“அப்படியா!
அப்படி ஓர் இடம் இருக்கிறதா?
ஒன்றுமே தெரியாதது போலபாசாங்கு செய்கிறார்கள்.
ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
அப்படியொரு ரகசிய உலகம் இருக்கிறது என்பதை.
சகமனிதர்கள் உமிழும் கழிவிலும் குப்பை கூளத்திலும் தான் -
அங்கேசிலர் வாழ்கிறார்கள் என்பதைஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
- என்று அமெரிக்காவில் கறுப்பின மக்கள் வாழும் சேரிகளைப் பற்றி மனம் குமுறிப் பாடினார் கறுப்பினப் பாடகி டிரேஸி சாப்மன்.
.
விண்ணை முட்டும் 150 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு, கியூபா முதல் சீனா வரை, உலக மக்கள் அனைவருக்கும் ஜனநாயகமும் மனித உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று முழங்குகிறார் புஷ். அந்தக் கட்டிடத்தின் நிலவறையில் புதைந்திருக்கும் ‘வியர்வை கடை’யிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. “நாங்கள் நாய்களைப் போல தின்கிறோம். பன்றிகளைப் போல வாழ்கிறோம்” என்ற வெதும்புகிறார் 66 வயதான சோன் லீ என்ற சீனத் தொழிலாளி.
***************
வியர்வை நாற்றம், அழுகிய குப்பைகளில் இருந்து கிளம்பும் நெடி. கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் ஒலி. அருகிலேயே அடுப்பில் மீன் வறுக்கும் வாசம். தலை மேலே குறட்டைச் சத்தம். இன்னொரு மூலையில் தொலைக்காட்சியில் இரைச்சல். எங்கும் கவிந்திருக்கும் சிகரெட் புகை. சாராய நெடி.
.
பத்தடிக்கும் பத்தடி அளவுள்ள இந்த அறையினுள் எட்டு பேர், அறைக்கு சன்னலில்லை. சுவரின் உச்சியில் அரை அடி விட்டத்தில் ஒரு ஓட்டை. - காற்று வெளியே போகவும், உள்ளே வரவும். அவ்வளவு தான் இடம். இது சிறைக் கொட்டடி யில்லை. பம்பாய் , கல்கத்தாவின் குடிசைப் பகுதி இல்லை - நியுயார்க்.
.
மண்ணுலக சொர்க்கமான அமெரிக்காவின் மாபெரும் நகரம். நூறு மாடி, நூற்றைம்பது மாடி கட்டிடங்கள் நிரம்பிய அந்த கான்கீரிட் காட்டின் ஏதோ ஒரு கட்டிடத்தில் இது ஒரு பொந்து. இந்த பொந்தில் வசிப்பவர்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலை கடன்களை முடித்துக் கொண்டு ஏழு மணிக்கு வேலை செய்யத் தொடங்க வேண்டும்.
.
வேலை செய்யும் தொழிற் கூடமோ பக்கத்து அறைதான். பதினைந்து அடிக்கு பதினெட்டு அடி அளவுள்ள அறைக்கு பதினைந்து தையல் யந்திரங்கள். ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் வேலை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை. இந்த சித்திரவதை கூடங்களுக்கு அமெரிக்க பத்திரிக்கைகள் சூட்டியிருக்கும் பெயர் ‘வியர்வைக் கடைகள்’. நியுயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற அமெரிக்காவின் பெரு நகரங்கள் அனைத்திலும் நிரம்பியுள்ளன இத்தகைய ‘வியர்வைக் கடை’ களில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தாய்லாந்து, சீனா, போன்ற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் - கொத்தடிமைகள்.
.
துபாய்க்கும், சிங்கப்பூருக்கும் வேலை தேடிச் சென்று ஏமாந்து கொத்தடிமைகளாகும் நம்மூர் மக்களின் கதையை காட்டிலும் கொடியது இவர்களது கதை.
.
“லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அதிநவீன தையற்கூடம் ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்கு காட்டினார்கள். பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணிவரை வேலை. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை. மாதம் இரண்டாயிரத்து நானூறு டாலர்கள் சம்பளம். விடுமுறை நாட்களில் டிஸ்னி லாண்ட் போன்ற இடங்களுக்கு கூட்டிச் செல்வோம் என்று ஆசை காட்டினார்கள். நம்பி வந்தோம்.”
.
“லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேரே இந்த பொந்துக்கு கொண்டு வந்தார்கள். எங்களிடமிருந்து பாஸ்போர்ட், பணம், அனைத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். அதிகம் பேசாதே. கேள்வி கேட்காதே - யாரோடும் நட்பு சேராதே. - என்று எச்சரிக்கையுடன் இங்கே அடைக்கப்பட்டோம்.”
.
“தாய்லாந்தில் எட்டு மணிநேரம் உழைத்து சம்பாதித்ததை இங்கே பதினாறு மணிநேரம் உழைத்து சம்பாதிக்கிறோம்”.
.
இது லெபோதாங் என்ற தாய்லாந்து பெண்ணின் கதறல்.யூ லி என்ற சீனப் பெண்ணின் இன்னும் கொடுரமானது.
.
“அமெரிக்காவில் வேலை வாங்கித் தருகிறோம். அங்கே சம்பாதித்து எங்கள் கடனை கொடுத்தால் போதும்.” என்று சொன்ன ஏஜண்டுகளின் பேச்சை நம்பி, தன் கணவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள் யூ லி. 1991ல் அமெரிக்கா போன கணவனிடமிருந்து பணம் வரவில்லை. கடிதமும் இல்லை. ஆளையும் காணவில்லை. அனுப்பி வைத்த ஏஜண்டுகளைக் கேட்டால், “இன்னும் கடன் அடையவில்லை” என்றார்கள். தன்னந்தனியாக மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு ஐந்து ஆண்டுகளாக போராடி வந்த யூ லி ஒரு முடிவுக்கு வந்தாள். மிச்சமிருந்த எல்லா உடைமைகளையும் விற்று தன் கணவன் வாங்கிய கடன்களை அடைத்தாள். “என்னையும் என்பிள்ளைகள் மூன்று பேரையும் என் கணவனுடன் நியூயார்க்கில் சேர்த்து விடுங்கள்” என்று ஏஜெண்டுகளிடம் மன்றாடினாள் .
.
அதற்கு ஒரு லட்சத்தி முப்பத்திரண்டாயிரம் டாலர் செலவாகும். நீங்கள் வேலை செய்து அடைக்க வேண்டும் என்றார்கள். யூ லி ஒப்புக் கொண்டாள். இப்போது யூ லியும் மூன்று பிள்ளைகளும் நியூயார்க் நகரில். மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. கணவனை பார்த்து விட்டாள். ஆனால் குடும்பம் சேர்ந்து வாழ முடியவில்லை. ஆளுக்கொரு இடத்தில் வேலை. சேர்ந்து வாழ வேண்டும் என்ற கனவுக்காக தனித்தனியாக உழைக்கிறார்கள்.
.
ஐந்து பேரும் ஒரு நாளைக்கு பதினேழு மணி நேரம் உழைக்கிறார்கள். மாதந்தோறும் மூவாயிரம் டாலர் கடன் கட்டுகிறார்கள். ஆனால் கடன் அடையவில்லை. அடையப்போவதுமில்லை. படிக்க வேண்டிய பிள்ளைகளை கொத்தடிமையாக்கி விட்டதற்காக வருந்தி அழுகிறாள் யூ லி. கண்ணீர் கதைக்கு பஞ்சமில்லை.
.
இந்த தொழிலாளர்கள் எல்லாம் ஆசிய நாடுகளில் இருந்து மாஃபியா கும்பல்களால் கொண்டு வரப்பட்டவர்கள். முறையான கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தால் அதைத் இத் தொழிலாளர்களிடமிருந்து பறித்துக் வைத்துக் கொள்கின்ற இந்த மாஃபியா கும்பல்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் கள்ளத் தோணியில் கொண்டு வரப்பட்டவர்கள்.
.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாகக் குடியேறும் சீனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அமெரிக்க உளவு நிறுனம். தாய்லாந்தி லிருந்தோ இருபத்தி நாலாயிரம் பேர். சட்டபூர்வமாகவே தாய்லாந்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர். இந்த சட்ட விரோத குடியேற்றங்களை அமெரிக்க அரசு ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்று கேட்டால், அந்த கேள்விக்கான விடைகளில் ஒன்று தான் இந்த ‘வியர்வைக் கடைகள்’, நியூயார்க் நகரில் மட்டும் நானூறு.
.
“வேலை நிலைமைகளைப் பற்றியோ, கூலியைப் பற்றியோ யாராவது புகார் செய்தால் மறுகணமே அவர்கள் அமெரிக்காவை விட்டு துரத்தப் படுவார்கள். எனவே யாரும் வாய் திறக்கவே அஞ்சுகிறார்கள்”. என்கிறார் சீன தொழிலாளர்களின் தலைவர் லிங் லாம்.
.
அமெரிக்காவை விட்டு ஓட தயாராக இருப்பவர்களையும் அப்படி ஓடி விடுவதற்கு அனுமதிப்பதில்லை மாஃபியா கும்பல்கள். “எங்களுக்கு சேர வேண்டிய தொகையை கொள்ளை அடித்து கொடுத்து விட்டு போ” என்று மிரட்டுகிறார்கள். கிரிமினல் நடவடிக்கைளில் ஈடுபடுத்துகிறார்கள். கொத்தடிமையாக நீடிப்பதா, கிரிமினலாக மாறுவதா என்ற கேள்வி வந்தால் முதலாவதை தான் தெரிவு செய்தார்கள் அந்த ஏழைத் தொழிலாளர்கள்.
.
நியூயார்க் நகரின் தொழிலாளர் சட்டப்படி ஒரு மணி நேரத்திற்கான குறைந்தப்பட்ச ஊதியம் 5.15 டாலர்கள். இந்த கொத்தடிமைகளுக்கு கொடுக்கப்படுவதோ ஒரு டாலர்.
.
அந்தச் சம்பளமும் ஒழுங்காகக் கொடுக்கப்படுவதில்லை. இரண்டு மாத சம்பளத்தை பிடித்து வைத்து கொள்வதென்பது மிகவும் சகஜம். அமெரிக்காவின் காவல் துறை, குடியேற்றத் துறை தொழிலாளர் துறை மூன்றுமே இந்த ரகசிய உலகத்தை கண்டு கொள்வதில்லை.
*************
மே தினப் போராட்டத்தின் மூலம் உலகத் தொழிலாளர்களுக்கு “எட்டு மணிநேர வேலை” எனும் அடிப்படை உரிமையை பெற்றுத் தந்த நாட்டில் மே தினப் போராட்டத்திற்கு முன்னால், சென்ற நூற்றாண்டில் நிலவியதைக் காட்டிலும் கொடுரமான சுரண்டலும், ஒடுக்குமுறையும் தொடர்கிறதே இதற்கு காரணமென்ன?
.
‘வியர்வைக் கடைகள்’ குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை இதற்கு பதில் சொல்கிறது. “அவர்கள் தங்கள் சொந்த நாட்டினராலேயே இரக்கமில்லாமல் சுரண்டப்படுகிறார்கள்.”
.
உண்மை தான். தமது சொந்த நாட்டைச் சேர்ந்த மாஃபியா கும்பல்களால் தான் அவர்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்களால் தான் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் யாருக்காக? அந்த ‘வியர்வைக் கடைகளின்’ பொந்துகளிலிருந்து அவர்கள் உற்பத்தி செய்யும் காற்றோட்டமான சட்டைகளை அணிபவர்கள் யார்? அவற்றை விற்று ஆதாயம் அடைபவர்கள் யார்? அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஆயத்தக் கடை விற்பனை நிறுவனங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் தான் இந்த வியர்வைக் கடைகளின் சரக்கைக் கொள்முதல் செய்பவர்கள்.
.
இந்தியாவிலிருந்தும், பிற ஏழை நாடுகளிலிருந்தும் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகள், நேரடியாக சென்னைக்கும், பம்பாய்க்கும் வந்திறங்கி, தங்களது ஆடைகள் எங்கே தைக்கப்படுகின்றன, எப்படி தைக்கப்படுகின்றன என்று சோதனை செய்கிறார்களே - துணை ஒப்பந்தத்தில் வேலை செய்யும் சிறிய முதலாளிகளின் தையலகங்களை கூட அவர்கள் விட்டு வைப்பதில்லையே - அத்தகைய அமெரிக்க முதலாளிகள் தங்கள் நாட்டில் ‘வியர்வை கடைகளை’ மட்டும் பார்வையிடாதது ஏன்?
.
“கலிபோர்னியாவின் இத்தகைய வியர்வை கடை ஒன்றை தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது அங்கே உற்பத்தி ஆகும் ஆடைகளெல்லாம் அமெரிக்காவின் மிகப் பெரும் ஆடை விற்பனையகங்களுக்குச் சொந்தமானவை என தெரிய வந்தது.” என்கிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்.
.
நியூயார்க்கின் மிகப் பெரும் ஆடை நிறுவனங்களான வால்-மார்ட், கே -மார்ட் ஆகியோரது விற்பனையில் பாதி நியூயார்க் கொத்தடிமைகளின் தயாரிப்பு தான் என்கிறது-டைம் வார ஏடு. வால்-மார்ட், கே -மார்ட் ஆடைகள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
.
