ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

''ராஜீவ் கொலை வழக்கில், பிணத்துக்கு பொட்டு வைத்ததுதான் புலனாய்வா?''

''ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி தொடங்கி, பல பெருந்தலைகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், விசாரணை அதிகாரிகள் அந்தப் பெருந்தலைகளைத் தப்ப வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்!'' - காங்கிரஸ் பிரமுகரான திருச்சி வேலுசாமியின் தொடர் முழக்கம் இது. ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், பல்நோக்கு கண்காணிப்புக் குழுவை அமைத்ததற்கு முக்கியக் காரணமே வேலுசாமியின் அஃபிடவிட்தான். ஏழு தடவை அதில் விசாரிக்கப்பட்டவர் இவர். பேரறி வாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் எந்த நேரத்திலும் தூக்கு என்கிற நிலையில் நாம் வேலுசாமியை சந்தித்தோம்.

''ராஜீவ் கொலை வழக்கில், விசாரணை அதிகாரிகளின் குளறுபடிகளாக நீங்கள் எவற்றைச் சுட்டிக்காட்டுகிறீர்கள்?''

''குறிப்பிட்டுச் சொல்வது என்ன... விசாரணை அதிகாரிகள் செய்த அனைத்துமே திட்டமிட்ட குளறுபடிகள்தான். மகாத்மா காந்தியின் கொலை வழக்குடன் ராஜீவ் கொலை வழக்கை ஒப்பிட்டுப் பார்த்தால்தான், அதிகாரிகளின் குளறு படிகள் அப்பட்டமாகப் புரியும். மகாத்மா சுடப் பட்ட உடனேயே கோட்சேவை போலீஸ் வளைத்தது. கோட்சே கையில், 'இஸ்மாயில்’ எனப் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதனால், 'மகாத்மாவைக் கொன்றது ஒரு முஸ்லிம்தான்!’ என அதிகாரிகள் அவசரப்பட்டு அறிவிக்கவில்லை. அதிகாரிகளின் நுணுக்கமான புலனாய்வால், அந்த ஆபத்து தடுக்கப்பட்டது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நடந்தது என்ன? மே 21-ம் தேதி இரவு ராஜீவ் கொலை நடந்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை தொடங்கும் முன்னரே, 'ராஜீவைக் கொன்றது புலிகள்தான்’ என அறிவித்தார், அப்போதைய சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி. ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் சிவராசன், தணு, கோகிலவாணியின் முகங்களை அடையாளம் காட்டியது. அந்தப் படத்தில் தணுவின் நெற்றியில் பொட்டு இல்லை. ஆனால், இறந்துகிடந்த தணுவின் நெற்றியில் குங்குமப் பொட்டு இருந்தது. அது எப்படி? 'ராஜீவைக் கொலை செய்தவர் இந்து தமிழ்ப் பெண்’ எனக் காட்ட நடந்த சதிதான் அது. பிணத்தின் நெற்றியில் பொட்டு வைத்ததுதான் புலனாய்வா... அவர்கள், இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?''

''பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் ராஜீவ் கொலை விவகாரத்தில் துளியும் சம்பந்தம் இல்லை என்கிறீர்களா?''

''பேரறிவாளன், திராவிடர் கழகத்தில் இருந்த வர். கொலை நடந்து 20 நாட்கள் கழித்து ஜோலார் பேட்டைக்குப் போய் பேரறிவாளன் எங்கே என விசாரிக்கிறது போலீஸ். பேரறிவாளனின் தாய், 'அவனை நானே உங்களிடத்தில் அழைத்து வருகிறேன்’ எனச் சொன்னார். அதன்படியே, அடுத்த நாள் சென்னைக்கு வந்து பேரறிவாளனை சந்தித்தார். அப்போது அவர்களை வளைத்த போலீஸ், 'சாதாரண விசாரணை’ எனச் சொல்லி பேரறிவாளனை அழைத்துச் சென்றது. உண்மையிலேயே ராஜீவ் கொலையில் பேரறிவாளன் சம்பந்தப்பட்டு இருந்தால், வலிய வந்து போலீஸ் விசாரணையை எதிர்கொண்டு இருப்பாரா? பெற்ற தாயே அவரை போலீஸிடம் நிறுத்தி இருப்பாரா?

பேரறிவாளன் ஈழத்துக்குப் போய் பிரபா கரனை சந்தித்ததாகவும், 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தைத் தயாரித்ததாகவும் கற்பனைகளைப் பரப்பியே அவரைத் தூக்கு வரை நிறுத்திவிட்டார்கள்.

சாந்தன் விஷயத்தில் அவருடைய பெயரே அவருக்கு எதிரியாகிவிட்டது. திருச்சி சாந்தன் என்கிற குண்டு சாந்தன் இறந்துவிட்டார். பெயர்க் குழப்பத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் ம.தி.சாந்தன் மீது திணித்து, அவரையும் கயிறுக்கு முன்னால் நிறுத்திவிட்டார்கள். நளினியின் கணவர் என்பதாலேயே முருகனை வளைத்தார்கள். ஒரு பெண் குழந்தையின் தாய் என்பதால், நளினியின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஒரு தாய்க்குக் காட்டும் கருணையை தந்தைக்குக் காட்டாத விந்தையை எங்கே போய்ச் சொல்வது?''

''ராஜீவ் கொலையில் சந்திராசாமிக்கு தொடர்பு இருப்பதாகத் தொடர்ந்து சொல்கிறீர்களே... எதைவைத்து?''

''பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் கைதுக்குக் காரணம் சொல்கிறார்கள் அதிகாரிகள். பெங்களூரு ரெங்கநாத் என்பவர், 'பெல்ட் பாமை யாகத்தில் வைத்து சந்திராசாமி ஆசீர்வதித்தார். சம்பவத்தை முடித்துவிட்டு வரும் சிவராசனை பெங்களூர் வழியாக நேபாளம் அனுப்பிவைப்பதாகவும் சொல்லி இருக்கிறார்’ என தடா கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். உடனே ரெங்கநாத்தை விசாரிக்கச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டது. அப்போதைய விசாரணை அதிகாரி டேபிள் வெயிட்டால் ரெங்கநாத்தை அடித்து, 'உண்மையைச் சொல்லாதே’ என மிரட்டி இருக்கிறார். பல்நோக்கு கண்காணிப்புக் குழுவை அமைக்கச் சொன்ன ஜெயின் கமிஷன், அதில் முதல் ஆளாக விசாரிக்கச் சொன்னதே சந்திராசாமியைத்தான். 'இவருடைய நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக இருக்கின்றன’ என ஜெயின் கமிஷன் பட்டவர்த்தனமாகச் சொன்ன பிறகும், அவரிடம் விசாரணை நடத்தப்படவே இல்லை. என்னிடம்கூட ஏழு முறை விசாரணை நடத்தினார்கள். 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், அப்பாவி கள் தண்டிக்கப்படக் கூடாது’ என்பதுதான் நீதியின் நியதி. ஆனால், சந்தேகத் திமிங்கிலங்கள் வெளியே உலவ, அப்பாவிகள் தூக்கு மேடை முன் நிற்கிறார் கள்!''

''தூக்குத் தண்டனையை அரசு சீக்கிரமே நிறை வேற்ற முயல்வதாகச் சொல்லப்படுகிறதே?''

''ராஜீவ் கொலை யானபோது எடுக் கப்பட்ட வீடியோ பதிவு எம்.கே.நாராயணனிடம் கொடுக்கப்பட்டது. இன்று வரை மக்களின் பார்வைக்கு அந்த விவரங்கள் தெரிய வில்லை. கொலை நிகழ்ந்தபோது சந்திரா சாமி எங்கே இருந்தார் என்பதற்கு இன்று வரை பதில் இல்லை. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகளை வளைக்க பல்நோக்கு கண்காணிப்புக் குழு இன்று வரை விசாரணை நடத்தி வருகிறது. நாளைக்கே ஒரு நபரை அந்தக் குழு குற்றவாளியாக நிறுத்தினால், அதற்கு சாட்சியாக இந்த மூவரில் ஒருவர் தேவைப்படலாம். இப்போது தூக்கில் போட்டு விட்டால், முக்கியக் குற்றவாளியை நிறுத்தும் போது செத்தவர்களை உயிரோடு கொண்டு வருவார்களா?''

- இரா.சரவணன்

படம்: என்.விவேக்

நன்றி: ஜூனியர்விகடன் 31 ஆகஸ்ட் 2011

நன்றி:

புதன், ஆகஸ்ட் 24, 2011

''நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்!''



ழப் படுகொலைகள் உண்​டாக்கிய துயரமே தமிழக மனங்​களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரை​யும் காப்பாற்றக் கோரி கட்சி வேறு​​பாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்​டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்​தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே...

முதலில் பேரறிவாளன்...

''எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?''

''முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. 19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!''

''தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?''

''அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!''

''தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?''

''மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல... 20.07.07 அன்றே உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். 'வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.மனசாட்சியின் கண்ணீர்க்குரலாகச் சொல்கிறேன்... எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!''

''கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?''

''99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். 'தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!''

அடுத்து முருகன்...

''தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?''

''மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!''

''தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?''

''எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்.... நன்றி!''

அடுத்து ம.தி.சாந்தன்...

''ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே...?''

''கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.

கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா?

நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், 'முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார். ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.

'நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார். ஆனால், நீதிபதி வாத்வா, 'ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான் நளினியை சாந்தன் அறிவார்’ என்கிறார்.

நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?

சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள் தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை. இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!''

''கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?''

''என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!''

- இரா.சரவணன்

நன்றி: ஜூனியர்விகடன் 28-08-11

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

ஆடியோ சர்ச்சையில் ஜெயேந்திரர்?

ங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சர்ச்சைக்குள்ளான காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மீது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது. ஜெயேந்திரர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கைக்கு முதலில் இந்த ஆடியோ கிடைத்துள்ளது. அவர் இதை முதல்வரின் தனிப் பிரிவு, டி.ஜி.பி., உயர் நீதிமன்றக் கண்காணிப்புப் பிரிவு பதிவாளர், விழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். இது தொடர்பாக ஒரு புகாரையும் துரைசாமி அத்துடன் அளித்துள்ளார். அந்த ஆடியோ, நமக்கும் கிடைத்தது.

இரண்டு பாகங்களாக இருக்கும் அந்தப் பதிவில் ஒரு முதியவர், நடுத்தர வயதுக்காரர் மற்றும் ஒரு பெண் மூவரும் கான்ஃபெரன்ஸ் வசதியில் உரையாடுகிறார்கள்.

முதியவர்: ''சௌக்கியமா இருக்கீங்களா..?''

நடுத்தர வயதுக்காரர்: ''ம்... நல்லா இருக்கேன். நமஸ் காரம்...''

முதியவர்: ''ஒரு வாரத்தில், பாக்கி எல்லாத்தையும் முடிச்சிடுறேன். மொத்தமா முடிச்சிடலாம்... அக்கவுன்ட்ல கொடுக்க முடியலை. பணத்தை எடுத்து மாத்தி, ஒரு வாரம், பத்து நாளில் அனுப்பிடுறேன். கடன் எடுத்துத்தான் கொடுத்திருக்கோம். மொத்தத்தையும் நானே கொடுத்து அனுப்பிடுறேன். அதுவரைக்கும் சிரமம் பாக்காதீங்க. கவலைப்படாதீங்க... ஃபுல்லா வந்துரும். கொஞ்சம் பொறுமையா இருங்க...''

நடுத்தர வயதுக்காரர்: ''அதான் எனக்கும் ஈஸியா இருக்கும்...''

முதியவர் பேச முயல, குறுக்கிட்ட பெண்: ''சார், பெரியவா சொல்லிட்டா. இப்ப இவர் உங்ககிட்ட சொல்றார். இப்பத்தான் என்கிட்ட பேசினார். 'வேர்டு ஹானர்’ (உறுதிமொழி) பண்ணுங்க. பணம் கொடுக்கிறேனு சொல்லுங்க, இல்லே... இல்லைனு சொல்லுங்க...’ன்னார் பெரியவா. இதை கீப்அப் பண்ணிக்குவோம் சார்.''

(இதன் பிறகு, முதியவரும் பெண்ணும் தனியாக...)

முதியவர்: ''அவர்கிட்ட சொல்லிட்டேன்... அக்கவுன்ட்ல பணம் இருக்கு. மாத்தி ஒரு வாரம், பத்து நாளில் கொடுத்துடறேன்னு சொல்லிட்டேன்.''

குறுக்கிட்ட பெண்: ''இல்லை... பெரியவா என்னைத்தான் கேட்டுண்டு இருக்கா... அதான்...''

முதியவர்: ''நீ சொல்லிடு... பெரியவா சொல்லிட்டாங்க. ஒரு வாரத்தில் வந்துடும்னு...''

பெண்: ''ஓகே பெரியவா... வெச்சிடட்டா பெரி யவா..?'' - இப்படியாகப் போய் கட் ஆகிறது அந்த உரையாடல்.

பரபரப்பைக் கிளப்பிய இந்த விவகாரம் தொடர்பாக, தகவல் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டுள்ள வழக்கறிஞர் துரைசாமியிடம் பேசினோம்.

''மூன்று பேர் பேசும் உரையாடலை, யாரோ ஒருவர் என்னுடைய செல்போனுக்கு அனுப்பி இருக்கிறார். அந்த மூன்று குரல்களைக்கொண்டவர்கள் யார் என்று நான் விசாரித்தேன். காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், அவருக்கு அறிமுகமான கௌரி என்ற பெண் ஆகியோரின் குரல்கள் என்று கூறப்படுகிறது. இன்னொரு குரல் யாருடையது என்பதை போலீஸாருக்கு கொடுத்த மனுவில் தெளிவுபடுத்தி உள்ளேன். ஏதோ பணம் கொடுக்கல் வாங்கல் பற்றியதாக அது இருக்கிறது. இதுபற்றிய உண்மைகளை விசாரித்துத் தரவேண்டும் என்றுதான் நான் கேட்டிருக்கிறேன். என்னுடைய கேள்விகள் இதுதான்.

1. அந்தக் குரல்கள், குறிப்பிட்ட அந்த மூவருடையதுதானா?

2. பணம் கொடுப்பதாகப் பேசுவது எந்த விஷயத்துக்காக?

3. இந்த உரையாடலை நிகழ்த்தியது அந்த மூவர்தான் என்றால், பணப் பரிமாற்றம் தொடர்பாக என்ன விதமான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது?

4. அந்த உரையாடலின்படி இதுவரை பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதா?

5. அந்த உரையாடலில் மறைந்திருக்கும் உண்மைகளை ஊருக்குச் சொல்ல வேண்டும்... என வரிசையாகக் கேட்டு இருக்கிறேன். அரசு மற்றும் நீதித் துறையின் பதில்களுக்காகக் காத்திருக்கிறேன்...'' என்றார் துரைசாமி.

ஜெயேந்திரரின் கருத்தை அறிய காஞ்சிபுரம் மடத்தில் ஆஜரானோம். மடத்தின் அலுவலர்களின் அனுமதியுடன், தியான மண்டபத்துக்கு அருகில் தனி அறையில் பக்தர்களுக்கு ஆசி தந்துகொண்டு இருந்த ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்து நம் விசிட்டிங் கார்டைக் கொடுத்தோம். சட்டென முகம் சிவந்து நம்மை வெளியே போகுமாறு சைகையால் சொன்னார்.

உடனே, அவரின் உதவியாளரிடம் விஷயத்தைக் கூற... மடத்தின் நிர்வாகி ஸ்ரீராமசர்மாவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அவரைச் சந்தித்தோம்.

''ஏதோ புதுக் கதை மாதிரி சொல்றீங்க. இது பழைய கதை. ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கே. மடத்தின் கருத்தை நீங்க கேட்க வேண்டாம். சட்டமும் நீதிமன்றமும் அதைப் பார்த்துக்கும். நீங்க உங்க வேலையைப் பார்த்தா போதும். மடத்தைப் பத்தியும் பெரியவாளைப்பத்தியும் பக்தர்களுக்குத் தெரியும். இப்போதான், மடம் பழைய நிலைக்குத் திரும்பி சந்தோஷமா இருக்கோம். அது பொறுக்காமக் கிளம்பி வந்துட்டீங்களா? தயவுசெஞ்சு, வெளியே போங்க'' என்ற ஸ்ரீராமசர்மா, என்ன நினைத்தாரோ... மறுபடியும் நம்மை அழைத்து,

''பெரியவா... அதுபோல யாரிடமும் எந்தக் காலத் திலும் பேசியது இல்லைனு வேணும்னா மடத்தோட கருத்தாப் போட்டுக்குங்க!'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

- இரா.தமிழ்க்கனல், எஸ்.கிருபாகரன்

நன்றி: ஜூனியர்விகடன், 14-08-2011


திங்கள், ஆகஸ்ட் 22, 2011

பேரறிவாளன்: நின்று வெல்லும் நீதி?

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு சுட்டெரிக்கும் மதியப் பொழுதில் சென்னையின் பிரதான மருத்துவமனையின் நெரிசலான வளாகத்தில் அற்புதம் அம்மாளைச் சந்திக்க நேர்ந்தது. மருத்துவமனையில் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான முகங்களில் எந்த விசேஷ கவனமும் கோரக்கூடிய முகம் அல்ல அற்புதம் அம்மாளுடையது. முதுமையும் துயரமும் அவரது தோலில் சமமாக வரிகளை நெய்திருந்தன. யாரிடமாவது துயரத்தை இறக்கிவைக்க முடியாதா என்கிற கவலை அவரிடம் எப்போதும் இருக்கும் போல. இறக்கிவைக்க இறக்கிவைக்க, சுமை குறைவது போலவும் தெரியவில்லை.

அற்புதம் அம்மாளின் துயரத்துக்கு வயது 20. 1991இல் அது போல ஒரு ஜூன் மாத மதிய பொழுதில் தான் சும்மா விசாரணைக்கு என்று அவர் மகன் பேரறிவாளனை அழைத்துச் சென்றது காவல் துறை. விசாரணைக்கென்று சென்ற அறிவு இன்னும் வீடு திரும்பவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல் மட்டும் வந்தது. பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. இன்று அற்புதம் அம்மாளின் மகன் அறிவு ஒரு மரண தண்டனைக் கைதி.

சிறைக் கம்பிகளுடன் அறிவின் போராட்டம் தொடங்கிய அதே தருணத்தில் விடுதலையின், தண்டனைக் குறைப்பின் சிறு கீற்று காட்டும் அதிகாரமையத்தின் எல்லாக் கதவுகளோடும் அற்புதம் அம்மாளின் போராட்டம் தொடங்கியது. “ஏறி இறங்காத படி இல்லை. மோதாத கதவு இல்லை, என்ன நடக்குமோ என்று தெரியவில்லை” என்று ஒரு சமயம் துயரம் தோயப் பேசினாலும் அடுத்த நொடியே நம்பிக்கையை எங்கிருந்தோ தருவித்துக்கொள்கிறார் அற்புதம் அம்மாள். “எப்படியும் அறிவு எங்களுடன் வந்துவிடுவான், நாங்கள் அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக இருப்போம்” என்கிறார். 63 வயது நிறைந்த அற்புதம் அம்மாளுக்கும் அவருடைய கணவருக்கும் எஞ்சிய வாழ்க்கையை நகர்த்துவது என்பதே பேரறிவாளனின் விடுதலை பற்றிய நம்பிக்கைகளால்தான் சாத்தியப்படுகிறது.

ஆனால் கடந்த ஜூனோடு பேரறிவாளனும் அவரோடு கைதுசெய்யப்பட்ட ஏழுபேரும் சிறையில் 20 வருடங்களை நிறைவுசெய்திருக்கிறார்கள் என்பது அவர்களின் தீவிரமான நம்பிக்கையைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் செய்தி. பேரறிவாளன் உள்படச் சிறையில் இருக்கும் நான்கு மரண தண்டனைக் கைதிகளுக்கு 20 வருடங்களுமே மரணத்தை நோக்கிய பயணம். பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம், கொலையாளிகளுக்கு அவர் பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பதே. மரண தண்டனையைச் சட்டப் புத்தகங்களில் இன்னும் சுமந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமற்ற சமூகத்தில் பேட்டரி வாங்கிக்கொடுத்ததற்காக மரண தண்டனையை எதிர்கொள்வதென்பது உச்சபட்ச கொடுமை. அதனால்தான் தனது போராட்டத்தை உண்மைக்கான போராட்டம் என்கிறார் பேரறிவாளன். “மரணத்தின் வாயிலில் நிற்கும் மனிதன் நான், உண்மை தோற்றுவிடக் கூடாது என்று விரும்புகிறேன்” என்று கோருகிறார். தனது நிலையை விளக்கி தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்று பேரறிவாளன் எழுதியிருக்கும் ஒரு சிறு பிரசுரம் எந்தவொரு மன சாட்சியையும் உலுக்கக்கூடியது.

“இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடுதலை கிட்டவில்லையானால், இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை. வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ தற்போதே உறுதிசெய்யப்பட்டாக வேண்டும். அல்லது இன, மொழிப்பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என்று வரலாறு குறிக்கட்டும்” என்கிறார். ஆனால் பேரறிவாளனின் இந்தக் கோரிக்கைகளுக்கு, அற்புதம் அம்மாளின் உறுதியான போராட்டத்துக்கு இந்தச் சமூகம் இரண்டு தசாப்தங்கள் கழித்தும் எந்த எதிர்வினையும் பெரிதாக ஆற்றிவிடவில்லை.

மனித உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் ஒரு சிலரின் கோரிக்கைகள், 1999இல் பேரறிவாளனின் சொந்த ஊரில் நடந்த கடையடைப்பு, இது தாண்டி எதுவுமே நடக்கவில்லை. பேரறிவாளனுக்காகப் பேச வேண்டிய கடமை அவரது சொந்த ஊரான சொலையார் பேட்டை மக்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பது போலவொரு பாவனையில் வாழ்ந்துவருகிறோம்.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தச் சமூகம் இப்படி மரத்துப்போனதற்கு என்ன காரணம்?

பொருட்படுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றி நாம் எப்போது மௌனம் காக்கத் தொடங்குகிறோமோ அன்று நமது வாழ்வு முடியத் தொடங்குகிறது என்று சொல்லியிருக்கிறார் மார்ட்டின் லூதர் கிங். பேரறிவாளனுக்குச் சமூகம் ஆற்றிக் கொண்டிருக்கும் எதிர்வினைகளைப் பார்க்கும்போது நமது சமூகம் அதன் மனசாட்சியின் துடிப்பை நிறுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.

19 வயதில் சிறை சென்று கடந்த 20 வருடங்களாகத் தனது இளமைக் காலத்தைச் சிறையின் அடர்ந்த இருள் பக்கங்களுக்குள் தொலைத்து விட்டு இப்போது இளமை முடிந்தும் மரணத்தின் வாயிலில் நின்றுகொண்டு தனக்காக அல்ல, நீதிக்காகவும் உண்மைக்காகவும் சிறு வெளிச்சம் தேடிக்கொண்டிருக்கும் பேரறிவாளனுக்கும் சிறைக்குள் நடக்கும் அவரது போராட்டத்துக்குச் சிறைக்கு வெளியே வெவ்வேறு வடிவங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் அற்புதம் அம்மாளுக்கும் இந்த முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டால் அது அவர்களுடைய தோல்வியாக மட்டுமே இருக்காது. அது மானுடத்தின் தோல்வியாக இருக்கும்.

நீதிமன்றம் விதிக்கிற தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வோர் அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது என்கிறார் நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண ஐயர்.

உலகிலுள்ள நாடுகளில் 135 நாடுகளில் சட்டரீதியாகவோ செயல்ரீதியாகவோ மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. மரண தண்டனையைச் சட்டப் புத்தகங்களிலும் செயல்வடிவங்களிலும் வைத்திருக்கும் 58 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்காவும் அதில் இருக்கிறது என்பதுதான் வேடிக்கை. அமெரிக்காவிலுள்ள ஒருசில மாநிலங்கள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளில் 90 சதவிகிதம் பேர் ஏழைகள். அவர்களால் அவர்களுக்கென்று வழக்கறிஞர் வைத்துக்கொள்ளக்கூட முடியாத ஏழைகள். அதேபோல் அமெரிக்காவில் மரண தண்டனை இல்லாத மாநிலங்களைவிட மரண தண்டனை அமலில் உள்ள மாநிலங்களில் கொலைக் குற்றங்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கின்றன.

மரண தண்டனைகளுக்கும் கருணை மனுக்களுக்கும் இடையிலுள்ள அரசியல் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு மரண தண்டனைக்கெதிரான கருத்தரங்கு ஒன்றில் பேச வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான நந்திதா ஹக்சர் சென்னை வந்திருந்தார். மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் அப்சல் குருவுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நந்திதா ஹக்சர். நாடாளுமன்றத் தாக்குதலில் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட கிலானியின் வழக்கறிஞராகவும் இருந்தவர்.

முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் பதவியிலிருந்து விலக ஓரிரு நாட்களே இருந்த சூழலில் நந்திதா, கலாமைச் சந்தித்து அப்சல் குருவின் கருணை மனு பற்றிக் கேட்டிருக்கிறார். மனு இன்னும் தனது கைகளுக்கு வரவில்லையென்று பதில் சொல்லியிருக்கிறார் கலாம். கருணை மனு கலாமின் கைகளுக்குச் சென்று விட்டால் அவர் அதை அங்கீகரிக்கக்கூடும் என்கிற அச்சம் காரணமாகக் கருணை மனு அவருக்கு அனுப்பப்படவில்லை, இதற்கு அரசியலே காரணம் என்கிறார் நந்திதா ஹக்சர்.

பேரறிவாளனுக்கு ஒரு பேட்டரி என்றால் கிலானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்குக் காரணம் ஒரு தொலைபேசி உரையாடல். காஷ்மீரி மொழியில் அவர் தன் சகோதரருடன் பேசியதை வைத்து அவருக்கு நாடாளுமன்றத் தாக்குதல்களில் பங்கு இருக்குமென்று முடிவு செய்து பொடா சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. காஷ்மீரியிலிருந்து ஆங்கிலத்தில் அந்தத் தொலைபேசி உரையாடலை மொழிபெயர்த்ததில் பல பிழைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் பழக்கம் இருந்ததைத் தவிர கிலானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேறு காரணங்கள் இல்லை. 2002 டிசம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிலானி, அவர்மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் அக்டோபர் 2003இல் விடுதலை செய்யப்படுகிறார்.

கிலானிக்கு ஆதரவாகப் பல மனித உரிமை அமைப்புகளும் அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்த காரணத்தால் ஆசிரியர் அமைப்புகளும் மாணவ அமைப்புகளும் போராடியது குறிப்பிடத்தக்கது. தனக்கு ஆதரவாகப் போராடியவர்களுக்கு எழுதிய மடல் ஒன்றில் கிலானி இப்படிக் குறிப்பிடுகிறார்: “நீங்கள் ஒரு தனிமனிதனுக்காகப் போராடவில்லை, ஜனநாயகம், நீதி போன்ற விழுமியங்களைக் காப்பாற்றுவதற்கும் அவை நிலைபெறுவதற்கும் நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்.”

பேரறிவாளனுக்கும் இது பொருந்தும்.

-கவிதா

நன்றி: காலச்சுவடு, ஆகஸ்ட்-2011

சனி, ஆகஸ்ட் 20, 2011

ராஜீவ் கொலையில் விலகாத மர்ம முடிச்சு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்​டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்... மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படலாம்!

'மரண தண்டனையை பல்வேறு நாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதனைப் பின்​பற்ற வேண்டுமா?’ என்று மனித உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்​கிறார்கள். 'மூன்று தமிழர்கள் உயிரைப் பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொரு பக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது. ''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது நியாயமா?’ என்பதுதான் அதிர்ச்சிக்​​குரிய முக்கியக் குரல்!

இவர்கள் அத்தனை பேரும் அடையாளம் சுட்டிச் சொல்வது சந்திராசாமி என்ற மனிதரை!

நேமி சந்த் ஜெயின் என்று அழைக்கப்படும் இவரை சந்திரா​சாமி என்றால்தான் அனை​வருக்கும் தெரியும். முன்​னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமான நண்பராகவும், ராஜீவ் கொலை நடந்த காலத்தில் இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகருக்கு நெருங்கிய சகா​வாக​வும் இருந்தார். உலகத்​தின் மிக முக்கியமான ஆயுத வியாபாரியாகச் சொல்லப்படும் கசோக்​கிக்கும் இவருக்கும் நெருங்​கிய தொடர்பு உண்டு. அரசி​யல் தலைவர்களை சதி வேலைகள் செய்து கவிழ்ப்​பதில் கைதேர்ந்தவர் இவர் என்பது வி.பி.சிங் விஷயத்தில் வெளிச்​சத்துக்கு வந்தது. காங்கிரஸில் இருந்து வெளியேறி ஆட்சியைப் பிடித்த வி.பி.சிங்கை எப்படிக் கவிழ்ப்பது என்று சிலர் திட்டமிட்டபோது, செயின் கீட்ஸ் தீவில் வி.பி.சிங் மகனுக்குச் சொத்துகள் இருப்பதாக ஆவணங்களைத் தயாரித்துத் தந்தது இந்த சந்திராசாமிதான். அந்த ஆவணங்கள் போலியானவை என்று நிரூபணம் ஆனபோது, சந்திராசாமி பெயர் டெல்லி மீடியாக்களில் அதிகம் அடிபட்டது. இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய காரியங்களுக்கு சொந்தக்காரர் இந்த சந்திராசாமி!

இவர் மீது, அன்னியச் செலாவணியை மீறிய 12 குற்றச்சாட்டுகள் இருந்தன. அதில் மூன்றில் விடுதலை ஆகிவிட்டார். மீதி 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் எப்போது வெளிநாடு சென்றா லும் டெல்லி நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே செல்ல முடியும். 'சந்திராசாமியை வெளிநாடு செல்ல அனுமதித்தால், அவர் திரும்பி வர மாட்டார்!’ என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் பதில் மனுத் தாக்கல் செய்வார்கள். குறிப்பிட்ட தொகையை டெபாஸிட்டாகக் கட்டிவிட்டு அவர் செல்லலாம் என்று நீதிமன்றமும் அனுமதிக்கும். இது கடந்த 20 ஆண்டுகளாக நடக்கும் வழக்கம்.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி, 'எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்!’ என்று அனுமதி கேட்டபோது, அமலாக்கத் துறை அதிர்ச்சிக்குரிய காரணத்தைச் சொன்னது. 'சந்திராசாமி வெளிநாடு போனால், திரும்ப மாட்டார். பல ஆதாரங்களை அழித்துவிடுவார். மேலும் அவர் மீது சி.பி.ஐ. வழக்கும் உள்ளது!’ என்றது. 'சி.பி.ஐ. வழக்குத் தொடருமா?’ என்று நீதிபதிகள் கேட்க, 'தொடரும்...’ என்று பதில் தந்தார்கள். ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த பல்நோக்குக் கண்காணிப்புப் புலனாய்வுப் பிரிவும் அப்போது மனுத் தாக்கல் செய்தது. அதில், 'ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி சம்பந்தப்பட்டு உள்ளார். எனவே, அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி தரக் கூடாது’ என்று உறுதியாகச் சொன்னது. 'இதற்கு முன்னர் வெளிநாடு சென்றுவிட்டு அவர் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார். ஆனால், இம்முறை திரும்ப வருவாரா என நீதிமன்றத்துக்கு சந்தேகம் இருக்கிறது. உடல்நிலையைக் காரணமாகக் காட்டுவதால், அனுமதி அளிக்கலாம். 90 லட்சம் ரூபாயை டெபாஸிட்டாகச் செலுத்திவிட்டு, அவர் செல்லலாம்’ என்று நீதிமன்றம் சொல்ல... 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால், என் சீடர்களிடம் வாங்கிச் செலுத்திவிடுவேன்!’ என்று சொன்னார் சந்திராசாமி. பணத்தை உடனடியாகக் கட்டிவிட்டு, வெளிநாடு சென்றார். சந்திராசாமி இதுவரை அமலாக்கத் துறைக்கு 65 கோடி வரை கட்ட வேண்டிய பாக்கி உள்ளதாக அத்துறையின் வக்கீல் நீதிமன்றத்தில் கூறினார். அப்படிப்பட்ட சந்திராசாமியை வளைக்காமல் இருக்கிறார்களே என்பதுதான் தமிழ் உணர்வாளர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது!

ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இதன் விசாரணை நடந்து, கைதான 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 19 பேரின் தண்டனை விலக்கப்பட்டு, அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற நான்கு பேரின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவர் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் இருக்கிறார்.

நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ராஜீவுக்குத் தரப்பட்ட பாதுகாப்பில்ஏதாவது குளறுபடிகள் நடந்ததா, அதற்கு யார் குற்றவாளி என்பதை அந்த கமிஷன் விசாரித்தது. இதில் பல அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

மூன்றாவதாக அமைக்கப்பட்டது நீதிபதி ஜெயின் கமிஷன். ராஜீவ் படுகொலை செய்யப்​பட்டதற்கான பின்னணிகள், அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் பற்றி இது விசாரித்தது. இந்த கமிஷனில்தான் பல்வேறு சர்ச்சைக்குரிய மனிதர்கள் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தார்கள்.

பல்வேறு வர்த்தகங்களில் சம்பந்தப்பட்ட பப்லு ஸ்ரீவத்சவா என்பவர் ஜெயின்கமிஷனிடம் அளித்த வாக்குமூலத்தில், ''ராஜீவ் கொலைச் செய்தி கேட்டதும்சந்திராசாமி மகிழ்ச்சியில் கூத்தாடினார். 'நரசிம்மராவைப் பிரதமராக்கப்போறேன்...’ என்று சொல்லிக்​கொண்டே, ராவ் வீட்டுக்கு போன் செய்து அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டு இருந்தார்...'' என்று வாக்குமூலம் கொடுத்தார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரமுகர் ரமேஷ் தலால், 'சந்திராசாமிக்கு இந்த சதியில் பங்கு இருக்கிறது’ என்று சொன்னதாகவும், அதைத் தொடர்ந்து தன்னை சந்திராசாமி மிரட்டியதாகவும் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேட்டி கொடுத்துள்ளார். சந்திராசாமியின் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகள் தொடர்பாக, மகந்த் சேவா தாஸ் சிங் என்பவர் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அவர், ஷாஹித் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவர். இவை அனைத்தையுமே பதிவு செய்துள்ளது ஜெயின் கமிஷன்.

ஆனால், சந்திராசாமிக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் திடீரென்று காணாமல்போன தகவல்களும் 97-ம் ஆண்டு அம்பலம் ஆனது. 89-ம் ஆண்டு முதல் ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அதிகாரிகளது அறிக்கையுடன் சந்திரா​சாமியின் தொலைபேசி உரையாடல்களை மறித்துக் கேட்கப்பட்ட செய்திகளின் ஆவணத் தொகுப்பும் காணாமல்போனது.

இவை அனைத்துக்கும் மேலாக பெங்களூ​ருவைச் சேர்ந்த ரங்கநாத் என்பவரது வாக்கு​மூலமும் சந்திராசாமியை நேரடியாகக் குற்றம் சாட்டி இருந்தது. ''பெங்களூருவில் இருந்து எங்களை சந்திராசாமி தப்பவைத்துவிடுவார். நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்’ என்று சிவராசன் தன்னிடம் சொன்னதாக ரங்கநாத், தனது வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார். சிவராசன் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்த ரங்கநாத், ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாக இருந்து தூக்குத் தண்டனை பெற்றவர். உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.

சென்னையில் இருந்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம், ஈழத்துக்குச் சென்று வந்துவிட்டு தனது அனுபவங்களை 'ஈழப் புலிகளுடன் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் தினமணியில் தொடராக எழுதினார். அவர் இலங்கை சென்றிருந்தபோது, நடிகை பமீலா அங்கு இருந்தது குறித்த தகவலைச் சொல்கிறார். மிஸ் கே.என்.சிங் என்ற பெயரில் பமீலா, ஈழப் பகுதிக்குள் சென்றிருந்தாராம். கொழும்பு சென்ற அவரை விமானப் படை விமானத்தில் சிங்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தனர். இந்திய அழகு ராணிப் போட்டியில் வென்ற இந்த பஞ்சாபிப் பெண் பிரிட்டனில் குடியிருந்தவர். ஆயுதத் தரகர் என்று டெல்லி மீடியாக்களால் அடையாளப்படுத்தப்படும் கஸோகியுடன் நெருக்கமாக இருந்தவர். அவரைப்பற்றி கொழும்பு பத்திரிகைகள் அப்போது என்ன எழுதியது என்று கார்மேகம் சொல்கிறார்....

'பிரபாகரனை எப்படியும் தேடிப் பிடித்துத் தருவேன் என்று சந்திராசாமி, இந்திய அரசிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம். எந்த வழியைக் கையாண்டாவது அதனை செய்து முடிப்பதாக அவர் சபதம் ஏற்றிருக்கிறாராம். அந்த சபதத்தை நிறைவேற்றத்தான், அவர் பமீலாவை இலங்கைக்கு அனுப்பி இருக்கிறார் என்று கொழும்பு நாளேட்டில் செய்தி வந்தது. பமீலா இப்போதும் சந்திராசாமியின் மக்கள் தொடர்பாளர்களில் ஒருவராக இருப்பதாகத் தெரிகிறது. பிரபாகரனை சந்திக்க ஈழப் புலிகள் அனுமதிக்கவில்லை!’ என்று அன்று கொழும்புவில் பரவிய தகவல்களை எழுதுகிறார்.

ஜெயின் கமிஷன் வாக்குமூலங்கள் முதல் கொழும்பு பத்திரிகைகள் வரைக்கும் சந்திராசாமியை நோக்கியே நீளும் நிலையில், அவரை விசாரிக்காமல் ராஜீவ் வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாக எப்படிச் சொல்ல முடியும்?

- ப.திருமாவேலன்

நன்றி: ஜூனியர்விகடன், 24-08-11


புதன், ஆகஸ்ட் 17, 2011

விரித்த வலையில் விழுந்த வேடர்கள்: மாறன் சகோதரர்களின் பொற்காலத்தின் முடிவு

சுதந்திர இந்தியா தனது வரலாற்றில் ஏராளமான கார்ப்பரேட் மோதல்களைக் கண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற முகமூடியுடன் நடக்கும் கார்ப்பரேட்-அரசியல் மோதலுக்கு அவை எதுவுமே நிகரல்ல. சுமார் 20 ஆண்டு காலம் நுஸ்லி வாடியாவுக்கும் தீருபாய் அம்பானிக்கும் நிகழ்ந்த யுத்தம்கூட 2ஜி அலைவரிசை ஊழல் விவகாரத்தின் பின்னணியில் சிறியதாகத் தெரிகிறது. இரண்டு நபர்களிடையிலான பிசினஸ் மோதலாகத் தொடங்கி, ராஜீவ் காந்தி - வி.பி.சிங் இடையிலான மோதலாக, அரசியலுக்குள்ளும் அம்பானி - வாடியா மோதல் நுழைந்தது. ரத்தன் டாடா, அனில் அம்பானி, பார்தி மிட்டல், ஷாகித் பல்வா முதலிய கார்ப்பரேட்களில் தொடங்கி, கருணாநிதி குடும்பத்தினர், ஆ.இராசா, ஷரத்பவார் முதலிய அரசியல்வாதிகள் என 2ஜி ஊழல் போரில் ஏராளமான வி.வி.ஐ.பி.க்கள் முக்கிய பாத் திரமேற்றிருந்தார்கள். தயாநிதிமாறன், கலாநிதி மாறன், ஸ்டெர்லிங் சிவசங்கரன், ஏர்செல் அனந்தகிருஷ்ணன் போன்ற கார்ப்பரேட்களும் அரசியல்வாதிகளும் புதிதாக இணைந்திருப்பது மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குருட்சேத்திரம் உக்கிரமான நிலையை எட்டியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலும் அதன் அம்பலமும் அது தொடர்பான விசாரணையும் ஒரு சாதாரண ஊழல் விவகாரம் சார்ந்தது அல்ல என்ற எளிய உண்மையை விளக்கிப் புரிய வைக்க மிகுந்த பிரயத்தனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது ஒரு சுவாரசியமான முரண்நகைதான். கிளப்பிவிட்ட சூத்ரதாரிகளான மாறன் சகோதரர்களுக்கு எதிராகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரும்பும் சமயம் இது. பாட்டிலில் அடைக்க முடியாத ஒரு பூதத்தை திறந்துவிட்டிருக்கிறோம் என்று 'கேடி பிரதர்ஸ்' என செல்லமாக அறியப்படும் கார்ப்பரேட் - அரசியல் அதிபர்கள் காலம் கெட்ட பிறகு வருந்தக்கூடும். பிசினஸ் போட்டியில் தொடங்கி, அரசியல் அரங்கிற்கு மாறிய இது வரையிலான கார்ப்பரேட் மோதல்களுக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 21ஆம் நூற்றாண்டிற்கே உரிய வகையில் ஒவ்வொரு அங்கத்திலும் அரசியலும் கார்ப்பரேட் மோதலும் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறது. தங்களின் குடும்பத் தொழில் செழிக்க உதவிய தொலைதொடர்புத் துறை தங்கள் பிடியிலிருந்து பறி போனதற்குப் பழிவாங்குவதற்காகத்தான் மாறன்கள் இந்த ஊழலை அம்பலமாக்கினார்களா? டாடாவின் டி.டி.ஹெச். நிறுவனத்தில் பங்குகள் கேட்டு மாறன்கள் மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில், தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது நடந்த 2ஜி ஒதுக்கீட்டின் முறைகேடுகள் குறித்த சமீபத்திய அம்பலங்களின் பின்னணியில் டாடாக்கள் இருக் கிறார்களா?

ராசாவின் தலையை வாங்க அனைவரும் துடித்துக்கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் 2001 முதல் நிகழ்ந்த அத்தனை அலைவரிசை ஒதுக்கீடுகளையும் ஆய்வு செய்யும்படி புதிய தொலை தொடர்பு அமைச்சர் கபில்சிபல் உத்தரவிட்டபோதே மாறன்களும் குற்ற வளையத்தில் வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் சன் டி.வி. நெட்வொர்க்கின் பின்னணியில் மிகப் பெரிய பிசினஸ் சாம் ராஜ்யத்தையும் தந்தை முரசொலி மாறன் காலத்திலிருந்தே அரசியல் ஆதரவையும் சேகரித்து வைத்திருந்த ஒரு குடும்பத்தை, தி.மு.க.வைத் தனது அரணாகப் பயன்படுத்திய மாறன் சகோதரர்களை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாதே! அதனால், கபில்சிபல் நியமித்த நீதிபதி ஷிவ்ராஜ் பாட்டீல் ஒரு நபர் கமிஷன் தயாநிதி மாறனின் தவறுகளை அக்குவேறாக அம்பலப்படுத்தியும் சுமார் இரண்டு ஆண்டுகளாக சி.பி.ஐ. அந்தக் கோப்புகளின் மீது தூங்கிக்கொண்டிருந்தது. சட்டம் தனது கடமையைச் செய்ய, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. மாறன் குடும்பத்தை தி.மு.க. கைகழுவ நினைத்த ஒரு அரசியல் திருப்புமுனை கால கட்டத்தில்தான் நீதியும் நியாயமும் கண்விழித்துக்கொள்ளும் சௌகரியத்தைப் பெறுகின்றன. மாறன் குடும்பத்தினர் தன்னை எவ்வாறு ஏர்செல்லை விற்கும்படி நிர்பந்தித்தனர் என்பதை சி.பி.ஐ.யிடம் சாட்சியமாகக் கொடுக்க திடீரென ஸ்டெர்லிங் சிவசங்கரனுக்குத் தைரியம் வந்தது. ஏர்செல்லை வாங்கிய அனந்தகிருஷ்ணன் கலைஞர் டி.வி.யைப் போலவே புத்தம் புதிதாகத் தொடங்கப்பட்ட சன் டி.டி.ஹெச். நிறுவனத்திற்கு அதன் பிரதிபலனாகத்தான் 800 கோடி ரூபாய் முதலீடு தந்தார் என்றவாதம் முன்வைக்கப்பட்டது. ஏர் செல் தனது கட்டுப்பாட்டில் இருந்தபோதே வழங்கப்பட்டிருக்க வேண்டிய 14 அலைவரிசை உரிமங்களை, அது கைமாறிய பிறகு வழங்கியதற்கான லஞ்சம்தான் இது என்பது சிவசங்கரனின் வாதம். நீதிபதி ஷிவ் ராஜ் பாட்டீல் கமிட்டி அறிக்கையும் இத்தகைய ஒரு பார்வையை முன்வைத்திருப்பதால், தயாநிதிமாறனை விசாரிக்க பிரதமர் மன் மோகன் சிங் அனுமதி கொடுத்திருக்கிறார் என்ற தகவல் ஆச்சரியமளிக்கவில்லை. தயாநிதி மாறன் பதவி விலக நேரும், அவர் மட்டுமின்றி அவரின் சகோதரரும் கார்ப்பரேட் அதிபருமான கலாநிதியும் கம்பி எண்ண வேண்டியிருக்கலாம் என்ற பேச்சுக்களும் ஒரு நாள் உண்மையாகலாம்.

ஸ்பெக்ட்ரம் விசாரணை எதுவரை பாயும், எது வரை பாயாது என்பது முற்றிலும் சட்டத்திற்குட்பட்டது அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஆ.ராசாவின் 2ஜி அலைவரிசை ஊழலில் நேரடி தொடர்பு இருந்தாலும் ரத்தன் டாடாவும் அனில் அம்பானியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மற்றவர்களிடம் கடுமை காட்டி வரும் நீதித்துறை ரத்தன் டாடாவையும் அனில் அம்பானியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அவர்கள் அளவுக்குப் பெரிய தொழிலதிபர் அல்லாத ஷாகித் பல்வா மட்டும் கம்பிகளின் பின்னால் ஜாமீன் இல்லாமல் தொடர்கிறார். அதனால் கலா நிதி மாறனின் உயரம் விசாரணைக்கு உட்படுத்தும் அளவில் இருக்குமா, இல்லையா என்பது கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் தங்களின் அகந்தையாலும் அடாவடித்தனங்களினாலும் மாறன் குடும்பத்தினர் சம்பாதித்திருக்கும் எதிரிகளின் எண்ணிக்கை தராசை அவர்களுக்கு எதிராகத் திருப்பக்கூடும்.

நுஸ்லி வாடியாவுக்கும் திருபாய் அம்பானிக்கும் இடையிலான மோதலை, பாரம்பரிய பணக்காரருக்கும் புதுப் பணக்காரருக்கும் இடையிலான மோதலாகப் பார்ப்ப துண்டு. நேர்மையான வழிகளில் பிசினஸ் செய்யும் வாடியாவின் வழிமுறைக்கும் அத்தனை தில்லு முல்லுகள் மூலம் பிசினஸ் சாம் ராஜ்யத்தை விரிவாக்கும் அம்பானியின் வழிமுறைக்குமான மோதலாகவும் பார்க்கப்படுவதுண்டு. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் பின்னணியில் நிகழும் கார்ப்பரேட்-அரசியல் மோதல் அவ்வளவு தெளிவான வரையறைகள் கொண்டது அல்ல. அரசையும் சட்டத்தையும் தனக்கு சாதகமாக வளைத்து, அத்தனை துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு பிசினஸ் செய்ய வேண்டிய யுகம் அம்பானியின் வரவுடன் தொடங்கிவிட்டதை உணர்ந்த நுஸ்லி வாடியாவின் தந்தை தனது அத்தனை சொத்துக்களையும் விற்றுவிட்டு ஸ்விட்சர்லாந்தில் செட்டிலாகிவிடத் துடித்தார். அதை ஏற்க மறுத்து, தந்தையுடன் மோதி தனது சொத்துரிமையைப் பெற்று, அம்பானியின் சாம தான பேததண்ட சாம்ராஜ்யத்திற்கு எதிராக நீண்ட தர்ம யுத்தத்தை நடத்தினார் வாடியா. 21 ஆம் நூற்றாண்டில் கிளம்பியிருக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் துரோகமும் வஞ்சமும் நிறைந்த மகாபாரத யுத்தம் போல நிகழ்கிறது. ஆனால் இந்த நவீன மகாபாரத குருட்சேத்திரத்தில் இரு புறமும் கௌரவர்களே நிற்கிறார்கள்.

அம்பானிகளைப் போல சாமதான பேத தண்டங்களைப் புரியும் மாறன் குடும்பத்தினரின் முன்பு ரத்தன் டாடாவும் தனது மதிப்பீடுகளை இழந்து நிற்கிறார். நேர்மையான, பொறுப்பான பிசினஸ் வழி முறைகளின் முன்னுதாரணமாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இந்தியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியான டாடா குழுமம், மாறன்களைத் தோற்கடிப்பதற்காக ஆ.ராசாவின் ஊழல் கூட்டாளியாகத் தன்னை மாற்றிக்கொண்டது. டாடா-ராசா கூட்டணியை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கேற்ற மாறன் குடும்பத்தினர் இப்போது பதிலடியை எதிர்கொள்கிறார்கள். கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்ற பழ மொழியின் வாழும் உதாரணமாக அவர்கள் மாறுகிறார்கள்.

ஆ. ராசாவும் கனிமொழியும் இவ்வளவு முட்டாள்தனமாகவா ஊழல் செய்வார்கள் என்ற ஆச்சரியத்திற்கு நடுவில், மாறன் சகோதரர்கள் இவ்வளவு ஆணவத்துடனா ஊழல் செய்வார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சரானவுடன் சென்னையிலுள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு கொடுக்கப்பட்ட 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் அவரது அண்ணன் கலாநிதிக்குச் சொந்தமான சன் டி.வி.யின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரின் அதிகார பூர்வ பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டிய இந்த இணைப்புகள், சன் டி.வி..யின் ஒளி பரப்பிற்குப் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு 440 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சில வருடங்கள் முன்பு கிளம்பி பிசுபிசுத்த இந்தக் குற்றச் சாட்டுகள் இன்று மீண்டும் கிளம்பி மாறன்களின் கழுத்தை இறுக்குகிறது.

கனிமொழி சிறை சென்ற பிறகே மாறன்கள் வலையில் சிக்குகிறார்கள் என்பதால் இதில் சி.ஐ.டி. காலனி சக்திகளின் பங்கு இருக்கிறது என நம்பப்படுகிறது. சிவசங்கரன் சி.ஐ.டி. காலனிக்கு நெருக்க மானவராகவே அறியப்படுகிறார். ஒரு காலத்தில் முரசொலி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த அவரையே மாறனின் புதல் வர்கள் பதம் பார்த்தார்கள். சிவசங்கரனை ஒரு வழக்கில் சிக்க வைத்து, சிறையில் தள்ள 'கேடி பிரதர்ஸ்' முயன்றதாக கூறப்படுகிறது. சிவசங்கரன் நாட்டை விட்டு ஓடி தப்பித்த நிலையில், அவரின் வயதான பெற்றோரைக் கம்பிக்குப் பின்னால் நிறுத்தி பிளாக்மெயில் செய்ய திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த விரோதத்தால் உந்தித் தள்ளப்படும் சிவசங்கரன் மட்டுமே மாறன் சகோதரர்களை சிறையில் தள்ளப் போதுமானது அல்ல. நுஸ்லி வாடியா தனது தந்தையுடனான சண்டையில் வெற்றி பெற ஜே.ஆர்.டி. டாடாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தார். அதே போல மாறன் சகோதரர்களால் பாதிக்கப்பட்ட ரத்தன் டாடா, ஸீ டி.வி. குழுமத்தின் சதீஸ் சந்திரா முதலிய சக்திகள் தங்களின் செல்வாக்கையெல்லாம் சி.ஐ.டி. காலனியின் இந்த முயற்சிக்குப் பின்னால் ஒன்று திரட்டினால்தான் ஜெகஜ்ஜால கில்லாடிகளான கேடி சகோதரர்கள் வசமாக சிக்குவார்கள். தி.மு.க.வும் அதன் தொண்டர்களும்கூட மாறன்களுக்கு எதிராகத் திரும்புவதால் சிவசங்கரனைத் தங்களின் பிரம்மாஸ்திரமாக சி.ஐ.டி. காலனி பயன்படுத்துகிறது. தங்களின் சிறைவாசத்திற்கு முழு காரணம் என சி.ஐ.டி. காலனி நம்பும் மாறன்களையும் தங்கள் வரிசையில் திகாரில் அடைக்கும்வரை அவர்கள் ஓயப் போவதில்லை. எனினும் எஸ் டெல் என்ற நிறுவனம் மூலம் மறைமுகமாக 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற சிவ சங்கரனுக்கு எதிராகவும் ஸ்பெக்ட் ரம் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரின் வாக்குமூலம் மட்டுமே மாறன்களை வீழ்த்தப் போவதில்லை. மாறாக, மாறன்களுக்கு எதிரான சாட்சியங்களாக ராசா ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்படும் தொலைதொடர்பு அதி காரிகள்தான் கேடி பிரதர்ஸின் கதையை முடிக்கும் கடைசி ஆணி களாக இருக்கப் போகிறார்கள்.

இந்தப் பூனைக்கு மணி கட்டப்போவது யார் என்ற தலைப்பில் தெஹல்கா வெளியிட்ட கட்டுரை வரை தனக்கு எதிரான அத்தனை செய்திகளுக்கும் வக்கீல் நோட்டீல் அனுப்பி மிரட்ட முயன்ற மாறன்கள் இப்போது அந்தப் பழக்கத்தை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். விவகாரம் தலைக்கு மேல் போய்விட்டது என்பதால் தேங்காய் மூடி வக்கீல்களை விட்டுவிட்டு நிஜமான அதிகார மையங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். மாறன்கள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ளே போகிறார்களோ இல்லையோ, அவர்களின் கேபிள் தொழில் ஏகாதிபத்யம் ஒழிக்கப்பட வேண்டும். அது ஒரு பெரிய சமூக சேவை. ஏனெனில் கேபிள் தொழில் வெறுமனே அவர்களின் பிசினஸ் வெற்றிக்கு மட்டுமே உதவவில்லை. மக்களுக்குச் சென்று சேர வேண்டிய உண்மையான செய்திகளை முடக்கும் மோசமான தணிக்கையாகவும் அது திகழ்கிறது. இந்தியா போன்ற ஜனநெருக்கடி மிகுந்த தேசத்தில் டி.டி.ஹெச்.சைவிட என்றென்றைக்கும் கேபிள் தொழில்தான் அதிக லாபகரமாகவும் அதிக வீச்சு கொண்டதாகவும் இருக்கப்போகிறது. இதை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொண்டு தனது எதிரி சேனல்கள் எதுவும் தமிழகத்தில் காலூன்ற விடாமல் மாறன்கள் தடுத்தி நிறுத்தி வருகிறார்கள். மாறன்களின் கேபிள் ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு, சூழ்ச்சித் திறனைக் கண்டு தேசிய, சர்வதேச அளவிலான ஊடக நிறுவனங்கள் அஞ்சுவதால் தமிழ்ச் சந்தையில் களமிறங்குவதற்குத் தயங்குகிறார்கள். தமிழ் டி.வி. ஊடகச் சூழல் ஜனநாயகமற்றதாகத் திகழ்வதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் ஒட்டுமொத்த கேபிள் தொழிலையும் அரசுடமையாக்குவது அதற்குத் தீர்வல்ல. ஏனெனில் ஒரு தனியார் நிறுவனத்தின் தணிக்கையைவிட ஒரு அரசு அமைப்பின் தணிக்கை மோசமானது. அரசு கேபிள் கார்ப்ப ரேஷன் மூலம் சன் குழுமத்தின் கேபிள் நிறுவன ஏகாதிபத்யம் உடைக்கப்பட்டாலே ஊடகச் சூழலில் ஜனநாயகம் தழைக்கத் துவங்கும்.

மோசடிகளின் மீது கட்டமைக்கப்படும் அம்பானிகளின் சாம்ராஜ்ஜியம் ஒரு நாள் ஒட்டுமொத்த இந்தியாவையும் விழுங்கப் போகிறது என்ற நுஸ்லி வாடியாவின் எச்சரிக்கையை 1980களில் யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. டாடா, பிர்லாவைப்போல அம்பானிகள் வளர்வார்கள் என அன்றைய தலைமுறை கார்ப்பரேட்கள் நம்பாததால் வாடியா உளறுகிறார் என நினைத்தார்கள். இன்று அதே வர்ணனை மாறன்களுக்குப் பொருந்தும். தங்கள் பிசினஸ் வெற்றிக்காக அத்தனை வஞ்சகங்களிலும் ஈடுபடக்கூடிய 21ஆம் நூற்றாண்டின் அம்பானிகளாகத் திகழும் மாறன்கள் தென்னிந்திய டி.வி. சந்தையை ஏற்கனவே தங்கள் மூர்க்கமான பிடியில் வைத்திருக்கிறார்கள். மலிவு விலை விமான சேவைத் தொழிலைக் கைப் பற்றும் அவர்களின் முயற்சிக்கு தற்காலிக தடை மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. 1980களில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜவுளித் தொழிலை வியாபித்தபோது, பிற்பாடு பல்வேறு துறைகளையும் அவர்கள் வளைத்துப் போடுவார்கள் என யாரும் கற்பனை செய்யவில்லை.

தனக்குச் சொந்தமான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தன்னைவிட அம்பானிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக அதன் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா ஆத்திரத்துடன் கூறியதுண்டு (ரிலையன்ஸுக்கு எதிராக வாடியாவுடன் கைகோர்க்கவும் அது ஒரு காரணமாக இருந்தது). அந்த அளவுக்கு ரிலையன்ஸின் செல்வாக்கு பாதாளம் வரை பாய்ந்தது. ஆனால் மாறன்களுக்கு இன்று நண்பர்களைவிட எதிரிகளே அதிகம். ரிலையன்ஸ் காசு கொடுத்து வாங்கியது போன்ற அரசியல் செல்வாக்கை, தி.மு.க.வின் பின்னணி மூலம் மாறன்கள் அனுபவித்தார்கள். தி.மு.க.வின் பின்னணி இல்லாத காலகட்டத்தில் மாறன்களின் எதிரிகள் ஒன்று சேர்வது அவர்களின் சாம்ராஜ்யத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நுஸ்லி வாடியாவும் தீருபாய் அம்பானியும் ஒரு கட்டத்தில் சமரசமாகச் சென்றது போன்ற வரலாறு திரும்புமா? மாறன் சகோதரர்களில் ஒருவராவது சிறை செல்லாமல், துரோகமும் வஞ்சமும் நிறைந்த ஸ்பெக்ட்ரம் மகாபாரதப் போரில் சமரசம் துவங்காது என்பது உறுதி.

-மாயா

நன்றி: உயிர்மை, ஜூலை 2011

(ராஜீவ் கொலையில்) விசாரிக்கப்படாத மர்ம மனிதர்கள் இன்னும் வெளியில் இருக்கிறார்கள்!

''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைச் சதிகாரர்களைப் பிடிக்​காமல் விட்டுவிட்டு, மூன்று பொடியன்களுக்குத் தூக்குத் தண்டனை வாங்கித் தந்த சி.பி.ஐ-யில் வேலை பார்த்ததற்கு வெட்​​கம், வேதனை, அவ​மானம், குற்ற உணர்ச்சி ஆகியவற்றால் குமுறுகிறேன்... கொந்தளிக்கிறேன்!'' - இப்படி தன் வீட்டுச் சுவரில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்து இருக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன்ராஜ். இவர், ராஜீவ் கொலை வழக்கு விசாரணைக் குழுவில் இடம் பெற்ற அதிகாரிகளில் ஒருவர்!

'ஏன் இந்தத் திடீர் ஆவேசம்?’ என்று கேட்கும் முன்பே, சுவரில் அடித்த பந்தாக வந்தது பதில்!

