சுற்றுச்சூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுச்சூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 15, 2016

தமிழ் - நம் நிலத்தின் கண்ணாடி

ஒரு மொழியின் பிறப்புக்கு அடிப்படை, அது பேசப்படும் நிலத்தின் சூழலியலே ஆகும். அவ்வகையில் பல்லுயிர்ச் செறிவுமிக்க நிலத்தில் தோன்றிய தமிழ்மொழி ஒரு சூழலியல் மொழி. இத்தகைய மொழியின் மீது தனக்கென்று தனித்த நிலமற்ற சமற்கிருதமும், பல்லுயிர்ச் செறிவற்ற நிலத்தில் உருவான ஆங்கிலமும் நிகழ்த்துகின்ற மொழி மேலாதிக்க வன்முறைகளும் அதன் எதிர்கால விளைவுகளும் என்னென்ன?

சமற்கிருதமும் தமிழ்ச்சூழலும்

உயிரினங்களுக்கான அறிவியல் பெயர்கள் இலத்தீன் மொழியில் சூட்டப்படுவது மரபு. இது 1730-களிலேயே உயிரியலாளர் கார்ல் லின்னேயஸ் வகுத்த வழிமுறை. ஓர் உயிரினத்தின் உருவக்கூறுகளைக் குறிக்கும் இலத்தீன் மொழிச் சொல்லுடன், அது கண்டறியப்பட்ட இடத்தின் பெயரையோ, கண்டறிந்த ஆய்வாளரின் பெயரையோ, புகழ்பெற்ற ஒருவரின் பெயரையோ இணைத்து இப்பெயர் சூட்டப்படும். ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலையில் புதிதாகக் கண்டறியப்பட்ட இரு தவளைகளுக்கு இம்மரபை மீறி ‘Nasikabatrachus sahyadrensis, Philautus neelanethrus’ என சமற்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டதைக் குற்றம் சாட்டுகிறார் உயிரியல் அறிஞரான க.யோகானந்த்.

இவற்றில் ‘நாசிகா (மூக்கு), சாயாத்ரி (மேற்குத்தொடர்ச்சி மலை), நீலா(ஊதா), நேத்ரா(கண்) முதலியவை சமற்கிருதப் பெயர்கள். ‘இத்தவளைகளைக் கண்டுபிடித்த இரு ஆய்வாளர்களும் மரபை மீற நினைத்தால், தம் தாய்மொழியான மலையாளத்திலோ, கன்னடத்திலோ, இல்லையெனில் திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மை மொழியான தமிழிலோ பெயர் வைத்திருக்கலாமே... ஏன் சமற்கிருதம்’ என வினவும் யோகானந்த், ஏற்கெனவே சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் இல்லாத உயிரினமான குதிரையை இந்துத்துவவாதிகள் தாமே உருவாக்கிக் காட்டியதைச் சுட்டி நம்மை எச்சரிக்கிறார்.

பண்பாட்டின் மீது முன்னரே தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கும் சமற்கிருதம், மொழியைக் கருவியாக்கி இயற்கை அறிவியலையும் சூழலியலையும் தம் வசப்படுத்த முயல்கிறது. மாற்று மொழிகளை அழுத்தித் தன்னைச் சூழல் மொழியாகக் காட்டிக்கொள்ளும் இம்முயற்சி அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

மரங்களைக் காப்பாற்ற அவற்றைக் கட்டித்தழுவிப் போராடிய பழங்குடியினப் பெண்களின் போராட்டம் ‘சிப்கோ’ இயக்கம் என்றழைக்கப்படுகிறது. சிப்கோ என்பது சமற்கிருதத்தின் குழந்தையான இந்தி மொழிச் சொல். ஆனால், இப்போராட்டத்தை நடத்தியதோ பழங்குடியினப் பெண்கள். அவர்களுக்கு ஏது இந்தி? அவர்கள் இப்போராட்டத்துக்கு தங்களின் தாய்மொழியான ‘கார்வால்’ மொழியில் வைத்திருந்த பெயர் ‘அங்கலவாள்த்தா’. இச்சொல்லின் பொருள் ‘தழுவுதல்’. சிப்கோ என்ற இந்தி மொழிச் சொல்லுக்குப் பொருள் ‘ஒட்டிக்கொள்’ என்பதாகும்.  இராமச்சந்திர குகா கூறும் இவ்வுண்மையில் இருந்து ஒரு பழங்குடி மொழிச் சொல்லை இன்னொரு மொழிச் சொல் கைப்பற்றும்போது பொருள் மட்டுமல்லாது போராட்டத்தின் வரலாறே திரிவதை விளங்கிக்கொள்ளலாம்.

‘இப்படித் திரிந்த வரலாற்றின் ஒரு காட்சியை இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காணலாம். அங்குள்ள கான் துறையால் கானகச் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளில், ‘இந்துக்களின் வேத நூல்கள் கூறுகின்றன. மரங்கள் இன்றி மகிழ்ச்சி இல்லை’ என்கிற வரிகள் காணப்படுகின்றன. இவ்விளம்பரம் மரங்களையும் காட்டையும் காப்பதற்காகவே அவதரித்தது இந்து மதம் என்ற பொய்த் தோற்றத்தை தருகிறது. ஆனால், மகாபாரதத்தின் ‘கந்தேவா வனச்சருக்கம்’ பகுதியில் காட்டுயிர்கள் கொல்லப்படுவதும், மரங்களுக்குத் தீ வைக்கப்படுவதும் வீரகாவியப் பண்பாக வருணிக்கப்படுவதுடன் சிந்து, கங்கை சமவெளிப் பகுதிகள் குறித்துப் பதியப்பெற்ற அக்காலத்தில் ‘காடுகள் அழிப்பதற்கானவை’ என்பதே இந்துக்களின் சிந்தனையாக இருந்தது’ என்கிறார் இராமச்சந்திர குகா. இவ்விடத்தில்தான் காட்டுயிர்களுக்குச் சமற்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டதை இணைத்துப் பார்க்கவேண்டும்.

‘இந்திய அறிவரங்கில் ‘சமற்கிருத மயமாக்குதல்’ எனும் சொல்லாடல் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. ‘பாரத’ திருநாட்டில் அனைத்தையும் சமற்கிருத மொழிவழிப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ‘இந்து மானுடவியல்’ அறிஞர்கள் பயன்படுத்துகிற ஒரு பெயர்தான் சமற்கிருதமயமாக்குதல்’ என்கிறார் முனைவர். க. த. திருநாவுக்கரசு. ‘இந்தியப் பண்பாட்டின் தலையூற்றாய் விளங்குவது சமற்கிருத மொழி வழிப்பட்ட பண்பாடு. அதனுடைய தாக்கத்தினாலேயே இந்தியா முழுமையும் நாகரிகமும் பண்பாடும் வளர்ச்சியுறத் தொடங்கியது’ என்று கூறி இச்சொல்லை 1956-ம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய இந்திய மானுடவியல் அறிஞரான முனைவர் எம்.என்.சீனிவாசனின் நோக்கம் தெளிவானது.

‘இனவழிச் சொல்லான ஆரியமயமாக்கல் என்கிற சொல்லைப் பயன்படுத்தாது, சமற்கிருதமய மாக்குதல் என்கிற மொழிவழிச் சொல்லை இவர்கள் தெரிவு செய்வதற்குப் பின்னே ஒரு வரலாறு மறைந்திருக்கிறது. ஆரியர்களே உலகில் ஆளப்பிறந்தவர்கள் என்கிற ‘ஆரியமயமாக்கல்’ சிந்தனையில் வேர்கொண்ட இட்லரின் போர் வெறியால் விளைந்த உயிர்ச்சேதத்தை நாம் அறிவோம். இந்நிகழ்வுக்குப் பின்னர் யுனெஸ்கோ நிறுவனம் ‘இனத்தூய்மைக் கொள்கை’யை முறியடிக்கும் பொருட்டு உலகின் பல பகுதிகளிலும் ‘இனத்தூய்மை என்பது கட்டுக்கதை’ என்கிற தலைப்பில் மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தியது. இதன் தாக்கத்தால் ‘ஆரியம்’ அடக்கிவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளான அதேநேரத்தில், தமிழகத்தில் திராவிட இனச் சிந்தனை முளைத்தெழுந்தது. எனவே, இக்காலகட்டத்தில் ஆரியம் இனவழிப் பண்பாட்டை ஒதுக்கி மொழிவழிப் பண்பாட்டைக் கைக்கொள்ளத் தொடங்கியது’ என்கிறார் திருநாவுக்கரசு.

தாழ்த்தப்பட்ட மக்களும் பழங்குடிகளும் உயர்சாதியினரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் வழி தம்மை உயர் இனத்தவராக மேல்நிலையாக்கம் செய்யும் முயற்சியைச் சுட்டிக்காட்டவே ‘சமற்கிருத மயமாதல்’ என்கிற சொல் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. இது பின்னர் பல்வேறு துறைகளுக்கும் தன்னை விரிவாக்கிக்கொண்டே வந்து தற்காலத்தில் சூழலியல் வரையிலும் வந்து சேர்ந்துள்ளது. ஆனாலும், சமற்கிருதமயமாக்குதல் என்கிற இச்சொல்லை, ஆசிய அறிஞர்கள் ஏற்றுக்கொண்டாலும் மேற்கத்திய அறிஞர்கள் பலர் ஏற்கவில்லை. அவர்கள் இன்றளவும் இதனை ‘பெரிய நெறி’ (Great Tradition) என்றே அழைக்கின்றனர். அதாவது சமற்கிருத வழிப்பட்ட எண்ணப்போக்கும் பண்பாடும் இப்பெயரால் அழைக்கப்பட, சமற்கிருதத்தின் தாக்கத்திற்கு இரையாகாத பிற மொழிகளின் எண்ணப்போக்கும், பண்பாடும் ‘சிறிய நெறி’ (Little Tradition) என்று எதிர்நிறுத்தப்படுகிறது. இச்சிறிய நெறியில்தான் தமிழும் தமிழர்களின் பண்பாடும் உள்ளடங்குகிறது.

தமிழர்கள் பழங்குடிகளைப்போலவே இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள். இயற்கை வளத்தையும் உயிரின வளத்தையும் வளம்குன்றா முறையில் தமது தேவைக்குப் பயன்படுத்தி வந்ததோடு, தம் பண்பாட்டுச் செயல்கள் வழி அதனைக் காத்து வந்தவர்கள். ‘ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) போன்ற அமைப்புகள் ‘பண்பாட்டு வளம்’ (Cultural Diversity) என்று இதனை அங்கீகரிப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதனைத் தம் வாழ்வாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள்’ என்கிறார் கு.வி.கிருட்டிணமூர்த்தி.

இவ்வுலகை அல்லது இயற்கையை கடவுளின் சித்தம் என வேதக் கோட்பாடு. போதிப்பதற்கு நேர்மாறாக, ‘நிலம் தீ நீர் வளி விசும்பொடு கலந்த மயக்கம் உலகம்’ என்று அறிவுபூர்வமாக விளக்கியது தொல்காப்பியம். இத்தகைய மேன்மையான தமிழ்நெறி சமற்கிருதமயப்படுவது இழுக்காகும். ‘சமற்கிருதமயமாதல்’ என்கிற சொல் விளக்கத்தின்படி பார்த்தோமெனில், தமிழ் மொழியானது தன் கீழ்மை நிலையிலிருந்து ஆரியமரபின் மேன்நிலைத் தகுதிக்கு வரத் துடிக்கிறது அல்லது தவிக்கிறது என்னும் தவறான பொருளைத் தந்துவிடுகிறது. ஆனால், இயற்கை அறிவியலில் தமிழைப்போலத் தெளிந்த பார்வையோ, அறிவோ கொண்டதல்ல சமற்கிருதம்.

நெருப்பின் எரிக்கும் திறனுக்கும், கடல் நீரின் உப்புத்தன்மைக்கும், நிலவு தேய்ந்து வளரும் காட்சிப்பிழைக்கும் காரணமான அறிவியல் என்னவென்று பள்ளி மாணவர்களும் அறிவர். இவற்றுக்கு மநுசாத்திரம் அளிக்கும் விளக்கம் என்ன தெரியுமா? ‘எந்தப் பிராமணருடைய சாபத்தினாலே அக்கினி எல்லாவற்றையும் சாப்பிடுகிறவனாயும், சமுத்திரம் உப்புத் தண்ணீராயும், சந்திரன் விருத்தி சயம் இரண்டையும் அடைகிறவனாயும் இருக்கிறார்களோ அவர்களைக் கோபிக்கச் செய்த எவன்தான் அழியாமலிருப்பான்’ (மநு - 10:126) தெள்ளிய செய்தி என்னவெனில், குறிப்பிட்ட இனத்தாரைப் பகைத்துக் கொண்டால் மனிதர்கள் மட்டுமல்லாது இயற்கையும் சபிக்கப்படும் அல்லது அழிவுறும் என்பதுதான். என்னே சிறந்த சூழலியல் பார்வை! இயற்கை என்பது கடவுளின் படைப்பு என்பதையும் மீறி அது கடவுளின் கட்டுப்பாட்டின் கீழ் அல்ல, அவ்வினத்தாரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகிறது என்று இங்கு அறிவிக்கப்படுகிறது.


ஆனால், தொல்காப்பியமோ தனது முதற்பொருளை நிலமும் பொழுதும் என வரையறுத்தது. பாற்கடலில் படுத்திருப்பவரின் கொப்பூழ்க் கொடியிலிருந்து பிறந்தவரோ அல்லது பூசனை செய்யும் இடைத்தரகரோ இங்கு முதற்பொருள் ஆகவில்லை. தொல்காப்பியத்தில் தெய்வம் எங்கே வருகிறது தெரியுமா? முதற்பொருளுக்கும் உரிப்பொருளுக்கும் அடுத்து மூன்றாவதாக வரும் கருப்பொருளில்தான் உணவு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் போன்ற உயர்திணை மற்றும் அஃறிணைப் பொருட்களுக்கு இணையாக தெய்வம் வைக்கப்படுகிறது. தெய்வத்துக்குத் தமிழ்நெறி தந்திருக்கும் இடம் இதுதான். வேறு வகையில் கூறினால், தமிழுக்கு இயற்கையே முதன்மை. இதனாலேயே இயற்கை குறித்த தமிழ்மொழியின் பார்வை தெளிவாகவும் துல்லியமாகவும் இருந்தது. இத்துல்லிய மொழியினூடே சமற்கிருதத்தோடு ஆங்கிலமும் இணைந்து நிகழ்த்திவரும் ஆதிக்கம் தமிழைச் சிதைத்துவருகிறது

2. ஆங்கிலம் நிகழ்த்தும் அழிவு

அன்றைய காலனிய ஆட்சியாகட்டும் அல்லது இன்றைய கார்ப்பரேட் ஆட்சியாகட்டும்... இரண்டும் வெறும் பொருளாதார மேலாதிக்கம் மட்டுமேயல்ல. பொருளாதார மேலாதிக்கம்தான் பின்னர் பண்பாட்டு மேலாதிக்கமாக உருவெடுக்கும். பண்பாட்டுத் தாக்குதலின் முதல் இலக்காக மொழி அடையாளம் காணப்பட்டு காலனியமயப்பட்ட நாட்டு மக்களின் மொழி அவர்களிடமிருந்து பறிக்கப்படும். கல்வியிலும் கலைகளிலும் ஆதிக்கவாதிகளின் மொழி உள்நுழைக்கப்பட்டு அதைக் கட்டாயமாக்குவதன் வழி, காலனிய நாட்டு மக்களின் தாய்மொழி அவர்களின் உணர்வு நிலையிலிருந்து மெள்ள மெள்ள அகற்றப்பட்டுவிடும். (உணர்வுநிலை என்பது அடிக்கோடிட்டுப் படிக்கவேண்டிய சொல்) மொழியை இழப்பது என்பது அடையாளத்தை இழப்பதன் முற்றிய நிலை. மொழியை இழந்த இனம் தன் பண்பாட்டு வேர்களை இழந்து, தன்னம்பிக்கை இழந்து, அந்நியப் பண்பாட்டு மேலாதிக்கத்துக்கு அடிமையாக்கப்படும். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுதான் நடந்தது.

இதனாலேயே 17 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதிவந்த உலகப்புகழ் பெற்ற கென்ய நாட்டு எழுத்தாளர் கூகி வா தியாங்கோ ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்தி தம் தாய் மொழியான ‘கிக்கூயூ’ மொழியில் எழுதத் தொடங்கினார். காலனிய ஆட்சியின் நோக்கமே, ஒரு நாட்டு மக்களை அவர்தம் மண்ணிலிருந்தும் பண்பாட்டுக் கூறுகளிலிருந்தும் வாழ்விலிருந்தும் அந்நியமாக்கி, தனிமைப்படுத்தி, செயலிழக்கச் செய்து அடிமைப்படுத்துவதுதான்; எனவே, தமது அடையாளங்களை மீட்கவும், வாழ்வையும் நிலத்தையும் மீட்கவுமாகத் தாய்மொழியில் தேர்ச்சிபெறுவதே மக்களின் முதல் தேவை எனக்கூறிய கூகி, அதற்குத் தன்னுடைய பங்களிப்பாகத் தாய்மொழியில் எழுதுதலை மேற்கொண்டார். இவருக்கு இணையாக மொழியின் இலக்கியத்தின் அரசியலை விளங்கச் செய்தவர் வேறு எவரும் இல்லை.

ஆங்கிலம் என்பது வெறுமனே இங்கிலாந்தின் மொழி அல்ல. இது முதலீட்டியத்தின் வினைப்பொருளும் பன்னாட்டு நிறுவனங்களின் கருத்துருவுமான உலகமயமாக்கலின் கருவி. இம்மொழியைச் சுரண்டப்படும் நாடுகளின் கல்வி மொழியாக மாற்றுவதில் வெற்றிகண்டிருக்கும் முதலீட்டியம், ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக்கொண்டு பயின்றவர்களுக்கு முதலீட்டியம் உருவாக்கிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை நல்குவதன் வழி, தம் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இப்பொருளாதார மேலாதிக்கம் உருவாக்கும் பண்பாட்டு மேலாதிக்கம் மக்களிடத்து மனரீதியாகப் பார்வையற்ற  தன்மையையும், கேளாத் தன்மையையும் உண்டாக்கிவிடும். எனவேதான் இம்மக்கள் தம் நாட்டில் தாம் என்ன செய்யவேண்டும் என்பதைக்கூட அந்நியர் வந்து கற்றுத்தருவதை அனுமதித்துக் கொண்டிருப்பர். பண்பாட்டு வல்லாதிக்கத்தால் மேற்கத்திய வாழ்வுமுறையை நகலெடுத்து வாழும் போக்கு சுரண்டப்படும் நாட்டு மக்களிடையே அதிகரித்துவருகிறது. இம்முறை மேற்கத்தியமயமாதல் ஆகும். சமற்கிருதமயமாதல், மேற்கத்தியமயமாதல் இரண்டுக்குமே அடிப்படைக் கருவியாக மொழி விளங்குவதை கவனிக்கவும்.

பண்பாட்டு மேலாதிக்கம் ஆங்கிலவழிக் கல்வியினால் நிகழ்வது மட்டுமல்லாது அரைகுறைத் தமிழான தமிங்கிலம் வழியாகவும் நிகழ்கிறது. முன்பு சமற்கிருதத்தின் பாதிப்பான மணிப்பிரவாளம் ஏற்படுத்தியதை விடதமிங்கிலத்தினால் ஏற்பட்டுவரும் தீமைகள் மிகுதி. தற்கால இதழியல் எழுத்திலும், இலக்கிய உருவாக்கத்திலும் இவ்விபத்து தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தேய்வழக்குச் சொற்களுக்கு மாற்றாகத் தமிழ்ச்சொற்களைப் புதுக்காமல், அந்நிய மொழிச் சொற்களைப் புகுத்துதல் நடைபெறுகிறது. இது தாய்மொழிக்குள் ஆதிக்க மொழி மேலாதிக்கத்தை அனுமதித்து விடுகிறது. இப்பிழை அறிந்தோ, அறியாமலோ தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.  

இதுவொரு வரலாற்றுப் பிழை என்பதற்கு மணிப்பிரவாளம் சான்று. மேற்கத்திய மயமாதல் என்கிற முனைப்பும் நம் மொழியைப் பலியாக்கிவருகிறது. இச்செயல்பாடு எதிர்காலத்தில் என்னவாக மாறும் என்பதை ‘மொழியியல் அகழாய்வு’ நமக்கு விளக்குகிறது. ‘மொழியியல் அகழாய்வு’ (Linguistic archiology) என்பது ஓர் அறிவியல் துறை. இதன்வழி ஒரு மொழியின் பழைமையை மட்டுமல்லாது அம்மொழியைப் பேசும் மக்களின் இனவரலாற்றையும் ஆய்ந்தறியலாம். ஆனால், மொழிக்கலப்பு இதற்குத் தடையாக மாறுகிறது. எடுத்துக் காட்டாக, ஒரு வாக்கியத்தைப் பார்ப்போம்.

“என்னப்பா, உன் பிசினஸ் நல்லா டெவலப் ஆகுதா? நல்லா ஹார்டுவொர்க் பண்ணினால், உன் பிசினஸில் நல்ல எஃபெக்ட் கிடைக்கும்.”

மேற்கண்ட வாக்கியத்தில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களாக மாற்றுவோம். பிசினஸ் – தொழில், ஹார்டு வொர்க் – உழைப்பு, டெவலப் – வளர்ச்சி, எஃபெக்ட் – விளைவு.

இந்நான்கு தமிழ்ச் சொற்களையும் மொழியியல் அகழ்வாய்வுக்கு உட்படுத்தி இச்சொற்களின் வேரையும், அதன்வழி வெளிப்படும் வரலாற்றையும் அறிவோம். தொழில் என்ற சொல் தொல்லில் என்கிற சொல்லில் இருந்து கிளைத்ததாகும். தொல் என்பதற்குத் தோண்டு என்பது பொருளாகும். அதாவது தோண்டுதல் தொடர்பான பணியை இது குறிக்கிறது. இதுபோலவே உழைப்பு என்ற சொல்லின் வேர்ச்சொல் உழுதல் தொடர்பான பணியில் சென்று முடியும். வளர்ச்சி என்பது பயிர் வளர்த்தல் தொடர்பான பணியையும், விளைவு என்பது விளைச்சல் தொடர்பான பணியையும் குறிக்கும். ஆக மொத்தமாக இச்சொற்கள் கூறும் செய்தி என்னவெனில் இம்மொழியைப் பேசும் இனம், மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே வாழ்ந்துவரும் ஓர் இனம் என்பதாகும்.

மனிதர்கள் தொடக்கத்தில் உணவு சேகரிப்புக் குமுகமாக வாழ்ந்தனர். பின்னரே உணவு உற்பத்திக் குமுகமாக மாறினர் என்பது மானுடவியல் கூறும் வரலாறு.  தமிழ் இனமும் தோண்டுதல் பணியில் தொடங்கிய உணவு சேகரிப்புக் குமுக காலம் தொடங்கி இம்மொழியைப் பேசி வரும் ஓரினம் என்ற தொன்மை வரலாறு இச்சொல் வழி அறியக் கிடைக்கிறது. பின்னர் குறிஞ்சி நிலத்தில் ‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ என உழாது விதைத்த காலம் தொடங்கி, ‘முழுக் கொழு மூழ்க ஊன்றி’ என அகன்ற கலப்பையால் உழுத மருதநிலக் காலம் வரை வேளாண்மையை விரிவாக்கம் செய்து வாழ்ந்த இனம் எனும் வரலாறும் இச்சொற்களின் பின்னேதான் மறைந்திருக்கிறது. ஆனால், இச்சொற்களை மாற்று மொழிச் சொற்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்கும்போது, இந்த வரலாறே அழிக்கப்படுகிறது.

‘இலத்தீன் வேர்ச்சொற்களை விட்டுவிட்டால், ஆங்கிலம் தெளிவற்ற மொழியாகிவிடும்’ என்கிற கால்டுவெல் கூற்றை இவ்விடத்தில் நினைவுகொள்ளலாம். நேற்று பிறந்த மொழி தொன்மைமிகு மொழியை அழிக்கவிடலாமா? தன் மொழிக்கு வளமை கூட்ட நினைக்கும் எந்தவொரு நேர்மையான எழுத்தாளரும் இத்திட்டமிட்ட சதிக்கு உடன்பட மாட்டார்.

தமிழ் மிகச்சிறந்த சூழல் மொழி. ஒவ்வொரு சொல்லிலும் நிலவியல் தன்மையும் இனவரலாறும் பிணைந்து கிடக்கின்றன. முன்னர் சமற்கிருதம் நிகழ்த்திய வன்முறையிலிருந்து தமிழ் சற்று மீண்டிருக்கிறது. கால்டுவெல் குறிப்பிட்டதை இங்கு நினைவுகூரலாம். ‘தமிழில் வழங்கிவரும் சமற்கிருதச் சொற்களுள் பெரும்பாலானவற்றையோ முழுவதையுமோ உடனடியாக ஒழித்துவிட முடியும்; ஒழித்தால் தூய்மையும் இனிமையும் மிகுந்த நடையை அம்மொழி பெறும்’ என்று குறிப்பிடுகிறார். சமற்கிருதத்தோடு ஆங்கிலச் சொல்லையும் நீக்கி எழுதுவதிலும், புதிய கலைச் சொற்களை உருவாக்குவதிலும் இன்றைக்குப் பசுமை இலக்கிய எழுத்தாளர்கள் தம் ஓர்மையைச் செலுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட முயற்சிகள்தாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான போராட்டத்தில் தோல்வி காணாத ஒரு மொழியாக தமிழ் வாழ்ந்து வருவதற்குக் காரணமாக இருக்கிறது.

 மொழியும் சுற்றுச்சூழலும்

உலகில் பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில் நான்கிலொரு பங்கு அழிவுக்குக் காத்திருக்கிறது. பல்லுயிரியச் செறிவைப் போலவே பன்மொழிச் செறிவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 21% பாலூட்டிகள், 13% பறவைகள், 15% ஊர்வன வகைகள், 30% நீர்நில வாழ்விகளோடு 400 மொழிகளும் விரைவில் அழிவதற்குக் காத்திருக்கின்றன. மொழிக்கும் பல்லுயிரியத்துக்கும் உள்ள தொடர்பை டார்வின் தனது நூலில் பேசியிருக்கிறார். பன்மொழிச் செறிவும் பல்லுயிர்ச் செறிவும் அசாத்தியமான விதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும், துருவ மற்றும் பாலைநிலப் பகுதிகளைக்காட்டிலும் செறிவான பல்லுயிரியம் மிக்க வெப்ப மண்டலக் காட்டுப் பகுதிகள்தான் மொழிச்செறிவு மிக்க மண்டலமாக விளங்குகின்றன என்றும் சொல்கிறார் மொழியியல் அறிஞர் ஜொனாதன் லோ (Jonathan Loh).

இப்புவியிலேயே மொழி அடர்த்திமிக்க பகுதி பாப்புவா நியூகினியா தீவு. 4,62,840 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவில் 830 மொழிகள் புழங்குகின்றன. அதாவது 558 ச.கி.மீட்டருக்கு ஒரு மொழி புழங்குகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் 200 ச.கி.மீட்டருக்கு ஒரு மொழிகூடப் புழங்குகிறது. இத்தகைய மொழிச் செறிவுமிக்க பகுதி உலகில் வேறெதுவும் இல்லை. இங்கு மட்டும் இத்தனை மொழிகள் குவிந்திருப்பதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. முதற் காரணம் ‘காலம்’. பாப்புவா மக்கள் ஏறத்தாழ 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்நிலத்தில் குடியேறிவிட்டனர். வில்லியம் ஏ ஃபோலே (William A. Foley) என்பவரின் கருத்துப்படி ஒரு குறிப்பிட்ட குமுகம் பேசும் ஒரு குறிப்பிட்ட மொழி ஒவ்வோர் ஆயிரம் ஆண்டுக்கும் இரண்டாக உடைகிறது. ஆக 40,000 ஆண்டுகளில் 1,012 மொழிகள் உருவாகிவிடும். இதில் மொழிக்கலப்பும், அழிவுக்குள்ளாகும் மொழிகளும் கணக்கில் கொள்ளப்படவில்லை. இரண்டாவது காரணம், நிலவியல் அமைப்பு. மலைப்பகுதிகள் மொழிகளின் பன்மயத்துக்கு நீண்டகாலக் காரணியாக அமைந்திருப்பதை இவர் குறிப்பிடுகிறார். இதற்கடுத்த காரணியாக தீவு, சதுப்புநிலம், வெப்பமண்டலக் காடுகள் ஆகியவை உள்ளன. இவ்வனைத்துக் கூறுகளும் பாப்புவாவில் உள்ளன.

தமிழ்ச்சூழலை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கலாம். உலகின் பல்லுயிர்ச் செறிவு மிக்க பன்னிரண்டு பகுதிகளுள் ஒன்று தமிழகத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை. தமிழர்கள் முதலில் வசித்தது இம்மலைப்பகுதியான குறிஞ்சி நிலத்தில்தான். தமிழ் நிலம் ஒரு தீவாக இல்லாததால் மொழி பேசும் பரப்பு விரிந்து பரந்ததோடு ஃபோலேயின் கருத்துப்படி பிற திராவிடக் குடும்ப மொழிகளாக உடைந்து பிரிந்ததையும் கருத்தில் கொள்ளலாம். ஆனாலும், தமிழ் தன் சிறப்பை இழக்காமல் தனித்தியங்கும் தன்மைகொண்ட செம்மொழியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.

மொழி என்பது அது பேசப்படும் நிலத்தின் கண்ணாடி. அந்நிலத்தின் சூழலியலை அம்மொழி ஆடிதான் பிரதிபலிக்கிறது. காலூன்றுவதற்கு நிலமற்றுத் திரியும் சமற்கிருதமோ, பல்லுயிரியம் என்றால் என்னவென்றே அறியாத அய்ரோப்பிய மண்டலத்து மொழியான ஆங்கிலமோ இத்தகைய செறிவைத் தம்முள் கொண்டிருக்கவில்லை. எனினும், இவ்விரு மொழிகளும் தமிழ்மொழியை மட்டுமல்லாது நிலத்தின் வரலாற்றையும் சீரழித்துள்ளன. நமது எழுத்தாளுமைகளும் இதற்கு இணங்கியே எழுதி வருகின்றனர். இந்நிலத்தின் சூழலை வேராகக்கொண்ட தமிழ்ச் சொற்களை விடுத்து, வேற்றுநிலப் பண்புகளை வேராகக்கொண்ட அந்நியச் சொற்களைத் திணிக்கையில் நடைபெறும் கோமாளித்தனம் இவர்களால் உணரப்படவே இல்லை.

அனைத்து மொழிகளைப்போலவே ஆங்கிலம், தமிழ் மொழிகளிலுள்ள சொற்களின் உருவாக்கத்தையும் இம்மொழிகள் தோன்றிய பகுதியின் நிலவியலே தீர்மானித்திருக்கிறது. ஆங்கிலம் உருவான இடம் குளிர் மண்டலப்பகுதி. தமிழ் தோன்றியதோ வெப்பமண்டலத்தில். நெடுநாள் குளிரில் வாடும் ஆங்கிலேயர்களுக்கு வெப்பம் என்பது மகிழ்வைக் கொண்டுவரும். எனவேதான் அவர்கள் வேனிற் காலத்தை (Spring) வரவேற்கிறார்கள். இதற்கு நேர்மாறாக வெப்பமண்டலவாசிகளான தமிழர்கள் நெடுநாள் வெப்பத்தில் வாடுவதால் குளிர்ச்சியைக் கொண்டுவரும் கார்காலத்தை வரவேற்றார்கள். இந்நிலவியல் தன்மையே இவ்விரு மொழிகளின் சொற்களிலும் ஆட்சி செலுத்துகின்றன. இதனாலேயே கடுமையான வெப்பமானது தமிழ் இலக்கியங்களில் கடியப்பட, அய்ரோப்பிய, அமெரிக்க இலக்கியங்களில் அன்புக்கும் பக்திக்கும் மிதவெப்பம் ஒப்பிடப்பட்டு வரவேற்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார் தனிநாயகம் அடிகள்.

ஒருவரை வரவேற்க ஆங்கிலத்தில் ‘வார்ம் வெல்கம்’ (warm welcome) என்ற சொல்லும், நன்னெஞ்சைக் குறிப்பிட ‘வார்ம் ஹார்ட்’ (warm heart) என்ற சொல்லும் வெப்பத்தோடு ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது.  தமிழில் இதே பொருளுள்ள சொற்கள் இதற்கு நேர்மாறாக குளிர்மையோடு ஒப்பிடப்பட்டு ‘மனம் குளிர்ந்த வரவேற்பு’, ‘ஈரநெஞ்சம்’ எனக் குறிக்கப்படுகிறது. மழைகொண்டு வரும் கருமுகிலைத் தமிழ் ‘எழிலி’ என வருணிக்க, ஆங்கிலமோ தமது குழந்தைகளுக்கு ‘Rain rain go away’ எனச் சொல்லித்தருகிறது. இப்பின்னணி வடமொழிக்கும் பொருந்தும்.

அய்ரோப்பிய அளவுக்கு இல்லாவிடினும் வடஇந்தியாவும் குளிர்ப்பகுதியே. ஆண்டில் நெடுநாள் குளிர் நிலவும் இங்கு வெப்பமே வரவேற்கப்படுகிறது. இதனால்தான் வேனிற் காலமான வசந்தம் வடபுலத்தில் கொண்டாடப்படுகிறது. நிலவியல் சார்ந்த இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தமிழில் புழங்கும் வசந்தகாலக் கவிதைகள் உண்மையில் எரிச்சலூட்டுகின்றன. இளவேனில் என்கிற தமிழ்ச் சொல்லை ‘வசந்தம்’ என்கிற வடமொழிச் சொல் ஆக்கிரமித்து தவறான பொருளையும் தந்துவருகிறது. கவிதைகளைச் சற்று ஒதுக்கி, அனைவரும் அறிந்த திரைப்படப் பாடல் வரிகளை எடுத்துக்கொள்வோம். ‘வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்.’ இப்பாடலை இளவேனிற் காலமான சித்திரை வைகாசியில் நீரற்று வறண்டு கிடக்கும் தமிழகத்தின் ஓர் ஆற்றங்கரையில் நின்று பாடுவதைக் கற்பனை செய்யுங்கள். இதுபோலவே ‘வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்’ என்று கசகசக்கும் கோடை வெயிலைப் போன்றே தன் வாழ்வும் அமைய வரவேற்கும் பாடலாசிரியரை என்னவென்று சொல்வீர்கள்? கவிதைகளிலும்கூட இந்த ‘வசந்த’ அபத்தங்கள் இடம் பெற்றிருப்பதை வாசித்துப் பாருங்கள். தமிழ்நிலத்தில் இல்லாத பருவமான ஆங்கிலத்தின் Autumn என்கிற இலையுதிர் காலத்தின் கதையும் இப்படித்தான். தனியே ஒரு நூல் எழுதும் அளவுக்கு இவ்வாறான அபத்தங்கள் தமிழில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன.

பயிற்றுமொழி வழியாக ஆங்கிலத்தின் தாக்கம் இன்றைய தமிழ்க் குழந்தைகளின் மொழியையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. யானையையும் புலியையும் இன்றைய குழந்தைகளுக்கு ‘எலிஃபன்ட், டைகர்’ என்கிற இரு சொற்களைக்கொண்டுதான் அடையாளம் தெரிகிறது. யானையோ  புலியோ இல்லாத ஒரு நாட்டின் மொழியே ஆங்கிலம். ஆனால், இம்மொழி யானையும் புலியும் வாழும் தமிழ்நிலத்தைச் சார்ந்த குழந்தைகளின் தாய்மொழியைச் சிதைத்திருப்பது கொடும் நிகழ்வு. புலியைக் குறிக்க, புலி, வேங்கை, உழுவை, மறுவ, வயமா, வயப்புலி, கடுவாய், வாள்வரி, வெல்லுமா, பாய்மா, வியாக்கிரம், வல்லியம், தரக்கு, குயவரி, கொடுவரி, புல் எனத் தமிழில் பல சொற்கள் உள்ளன.

புல் என்றால் புல்லுதல். அதாவது, பொருந்துதல் அல்லது தழுவுதல். புல் என்பது புல்லி ஆக மாறிப் புலியாகத் திரிந்தது. இதற்கு நேரடிப் பொருள் முன் கால்களால் தழுவும் விலங்கு. இது நடத்தைப் பண்புகள் என்கிற அறிவியல் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர். ஆங்கிலத்தில் பயிலும் டைகர் என்கிற சொல்லோ பாபிலோனிய ஆறான டைகிரிஸ் எனும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதாவது, ஒரு அய்ரோப்பியர் முதன்முதலில் அங்குதான் அவ்விலங்கைப் பார்த்தார். ஆனால், தமிழ் நிலத்தில் இன்று புலி இருக்க, புலி என்ற சொல்லை மட்டும் காணோம்.

ஆங்கிலச் சொல்லான எலிபன்ட் என்கிற சொல் பழைய ஃப்ரெஞ்ச் மொழியிலிருந்து பிறந்ததா அல்லது இலத்தீன், கிரேக்க மொழியிலிருந்து பிறந்ததா என இன்னும் ஆய்வில் இருக்கையில், தமிழில் இதற்கு யானை, எறும்பி, தும்பி, தூங்கல், தோல், கறையடி, பொங்கடி, உம்பல், வாரணம், ஒருத்தல், வல்விலங்கு, நாகம், கும்பி, நால்வாய், குஞ்சரம், அத்தி, வேழம், உவா, கரி, களிறு, பிடி, கைம்மா, மறமலி, ஆம்பல், கோட்டுமா, கடிவை, புகர்முகம், பகடு, கரிணி, களபம், மருண்மா, தந்தி, வழுவை, கயம், மதகயம், இபம், கும்பி, பூட்கை, புழைக்கை, மதமா, மந்தமா என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன.

இவையனைத்தும் யானையின் உருவமைப்பு, நடத்தைப் பண்புகளின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர்கள். ‘நிகண்டுகளில் யானையின் உடலில் 25 பாகங்களுக்கு மேல் தனிப்பெயர்கள் காணப்படுகின்றன’ என்கிறார் பி.எல்.சாமி. பல்லுயிரியச் செறிவு மிக்க பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் அத்தன்மையைத் தம் மொழியிலும் ஏற்றிவைத்தனர். இப்படியாக ஓர் உயிரினத்தைக் குறிக்கப் பல சொற்களைக் கொண்ட ஒரு மொழியை, அவ்வுயிரினத்தைக் குறிக்கச் சொல் ஏதும் சொந்தமாக இல்லாத ஒரு வேற்று மொழி அடித்து வீழ்த்தி வருகிறது. மற்ற சொற்களுக்கும் இது பரவினால், எதிர்காலத்தில் அது மொழியை ஒழித்த பண்பாட்டு மேலாதிக்கமாக மாறிவிடும். கூகி வா தியாங்கோவும் இதைத்தான் தெளிவுபடுத்துகிறார்.

இயற்கை என்பது தொடக்ககால மனிதர்களால் அறிவியல் என்று அறியாமலேயே பயின்றுவரப்பட்ட ஓர் அறிவியல் துறை. தமிழும் அவ்வழி பயின்றதே. ஒரு மலர், மொட்டிலிருந்து மலராக மாறுவதற்குள் அதன் நிலைகளைக் குறிக்க நனை, முகை, அரும்பு, போது, மலர், அலர், வீ எனப் பல சொற்கள் தமிழில் உண்டு. சூழலுக்கு நெருக்கமாக வாழ்ந்ததால்தான் மலரும் நிலைகளைக் கூர்ந்து கவனித்து இப்பெயர்களைச் சூட்ட முடிந்திருக்கிறது. இயற்கை அறிவியலைப் பயின்ற இத்தமிழர்கள் ‘மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே’ எனச் சூழல் மண்டலத்தை உயிர்த்தன்மை உடையதாக வரையறுத்தனர், ஐந்திணைகளையும் ஓர் அமைவாகப் பதிவுசெய்தனர். பல்லுயிர்ச் செறிவற்ற நிலத்தில் பிறந்த ஆங்கில மொழிவழித் தோன்றிய பண்பாடோ சூழல்மண்டலத்தை உயிரற்ற அமைப்பாகக் கருதியது. இத்தகைய பண்பாட்டின் துணைப்பொருளாக விளைந்த இதன் தொழில்நுட்பங்கள் இயற்கையின் உயிர்த்தன்மை அறியாது அதனை அழித்துத் தாம் வாழ முற்பட்டன. இக்கருத்தாக்கம் தமிழர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தியிருப்பதன் விளைவே இன்றைய தமிழ்நிலத்தின் சுற்றுச்சூழல் சீர்கேடு.

ஏற்கெனவே இயற்கை அறிவியல் உள்ளிட்ட குறித்த கலைச்சொற்கள் விரவிக்கிடக்கும் மொழியாகத் தமிழ் திகழ்கிறது. அறிவியல் இன்று விரிவாகக் கிளைபிரித்து வளரும்போது, மொழிக்கு மேன்மேலும் பல கலைச்சொற்கள் தேவைப்படுகின்றன. தமிழ் பசுமை இலக்கியத்தின் மறுமலர்ச்சி நிறைய தமிழ்ச் சொற்களைப் புதுக்கியும், புதிய கலைச்சொற்களை உருவாக்கியும் மொழிக்குப் பங்களித்து வருகிறது. தூய இலக்கியவாதிகள் செய்யத் தவறிய இச்செயலைப் பசுமை இலக்கியம் செய்துவருவதோடு அச்சொற்களைப் பொதுவெளிப் புழக்கத்துக்கும் கொண்டுவந்து வெற்றி கண்டிருக்கிறது.

2000-ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு பதிவின்படி லுவா (Lua) என்கிற மொழியை ஒரே ஒருவரே பேசினார். இன்று அவரோடு அவர் மொழியும் அழிந்துவிட்டிருக்கலாம். ஆனால், முரணாக ஒரு புகழ்பெற்ற கணினி மொழிக்கு லுவா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் என்பது கணினியிலும் வாழும் மொழியாக நிலைத்திருக்க வேண்டும். அதுவொரு கணினி மொழியின் பெயராக மாறிவிடக் கூடாது. இப்பொறுப்பு தமிழில் எழுதும் அனைத்து எழுத்தாளுமைகளுக்கும் இருக்கிறது.

-நக்கீரன்
விகடன் தடம். டிசம்பர் 2016

வெள்ளி, நவம்பர் 14, 2008

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?

கடந்த அக்டோபர் 6, 2008 தேதியிட்ட நாளிதழ்களில் மிக மிக முக்கியமான - அச்சமூட்டும் தகவலொன்று வெளியாகியிருந்தது. பொருளாதார நெருக்கடி, மின்சாரத் தட்டுப்பாடு, பங்குச்சந்தைப் பிரச்சனைகள், அரசியல் அறிக்கைகள், கேபிள் டிவி குடும்பச் சண்டைகள் என்று வேறு பல முக்கிய நிகழ்வுகளில் மக்களின் கவனம் மூழ்கியிருந்ததால் வழக்கம்போல இந்த முக்கியமான செய்தி உரிய கவனத்தைப் பெறவில்லை.

நாளிதழ்களைத் தவிர வேறு தொலைக்காட்சிச் செய்தியறிக்கைகளில் இந்தத் தகவல் நமக்குத் தெரிந்தவரையில் இடம்பெறக்கூட இல்லை. பாவம், மதுரையில் காதல் விழுந்து கிடக்கும் பிரச்சனையையும் சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற முடிவற்ற பட்டிமன்றத்தையும் வேறு பல தலைபோகிற விவகாரங்களையும் சொல்லி முடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை - அவர்கள் என்னதான் செய்வார்கள்?நாளிதழ்களில் வெளியான அந்தச் செய்தியின் சாரம் இதுதான் -

"தமிழகம் உட்பட 19 மாநிலங்களில் 200 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அசுத்தமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் பயன்படுத்தும் நீரில் உப்புத்தன்மை, இரும்பு, புளோரைட், நச்சுத்தன்மை ஆகியவை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கும். நீரில் அதிக அளவிலான புளோரைட் பற்களையும் எலும்புகளையும் பாதிக்கும். நச்சுத்தன்மை அதிகம் உள்ள நீரைக் குடித்தால் தோல் நோய்களும் தோல் புற்று நோயும் ஏற்படும். மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது."


சமுதாயத்தின் மீது மிகச் சிறிய அளவில் அக்கறை கொண்டவர்களுக்குக்கூட இந்தத் தகவல் பேரதிர்ச்சியாக இருந்திருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் ஏனோ இந்தச் செய்தி வெளியான பிறகும் பரவலான கவனத்தை ஈர்க்கவில்லை. மக்களின் விழிப்புணர்வைத் தகுந்த நேரத்தில் தகுந்த விஷயத்திற்காகத் தட்டியெழுப்பவேண்டிய தார்மீகக் கடமை கொண்ட அத்தனை ஊடகங்களும் இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக்கொண்டன.

Water Tablet என்றழைக்கப்படும் நிலத்தடி நீர்த்திட்டுக்கள் தனித்தனியே தீவாக உருவானவை அல்ல. பூமியின் அடியாழத்தில் அவை ஒரே தளமாக இணைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் அற்புதங்களுள் இதுவுமொன்று. ஆக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் கழிவுநீரால் மாசுபடுத்தப்படும் நீர் இந்த இணைப்பால் மற்ற பகுதிகளுக்கும் எளிதாகப் பரவுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் பல்வேறு இடங்களிலும் சகட்டு மேனிக்கு மாசுபாடு நிகழும்போது ஒட்டு மொத்த நீர்த்திட்டும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.


நிலத்தடி நீர் எதனால் மாசுபடுகிறது? இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய துறைகளும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? மிக முக்கியமாக, இத்தனை நாட்கள் - ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக - இந்த அளவிற்கு நாசமாகாத நிலத்தடி நீர் திடீரென்று இத்தனை தூரம் அசுத்தமானது எப்படி? நாம் பெருமையோடு பீற்றிக்கொள்ளும் விஞ்ஞானமும் நவநாகரீகமும் அந்த அளவிற்கு வளராத பண்டைய காலங்களில் நிலத்தடி நீரை எவ்வாறெல்லாம் காப்பாற்றினார்கள்?கேள்விகள் மலைபோல எழுகின்றன. பதில் கூறுவாரில்லை. "இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கும்" என்னும் ஒற்றை வரி மனதைப் பெரிதும் பிசைகிறது.இதற்கான காரணங்களாகக் கீழ்கண்ட காரணிகளைச் சுட்டலாம்.- விரிவடைந்துவரும் நகரங்களின் தேவைக்கு ஏற்றவாறு அதனைச் சுற்றிய நீர் ஆதாரங்களைப் பெருக்கிக்கொள்ளத் தவறியது- அப்படித் தவறியதோடு மட்டுமன்றி இருக்கும் பண்டைய நீர் ஆதாரங்களான ஏரிகளையும் குளங்களையும்கூட பிளாட் போட்டுக் கூறுபோட்டுக் கூவி விற்றது- அல்லது ஏரி / குளங்களின் நீரை சுகாதாரமான முறையில் பாதுகாக்கத் தவறியது / சுழற்சி முறையில் தூர் வாராமல் அவற்றை சீரழிய விட்டது- மழைநீர் அருகில் உள்ள குளம் குட்டைகளில் சேருவதற்கான கால்வாய்களையோ வாய்க்கால்களையோ அமைக்காமல் இருக்கும் நீர்வழிகளையும் அடைத்து விட்டது- தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் சரியான முறையில் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் வெளியேற்றப்படுகின்றனவா என்பதை அறவே அலட்சியப்படுத்தியது (அல்லது உரிய லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டு சுற்றுச் சூழல் மாசுபாடுச் சான்றிதழ் வழங்கியது)இதெல்லாம் தெரிந்த விஷயம்தான் - இதற்கும் வரலாற்றுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது.