சதாம் உசேனின் கழிப்பறையில் ரசாயன ஆயுதத்தின் நெடி வீசுவதை வானத்திலிருந்தே மோப்பம் பிடிக்க தெரிந்த புஷ்ஷின் நாசியில் வால் மார்ட் சட்டைகளில் வீசும் வியர்வையின் நெடி ஏறாதது ஏன்? இது ஒரு வர்த்தக தந்திரம். மலிவான உழைப்புச் சந்தை என்ற ஒரே காரணத்தினால் தான் இந்தியா போன்ற ஏழை நாடுகளிலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள்.
.
இந்த ஆயத்த ஆடைஏற்றுமதி தொழிலில் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் தலைவிதி பிணைக்கப்பட்டு விட்டது. மலிவு விலையில் உழைப்பை இறக்குமதி செய்த அமெரிக்கா, இப்போது உழைப்பாளிகளையே மலிவு விலையில் இறக்குமதி செய்கிறது.
.
அன்று ஆப்பிரிக்கா கறுப்பின மக்களை விலங்குகளைப் போல வலைவீசிப் பிடித்து தாயை கரும்பு தோட்டத்திலும், பிள்ளையை நிலக்கரிச் சுரங்கத்திலும் பிரித்துப் போட்டு, அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி அமெரிக்க சொர்க்கபூமியை உருவாக்கிக் கொண்டார்கள்.
.
இன்று அந்த சொர்க்கத்தின் நியான் விளக்குகளில் சொக்கி விழும் விட்டில் பூச்சிகளான யூ லி போன்றவரை கள்ளத் தோணியின் மூலம் கவர்ந்திழுக்கிறார்கள். இது ஒரு ராஜ தந்திரம். தமக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் புஷ்ஷின் அரசாணைக்கு பணிய மறுத்தால் ஆடை இறக்குமதி நிறுத்தப்படும். ஒரே நொடியில் இந்நாடுகளின் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருவில் வீசப்படுவார்கள்.
.
ஆசியாவின் ஆடை இறக்குமதியாகாத அத்தகைய தருணங்களில் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த கொத்தடிமைகள் அமெரிக்காவின் நிர்வாணத்தை மறைத்து நாகரீகப்படுத்துவார்கள். ஆசிய தொழிலாளிகளுக்கெதிராக ஆசிய தொழிலாளிகள்.
.
இது ஒரு வர்க்க துவேசம். மருத்துவர்களையும், பொறியாளர்களையும், கணிணிவல்லுனர்களையும், குடியுரிமை தந்து இறக்குமதி செய்து கொள்ளும் அமெரிக்கா இந்த உழைப்பாளிகளுக்கும் குடியுரிமை தரலாமே. சட்டப்படி குடியுரிமை தந்தால், சட்டப்படி ஊதியம் கேட்பார்கள். அவர்களைக் கள்ளத் தோணிகளாகவே வைத்திருந்தால் தான், தேவை முடிந்த பின் அவர்களது இளமை முடிந்த பின், அவர்களைக் கந்தல் துணியைப் போலக் கடலில் வீச முடியும். வீசிவிட்டுக் கள்ளத் தோணியைத் தடுக்கத் தவறியதாக அந்த நாட்டை குற்றம் சாட்டி மிரட்டவும் முடியும்.
.
இது தான் சுதந்திர வர்த்தகம். தேசங்கடந்து அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வரும் மூலதனத்திற்கு இங்கே ரத்தினக் கம்பளம். மாலை மரியாதைகள். தேசங்கடந்து செல்லும் நம் உழைப்புக்கு அங்கே கொத்தடிமைத்தனம். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை எதிர்க்கிறது பென்டகன். ஏனென்றால், அமெரிக்க ராணுவத்தின் சீருடைகள் ஆசிய குழந்தைகளால் தைக்கப்படுகின்றன.
.
பிள்ளைக் கறி தின்னும் இந்த நாயன்மார்கள் தான் தாங்கள் சுத்த சைவமென்றும், பரீதாபாத்திலிருந்து (டில்லி) அனுப்பப்படும் கம்பளங்களில் “இது குழந்தைகளால் நெய்யப்பட்டதல்ல” என்று முத்திரை குத்தி அனுப்ப வேண்டுமென்றும் கோருகிறார்கள்.
.
இந்த நாயன்மார்களிடம் எச்சில் பிரசாதம் வாங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் “சிவகாசி மத்தாப்பூ கொளுத்தமாட்டோம்” என்று நாளைய அமெரிக்கக் குடிமக்களான பத்மா சேஷாத்ரி, சர்ச் பார்க் கான்வென்டு பிள்ளைகளை வைத்து மனிதச் சங்கிலி நடத்துகிறார்கள்.
************
நன்றி: புதிய கலாச்சாரம் வெளியீடான ‘அமெரிக்க மோகம்’ நூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக