தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயரில் பார்ப்பனர்கள் திணித்த ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ வரையுள்ள 60 வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டு முறை தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஒழிக்கப்படுகிறது. இந்த வடமொழி ஆண்டுகளுக்குப் பதிலாக - திருவள்ளுவர் ஆண்டையே இனி தமிழக அரசு, தனது அனைத்து நடவடிக்கைகளிலும் பயன்படுத்தும். மகத்தான இந்தப் பண்பாட்டுப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது தமிழக அரசு. தி.மு.க. அரசும், முதலமைச்சர் கலைஞரும் இதன் மூலம் பார்ப்பன எதிர்ப்புப் பண்பாட்டுப் புரட்சி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள பிப்.25, அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
.
தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்டம், 2008 சமீபத்தில் வெளியானது. அதில் தை மாதத்தின் முதல் நாளிலிருந்து தமிழ் ஆண்டு தொடங்கும் என்றும், மார்கழி மாதத்தின் கடைசி நாளில் தமிழ் ஆண்டு முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இனி அரசாணைகள், தமிழ்நாடு அரசிதழ், அரசு கடிதங்கள் மற்றும் பல வெளியீடுகளில் ‘சர்வஜித்’ என்ற ‘தமிழ்’ ஆண்டை நீக்க வேண்டும். ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்களை பயன்படுத்த வேண்டாம்.
.
கிறித்துவ ஆண்டுக்கு நிகராக தமிழ் மாதங்கள், நாள், மற்றும், திருவள்ளுவர் ஆண்டு (ஆங்கில ஆண்டுடன் 31அய் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும்) ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும். (உதாரணமாக 2008 - பிப்.9 ஆம் தேதியை அரசாணையில் ‘திருவள்ளுவர் ஆண்டு 2039 பங்குனி 27 ஆம் தேதி’ என்று குறிப்பிட வேண்டும்) - என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
.
பார்ப்பன ஜெயலலிதாவும், பா.ஜ.க. பரிவாரங்களும், பார்ப்பன ‘தினமணி’களும் இந்த மாற்றத்தை செரித்துக் கொள்ள முடியாமல், தீயில் விழுந்த புழுவாய் துடிக்கிறார்கள். விண்வெளித் துறையில் பணியாற்றும் பார்ப்பன விஞ்ஞானி ஒருவர் - ‘தினமணி’ நாளேட்டில் - தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து கட்டுரை எழுதியுள்ளார். அதே ஏடு - இந்த முடிவை எதிர்த்து - ‘பகுத்தறிவு அல்ல; பாசிசம்’ எனும் தலைப்பில் தலையங்கமும் தீட்டி, தனது வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளது. ‘ஜனசக்தி’ நாளேடு - இந்த வாதங்களை மறுத்து - சிறப்பான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
.
முதன்முதலில் பண்டை உரோமானியர் சூரிய நாள்களை ஓராண்டுகளுக்கு வரும்படி பத்து சம பாகங்களாக வகுத்தனர். எப்படியோ, இது 12 பாகங்களாக பிரிக்கப்பட்டுவிட்டது என்று கூறும் அந்த விஞ்ஞானி ‘எப்படியோ’ மாற்றப்பட்டதை ஏற்கும் போது, தமிழக அரசு இப்படி மாற்றியதை ஏன் எதிர்க்க வேண்டும்?
.
‘கிருஷ்ணரும்-நாரதரும்’ கூடிப் பெற்றதாக (அதாவது ஆணும்-ஆணும் கலவி செய்து பெற்ற) 60 ஆண்டுகளின் பெயர்களை - இந்து பார்ப்பன மதம் கூறுகிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையதா? சங்கத் தமிழ் நூல் எவற்றிலாவது இந்த 60 ஆண்டுகளின் பெயர் இடம் பெற்றுள்ளதா? பிறகு எப்படி இதை தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்க முடியும்?
.
சித்திரையில் தொடங்கும் ஆண்டைத் தையில் தொடங்க ஏற்பாடு செய்தது பாசிசம் என்றால், மறைக்காட்டை வேதாரண்யமாக, மயிலாடுதுறையை மாயூரமாக, குடந்தையை கும்பகோணமாக, இப்படி ஏராளமான தமிழ்ப்பெயர்களை சமஸ்கிருதத்துக்கு மாற்றியது எது? அத்தகைய அதிகாரம் எவர் கைக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தது? இப்படி - சாட்டையடிக் கேள்விகளைத் தொடுக்கும் அக் கட்டுரை - பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை மாற்றுவதா என்ற வழமையாக எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வெள்ளைக்காரத்துரை, “எல்லா பாளையக்காரர்களும் பணிந்து விட்டார்கள், நீ மட்டும் ஏன் பணிய மறுக்கிறாய்?’ என்று கேட்டதைப் போல, இந்தக் கேள்வி இருக்கிறது என்று நறுக்குத் தெறித்ததுபோல் பதிலடி தந்துள்ளது.
.
குடும்பத்தையே பகுத்தறிவாளர்களாக மாற்ற முடியாதவர்கள் - பகுத்தறிவை மற்றவர்களிடம் திணிப்பதா என்று அந்தப் பார்ப்பன ஏடு எழுப்பிய கேள்விக்கு, “இறை நம்பிக்கையுடைய பெரும்பான்மை குடும்ப உறுப்பினர்களால், ஏன், அந்த ஒரு இறை மறுப்பாளரை மாற்ற முடியவில்லை? என்று திருப்பிக் கேட்க முடியாதா?” என்று நச்சென்று கேட்டுள்ளது.
.
தொடர்ந்து ‘ஜனசக்தி’ நாளேட்டில் பகுத்தறிவுக் கட்டுரைகளை மிகச் சிறப்பாக நையாண்டி நடையில் எழுதி வரும் தோழர் சுமலி - இந்தக் கட்டுரையிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ஆக பார்ப்பனர்கள் இந்த ‘தமிழ்ப் புத்தாண்டு’ மாற்றத்தை ஏற்க மறுப்பதன் மூலம் - பார்ப்பனர்கள், பார்ப்பனர்களாகவே வடமொழிப் பற்றாளர்களாகவே வர்ணாஸ்ரமப் பாதுகாவலர்களாகவே இருக்க விரும்புகிறார்கள், அவர்கள் மாறவில்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
.
நன்றி:
மே, 2008
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக