்தான்... இனிதான் மொத்தச் சித்ரவதை​களும் இருக்கு. மரியாதையா இப்பவே உன் வயித்தில வளர்ற குழந்தையைக் கலைச்சிடு. இல்லைன்னா, நாங்களே கலைச்சிடுவோம். அது இன்னும் மோசமா இருக்கும்!’ என அதிகாரிகள் மிரட்ட, நளினிக்கு குலைநடுங்கிவிட்டது. இதுபற்றி அவள் என்னிடம் கலந்து ஆலோசிக்கக்கூட வழி இல்லாத அளவுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகப்படுத்தினர்.

'உங்களோட அத்தனை சித்ரவதை​களையும் நாங்க பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கிறதுக்குக் காரணமே, என் வயித்தில வளர்ற சிசுதான். நீங்க என்ன சொன்னாலும் அதைக் கலைக்க மாட்டேன்!’ என முடிந்த மட்டும் போராடி இருக்கிறாள் நளினி.

அடுத்த கட்டமாக இன்னொரு முயற்சியையும் அதிகாரிகள் நடத்திப் பார்த்தார்கள். என் மாமியார் பத்மா அவர்களையும், மைத்துனர் பாக்கியநாதனையும் மிரட்டி, 'குழந்தையை அழிக்கச் சொல்லுங்கள். இல்லையேல், நாங்கள் சொல்வதற்கு எல்லாம் ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள்!’ எனச் சொல்லி இருக்கிறார்கள். இரண்டரை மாத சிசுவைச் சிதைக்க அதிகாரிகளுக்கு என்ன ஒரு ஆர்வம்?

சிசுவை அழிக்க மட்டும் அல்ல... என்னையும் நளினியையும் கணவன் மனைவி இல்லை என்று போலியாக நிரூபிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டனர். நாங்கள் சைதாப்பேட்டையில் கைதானபோது, நளினியின் கழுத்தில் தாலி இருந்தது. பெர்சனல் சர்ச் மெமோவில் (Ex.C.18 என்ற Personal Search memo) அந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் கஸ்டடியில், 'நாங்கள் இருவரும் கணவன் - மனைவி’ எனச் சொல்லி இருக்கிறோம். ஜுடீஷியல் கஸ்டடிக்கு வந்தவுடன், 'நாங்கள் இருவரும் கணவன் மனைவி’ எனக் குறிப்பிட்டு பல மனுக்களை சிறப்பு நீதிமன்றத்துக்கும், சிறை அதிகாரிகளுக்கும் பல்வேறு பரிகாரம் வேண்டி எழுதி உள்​ளோம். இவ்வளவு இருந்தும் சி.பி.ஐ., எஸ்.ஐ.டி. அதிகாரிகள் என் மனைவிக்கு எதிராகத் தயார் செய்த ஆவணங்களான எக்ஸ்.பி. 75, 76, 77 (Ex.p.75, 76, 77) கன்ஃபெஷனல் ஸ்டேட்மென்ட் (Confessional statement), 78, 634, 1206, 1209, 1422, 1424, 1427, 1428 ஆகிய அனைத்திலும் என் மனைவியை மிஸ் நளினி என்றுதான் குறிப்பிட்டு உள்ளனர். இது எத்தகைய குரூர வில்லத்தனம்?

எப்படியாவது என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்துவிடலாம் என்று நம்பியே முன்ன​தாகவே ஆவணங்களில் நளினி கல்யாணம் ஆகாதவர்போல் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், அந்த முயற்சியிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. ஒரு கொலையை விசாரிக்க வேண்டியவர்கள், ஒரு சிசுவை அழிக்கவும், ஒரு குடும்பத்தைச் சீரழிக்கவும்தான் போராடினார்கள்.

அடுத்து, பத்திரிகையாளர்களிடம் அவர்கள் பந்திவைத்த செய்திதான் குரூரத்தின் உச்சம். 'முருகனும் நளினியும் திருமணம் செய்துகொள்ளாமலே உடல் உறவு வைத்துக்கொண்டவர்கள்’ என தாம்பத்​தியப் புனிதத்தைத் தலை முழுகும் கொடூரத்தைப் பரப்பினார்கள். என் மனைவியை வேறு சில ஆண்களுடன் தொடர்புபடுத்தியும் கொச்சைப் பரப்புதலில் குளிர் காய்ந்தார்கள். இவை குறித்​தெல்லாம் டிரையல் கோர்ட்டில் சி.ஆர்.பி.சி. செக்ஷன் 313-ன் கீழ் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் கண்ணீரோடு சொன்னோம். ஆனால், நிம்மதிக்காக ஏங்கிய எங்களின் குரல் நீதிமன்றத்தின் கம்பீரக் கதவைத் தட்ட முடியாமல் தோற்றுத் திரும்பின.

அடுத்தடுத்த நாட்களில் தினசரிகளைப் புரட்டி​னால், பக்கத்துக்குப் பக்கம் முருகனும் நளினியும்தான்... 'நளினியின் வயிற்றில் உள்ள குழந்தைக்குத் தகப்பன் யார்?’, 'புலிகளின் மூத்த தளபதிதான் நளினியின் காதலன்’ என நெஞ்சை நொறுக்கும் தலைப்புகள். எங்களுக்காக ஒரு குவளை நீர்கூட கொடுக்காத அதிகாரிகள் அந்த செய்திகளைத் தாங்கி வந்த தினசரிகளை வலிய வந்து கொடுத்தார்கள். அதைப் படித்துவிட்டு நாங்கள் துடித்த துடிப்பை ரசித்தார்கள். மனம் மரத்துப்போகிற அளவுக்கு அத்தனை அவதூறுகளையும் எழுதவைத்தார்கள். 'என்ன எழுதினாலும் சரி, நான் என் மனைவிக்கும், என் மனைவி எனக்கும் உண்மையாக இருக்கிறோம். இதை எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது!’ என நெஞ்சுக்குள் தைரியம் வார்த்துக்கிடந்தோம். அப்போதுதான் அவதூறின் அடுத்தக் கட்டத் தாக்குதல் மீடியாக்களில் ஆரம்பித்தது. 'நளினியின் குழந்தையைக் கொல்ல முருகன் முயற்சி’ எனத் தலைப்பிட்டு, உள்ளே நா கூசும் கற்பனைகளைக் கடைவிரித்தனர்.

எழுத்தால் - பிரம்பால் - அவ​தூறால் - ஆணவத்தால் எங்களை அழிக்க அதிகாரிகள் தீட்டிய அத்​தனை திட்டங்களையும் தவிப்போடு தாங்கிக்கொண்டோம். 'இனி அழக் கண்ணீர் இல்லை’ என்கிற நிலையிலும், 'இனி எம் மீது பாய்ச்ச அதிகாரிகள் எங்காவது போய் சித்ரவதைகளைக் கற்றுக்கொண்டு வந்தால்தான் உண்டு’ என்கிற சகலத்​தையும் கடந்த சலிப்பும் எங்களை உறுதிகொள்ள வைத்தது.

இத்தனை தடைகளைத் தாண்டி, நளினியின் வயிற்றில் ஆரித்ரா பிறந்தாள். சிறைக்குள் பிறந்தது அவள் எந்தப் பிறவியில் செய்த பாவமோ... ஆனால், எங்கள் வயிற்றில் அவள் பிறந்தது பெரும்பாவம். சிறையில் குழந்தை பிறந்தால், பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்வது எமது சட்டரீதியான உரிமை. ஆனாலும், எமக்கு அது மறுக்கப்பட்டது. அதனால், ஆறு நாட்கள் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தோம். கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு, பட்டினிகிடப்பது எத்தகைய கொடூரம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பால் வற்றிப்போனது; ஈரக்குலையின் ஈரம் இற்றுப்போய் தண்ணீருக்காக ஏங்கத் தொடங்கியது. தாயும் மகளும் மடிகிற நிலையானால் சிக்கல் வந்துவிடுமே எனப் பயந்து என் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் கொடுத்தார்கள். நாங்கள் கைது செய்யப்படுவதற்கு முன் இந்து திருமண சட்டப்படி செய்துகொண்ட திருமணத்தினை சட்டப்படி பதிவு செய்ய மறுத்த கதையும் நடந்தது. அதற்காக அடுத்தக் கட்ட உண்ணாவிரதம்!

