செவ்வாய், ஜூலை 29, 2008

நீதிபதிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா?

வெளிப்படையான ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். அரசின் எந்த அமைப்புகளிடமிருந்தும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

இந்தச் சட்டத்தின்படி, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளும் தங்களது ஆண்டு வருமானம் மற்றும் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் தலைமைத் தகவல் ஆணையரிடம் மனுச் செய்திருக்கிறார். அந்த மனு நிலுவையில் இருக்கிறது.

கடந்த காலங்களிலேயே இந்த விவகாரம் குறித்து நிறைய விவாதிக்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் அனைவரும் தங்களது வருமானம் மற்றும் சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என 1997-ல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வர்மா வயுறுத்தினர்.

ஓராண்டில் புதிதாக வாங்கப்பட்ட சொத்துகள், பணப் பரிமாற்றங்கள் குறித்து அந்த ஆண்டு முடிவில் நீதிபதிகள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரினர்.

சில காலத்துக்கு உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் அவரது யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது என்ன நிலை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தற்போதைய தலைமை நீதிபதியின் கருத்து, வர்மாவின் கருத்துக்கு நேரெதிரானது. நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை தாங்களாகவே முன்வந்து வெளியிடுகிறார்களா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படிகூட அவர்களிடம் கணக்குக் கேட்க முடியாது என்கிறார் அவர்.

நீதித்துறை என்பது அரசியல் சட்டத்துக்குப் பொறுப்பானது என்பதால், அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு கட்டுப்பட்டதல்ல என்பது அவரது வாதம்.

அரசியல் சட்டத்துக்குப் பொறுப்பானவர்கள் என்பதால், நீதிபதிகள் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டியதில்லையா? என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.

இந்த விஷயத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் பொருள் பொதிந்த கருத்தை முன்வைக்கிறார்.
நீதிபதிகள் அனைவருமே பொதுமக்களின் ஊழியர்கள் என்பதால், அரசியல் சட்டத்துக்குப் பொறுப்பானவர்கள் என்ற காரணத்தைக் கூறித் தப்பிக்க முடியாது என்கிறார் அவர்.

ஒரு சாதாரணக் குடிமகன்கூட தங்களது பண வரவு செலவு, சொத்து மதிப்பு ஆகியவற்றை வருமான வரி செலுத்தும்போது அரசிடம் பகிரங்கப்படுத்த வேண்டியிருக்கிறது.

அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்கிறார்கள். அவ்வப்போது அவை ஆய்வு செய்யப்பட்டு, முறைகேடு தெரிந்தால் சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. அப்படி இருக்கும்போது நீதிபதிகளுக்கு மட்டும் சொத்துக் கணக்கைக் காட்டுவதிருந்து ஏன் விலக்கு அளிக்க வேண்டும்?

அரசு ஊழியர்களைவிட எல்லா நிலைகளிலும் நீதிபதிகளுக்கு உயர்ந்த மதிப்பு அளிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, சொத்துக் கணக்கை அவர்கள் வெளியிடுவதுதானே நியாயம்?

எந்த வகையிலும், தகவல் உரிமைச் சட்டத்தின்படி, தனி நபர் யாரும் தனது சொத்துக் கணக்கை வெளியிட முடியாது என்று கூறிவிட முடியாது. நாட்டு நலன் தொடர்பான விஷயங்களில் மட்டுமே விதிவிலக்கு.

சட்டமியற்றும் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகியவையே நாட்டைத் தாங்கிப் பிடிக்கும் மூன்று தூண்களாகும். இதில் முதலிரண்டு துறைகளும் நாட்டு மக்களின் ஆய்வுக்கு உட்பட்டே செயல்படுகின்றன.

நிர்வாகத்துறையில் ஊழல் மலிந்திருக்கிறது என்பது வெளிப்படை.
அரசியல்வாதிகளைக் கொண்ட சட்டமியற்றும் துறையும் இதற்குச் சற்றும் சளைத்ததல்ல. மக்கள் மத்தியில் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் 'மதிப்பே' இதற்குச் சாட்சி. ஆனலும் இந்த இரண்டு துறைகளும் பகிரங்க விமர்சனங்களுக்கு உள்ளாவதுடன் அவ்வப்போது மக்களின் கவனத்துக்கு வருகின்றன.

தேர்தல் போட்டியிடுவோர் அனைவரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும் எனச் சட்டமிருக்கிறது. அதன்படி, தவறான கணக்கைக் காட்டியவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். அதனால் அரசியல்வாதிகள் தங்களது சொத்துக் கணக்கை காட்டியே தீரவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

நீதித்துறையின் கீழ்நிலைகளில் நேர்மைக்குறைவு இருக்கிறது என்பது பொதுவான சந்தேகம். ஆனால் இதைப்பற்றி வெளிப்படையாக யார் பேசுவது? நீதித்துறையே முன்வந்து இந்த விஷயத்தைப் பரிசீலித்தால் மட்டுமே இதைச் சரிசெய்ய முடியும்.

சட்டமியற்றும் துறையிலும், நிர்வாகத் துறையிலும் அவ்வப்போது சீர்திருத்தங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இன்னும் நிறைய சீர்திருத்தங்கள் தேவை என்றாலும்கூட, ஏற்கெனவே நிறைய குறைபாடுகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனல், நாடு விடுதலையடைந்தது முதல் இன்றுவரை பெரிய அளவில் சீர்திருத்தங்களைச் சந்திக்காமல் இருப்பது நீதித்துறை மட்டுமே.
நீதித்துறை முழுமையடைந்துவிட்டது; அதில் சீர்திருத்தங்கள் செய்யத் தேவையில்லை என அறிவிலிகள்தான் வாதிடுவார்கள். 10 கோடிக்கும் அதிகமானோர் சம்பந்தப்பட்ட சுமார் 3 கோடி வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு குடும்பத்தில் சராசரியாக 5 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப்பேர் நீதிமன்றத்தை நாடிக்கொண்டிருக்கிறார்கள்.

வட இந்திய கிராமப் பகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் குடும்பங்களுமே நிலம் தொடர்பான தகராறுகளுக்காக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வருமானத்தின் பெரும்பகுதி வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்ற அலுவலர்களுக்குமே போய்ச் சேருகிறது.

இந்தியாவில் ஒரு கிரிமினல் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்றால், அந்த வழக்கு எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியாது.
சிவில் வழக்குகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. மத்தியஸ்தரை நியமிப்பது, தீர்ப்பாயங்களுக்கு வழக்குகளை அனுப்புவது போன்றவற்றின் மூலம் வழக்குகளை வேகமாக முடிக்கும் நடைமுறை பல்வேறு நாடுகளில் இருக்கிறது.

ஆனால், வழக்கு விசாரணையைத் தாமதம் செய்வதற்காகத்தான் இவையெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன. வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் முயற்சிகூட இன்னும் முழுமை பெறவில்லை.

வழக்குகள் முடிந்துவிடக் கூடாது என்பதிலேயே வழக்கறிஞர்களும் சில நீதித்துறை அலுவலர்களும் குறியாக இருக்கிறார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டு.

இந்தச் சூழல் நீதித்துறையின் நேர்மை குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை கொண்டுவரும் எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் எந்த மரியாதையும் இல்லை. நிர்வாகத் துறையில் நேர்மையான, திறமையான பல அதிகாரிகள் இருந்தாலும் முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள்' என்பதே அவர்களைப் பற்றிய மக்களின் கருத்து.

இந்த நிலையிலும், நீதித்துறைக்கு இன்னும் மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டியது நீதித்துறை தலைமையின் பொறுப்பு. அதற்கு உடனடி சீர்திருத்தம் அவசியம். தங்களைப் பற்றி பகிரங்கப்படுத்துவதற்கு நீதித்துறை பயப்படக்கூடாது.

நவீன தொழில்நுட்ப யுகத்தில், நீதித்துறை திரைமறைவில் செயல்பட்டுக் கொண்டிருக்க முடியாது. வெளிப்படுத்துவதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. சொல்லப்போனால், இந்த ஒளிந்து கொள்ளும் பண்புகூட சீர்திருத்தப்பட வேண்டியதுதான்.


-டி .எஸ்.ஆர். சுப்பிரமணியன்
(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)
நன்றி: தினமணி, 29-07-08

திங்கள், ஜூலை 28, 2008

"அம்பானியும், பிர்லாவும் நவ்வாப்பழம் வியாபாரத்தில் இறங்காத வரையிலும் நாடு உருப்படாது" - ஜெயமோகன்.

தனது நாவல்களின் வாயிலாக ர் ரான தத்துவ தரிசனங்களை வாசககர்களுக்குக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அந்த தரிசனங்கள் தோற்றுவித்த புல்லரிப்பிலிருந்து மீளாதவர்களும், பிரமிப்பில் உறைந்து அதன் பின் உருகி சகஜநிலை அடைய முடியாதவர்களும் பலர். ஒரே இரவில் சுந்தர ராமசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடியவரும், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் டால்ஸ்டாயையும் தஸ்தாவ்ஸ்கியையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவருமான ஜெயமோகனிடம் இலக்கிய விசாரம் நடத்தும் தகுதி நமக்கு இல்லை. யாரொருவருடனும் ஒரு விசயம் பற்றிக் கதைக்க வேண்டுமென்றால் கதைக்கப்படும் பொருள் குறித்து கடுகளவேனும் நமக்குப் பரிச்சயம் இருக்க வேண்டும். அந்த வகையில் நமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம்.

இனி, பூர்வபட்சம். அதாவது ஜெயமோகனின் கூற்று:

விஷ்ணுபுரத்திலும், கபாலபுரத்திலும், ஸ்டாலின்கிராடிலும், சங்ககாலத்திலும் மனவெளி உலா வந்த ஜெயமோகன், அங்கிருந்து இறங்கி நாகர்கோவிலில் தன் மகனுடன் ஒரு மாலை நேர உலா செல்லுகையில் ஒரு பழக்கூடையில் நாவலைக் காண்கிறார். நாவல் என்று நினைத்தீரோ வாசகரே, அது நவ்வாப்பழம்! நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த சுவை அதுதானே! ஆசையுடன் ஒரு பழத்தை வாயில் போட்டு சுவைக்கிறார். வியாபாரியிடம் விலை கேட்கிறார். கிலோ நூறு ரூபாய்!

விலை தோற்றுவித்த அதிர்ச்சி நாகர்கோவில் தெருவிலிருந்து ஜெயமோகனை அவருக்குப் பரிச்சயமான மனவெளியை நோக்கித் தூக்கி எறிகிறது. நாவல் காடு, அங்கே காய்த்துத் தொங்கும் கனிகளைச் சும்மா பறித்துத் தின்ற நினைவுகள். பிறகு மீண்டும் நாகர்கோவில்.

ஒரு கிலோ நூறு ரூபாய் என்றால் நூறு கிராம் பத்து ரூபாய். எனில் ஒரு பழம் ஒரு ரூபாய். அந்த ஒரு பழத்தில் கொட்டையைக் கழித்துவிட்டால் எஞ்சியிருக்கும் சுளைக்கு இத்தனை விலையா? நாக்கில் நாவலின் சுவையும் மனதில் வலியுமாக வீடு திரும்புகிறார் ஜெயமோகன்.

இரண்டு நாட்கள் கழித்து "கூடை நாவல் பழத்தை நூற்று ஐம்பது ரூபாய் விலைக்கு ஒரு வியாபாரியிடம் விற்ற கதையை" ஒரு ஏழை விவசாயி ஜெயமோகனிடம் விவரிக்கிறார். "ஒரு கூடை என்பது 20 கிலோ. அப்படியானால் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறதா?" உடனே ஜெயமோகனுக்கு மூளையில் பல்பு பற்றி எரிகிறது. மொத்த வியாபாரி முதல் தள்ளுவண்டி வியாபாரி ஈரான காய்கறி வியாபாரிகளெல்லாம் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு நியாய விலை கிடைப்பதில்லையாம். இப்படி உள்ளூர் சந்தைகளை ஆதிக்கம் செய்யும் நபர்கள் ரவுடிகளாகவும் இருக்கிறார்களாம். இவர்களது கொள்ளைப்பணம் அரசியல் கட்சிகளுக்கும் போவதால் கட்சிக்காரர்கள் இவர்களை ஆதரிக்கிறார்களாம். இதற்கு ஜெயமோகன் சிபாரிசு செய்யும் விமோசனம் - ரிலையன்ஸ் பிரஷ்!

முகேஷ் அம்பானி எட்டு மடங்கு விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி நுகர்வோருக்கு மலிவான விலையில் விற்பனை செய்கிறாராம். ரிலையன்ஸ் பல இடங்களில் காய்கறி சிண்டிகேட்டை நடுங்க வைத்திருக்கிறதாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நக்சலைட்டு தோழர்களும் ரிலையன்சை எதிர்க்கிறார்களாம். இதனாலேயே மதுரையிலும், ஊட்டியிலும் கொள்முதல் நிலையங்களை ரிலையன்சு மூடிவிட்டதாம். இதையெல்லாம் ஜெயமோகனிடம் அவரது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தார்களாம்.

ஒரு நவ்வாப்பழத்தை மையமாகக் கொண்டு விரிந்த இந்த உண்மைகள் ஜெயமோகனிடம் தவிர்க்க முடியாதபடி அதீத மனத்தாவலைத் தூண்டுகின்றன. இதோ, நாவல் மரத்தின் கீழே தத்துவஞானத்தின் ஒளி பரவத் தொடங்குகிறது....

"முதலாளித்துவ வளர்ச்சிதான் விவசாயிகளின் துன்பங்களைத் தீர்க்கும்.

காரல் மார்க்சே முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுத்துவத்தைவிட பல மடங்கு முற்போக்கானது என்று சொல்லியிருக்கிறார்.

தனியார் மயத்தை எதிர்ப்பது அசட்டுத்தனம்.

நான் வேலை பார்க்கும் தொலைபேசித் துறையிலேயே பத்து வருடங்களுக்கு முன்னர் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்தோம்.

வேலை போய்விடும் என்று பயந்தோம்.

தற்போது என்ன நடந்திருக்கிறது?

பல செல்பேசி கம்பெனிகள் வந்திருப்பதால் தொலைபேசிக் கட்டணம் பல மடங்கு குறைந்துவிட்டது.

எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால் ரிலையன்சு பிரஷ்ஷும், முதலாளித்துவ வளர்ச்சியும்தான் தீர்வு.

இதை ஒரு பொருளாதார அறிஞராக இருந்து சொல்லவில்லை.
ஒரு எளிய மனிதனின் பார்வையில் படும் விசயமாகக் கூறுகிறேன்"
என்று பணிவுடன் தனது தரிசனத்தை விளக்குகிறார் ஜெயமோகன்.

மிகவும் எளிய வாசககர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்வதென்றால், "அம்பானியும் பிர்லாவும் நவ்வாப்பழம் வியாபாரத்தில் இறங்காத வரையிலும் நாடு உருப்படாது" என்கிறார் ஜெயமோகன்.

இதென்ன, "ரயில் லேட்டாக வந்தால் எமர்ஜென்சி வரவேண்டும், பஸ் கண்டக்டர் பாக்கி சில்லறை கொடுக்காவிட்டால் தனியார்மயம் வரவேண்டும்" என்று பேசும் ஊசிப்போன நடுத்தரவர்க்க ஜென்டில்மேன்களின் உளறலைப் போல இருக்கின்றதே என்றோ, சோ ராமஸ்வாமியின் அபிப்ராயங்களைப் போலவே இருக்கின்றதே என்றோ வாசகர்கள் கருதிவிடக்கூடாது. இதெல்லாம் த்த்துவஞானிகளுக்கே உரிய பிரச்சினை.

"பிரம்ம ஸத்யம் ஜகன் மித்யா" என்று உபதேசித்த ஆதிசங்கரனிடம் "அப்புறம் எதுக்கு தெனம் சோறு திங்கிறாய்?" என்று ஒரு பாமரன் கேட்டானாம். "இதென்னடா நியூஸென்ஸ். அதெல்லாம் வியவகாரிக சத்யம்" என்று புறங்கையால் அந்தப் பாமரனின் வாதத்தை ஒதுக்கித் தள்ளினாராம் அந்த தத்துவஞானி. "திங்கிற சோத்துக்கும் நம்ம தத்துவஞானத்துக்கும் என்ன சம்மந்தம்?" என்ற கேள்வி எழ முடியாத அளவுக்கு சிந்தனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சங்கரனைப் போலவே, மாதாமாதம் கைநீட்டி காசு வாங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கும் தனது தனியார்மயத் தத்துவத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி ஜெயமோகனுக்கும் தெரியவில்லை.

தெரியவேண்டியதில்லையே! காலங்களைக் கடந்து மனவெளியில் சஞ்சரிக்கும் ஒரு மனிதனுக்கு, தண்டி தண்டியாக இலக்கிய உன்னதங்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதிக்கு, தினத்தந்தி பேப்பரில் என்ன வந்திருக்கிறது என்ற விவரமோ, தனக்குப் படியளக்கும் துறையில் என்ன நடக்கிறது என்ற விவரமோ எப்படித் தெரிந்திருக்க முடியும்?

அதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த விவரங்கள். இலக்கியத் தரமோ சுவையோ அற்ற, வலதுசாரி இடதுசாரி சார்பும் அற்ற அந்த உண்மை விவரங்கள் வருமாறு:

தனியார் வந்ததனால் செல்பேசிக் கட்டணம் குறைந்ததாம்! கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்ததால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல! தேவையான தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல் இடம் இருந்தபோதும், செல்பேசித் துறையில் நுழையவிடாமல் பி.எஸ்.என்.எல் தடுக்கப்பட்டது. தனியார் மட்டுமே கொள்ளையடிக்க ஒதுக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், ரம்பா, மீனா, ரோஜா போன்ற பில் கட்டத் தேவையில்லாத ஏழை நடிகைகள் நிமிடத்துக்கு 10 ரூபாய் ரேட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இன்கமிங் காலுக்கும் பில் இருந்தது. அது கொற்றவையின் காலமல்ல. காங்கிரசு, பாரதிய ஜனதா ஆட்சிக்காலம். அம்பானியின் அருமை நண்பரான பிரமோத் மகாஜன் அரசுத் தொலைபேசியை பாயின்ட் பிளான்கில் சுட்டுக் கொன்ற காலம் அது.

பிறகு ஆத்தமாட்டாமல் வந்தது அரசு தொலைபேசி. அதன் காலை உடைப்பதற்கு டிராய் என்ற கட்டைப் பஞ்சாயத்து அமைப்பு தயாராக இருந்தது. அரசுத் தொலைபேசியின் கட்டுமானங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தார்கள் முதலாளிகள். அரசுக்கு லைசன்ஸ் கட்டணம் தருகிறோம் என்று ஒப்புக்கொண்டு அதற்கும் நாமம் போட்டார்கள். கிராமத்துக்கு தொலைபேசி வசதி செய்து தருகிறோம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, "முடியாது" என்று கைவிரித்தார்கள்.

இதெல்லாம் போதாதென்று நவ்வாப்பழத்துக்கு எட்டு மடங்கு விலை கொடுக்கப்போகும் அம்பானி, பி.எஸ்.என்.எல்-ஐ ஏமாற்றி அமெரிக்காவுக்கு திருட்டு கால் கொடுத்தார். 1500 கோடி ரூபாய் சுருட்டினார். இ.பி.கோ 124-ஏ, 120-B இன் கீழ் ஆயுள்தண்டனை தரத்தக்க அந்த குற்றத்தை மன்னித்தது காங்கிரசு அரசாங்கம். பாதி காசு வாங்கிக் கொண்டு அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் செய்து கொண்டார் தம்பி தயாநிதி மாறன். தன்னுடைய செல்பேசி ஏஜென்டுகளுக்கே அம்பானி சகோதரர்கள் அல்வா கொடுத்தது தனிக்கதை.

சென்னை மாநகரில் கண்ணாடி இழைக் கேபிள் இழுக்க எங்கே வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளுங்கள் என்று ஜெயமோகனின் அபிமான தனியார் முதலாளிகளுக்கு லைசன்ஸ் கொடுத்தது திமுக மாநகராட்சி. இதில் 1300 கோடி ரூபாய் இழப்பு என்று துக்ளக்(கே) எழுதியது. இதுவும் போதாதென்று சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, அதிகாரிகள் அமைச்சர்கள் ஆதரவுடன் பி.எஸ்.என்.எல் கம்பிகளை ஆள் வைத்து அறுத்தார்கள் முதலாளிகள். அதை எதிர்த்து சென்னை தொலைபேசி ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

லாபகரமாக நடந்துகொண்டிருந்த விதேஷ் சஞ்சார் நிகாமின் (VSNL) பங்குகளை அதன் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புக்கும் குறைவான விலையில் டாடாவுக்கு தாரை வார்த்தார் பிரமோத் மகாஜன். தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்தவுடனே, VSNL கல்லாவில் இருந்த ரொக்கத்தை வைத்து மூழ்கிக் கொண்டிருந்த டாடா டெலிகாமின் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி தனது கம்பெனியைத் தூக்கி நிறுத்தினார் டாடா. இப்போது அமர்சிங்கின் ஒப்பந்தப்படி அனில் அம்பானிக்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் ரேடியோ அலைவரிசையை ஒதுக்குவதற்குத் தோதாக கட்டணத்தை மலிவாக மாற்றப்போகிறார்கள்.

இது செல்பேசி கதை. பெட்ரோல் கதை தனி. பாலியெஸ்டர் கதையை ஏற்கெனவே அருண்ஷோரியும் குருமூர்த்தியும் எழுதியிருக்கிறார்கள். ஹமிஷ் மெக்டொனால்டு என்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எழுதிய "பாலியெஸ்டர் பிரின்ஸ்" என்ற அம்பானி பற்றிய நூலை இந்தியாவுக்குள்ளேயே வரவிடாமல் தடுத்துவிட்டார்களாம் அம்பானிகள். ரசியாவில் தடைசெய்யப்பட்ட, ஸ்டாலின் காலம் குறித்த நூல்களையெல்லாம் தோண்டிக் கண்டுபிடித்த ஜெயமோகனின் கண்ணில் இந்த நூல் படவில்லை போலும்! அம்பானியின் பிளாஸ்டிக் ஏகபோகத்தால் அழிந்த சிறு உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தமது வயிற்றெரிச்சலை தினமணியில் விளம்பரமாகவே வெளியிட்டிருந்தார்கள். ரிலையன்ஸ் பிரஷ்ஷால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் நாடு முழுவதும் போராடுகிறார்கள்.

உண்மை விவரங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம்.

உண்மை என்ற சொல்லே விவாதத்துக்குரியதாயிற்றே! "தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. பார்க்கின்ற பார்வையில்தான் இருக்கிறது விசயம். நிலப்பிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் முற்போக்கானது என்று மார்க்ஸே சொல்லியிருக்கிறார்" என்கிறார் ஜெயமோகன்.

வறுமையோ, பட்டினியோ, படுகொலையோ கூட யாரையும் மார்க்சிஸ்டாக மாற்றிவிடுவதில்லை. ஜெயமோகனுடன் பழகிய சிபிஎம், சிபிஐ தலைவர்களாலேயே கூட அவரை மார்க்சியவாதியாக மாற்ற. முடியவில்லை. மனிதர்களால் சாதிக்க முடியாத இந்தக் காரியத்தை கேவலம் ஒரு நவ்வாப்பழம் சாதித்துவிட்டதே! இருப்பினும், நவ்வாப்பழத்தால் அறிவொளியூட்டப்பட்ட ஜெயமோகனின் மார்க்சிய அறிவு "சுட்டபழம் சுடாத பழம்" ரேஞ்சில் இருப்பதால் நாம் அதற்குள் இறங்கவில்லை.

ஒரு இலக்கியவாதியின் இளகிய மனம், கேவலம் ஒரு நவ்வாப்பழத்துக்காக நாலு கோடி சிறுவணிகர்களை கொல்லத் துணிகிறதே! அதை நினைக்கும்போதுதான் நெஞ்சு நடுங்குகிறது. வீடு, நிலத்தை விற்று மஞ்சள் பையுடன் சென்னை வந்து, குடும்பத்தோடு மளிகைக் கடையிலேயே குடியிருக்கும் இலட்சக்கணக்கான அண்ணாச்சிகளோ, அவர்களின் சங்கத்தலைவர் வெள்ளையனோ ரவுடியல்ல. முதலாளிகளின் கொள்ளைக்காக பருத்தி கொள்முதல் விலை குறைக்கப்பட்டதால்தான் விதர்பாவின் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வாழ்க்கையை கதையாக வழங்கிக் கொண்டிருக்கும் சாய்நாத்தும், அம்பானியின் கோதுமைக் கொள்முதலால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பஞ்சாப் விவசாயிகளைப் பற்றி எழுதும் வந்தனா சிவாவும் நக்சலைட்டுகள் அல்ல.

இவையெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியாத உண்மைகளும் அல்ல. எனினும் ஒரு நவ்வாப்பழத்தின் விலை அவரது இதயத்தில் தோற்றுவித்த வலி, "நவ்வாப்பழ பிரின்ஸ்" என்றொரு நாவல் எழுதும் அளவுக்கு அவரை வெறி கொள்ளச் செய்திருக்கிறது. அவரது இதயத்தில் தோன்றிய வலி, விவசாயிக்குக் கிடைக்கும் விலையை அறிந்ததால் வந்ததல்ல என்பதை அவரது செல்போன் சிலாகிப்பைப் படித்தாலே உணர்ந்து கொள்ள முடியும்.

ஜெயமோகன் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் என்பதோ, மார்க்சியவாதி அல்ல என்பதோ நமது பிரச்சினை அல்ல. இப்பிரச்சினையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பொருளாதார அறிஞராக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எளியாரை வலியார் ஏறி மிதிக்கும் அநீதியைக் கொள்கைப்பூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு பாசிஸ்டைக் காட்டிலும் அதனை மனப்பூர்வமாக வழிமொழியும் இலக்கியவாதி ஆபத்தானவன்.

மனித மனத்தின் இருட்குகைக்குள் டார்ச் அடித்து, உண்மைக்கும் பொய்க்கும் அப்பாற்பட்ட ஒன்றை, அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிக்காத ஒன்றைத் தேடுவதாகப் பம்மாத்து செய்து, அந்தப் போலி மன அவஸ்தைக்குத் தனது வாசகர்களையும் ஆட்படுத்தும் வித்தை தெரிந்த ஒரு எழுத்தாளன், இதோ அம்மணமாக நிற்கிறான்.

இந்த எழுத்து மனம், கூடு விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசனை என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் யாரும் இதனைத் தட்டிக் கழிக்க முடியாது.

"எனக்கு சோன் பப்டி பிடிக்கும், ஜெயமோகனும் பிடிக்கும்" என்று கூறும் ரசிகர்களைப் பற்றி பிரச்சினையில்லை. ஜெயமோகனுக்குக் கூடத்தான் நவ்வாப்பழம் பிடிக்கும். அது ஏன் என்று நாம் கேட்க முடியுமா என்ன?

(இந்தக் கட்டுரையை உரிய மூளைகளில் உள்ளீடு செய்வது வாசகர்களின் விருப்பம்)

- வினவு
நன்றி: http://www.keetru.com/

வெள்ளி, ஜூலை 18, 2008

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் எதற்காக? மின்சாரத்துக்கா? அணு குண்டுக்கா?

ஆட்சியையும் பிரதமர் பதவியையும் காங்கிரஸ் கட்சியையும்கூட பணயம் வைக்கும் அளவுக்கு மன்மோகன் சிங் பிடிவாதம் பிடிக்கும் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் எதற்காக? மின்சாரத்துக்கா? அணுகுண்டுக்கா?`மின்சாரத்துக்காகத்தான். இது இல்லாவிட்டால் இந்தியாவே இருண்டுவிடும்' என்று மன்மோகன் அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்ட களத்தில் இறங்கியிருக்கிறது.
உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரத்துக்கானது இல்லை என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு. நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.

மின்சாரத்துக்கான ஒப்பந்தம் என்றால், இதைப் பற்றிய விளக்கங்களை மக்களிடமோ அரசியல் கட்சிகளிடமோ தெரிவிக்க வேண்டியவர்கள் யார் யார்? பிரதமரே நேரடியாகத் தெரிவிக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரை அச்சாகும்வரை அவர் இதர அரசியல் கட்சித் தலைவர்களிடம் நேருக்கு நேர் பேசவில்லை; டி.வி. பேட்டிகளும் தரவில்லை. அடுத்தபடியாக மத்திய மின்சார அமைச்சர் பேசியிருக்கலாம். அவரும் இதுவரை பேசவில்லை.

மின்சக்தித் துறை செயலாளர் போன்ற அதிகாரிகளும் பேசவில்லை.
ஒரே ஒரு அதிகாரிதான் தொடர்ந்து பத்திரிகை, டி.வி. சிறப்பு பேட்டிகளில் பேசிவருகிறார். ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங்குக்கு, ஒரு மணி நேரத்துக்குள் இந்த ஒப்பந்தத்தின் சிறப்புகளைச் சொல்லிப் புரியவைத்து மனம் மாற்றியதும் அதே அதிகாரிதான்.

அவர் - பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மாயன்கோட்டை கேளத் சிவி.நாயர் நாராயணன் என்கிற எம்.கே. நாராயணன் !

ஏன் `பாதுகாப்பு' ஆலோசகர் மின்சாரத்துக்கான அணு ஒப்பந்தம் பற்றிய விளக்கங்களை அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தேச மக்களுக்கும் விளக்கிக் கொண்டிருக்கிறார்? ஏனென்றால், உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரம் பற்றியதே அல்ல என்பதுதான் காரணம். இன்னும் பல கோடி ரூபாய்களைக் கொட்டிக் குவித்தாலும் இப்போதைய 3 சதவிகிதத்திலிருந்து அணு மின் சாரத்தின் அளவை, கலாமின் கனவு வருடமான 2020-ல் 10 சதவிகிதம் வரை கூடக் கொண்டு செல்ல முடியாது என்பது தெளிவான விஷயம்.

எம்.கே நாராயணன் கடந்த வாரத்தில் பல்வேறு ஆங்கில டி.வி சேனல்களுக்கு அளித்து வரும் பேட்டிகளைப் பார்த்தேன். ஒரு பேட்டியின் இறுதியில் பேட்டியாளர் நிகழ்ச்சியை முடிக்கும்போது, பல தடைகளை மீறி இதைச் செய்து முடிப்பதில் நாராயணன் காட்டியிருக்கும் உறுதியையும் வெற்றியையும் பாராட்டினார். நாராயணனின் பதில்: ``இருக்கலாம். ஆனால் நான் வில்லனா, தேவதையா என்று தெரியவில்லை. போகப் போகத் தெரியலாம்.''

ஒப்பந்தத்துக்கு எதிரான தடைகளை அடித்து நொறுக்கி முன்னேற, மன்மோகனின் போர் தளபதியாகத் திகழும் 74 வயது நாராயணன் மின் துறை தொடர்பானவரும் அல்ல; அணுசக்தித் துறை விஞ்ஞானியும் அல்ல. வாழ்க்கை முழுக்க இந்திய உளவுத் துறையில் பணியாற்றியவர். ஐ.பி எனப்படும் இன்டெலிஜென்ஸ் பீரோவின் தலைவராக இருந்தவர்.

பேட்டியாளர் கேட்ட இன்னொரு கேள்வி: ``இவ்வளவு சிக்கலான ஒப்பந்தத்தை எப்படி அமர் சிங்குக்கு ஒரு மணி நேரத்துக்குள் புரியவைத்து சம்மதத்தைப் பெற்றீர்கள்?'' நாராயணன் பதில்: அது என்னுடைய அறிவுக் கூர்மையாக (பிரில்லியன்சாக) இருக்கலாம். அல்லது அற்புதமாக (மிராகிளாக) இருக்கலாம். ஆனால் அது அப்படித்தான் நடந்தது!

``பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்களையும் இதே போல நீங்கள் சந்தித்து மனம் மாற்றியிருக்கலாமே'' என்று பேட்டியாளர் கேட்டார். ``அவர்கள் என்னை சந்திக்க முன்வரவில்லையே'' என்றார் நாராயணன் !
நிச்சயம் இப்போது மன்மோகன்சிங்குக்கு நாராயணன் ஒரு தேவதைதான்.

ஆனால், கடந்த காலத்தில் பலரும் அவரை ஒரு வில்லன் என்றே சொல்லியிருக்கிறார்கள். அணு ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவை திரும்பப் பெறும் பரபரப்பு நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில், காஷ்மீரில் காங்கிரஸ் அரசு அமர்நாத் நில விவகாரத்தால் ஆட்டம் கண்டது. முஃப்டி முகமது சயீது கட்சியின் ஆதரவை இழந்து நம்பிக்கை வாக்கை சந்திக்கும் நெருக்கடியில் இருந்தது.

அப்போது தன்னை நாராயணன் மிரட்டியதாக, காஷ்மீர் பேந்த்தர் கட்சித் தலைவர் டாக்டர் பீம்சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். பேந்த்தர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழாமல் காப்பாற்றத் தவறினால், பீம்சிங்கின் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என்றும், அவரால் காஷ்மீருக்கும் போக முடியாது; டெல்லியிலும் இருக்கமுடியாது என்றும் நாராயணன் மிரட்டினாராம்.

தான் மிரட்டவில்லை என்று மறுத்தார் நாராயணன். ஆனால் பீம்சிங்கிடம் பேசியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார். `காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தை ஆதரிக்க நீங்கள் விரும்புவதுதானே இயற்கையாக இருக்க முடியும்' என்று மட்டுமே பீம்சிங்கிடம் தான் சொன்னதாக நாராயணன் தெரிவித்தார் !

ஒரு மாநில அரசு கவிழும்போது அதைக் காப்பாற்ற இதர கட்சித் தலைவர்களிடம் பேசுவதும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பணிகளில் ஒன்று போலிருக்கிறது !

நாராயணன் இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் பலமுறை சர்ச்சைகளில் அடிபட்டவர். நரசிம்மராவ் ஆட்சியின்போது உள்துறைச் செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாதவ் காட்போல். பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் பதவியிலிருந்து விலகிய அவர் எழுதிய நினைவுக் குறிப்புகளில், ஐ.பி. அதிகாரி நாராயணன் பற்றி பிரதமரிடம்தான் புகார் செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். தன்னிடமோ உள்துறை அமைச்சரிடமோ தெரிவிக்காமல், உல்ஃபா தீவிரவாதிகளுடன் நாராயணன் பேச்சு வார்த்தை நடத்தி பிரதமரையும் சந்திக்கவைத்தாராம். சந்திப்பு நடந்த பிறகுதான் தங்களுக்குத் தெரியும் என்கிறார் மாதவ். இதனால் ராணுவத்துக்கும் அரசுக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டன என்கிறார்.

நாராயணன் பல சமயங்களில் ஓர் அரசு அதிகாரி போல பேசாமல், அரசியல் தலைவர் போலப் பேசிவிடுகிறார் என்பது அவர் மீது வைக்கப்படும் இன்னொரு விமர்சனம். பாகிஸ்தானில் பேநசீர் புட்டோ கொல்லப்படும் முன்னர், தேர்தலில் ஜெயித்து பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

பேநசீர் பிரதமரானால் இந்தியாவுடன் உறவு மேம்படும் என்று சொல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தார் நாராயணன்! சொன்ன வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவார் என்று நம்பமுடியாதவர் பேநசீர் என்றார் நாராயணன். ஒரு அதிகாரி இப்படியெல்லாம் கமெண்ட் அடிப்பது மரபுக்கு விரோதமானது.

அண்மையில் இலங்கைக்கு நாராயணனும் இந்திய உயர் அதிகாரிகளும் சென்று வந்தனர். அப்போது நாராயணன் தமிழர் தலைவர் சம்பந்தனிடம் காராசாரமாக வாக்குவாதம் செய்ததாக விடுதலைப்புலிகள் ஆதரவு இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. `ராஜீவ் கொலைக்கு பரிகாரமாக, குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனை இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் பொட்டு அம்மனையாவது இந்தியாவிடம் ஒப்படைக்காமல், எப்படி இந்திய அரசு இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகச் செயல்படமுடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?' என்று அவர் சம்பந்தனைக் கேட்டாராம். இப்படிக் கடுமையாகப் பேசிவிட்டதால் அவரைச் சமாதானப்படுத்தும்படி பின்னர் இந்திய ஹைகமிஷனரிடம் சொன்னாராம்.

திரைமறைவில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிய எதிரெதிர் தரப்புத் தகவல்களைப் பொதுவாக ஊர்ஜிதம் செய்வது கடினம். பீம்சிங், மாதவ் காட்போல், புலி ஆதரவு தளங்கள் சொல்பவை எல்லாம் உண்மையாக இருந்தால், நாராயணன் நாடாளுமன்றத்துக்கும் ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு சூப்பர் ப்ரைம் மினிஸ்டராக இருக்க வேண்டும். அவற்றில் பாதியளவு உண்மையிருந்தால்கூட, அது கவலைக்குரிய விஷயம்தான்.

நாராயணன் வில்லனா, தேவதையா, வேலு நாயக்கரா என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு பாதுகாப்பு ஆலோசகர் இந்த அளவுக்கு அணுசக்தி ஒப்பந்த வேலைகளில் பங்கேற்கும்போது, ஒப்பந்தத்தின் அசல் நோக்கம் மின்சாரமாக மட்டும் இருக்க முடியாது என்றே கருதவேண்டியிருக்கிறது.

ஒப்பந்தப்படி இந்தியா இப்போது வைத்திருக்கும், இனி ஆரம்பிக்கப்போகும் அணு உலைகளில் எவையெல்லாம் ராணுவத் தேவைக்கானவை, எவை மின்சாரத்துக்கானவை என்பதை பிரித்துப் பட்டியலிடும். மின்சார உலைகளை மட்டும் சர்வதேச அணுசக்திக் கழகமான ஐ.ஏ.ஈ.ஏவின் கண்காணிப்புக்கு உட்படுத்தும். இப்படிச் செய்தால் அமெரிக்காவும் இதர நாடுகளும் இந்தியாவுக்கு யுரேனியத்தையும் அணு உலைகளையும் அள்ளி அள்ளி வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இதுதான் ஒப்பந்தத்தின் சாரம்.

இங்கேதான் என் முதல் சந்தேகம். நம்மிடம் உள்ள யுரேனியம் போதவில்லை என்பதே உண்மைதானா? மின்சார உலைகளுக்கு அமெரிக்கா, இதர நாடுகளிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்துவிட்டு, நம் வசம் உள்ள யுரேனியத்தை முழுக்கவும் அணு ஆயுத தயாரிப்புக்குத் திருப்பி விடுவதுதான் அசல் நோக்கமா?

ஒரு டி.வி. பேட்டியிலே நாராயணன் போகிற போக்கில் தெரிவித்த இன்னொரு தகவல் பெரும் கவலையை எழுப்புகிறது. ஒப்பந்தம் முடிந்து அணு உலைகளையும் யுரேனியத்தையும் இறக்குமதி செய்யும்போது, இந்தியாவின் அணுசக்தி சட்டத்தை திருத்த வேண்டி வரும் என்றார். எதற்காக? எல்லா உலைகளையும் அரசே நடத்த முடியாது. தனியார் வசமும் தரவேண்டியிருக்கும். அதற்கேற்ப சட்டத்தைத் திருத்தவேண்டியிருக்குமாம்.
அரசு வசம் இருக்கும்போதே, கதிர்வீச்சு அளவு , ஊழியர் பாதுகாப்பு, அணுக் கழிவுகள் நிலைமை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு சரியான தகவல்களைப் பெற முடியாத சூழல் இருக்கிறது. தனியார் வசம் அணு உலைகளை ஒப்படைத்தால்........ அய்யோ, தோல் பதனிடுதலால் நாசமான ஆம்பூர், பாலாறு, சாயப்பட்டறைகளால் அழிந்த கொங்கு மண்டலம், 24 வருடமாகியும் வாயு விபத்துக்கு நஷ்ட ஈடு தரப்படாத போபால் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

தனியார் தொழிலதிபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும், பதில் சொல்லவைப்பதும், கறாராக தண்டிப்பதும் மேற்கு நாடுகளில் சாத்தியமாகலாம். இந்தியாவில் இருக்கும் `எதிலும் ஊழல்; எங்கும் ஊழல்' என்ற அரசியல் நிர்வாகச் சூழலில், ஆபத்தான அணு உலைகளை தனியாரிடம் ஒப்படைப்பது பேரழிவுக்கு வழி வகுத்துவிடக் கூடும்.

இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியையும் தகவல் அறியும் உரிமை என்ற ஜனநாயக நீதியையும் இன்னமும் தனியார் துறைக்கு நம்மால் கொண்டு வர முடியவே இல்லை.

ஓம் நமோ நாராயணாய... இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் என்னை (தசாவதாரம்) அஸின் ஆக்கிவிடும் போலிருக்கிறதே!.

-ஞாநி

நன்றி: குமுதம், 23.07-08

வியாழன், ஜூலை 17, 2008

ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்ளலாம் என திருக்குர்ஆன் அனுமதிப்பதை எவ்வாறு பொருள் கொள்வது? - அ. மார்க்ஸ்

சென்ற ஏப்ரல் 22, 23 தேதிகளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ``மதங்கள், தத்துவங்கள் மற்றும் மனிதாயச் சிந்தனை களுக்கான'' துறையின் சார்பில் ``மதப் புனித நூற்களை வாசிப்பது மற்றும் விளக்கமளிப்பது'' குறித்து ஆய்வரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் முனைவர் முத்துமோகன். வழக்கம்போல இஸ்லாமியப் புனித நூற்களின் பன்முக வாசிப்பு என்றே தலைப்பு எனக்கு அளிக்கப்பட்டது. சற்று எச்சரிக்கையோடும், மிகுந்த கவனமாகவும் செய்ய வேண்டிய பணி என்றபோதிலும் உவந்து அதை ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் இங்கே நிலவுகிற அறியாமைகளில் ஒன்று - இஸ்லாம் இறுக்கமான ஒற்றைக் கருத்துடைய மதம் என்பது. ஆனால் முஸ்லிம்களுக்குள் எந்தப் பிரச்சினையிலும் ஒன்றைக் கருத்து கிடையாது என்பதும், ஏராளமான வாதங்கள் உள்ளுக்குள் நடைபெற்றுக்கொண்டுள்ளன என்பதும், பெண்ணியர்கள் தொடங்கி பின் நவீனத்துவவாதிகள் வரை ஏராளமான பல புதிய வாசிப்புகளை முயன்று கொண்டுள்ளனர் பலரும் பல முஸ்லிம்கள் உட்பட கவனத்தில் கொள்ளாத, கவனத்தில் கொள்ள விரும்பாத ஒரு உண்மை. இரண்டாண்டுகளுக்கு முன்னர் வட மாநிலம் ஒன்றில் இம்ரானா என்கிற பெண் தன் மாமனாராலேயே வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அளிக்கப்பட்ட `ஃபத்வா' குறித்து இங்கு எழுந்த விவாதங்கள் இதைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு. மிகவும் மதிக்கப்பட்ட ஆயத்துல்லாஹ் கோமெய்னி, புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிராக அளித்த ஃபத்வாவை ஆதரித்த முஸ்லிம்களைக் காட்டிலும் எதிர்த்தவர்களே அதிகம் என்பதும் சிந்தனைக்குரியது.