''நான் புலிகளுக்கு ஆதரவாளன் அல்ல. 'விசாரணை முழுமை அடையாமல், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரைத் தூக்கிலிடக் கூடாது.’ என்பதே எனது கருத்து. சி.பி.ஐ-க்கு விருப்பப்பட்டுப் போன நான், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை நடந்த விதத்தைப் பார்த்து, வெதும்பிப்போய் வி.ஆர்.எஸ். வாங்கினேன். இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே உயர் அதிகாரிகள் பலர் அலட்சியப் போக்குடன்தான் இருந்தனர். ஒரு நூல் கிடைத்தால், குறிப்பிட்ட லெவலுக்கு மேல் அதை விசாரிக்காமல், அப்படியே நிறுத்தி விடுவார்கள். ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது விடுதலைப் புலிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்குக் காரணகர்த்தாவாக இருந்து பெரும் நிதி உதவி கொடுத்துப் பின்னால் இருந்து இயக்கியவர்கள், வேறு பல உதவிகள் செய்தவர்கள் எனப் பல மர்ம மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே? அப்படிப்பட்டவர்களை அரசியல் காரணங்களுக்காகப் பொத்திப் பொத்திப் பாதுகாத்தார்கள் என்பதுதான் உண்மை.

ஒற்றைக்கண் சிவராசன் பெங்களூரு கோனேகொண்டா பகுதியில் தங்கி இருந்த வாடகை வீட்டை நாங்கள் முற்றுகை இட்டதும், தாக்குதலுக்காக உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்டோம். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அனுமதி கொடுக்காமல் வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார்கள். தாக்குதல் நடத்த உடனே அனுமதி கொடுத்திருந்தால், சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியும். 'இந்தக் கொலையில் யார் யாருக்கு என்னென்ன பங்கு?’ என்ற மொத்த விவரங்களையும் கறந்திருக்கலாம். ஆனால், அந்தத் தாக்குதலை உடனே நடத்த விடாமல் ஏன் தடுத்தார்கள் என்பது இது வரை எனக்குப் புரியாத புதிர்தான்!

ராஜீவ் கொலைக்கான பணப் பரிமாற்றத்தில், சந்திராசாமி, கே.பி. என்கிற பத்மநாதன் ஆகியோருக்குப் பங்கு இருக்கிறது. இவர்கள் இருவருமே வெளியில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தண்டனை வாங்கித் தராமல், உல்லாசமாக உலவ விட்டது ஏன்?

ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகர், 'அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப் போய்விட்டேன்...’ என்று சொன்னார். ஆனால், அவர் ஆஸ்பத்திரிக்குப் போகவில்லை. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்தான் மரகதம் சந்திரசேகரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார் என்பது பின்னர்தான் தெரியவந்தது. லலித் சந்திரசேகரின் இந்தத் தவறான வாக்குமூலத்தை மேலும் விசாரிக்கவில்லை. இந்த முரண்பாடுகள் குறித்து நான்கூட கேட்டேன். ஆனால், யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. முதலில் பார்க்கும்போது, அடிபடாமல் இருந்திருக்கிறார் லலித் சந்திரசேகர். ஆனால், நான்கு நாட்கள் கழித்து காலில் கட்டுப் போட்டுக் கொண்டு நடமாடி இருக்கிறார்.

'மல்லிகை’ இல்லத்தில்தான் எங்களது விசாரணைகள் நடந்தன. மல்லிகைக்கு முன்னால் சந்தேகத்​துக்கு இடமான வகையில் ஒருவ​னைப் பிடித்தோம். 'அமெரிக்​காவில் இருக்கும் ஒரு பெண், மல்லிகை இல்லத்தின் முகவரியைக் கேட்டார். அதனால்​தான் முகவரியைக் குறிக்க வந்தேன்.’ என்று அந்தப் பையன் சொன்​னான். அமெரிக்காவில் இருந்து இந்தத் தகவலைக் கேட்ட பெண்ணின் பெயர் பவானி. அவரது கணவர் பெயர் டேரியல் பீட்டர். இவர், லலித் சந்திரசேகரின் நண்பர். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களில் இவரும் ஒருவர்.

எங்களிடம் பிடிபட்டவனின் வீட்டைச் சோதனை செய்தோம். அங்கு ஒரு கடிதம் கிடைத்தது. 'இந்த லலித்தால்தான் இந்த நிலைமை. இதை கார்த்தி​கேயனிடம் சொல்ல வேண்டும்.’ என்று அமெரிக்காவில் இருந்த பவானி, அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தார். அதைக் கைப்பற்றினோம். இதற்காகத்தான் மல்லிகை முகவரியை அவர் கேட்டிருந்தார். எங்கள் அதிகாரிகள் இரண்டு பேர் அப்போது அமெரிக்காவில்தான் இருந்தார்கள். அவர்களிடம் இந்த முகவரியைக் கொடுத்து விசாரிக்கலாம் என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். உயர் அதிகாரிகள் தகவல் தந்திருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், அமெரிக்காவில் இருந்த அதிகாரிகளுக்கு இந்தத் தகவல் சொல்லப்படவே இல்லை. பிடிபட்ட கடிதம் அடங்கிய கோப்பு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் என்னிடம் திருப்பித் தரப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் இருந்து எழுதப்பட்ட அந்தக் கடிதம் கோப்பில் இல்லை. ஏன் அதை மறைத்தார்கள்? இதுபோல பல நபர்களை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை.

இந்த சந்தேகங்களை நான் தொடர்ந்து எழுப்பி வருகிறேன். ஆனால், சி.பி.ஐ. இதற்கு உரிய பதிலை இதுவரை தரவில்லை. 'உண்மைகள் உள்ளது உள்ளபடி வெளிவர வேண்டும்’ என்பதே என் எண்ணம். ராஜீவ் கொலை சதியில் ஈடுபட்ட பெரும்புள்ளிகளின் தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக, பல்வேறு உளவு நிறுவனங்களின் நிபுணர்களை உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்பு ஏஜென்ஸி (எம்.டி.எம்.ஏ.) அமைக்கப்பட்டது. இந்த ஏஜென்ஸி யார் யாரைக் குற்றம் சாட்டுகிறதோ, அவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள். அந்த முதலைகளை முதலில் கழுவில் ஏற்றிவிட்டு, அதன் பிறகு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தண்டனை கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும். எனவே, அதுவரை இவர்கள் மீதான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் படி ஏறப் போகிறேன்...'' என அதிரடி அஸ்திரம் ஏவினார் மோகன்ராஜ்.

-தி. கோபிவிஜய்

நன்றி: ஜூனியர் விகடன் 21 ஆகஸ்ட் 2011

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

சந்தி சிரிக்கும் இந்திய மானம்!

ர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள் - இந்திய ராணுவத்தினர்!

அமைதி காக்கும் பணிக்காக காங்கோவுக்கு அனுப்பப்பட்ட இந்திய வீரர்கள், அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகி, அசிங்கமாகி இருக்கிறது!

ஆப்பிரிக்க உலகப் போர்

ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை யும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில், 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களி லேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்கநாடு கள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடின. இதுவரை 54 லட்சம் பேரின் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ளது!

பாலியல் வன்முறை - ஓர் ஆயுதம்

காங்கோ போர்ப் பாதிப்புகளில் மிக முக்கியமானது, பெண்கள் மீதான வன்முறை. உலகிலேயே பாலியல் வன்முறைகள் மலிந்த நாடு காங்கோ. பலாத்காரம் என்பது அங்கு ஓர் ஆயுதம். ஒரு பெண்ணைப் பலர் சேர்ந்து சிதைப்பது அல்லது ஆயுதக் குழுக்களை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைக் கொண்டு சிதைப்பது... இதன் மூலம் எதிரி சமூகத்தை நோயாளிகளாக்கி முடக்குவது என்பது காங்கோ போரின் முக்கியமான வியூகங்களில் ஒன்று. இந்தப் போர்க் காலகட்டத்தில் மட்டும், குறைந்தது 2 லட்சம் பெண்கள் காங்கோவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன ஐ.நா. சார் அமைப்புகள்.

காங்கோவில் இந்திய ராணுவம்

ரத்த ஆறு கட்டுமீறி ஓடிய நிலையில், கடந்த 2003-ல் சர்வதேசத் தலையீடுகள் காரணமாக காங்கோவில் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, ஓர் இடைக் கால அரசு அமைக்கப்பட்டது. போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் தொடரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் ஐ.நா. சபையின் அமைதி காக்கும் படை காங்கோ வுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 22,000 பேரைக் கொண்ட அந்தப் பன்னாட்டுப் படையில் 3,896 பேர் இந்திய வீரர்கள். காங்கோவில் இந்திய ராணுவம் இப்படித்தான் கால் பதித்தது. ஆனால், யாரைப் பாதுகாக்கச் சென்றார்களோ, அவர்களையே பதம் பார்த்து வந்து இருக்கிறார் கள் இந்திய வீரர்கள்.



மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் மெள்ளக் கசிந்தது. ஆனால், அப்போது அமைதி காக்கும் படையும் இந்திய ராணுவமும் விஷயத்தை மூடி மறைத்தன. அமைதி காக்கும் படைக்கு வீரர்களைப் பங்களிப்பதில் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. இந்தப் பின்னணியில் இந்தியாவைச் சங்கடத்துக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்தது அமைதி காக்கும் படை. ஆனால், இந்திய வீரர்கள் மீது அடுத்தடுத்துப் புகார்கள் வந்த நிலையில், முதல்கட்ட விசாரணைக்கு அது உத்தரவிட்டது. இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை இந்த விசாரணை உறுதி செய்தது.

இதுகுறித்து தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்ப தாகத் தெரிவித்தார். இவ்வளவுக்குப் பிறகும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ''இந்தக் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை'' என்று கூறிவந்த இந்திய ராணுவம், ஐ.நா. சபையின் தொடர் நெருக்குதல்களால் கடந்த மே 24-ம் தேதி இது தொடர்பாக விசாரிப்பதாக அறிவித்தது. இத்தகைய சூழலில், இந்திய வீரர்களால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் இந்திய ஜாடையில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப்பற்றியும் செய்திகள் வெளியானதால், கையும் களவுமாகப் பிடிபட்டு இருக்கிறது இந்திய ராணுவம்!

இந்திய ராணுவத்தின் பாலியல் அத்தியாயம்

பாலியல் குற்றச்சாட்டுகள் இந்திய ராணுவத்துக்குப் புதிது அல்ல. சொல்லப்போனால், அவை நம்முடைய ராணுவத்தின் வரலாற்றில் பிரிக்க முடியாத - அதிகம் படிக்கப்படாத - ஓர் அத்தியாயம். காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கேடயமாக வைத்து, காலங்காலமாக அத்துமீறல்களை நடத்தி வருகின்றன இந்தியப் படைகள்.

மணிப்பூரில் மனோரமா என்ற இளம் பெண் ஆயுதப் படையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதையும் அதன் தொடர்ச்சியாக மணிப்பூர் பெண்கள் 'இந்திய ராணுவமே எங்களையும் பலாத்காரப்படுத்து’ என்கிற பதாகையோடு நடத்திய நிர்வாண ஆர்ப்பாட்டத்தையும் மறந்துவிட முடியுமா என்ன? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துளி நீரைப் பருகாமல் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் அடித்தளம்... மனோரமா கொலைதான்!

காஷ்மீரில் நம்முடைய ஆயுதப் படைகளின் அத்துமீறல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் 'காஷ்மீர் மீடியா சர்வீஸ்’, காஷ்மீரில் மட்டும் 1989 ஜனவரியில் தொடங்கி, கடந்த ஜூன் வரை 9,999 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்த ஜூன் மாதத்தில்கூட இரு பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.

ஈழத்தில் இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இன்றைக்கும் சொல்லி அழுகிறார்கள் தமிழ்ப் பெண்கள்.

ஆனால், இந்திய ராணுவம் இத்தகைய குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதையே வழக்கமாகக்கொண்டு இருக்கிறது. இங்கே ராணுவத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டால், அது வழக்காகப் பதிவுசெய்யப்படுவது, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பெரும் பரபரப்பை ஏற்படுத் தும்போது மட்டும்தான். ராணுவத்தினரின் அத்துமீறல்களில் குறைந்தது ஒரு சதவிகிதக் குற்றங்கள்கூட பதிவுசெய்யப்படுவது இல்லை என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ஆனால், அப்படிப் பதிவு செய்யப்படும் வழக்குகள் மீதும்கூட சர்ச்சைக்குரிய விசாரணைகளையே நடத்தி இருக்கிறது இந்திய ராணுவம்.

உதாரணமாக, காஷ்மீரில் 1994-ல் தொடங்கி 2010 வரை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக விசாரணை நடத்திய வழக்குகள் 988. ''இந்தப் புகார்களில் 95 சதவிகிதப் புகார் கள் (940 வழக்குகள்) போலியானவை'' என்று கடந்த ஆண்டு கூறினார் இந்தியத் தரைப் படைத் தளபதி வி.கே.சிங்.

பொதுவாக, ராணுவத்தினர் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும், இந்திய ராணுவம் முன்வைக்கும் உடனடிப் பதில் இதுதான்: ''இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது. இந்திய ராணுவத்தின் நன்மதிப்பைக் குலைக்கச் செய்யும் உள்நோக்கம்கொண்டது!''

இந்திய அரசு, ராணுவத்தின் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. இந்திய அரசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உண்டு - ஒருவருடைய தவறில் மற்றவர் தலையிடு வது இல்லை என்று. நம்முடைய எதிர்க் கட்சிகளும் அப்படியே!

என்ன செய்வது? இந்த தேசத்தில் ஆயுதப் படைகளின் எல்லாத் தவறுகளையும் மூடி மறைக்க, 'தேசபக்தி’ என்ற ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது!

-சமஸ்

நன்றி: ஆனந்த விகடன்

பி.கு: ஆங்கிலத்தில் படித்தால்தான் நம்புவேன் என்பவர்களுக்கு...: அவுட்லுக் இதழில் வந்த கட்டுரை

புதன், ஆகஸ்ட் 10, 2011

ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டமுடியாமல் செத்துப் போன அண்ணாவின் மகன்!

மிழக அரசியலில் அறிஞர் அண்ணா என்ற பெயர், ஒரு மந்திரம்! ஆனால், அந்த அண்ணாவின் பெயரைச் சொல்லி தங்களை வசதி ஆக்கிக் கொண்ட சில கட்சிக்​காரர்கள் கைவிட்ட நிலையில், கடந்த வெள்ளி அன்று இறந்துபோனார், அவரது வளர்ப்பு மகனான சி.என்.ஏ.இளங்கோவன்!

இளங்கோவனிடம் பல வருடங்​களாகத் தனி உதவி​யாளராக இருந்த சண்முகராஜ், நெகிழ்வான குரலில் நம்முடன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

''பேரறிஞர் அண்ணா அவர்கள் - பரிமளம், இளங்​கோவன், ராஜேந்திரன், கௌதமன் என்று நான்கு பேரைத் தத்தெடுத்து வளர்த்தார். தன் இரண்டாவது வளர்ப்பு மகனான இளங்கோவன் மீது அவ்வளவு பிரியம் அண்ணாவுக்கு. இன்று ஆட்சியிலும், கட்சியிலும் இருக்கும் பல எம்.பி-க்கள், மந்திரிகள் எல்லோரையும் கைதூக்கி​விட்டவர் இளங்கோவன்அய்யாதான்!

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் உள்ள பலர் கோடிகளாக சம்பாதித்த​போது, இந்த அண்ணாவின் வளர்ப்பு மகன் குடும்பத்தாரோ குடியிருக்கக்கூட சொந்த வீடு இல்லாமல் வாழ்ந்தார்கள். சிங்கிள் பெட்ரூம் கொண்ட அரசு வாடகைக் குடியிருப்பில் சுமார் 20 ஆண்டு காலம் வாழ்ந்தார். இதோ, இப்போது டபுள் பெட்ரூம் வீட்டுக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகி இருக்கிறது. இதை வாங்குவதற்கு மூன்று ஆண்டுகள் அவர் கஷ்டப்பட்டதை நேரில் பார்த்து வருந்தியவன் நான்.

அண்ணாவை வெளியீட்டாளராகக்​கொண்டு வெளிவந்த 'காஞ்சி’ எனும் பத்திரிகையின் ஆசிரி​யராக இளங்கோவன் இருந்தார். மூத்த பத்திரிகையாளர் எனும் தகுதியில் மாதம் ரூ. 3,000 ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்தார். 'அண்ணாவின் வளர்ப்பு மகன் ரூ. 3,000 ஓய்வு ஊதியத்துக்காக விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறதே... அவரின் துன்ப நிலை என்ன?’ என்பது அப்போதைய முதல்வர் யோசித்திருக்க வேண்டாமா? ஓடி வந்து உதவி செய்திருக்க வேண்டாமா?!

இரண்டு மாதங்களுக்கு முன்பு வழுக்கி விழுந்து விட்டார் இளங்கோவன். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சரியாக கவனிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சீழ் பிடித்து, அது ரத்தத்தில் கலந்து, மரண வாயிலுக்கு அவரை இழுத்துவந்துவிட்டது. அதன் பிறகு இன்னொரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். இரண்டு மருத்துவமனைகளிலும் மருத்துவச் செலவே, இரண்டு மூன்று லட்சங்கள் ஆகிவிட்டது. அங்கே இங்கே என்று அலைந்து, நண்பர்களின் உதவியால்தான் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிந்தது. 'அண்ணாவின் மகன் மருத்துவச் செலவுக்குக்கூட வழியின்றிதான் இறந்துபோனார்’ என்கிற உண்மை, அண்ணாவைத் தங்கள் கொடிகளில் எல்லாம் வைத்திருக்கும் கட்சிக்காரர்களுக்குத் தெரியுமா?

தேவைகளே இல்லாத மனிதர் இளங்கோவன். சட்டையைக்கூட இஸ்திரி போடாமல்தான் அணிவார். அவர் நினைத்து இருந்தால், அரசியலில் களம் கண்டிருக்க முடியும். ஆனால், வாரிசு அரசியலை ஒருபோதும் ஆதரித்தது இல்லை அண்ணா. தன்னால் எந்த ஒரு களங்கமும் தன் தந்தை ஆரம்பித்த கட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் இவர் மிகவும் கவனமாக இருந்தார். 'தகுதி இருந்தால் தலைவன் ஆகலாம்!’ என்றவர் அண்ணா. அதற்கு ஏற்றபடியே வாழ்ந்தும் காட்டினார். அந்தப் பெருமைகொண்ட குடும்பத்தாரின் மாண்பு, 'தனயனாக இருந்தால், தலைவன் ஆகலாம்!’ என்று இன்று வாரிசு அரசியல் நடத்துபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது!'' என்று வருத்தத்துடன் முடித்தார் சண்முகராஜ்.

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை டிஸ்சார்ஜ் செய்யும் போது ரூ. 30 ஆயிரம் ரூபாய் குறைந்ததாம். உறவினர் ஒருவரின் நண்பர் இந்த பரிதாப நிலையைப் பார்த்து தனது கிரடிட் கார்டு மூலமாகப் பணம் கொடுத்தாராம். இளங்கோவன் மனைவி விஜயாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாம். அந்தத் தொடர்பில் தயாளுவுக்கு போன் செய்து சொல்லி இருக்கிறார். ரூ.10 ஆயிரம் கொண்டுவந்து கொடுத்துப் பார்த்தாராம் தயாளு. சொந்த வீடும் இல்லாமல், சொத்தும் இல்லாமல், பல லட்சம் கடனை வைத்துவிட்டுப் பரிதாபமாகச் செத்துப் போயிருக்கிறார் இளங்கோவன். ''அவர்கள் வாழ்ந்த வறுமையை என் வாயால சொல்ல மாட்டேன்...'' என்று உறவினர் ஒருவர் ஒதுங்கியபடி அழுததைப் பார்த்தபோது....'அண்ணா’ ஒரு செல்லிங் பாயின்ட் என்பதை அவரது குடும்பம் மட்டும் உணரவில்லை.

பகுத்தறிவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் குடும்பம் என்பதை நிரூபிக்கும் வகையில், இளங்கோவனின் மகள் கண்மணிதான் இறுதிச் சடங்குகளைச் செய்தார். 'விட்டுட்டுப் போயிட்டீங்களே அய்யா!’ என்று கண்களில் நீர் தளும்பி நிற்கிறார், மனைவி விஜயா இளங்கோவன். இந்த இருவர் கண்ணீரையும் துடைக்க வேண்டியது அந்த இரண்டு கழகங்களும்தான்!

இதயம் கனக்குதே அண்ணா!

- ந.வினோத்குமார்

நன்றி: ஜூனியர் விகடன் 14-08-2011

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

இலங்கைப் போர்க் குற்ற அறிக்கை : அப்பாவிகளின் ரத்தத்தில் ஒளிந்திருக்கும் கொடூரம்

இலங்கைக்குள் பல ஆண்டுகளாகவே உள்நாட்டு யுத்தம் நடந்துவருகிறது. ஆனால் நான்காவது ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில், நடந்த கொடூரமான போர்க்குற்றங்கள் குறித்து, சர்வதேசச் சமூகத்தின் ஒரு பகுதியினர் கவலையடைந்திருக்கின்றனர். இது குறித்து விசாரிக்க, ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம், நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு ஒரு விசாரணைக் குழு அல்ல; ஆலோசனைக் குழு மட்டுமே என்றாலும் இந்தக் குழு அமைக்கப்பட்டது இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த அறிக்கை ஆரோக்கியமான விவாதம் எதையும் ஏற்படுத்தவில்லை. அம்மாதிரி ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். மனித உரிமைகள் விவகாரத்தில் இந்தியா தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் இந்தக் கட்டுரை கோருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்த அறிக்கை குறித்து விவாதம் வரும்போது முன்பு செய்ததைப் போல இந்தமுறையும் இலங்கையை இந்தியா காப்பாற்றக் கூடாது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து அங்கு நடக்கும் தாக்குதல்களையும் வன்முறைகளையும் கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும். இலங்கையில் வன்முறைத் தாக்குதல்கள் தமிழர் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை. 1988-90 காலகட்டத்தை இலங்கையில் பெரும் அடக்குமுறை இருந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. தென்னிலங்கையில் பாயும் இரண்டு பெரிய அழகிய நதிகளான கெலநிய கங்காவும் மஹாவெலி கங்கையிலும் இறந்த உடல்கள் மிதந்தன. தண்ணீர் ரத்தமாக ஓடியது. இரண்டு இனக் குழுக்களுக்குள் நடந்துகொண்டிருந்த மோதல்கள், ஒரே இனத்திற்குள் நடக்க ஆரம்பித்தன. “இனக்குழுக்களுக்குள் யுத்தம் நடந்த காலம் போய், ஒரே இனத்திற்குள் மோதல் நடக்க ஆரம்பித்து. தமிழர்கள் தமிழர்களைக் கொன்றார்கள். சிங்களர்கள் சிங்களர்களைக் கொன்றார்கள். அரசு எல்லோரையும்விட அதிகமாகச் சிங்களர்களையும் தமிழர்களையும் கொலைசெய்தது” என்று குறிப்பிட்டார் மானிடவியல் அறிஞரான வேலன்டைன் டேனியல்.

இந்தியா இலங்கை இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்குச் சென்றதும் ஜனதா விமுக்தி பெரமுண தனது இரண்டாம் கலகத்தைத் தொடங்கியது. சிங்களர்களிடமிருந்த வெறுப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஜேவிபி, சிங்களத் தீவிரவாதத்தைக் கையிலெடுத்துக்கொண்டது. தென்னிலங்கை முழுவதும் வன்முறையில் ஈடுபட்டது. ஆனால் விரைவிலேயே இலங்கை ராணுவம் இந்தக் கலகத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. எந்த மனசாட்சியும் இல்லாமல் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இளம் சிங்கள அரசியல்வாதி ஒருவர் ஜெனீவாவுக்குச் சென்று தன் மக்களைக் காப்பாற்ற, மனிதநேய அடிப்படையில் ஐ. நா. குறுக்கிட வேண்டுமென்று கோரினார். அவருக்கு வசுதேவ நாயனக்கார, திஸநாயகம் என்னுமிரு தோழர்கள் உறுதுணையாக இருந்தனர். அந்த இளம் அரசியல்வாதி தற்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே. மனித மதிப்பீடுகளைக் காப்பாற்றுவது, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையிலிருந்து மக்களை ஐ. நா. குறுக்கிட்டுக் காப்பாற்ற வேண்டுமென்ற அவரது முந்தைய நிலைப்பாடுகளை இப்போது நினைவுபடுத்துவதை மஹிந்த நிச்சயம் ரசிக்கமாட்டார்.