பட்டினி கிடப்பதுதான் எமக்கான தீர்வைப் பெற்றுத் தரும் ஒரே ஆதாரமாக விளங்கியது. உடலை வருத்தி, உணவுக் குடலைச் சுருக்கி, நா வறண்டு, 'இதுதான் கடைசி நாளோ?’ எனக் கண்களுக்குள் பயம் படர்ந்து... மொத்தமாக 25 நாட்கள் உண்ணாவிரதம். சாகும் நிலை வரப்போகிறது எனத் தெரிந்த பிறகுதான், அதிகாரிகளின் மனதில் மாற்றம் பிறந்தது.

1995-ம் ஆண்டு எங்களுடைய திருமணத்தினை சட்டப்படி பதிவு செய்துகொண்டோம். 'குற்றவாளிகள் இல்லை’ எனப் போராடி இருக்க வேண்டிய நாங்கள், உண்மையான தம்பதி என்பதை நிரூபிக்கவும், எங்கள் மகளைக் காக்கவுமே படாத பாடுபட்​டோம்.

கருவிலேயே நினைத்துப் பார்க்க முடியாத அத்தனை கொடூரங்களையும் சந்தித்து​விட்ட என் மகள் ஆரித்ரா, இன்றைக்கு லண்டனில் பயோ மெடிக்கல் சயின்ஸ் முதல் வருடம் படிக்கிறாள். மிருகங்​களுக்கு மத்தியில் சிக்கிய சினை ஆடாக, வயிற்றுக்குள்வைத்து அவளை எப்படிப் பொத்திப்பொத்தி வளர்த்தோம் என்பதை இன்றைக்கு நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. வயிற்றுக்குள் இருந்தபோது மட்டும் அல்ல... வளர்ந்து ஆளாகி அவள் நிற்கும் வேளையிலும் 'மகளே...’ என வாய் நிறைய அழைக்க முடியாமலும், அவள் முகத்தைப் பார்க்க முடியாமலும் நாங்கள் படும்பாடு, ஆயிரம் தண்டனைகளுக்குச் சமம்!

எனக்கு தூக்குக்கான தேதி அறிவிக்கப்பட்டது குறித்து 'விகடன்’ நிருபர் ஆரித்ராவிடம் பேட்டி எடுத்தபோது, 'அப்பாவை முதல் முறையா சந்திச்சப்ப, 'ஏம்ப்பா இப்படிப் பண்ணினீங்க?’னு கேட்டேன். இன்னிக்குப் புரியுது... நான் கேட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு... அப்பா, என்னை மன்னிச்சிடுங்கப்பா’னு ஆரித்ரா பதில் சொல்லி இருந்தாள். ஒரு தாய், தகப்பனாக ஆரித்ராவுக்கு எதுவும் செய்ய முடியாமல், 'கொலைகாரனின் மகள்’ என்கிற பழிப் பெயரை வாங்கிக்கொடுத்த நாங்கள்தான் ஆரித்ராவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். எந்த சிசுவை அழிக்க நினைத்தார்களோ... அதுதான் இன்றைக்கு எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. அவள் உலகத்தின் ஏதோ ஒரு திசையில் இருந்தாலும், எங்களின் வாரிசாக இருக்கிறாள் என்கிற ஆறுதலே எமக்குப் போதும்.

- காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர்விகடன், 05-10-2011