செவ்வாய், ஜூன் 03, 2008

கிரெடிட் கார்டுகள் மூலம் நூதன மோசடி

நாகரிக வாழ்க்கையில் கெளரவத்தின் ஒர் அங்கமாக வங்கிகளின் கடன் அட்டைகளும் இடம்பிடித்துள்ளன. கடன் அட்டைகள் வைத்திருப்பது அந்தஸ்தில் உயர்நிலையில் இருப்பவராக வெளி உலகுக்கு காட்டிக்கொள்ளும் அடையாளமாகத் திகழ்கிறது.
ஆனல் கடன் அட்டைகள் வாங்கி அதிலிருந்து விடுபட முடியாமல் தற்கொலை வரை செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வங்கிகளின் முகவர்கள் என கூறிக்கொண்டு, கவர்ச்சிகரமான உறுதிமொழிகளை அள்ளி வீசி, அதிகாரிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள் முதல் பாமர மக்கள் வரை தங்களின் பேச்சுத் திறமையால் கடன் அட்டைகளை வாங்க வைத்துவிடுகின்றனர்.
.
அட்டைகளை வாங்கும் வரை தொடர்ந்து தொலைபேசியில் பேசுகின்றனர். கடன் அட்டை மூலம் பெறும் ரொக்கப் பணத்திற்கு 50 நாள்கள் வரை (வங்கிக்கு வங்கி சில தினங்கள் முன்பின் உள்ளன) வட்டி கிடையாது. பொருள்களாக வாங்கினால் 45 நாள்களுக்குள் திருப்பிச் செலுத்தினால் வட்டி கிடையாது என உறுதி கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் ஆர்வத்தில் பொருளோ, பணமோ பெற்று ஒரு சில தவணைகளை ஒழுங்காகக் கட்டியதும்தான் புதிய வடிவில் விதி விளையாட ஆரம்பிக்கிறது.
.
வாடிக்கையாளரிடம், தொலைபேசி மூலம் நான் தாங்கள் வைத்திருக்கும் கடன் அட்டைக்குரிய வங்கியின் முகவர் பேசுகிறேன். நமது வங்கியும் மருத்துவ காப்பீட்டு நிறுவனமும் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. நீங்கள் மருத்துவ காப்பீடு பாலிசி எடுத்துக் கொண்டால் ஒரு தவணை மட்டும் பணம் செலுத்தினால் போதும், அதையும் கிரெடிட் கார்டு மூலம் வழங்குகிறோம் என கூறுகின்றனர்.
.
அப்படியா விவரம் கூறுங்கள் என தப்பித்தவறிக் கேட்டுவிட்டால் போதும், பேச்சிலேயே அவரை மயக்கி, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரம், வயது ஆகியவற்றை கூறுங்கள், எவ்வளவு தொகை உங்களுக்கு காப்பீடு கிடைக்கும், உங்களது பிரிமியத் தொகை எவ்வளவு என்பதை உடனே கூறிவிடுகிறேன் என கூறுகின்றனர்.
.
அப்பாவி வாடிக்கையாளரும் விவரம் கூறிவிட்டால், பிரிமியத் தொகையை கூறிய உடனேயே, உங்களுக்கு விருப்பமில்லாவிடில் பாலிசியை ரத்து செய்துவிடுவோம். விருப்பமிருந்தால் உங்கள் கிரெடிட் கார்டிலிருந்து பணம் பெற்றுக்கொள்ளப்படும். எனவே உங்கள் கிரெடிட் கார்டு நம்பரைக் கூறுங்கள் என கேட்கின்றனர்.
.
கிரெடிட் கார்டு நம்பரைக் கூறிவிட்டால், அடுத்த விநாடியே வாய்ஸ் மெயில்' எனும் குரல் ஒலி அங்கீகாரம் மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துவிடுகின்றனர்.
.
வங்கியிலிருந்து மாதாந்திர அறிக்கை கிடைக்கும்போதுதான், கடன் அட்டையிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளருக்குத் தெரிய வருகிறது. ஒரு சிலரிடம் கடன் அட்டையில் எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவு தொகையையும் 2, 3 பாலிசிகள் பெயரில் எடுத்துவிடுகின்றனர். அவர் அலறியடித்து வங்கிக்கு ஓடிச்சென்று கேட்டாலோ அது தனிப்பிரிவு, அங்கு சென்று கேளுங்கள் என கூறுகின்றனர். அங்கு சென்று கேட்டாலோ தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. அங்கு தொடர்பு கொள்ளுங்கள் என பொறுப்பில்லாத பதில்கள் கிடைக்கின்றன.
இருப்பினும் மும்பையிலுள்ள அலுவலகத்தின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து, கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என கூறுகின்றனர். ஆனல் அங்கிருந்து வரும் பதிலைப் புரிந்து விவரமறிந்தவர்கள் உதவியுடன் பாலிசியை ரத்து செய்யக்கூறி, பாலிசி ரத்தாகி பணம் திரும்ப வங்கிக்கு வந்ததும் புதிய பிரச்னை வருகிறது.
.
தாங்கள் பெற்ற கடனுக்கு வட்டி, சேவை வரி என இஷ்டத்திற்குத் தொகையைக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்புகின்றனர். இரண்டு நோட்டீஸ்களுக்குப் பதில் இல்லை எனில் வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கிருந்து பணத்தை தாமாகவே வங்கிகள் வரவு வைத்துக் கொள்ளும் நூதன மோசடியில் ஈடுபடுகின்றன.
.
மன உளைச்சலில் தவிக்கும் வாடிக்கையாளர் வெளியே சொல்ல முடியாமல் உயிரை விடவும் துணிந்துவிடுகின்றனர். முதலில் தொடர்பு கொண்ட வங்கியின் முகவர், முகவரியே இல்லாத நபராகி விடுகிறார். தேடிப்பிடித்து தொடர்பு கொண்டாலும் பொறுப்பில்லாமல் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் என்கின்றனர்.
.
வங்கியின் துணையோடு ரகசியமாக நடக்கும் நூதன மோசடியில் ஏமாந்தோர் ஏராளம். சொல்ல வழி தெரியாத வங்கிக் கடன் அட்டைதாரர்களுக்கு வழிகாட்டுபவர் யாரோ? கவர்ச்சி வார்த்தைகளில் நம்பிக் கடன் அட்டையில் சிக்கி வாழ்வைச் சீரழிக்காதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த நுகர்வோர் அமைப்புகளே வழிகாட்டுங்கள்.

-சி. காசிவிஸ்வநாதன்
நன்றி: தினமணி, 02-06-2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக