திங்கள், மே 23, 2011

ஸ்பெக்ட்ரம் : மாறன் சகோதரர்களது பங்களிப்புகள் மறைக்கப்படுகின்றனவா?

“அரசியலில் ஊழல் புரையோடிப் போயிருப்பதற்கும் தார்மீக நெறிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியலில் உள்ள ஆளுமைகளின் தார்மீக வீழ்ச்சிக்கும் அதற்கும்கூட சம்பந்தமில்லை. ஏனெனில் அரசியல் ஒரு லௌகீகமான (பொருண்மை சார்ந்த) காரியம். வர்த்தக, தொழில் உலகின் அனிச்சைச் செயல்தான் (reflex) அரசியல். கொடுப்பதைவிட எடுத்துக்கொள்வதே போற்றுதலுக்குரியது’, ‘ஒரு கறைபட்ட கரங்களை மற்றொரு கரம் தூய்மைப்படுத்தி விடும்’ என்பதே இதன் தாரக மந்திரம்.”

- எம்மா கோல்ட்மேன், 1869-1940,
அரசு நிர்வாகச் சீர்குலைவு நிலை (anarchy) குறித்த அரசியல் தத்துவ அறிஞர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் அரசியல்-பொருளாதாரத்தின் மீது மிக அதிகமான தாக்கத்தை செலுத்திய காங்கிரஸ் கட்சிதான் சூட்கேஸ் அரசியலை இந்த தேசத்திற்கு அறிமுகப்படுத்தியது. அதை ஷேர் அரசியலாக மாற்றியிருக்கும் தி.மு.க.வுக்கும் அவர்கள் உற்ற துணையாக இருந்திருக்கிறார்கள் என்பது இந்திய வரலாற்றில் காங்கிரசின் தாத்பர்யத்தை நீடித்து நிலைக்கச் செய்கிறது. இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தின் மீது தாக்கம் செலுத்தும் ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் போன்ற பல்வேறு இயக்குசக்திகளையும் விட வர்த்தக, தொழில் உலகத்தின் தாக்கம் மிகப் பெரியது. ரத்த உறவுகளால் தீர்மானிக்கப்படும் வாரிசு அரசியலின் இயக்கு சக்தி அதற்கு நிகரானது. இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் குடும்பம் ஒன்றின் வர்த்தக, உறவு மோதலுக்கு நடுவில் மீன் பிடித்த முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா இப்போது சிறையில். அவரைப் பயன்படுத்திப் பயனடைந்த தொழில் துறையினரும் கருணாநிதியின் உறவினர்களும் மட்டுமின்றி, ராசாவினால் பாதகம் அடைந்த கோபத்தினால் அவரை அம்பலப்படுத்துவதில் பங்கெடுத்த கருணாநிதி குடும்பத்திலுள்ள ‘ராசா அண்ட் கோ’வின் விரோதிகளும் ஒவ்வொருவராக அம்பலமாகி வருகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காகவும் பி.ஜே.பி.யை மாட்டிவிடுவதற்காகவும் தற்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் அமைத்த நீதிபதி ஷிவ்ராஜ் பாட்டீல் ஒரு நபர் கமிட்டி புதிய பூதங்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை ஆட்டுவிப்பதில் இதுவரை திரைமறைவாக இருந்த தயாநிதி மாறன் குடும்பத்தின் பங்களிப்புகள் இப்போது சந்திக்கு இழுக்கப்படுகின்றன.

டாடா ஸ்கை நிறுவனத்தில் 33 சதவீதப் பங்கைக் கேட்டு டாடா நிறுவனத்தை மாறன் சகோதரர்கள் மிரட்டினார்கள் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட ஏராளமானோர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அது உண்மையோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால் மாறன்களுக்கு டாடாவின் மீது கடுமையான ஆத்திரம் இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் சந்தர்ப்ப சாட்சியங்கள் கிடைத்திருக்கின்றன. தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் டாடா நிறுவனத்திற்குப் பங்கு இருந்த காரணத்திற்காகவே ஓராண்டிற்கு மேல் அதன் அலைவரிசை ஒதுக்கீட்டு விண்ணப்பம் தேவையற்ற காரணங்களுக்காக முடக்கி வைக்கப்பட்டது என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் வகையிலான தகவல்கள் நீதிபதி ஷிவ்ராஜ் பாட்டீலின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இத்தகைய நெருக்கடிகளாலோ என்னவோ, ஐடியா செல்லுலாரிலுள்ள தனது அத்தனை பங்குகளையும் டாடா நிறுவனம் வாபஸ் பெறுகிறது. அது நடந்த குறுகிய காலத்தில் நீண்ட காலமாகத் தடைபட்டிருந்த ஐடியா செல்பேசி சேவை நிறுவனத்திற்கான அலை வரிசை ஒதுக்கீட்டை முடித்து வைக்கிறார் தயாநிதி மாறன். டாடா மீதான தனிப்பட்ட, வர்த்தக விரோதத்தால் இந்தக் காரியம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகளை அவர்கள் தரப்பு மறுக்கலாம். ஆனால் 2007ஆம் ஆண்டில் தி.மு.க. தலைவர் மு.கருணா நிதிக்கு ரத்தன் டாடா எழுதிய கடிதம் மாறன் சகோதரர்களுடன் அவருக்கிருந்த பகையை மறைமுகமாக உணர்த்துகிறது. ராசாவைப் பெரிதும் பாராட்டும் அந்தக் கடிதம், எப்படியானாலும் ராசாவையே தொலைத்தொடர்பு அமைச்சராக நீடிக்கச் செய்வதுதான் தங்களின் நலனுக்கு நல்லது என்ற டாடாவின் எண்ணத்தைக் காட்டுகிறது. “ஒரு சில உள்நோக்கம் கொண்ட சக்திகள் ராசாவின் சிறந்த நடவடிக்கைகளை” எதிர்ப்பதாகவும் ராசாவின் திட்டங்கள் “நேர்மையானவை, சரியானவை” என்றும் அந்தக் கடிதத்தில் கூறுகிறார் ரத்தன் டாடா. உள்நோக்கம் கொண்ட சக்திகள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை விளக்க வேண்டியதில்லை. ராசாவை ஏன் “நேர்மையான”வர் என கூறுகிறார் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை.

குற்றவுணர்வு மிகுந்த கண்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் செய்தி சேனல்களின் ஆசிரியர்களுடனான விவாதத்தில் கலந்துகொண்டது வெறுமனே ராசாவுடன் சம்பந்தப்பட்டது அல்ல. ராசாவின் ஒவ்வொரு முறைகேட்டிற்கும் அவர் எவ்வாறெல்லாம் வளைந்துகொடுத்தாரோ அதேபோல தயாநிதி மாறனுக்கும் செய்திருக்கிறார். தயாநிதி மாறனின் நெருக்குதலுக்கு இணங்கி, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மட்டுமே அலைவரிசையின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விதியை மாற்றுவதை வேடிக்கை பார்த்தார்.

விலையை நிர்ணயம் செய்யும் இடத்தில்தான் பேரங்களின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது என்பதால் தயாநிதி மாறனும் சரி, ராசாவும் சரி அது தங்கள் கையை விட்டுச் செல்வதை அனுமதிக்கவே இல்லை. 2001ஆம் ஆண்டில் விலை நிர்ணயத்தில் ராசா அலைவரிசையை விற்றது நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது என்றால், தயாநிதி மாறனும் அதையேதான் செய்தார். மீட்க முடியாத தேசத்தின் வள ஆதாரத்தை ஒரு சில தனி நபர்கள் தாங்கள் இஷ்டப்பட்ட விலைக்குக் கூறு போட்டு கள்ளச் சந்தையில் விற்றார்கள். பிரதமர் அதை வேடிக்கை பார்த்தார். மன்னராட்சிகளில் மட்டுமே இது நிகழும். ட்ராய், டெலிகாம் கமிஷன், அமைச்சரவைக் குழு முதலிய எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் தயாநிதி மாறனும் ராசாவும் தேசத்தின் சொத்தான அலைவரிசையைத் தங்கள் சொத்தினைப் போல் விற்றிருக்கிறார்கள்.

நக்சல்கள் காட்டுக்குள் ஒளிந்து கொண்டு ஒரு கலெக்டரையோ, போலீஸ் அதிகாரியையோ அவ்வப்போது கடத்தி பணயத் தொகையைப் பெறுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் சலவை மாறாத உடைகளின் அப்பழுக்கற்ற தோற்றத்தை கேமராக்களுக்குக் காட்டிவிட்டு, பொதுச் சொத்துக்களை பணயப் பொருளாக வைத்து சம்பாதிக்கும் அசிங்கமான காரியங்களை ஏ.சி. அறைக்குள் நிகழ்த்துகிறார்கள். ஏர்செல் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் “முதலீடு” செய்ய அவ்வாறு தான் பலவந்தப்படுத்தப்பட்டது என்று ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிடுகின்றன. 2004ஆம் ஆண்டு அலைவரிசை ஒதுக்கீட்டிற்காக அப்போது டிஷ்நெட் என்ற பெயரில் அறியப்பட்ட அந்த நிறுவனம் விண்ணப்பிக்கிறது. தயாநிதி மாறன் தான் தொலைத்தொடர்பு அமைச்சர்.

“தேவையற்ற”, “தெளிவற்ற” விளக்கங்களைக் கோரி அதற்கான ஒதுக்கீடு தாமதப்படுத்தப்பட்டதாக நீதிபதி ஷிவ்ராஜ் பாட்டீல் கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. கடைசியில் 2006ல்தான் ஏர்செல்லாக மாறும் அந்த நிறுவனத்திற்கு அலைவரிசை ஒதுக்கப்படுகிறது. அதற்கடுத்த நான்கே மாதங்களில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் குழுமத்தின் சன் டைரக்ட் டி.டி.எச். நிறுவனத்தில் 675 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது ஏர்செல் நிறுவனத்தின் அதிபரான அனந்த கிருஷ்ணனின் குழும நிறுவனம் ஒன்று. இது ஒரு முழுமையான பிசினஸ் முதலீடு மட்டுமே என்றும் இதற்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சன் குழுமம் விளக்கம் கொடுத்திருக்கிறது. ஆனால் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான பிரதிபலனாகத்தான் இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டது என்ற சந்தேகத்தை ஆங்கில நாளிதழ்கள் எழுப்புகின்றன.

ஸ்பெக்ட்ரம் விருந்தில் பங்கு போட்டுக் கொண்ட ஒவ்வொருவரும் இப்போது ‘நான் அவன் இல்லை’ என நடித்து தப்பித்துவிட நினைக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான லஞ்சமாகத்தான் கலைஞர் டி.வி.க்கு 206 கோடி ரூபாய் கடன் வந்தது என்பது சத்தியமாக உண்மை அல்ல என்கிறார் அந்த சேனலின் எம்.டி ஷரத் குமார். எனினும் இந்த ஒரு ஆதாரத்தை வைத்தே கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களை சி.பி.ஐ. கைது செய்யமுடியும் என்பது பலரையும் கடும் பீதியில் உறைய வைத்திருக்கிறது. 2ஜி அலை வரிசை ஒதுக்கீட்டில் அதிக பலன் அடைந்தது நாங்கள் அல்ல, மற்ற பலர்தான் என்று சொல்லி டாடா நிறுவனத்தை மாட்டிவிடப் பார்க்கிறார் அனில் அம்பானி. 2ஜி அலை வரிசை ஒதுக்கீட்டு முறைகேடுகள் அனைத்தையும் பற்றி ஒரு நாள் முழுக்க சி.பி.ஐ. யிடம் சாட்சியம் அளிப்பேன் என்று கூறிய காவிக் கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் அருண் ஷோரி இப்போது பின்வாங்கி, தப்பித்தோடும் வழியைத் தேடி ஓடுகிறார். நரகத் தின் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி இந்தத் தொல்லைகளிலிருந்து தனக்குக் கிடைத்த விடுதலையை முதல் முதலாக ரசிக்கிறார் பிரமோத் மகாஜன்.

இந்தியாவை நிஜமாக ஆளும் கார்ப்பரேட் உலகம் இந்த 2ஜி பூதத்தை எவ்வாறு பாட்டிலில் அடைப்பது எனத் தெரியாமல் திணறுகிறது. பூதாகாரமான ஈகோ மோதல்களிலும் போட்டி பொறாமையிலும் சிக்கி சிடுக்கு விழுந்திருப்பதால் பரஸ்பர நலன்கள் அடிவாங்கினாலும் அவர்களால் ஒரு சுமுகமான இடத்திற்கு வர இயலவில்லை. “சுகவீனப்பட்டு படுக்கையில் வீழ்ந்திருக்கும்போது, ஒரு பக்கமிருந்து இன்னொரு பக்கம் புரண்டு படுத்தால் நன்றாக இருப்பது போல் தோன்றும். அதேபோலத்தான் அரசியல்” என்று கூறினார் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல ஜெர்மானிய எழுத்தாளர் வோல்ஃப்காங் வான்கோ. தமிழக அரசியலிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் விளைவாக பொதுமக்கள் அப்படியான ஒரு மனநிலைக்கு வந்திருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் நாணயத்தின் அடுத்த பக்கத்தில் போயஸ் தோட்டத்துத் தலைவி எதையாவது கொடுப்பார் என்று தெரியும் என்றாலும் அது என்ன என்று தெரிந்துகொள்வதுதான் இந்திய அரசியலில் எஞ்சியுள்ள ஒரே சுவாரசியம்.

-மாயா

Courtesy: உயிர்மை.காம்

ஞாயிறு, மே 22, 2011

சமகாலத் தமிழ் சினிமா கலாச்சாரம் குறித்த ஓர் அலசல்

ரஜினிகாந்த் நடித்து 1994 இல் வெளிவந்த ‘பாட்ஷா’ வெற்றிப்படமா? தோல்விப் படமா? என்றுயாரும் கேள்வி எழுப்பி விடைதேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு நகரங்களிலும் வெளியிடப்பட்ட பெரும்பாலான திரையரங்குகளிலும் தொடர்ந்து 100 நாட்களையும், பெருநகர அரங்குகளில் 200 நாட்களையும் தாண்டி ஓடிய படம். அதன் மூலம் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யா பிலிம்ஸுக்குப் போட்ட முதலைப் போல பல மடங்கு பணத்தை அள்ளித்தந்த ‘பாட்ஷா’, திரைத்துறையில் மட்டுமே அலைகளை உருவாக்கிய படம் அல்ல; அரசியலிலும் அலையை உருவாக்கிய படம். “ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியைத் தூக்கி எறியாவிட்டால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என ரஜினிகாந்த் குரல் கொடுக்கக் காரணமான படம். அந்தக் குரல் தமிழக அரசியலில் உருவாக்கிய அலை ஏறத்தாழ பத்தாண்டுகள் வரை இருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பொது நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் நடிகர் ரஜினிகாந்தின் கருத்து என்ன என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.

‘பாட்ஷா’ என்னும் மிகப்பெரிய வெற்றிப்படம் உருவாக்கிய அலையை ‘பாபா’ (2004) என்ற மோசமான தோல்விப் படம்தான் சமநிலைக்குக் கொண்டு வந்தது. ‘பாட்ஷா’வுக்கும் ‘பாபா’வுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படமாக ‘முத்து’ (1995), ‘அருணாசலம்’(1997), ‘படையப்பா’(1999) என மூன்று படங்களை வெளியிட்டுச் சில நூறு நாட்களுக்குத் திரையரங்குகளை நிறைத்து லாபம் ஈட்டிக் கொண்டதோடு, தனது பொதுமனிதன் மற்றும் அரசியல் பிம்பத்தையும் உடன்நிகழ்வாகவே உருவாக்கி வந்தார் ரஜினிகாந்த். ‘பாபா’ படத்தின் தோல்வி, ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாது அவர் உருவாக்கிக் கட்டமைத்த அரசியல் பிம்பத்திற்கும், பொதுமனிதன் அடையாளத்திற்கும் கூட பங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை நமது நினைவுகள் அழித்து விட்டிருக்காது. ‘பாபா’ படத்தை வாங்கி விநியோகம் செய்து நஷ்டம் அடைந்தவர்களுக்கு ரஜினிகாந்தே முன்வந்து பணத்தைத் திருப்பித் தந்தார் என்பதும், அப்படத்திற்கு இடையூறு செய்தவர்களாக அறியப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிராகவும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும் இரண்டாவது தடவையாகக் குரல் (வாய்ஸ்) கொடுத்தார் என்பதும் பருண்மையான உண்மைகள். இந்த உண்மைகள் நினைவுக்கு வரும்போது, ரஜினிகாந்தின் அந்தக் குரல் அந்தப் பொதுத்தேர்தலில் முற்றிலுமாக எடுபடாமல் தோற்றுப் போனது என்பதும் நினைவுக்கு வந்து விடும்.

கடந்த காலத்தைக் கொஞ்சம் தள்ளி வைத்து விடுவோம். அண்மைக் காலத்துக்கு வருவோம்.

ஏவி.எம். தயாரிப்பில் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘சிவாஜி’ வெற்றிப் படமா?

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘எந்திரன்’ வெற்றிப் படமா? இப்படியொரு கேள்வியைக் கேட்டுப் பார்த்தால் படத்தின் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் படம் வெற்றிப்படம் என்றே சொல்வார்கள். இயக்குநர் ஷங்கரும் கூட அதே பதிலைத்தான் சொல்லுவார். நடிகர் ரஜினிகாந்தும் கூட ஷங்கரின் பதிலை வழிமொழியக் கூடும். ஆனால் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் அவர்களைப் போலவே பதில் சொல்வான் என எதிர்பார்க்க முடியாது.

தமிழ் சினிமாவின் தீவிர ரசிகனுக்கு -குறிப்பாக ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டாரின் ரசிகனுக்கு ஒரு படம் வெற்றிப் படம் என்றால் குறைந்தது 100 நாள் ஓடவேண்டும். அதுதான் வெற்றிப் படம். திரைப்பட ரசிகன் மட்டுமல்ல; ஆண்டு இறுதியில் புள்ளி விவரங்கள் வெளியிடும் பத்திரிகைகள் கூட இந்த அடிப்படைகளைப் பின்பற்றியே வெற்றிப் படங்களைப் பட்டியலிட்டு வந்தன. ஒரு நடிகனின் தீவிர ரசிகனைப் பொறுத்த அளவில் தனது அபிமான நடிகனின் படம் வெளியானவுடன், தியேட்டரில் குறுக்கும் நெடுக்குமாகத் தோரணங்கள் கட்டி, பாலாபிஷேகம் செய்ய வேண்டும்; கட்-அவுட்டுகளை நிறுத்தித் தனது பெயரோடு சேர்த்து நடிகனின் பெயரையும் எழுதிப் பார்க்க வேண்டும்; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அந்தப் படத்தை நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் போய்ப் பார்க்கும் விதமாகப் பல வாரங்கள் ஓட வேண்டும்; அதுதான் வசூலில் வெற்றிப் படம். தனது மானசீகமான நாயகனின் வெற்றிப் படத்தைக் கொண்டாடி மகிழ்வதே தமிழ் சினிமா ரசிகர்களின் திரைப்படக் கலாச்சாரம். அதற்கு வாய்ப்பளிக்கும் நடிகனே வெற்றிப்பட நாயகன். அவனே எதிர்காலத் தமிழகத்திற்கு வழிகாட்டும் தலைவனாக-முதல்வனாக ஆகும் தகுதியுடையவன்.

‘பாட்ஷா’ அத்தகைய வாய்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்கள்தோறும் அப்படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியதோடு, சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் 200 நாட்களையும் தாண்டி பார்வையாளர்களைத் தன்வசம் இழுத்தது. ‘பாட்ஷா’வை தொடர்ந்து வந்த படங்களில் ‘பாபா’வைத் தவிர எல்லாப் படங்களும் அந்த வாய்ப்பை வழங்கவே செய்தன. ஷங்கரின் இயக்கத்தில் வந்த ‘சிவாஜி’யும்கூட அந்த வாய்ப்பை மறுக்கவில்லை. ஆனால் ‘எந்திரன்’?

ஏறத்தாழ அந்த வாய்ப்பை ரஜினியின் ரசிகனுக்கு ‘எந்திரன்’ மறுத்துவிட்டது. வழங்குவதற்கான வாய்ப்பை நினைத்துப் பார்க்கக்கூடத் தூண்டவில்லை என்பதே உண்மை. ரஜினியின் சினிமா என்பது ரசிகனின் சினிமா என்ற அர்த்தத்தில் இருந்த நிலையை மாற்றித் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரின் சினிமாவாக ரஜினியின் ‘எந்திரன்’ மாறிக் கொண்டதன் மூலம் ரசிகனிடமிருந்தும், அவனது கொண்டாட்ட மனநிலையிலிருந்தும் விலகிப் போனது என்பது அண்மைய நிகழ்வு. அதன் மூலம் வெற்றிப்படம் என்ற இலக்கணத்தையும் அதன் அர்த்தத்தையும் ‘எந்திரன்’ மாற்றிக் கட்டமைத்து விட்டது.

தயாரிப்பாளரும், இயக்குநரும் வெறும் வசூல் கணக்கை மட்டும் போட்டு ‘எந்திர’னை வெற்றிப் படம் என மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அவர்கள் போட்ட கணக்கு 10x100=100x10 என்ற சமன்பாட்டுக் கணக்கு. இந்தச் சமன்பாட்டுக் கணக்கு எளிமையான வியாபாரக் கணக்கு மட்டும்தான். சென்னையில் 10 தியேட்டர்களில் வெளியிட்டு 150 நாட்களில் வசூலிக்கும் தொகையை, ‘எந்திரன்’ 100 தியேட்டர்களில் 15 நாட்கள் மட்டுமே ஓடி வசூலித்துத் தந்தது. சென்னையில் இருக்கும் எல்லாத் தியேட்டர்களிலும் ‘எந்திரன்’ மட்டுமே பார்க்கக் கிடைக்கிறது என்றாகிறபோது பார்வையாளர்களின் ஒரே தேர்வு அந்தப் படம்தான் என்று ஆக்கப்பட்டது. மிகக் குறைவான நாட்களில் அதிகப்படியான வசூல் என்பது லாப வேட்டை வியாபாரம் வரவேற்கும் ஒன்று. இப்படி ஆக்கப்பட்டது சாதாரண நிகழ்வு அல்ல. தமிழ்ச் சினிமாவின் பொருளாதாரம் மற்றும் திரைப் பண்பாட்டில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு. அதனைச் சாத்தியமாக்கியது ‘எந்திரன்’ படத்தைத் தனது முதல் தயாரிப்பாக முன்வைத்த சன் பிக்சர்ஸ் என்னும் பன்னாட்டு வணிகக் குழுமத்தின் சாதனை. அந்தச் சாதனையின் தொடர்ச்சியாகவே கமல்ஹாசன் நடித்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸின் தயாரிப்பான ‘மன்மதன் அம்பு’வும் வெற்றிப்படமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் கமல்ஹாஸனின் ரசிகனுக்கும் விமரிசகர்களுக்கும் அப்படம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டாத படம் என்பதே யதார்த்தம்.

இதுவரை தனது அபிமான நடிகனின் படவெற்றியைத் தனது வெற்றியாகக் கருதிக் கொண்டாடிய ரசிகனிடமிருந்து ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை வியாபாரம் சார்ந்த நிகழ்வாக மாற்றிக் கட்ட மைத்துள்ள இந்த மாற்றம் ஒருவிதத்தில் வரவேற்க வேண்டிய ஒன்று. ரசிகனிடமிருந்து சினிமா விடுதலையானது போலவே, சினிமா நடிகனிடமிருந்து ரசிகனும் விடுதலை அடையத் தொடங்கியிருக்கிறான். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய உடன் நிகழ்வாக நடக்கும் என்பதுதான் இயங்கியல். இதைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் சூப்பர் ஸ்டார் கனவிலும், எதிர்கால முதல்வர் கனவிலும் மிதக்கும் நடிகர்கள் அரசியல் வெளியில் அலையும் பிம்பங்களாக அலைந்து கொண்டிருப்பதுதான் நடக்கும். நம் காலத்தில் நடிகர் விஜய் அவ்வாறுதான் அலைந்து கொண்டிருக்கிறார். விஜய்யின் அலைவுகளை விவரிப்பதற்கு முன்னால் மாற்றியமைக்கப்படும் திரைப்படப் பொருளாதாரத்தின் செயல்பாடுகள் வெறும் பொருளாதார மாற்றங்கள் மட்டுமல்ல என்பதைக் கொஞ்சம் விளங்கிக் கொள்ளலாம். அதன் மூலம் அரசியல் கலாச்சார நகர்வுகள் எவ்வாறு ஏற்படும் என்பதையும் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படலாம்.

பங்குச் சந்தையின் விதிகளோடு நுழைந்த பன்னாட்டு மூலதனக் குழுமங்களின் வருகையை இந்தியத் திரைப்படத் துறை 2000-க்குப் பின் ஏற்றுக்கொண்டு அகநிலையிலும் புற நிலையிலும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அம்மாற்றம் பிரமிட், சாய்மீரா போன்ற நிறுவனங்களின் மூலம் தமிழிலும் உணரப்பட்டது என்றாலும் முழுமையான மாற்றத்தை உண்டாக்கிய வணிகக் குழுமம் சன் பிக்சர்ஸ்தான். 2008 இல் ‘காதலில் விழுந்தேன்’, ‘தெனாவட்டு’, ‘திண்டுக்கல் சாரதி’ போன்ற குறைந்த பட்ஜெட் படங்களை வாங்கி விநியோகம் செய்யும் நிறுவனமாக அறிமுகமானது. அம்மூன்று படங்களையும் சன் வணிகக் குழுமத்தின் அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் தொடர்ச்சியான-திணறடிக்கும் விளம்பரங்களின் மூலம் லாபம் தந்த பொருட்களாக ஆக்கிக் காட்டின. 2009 இல் சன் பிக்சர்ஸ் ‘படிக்காதவன்’, ‘தீ’,‘ அயன்’, ‘மாசிலாமணி’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘கண்டேன் காதலை’, ‘வேட்டைக்காரன்’ என ஏழு படங்களை வாங்கி விநியோகம் செய்தது. ‘படிக்காதவ’னில் தனுஷும், ‘அய’னில் சூர்யாவும், ‘வேட்டைக்கார’னில் விஜய்யும் நாயகப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

2010 -இல் ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘சுறா’, ‘தில்லாலங்கடி’, ‘சிங்கம்’, ‘எந்திரன்’ என ஐந்து படங்களை வெளியிட்டது. ‘எந்திரன்’ மட்டும் சன் பிக்சர்ஸின் தயாரிப்பு. 2011 இல் இதுவரை ‘ஆடுகளம்’, ‘மாப்பிள்ளை’ என இதுவரை இரண்டு படங்களை வாங்கி விநியோகம் செய்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் படங்களாக வந்துள்ள 17 படங்களிலும் ஒருசில பொதுத்தன்மைகள் இருப்பதை சினிமாவின் ரசிகர்களும் விமரிசகர்களும் உணர்ந்திருக்கக் கூடும்.

பொதுத்தன்மைகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாக இருப்பது, திரைப்படத்தை முழுமையான கேளிக்கைச் சாதனமாகக் கணித்து அதிரடியான விளம்பரங்களின் மூலம் விற்றுத்தீர்க்கும் வியாபாரப் பார்வை. இந்தப் பார்வையின் விளைவாகத் திரைப்படம் என்பது ஒரு இயக்குநரின் படைப்பு என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, விநியோகஸ்தரின் சரக்கு என்பதாகத் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுவதைத் தொலைக்காட்சி விளம்பரங்களில் ஒவ்வொரு நாளும் நூறு தடவைக்கும் குறையாமல் காண்கிறோம். பத்திரிகை விளம்பரங்களிலும் அவ்வாறே முன்வைக்கப்படுகிறது. இந்த முன்வைத்தலில் இருந்து இதுவரை தப்பிய படமாக வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ மட்டுமே மந்தையிலிருந்து தப்பிய ஆடாக இருக்கிறது (அந்தப் படத்திற்குப் பொருத்தமாகிற, கூண்டிலிருந்து தப்பிய சேவலாக இருக்கிறது எனச் சொல்லலாம்).

சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இப்பதினேழு படங்களில் முக்கால்வாசிப் படங்கள் அவசரப் பசிக்குக் கிடைத்த நொறுக்குத்தீனி போன்ற மசாலாப் படங்கள் . அவை அதிக லாபம் ஈட்டியதின் பின்னணியில் சன் தொலைக்காட்சிக் குழுமங்களின் விளம்பர உத்திகள் மட்டுமல்லாமல், தமிழகமெங்கும் இருக்கும் திரையரங்குகளை ஒப்பந்த அடிப்படையில் கையகப்படுத்திக் கொண்ட வியாபார உத்திகளும் இருப்பதாகத் திரைப்படத்துறை சார்ந்த பலரும் சொல்கின்றனர். அப்படிச் சொல்கிறவர்களின் குரல்களில் சில இந்தப் போக்கை வரவேற்பதையும் காண முடிகிறது. சில குரல்கள் அச்சுறுத்தும் போக்கு எனச் சுட்டிக் காட்டுவதையும் கேட்க முடிகிறது.

இப்போக்கு திரைப்படத் துறைக்கு நன்மை பயக்கக்கூடியதா? தீமையை மட்டுமே உண்டாக்கக் கூடியதா என்பதை அத்துறைக்கு வெளியிலிருக்கும் ஒருவரால் கணித்துச் சொல்வது இயலாத காரியம். ஆனால் இந்தப் போக்கு அதில் ஈடுபட்டுள்ள சன் பிக்சர்ஸ் என்னும் வணிகக் குழுமத்திற்கு ஏராளமான லாபத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. இல்லையென்றால் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனைப் பின்பற்றி அவரின் உறவினர்களான உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்னும் திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தையும், இன்னொரு உறவினரான துரை தயாநிதி கிளவுட் நைன் மூவிஸ் என்னும் திரைப்பட விநியோகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்க மாட்டார்கள் அல்லவா? அவர்களோடு இணைந்து வேலை செய்ய கல்பாத்தி சகோதரர்கள் போன்ற நிறுவனங்களும் தயாராகி இருக்காது அல்லவா?

தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையோடு நெருங்கிய உறவுடைய நபர்களால் நிர்வகிக்கப்படும் இவ்வணிகக் குழுமங்களின் வியாபார மற்றும் விளம்பர உத்திகளால் திணறும் அல்லது வளம்பெறும் தமிழ்த் திரைப்படத்துறை எத்தகைய போக்கைச் சந்திக்க உள்ளது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் அக்குழுமங்களின் வலைப்பின்னல் வியாபாரத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள நாயகப் பிம்பச் சிதைவை வரவேற்கத்தக்க விளைவு என்றே சொல்லத் தோன்றுகிறது. ரஜினியின் ‘எந்திரன்’ படமே அந்த விளைவின் முதன்மையான உதாரணம்.

‘எந்திரன்’ படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் மற்றும் பொதுமனித பிம்பத்தைச் சிதைத்துக் கட்டமைத்துள்ளதோடு, திரைப்படத் துறையிலிருந்து உருவாக நினைக்கும் அரசியல்வாதிகளின் ஆசைகளுக்கும் எதிரான போக்கை உருவாக்கி விட்டது. ஐம்பது நாட்களுக்குள் திரையரங்குகளை விட்டு எடுக்கப்பட்ட ‘எந்திரன்’ திரைப்படத்தை அதன் தயாரிப்பாளர்களோடும் விநியோகஸ்தர்களோடும் சேர்ந்து வியாபாரக் கணக்கை மட்டும் போட்டு வெற்றிப்படம் என ஒத்துக் கொண்டதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பிம்பத்தைச் சிதைத்துக்கொண்டு, தான் ஒரு நடிகன் மட்டுமே என்பதை ஒத்துக் கொண்டு ஒதுங்கத் தொடங்கியுள்ளார். ஒவ்வொரு விழாவின் போதும் ஆட்சி அதிகாரத்தின் நெருங்கிய நிழலில் நின்று அதுவரை உருவாக்கி வந்த பிம்ப அடுக்குகளையெல்லாம் ஒவ்வொன்றாகக் கழற்றிப் போட்டுவிட்ட ரஜினிகாந்த் இனியொரு முறை மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகப் பாவனை செய்தால் பொதுமக்கள் கேலியாகச் சிரிப்பார்கள் என்பதை விட, அவரது தீவிர ரசிகனே உதட்டைப் பிதுக்கிவிட்டு ஒதுங்கிப் போய்விடவே செய்வான். அரசியல் ஆசையற்ற கமல்ஹாசனுக்கும், கமல்ஹாசனின் ரசிகர்களுக்கும் இத்தகைய சிக்கல்கள் நேர சாத்தியமில்லை.

தனது வசனத்தில் உருவான ‘பராசக்தி’ தொடங்கிப் பல்வேறு படங்களின் வழியாகத் தமிழக மக்களுக்குத் தேவையான கருத்துக்களையும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் முன்மொழிந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் வாரிசுகள் நடத்தும் நிறுவனங்கள், திராவிட இயக்கத்தின் கலை இலக்கியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் படங்களைத் தயாரிக்காமலும், தீவிரமான சமூக யதார்த்தப் படங்களை எடுப்பவர்களுக்கு உதவாமலும், வெறும் லாபத்தையும் கேளிக்கையையும் மட்டுமே முதன்மையாகக் கருதும் நிலையை மேற்கொள்வது எத்தகைய நியாயம் எனக் கேள்விகள் கேட்கக் கூடும். அவ்வாறு கேள்வி கேட்கும் நபர்களை நோக்கி ‘அரசியல் வேறு; வியாபாரம் வேறு’ என வெளிப் படையான பதில்களைக் கூறினாலும், மறைமுகமாக ஒரு அரசியல் நோக்கம் இருப்பதை இங்கே சுட்டிக் காட்டத் தோன்றுகிறது. அதை அவர்கள் திட்டமிட்டுச் செய்கிறார்களா? தன்னிகழ்வாக நடக்கிறதா எனக் கேட்டால் தன்னிகழ்வாக எதுவும் நடப்பதில்லை என்றே இயங்கியல் பதில் சொல்லும்.

அவர்களது திரைப்பட வியாபார வலைப்பின்னல் வழியாக நாங்கள், “திரைப்படங்கள் வழியாகக் கட்டியெழுப்பப்படும் பிம்பங்களைச் சிதைக்கும் மாபெரும் பணியில் இருக்கிறோம்” என்று பதில் சொன்னால் அதை மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது. ‘எங்கள் செயல்பாடுகளில் லாபம் ஈட்டுவது என்ற வணிக நோக்கம் மட்டுமே இருக்கிறது என்று கருதுபவர்கள், அதன் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கத்தை ஆய்வு செய்து அறியும் ஆற்றல் அற்றவர்கள்’ என்று அவர்கள் சொல்லவும் கூடும்.

தொடர்ந்து நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களின் மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படப் பிம்பத்தின் வழியாக உருவான எம்.ஜி.ராமச்சந்திரன்தான், விஜயகாந்த் என்னும் இன்னொரு திரைப்பட பிம்பத்திற்கு முன்மாதிரியாக ஆகியிருக்கிறார். சட்டத்தை விளக்கி, அரசைக் காக்கும் தனிநபராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் விஜயகாந்தின் அரசியல் பிம்பம் கிராமம் சார்ந்த அப்பாவிகளிடம் மட்டுமே எடுபடும் பிம்பம் என்பதால் அதை அதன் வெளியில் அலைய விடுவதைத் தவிர வேறு வழியில்லை. எம்.ஜி.ராமச்சந்திரனைப் போலவே பல படங்களை நூறு நாள் படங்களாக வலம்வர வைத்த ரஜினிகாந்தின் அரசியல் பிம்பமும் பொதுமனித பிம்பமும் ஒரேயொரு ‘எந்திரன்’ படத்தின் மூலம் சிதைக்க முடிந்திருக்கிறது. ஆனால் அவரது நடிப்புப் பாணியையும் நடனப் பாணியையும் தனதாக்கிக் கொண்டுள்ள நடிகர் விஜய் மட்டும் இந்த நிலையை ஏற்க மறுத்து முரண்பட்டு நிற்கிறார். அம்முரண்பாட்டின் நோக்கம் வெறும் திரைப்பட வெற்றி சார்ந்த முரண்பாடு மட்டுமல்ல என்பதை அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் புலப்படுத்தவே செய்கின்றன.

இந்த வருடப் பொங்கலுக்கு வெளியான படங்களில் அதிகமான தடைகளைத் தாண்டி வெளியான படம் நடிகர் விஜய் நடித்த ‘காவலன்’. படம் பொங்கலுக்கு வருமா? வராதா? என்ற பலவிதமான ஊகங்களுக்கும் சந்தேகங்களுக்கும் பிறகு ஒரு நாள் தாமதமாகத் திரையரங்குகளுக்கு வந்து விட்டது. திரைக்கு வந்த ‘காவலன்’ ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் படத்தின் நாயகனான விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் தொடர்ந்து அச்சு ஊடகங்களுக்கான செய்தி மையமாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பத்திரிகை படிப்பவர்கள் அறிந்திருக்கக் கூடும். அதன் உச்சகட்டமாக ‘தினமணி’ நெல்லைப் பதிப்பில் (18-02-2011)

மீனவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்குகிறார் நடிகர் விஜய்.

நாகையில் பிப்ரவரி 22-ல் கண்டனப் பொதுக்கூட்டம்.

எனத் தலைப்பிட்ட செய்தி வெளியாகியிருந்தது. அதையும் வாசித்தேன். அடுத்த நாள் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் மூன்றாவது முறையாக அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. இதையும் வாசித்தேன். வெவ்வேறு தினசரிகளை வாசிப்பவர்கள் வெவ்வேறு தலைப்புகளில் இந்தச் செய்திகளை வாசித்திருக்கக் கூடும்.

பொங்கலுக்கு ‘காவலன்’ படம் வருவதற்குத் தடைகள் இருப்பதாகச் சொல்லப்பட்ட அந்த நேரத்தில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதாவை விஜய் சந்திக்கப் போவதாகவும், அவரது தந்தையுடன் சேர்ந்து போயஸ் தோட்டம் போய் வந்ததாகவும் செய்திகள் வந்தன. அதன் பிறகும் கூடத் தொடர்ந்து அஇஅதிமுகவுடன் விஜய் நெருக்கமாகிறார் என்பதாகச் செய்திகள் பரப்பப்பட்டன. ‘காவலன’ படத்தின் பரப்பல் நேர்காணல்கள் மற்றும் செய்திகளில் கூட ‘காவலன்’ படத்தைப் பற்றிப் பேசுவதை விடவும் படத்தை வெளியிட முடியாமல் தடுக்கும் ரகசிய சக்திகள் மற்றும் சதிகள் பற்றியே அதிகம் பேசினார் விஜய். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ‘காவலன்’ படத்தோடு நேரடியாகத் தயாரிப்பு மற்றும் இயக்கம் சார்ந்த தொடர்புகளில் இல்லாதபோதும், அப்படத்தை வெளியிடுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தனது மகனின் எதிர்கால அரசியலுக்குப் போடப்படும் தடையாகவே முன்நிறுத்த முயன்றார். தன் மகனின் எதிர்கால லட்சியங்களை வடிவமைத்துத் தரும் -நல் வழிகாட்டும்-தந்தையின் கடமையாகக் கூட அவர் அதைக் கருதியிருக்கலாம்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்ற திருக்குறளின் பொழிப்புரையாக இருக்க முயலும் எஸ்.ஏ. சந்திரசேகரனின் முயற்சிகள் இப்போதுதான் வெளிப்படுகின்றன என்றில்லை.‘கில்லி’, ‘போக்கிரி’, ‘திருப்பாச்சி’ போன்ற சூப்பர்ஹிட் படங்கள் வெளியான காலத்திலேயே தொடங்கிவிட்டன. ‘சிவகாசி’ படம் வந்தபோது சிவகாசிக்கருகில் இருந்த கிராமம் ஒன்றில் தீபாவளி கொண்டாடியது, இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக திருநெல்வேலியில் நடந்த உண்ணாவிரதம் போன்றன திரைப்படங்களுக்கு வெளியே நடக்கும் புற வெளிப்பாடுகள் என்றால், ‘அழகிய தமிழ்மகன்’, ‘வேட்டைக்காரன்’ எனப் பெயர் சூட்டுவதும், வில்லன்களை நோக்கிப் பேசும் பஞ்ச் வசனங்களை சமகால அரசியல் நிகழ்வுகளோடு பொருந்தும் விதமான வசனங்களாக வைத்ததும், பாடல் வரிகளில் தமிழ்நாட்டுப் புயல், மன்மதன் எனவும் எழுதிக் காட்டிப் பிம்பங்களை அடுக்கியதும் படத்திற்குள் நிகழும் அக வெளிப்பாடுகளின் சில உதாரணங்கள்.

‘காவலன்’ படத்திற்குப் பிறகான செய்திகள் அவரை அஇஅதிமுகவின் பக்கம் சாய்கிறார் என்பதாகக் காட்டுவது போலவே, வெவ்வேறு திரைப்பட நிறுவனங்கள் தயாரித்த ‘வேட்டைக்காரன்’ மற்றும் ‘சுறா’ படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி விநியோகம் செய்தபோதும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த ‘குருவி’ படம் வெளிவந்தபோதும் நடிகர் விஜய், திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேருவார் என்றும், திமுகவின் பிரசாரத்திற்குப் பயன்படப் போகிறார் என்பதாகவும் முன்நிறுத்தப்பட்டது. அதே காலகட்டத்தில் ஒருமுறை டெல்லி சென்று இளைஞர் காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரசில் சேர்வதற்கான முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாகப் பரப்பப்பட்ட செய்திகளின் போதெல்லாம் அவரது திரைப்படம் ஒன்று வெளிவருவதும், சில படங்கள் வசூலில் வெற்றி அடைவதும், அதற்குச் சம அளவில் வசூலில் தோல்வி அடைந்ததும் நடந்துகொண்டே இருந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ரஜினிகாந்தின் மோசமான தோல்விப் படம் ‘பாபா’ வெளியான அதே ஆண்டில்தான் இளைய தளபதி எனப் பட்டம் சூட்டப்பட்ட விஜய்யின் ‘கில்லி’ படம் வெளியானது. இயக்குநர் தரணியின் மசாலாக் கலவை சரியாகக் கலக்கப்பட்ட அப்படம்தான் நடிகர் விஜய்யின் சூப்பர் ஸ்டார் கனவை உசுப்பிவிட்ட படம். அதற்கு முன்பே நடிகர் ரஜினியின் நடிப்புப் பாணியைத் தனது நடிப்புப் பாணியாக மாற்றிக் கொண்டு வந்த விஜய் ஒவ்வொரு படத்தின்போதும் அரசியல் குரலையும் கொடுக்க ஆரம்பித்தார். மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரல் ‘காவலன்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்களை அடுத்துக் கொஞ்சம் வன்மையாக ஒலிப்பதுபோலத் தோற்றமளிக்கிறது. அப்படித் தோன்றுவதற்கு அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், ‘அழகிய தமிழ்மகன்’, ‘வேட்டைக்காரன்’, ‘குருவி‘, ‘வில்லு’ எனத் தொடர்ந்து வசூல் தோல்விப் படங்களைத் தந்துள்ள விஜய்யின் குரல் திரைப்படத் துறை சார்ந்தும், அரசியல் தளம் சார்ந்தும் முக்கியமான தாக்கத்தை உண்டாக்கி விடும் எனச் சொல்ல முடியாது.

தமிழகத்தின் நவீனமான திரையரங்குகளையெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் வலைப்பின்னலாக ஆக்கிக் கொண்டதோடு, வகைவகையான திடீர்ப் பண்டங்களை விற்பனைக்களத்தில் இறக்கும் வியாபார நுட்பங்களுடன் புதிய புதிய இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கின்றன தமிழக முதல்வரின் பேரன்கள் நடத்தும் திரைப்பட நிறுவனங்கள். படங்களின் வழியாகவும், அவைகளின் உதிரிப்பாகங்களான காமெடிக் காட்சிகள், பாடல்கள், திரைத் துணுக்குகள், திரைவரிசைகள் மூலம் தங்களது தொலைக்காட்சி அலை வரிசைகளின் சர்வதேசச் சந்தையையும் வளர்த்துக்கொள்ளும் நுட்பங்கள் தெரிந்தவர்கள் அந்நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள். உலகமயச் சூழலில் நவீன வியாபாரத்தை எவ்வாறு நடத்த வேண்டும் எனக் கண்டறிந்துள்ள அந்நிறுவனங்களுக்கு, மனிதர்களின் மூர்க்கக் குணத்தையும் மென் உணர்வுகளையும் சேவல் சண்டையின் பின்னணியில் சொல்லும் ‘ஆடுகள’த்திற்கும், வேலைக்காக வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன்னால் குவார்ட்டர் கட்டிங் அடித்துவிட்டுச் செல்ல ஆளாய்ப் பறக்கும் ‘வ’ படத்திற்கும் வேறுபாடுகள் கிடையாது. வண்ணநிலவனின் ஒரு கவிதைத் தலைப்பு போல எல்லாம் விலைகுறித்தனவே. ஆம், திரைப்படம் வெறும் வியாபாரச் சரக்கு மட்டுமே.

இந்த நெருக்கடி திரைப்படத் துறைக்கு ஆபத்தானது எனவும், அதிலிருந்து தப்பிப்பதற்கான வழியைத் தேட வேண்டும் எனவும் ஒருவர் நினைத்தால் அதற்கான முயற்சியைத் திரைப்படத் துறைக்குள்ளேயே தேடுவது மட்டுமே புத்திசாலித்தனமானது. அதைக் கைவிட்டு விட்டு ரசிகர்களைப் பொய்யான உணர்வுகளின் அடிப்படையில் ஒன்றிணைத்துத் திசை திருப்பும் நிகழ்வுகளின் பால் ஈர்ப்பது நீண்டகாலப் பலன்களைத் தராது. பாதிக்கப்படும் நாகப்பட்டினம் மீனவர்களுக்காகக் கண்டனக் கூட்டங்கள் நடத்துவதும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும் திரைப்படத்தின் வழியாக உருவாக்கப்பட்ட பிம்பத்தைப் பயன்படுத்தித் தற்காலிக உணர்வுகளைத் திசை திருப்பும் நிகழ்வுகளாகவே அமையும். தனது திரைப்பட வெற்றிகளுக்காக இங்குமங்குமாக அலையும் நடிகர் விஜய்யைப் போலவே அவரை நம்பி அரசியல் களத்தில் இறங்கும் ரசிகர்களும் அதன் புதிர்ப் பாதைகளில் தடம் மாறிப் போகும் வாய்ப்புகளே அதிகம்.

-
அ.ராமசாமி

Courtesy:
உயிர்மை.காம்

சனி, மே 21, 2011

கவிழக் காரணம் கருணாநிதியே! -ப.திருமாவேலன்

ருணாநிதி கவிழப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். தலை குப்புறக் கவிழ்வார் என்பதை ஜெயலலிதா உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை!

எதிர்க் கட்சி என்ற பிரதான பாத்திரத்தைக்கூட இழந்து, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது தி.மு.க. எந்த எதிர் பார்ப்புகளும் அற்ற லட்சக்கணக்கான தொண்டர்களையும்... மாநிலத்தை ஆளும் மகத்தான பொறுப்பினையும் அண்ணா தூக்கிக் கொடுத்துவிட்டுப் போனார். மே 13-ம் தேதி தமிழக சட்டசபைக்கான முடிவுகள் வரும்போது, அறிவாலயத்து வாசலில் நின்ற அண்ணா, வெறும் கட்டாந்தரையைத்தான் பார்க்க முடிந்தது. ராணுவத்தின் துப்பாக்கி மிரட்டல்களுக்கு மத்தியில் - எமர்ஜென்ஸி நேரத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட கூடினான் தொண்டன். ஆனால், மே 13 அவனே தலைமையையும் தலைமைக் கழகத்தையும் புறக்கணித்தான். அறிவாலய வளாகத்துக்கு உள்ளேயே நின்று சிலர், கருணாநிதியின் மகள் கனிமொழியையும் ஆ.ராசாவையும் விமர்சித்தனர்! அறிவாலயத்துக்கே வர முடியாமல் கோபாலபுரத்தில் முடங்கிப்போய் இருந்தார் கருணாநிதி. ''எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்!'' - இந்த ஒற்றை வரியை மட்டுமே கருணாநிதியால் உச்சரிக்க முடிந்தது. இந்தத் தோல்வியை அவர் முன் கூட்டியே உணர்ந்து இருப்பார். உணராதவராக இருந்தால், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி இருக்கும். இளமைக் காலம் முதலே கருணாநிதியைப் பார்த்து வரும் பேராசிரியர் அன்பழகன் வந்தார், ''என்ன பேராசிரியரே! சந்தேகமா இருக்குன்னு நான் சொன்னேன்... பார்த்தீங்கள்ல... அதுதான் நடந்திருக்கு!'' என்று கருணாநிதி சொன்னார். இத்தனை ஆண்டுகளாகப் பேசாத அன்பழகன், அன்றும் பேசவில்லை. தொழிற்சங்கத் தலைவர் செ.குப்புசாமி உள்பட, பலரும் வாய்விட்டுக் கதறி அழுதனர். கருணாநிதியும் மனசுக்குள் அழுதிருப்பார். இந்தத் தோல்வி முழுக்க முழுக்க அவரால்தான் வந்தது!

எல்லா மனிதனுக்கும் முதலில் இருக்க வேண்டியது குற்ற உணர்ச்சி! தான் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தேவை இல்லை. தன் மனதளவிலாவது ஒப்புக்கொள்ள வேண்டுவதுதான் குற்ற உணர்ச்சி. கடந்த ஐந்து ஆண்டுகளாக கருணாநிதி, தவறுகளைப் பகிரங்கமாகச் செய்தார்.

அதைக் குற்ற உணர்வு இல்லாமல் நியாயப்படுத்தினார். துளி வருத்தமும் அவரது வார்த்தைகளில் இல்லை. விமர்சனங்கள் குறித்துக் கவலையே படவில்லை. மன்னராட்சிகளில்கூட லேசான கிண்டலால் உணர்த்த 'கோமாளிகள்’ இருந்தார்கள். ஆனால், இன்று மந்திரிகளே... தந்திரிகளாக மாறி கருணாநிதியின் ஜாடிக்கு ஏற்ற மூடிகளாக உருமாறிப்போனார்கள். இவர்கள் அனைவருமே வெளி யதார்த்தங்களை மறைத்து, திரை மறைவில் தி.மு.க-வைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். கட்சியில், ஆட்சியில், கருணாநிதி வீட்டில் நடந்தது எதுவுமே தொண்டனுக்குத் தெரியாது. 'எனக்கு எதுவும் தெரியாது’ என்று கருணாநிதியும் சொல்ல முடியாது.

விலைவாசி, மின்சாரம் இரண்டால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு எழுதி யாருக்கும் தெரிய வேண்டிய நிலை இல்லை. ஆனால், இவை இரண்டையும் ஒரு பிரச்னையாகவே கருணாநிதி நினைக்கவில்லை என்பதுதான் வேதனைக்கு உரியது. கோடிகளைக் கொட்டி கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதற்காக... ஐந்து நாள் கூத்துக்காக... 1008 கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திய கருணாநிதி, 'விலைவாசி இப்படி அநியாயமாகப் போய்க்கொண்டு இருக்கிறதே... என்ன செய்யலாம்?’ என்று விவாதிக்கவே இல்லை. மின் தட்டுப்பாடு குறித்து, ஒரே ஒரு முறை விவாதித்ததாக நினைவு. ஒரு முதலமைச்சர் தீர்க்க வேண்டிய பிரச்னையாக இவை இரண்டையும் கருணாநிதி நினைக்கவே இல்லை. கேட்டால், ஆந்திரா, கர்நாடகா விலைவாசியை வாசிப்பார். மேற்கு வங்கத்தில் மின்சாரம் இல்லை, எல்லோருமே இருட்டில்தான் இருக்கிறார்கள் என்பார். விலைவாசியைக் குறைக்க முடியவில்லையே, தடை இல்லாமல் மின்சாரம் தர முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது குரலில் இருந்து வெளிப்படவே இல்லை. 'இதெல்லாம் என் வேலை இல்லை’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, பாராட்டு விழாக்களில் திளைத்தார்.

கருணாநிதி, முதல்வர். அவரது மகன் ஸ்டாலின், துணை முதல்வர். மூத்த மகன் அழகிரி, மத்திய அமைச்சர். பேரன் தயாநிதி மாறனும் மத்திய அமைச்சர். மகள் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர். பேத்தி கயல்விழி, கட்சிப் பொறுப்பில் இருக்கிறார். பேத்தி எழிலரசி, செம்மொழி மாநாட்டில் வீணை வாசிக்கிறார். திரைத் துறையில் சன் டி.வி-யின் சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து, அழகிரி மகனும் ஸ்டாலின் மகனும் வந்தார்கள். அக்காள் மகன் அமிர்தம் கலைஞர் டி.வி. மூலமாக வருகிறார். தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர்களாக மகன் தமிழரசுவும், மகள் செல்வியும் என கருணாநிதியின் குடும்பம் அரசியலில், தொழில் துறையில், சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் கதையை எத்தனையோ முறை எழுதி ஆகிவிட்டது.

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி குடும்பத்தினர் மேடையில் அமர்ந்தபடி பார்க்க... தமிழறிஞர்கள் உட்கார இடம் இல்லாமல் நின்றபடி தவிக்கும் அளவுக்குக் குடும்ப ஆதிக்கம் தூள் கிளப்பியது. இது எங்கே வந்து நிற்கிறது தெரியுமா... கருணாநிதியின் அக்கா மகன் சொர்ணத்தின் பேத்தி மதுரம், 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதைப் பாராட்டிப் புகழும் படம் 'முரசொலி’யில் கால் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முந்தைய நாள் இது. அதாவது, குடும்பத்தின் குதூகலத்துக்காகவே கருணாநிதி இயங்கலாம். நல்ல குடும்பத் தலைவரின் பொறுப்பும் அதுதான். ஆனால் கட்சியை, ஆட்சியை, முரசொலியையும் பலியிடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி கருணாநிதிக்கு இல்லை. குடும்ப ஆதிக்கம் குறித்துக் குறை சொல்லும்போது எல்லாம், 'என்ன செய்ய... எனக்குக் குடும்பம் இருக்கிறதே!’ என்றார் கருணாநிதி. 'கத்தி இருக்கிறது வெட்டுகிறேன், துப்பாக்கி இருக்கிறது சுடுவேன்’ என்று யாராவது சொன்னால் ஏற்க முடியுமா?

தனக்கு இயற்கையாக அமைந்த வாதத் திறமையையும் தமிழ் வளத்தையும், சுயநலனுக்காக மட்டுமே என்று சுருக்கினார். இது தொடர்பான கருணாநிதியின் வாக்குமூலங்கள்... புகைப்படங்கள்... விழாக்கள் அனைத்துமே தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தன.

இந்தச் சூழ்நிலையில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு பூதாகாரமாகக் கிளம்பியது. 'ஆ.ராசா குற்றமற்றவர்... அவர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை’ என்ற கருணாநிதியே... அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அவரை நியாயப்படுத்தி தீர்மானம் போட்டார். காமன் வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடியை, 'போஃபர்ஸ் கறை படிந்த காங்கிரஸ்’கூட கட்சியைவிட்டு நீக்கியது. ஆனால், ராசாவை கருணாநிதி நீக்கவும் இல்லை. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியைப் பறிக்கவும் இல்லை. அரசியல் புரோக்கர் நீரா ராடியாவுடன், தனது துணைவி ராஜாத்தியும் மகள் கனிமொழியும் பேசியது குறித்தும் கருணாநிதி கவலைப்படவில்லை. அவரது பெயரால் உருவாக்கப்பட்ட டி.வி-யே ஸ்பெக்ட்ரம் ஊழலின் லஞ்சப் பணத்தால் வந்தது என்று சி.பி.ஐ. சொன்னபோதும் வாய் திறக்கவில்லை. மனைவி தயாளு அம்மாளை அறிவாலயத்துக்கு உள்ளேயே வந்து சி.பி.ஐ. விசாரிக்கிறது. மகள் கனிமொழி, 'கஸ்டடி குற்றவாளி’யாக நித்தமும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நின்றுகொண்டு இருக்கிறார்.

இது எதுபற்றியும் கருணாநிதிக்குக் குற்ற உணர்ச்சி வரவே இல்லை. 'சி.பி.ஐ. ரெய்டு நடத்துகிறதே!’ என்று கேட்டால், 'இது வழக்கமானதுதானே!’ என்கிறார் கருணாநிதி. தமிழ்நாட்டில் எல்லார் வீட்டுக்கும் பேப்பர் பையன் வந்து போவதுபோல், சி.பி.ஐ. வந்து போகிறதா என்ன? அறிவாலயத்தின் மேல் தளத்தில் சி.பி.ஐ. இருக்க... தரைத் தளத்தில் கருணாநிதி - காங்கிரஸுடன் மன சஞ்சலம் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்க முடியுமானால், அது அதிர்ச்சிக்கு உரியது!

இவை அனைத்துக்கும் மேலாக, ஈழத் தமிழர் பிரச்னை! 2008 நவம்பர் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தி, தங்கள் கட்சி எம்.பி-க்கள் பதவி விலகப்போகிறார்கள் என்று அறிவித்தது முதல்... இன்றைக்கு வரை கருணாநிதி நித்தமும் நிகழ்த்திக் காட்டிய நாடகங்களின் பின்னணியில் லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியானதுதான் மிச்சம். தன்னுடைய அரசியல் அபிலாஷைகளுக்காக... தனக்கு 'தமிழினத் தலைவர்’ என்ற அங்கீகாரம் எதனால் கிடைத்ததோ, அந்தக் கொள்கையையே காவு கொடுக்க கருணாநிதி தயாரானார். கொத்துக் கொத்தாகச் செத்தது குறைந்து... தனித் தனியாகப் பலரும் மரணித்தபோது, 'மழைவிட்டாலும் தூவானம் விடாது அல்லவா’ என்று கருணாநிதி சொன்னதைப்போன்ற கல் நெஞ்ச வாக்குமூலம் உலகச் சர்வாதிகாரிகளின் வரிசையில் பொறிக்கத்தக்கது.

போர்க் குற்றவாளியாக ஐ.நா. இன்று சொல்லும் ராஜபக்ஷேவைக் கோபப்படுத்துவது மாதிரி எதுவும் பேசக் கூடாது என்று கேட்டுக்கொண்டார் கருணாநிதி. அரசியல் அதிகாரப் பதவி ஒரு மனிதரை இப்படி எல்லாமா மாற்றிவிடும் என்று சந்தேகப்படத்தக்க வார்த்தைகள் இவை.

இவை அனைத்தும் சேர்ந்துதான் தமிழக வாக்காளனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது.

'உதவாது இனி தாமதம்’ என்று வாக்கு இயந்திரத்தில் அழுந்தக் குத்தி இருக்கிறார்கள்.

தனி நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, 'வேட்டுக்களால் தீர்மானிக்க முடியாததை, ஓட்டுக்களால் செய்ய முடியும்’ என்றார் அண்ணா. பாதை தவறிய தம்பியைப் பதம் பார்த்து இருக்கிறது ஓட்டு.

பொதுவாகவே, வீழ்ந்துபட்டவர்களை விமர்சிப்பது தவறானதுதான். ஆனால், வீழ்த்தப்பட்ட காரணங்களை உணர்ந்து சொல்வது தேவையானது. இது கருணாநிதிக்காக மட்டும் அல்ல... ஜெயலலிதாவுக்கும் சேர்த்து எழுதப்பட்ட கட்டுரை!

-ப.திருமாவேலன்


நன்றி: ஆனந்தவிகடன் 25-5-2011

உலகமயமாதலுக்கு எதிராக போராடுபவர்கள் எல்லோரும் பினாயக்கின் நிலையை பகிர்பவர்களே!

கார்ப்பரேட்டுகளுக்கு சார்பான உலகமயமாதலுக்கு எதிராக போராடுபவர்கள் எல்லோரும் பினாயக்கின் நிலையை பகிர்பவர்களே.

அனசுயா சென், இவர் பினாயக் சென்னின் தாய். தனது செல்ல மகன் ரானா, பினாயக் சென்னாக வளர்ந்தது குறித்து சந்திரசேகர் பட்டாச்சார்ஜியிடம் பகிர்ந்து கொண்ட நேர்காணலிலிருந்து....

மார்ச 25, 2011 11:33

கார்ப்பரேட்டுகளுக்கு சார்பான உலகமயமாதலுக்கு எதிராக போராடுபவர்கள் எல்லோரும் பினாயக்கின் நிலையை பகிர்பவர்களே.

அனசுயா சென், இவர் பினாயக் சென்னின் தாய். தனது செல்ல மகன் ரானா, பினாயக் சென்னாக வளர்ந்தது குறித்து சந்திரசேகர் பட்டாச்சார்ஜியிடம் பகிர்ந்து கொண்ட நேர்காணலிலிருந்து....


பினாயக் குழந்தையாக எப்படி இருந்தார்?

அவன் மிகவும் சுட்டிப்பையன். பிறந்து 11வது மாதத்தில் வெந்நீரில் கையை விட்டு காயம் ஆகிவிட்டது. நான்கு வயதில் நெருப்பிடப்பட்ட உலர்ந்த இலைக்குவியலில் காலை விட்டுவிட்டான். அப்போது நாங்கள் லக்னோவில் குடியிருந்தோம்.


சகோதர சகோதரிகளுடன் பினாயக்கின் உறவு எவ்வாறு இருந்தது?

குழந்தை பருவத்திலிருந்தே பினாயக் குடும்பத்தினரிடம் அன்பாக இருப்பான். சகோதரர்களிடம் மட்டுமல்ல, வீட்டு பணியாளர்களிடமும் பிரியத்துடன் பழகுவான். ஊட்டிக்கு அருகே உள்ள வெலிங்டனில் அவனது தந்தைக்கு ராணுவ மருத்துவராக பணியாற்ற வாய்ப்பு வந்தது. அப்போது ரானாவுக்கு 6 வயது. எங்களது வீட்டு உதவியாளனாக இருந்த ஜானுக்கு தரையில் அமரவைத்து உணவு தருவோம். அப்போது ஒருநாள் ரானா எங்களிடம், ஜானை ஏன் மேஜையில் உட்கார வைக்காமல் தரையில் இருக்க வைக்கிறீர்கள் என்று கேட்டான். எனது பதில் அவனை திருப்திப்படுத்தவில்லை. தன்னுடன் மேஜையில் ஜானை உட்கார வைத்த பின்பே அவன் நிம்மதியானான்.

பினாயக்குக்கு பிடித்த உணவு எது?

மீன் மற்றும் இறைச்சியில் அதிக பற்று உண்டு. பள்ளி நாட்களில் நாங்கள் ஒரு கிலோ இறைச்சி வாங்குவோம். அப்போதெல்லாம் அவன் கொஞ்சம் கூடுதலாய் நான் வாங்கிக்கொள்ள அனுமதியுங்கள் என்று சொல்வான். ஒருநாள் அவனது மருத்துவ கூட்டாளிகளுக்காக சமைக்கப்பட்டிருந்த அத்தனை மீனையும் அவனே சாப்பிட்டுவிட்டான். ஆனாலும் சோறும் பருப்புக் குழம்பும்கூட அவனை திருப்திப்படுத்திவிடக்கூடியது. எளிமையான உணவு இருந்தாலும் அதைப்பற்றி புகார் சொல்லமாட்டான். சங்கர் குகா நியோகி நடத்திய ஷர்மிக் மருத்துவமனையில் பருப்பு சாதம் சாப்பிட நன்கு பழகிக்கொண்டான். வெங்காயம், எலுமிச்சை அல்லது பச்சை மிளகாய் துணைக்கு இருந்தால் போதும்.

கிறிஸ்துவ திருச்சபைகளின் தாக்கம் அவருக்கு இருந்ததா?

இருந்திருக்கலாம். வேலூர் சிஎம்சியில் தனது மருத்துவ படிப்பை முடித்த பின்பு வங்கதேசத்தில் உள்ள குல்னா திருச்சபை மருத்துவமனையில் அவன் வேலைபார்த்தான். அப்போது அந்த தாக்கம் அவன்மீது படிந்திருக்கலாம். ஆனால் லண்டனில் உள்ள எம்ஆர்சிபியில் படித்து பட்டம் செல்வதற்கு மறுத்துவிட்டான். அவனது அப்பா அதற்காக செலவு செய்ய தயாராகவே இருந்தார்.

இலினாவை அவர் எங்கே சந்தித்தார்?

இலினாவை அவனுக்கு ஏற்கெனவே தெரியும். எங்களுக்கு தூரத்து உறவும்கூட. இலினா ஜபல்பூரில் குடும்பத்துடன் இருந்தார். நாங்கள் அப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகரில் குடியிருந்தோம். அந்த சமயத்தில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு தத்தெடுத்து இரண்டு மகள்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வார்தாவில் தனது பணியையும் பார்த்துக்கொண்டு அவள் பினாயக்குக்கு உதவி வருகிறாள். அத்துடன் குழந்தைகளை கவனிப்பதிலும் சளைப்பதில்லை. அவள் துர்க்கையை போன்றவள். 10 கைகள் இருக்கிறது.

இலினாவும் பினாயக்கும் சேர்ந்து செய்யும் பணிகள் எவை?

சத்தீஸ்கரில் அவர்கள் ருபாந்தர் என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். பாக்ரும் நலா கிராமத்தில் அவர்களுக்கு மருத்துவமனை ஒன்றும் உள்ளது. அத்துடன் ஏழை குழந்தைகளுக்கு முறைசாரா கல்வி, ஆரோக்கிய சேவை, எய்ட்ஸ் தடுப்பு பிரச்சாரம், பெண்கள் தன்னிறைவு ஆகியவற்றில் பணிசெய்து வருகிறார்கள். ஏழை ஆதிவாசி மற்றும் தலித் குழந்தைகளுக்கு கலாச்சார செயல்பாடுகளை கற்றுக்கொடுத்து திறனுள்ளவர்களாக மாற்றுகிறார்கள். அவர்கள் செய்யும் செயல்களை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். வார்தாவி¢ல உள்ள மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைக்கழகத்தில் இலினா பேராசிரியையாக பணிபுரிந்தாலும் ருபாந்தரிலும் உற்சாகத்துடன் பணிபுரிகிறார்.

பினாயக் சென் கைதாவார் என்று எப்போது தெரியும்? உங்கள் எதிர்வினை என்ன?

2007 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பினாயக் தன் குடும்பத்தினருடன் என்னை பார்க்க வந்தான். எனது பேத்தி தான் இச்செய்தியை கூறினாள். அப்போது பினாயக்கும் அங்கு நின்றிருந்தான். நான் அவனிடம் ஏன் என்று கத்தினேன். ஏழைகளுக்கு சேவை செய்ததற்காக இந்த அரசியல் பழிவாங்கலை நான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தவறு எதுவும் என் பக்கம் இல்லை என்று கூறினான். சட்டீஸ்கர் திரும்பும்போது முன்ஜாமின் பெறமுயன்றான். முதலில் அவன்மீது எந்த வழக்கும் இல்லை என்று போலீஸார் பொய் கூறினார்கள். ஆனால் ராய்பூரிலிருந்து வந்த ஒரு குழு அவனை கைது செய்தது. சல்வார்ஜுடும் படையை எதிர்த்ததினாலேயே அவன் கைது செய்யப்பட்டான் என்று எனக்கு தெரியும்.

மாவோயிஸ்டுகளுக்கு மருத்துவம் பார்த்ததாக பினாயக் மீது புகார் உள்ளதே?

சிறையில் மாவோயிஸ்டுகளுக்கு சிகிச்சை செய்தானா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படி செய்திருந்தால் அது சிறை அதிகாரிகளின் அனுமதியில்லாமல் எப்படி நடந்திருக்க முடியும்? அப்படியும் செய்திருந்தாலும் அதில் தவறென்ன? அவனது தந்தை ஒரு ராணுவ மருத்துவர். அவர் காயம்பட்ட பாகிஸ்தான் ஜவானுக்குக்கூட மருத்துவமனைக்கு எடுத்த சென்று சிகிச்சை செய்திருக்கிறார். யாராக இருந்தாலும் நோயாளி ஒருவனுக்கு சிகிச்சை செய்யவேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் எடுத்துக்கொள்ள உறுதிமொழியாகும். பினாயக் அரசால் கைவிடப்பட்ட எத்தனையோ ஏழை கிராமத்தினருக்கு சிகிச்சை செய்திருக்கிறான்.

சத்தீஸ்கரில் தற்போது நிலைமை எப்படி இருக்கிறது?

நரகம்போல சூழ்நிலை நிலவுகிறது. இங்குள்ள பொதுமக்கள் படும் அவதியை ஒருவரால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. பினாயக்கை போன்ற இன்னொரு காந்தியவாதியான இவான்ஷு குமாரின் ஆசிரமத்தையே அரசு அழித்துவிட்டது. ஏழைகளுக்கு சார்பாக நின்று சல்வார்ஜுடும் படையை எதிர்த்ததுதான் அவர் செய்த குற்றம். அவரது ஆசிரமம் அழிக்கப்பட்ட இரண்டு தினங்களுக்கு பிறகு அவரை பார்த்தேன். அவர் சிரித்து கொண்டிருந்தார். தைரியமும் அர்ப்பணிப்பும்தான் அவர்களை இந்த உயரத்துக்கு கொண்டுவந்துள்ளது.

சமீபத்திய உயர்நீதிமன்ற உத்தரவு பற்றிய உங்கள் கருத்து என்ன?

சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்று எங்களுக்கு நன்கு தெரியும். எனது மருமகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளாள். அங்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பினாயக் வழக்கில் நடந்த நீதி முறைகேட்டை பற்றி மிகப்பெரிய ஆளுமைகளும் நோபல் பரிசு பெற்றவர்களும் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும் கூட தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

நீங்கள் பினாயக்கின் விடுதலையை விரும்புகிறீர்களா?

நான் நிபந்தனையற்ற விடுதலையை விரும்புகிறேன். அத்துடன் காரணமில்லாமல் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்ட அனைவரது விடுதலையையும் நான் கோருகிறோம். நான் பினாயக் சென்னின் தாய்மட்டுமல்ல. நான் மேற்சொன்ன அனைவருக்கும் தாய்தான்.

பினாயக் சென்னை விடுதலை செய்யும் இயக்கம் தற்போது சர்வதேச அளவில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து எப்படி உணர்கிறீர்கள்?

கடந்த 20 ஆண்டுகளாக கார்ப்பரேட் ஆதரவு உலகமயமாதல் நம்மை பீடித்துள்ளது. அரசுகள் இந்த சூழ்நிலையை விரும்பி உருவாக்குகின்றன. இப்பின்னணியில்தான் பினாயக் போன்றவர்கள் பலியாடுகளாக மாற்றப்படுகின்றனர். நான் பினாயக் எழுதிய தனிப்பட்ட குறிப்பு ஒன்றில், "உனது வேலை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பெரிதாக எனக்கு தெரியாது. ஆனால் உன்முன் பணிந்து வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்று எழுதியிருந்தேன். ரானா அதற்கு பதிலாக, அம்மா நான் ஒருபோதும் உன்னைவிட பெரியவன் அல்ல என்று எழுதியிருந்தான்.

நன்றி: சன்டே இந்தியன்