எனினும் புனித நூற்கள் (Scriprures) வேதங்கள் என்பன பன்முக வாசிப்பிற்குரியவை அல்ல என்பதே மதவாதிகளின் இறுக்கமான கருத்து. ஆனால் யோசித்துப் பார்த்தால் மதங்கள் பன்முக வாசிப்பிற்குட்பட்டே வந்துள்ளமை விளங்கும். அதன் விளைவே மதங்களின் உட்பிரிவுகள். எந்த மதத்தில்தான் உட்பிரிவுகள் இல்லை? வேடிக்கை என்னவெனில் எல்லா மறு வாசிப்புகளும்கூட பன்முக வாசிப்பை மறுதலித்தே வரும். தமது வாசிப்பு ஒன்றே சரியான வாசிப்பு என்று வாதிக்கும் இந்த வகையில் மதங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஓர் ஒப்புமையைக் காண இயலும். இப்படிச் சொல்வதற்காக மதவாதிகளோ இல்லை அரசியல்வாதிகளோ கோபங்கொள்ளத் தேவையில்லை. .இறுக்கமான கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் (dogmatic) நிறுவனங்களின் தவிர்க்க இயலாத பண்பாக இதைக் கருதலாம்.

வாசிப்பின் பன்முகத் தன்மை என்பது நவீன இலக்கியக் கோட்பாடுகளால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. `அமைப்பியலுக்குப்' பிந்திய உலகளாவிய கருத்தொருமிப்பு என்றுகூட இதனைச் சொல்லலாம். மொழியின் இடுகுறித் தன்மை (arbitraryren) சொற்களை அர்த்தங்களுடன் இறுக்கமாகக் கட்டிப் போட்டுவிட இயலாது என்கிற கருத்துக்களினடியாக உருவானதே பன்முகவாசிப்பு. வாசிப்பின் ஜனநாயகத்தை முன்வைக்கும் சிந்தனை என்று மட்டுமே இதை நாம் கருத வேண்டியதில்லை. இன்றும் முக்கியமான அறம் சார்ந்த ஒரு பிரச்சினையையும் இது எழுப்புகின்றது. பன்முக வாசிப்புகளில் எதுவும் முதன்மையான ஒன்றாக இருக்க இயலாது என்பதே அது. ஆனால் மாற்று வாசிப்பைச் செய்கிற ஒவ்வொருவரும் நம்முடையதே முதன்மையானது, சரியானது என்கிற கருத்தையே கொண்டுள்ளோம். ``எல்லா வாசிப்புகளும் சமமானவைதான். ஆனால் என்னுடைய வாசிப்பு மற்றவற்றைக் காட்டிலும் ரொம்பச் சமமானது'' என்கிற ஆர்வெலிய அபத்தத்திலிருந்து யாரும் விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர், ``அக்கினிக்குஞ்சொன்று கண்டேன். அதை அங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?''- என்கிற பாரதியின் புகழ்பெற்ற `தத்துவப்' பாடலுக்கு முற்றிலும் உடலுறவு சார்ந்த ஒரு விளக்கத்தை அளித்து நடைபெற்ற விவாதம் இங்கே கருதத் தக்கது.

சொல்லப்போனால் பிரதி மிகவும் இறுக்கமான அர்த்தங்களின் விளை நிலம்; வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லக் கூடியது என்கிற கருத்து மிகவும் நவீனமான ஒரு சிந்தனை. அறிவொளிக் காலத்திற்குப் பின் இது உறுதிப்பட்டது. ஆனால் புனித நூற்கள் தோன்றிய காலத்தில் அப்படியான கருத்து இருந்தது இல்லை. அருளப்பட்ட புனித நூற்களைக் கொண்டிருந்த யூதர், கிறிஸ்துவர், முஸ்லிம் என யாரும் தமது வேதங்கள் உருவாக (allegorical) விளக்கங்களுக்கு உரியன என்கிற கருத்தையே கொண்டிருந்தனர். இறை வார்த்தை அளவற்ற பொருள் நிரம்பியது. ஒற்றை விளக்கத்தில் அதைச் சிறையிட்டு விடக் கூடாது. துல்லியமான விவரங்கள் நிரம்பியதாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும், நவீன `விஞ்ஞான' அளவுகோல்களுக்குரியதாகவும் பிரதிகளைக் கருதுவது இன்றைய வழக்கமே. தமது வேதங்களில் செய்யப்பட்டவை இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு பொருந்திப் போவதாகப் பெருமை கொள்ளும் மதவாதிகளைப் பார்க்கும்போது நம்மால் புன்னகைக்காது இருக்க இயலாது. இறை வார்த்தைகட்கு விஞ்ஞான அந்தஸ்து கோருவது எத்தனை முரண்?

இஸ்லாமின் முதன்மைப் புனித நூலாகிய திருக்குர்ஆன் இறைவனால் (அல்லாஹ்) நபிகள் நாயகத்தினூடாக இறக்கியருளப்பட்டது. திருக்குர்ஆனின் வாக்குகள் ஒவ்வொன்றும் `ஆயத்'துகள் என்றே அழைக்கப்படும். அதாவது `‘Parabler’ நீதிக்கதைகள், உருவகக் கதைகள். கவனம் (சொர்க்கம்), நரகம், இறுதித் தீர்ப்பு குறித்த எல்லா வாக்குகளுமே ஆயத்துகள்தான். என்றென்றைக்குமான உண்மைகளைச் சொல்லும் இவற்றை நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் குறிகள், குறியீடுகள் மூலமாகவே உருவகித்துக்கொள்ள இயலும் என்பார் இஸ்லாம் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்துள்ள கரேன் ஆர்ம்ஸ்ட்ராங்.

இன்னொன்றையும் அவர் சொல்வார். திருக்குர்ஆன் ஓதுதற்குரியது (recitation). அதை வாசித்து வரிக்கு வரி பொருள் சொல்வதைக் காட்டிலும் காதில் வாங்கி (listen) உள் வாங்குதலே உத்தமம். கவித்துவமிக்க மொழிநடையில் அருளப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதப்படும்போது வெளிப்படும் ஒலிப்பாங்கம் பிற இணையான வாக்குகளுடன் தொடர்பு கொண்டு மனத்தில் உருவாக்கும் உணர்வலைகளே முக்கியம். இப்படியாக உருவாகும் உணர்வலைகள் அமைதி, அன்பு, நீதி, பொறுமை, சகிப்புத்தன்மை மற்றமையை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றையே காது கொடுத்துக் கேட்போரின் நெஞ்சில் நெகிழ்விக்கும். மாறாக வரிக்கு வரி பொருள் கொள்வோர் தமக்கு வேண்டிய எதையும் வாசித்துக் கொள்ள இயலும்.

இஸ்லாமின் முதன்மை ஆதார நூற்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:
1. திருக்குர்ஆன் - இறைவனால் நேரடியாக அருளப்பட்டது.

2. `ஹதீஸ்' மற்றும் `சீறத்'கள். இவற்றில் `ஹதீஸ் என்பன நபிகளாரின் வாழ்வையும், வாக்குகளையும் தொகுத்துச் சொல்பவை. சங்கிலித் தொடராய் பின்னோக்கிச் சென்று யாரால் அறிவிக்கப்பட்டது எனக் கூறுபவை. இப்னு மிஜா (கி.பி.824-856), அல்புஹாரி (820-870), முஸ்லிம் (817-875), அபு தாவுத் (817-889), அத் திர்மிதி (இ.892), அந்நஸயி (830-915) என்பவர்களால் தொகுக்கப்பட்டவை முக்கிய மரபுகளாகக் கருதப்படுகின்றன. `சீறத்'கள் என்பன நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்னவை: இப்ன் ஸஅத், இப்ன் இஹ்ஹாக், அல்தபரி ஆகியன தொடக்க கால வரலாற்று நூற்களில் முக்கியமானவை.

3. `ஷரியத்'கள் எனப்படும் முஸ்லிம் சட்ட விதிகள். வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தில்-அதன் விரிவாக்க காலத்திய-முக்கிய ஆவணங்கள் (634-925) இவை.

இஸ்லாமியப் புனித வழிபாட்டு ஆவணங்களின் உருவாக்கத்தை கீழ்க்கண்ட காலப் பாகுபாட்டிற்குள் அடக்கலாம்:
(அ) கி.பி.610-632; அருள் வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்து நபிகளின் மரணம் வரை.
(ஆ) 632-634 : முதல் கலீபா அபுபக்கர்- முந்தைய சூழலின் கிட்டத்தட்ட அதே தொடர்ச்சி.
(இ) 634-644 : கலிமா உமர் - இஸ்லாம் புதிய புவிப் பகுதிகளில் பரவத் தொடங்கிய காலம். மாற்றங்களின் தொடக்கம்.
(ஈ) 644-925: புதிய பகுதிகளுக்குப் பரவிய, கலாச்சாரப் பரிமாற்றங்கள் நிறைந்த காலம். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் மதச் சட்டங்களுக்கும் இறுக்கமான வடிவு கொடுக்கப்பட்ட காலம்.

இதை எதற்காக இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் எனில் இத்தகைய வரலாற்றுப் போக்கினூடாக உருவாகிக் கையளிக்கப்பட்டுள்ளவையே இன்றைய புனித ஆவணங்கள். இந்த வரலாற்றின் எச்சங்கள் அவற்றில் படிந்திருப்பதையும் அவற்றினூடான மாற்றங்கள், ஒற்றைக் கருத்தின் சாத்தியமின்மை ஆகியவற்றையும் கவனத்தில் நிறுத்துவது அவசியம். இவற்றில் எவற்றை முதன்மைப்படுத்துவது என்கிற அடிப்படையிலேயே இன்று பல உட்பிரிவுகள் சாத்தியமாகியுள்ளன. சில முக்கிய மத உட்பிரிவுகள்: ஷன்னி (மைய நீரோட்டப் பிரிவு எனலாம்), ஷியா (இமாமி/ஸெய்தி), காரிஜ் (இயாதி). வெவ்வேறு `ஹதீஸ்'களை முதன்மைப்படுத்தும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கைபெற்றவர் (infidels) எனச் சொல்லத் தயங்குவதில்லை. இதற்குள்ளும் எந்தச் சட்ட மரபைப் (law school) பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொருத்த உட்பிரிவுகள் உள்ளன. ஷன்னி பிரிவில் மட்டும் நான்கு சட்ட மரபுகள் உள்ளன.
1. அபு ஹனீபா (கி.767) வால் உருவாக்கப்பட்ட ஹனபி சட்டம்
2. மாலிக்கால் (இ.795) உருவாக்கப்பட்ட மாலிகி சட்டம்
3. ஷாஃபி (இ.820) சட்டம்
4. கிப்ன் ஹன்ஸால் (கி.855) உருவாக்கப்பட்ட ஹனபாலி சட்டம்.

எனினும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கையற்றவர்கள் எனக் குற்றம்சாட்டிக் கொள்வதில்லை. இவை தவிர Technology அடிப்படையிலும் பிரிவினைகள் உள்ளன. சுருக்கம் கருதித் தவிர்ப்போம். இஸ்லாத்திற்குள் நிலவும் பன்மைத் தன்மையின் பால் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வளவும்.

இஸ்லாம் இன்று மிகக் கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டுள்ளதை அறிவோம். இது இஸ்லாமிற்குள்ளும் மிகப் பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவை இஸ்லாமியப் புனித நூல்களை பல புதிய வாசிப்பிற்குள்ளாக்குகின்றன. இஸ்லாத்திற்குள் `ஜிஹாத்'திற்கு இடமுண்டு என வாதிக்கும் இஸ்லாமியவாதிகள் ஒருபுறம், `ஜிஹாத்'தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை, என `ஃபத்வா' விதிக்கும் தியோபந்திகள் ஒருபுறம், திருக்குர்ஆனில் தந்தை வழி ஆணாதிக்கத்திற்கு இடமில்லை என வாதிடும் இஸ்லாமியப் பெண்ணியக்கம் ஒரு புறம் எனப் பல திசை விவாதங்கள் இடம் பெறுகின்றன. மூன்றாவது போக்கைப் பற்றி மட்டும் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். தொழுகைத்தலத்தில பெண்களுக்கு இடமுண்டா, தற்காலிகத் திருமணம் (`முடா') அனுமதிக்கப்படுகிறதா, `முத்தலாக்' முதலானவை குறித்த விவாதங்களை சாத்தியமானால் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

ஃபாதிமா மெர்னிசி (மொராக்கோ), ஆமினா வதாத் (ஆஃப்ரோ அமெரிக்கர்), அஸ்மா பர்லாஸ் (பாகிஸ்தான்) ஆகியோர் திருக்குர் ஆனை மறுவாசிப்பிற்குள்ளாக்கும் பெண்களில் முக்கியமானவர்கள். தன்னைப் `பெண்ணியவாதி' எனச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்கிறார் அஸ்மா. இத்தகைய பெயர் சூட்டல் பல தவறான பொருட்களுக்கு இட்டுச் செல்லக் கூடும் என அவர் அஞ்சுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

தன்னை இஸ்லாத்தை ஏற்கும் நம்பிக்கை வாதி, திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்கிற அதன் Ontological status ல் தனக்கு எந்த ஜயமும் இல்லை என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறார் இந்த `ஹிஜாப்' அணியாத இஸ்லாமியச் சிந்தனையாளர். ``நான் இஸ்லாத்தையும், திருக்குர்ஆனையும் முழுமையாக நம்புகிறேன் (beleive). ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை வாதம் (Optimism) என்னிடமில்லை. ஏனெனில் இஸ்லாத்திற்குள் உள்ள பிற்போக்கு சக்திகள் பலமுள்ளவர்களாக உள்ளனர்'' என்கிறார் அஸ்மா.

திருக்குர் ஆன் குறித்த பன்முக வாசிப்புகளில், ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை வாசிப்பு தவறான ஒன்று (misreading) என்பது அவர் கருத்து. நாம் முன்பு குறிப்பிட்ட வரலாற்று ரீதியான மாற்றங்களினூடாக, இஸ்லாம் விரிவாகி, இறுக்கமான அரசாக, தந்தை வழிச் சமூகமாக உருவானபோது பரிணமித்த வாசிப்பு இது. இவ்வாறு பொருள் கோட்டியலுக்கும் (heroneneutics) வரலாற்றுக்கும் இங்கே ஒரு முரண் உருவாகிவிடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் வாசிப்பு வரலாற்று ரீதியானதே, காலத்தை விஞ்சியதல்ல. தமது கருத்துக்களை வலியுறுத்த வேண்டி திருக்குர்ஆனைப் புரிந்து கொள்ள மத வரலாற்றையும், மரபுப் பதிவுகளையும் (ஹதீஸ்கள் உட்பட) இவர்கள் அதிகம் சார்ந்துள்ளனர். இத்தகைய வரலாற்று அடிப்படையிலான அறிவு மனிதத் தவறுகளுக்கு உட்பட்டது. மத ரீதியாகவும் சரி, முறையியல் அடிப்படையிலும் சரி திருக்குர்ஆனை இப்படி வாசித்தலை ஏற்க இயலாது என்பது அஸ்மாவின் வாதம்.

அப்படியானால் திருக்குர்ஆனை எப்படி வாசிப்பது? திருக்குர்ஆனை திருக்குர்ஆன் மூலமாகவே வாசிக்க வேண்டும். (holistic reading) வேறு துணை அதற்குத் தேவையில்லை. திருக்குர்ஆனை முழுமையாக வாசித்து அதன் பொதுக் கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தனித்தனியாகப் பிரித்து வாசித்து, தமக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொள்வதை திருக்குர்ஆனே கண்டிக்கிறது. `வஹி' _ அதாவது இறைவாக்குகள் இறங்குதல் முற்றுப் பெறுமுன் அவசரமாகப் பொருள் கொள்ள வேண்டாம் என அது எச்சரிக்கிறது (20:114). பலவற்றை மறைத்து இவற்றை மட்டும் முன்னிறுத்தி வாசிப்பதை மறுக்கிறது (6:91). வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்து தமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்வோரை ``நாம் நிச்சயமாக விசாரிப்போம்'' என எச்சரிக்கிறது (15: 90_93). எல்லாவற்றிற்கும் மேலாக இறைவாக்குகளை அவற்றின் சரியான இடத்திலும் காலத்திலும் வைத்துப் பொருள்கோட வேண்டும் (5:4) என திருக்குர் ஆன் எச்சரிப்பது குறிப்பிடத் தக்கது. பன்முக வாசிப்பிற்கு ஒரு எல்லையுண்டு, பிரதிக்கும் செயல்படுகிற தர்க்கத்தைப் புறக்கணித்து மிகை விளக்கம் அளிக்கக் கூடாது என உம்பர்டோ ஈகோ எச்சரிப்பது (Interpretation and Over interpretation பார்க்க : எஸ். சண்முகம் நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை) இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

திருக்குர்ஆனை இப்படி ஒட்டு மொத்தமாக வாசிக்கும்போதுதான் மேலைச் சூழலில் ஆதிக்கம் செலுத்திய பெண் வெறுப்பும் (mysogeny) ஆணாதிக்கப் பார்வையும் அதில் கிடையாது என்பது விளங்கும். பைபிளில் சொல்லப்படுவது போல இறைவன் திருக்குர்ஆனில் தந்தையாக உருவகிக்கப்படுவதில்லை. அப்படி சொல்வதை வெளிப்படையாக மறுக்கிறது. தந்தைமையையும் (Fatherhood) அது புனிதமாக்குவதை எதிர்க்கிறது. உடல் ரீதியான பாலியல் வேறுபாட்டின் (biological sex) அடிப்படையில் ஆண்களையும் பெண்களையும் எதிர் எதிராக நிறுத்துவதையும் அது ஏற்பதில்லை. பெண்களை வேறுபடுத்திப் பார்ப்பதே இல்லை எனச் சொல்ல வரவில்லை. உடல் ரீதியான வேறுபாட்டின் அடிப்படையில் (Sex) திருக்குர்ஆன் பெண்மைக்குரிய (gender) குறியீடுகள் எதையும் வகுப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது பாலியல் ரீதியாக வேறுபடுத்தினாலும்கூட இருபாலரையும் சமமற்றவர்களாகச் சொல்வதில்லை.

அப்படியானால் ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்ளலாம் எனவும் தேவையானால் கணவன் மனைவியை அடிக்கலாம் எனவும் திருக்குர்ஆன் அனுமதிப்பதை எவ்வாறு பொருள் கொள்வது? இந்தக் குறிப்பான வசனங்களுடன்தான் `போராடி' உருவாக்கிய பொருளை அஸ்மா கூறுகிறார். மனைவியை அடிப்பது என்பதற்கு திருக்குர்ஆன் பயன்படுத்தும் சொல்: `தராபா'. இதற்கு `அடிப்பது' என்பது தவிர `பிரிப்பது' என்பது உட்படப் பல பொருள்கள் உண்டு. தம்பதிகளுக்கிடையே அன்பை, பொறுமையை, கருணையை சகிப்புத்தன்மையைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே உள்ள திருக்குர்ஆனின் பொதுப் போக்கிற்கு ஏற்ப பொருள் கோடாமல் `அடிப்பது' என்கிற சொல்லைத் தேர்வு செய்தது எங்ஙனம்? இதுகாறும் திருக்குர்ஆனை வாசித்தவர்கள் எல்லாம் ஆண்களாக இருந்ததுதானே இதற்குக் காரணம்?

`நுஷூஸ்' என்கிற சொல்லுக்குக் `கணவனுக்கு மனைவி பணியாமை' என இதுகாறுமான வாசிப்பில் பொருள் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதே சொல் `மனைவிக்குக் கணவன் பணியாதிருத்தலையும்' குறிப்பிடுவதை அஸ்மா சுட்டிக் காட்டுகிறார். போரில் அனாதையாக்கப்பட்ட பெண்களுக்காகவே திருக்குர்ஆன் பல தார மணத்தை வற்புறுத்துகிறது.

இப்படி நிறையச் சொல்லலாம். அப்படியானால் திருக்குர்ஆனை ஒரு பெண்ணியப் பிரதி எனச் சொல்லலாமா? இது இன்னும் பெரிய அபத்தம். பெண்ணியம், ஜனநாயகம், மதச்சார்பின்மை என்பவையெல்லாம் ரொம்பவும் நவீனமான கருத்தாக்கங்கள். ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முற்பட்ட பிரதிகளில் இவற்றைத் தேடுவது அபத்தம். பேரரசர் அக்பரை மதச்சார்பற்ற (Secular) சிந்தனையாளர் என்கிற ரீதியில் அமார்த்திய சென் வரையறுத்தது விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. இங்கே குறிப்பிடத்தக்கது. அக்பரின் மதப் பொறுமையை, மாற்று மதங்களை அனுசரிக்கும் தன்மையை வியப்பது வேறு, Secularism என்கிற நவீன கருத்தாக்கத்தை அவர் மீது சுமத்துவது என்பது வேறு.

இஸ்லாத்தில் ஆணாதிக்கக் கருத்தர்கள் இல்லை என்பதல்ல. ஆனால் அது வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்டதே. அத்தகைய கருத்துக்கள் என்றென்றைக்கு மானவையல்ல. ஒரு மாற்று வாசிப்பு இஸ்லாத் திற்குள்ளேயே, திருக்குர்ஆனிலேயே சாத்தியம் என்பதுதான் அஸ்மா பர்லாஸ் போன்றோரின் வாதம். `இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது' என்பதாகச் சொல்லி வெளியே நின்று விமர்சிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் பின் உரையாடலுக்கே சாத்தியமில்லாமல் போய் விடும். மதத்திற்குள் நின்று உரையாடுவதற்குரிய ஒரு Textual Strategy யை அஸ்மா போன்றோர் உருவாக்குவது ஒரு மிக முக்கியமான போக்கு.

-அ. மார்க்ஸ்
நன்றி: குமுதம் தீராநதி, 01-7-08

திங்கள், ஜூலை 14, 2008

மதி கெட்ட மாமன்னன் மன்மோகனன்!

கொள்கைக்காக தன் ஆட்சியை, தன் கட்சியைக் கூட தியாகம் செய்யத் தயாராகிவிட்டார் மன்மோகன்சிங். தன் கொள்கையோடு ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள உதவுமானால் திரை மறைவு பேர அரசியலுக்கும் அவர் தயார்.இதுதான் மிடில் க்ளாஸின் மிஸ்டர் க்ளீன் மன்மோகன்சிங்கின் அசல் முகம்.

அப்படி என்ன கொள்கை அது ? புஷ்ஷுக்கு அளித்த வாக்குறுதியை அவர் காப்பாற்றியாக வேண்டுமாம். இதில் அவருக்கு இப்போது பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பிளேய்ருடன் போட்டி. இருவரில் யார் புஷ்ஷுக்கு அதிக விஸ்வாசம் காட்டியவர்கள் என்று பட்டி மன்றமே நடத்தலாம். பிளேய்ருக்கும் சரி, மன்மோகனுக்கும் சரி, தங்கள் தேச மக்களை விட புஷ்தான் முக்கியமானவர்.

மன்மோகனின் புஷ் அப்செஷன் பற்றி உளவியல் நிபுணர்களிடம்தான் கேட்க வேண்டும். சென்ற வருடம் மன்மோகன் உதிர்த்த முத்துக்கள் இவை: ``அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சுலபமானது. நாம் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொள்வார். என்னிடம் அன்பாக இருக்கிறார். இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களிலேயே இவர்தான் இந்தியாவிடம் மிகவும் சிநேகமாக இருப்பவர். உலகத்தின் ஒரே ஒரு சூப்பர் பவராக அமெரிக்கா ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை எந்த இந்திய அரசுக்கும் தன் அமெரிக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் தைரியம் இருக்கவில்லை. நாங்கள் மாற்றி வருகிறோம்.''

இதற்கு முன் கொள்கைக்காக தன் ஆட்சியை தியாகம் செய்த பிரதமர் என்று யாரையாவது சொல்வதானால் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியதால் ஆட்சியைத் தியாகம் செய்த வி.பி.சிங்கைத்தான் நியாயப்படி குறிப்பிடலாம். அவரோடு ஒப்பிடும்போது மன்மோகன் சிங் எனக்கு ஒரு அற்பப் புழுவாகத் தெரிகிறார். ஏனென்றால் இப்போதைய மன்மோகனின் கொள்கைப் பிடிப்பு அவரை பிரதமராக வைத்திருக்கும் நாட்டு நலன் சார்ந்தது அல்ல. வி.பி.சிங்கின் கொள்கையோ சமூக நீதிக்கானது.

அணு ஒப்பந்தத்தில் காட்டும் பிடிவாதத்தில் கால் சதவிகிதத்தைக் கூட அவர் பணவீக்கத்தினால் ஏற்பட்ட விலைவாசி உயர்வுப் பிரச்னையில் காட்டி, கடும் நடவடிக்கைகள் எடுக்க முன்வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் அது புஷ்ஷுடைய பிரச்னை அல்ல.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் அதனால் இந்தியாவுக்கு லாபம் என்ற வாதங்கள் முற்றிலும் பொய்யானவை. அணுகுண்டு தயாரிப்பது, சோதனையாக அதை வெடித்துப் பார்ப்பது என்ற முட்டாள்தனத்தை இரு முறை இந்தியா செய்ததன் விளைவாக இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வேலையில் அமெரிக்கா தலைமையிலான அணுகுண்டு நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

அதன் இன்னொரு அத்தியாயம்தான் இந்த அமெரிக்க அணு ஒப்பந்தம். இந்தியாவின் அணு சக்தி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு ஐ.நா. சபை, சர்வதேச அணுசக்தி ஏஜன்சி முதலியவை வசம்தான் இருக்கும் என்று டெக்னிக்கலாக சொல்லப்பட்டாலும், இன்று இந்த அமைப்புகள் எல்லாம் அமெரிக்காவின் கைப்பாவைகளாகவே இயங்கி வருபவை என்பது நடைமுறை உண்மை. இல்லாத ஆயுதங்களை அழிப்பதற்காக இராக்கில் புஷ் நடத்திய யுத்தம் முழுக்க முழுக்க ஐ.நா. சம்மதத்துடன் நடத்தப்பட்டது சமீப வரலாறு.

இந்தியாவை தன் ஜால்ரா/அடியாள் கோஷ்டி வளையத்துக்குள் எப்படியாவது சாம தான பேத தண்ட முறைகளைப் பயன்படுத்தி கொண்டு வருவதற்கு அமெரிக்கா செய்யும் முயற்சிகள் அமெரிக்காவுக்கு அவசியமானவை. இந்த வட்டாரத்தில் சீனாவை சமாளிக்க இந்தியாவை அது பயன்படுத்த விரும்புகிறது.

ஆனால் இதில் நமக்கென்ன லாபம்? சீனாவுடன் நமது பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டு நண்பராகக் கைகோர்த்துக் கொள்வதுதான் தொலைநோக்கில் நமக்கு லாபம். மக்கள் சக்தியிலும், நிலப்பரப்பிலும், உழைப்பிலும், ஆற்றலிலும் பெரிய நாடுகள் நாம். மரபான தத்துவப் பார்வையினாலும் ஓரணியில் இருக்கவேண்டிய இரு பெரும் நாடுகள் நாம். நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் மேற்கத்திய நாடுகள் எப்போதும் செயல்பட்டு வருகின்றன. இப்போதும் அதேதான்.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தைப் போட்டேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் மன்மோகன் தரப்பில் இதற்குக் கூறும் நியாயங்கள்தான் என்ன? மண்டையைப் பிளக்கும் ஷரத்துகள், வாதங்கள் எல்லாவற்றையும் தொகுத்துக் கூட்டிக் கழித்துக் கடைசியில் பார்த்தால் ஒரே ஒரு வாதம்தான் எஞ்சுகிறது.

நமக்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணுசக்தித் தொழில் நுட்பத்தை விட்டால் வேறு வழி கிடையாது. அதையும் யுரேனியத்தையும் நமக்கு அள்ளி அள்ளித்தர அமெரிக்காவும் மேலை நாடுகளும் சம்மதிக்க வேண்டுமானால்,இந்த ஒப்பந்தத்தைச் செய்தே ஆக வேண்டும். இவ்வளவுதான் விஷயம்.

இது எல்லாம் பொய் என்று போன வருடமே `ஓ' பக்கங்களில் சொல்லியிருக்கிறேன். இப்போது மன்மோகனின் பிடிவாதத்தால் அவர் தன் பதவியை, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை எல்லாம் தியாகம் செய்து அத்வானியை பிரதமர் ஆக்கும் ஆபத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதால், மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 1,26,839 மெகாவாட். இதில், நிலக்கரி மூலம் கிடைக்கும் அனல் மின்சாரம் 66 சதவிகிதம். அணைகள் மூலம் பெறும் புனல் மின்சாரம் 26 சதவிகிதம். சூரிய சக்தி, காற்றாலை போன்ற சூழல் மாசாகாத தூய வழிகளில் பெறுவது சுமார் 5 சதவிகிதம். அணு உலைகள் மூலம் பெறுவது வெறும் 3 சதவிகிதம் மட்டுமே! அடுத்த 20 வருடங்களில் அணு மின்சார அளவை 6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமானால், அதற்குத் தேவைப்படும் முதலீடு மட்டும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்.

இப்போது சூரியசக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவிகித மின்சாரத்தைத் தந்து வருகின்றன. இப்போது அணுசக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3,897 கோடி ரூபாய். ஆனால், அவை தருவது வெறும் 3 சதவிகிதம்தான். (இவை எல்லாமே அரசின் புள்ளிவிவரங்கள்தான்.)

இங்கே, யுரேனியம் போதுமான அளவு இல்லை என்பதே தவறு. அடுத்த 40 ஆண்டுகளில் அணு மின்சார உற்பத்திக்கும் அணு ஆயுத உற்பத்திக்கும் (சுமார் 2,228 குண்டுகள்!) தேவைப்படும் யுரேனியம் அளவு சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன். நம்மிடம் இருப்பதோ 78 ஆயிரம் டன்கள்.

இதை வெளியில் எடுத்து பதப்படுத்திப் பயன்படுத்தத் தேவைப்படுவதெல்லாம், மக்கள் ஆதரவுடன் நில ஆர்ஜிதம் மட்டும்தான்! யுரேனியத்தைவிட அதிகமாக நம்மிடம் தோரியம் இருக்கிறது. உலகிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடி நம்மிடம்தான் தோரியம் உள்ளது. சுமார் 3 லட்சம் டன்கள்.

இதைக் கொண்டு 35 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதற்கான தொழில்நுட்பத்தை முழுக்க முழுக்க நம்முடைய அறிவிலேயே உருவாக்கியாயிற்று. இதை அடுத்த 40 வருடங்களில் முழுமையாகச் செயல்படுத்துவதுதான் நமது அணுசக்தித் துறை வைத்திருந்த திட்டம். அதை சீர்குலைப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

நான் அணுகுண்டை மட்டுமல்ல, அணுசக்தியையும் ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அணுசக்தி என்ற தொழில்நுட்பமும் பல தலைமுறைகளுக்கு சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்படாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழில்நுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இப்போதைக்குப் பின்பற்றும் வழிகள் மிகப் பெரும் செலவையும், உத்தரவாதமற்ற தன்மையிலும்தான் உள்ளன.

இப்போதுள்ள அணுசக்தி திட்டப்படி, இன்னும் 25 வருடங்களில் 90 ஆயிரம் கோடி செலவிட்டாலும், நாம் தயாரிக்கப்போகும் அணு மின்சாரம் மொத்த மின்சாரத் தேவையில் 9 சதவிகிதத்தை எட்டாது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டால், அணு உலை நிர்மாணிக்கும் செலவுதான் அதிகரிக்கும். இப்போது 7 கோடி ரூபாயில் நிர்மாணிக்கும் உலையை நிறுவ 9 கோடி செலவாகும்.

அணு உலையில் தயாரிக்கும் மின்சாரத்தின் அடக்க விலை வேறு எந்த வழியில் தயரிக்கும் மின்சாரத்தை விட இப்போதும் அதிகம்தான். எப்போதும் அதிகம்தான்.

நமது மின்சாரத் தேவைகளுக்கு, சூழலைக் கெடுக்காத மாற்று வழிகளைத் தான் நாம் அதிகரிக்க வேண்டும். அணு உலைகளுக்கு ஒதுக்கும் தொகையை மாற்றி, இவற்றுக்குத்தான் ஒதுக்க வேண்டும். உலகத்திலேயே காற்றுவழி மின் உற்பத்திக்கான இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதில், நாம் முன்னணியில் இருக்கிறோம். உலகிலேயே நான்காவது இடம். வட கிழக்கு மாநிலத்தில், புனல் மின்சாரத்துக்குப் பெரும் வாய்ப்பு இருக்கிறது. சுமார் 24 ஆயிரம் மெகாவாட் தயாரிக்கலாம். ஆந்திராவில் இயற்கை வாயு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக சின்னச் சின்ன காற்றாலைகள், சூரிய சக்தி ஆலைகள், வேலிக் காத்தான், உடை மரங்களை எரி வாயுவாக்கி மின்சாரம் தயாரிக்கும் சிற்றாலைகள் முதலியவற்றை கிராமங்கள் தோறும் நிறுவி அந்தந்த கிராமத்தின் மின் தேவையை சந்திக்கும் திட்டங்கள்தான் நமக்குத் தேவை. அதிகாரத்தைப் போல மின்சார தயாரிப்பும் டீசென்ட்ரலைசேஷனுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

நம்முடைய இந்தப் பலத்தை எல்லாம் அதிகரிக்காமல், அணுசக்தி பக்கம் பணத்தைத் திருப்புவதும் சரி, அதன் பேரால் அமெரிக்காவின் அரசியலுக்குள் சிக்கிக் கொள்வதும் சரி, நிச்சயம் புத்திசாலித்தனமானதே அல்ல.

ஆட்சி கவிழாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக முலாயம் சிங், அமர்சிங் காலில் சோனியா காந்தியை மன்மோகன் சிங் தள்ளியிருக்கிறார். ஒப்பந்தம் பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொல்ல மன்மோகனின் செக்யூரிட்டி ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்களை சந்தித்து விளக்கினாராம். கனவுத் தாத்தா கலாமை வேறு முலாயமும் அமரும் சந்தித்து கருத்து கேட்டார்களாம். `பேஷ், பேஷ். ஒப்பந்தம் நன்னா இருக்கு` என்று அவரும் சொன்னாராம்.

இவையெல்லாம் திரை மறைவு அரசியல் பேரங்களை மறைக்க அரங்கேற்றப்படும் நாடகங்கள்தான்.அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தை ஆதரிக்கும் மன்மோகன் வகையறாக்கள், ஏன் எதிர்ப்பவர்கள் கூட, கீழ்வரும் ஐந்து கேள்விகளுக்கு நியாயமான பதில்களைச் சொல்ல வேண்டும்.

1. ஹைட் சட்டம், 123 ஒப்பந்தம் எல்லாவற்றையும் தன் நாடாளுமன்றத்தில் விவாதித்து அங்கு ஏற்றுக் கொண்ட பின்னர்தான் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்பந்த வடிவத்தைத் தருகிறது. ஏன் இந்தியப் பிரதமர் மட்டும் இதே போல இந்திய நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெற்றபின்னர்தான் அமெரிக்க அரசிடம் செல்வது என்ற நடைமுறையை மறுக்கிறார்?

2. இந்தியா கையெழுத்திட்டபிறகும் ஹைட் சட்டத்துக்கு அந்த ஒப்பந்தம் பொருந்தி வருகிறதா என்பதை மறுபடியும் அமெரிக்க நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்ற விதியை அமெரிக்கா வைத்திருக்கிறது. இதே போன்ற சம உரிமையை இந்திய நாடாளுமன்றத்துக்கும் தரவேண்டும் என்ற விதியை ஏன் மன்மோகன் அமெரிக்காவிடம் வற்புறுத்தவில்லை?

3.இந்தியா அமெரிக்க உதவியில்லாமல் தயாரிக்கும் அணு மின்சாரத்தை விட, அமெரிக்க உதவியுடன் தயாரித்தால், செலவு அதிகரிக்கும் என்பது சரியா? தவறா?

4. எப்படித் தயாரித்தாலும், இன்னும் 30 வருடங்கள் ஆனாலும் அணு மின்சாரம் நம் மொத்தத் தேவையில் பத்து சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்யாது என்பது உண்மையா, இல்லையா?

5. அணுக் கழிவுகளை என்ன செய்வது என்பது இதர நாடுகளைப் போலவே இந்தியாவுக்கும் இன்னமும் பிரச்னைதான் என்பது உண்மையா, இல்லையா?

அணு மின்சாரத் திட்டம் என்பது உண்மையில் அணுகுண்டு திட்டம்தான் என்பது இடதுசாரிகளுக்குத் தெரியும். ஆனால் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் என்பது மின் தேவைக்கானது அல்ல; உலக அரசியலில் அமெரிக்காவின் அடியாளாக நம்மைப் பதிவு செய்துகொள்வதுதான் என்பது காங்கிரஸ், பி.ஜே.பி, கலாம், நாராயணன் உள்ளிட்ட எல்லா வலதுகளுக்கும் தெரியும். ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்....

-ஞாநி
நன்றி: குமுதம் 16-07-08

சனி, ஜூலை 12, 2008

பெயர் சொல்லத் தொடங்கும் காதல்கள்

வெகுஜனப் பத்திரிகை ஒன்று சமீபத்தில் என்னை ஒரு "ஓரினச் சேர்க்கையாளர்" என்று அறிமுகப்படுத்தியது. இதில் பல நிலைகளில் பிரச்சினைகள். இந்த அடையாளப் பெயர் சொல்வதற்கும் கேட்பதற்கும் எதோ செய்யும் தொழிலின் பெயர் போலத் தோன்றுகிறது "பத்திரிகையாளர்" என்பதுபோல. பத்திரிகையாளர் என்பது எந்தத் தொழில் சார்ந்த பெயர் என்ற அளவில் சந்தேகங்கள் பெரிதாக இருக்க முடியாது. ஆனால், ஒரு ஓரினச்சேர்க்கையாளரின் பணி என்ன? பணிரீதியாக ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுவதா? விளங்கவில்லை. இந்த ஒப்பீடு உதவாது. ஏனெனில், ஓரினப்பாலீர்ப்பு என்பதும் அந்த ஈர்ப்பினின்றும் எழும் உடல், காதல், காமம் சார்ந்த செயல்பாடான ஓரினப்புணர்ச்சி என்பதும் சுயத்தைப் பற்றியன. ஆசை, விழைவு, காதல், காமம், புணர்ச்சி என்பவை அகம் சார்ந்த உணர்வுகள், நெகிழ்வுகள், நிகழ்வுகள் என்று தமிழ்ச் சமூகத்திற்கு விளக்க வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது. ஆனால், ஒரு சிலரது அகங்கள் பலரது கிளர்ச்சிக்கும் நுகர்வுக்கும் புறவெளியில் இழுத்துவரப்பட்டுத் துகிலுரியப்படுகின்றன. உதாரணம்: பிரபலங்களின் அந்தரங்கங்களை நம்பித்தான் இன்று வெகுஜன ஊடகங்கள் பல இயங்கிவருகின்றன.
இன்று இந்தியாவில் ஓரின, ஈரினப்பாலீர்ப்பு கொண்டவர்கள் (ஆண்களும் பெண்களும்), அரவானிகள், பால் நிலை தாண்டிய மற்ற பலர் ஆகியோரது குரல்கள் பலமாகக்கேட்கத் தொடங்கியிருப்பதையும் இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 377ஐ எதிர்த்துத் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதையும் அகம் - புறம் சார்ந்த கண்ணோட்டத்தில் முதலில் புரிந்துகொள்ளலாம். இசைவுகொண்ட ணீபீuறீts தனிமையில் ஈடுபடும் செயல்பாடுகளைக் குற்றம் எனக் கூறுகின்ற சட்டம் முதலில் மீறுவது தனி மனிதர்களின் அகவெளியின் வரையறைகளை - குறிப்பாக வன்புணர்ச்சியல்லாத, இசைவும் ஈடுபாடும் ஒருவருக்கொருவர் அனுமதி நல்கியும் நிகழும் அகவெளிச் செயல்பாடுகளைக் குற்றம் என்ற வெளிச்சமிடப்பட்ட தண்டனை மேடைக்கு இழுத்துவருவது ஒரு வன்முறை; அடிப்படை மனித உரிமை மீறல். சில உடற்புணர்ச்சிகளை இயற்கைக்குப் புறம்பானவை என்று அறிவித்து, அதனால் அவை தண்டனைக்குரிய குற்றங்கள் என்று பறைசாற்றுவது வன்முறையில் அபத்தத்தின் கலப்பு நிகழும் இடம்.

இயற்கை / இயற்கைக்குப் புறம்பானவை என்ற எல்லைக் கோடுகளை ஒரு சமூகத்தின் பெரும்பான்மையோ அல்லது நீதி வரையறைகளை நிர்ணயிக்கும் ஏதோ ஒரு குழும சக்தியோ (பெரும்பான்மையல்லாத போதும்) பலவிதங்களில் தீர்மானித்துவிடுகின்றன. என்னுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்பொழுது இன்று முழுக்க முழுக்க இயற்கைக்கு மாறான வாழ்க்கையையே நம்மில் பெரும்பாலானோர் வாழ்ந்துவருகிறோம். பொய்ச்சிரிப்பு, பொய்யழுகை, போலித்தனம் இவற்றில் தொடங்கி, பிளாஸ்டிக் பைகள், மரபணு மாற்றியமைக்கப்பட்ட காய் கனிகள்வரை இயற்கையிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாக விலகி நிற்கிறோம். இது குறித்து இப்போது ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் பல லட்சம் பேர் என்னுடன் ஒத்துப் போவார்கள். அதனால் இவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்று அறிவித்துவிடலாமா? இந்த வாதத்தில் எங்கோ அபத்தம் தெரிகிறதல்லவா? பின் ஓரினப்புணர்ச்சி ஏன் இயற்கைக்குப் புறம்பானது? ஆணும் பெண்ணும் கொள்ளும் உடலுறவுகள் மட்டுமே இயற்கையானவையா? அவற்றின் இயற்கைத்தன்மை எங்கே பொதிந்துள்ளது? ஆண் பெண் இடையிலான உடற்புணர்ச்சி இனவிருத்தியைச் சாத்தியமாக்குகிறது என்பதினாலா? அப்படியெனில் இனவிருத்தி, கருத்தரித்தல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக்கொள்ளாமல் நிகழும் எல்லா ஆண் - பெண் உடற்புணர்ச்சிகளும் இயற்கைக்குப் புறம்பானவைதானே? சுய இன்பம்கூட. இன்றிரவு உங்கள் படுக்கையறையில் என் குரல் ஒலிக்கலாம். கண்டிப்பாக எரிச்சலூட்டும். ஆண்களை விழையும் ஆண்கள் மற்றும் பெண்களை நேசிக்கும் பெண்கள் ஆகியோரது படுக்கையறைகளில் மட்டுமல்ல, அவர்களது காதலின் நிழலடியில் என்றும் கனத்துக்கொண்டிருப்பது குற்றம் என்ற பொது அறிவிப்பின் சுமை. எல்லாரையும் போல் நேசித்து, ஆனால் அதை மறைத்து, சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அந்த நேசத்தைப் பலியிட்டு, தம் இயல்புகளின் சுயங்களின் முக்கியப் பகுதிகளை வெளிக்காட்ட இயலாமல் மூச்சடைத்து இவை அனைத்தையும் மீறிக் காதல்செய்யும் எங்களின் தலை மேல் என்றும் தொங்கிக்கொண்டிருப்பது குற்றவியல் சட்டத்தின் வாள். வெகுஜனச் சிந்தனைகளின், தீர்மானங்களின் முறைத்த பார்வைகள் என் அறையின் சன்னல் திரைச்சீலைகளை விலக்கிப் பார்ப்பது போன்ற ஒரு நிரந்தர பிரம்மை எனக்குண்டு.

ஓரினப்புணர்ச்சியைத் தண்டனைக்குரிய குற்றமென்று அறிவிக்கும் ஐ.பி.சி. பிரிவு 377 - 1860இல் லார்ட் மெக்காலேவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. விக்டோரிய இங்கிலாந்தின் மூச்சுத்திணறும் நெறியியல் விதிமுறைகளின் சாரமாக இந்தச் சட்டம் இருக்கின்றது. இந்திய மக்களின் கல்வி நிலையைப் பற்றியும் இந்திய மொழிகளின் தன்மையைப் பற்றியும் நம்மைச் சீர்திருத்த ஆங்கிலக் கல்வி எத்துனை அவசியம் என்றும் கோஷமிட்ட மெக்காலே இன்று பின்காலனித்துவத்தால் தகர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், அதே சீர்திருத்த, ஆதிக்க நோக்கிலிருந்து உயிர்பெற்றுள்ள குற்றவியல் சட்டம் பிரிவு 377ஐக் குறைந்தபட்சம் விவாதத்திற்குக் கொண்டுவருவதுகூடப் பெரும்காரியமாக இருக்கிறது. காரணம், இதை விவாதிக்கும்பொழுது உடலுறவைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும். அதுவும் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடலுறவு, பால்நிலை தாண்டிய மக்களின் இன்ப நுகர்வுகள் ஆகியவற்றைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும். ஆனால், என் மதிப்பீட்டில் நாம் பயந்து விலகுவது இவை மட்டுமல்ல. இவை அனைத்தையும் தாண்டி நாம் நிஜமாக, நிதானமாக அமர்ந்து காதல், நேசத்தைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். இவற்றிற்குச் சாதி, மதம், இனம் போன்ற எல்லைகள் மட்டும்தான் கிடையாதா அல்லது பால் வேற்றுமையும் கிடையாதா என்று உண்மையாக நம்மை நாமே கேட்டறிய வேண்டியிருக்கும். பழக்கப்பட்ட நம் தினசரி உறவுகளைப் பற்றி நியாயமாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். நம் முற்போக்குத்தனத்தைச் சோதனைக்குள்ளாக்க வேண்டியிருக்கும். இவைதான் இன்னும் கடினம் எனத் தோன்றுகிறது.

-அனிருத்தன் வாசுதேவன்

ஒவியங்கள்: பூபேன் கக்கர்
நன்றி: காலச்சுவடு, ஜூலை 2008

திங்கள், ஜூலை 07, 2008

அன்புள்ள கனவுத்தாத்தா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு, வணக்கம்!

அன்புள்ள கனவுத்தாத்தா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு, வணக்கம்.

எல்லாரையும் கனவு காணச் சொல்லியே உங்கள் குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தை ஓட்டி முடித்துவிட்டீர்கள். குழந்தைகள் முதல் உங்கள் வயதுக்காரர்கள் வரை கனவு கண்டுகொண்டே இருக்கிறார்கள். எல்லார் கனவுகளையும் தொகுக்க முடியுமானால், அவற்றைப் படித்து ஆராய்ந்து இந்தியாவிலிருந்து இன்னொரு சிக்மண்ட் ஃபிராய்ட் உருவாகும் வாய்ப்பு கூட இருக்கிறது.

உங்கள் கனவுகள் என்ன என்று அறிந்துகொள்வதற்கு எனக்கு எப்போதும் ஆவல்தான். அக்கினிச் சிறகுகள், விஷன் 2020 மாதிரி ஆவணங்களைப் படித்தால் எனக்கு தூக்கம் வந்துவிடுகிறது. அப்புறம் என் கனவுகள் ஆரம்பமாகிவிடுகின்றன. உங்கள் கனவு என்னவென்று தெரியாமலே போய்விடுகிறது.

உங்கள் கனவு என்று சொல்லி அண்மையில் ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அய்யோ! அதை நினைத்தாலே எனக்கு உடலெல்லாம் பதறுகிறது. இப்படி ஒரு விபரீதக் கனவு உங்கள் பெயரால் நனவாக்கப்படுவது பற்றி உங்கள் கவனத்தை ஈர்க்கத்தான் இந்தக் கடிதத்தை மதியத் தூக்கத்தையும் பகல் கனவையும் தியாகம் செய்துவிட்டு எழுதுகிறேன்.

இயற்பியல் துறையிலே ஒரு பெரும் ஆராய்ச்சிக்கான சோதனைக் கூடத்தை நீலகிரி மலைத்தொடரில் முதுமலை கானுயிர் பூங்காப் பகுதியில் பைக்காரா மின் நிலையம் அருகே சிங்கார கிராமத்தில் சுமார் 900 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இன்னமும் தமிழக அரசு இதற்கு இறுதி ஒப்புதல் தரவில்லை என்பதால்தான் இந்தக் கடிதத்தை அவசர அவசரமாக உங்களுக்கு எழுதுகிறேன். என் இதர கட்டுரைகளைப் படிப்பது போல இதையும் தமிழக முதல்வர் படித்துவிடுவார் என்ற நம்பிக்கையினால் அவருக்குத் தனியே எழுதவில்லை.

இது எதற்கான ஆராய்ச்சிக் கூடம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் சாதாரண மனிதர்களுக்கு எளிதில் புரியாது. சூரியனும் இதர நட்சத்திரங்களும் இடைவிடாமல் கோடிக்கணக்கில் உமிழ்ந்துகொண்டிருக்கும் நியூட்ரினோ எனப்படும் அணுவிலும் மெல்லிய துகளை வசப்படுத்தி ஆராய்ச்சி செய்வதற்குத்தான் இந்த சோதனைக்கூடம். நியூட்ரினோவைப் புரிந்துகொண்டால் இந்த பிரபஞ்சம் எப்படி உருவாயிற்று என்பதையும் சூரியனில் எப்படி சக்தி உருவாகிறது என்பதையும் புரிந்துகொள்ளமுடியலா....ம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

நியூட்ரினோவை வசப்படுத்த பூமிக்கடியில்தான் சோதனைக்கூடத்தை ஏற்படுத்தியாக வேண்டும் என்பதால், முதுமலை& நீலகிரி மலைத்தொடரில் பூமியைக் குடைந்து ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் ஏற்படுத்தி அதிலே சோதனைக் கூடத்தை கட்ட வேண்டும்.

பிரபஞ்ச ஆராய்ச்சியில் உங்கள் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவிட்டுப் போகட்டும். அதற்கு மக்கள் வரிப்பணமான 900 கோடி என்ன ஒன்பதாயிரம் கோடியைக் கூட செலவிடட்டும். ஆராய்ச்சி முடிவுகள் மனித குலத்துக்கு என்றோ ஒரு நாள் பயன்தரும் விடைகளைத் தரக்கூடும் என்ற நம்பிக்கையில் எங்கள் கொள்ளுப் பேரன் பேத்திகள் காலத்தில் கூட இதற்காக வரி கட்டுவார்கள். அதல்ல பிரச்னை.

சோதனைக்கூடம் வைப்பதற்கு நீலகிரி மலையை, முதுமலை கானுயிர் மண்டலத்தை, சிங்கார கிராமத்தை தேர்ந்தெடுத்திருப்பதுதான் பிரச்னை. உங்கள் விஞ்ஞானிகள் இன்னும் நூறு தலைமுறைகளுக்கு உழைத்தால் கூட திரும்ப உருவாக்கமுடியாத இயற்கை விஷயங்களை வரும் நான்கே ஆண்டுகளில் அழித்துவிடுவார்கள் என்பதுதான் பிரச்னை.

சோதனைக்கூடத்துக்குத் தேவைப்படும் இரும்பு மட்டும் முதல்கட்டத்தில் 50 ஆயிரம் டன். இரண்டாம் கட்டத்தில் இன்னொரு 50 ஆயிரம் டன். இவை தவிர, சிமெண்ட், ஸ்டீல், இதர உலோகங்கள் எல்லாமாக இன்னொரு 35 ஆயிரம் டன் பொருட்கள். இவை அத்தனையும் மைசூரிலிருந்தும் ஊட்டியிலிருந்தும் காட்டுச் சாலைகள் வழியே லாரிகளில் வந்து சேரவேண்டும்.

மலையில் குடைந்து எடுக்கப்படும் பாறையும் மண்ணும் மட்டும் மொத்தம் ஆறு லட்சத்து 25 ஆயிரம் டன் அளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவை லாரிகளில் அகற்றப்பட்டு இன்னொரு இடத்தில் கொண்டு போய் கொட்டப்படவேண்டும்.

அடுத்த நான்கு ஆண்டுகளும் இந்த வேலைகளுக்காக பெரும் லாரிகள் காட்டுப்பாதைகள் வழியே தினசரி 50 லிருந்து 75 டிரிப் அடித்தாக வேண்டும்.
அழிந்து வருகிற புலிகளைக் காப்பதற்காக இந்த வருடம்தான் பிரதமர் மன்மோகன்சிங் 600 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறார்.

புலிகள் வேகமாக அழியாமல் ஏற்கெனவே காப்பாற்றப்பட்டிருக்கும் பகுதி முதுமலை சரணாலயம். ஆசியாவில் இருக்கும் யானைகளில் 25 சதவிகிதம் இந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. கணக்கற்ற செடி, கொடி, மர வகைகளும் சின்னப் புழு பூச்சி முதல் யானை, புலி வரையான கானுயிர்களும் நிறைந்திருக்கும் இயற்கையான மலைக்காடுகள் உலகில் மிகக்குறைவு. அவற்றில் ஒன்று நீலகிரியும் மேற்கு, கிழக்கு மலைத்தொடர்களும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இவையெல்லாம் இந்த சோதனைக்கூடம் அமைப்பதனால் கடுமையாக பாதிக்கப்படும். நியூட்ரினோ லேபை வேறு எங்கேனும் கூட அமைக்க முடியும். ஆனால் நீலகிரி முதுமலைக்காடுகளில் வாழும் உயிரினங்களை வேறு இடத்தில் குடியேற்றிக் காப்பாற்ற முடியாது. பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை உங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து முடிக்கிறபோது அவர்களுக்காக அழிந்த பிரபஞ்ச வினோதங்களை இயற்கையின் படைப்புகளை அவர்களால் ஒருபோதும் மறுபடியும் உருவாக்கவே முடியாது.

இந்த சோதனைக்கூடத்தை இங்கே அமைப்பதால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்பது போன்ற வழக்கமான சால்ஜாப்புகள் எதுவும் இதில் சொல்ல முடியாது என்பதை ஐ.என்.ஓ.வின் இணையதளமே ஒப்புக் கொள்கிறது. அது மட்டுமல்ல. மிக நுட்பமான, எளிதில் நொறுங்கிவிடக் கூடிய இயற்கைச் சூழலுக்கு நடுவே இதை அமைக்கப்போகிறோம் என்ற பிரக்ஞையும் தங்களுக்கு இருக்கிறது என்று வேறு சொல்கிறார்கள்.

இந்த சோதனைக்கூடத்துக்கு நிலம் தர இருக்கும் தமிழக மின் வாரியம் அடுத்திருக்கும் பைக்காராவில் புனல் மின் திட்டத்தை விரிவாக்கியபோது, சுரங்கம் தோண்டி எடுத்த மண் மொய்யாற்றில் போடப்பட்டு ஆறு மாசுபடுத்தப்பட்டது. மதகைத் திறந்து நீரையெல்லாம் அப்புறப்படுத்திதான் அப்போதைய சிக்கலைச் சமாளிக்க முடிந்தது.

சூழல் மாசுபடாமல் எல்லாவற்றையும் செய்கிறோம் என்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு அதை அலட்சியப்படுத்திவிட்டு நடந்துகொள்ளும் நிர்வாக இயந்திரம்தான் நம் நாட்டில் இருக்கிறது என்பது குடியரசுத் தலைவராக இருந்த உங்களுக்குத் தெரியாதா என்ன ? இன்னும் கூட நமது அணு நிலையங்களில் ஒவ்வொரு ஊழியருக்கும் எவ்வளவு கதிர் வீச்சு அளவு என்பதை பகிரங்கமாக தெரிந்து கொள்ளும் உரிமை தகவலறியும் உரிமைச்சட்டதின் கீழ் கூட இல்லையே.

நீலகிரி மலையில் முதுமலைக் காடுகளில் ஏற்கெனவே மனிதனுக்கும் காட்டு உயிர்களுக்கும் இடையே சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. தங்கள் பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடத்தொடங்கியதால், யானைக் கூட்டங்கள் பெரும் அல்லலுக்குள்ளாகியிருக்கின்றன. இதன் விளைவாக வழக்கமாக வராத கிராமங்களுக்குச் சென்று அழிவை ஏற்படுத்துகின்றன.

இந்த ஆண்டு மட்டும் இங்கே 38 பேர் யானைகளின் பாதையில் குறுக்கிட்டு செத்திருக்கிறார்கள். அத்தனை பேரும் அப்பாவி கிராம மக்கள். பிரபஞ்ச ரகசியம் தேடும் விஞ்ஞானிகளும் அந்தப் பட்டியலில் சேரவேண்டுமென்பது உங்கள் கனவா?

உலகத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடங்கள் இன்னும் நான்கு உள்ளன. அவை எதுவும் இப்படி இயற்கையை அழிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் இடங்களில் இல்லை. ஜப்பானில் காமியோகா, கனடாவில் சூட்பரி, அமெரிக்காவில் மின்னசோட்டாவில் சௌடான் ஆகிய மூன்று இடங்களிலும் அவை நிக்கல் போன்ற தாதுச் சுரங்கங்களிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தாலியில் கிரான் சாசோ மலைகளில் அமைக்கப்பட்டிருப்பது ஆல்ப்ஸ் பனிமலையின் ஒரு பகுதியும், நீலகிரி போல பெரும் இயற்கை உயிர் வளம் இல்லாத மலையுமாகும்.அவ்வளவு ஏன்? இந்தியாவிலேயே முதல் நியூட்ரினோ சோதனைக்கூடம் கோலார் தங்க வயல் சுரங்கத்தில்தான் 1965-ல் அமைக்கப்பட்டது என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். தங்கம் எடுப்பதை நிறுத்தி சுரங்கத்தை மூடியதும் லேபை மூடிவிட்டீர்கள். அதனால்தான் இப்போது முதுமலையை அழிக்கும் ஆபத்தான கனவு உங்கள் விஞ்ஞானிகளுக்கு வந்திருக்கிறது.

இதை உங்கள் கனவு என்கிறார்கள்.

அப்படி இருக்கக்கூடாது என்று நம்புகிறேன். நியூட்ரினோ துகள்களை வசப்படுத்த வேறு இடம் தேடலாம். கோலாரில் தங்கம் இல்லாவிட்டால் என்ன ? அந்த சுரங்கங்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் பயன்படுத்தலாமே. இந்தியாவில் ஏற்கெனவே சுரங்கங்கள் உள்ள பகுதிகள் பல இடங்களில் உள்ளன. அவற்றையொட்டி நியூட்ரினோ லேபை அமைப்பது பற்றி ஆராயலாமே.

இந்த வாரம் கூட ஒரு பத்திரிகையில் விஷன் 2020 பற்றி உங்கள் பத்து அம்சக் கனவை பட்டியலிட்டிருக்கிறீர்கள். அதிலே `சஸ்ட்டெயினபிள் க்ரோத்' ( நிலைத்து நீடிக்கக்கூடிய வளர்ச்சி) என்பதும் ஒரு கனவு. ஆயிரக்கணக்கான வருடங்களாக உருவாகியிருக்கும் இயற்கையை சக உயிரினங்களை அழித்துவிட்டு எப்படி நிலைத்து நீடிக்கும் வளர்ச்சி சாத்தியம் ?

பஞ்சாபிலே மாசுபடுத்தப்பட்ட காளி பெய்ன் ஆற்றை ஐந்து வருடங்களில் 3000 தொண்டர்கள் மூலம் மறுபடியும் தூய்மையாக்கிய பாபா பல்பீர் சிங்கை, இளைஞர்களுக்கான ரோல்மாடலாக சொல்லியிருக்கிறீர்கள். நீலகிரியை நியூட்ரினோ லேபிலிருந்து காப்பாற்றி உங்களை ஒரு ரோல் மாடலாக முதலில் நிரூபியுங்கள். இயற்கையை அழித்து பிரபஞ்ச ரகசியத்தைத் தேடுவது என் கனவு அல்ல என்று தயவு செய்து அறிவியுங்கள்.

உங்களை நான் நம்பாவிட்டாலும் எண்ணற்ற இளம் தலைமுறையினர் பெரிதும் நம்புகிறார்கள். அரசியல், நிர்வாகம், அறிவியல் அனைத்து துறையினருக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடல் என்று இளைஞர்கள் பலர் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை மதித்து தயவுசெய்து இந்தத் திட்டத்தை வேறு இடத்துக்கு அனுப்பி உங்கள் தாய்த் தமிழகத்தின் முதுபெரும் சொத்தைக் காப்பாற்றித் தாருங்கள்.

இதைப் படித்ததற்கு நன்றி. படித்துவிட்டு நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்பது என் இப்போதைய கனவு.

இதில் நீங்கள் மௌனம் காட்டினால், அது நீங்கள் யாரென்பதைக் காட்டிவிடும் என்று மட்டும் அன்புடன் அறிவுறுத்த விரும்புகிறேன்.

அன்புடன்

-ஞாநி.

நன்றி: குமுதம் 09-07-08

புதன், ஜூலை 02, 2008

'தேவதை'களின் வாழ்வு

கால்களில் சலங்கை கட்டி வாத்தியக்காரர்களோடு இறப்பு வீடுகளுக்குச் சென்று ஒப்பாரி பாடும் லட்சுமியம்மாள். கேட்பாரற்றுக் கிடக்கும் பிணங்களை வண்டியில் ஏற்றித் தள்ளிக் கொண்டு சுடுகாட்டில் அடக்கஞ்செய்யும் கிருஷ்ணவேணி. கடலில் மீன் பிடித்துக்கொண்டு கடல்மீதான மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிப் பேசும் சேதுராக்கு. இந்த மூவரும் தான் லீனா மணிமேகலையின் தேவதைகள்.
உயிரியல் ரீதியாக ஆண் பெண் வேறுபாடும் சமூக ரீதியாக ஆண்மை - பெண்மை கற்பிதமும் கொண்ட இச்சமூகத்தில் வீட்டிலும் வெளியிலும் பெண்ணுக்கான பணிகளும் ஆணுக்கான பணிகளும் முற்றிலும் வேறானவை. கண்ணுக்குப் புலப்படாத புனைவு சார்ந்த இந்தக் கற்பிதங்கள் பெண்ணின் இயங்கு வெளியை ஆணிலும் சற்றுக் குறைவானதாகவே வரையறுத்திருக்கின்றன. இவ்வெளி பெண்சார்ந்திருக்கும் சமூகம், மரபு, நம்பிக்கைகள் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.

எழுதப்படாத இந்த விதிகளைத் தகர்த்து ஒரு பெண் தன் இயல்புபடி தன் வாழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை நிலைநிறுத்தி அவளுக்கான எல்லையை விரிவுபடுத்தும்போது அவள் படித்தவளாயின் சாதனைப் பெண்ணாக அறியப்படுகின்றாள். கவனிக்கப்படுகின்றாள். இதே பெண் படிப்பினால் தன்னை வெளிப்படுத்தாது தன் சூழலில் தமக்கான மரபுகளைத் தாண்டி இயங்கினாலும் தனது வெளியை விசாலப்படுத்தினாலும் நூற்றில் ஒருத்தியாகவே வாழ்வின் போக்கில் தன் பயணத்தைத் தொடர்கிறாள். இப்படிக் கண்டுகொள்ளப்படாத பெண்களில் மூவரை லீனா அடையாளங் கண்டிருக்கிறார். வெவ்வேறு வாழிடங்களைக்கொண்ட அவர்களை அவர்களது பணிச் சூழலிலேயே காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வயிற்றுப் பிழைப்புக்காகத் திருடுவதையும் உடம்பை விற்றுப் பிழைப்பதையும் தவிர வேறு எந்தத் தொழிலும் அவமானகரமான தல்ல என்று சொல்லும் லட்சுமியம்மாள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வாத்தியக்காரர்களிடம் கூலி பேசி லாரியில் ஏறிக்கொண்டு இறப்பு வீட்டிற்கு அழைத்துச்செல்வதும் இறப்பு வீட்டில் இறந்தவர் குறித்த தகவல்களைச் சேகரிப்பதும் இட்டுக்கட்டிப் பாட்டுப்பாடுவதுமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இவர் தொடர்பான பகுதிகள் படத்தின் யதார்த்தத்தை அதிகரிக்கின்றன. சாமி வந்து ஆடுவதும் தன் உடம்பில் காளி இருப்பதாகச் சொல்வதும் தவறாகப் பேசும் ஆண்களை எட்டி உதைப்பேன் என்பதும் குரங்குகளுக்கு ரொட்டி தருவதுமாக இடம்பெறும் காட்சிகள் படத்தினைத் தொய்வில்லாமல் நகர்த்த உதவுகிற இயல்பான காட்சிப் பதிவுகளுக்குச் சான்றுகள்.

ஊரில் இருப்பவர்கள் எங்கள் வண்டி கடப்பதற்குள் மூக்கைப் பொத்திக்கொண்டு போவார்கள்; சிலர் திட்டிக்கொண்டே செல்வார்கள். எந்த நிலையில் பிணம் இருந்தாலும் நான் எடுத்து அடக்கம் செய்கிறேன் என்கிற கிருஷ்ணவேணி, இரவும் பகலும் சுடுகாட்டில்தான் வேலை. பார்ப்பவர்கள் அருவருக்கத்தக்க யாருமற்ற பிணங்களை அடக்கஞ்செய்வதை நிறைவுடன் தான் செய்கிறேன் என்கிறார். சுடுகாட்டிற்குப் பெண்கள் போகக் கூடாது என்கிற சமூகத்தின் முகத்தில் பயமறியாத கிருஷ்ணவேணியின் செயல்பாடு கரிப்பூச்சில்லாமல் வேறென்ன?

பெண்கள் கடலுக்குச் சென்றால் தீட்டு, சாமி குத்தம் என்கிறார்களே, புருஷன் ஒழுங்கில்லாவிட்டால் பெண்தானே குடும்பத்தைப் பார்க்க வேண்டும்? சாமி எங்களை ஒன்னுஞ் செய்யலியே. எங்களுக்குக் கடல்தான் சாமி என்கிற சேதுராக்கு கடல்மீதான மீனவர்களின் பிணைப்பைப் புரியவைக்கிறார். கடல்தானே எங்கள் வாழ்க்கை, கடலைத் தவிர வேறென்ன தெரியும்? என்கிற அவர், சுனாமியின் பெயரைச் சொல்லி கடலை விட்டுத்தொலைவில் எங்களைக் குடிபெயரச் சொல்கிறார்கள். எங்களால் முடியுமா? எனக் கேட்கிறார். புனிதம், தீட்டு என்ற கருத்தாக்கங்கள¢ எல்லாம் இவர் வார்த்தைகளில் சிதறுகின்றன. பெண்ணியத்தை யாரும் கற்பித்துத் தரவில்லை இவர்களுக்கு. கடலில் மீன் பிடிக்க இறங்குவதும் சிப்பி அரிப்பதும் மாலை கோர்ப்பதுமாகத் தொகுக்கப்பட்ட காட்சிகள் படத்தொகுப்பின் தரத்தைக் காட்டுகின்றன. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்த்தியாக இருக்கின்றன.

திருவண்ணாமலை, இராமேஸ்வரம், பாண்டிச்சேரி என்று வெவ்வேறு இடங்களில் வசிக்கும் இந்தப் பெண்களின் வாழ்வைப் பதிவுசெய்த விதம் அவர்களின் மீதான பரிதாபத்தைக் கோருவதாக இல்லை. மாறாக அவர்கள் கொண்ட வாழ்வின் நம்பிக்கையை, அவர்களை அறியாமல் அவர்கள் செய்துகொண்டிருக்கிற அரிய செயல்களைக் காட்டுவதாகவே இருக்கின்றது. இந்தப் பெண்கள் ஆண்களால் மட்டுமே முடியும் என்ற பொய்யை மறுதலித்திருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு அவர்கள் மீது பரிவு ஏற்பட்டாலும் எஞ்சி நிற்பது அவர்கள் செய்துவரும் அற்புதங்களே!
பறை, மாத்தம்மா போன்று கவனிப்பிற்குரிய படங்களில் பெண்கள்மீதான அக்கறையை வெளிப்படுத்திய லீனாவிற்கு, அவரது ஆவணப்பட வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாய் இப்படமும் இணைந்துள்ளது. தேவதைகள் என்ற தலைப்பே அந்தப் படத்தில் மையமான பெண்களின் வாழியல்பைச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது. இடஒதுக்கீடு, பெண் உரிமை என்று பேசிக்கொண்டிருக்கும் படித்த வர்க்கம் தெரிந்துகொள்ள வேண்டியது, வாழ்வின் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் இப்படியும் பெண்கள் வாழ்கிறார்கள் என்பதைத்தான்.

'புகழ்பெற்ற' இம்மூன்று தேவதைகளும் எவ்வித மாற்றங்களுமின்றித் தம் வாழ்வைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் இருத்தலுக்கான போராட்டங்களோடும் வலிகளோடும்.
***



இயக்கம்: லீனா மணிமேகலை,
ஒளிப்பதிவு: சன்னி ஜோசப்,



படத்தொகுப்பு: பி. தங்கராஜ்



தயாரிப்பு: சி. ஜெரால்டு
நேரம்: 42 நிமிடங்கள்

-ந. கவிதா
நன்றி: காலச்சுவடு, ஜூன் 2008