2009 மார்ச் மாதம் 23ஆம் தேதி ஐ. நா. வின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்ததையடுத்தே ஐ. நா. ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக இந்தோனேஷியாவைச் சேர்ந்த மர்ஸுகே தருஸ்மன் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென்னாப்பிரிக்காவின் யாஸ்மின் சூகா ஆகியோர் உறுப்பினர்கள். இந்தக் குழு உண்மை அறியும் குழு அல்ல. நடைபெற்றதாகச் சொல்லப்படும் மனித உரிமைமீறல்களின் அளவு, தன்மை பற்றிக் கணக்கிடுவதே இதன் நோக்கம்.

ஐ. நா. வின் பல மனித உரிமை ஒப்பந்தங்களில் இலங்கை கையெழுத்திட்டிருக்கிறது. அதனால், மனித உரிமைமீறல்களுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் கடமை அதற்கு இருக்கிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்தே மனித உரிமைமீறல்களுக்கெனப் பல்வேறு குழுக்களை அமைத்து, தவறு செய்தவர்கள்மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறது. 1977இல் அமைக்கப்பட்ட சாம்ஸோனி குழு, 1991இல் அமைக்கப்பட்ட கக்கடிச்சோலை குழு, 2001இல் இன வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அதிபரின் உண்மை அறியும் குழு, 2006இல் அமைக்கப்பட்ட அதிபரின் விசாரணைக் குழு போன்றவை இவற்றில் சில. 2010ஆம் ஆண்டில், படிப்பினைகள் மற்றும் சமாதானக் குழு ஒன்றை இலங்கை அரசு நியமித்தது. இந்த விசாரணைக் குழுக்களுக்கு என்ன ஆனது? பல சமயங்களில் விசாரணைக் குழுக்கள் அறிக்கைகள் எதையும் தாக்கல் செய்யவேயில்லை. அப்படியே இக்குழுக்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்தாலும் அவற்றின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவற்றை ஓரம்கட்டியது. இந்த அறிக்கைகளில் ஒருபோதும் அரசு நிர்வாகம்மீதோ அதிகாரிகள்மீதோ எந்தக் குற்றச்சாட்டும் இருக்காது. அரசு தற்போது நியமித்திருக்கும் படிப்பினைகள் குழுவுக்கும் இதே கதிதான் நேரும் என இலங்கை விவகாரத்தைக் கவனித்துவரும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று ஐ. நா. ஆலோசனைக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை அதிகாரபூர்வமாகப் பதிப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே, இலங்கை ஊடகங்களில் இதன் சில பகுதிகள் வெளியாயின. இதையடுத்து இலங்கையில் ஐ. நா. வுக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ், இந்த விவகாரத்தில் இலங்கை அரசின் பார்வையைக் கோடிட்டுக் காட்டினார். இது ஐ. நா. வின் அறிக்கை அல்ல என்று குறிப்பிட்ட பெரிஸ், ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட முயற்சியால் அமைக்கப்பட்ட குழுதான் என்று குறிப்பிட்டார். அது உண்மை அறியும் குழுவோ அதற்கென ஆய்வுசெய்யும் அதிகாரமோ இல்லை எனப் பெரிஸ் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையுடன் அதற்கு முறையான எந்தத் தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டார். இலங்கை அரசு தமிழர்களுடன் நல்லுறவை உருவாக்க முயற்சித்துவரும் நிலையில், வெளிவந்திருக்கும் ஆலோசனைக் குழுவின் அறிக்கை சிங்கள, தமிழ்ச் சமூகத்திற்கு இடையிலான பிரிவைக் கூர்மைப்படுத்துவதாகக் குறிப்பிட்டார் பெரிஸ்.

குழுவின் முக்கியக் கண்டுபிடிப்புகள்

தருஸ்மன் அறிக்கையைப் பொறுத்தவரை, இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய இருவர்மீதும் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறது. அறிக்கையின் கடைசிப் பகுதியில் இருதரப்பும் செய்த மனித உரிமைமீறல்களைப் பட்டியலிடுகிறது. போரின் கடைசிக் கட்டத்தில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து தப்பிச்செல்ல முயன்றவர்களைச் சுட்டுக்கொன்றது, குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்த்தது, பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்தியது, கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகள் புலிகளின் மீது சுமத்தப்பட்டன. ஆனால், புலிகள் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டு, பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், இலங்கை அரசின் அத்துமீறல்கள் மீதே அனைவரது கவனமும் திரும்பும். தவிர, இலங்கை அரசு இதை எதிர்த்துவருவதோடு, அடக்கு முறையையும் தொடர்ந்துவருகிறது.

தருஸ்மன் அறிக்கையில் இலங்கை அரசு பின்வரும் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பரவலான குண்டுவீச்சின் மூலம் பொதுமக்களைக் கொலை செய்தது. மருத்துவமனைகளின் மீதும் மற்ற உதவியளிக்கும் கட்டடங்களின் மீதும் தாக்குதல் நடத்தியது. மனிதாபிமான உதவிகளை மறுத்தது, பாதிக்கப்பட்டவர்கள், போரில் தப்பியவர்கள் குறிப்பாக, இடம் பெயர்ந்தோர், புலிகளெனச் சந்தேகிக்கப்படுவோரின் மனித உரிமைகளை மீறியது, போருக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் ஊடகங்கள், அரசியல் எதிரிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் இலங்கை அரசின் மீது சுமத்தப்பட்டுள்ளன. சர்வதேசச் சமூகத்திடம் இலங்கை அரசு என்ன சொல்லி வந்ததோ அதற்கு முற்றிலும் நேர் மாறாகத்தான் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்துகொண்டது என தருஸ்மன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொதுமக்கள் யாரும் கொல்லப்படாமல், மனிதநேயரீதியில் உதவி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றுதான் இலங்கை அரசு கூறிவந்தது.

ஐ. நா. அதிகாரிகளையும் சர்வ தேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் போர் நடக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டதால், கிளிநொச்சி பகுதியில் என்ன நடந்தது என்பதைக் கணிக்க முடியவில்லை என ஆலோசனைக் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. போர் நடந்த பகுதியில் பணியாற்றிய டாக்டர் சத்தியமூர்த்தி, டாக்டர் வரதராஜா என்னும் இரு மருத்துவர்கள் விடுத்த அறிக்கையை இந்த அறிக்கை மேற்கோள் காட்டுகிறது. “அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் தேவையான மருந்துகளும் இருந்திருந்தால் மருத்துவமனையில் நேர்ந்த பெரும்பாலான மரணங்களைத் தவிர்த்திருக்கலாம். ஆன்டிபயோடிக் மருந்துகள் எங்களுக்கு வழங்கப்படவில்லை. சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய குளுகோஸ் திரவம் ஒரு பாட்டில்கூட வழங்கப்படவில்லை. உயிரைக் காப்பாற்றக் கூடிய அவசர அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிராதரவான நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்”.

இந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியாது என்றாலும் ஐ. நா. வின் உள்நாட்டுக் குழுக்கள் அளித்த அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வைத்துப் பார்த்தால், “சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள்வரை கொல்லப்பட்டிருக்கலாம்”. இதைவிட மோசம், “புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இலங்கை ராணுவத்தால் பிடித்துச்செல்லப்பட்டவுடன், சுட்டுக்கொல்லப்பட்டதுதான்” புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பின்னால் கைகள் கட்டப்பட்டு, இலங்கை ராணுவத்தால் கூட்டம் கூட்டமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளைப் பிரிட்டனின் சேனல் 4 நியூஸ் ஒளிபரப்பியது. தமிழ்ப் பெண்களின் மீது நிகழ்த்தப்பட்ட “பாலியல் பலாத்காரமும் பாலியல் வன்முறையும் மிக அரிதாகவே பதிவாயின” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இலங்கையில் நெருக்கடி நிலை ஒவ்வொரு மாதமும் நீடித்துக்கொண்டே செல்லப்படுவது, தற்போதும் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், யுத்தம் நடந்த பகுதிகளை முழுமையாக ராணுவமயப்படுத்துவது, ஊடகங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது போன்றவற்றால் போர்க் குற்றச் செயல்களுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்குத் தடை ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2010 மே மாதம் அதிபரால் நியமிக்கப்பட்ட (கற்ற பாடங்கள் மற்றும் மறுவாழ்வுக்கான கமிஷன்) Lessons Learnt and Reconciliation Commission (LLRC) ‘சுதந்திரமும் பாரபட்சமற்ற தன்மையும் இல்லாத காரணத்தால்’ எதையும் சாதித்துவிட முடியாது. மேற்கோள் காட்ட வேண்டுமென்றால், “சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கான சர்வதேசக் கோட்பாடுகளை எல். எல். ஆர். சி. கடைபிடிக்கத் தவறியதோடு, அதன் உறுப்பினர் நியமனங்களால் சமரசத்துக்குள்ளாக்கப்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கிடையில் தீவிரமான அக்கறைகள் சார்ந்த வேறுபாடுகளையும் கொண்டுள்ளது.”

முன்னாலிருக்கும் வழி

இந்த அறிக்கை, பொறுப்புடைமைக்கு இலங்கை அரசின் அணுகுமுறையானது “உண்மைக்கும் நீதிக்கும் அழுத்தம் கொடுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் அடிப்படையான சர்வதேச மதிப்பீடுகளுக்குப் பொருந்தவில்லையென்று” என்பதைத் தீவிரமாக வலியுறுத்துகிறது. அதனால் ஒரு சுதந்திரமான சர்வதேச அணுகுமுறை அவசியம் என்கிறது அறிக்கை. இப்போது முடிவு, ஐ. நா. செயலரின் நீதிமன்றத்தில் இருக்கிறது. ஐ. நா. செயலர் பான் கீ முன் என்ன செய்வார் என்பதையும் அவருக்கு எவ்வளவு தூரம் அதிகாரம் வாய்ந்த சர்வதேச மையங்களின் ஆதரவு கிடைக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்தமுறை ஐ. நா. வில் இலங்கையில் நடந்த மனித உரிமைமீறல்கள் பற்றி விவாதிக்கப்பட்டபோது இலங்கை, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவின் ஆதரவைப் பெற முடிந்தது. இந்தமுறை ஐ. நா. வில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்காமல் இருக்க வேண்டுமென்பது முக்கியம். சொல்லப்போனால் துன்பப்படும் தமிழர்களுக்கு ஆதரவாகத் தனது குரலை அது உயர்த்த வேண்டும். அவர்களுடைய துன்பமும் துயரமும் இந்தியப் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் வெளிப்பட வேண்டும்.

இந்த வருடம் ஜனவரியில் எனக்கு யாழ்ப்பாணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அறிவுஜீவிகள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், தன்னார்வ நிறுவனங்களில் பிரதி நிதிகள், சாதாரண மக்கள் என்று பலதரப்பட்டவர்களையும் சந்திக்க முடிந்தது. நான்காவது ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் அதைத் தடுத்து நிறுத்த இந்தியா, தமிழ்நாடு ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை என்பதில் அவர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்தோடு இருந்தார்கள். அவர்களுடைய கண்களில் கைவிடப்பட்டதன் வேதனை தெரிந்தது.

வாட்டர் சாங்க் என்ட்ஸ் என்னும் பாப்லோ நெருடாவின் கவிதையின் வரிகள் என் நினைவுக்கு வந்தன.

“இந்தப் போரும்,
நம்மைப் பிரித்த,
சாக வைத்த,
நமது கொலையாளிகளோடு சேர்ந்து நம்மையும் கொன்ற
போன்ற பிற போர்கள் போலவே கழியலாம்.

ஆனால் இந்தக் காலத்தின் வெட்கம்
அதன் சூடேறிய விரல்களை
நம் முகங்களின் மீது வைக்கிறது,
அப்பாவி ரத்தத்தில் ஒளிந்திருக்கும்
கொடூரத்தை யார் அழிப்பார்கள்?”

(Perhaps this war will pass like others which divided us
leaving us dead, killing us along with the killers,
but the shame of this time puts its burning fingers in our faces,
who will erase the ruthlessness hidden in innocent blood?) l

-வி. சூரியநாராயண்
தமிழில்: முரளிதரன்

நன்றி: காலச்சுவடு, ஜூலை 2011

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

'' ஓ... மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?

ருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!

'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.

அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்​காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -

3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்து​விட்டார் என்கிறார்கள்.

''கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது. பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!'' என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

- வேல்ஸ்

நன்றி: ஜூனியர் விகடன், 10-ஆகஸ்ட்-2011