பண்டைய தமிழகக் கல்வெட்டுக்களைப் பதிப்பித்திருக்கும் புத்தகங்களில் - தென்னகக் கல்வெட்டுக்கள், மத்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் ஆய்வறிக்கைகள், தமிழகத் தொல்லியல் துறையின் பதிப்புக்கள் - இவற்றில் ஏதாவதொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் ஏதேனும் பத்துக் கல்வெட்டுப் பாடங்களைப் படியுங்கள். அது எந்த மாவட்டக் கல்வெட்டாக இருந்தாலும் சரி - எந்தத் திருக்கோயில் கல்வெட்டாக இருந்தாலும் சரிதான். பத்தில் குறைந்த பட்சம் ஐந்திலாவது அந்த ஊரின் ஏரிகளோ கண்மாய்களோ குறைந்தபட்சம் வாய்க்கால்களோ இடம்பெற்றிருக்கும்.

அக்காலத்தில் ஏரிவாரியத்தையும் ஏரி வாரிய உறுப்பினர்களையும் கவனமாகத் தேர்ந்தெடுத்ததைப் பற்றி மட்டும் விபரமாக உரைக்கும் கல்வெட்டுக்களெல்லாம் உண்டு. இன்னார் இன்ன கோயில் கட்டினார் என்பதைப்போல இன்னார் இன்ன ஏரி எடுப்பித்தார் என்று கூறும் கல்வெட்டுக்களும் உண்டு. ஏரியின் நீரைக் கட்டுப்படுத்த உதவும் மதகுகளில் பல முக்கியக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

தஞ்சைக்கு அருகில் அமைந்திருக்கும் மதகுக் கல்வெட்டு அந்த மதகை இயக்கிய கிராமத்து ஊழியருக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தத்தையும் அவருடைய கடமைகளையும் விரிவாக விளக்குகிறது. இந்த நிவந்தத்தை அமைந்த மிகப்பெரிய அரசாங்க அலுவலர் இத்தர்மத்தைக் காப்பாற்றுபவர்கள் பாதங்கள் என் தலை மேலென என்று பணிந்து பரவுகிறார் !

வீராணம் திட்டம் என்ற பெயரில் அரசியல்வாதிகளால் பல்வேறு அசிங்கமான சர்ச்சைகளுக்கு இடமான நீர்த் திட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வீரநாராயண ஏரி சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. கடலளவு பிரம்மாண்டமாக விரிந்து பரந்திருக்கும் இந்த ஏரி ஆயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்ட இன்றைய நிலையிலும் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது சென்னையிலிருக்கும் பெருமக்களுக்கும் உபயோகப்படுவதை எவராவது அணுவளவாவது சிந்தித்திருப்போமா?

முதலாம் இராஜேந்திர சோழர் தன்னுடைய வடநாட்டு வெற்றியைப் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினாராம்... எப்படித் தெரியுமா? மிகப்பெரிய ஜலஸ்தம்பம் - அதாவது ஏரியை - உண்டாக்கிக் கொண்டாடினார். ஜெயஸ்தம்பம் நட்டு வெற்றியை வெறுமனே பறைசாற்றிக்கொள்வதற்கு பதில் ஜலஸ்தம்பம் உருவாக்கி அது மக்களுக்கும் பயன்படும் வகையில் பார்த்துக்கொண்ட அவரது மாண்பை எந்தப் பாடப்புத்தகம் சொல்லித்தருகிறது?


ஒவ்வொரு கோயில்களின் முன்னாலும் ஒரு பெருங்குளம் புனித தீர்த்தமாக அமைக்கப்பட்டது. ஊரில் பெருக்கெடுக்கும் மழைநீர் இதில் வந்து சேருவதற்கான கால்வாய்களும் அமைக்கப்பட்டன. இன்றைய நிலைமையில் ஏதாவது ஒரு புனிதத் தீர்த்தத்திலிருது ஒரு குவளை நீரை தைரியமாக எடுத்துக் குடிக்க முடியுமா? சொல்லுங்கள்.ஏரிகள் மற்றும் குளங்களின் நிலைமை இவ்வாறென்றால் ஆறுகளின் நிலைமை அதைவிட மோசம்.

"நதிக்கே நங்கூடம் பாய்ச்சிய அதிசயம் நம் ஊரில் மட்டும்தான் !" என்று வியக்கிறார் கவிஞர் வைரமுத்து. பிரிட்டிஷார் காலத்தைய 18 - 19ம் நூற்றாண்டு ஆவணங்களையும் ஓவியங்களையும் பார்க்கும்போது உதிரம் கொதித்துப் போகிறது. அடையாறு என்பது உண்மையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆறு என்பது உங்களில் எவருக்காவது தெரியுமா?

சென்னை முகப்பேரில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் இன்று அமைந்திருக்கும் இடத்தில் ஒரு ஏரி இருந்தது. அட, சாக்கடைச் சமுத்திரமாக விளங்கும் கூவமும் கூட ஒரு காலத்தில் நதிதானைய்யா!கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள். இது அடையாறு கடலில் கலக்கும் காட்சி. தூரத்தில் தெரிவது பரங்கிமலை.நம்பமுடியவில்லையல்லவா? இது ஏதோ கற்பனை ஓவியமென்று நினைத்துவிடாதீர்கள். அன்று தெரிந்த நிஜக்காட்சி இது.http://i356.photobucket.com/albums/oo9/chndru007/Madras-AdyarRiver.jpg

நகர்ப்புற வளர்ச்சியில் இப்படிப்பட்ட விஷயங்கள் ஏற்படுவது சகஜம்தான் என்று நினைக்கிறீர்களா ? கிடையவே கிடையாது. அளவில் சென்னைப் பெருநகரை விடச் சிறியதான சிங்கப்பூரில் நிலத்தின் ஒவ்வொரு அடியும் மதிப்பு மிக்கதுதான். அதற்காக அவர்கள் இருக்கும் ஏரிகளைக் கூறுபோட்டு விடவில்லை. நாட்டிற்கு நடுவே மிகப்பெரிய இரண்டு ஏரிகளைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறார்கள். ஏரியில் எந்நேரமும் படகில் ஒருவர் சவாரி செய்து ஆங்காங்கே கடற்பாசிகளை இறைத்துக்கொண்டிருப்பார். நீர்ப்படுகையை ஆரோக்கியமாக வைக்கும் வழிமுறை இது. இந்தப் பணி 365 நாட்களும் நடக்கும்!

இதுபோல் ஏரிப்பராமரிப்பை எப்போதாவது நாம் பார்த்ததுண்டா சொல்லுங்கள். ஏரியின் கரைகளும் படுசுத்தமாகக் காட்சியளிக்கும். பொங்கி வரும் மழை நீரை இந்த ஏரியில் வந்து கொண்டு சேர்க்கும் கால்வாய்களும் உண்டு.

திருச்சியில் சில காலத்திற்கு முன் ஒரு சீக்கிய மாநகராட்சி ஆணையாளர் மாற்றலாகி வந்தார். மற்றவர்களைப்போல் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அனுசரித்துக்கொண்டுபோய் பணம் பண்ணாமல் வேண்டாத விவகாரங்கள் பலவற்றிலும் இறங்கினார். சீக்கியரல்லவா ? இயற்கையாகவே அந்த இனத்திற்கென்று இருக்கும் வீரம் அவரிடம் (தமிழர்களைப்போல் ஒட்டு மொத்தமாக ஒழிந்துபோய் விடாமல்) கொஞ்சம் மிச்சமிருந்தது. அவர் செய்த வேண்டாத வேலைகளில் ஒன்று - இருந்த ஏரிகளையும் குளங்களையும் கணக்கெடுக்கத் துவங்கியதுதான்.

திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய ஏரி ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதனை அவர் எங்கு தேடியும் காணவில்லை. என்ன ஆயிற்றென்று விசாரித்த போதுதான் அதே இடத்தில் மாரீஸ் என்ற பெயரில் மூன்று பெரும் திரையரங்கங்கள் கட்டப்பட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மக்களுக்குக் கலைச்சேவை ஆற்றிக்கொண்டிருக்கின்றன என்கிற அதிர்ச்சிகரமான விஷயம் வெளியாயிற்று.

பாவம் ! திருச்சிவாசிகளே செளகரியமாக மறந்து போய்விட்ட அந்த விஷயத்தை எப்படியோ கலெக்டர் கண்டுபிடித்து விட்டார். நியாயமாகப் பார்த்தால் அந்த அரங்கங்களை இடித்திருக்க வேண்டும். ஆனால் எத்தனையெத்தனையோ அதிகாரிகளைக் "கவனித்துக்" கட்டிய இடமாயிற்றே? விட்டுவிடுவார்களா ? ஏரி அங்கு இருந்து என்ன பெரிதாகக் கிழித்துவிடப் போகிறது? அந்தப் பகுதியின் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அதனால் மாமூல் அளிக்கமுடியுமா ? அல்லது மக்களைத்தான் கேளிக்கை இன்பத்தில் ஆழ்த்த முடியுமா? அல்லது இதற்காகத் திருச்சிவாசிகள்தான் போராட்டம் நடத்தப் போகிறார்களா ? கிடக்கிறது கழுதை என்று விட்டுவிடுங்கள் என்று கலெக்டரை சரிசெய்து விரைவில் அவரது பணிமாற்றத்தை நிறைவேற்றித் திருச்சியை விட்டுத் துரத்துவதற்குள் அதிகாரிகளுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

நமக்குத் தெரிந்து சென்னை வில்லிவாக்கத்தில் இருபது இருபத்தைந்து வருடங்களுக்குமுன் ஒரு பிரம்மாண்டமான ஏரி இருந்தது. நிஜமாகவே மிகப்பெரிய ஏரி. நல்ல மழை பெய்யும் நாட்களில் அக்கரைக்கு இக்கரை நீர் ததும்பிக்கொண்டிருக்கும். பின் ஒரு காலத்தில் அதிகாரிகளின் தயவால் ஒரு ஓரத்தில் வீட்டுப்பகுதிகள் முளைத்தன. இன்று அந்த ஏரி எங்கிருந்தது என்று வில்லிவாக்கம்வாசிகளுக்கே தெரியாது. அந்த அளவிற்கு அப்பகுதியில் வீடுகள் முளைத்துவிட்டன.

இதே கதைதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை வாசகர்கள் சொல்லாமலே அறிவார்கள்.அமைச்சர்களும் அதிகாரிகளும் எதையெதையோ திறந்து வைக்கிறார்களே - எவராவது ஒருவர் கடந்த 70 வருடங்களில் ஒரு ஏரியைக் கட்டுவித்தார் - ஒரு குளத்தைத் வெட்டினார் - குறைந்தபட்சம் ஒரு வாய்க்காலைத் தூர் வாரினார் என்று படித்திருக்கிறோமா? சங்ககாலத்திற்கோ சோழர்காலத்திற்கோ கூடப் போகவேண்டாம்.

ஒரு முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்ப்போம். அப்போதெல்லாம் 'குடிமராமத்து' என்றொரு வழக்கம் கிராமங்களில் இருந்ததே! தெரியுமா? இன்று கிராமங்களில் இருப்பவர்களுக்கே அது தெரியுமா என்பது சந்தேகம். ஏரிநீர் மற்றும் ஆற்றுநீர்ப் பாசனங்களுக்கான பராமரிப்புகளை அந்தந்தக் கிராம மக்களே குழு அமைத்துக் கவனித்துக் கொண்டார்கள். அரசாங்கம் வந்து செய்யும் என்று யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை.

ஆனால் இன்று? தெருமுனையில் ஒரு குழாய் பழுதடைந்துவிட்டால்கூடப் பொதுப்பணித்துறைதான் வரவேண்டும். பொருளாதாரத் தேடலில் மனிதநேயத்தையும் சமூகசிந்தனைகளையும் தொலைத்துவிட்டு நிற்கிறோம். மனிதகுலத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் யாராவது ஒரு சூப்பர் ஹீரோ வந்து தீர்த்துவைப்பான் என்று சினிமாப் பார்த்து மூளையை மழுங்கடித்துக் கொண்டோம்.

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒரேயொரு பிரதமரும் ஒரேயொரு பொதுப்பணித்துறை அமைச்சரும் ஒரேயொரு மேயரும் எத்தனை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள்?

நம்மை அடிமை செய்து ஆண்ட வெள்ளையர்கள்கூடச் செய்யாத அத்தனை அட்டுழியங்களையும் கடந்த அறுபது எழுபது வருடங்களில் நாம் செய்து முடித்துவிட்டோம். பணத்தாசை மற்றும் பேராசை பிடித்த அரக்கர்களாக மாறி இயற்கையன்னையின் பாலை மட்டுமல்ல - மார்பகங்களையே கடித்து இரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் துவங்கிவிட்டோம். "தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு" என்று முடங்கிவிட்டோம். சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் எவனோ பார்த்துக்கொள்வான் - உனக்கும் எனக்கும் என்ன ஆயிற்று? என்று நமது பங்கிற்கு நம் வீட்டின் கழிவு நீரையும் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையில் கலந்தோம்.

வெட்கமில்லாமல் குற்றவாளிக் கூண்டில் சிரித்தபடி ஏறி நிற்கும் நம்மை வருங்காலத்தின் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

அன்புடன்
ஆசிரியர் குழு
வரலாறு - மாத இதழ்

சனி, அக்டோபர் 11, 2008

புகை பிடித்தால் 10 ஆண்டுகள் ஆயுள் குறைவு

உலகநாடுகள் பலவற்றிலும் இந்தியாவிலும் புகையிலைப் பொருள் விளம்பரங்களுக்கும் பொது இடங்களில் புகைப்பதற்கும் தடை விதிக்கப்பட்ட போதிலும், புகை பழக்கத்துக்கு மாறி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையவில்லை.பிற எந்த நாட்டையும் விட இந்தியாவில் பீடி, சிகரெட், பான் மசாலா, குட்கா போன்ற வஸ்துகளை பயன்படுத்தும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகிலேயே இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டிருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
2001ம் ஆண்டு புகையிலை பொருள் சட்டவிதிமுறையின் படி இந்தியாவில் சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது. ஆனால் விதிமுறைகளை அமல் செய்ய சரியான நடைமுறைகள் இங்கு இல்லை. சிறுவர்கள் தாராளமாக சிகரெட் பிடிக்கலாம். ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சிறுவன் கடைக்கு சென்று சிகரெட் கேட்டு வாங்கும் போது அவனுடைய வயதை உறுதி செய்ய மொபைல் எண் அல்லது கிரெடிட் கார்டு விபரங்களை கேட்கிறார்கள். சிறுவனிடம் போலி விபரங்களை அளித்து சிகரெட் பெறுவதற்கு பரிசோதனைக்காக போலீசாரே அனுப்புவார்கள். ஒருவேளை அவனிடம் புகையிலைப் பொருட்களை கடைக்காரர் விற்பனை செய்தால் கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் இந்தியாவில் இல்லாததால் சிறுவர்கள் எளிதில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டை புகையிலையை ஒதுக்கும் இளைஞர்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய சுவாச ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆர்.நரசிம்மன் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அவர் தெரிவித்தது:புகைபிடிக்க பழகி விட்டவர்கள் மத்தியில் அதை விடுவதற்கு செய்யும் முயற்சியில் பெரிய முன்னேற்றம் இல்லை. இந்தியாவில் 2 சதவீதம் பேர்தான் புகைப் பழக்கத்தை கைவிட முன்வருகிறார்கள். இது மற்றநாடுகளை விட மிகக் குறைவு. ஆகவே புகை பிடிப்பதற்கு முன்பே அதை தடுக்க வேண்டுமானால் பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும். இதற்காக நாங்கள் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு செய்து வருகிறோம். இதை பெரிய அளவில் செய்யும் போது 1015 ஆண்டுகளில் நல்ல விளைவு ஏற்படும்.இந்தியாவில் விளம்பரத் தடை, பொது இடங்களில் சிகரெட் பிடிக்கத் தடை இருந்த போதிலும் புகைக்கும் பழக்கத்தில் மாற்றம் இல்லை.
இந்தியாவில் புகைபிடிக்கும் பெண்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள். பீடி, சிகரெட், மூக்குப் பொடி எதுவாக இருந்தாலும் அது நமது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியதுதான். சிலர் குறைவாகத்தானே குடிக்கிறோம் என்று கூறி சமாதானம் செய்கிறார்கள். அது தவறு. கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அடுத்தவர் புகையை நாம் சுவாசித்தால் அது நமது உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதை கடந்த 1015 ஆண்டுகளாகத்தான் உணரத் தொடங்கி யிருக்கிறோம். இவ்வாறு நரசிம்மன் தெரிவித்தார். எதிர்கால இளைஞர்கள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க, பள்ளிகளில் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.புகையில் மறையும் வாழ்க்கை : புகை பிடிப்பவர்களின் ரத்த நாளங்களை நிகோடின் பாதிப்பதால் அதன் இயல்பு தன்மை மாறி, இருதய நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது. புகையால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. டி.பி. வருவதற்கும், சுவாச உறுப்புகளில் கேன்சர் ஏற்படவும், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படவும் காரணமாகிறது. புகை பிடிக்கும் ஆண்கள் 10 ஆண்டு வாழ்க்கையை இழக்கிறார்கள். புகையிலைப் பொருட்களால் உலகில் ஆண்டுக்கு 54 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பாதிப்பேர் மரணமடைய புகையிலையே காரணம்.
நன்றி: www.vizhippu.net

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2008

கடவுளால் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!

எலுமிச்சங்காய் சைஸ் மண் உருண்டை ஒன்று. அதற்கு எட்டாயிரம் மைல் குறுக்களவு கொண்ட இந்த உலக உருண்டையின் தலை விதியை மாற்றுகிற சக்தி இருக்கிறது என்றால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். எப்படி என்று பார்ப்பதற்கு முன், தற்போது நம் உலகத்துக்கு உடம்பு சரியில்லை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.

மனிதன் கடந்த நூறு வருடமாக இடைவிடாமல் கக்கிய கார்பன் டை ஆக்ஸைடு புகையால் க்ளோபல் வார்மிங் என்று பூமியே அநியாயத்துக்குச் சூடாகிக் கொண்டிருக்கிறது. வட துருவத்தின் மூவாயிரம் வருடம் பழைமையான ஐஸ் மலையெல்லாம் இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் மெல்ல "க்ராக்" விட ஆரம்பித்து எட்டே வருடத்தில் துண்டு துண்டாக உடைந்து கொண்டிருக்கிறது. எங்கோ இமய மலைக்கு வடக்கே நடப்பதுதானே என்று அலட்சியமாக இருந்தால் ஒரு நாள் கடல் உள்ளே புகுந்து மயிலாப்பூர் போய்விடும். மாலத்தீவு முழுகிவிடும். மழை பொய்க்கும். பயிர் அழியும். இன்னும் பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும் அத்தனை உற்பாதங்களும் நேரும். இந்த அழிவிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற இரண்டே வழிதான் இருக்கிறது.

1. சைக்கிளில் போகலாம்.
2. மரம் வளர்க்கலாம்.

மரங்கள் ஏராளமான கார்பனை உறிஞ்சிக் கொண்டு காற்றைச் சுத்தப்படுத்த வல்லவை.

இதற்காக பெங்களூருவில் பத்து லட்சம் விதைப் பந்துகள்' (www.millionseedballs.org) என்று ஓர் இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஜப்பானிய இயற்கை விவசாய குருவான ஃபுகுவோகா கண்டுபிடித்த ஐடியா இது. சின்னக் களிமண் உருண்டைகளுக்குள் ஒரு மரத்தின் விதை, கொஞ்சம் இயற்கை உரம் இவற்றை வைத்து மூடி எங்காவது திறந்த வெளியில் கொண்டு போய் இறைத்து விடுவார்கள்.

மழைக்காலம் வரும்வரை குருவி, எறும்பு முதயவற்றிடமிருந்து தப்பி மண் உருண்டைக்குள் பாதுகாப்பாக உறங்கும் விதை, மழையில் களிமண் கரைந்ததும் இயற்கையாக முளைக்க ஆரம்பிக்கும். இறைத்தவற்றில் முக்கால்வாசி வீணாகிவிட்டால் கூட பூமிக்கு இரண்டரை லட்சம் புதிய மரங்கள் கிடைக்குமே. செலவே இல்லாத சுலப முறை. கர்நாடகத்தின் என்ன என்னவோ ஹள்ளிகளில் எல்லாம் ஆயிரக் கணக்கில் இவர்கள் இட்ட வேம்பும் வாகையும் நெல்லும் பூவரசும் அடுத்த மழைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றன.

ஆனல் இதில் முக்கியமான பிரச்னை, பத்து லட்சம் உருண்டைகள் பிடிக்கப் பல ஆயிரம் கைகள் தேவைப்படும். இதற்காக பள்ளிப் பிள்ளைகள், போலீஸ்காரர்கள், சாப்ட்வேர் இளைஞர்கள் என்று பல தரப்பினரும் உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஷாமியானா போட்டு கல்யாணப் பந்தி மாதிரி கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மண் லட்டு செய்கிறார்கள். ஒரே அரட்டை, பாட்டு, கும்மாளம்! ஐம்பது நூறு பேரைக் கூட்டி வைத்து மண் உருண்டை பிசைவதை ஒரு தமாஷான பொழுது போக்காக மாற்றிய மார்க்கெட்டிங் மூளைக்கு சலாம் போட வேண்டும். சின்ன வயசிலேயே எல்லோருக்கும் மண்ணை வைத்துக் கொண்டு விளையாடுவதில் ஆசை இருந்தாலும் நம் தாய்மார்கள் குறுக்கிட்டு முதுகில் இரண்டு சாத்து சாத்தி இழுத்துக் கொண்டு போய்க் குளிப்பாட்டிவிட்டார்கள். அன்றைய ஏமாற்றத்தைத் தீர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இந்த இயக்கம்.

சாமானிய மனிதர்கள் ஒன்று கூடி முனைந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாடு நல்ல உதாரணம். நாட்டில் பாதி சஹாரா பாலைவனம். தொண்ணூறு லட்சம் சதுர கிலோ மீட்டர் ராட்சசன். அக்கம்பக்கத்து விளை நிலங்களையெல்லாம் விழுங்கி கான்சர் மாதிரி வளர்ந்து கொண்டிருந்த பாலை வனம். தங்கள் கண் முன்னே வயல்களெல்லாம் மணல் குன்றுகளாக மாறிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஏழை விவசாயிகள் மனம் உடைந்தார்கள். ஒரு தலை முறையே தங்கள் கிராமங்களைக் காலி செய்துகொண்டு போக வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. எனினும் கடைசி முயற்சியாக அவர்கள் ஒன்று கூடிப் பேசினர்கள். டெலிபோன், இண்டர்நெட் எதுவுமில்லாத அந்த எளிய மக்கள், வாய்மொழியாகவே தங்களுக்குள் ஒரு செய்தியைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.

"உங்கள் வயல்களில் தற்செயலாக முளைத்திருக்கும் மரக் கன்றுகளைப் பிடுங்கி எறிய வேண்டாம். வளர விடுங்கள்'' என்பதுதான் அவர்கள் பறிமாறிக் கொண்ட செய்தி. காலம் காலமாக நடவு சீசனுக்கு முன்பு களை என்று பிடுங்கிப் போட்டு வந்த செடிகளையெல்லாம் பாத்தி கட்டிப் பாதுகாக்க ஆரம்பித்தார்கள். ஜாக்கிரதையாக அவற்றைச் சுற்றி உழவு செய்து கடலையும் சோளமும் பயிரிட்டார்கள். காலப் போக்கில் மரங்கள் கம்பீரமாக வளர்ந்தன. சஹாராவின் சுடு மணல் காற்றை சுவர் மாதிரி நின்று தடுத்தன. அவற்றின் வேர்கள் மண்ணின் வளத்தைத் திருடு போகாமல் பாதுகாத்தன. காற்றின் வெக்கை தணிந்து, மழைப் பொழிவு அதிகரித்தது. இருபதே வருடத்தில் அங்கே புரட்சிகரமான மாறுதல்! திரும்பின பக்கமெல்லாம் பச்சை, பசுமை. இன்றைக்கு நைஜர் நாட்டின் தெற்குப் பகுதிகளை சாட்டிலைட் படத்தில் பார்த்தாலே குளுகுளுவென்று இருக்கிறது.

1980 வாக்கில் இந்தியாவிலும் இப்படி ஒரு முயற்சி நடந்தது. மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டம் என்றால் வறட்சிக்கு மறு பெயர். இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவினர் இந்தத் தரிசு நிலத்தில் லட்சக் கணக்கில் மரங்களை நட்டு அழகான காடு ஒன்றை உருவாக்கினர்கள். இதற்கு மழை நீர் சேமிப்பு உத்திகள் அத்தனையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. செயற்கை ஏரிகள் உருவாக்கிக் கால்வாய் இழுத்தார்கள். முதல் வறட்சியைத் தாங்கும் மர வகைகளில் ஆரம்பித்தார்கள். பிறகு பழ மரங்களை நட்டபோது பறவைகள் வந்தன.

மரங்கள் சற்று அடர்த்தி அதிகரித்தவுடன் பூச்சிகள், அவற்றைத் தின்னும் சிறு பிராணிகள் எல்லாம் வந்து சேர்ந்தன. சீக்கிரமே நரிகள், முயல்கள் என்று சேர்ந்து போய், உயிரோட்டமுள்ள காடு கிளி கொஞ்ச ஆரம்பித்தது! அங்கே கொண்டு விடப்பட்ட மான்கள் அமைதியான சூழ் நிலையில் வேகமாகப் பெருகின. சுற்றுப்பட்ட எத்தனையோ கிராமத்து மக்களுக்கு வாழ்வளிக்க அங்கே வன தேவதை வந்து வசிக்க ஆரம்பித்தாள்.

தலைக்கு மேல் ஆபத்து காத்திருந்தாலும் நம்மால் இதைச் சமாளித்து விடமுடியும் என்று நம்பிக்கையூட்டுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்: விழுப்புரத்தில் பஸ் டிரைவர் கருணாநிதி, பேருந்து செல்லும் சாலை ஓரமெல்லாம் அசோக மன்னர் மாதிரி மரம் நடுகிறார். சைக்கிளில் இரண்டு குடத்தைக் கட்டிக் கொண்டு போய் தெருக் குழாயில் தண்ணீர் பிடித்து மரங்களுக்கு வார்க்கும் தலைமலை, மற்றும் பசுமை நாகராஜன், மரம் தங்கசாமி போன்ற எவ்வளவோ நல்லிதயங்கள் அங்கங்கே தங்களது சின்ன உலகத்தைப் பச்சையாக்கி ஆரவாரமில்லாமல் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். ஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் சீடர்கள் ஒரே நாளில் எட்டரை லட்சம் மரங்கள் நட்டு கின்னஸ் சாதனை படைத்தார்கள். கீன்யா நாட்டின் நோபல் பரிசுப் பெண்மணி வங்காரி மாதாய், படிக்காத பட்டிக்காட்டுப் பெண்களைத் திரட்டியே நாலு கோடி மரங்களை நட்டிருக்கிறார்.

மரங்களைக் காப்பாற்றுவதற்கு நம் எல்லோராலும் சிறு சிறு வழிகளில் உதவ முடியும். உதாரணமாக ஒரு வெள்ளைக் காகிதத்தைப் பழைய பேப்பர் குப்பையில் போடும் முன், அதன் இரண்டு பக்கமும் எழுதியாகிவிட்டதா என்று பார்க்கலாம். இதனால் உலகத்தில் எங்கோ ஒரு மூங்கில் மரத்தின் வாழ்நாள் சில நிமிடங்கள் அதிகரிக்கும். சி.து.பெ வெள்ளம்!

"எதையும் வேஸ்ட் பண்ணாதே, திரும்ப உபயோகி; உடைந்தவைகளை ரிப்பேர் செய்; மழை நீரை சேமி...'' என்பது போன்ற பல கட்டளைகளை ஒரே சொல்ல் உள்ளடக்கிய அருமையான ஜப்பானிய வார்த்தை ஒன்று இருக்கிறது: மோடாய்னை (mottainai). குழந்தைகள் சாப்பாட்டை வீணடிக்கும்போது கண்டிப்பதற்குப் பெற்றோர்கள் உபயோகித்து வந்த இந்தச் சொல்லைப் புதுப்பித்து அகலப்படுத்தி ஒரு மந்திர உச்சாடனமாகவே ஆக்கியவர் வங்காரி மாதாய்.

மற்றொருபுறம், இரண்டு கண்ணும் குருடான அரசாங்க அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும் சேர்ந்து இதை விட வேகமாக பூமியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்கள் முன்னால் சென்னையிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் மிகப் பழைய மரங்கள் இருந்தன. பெயிண்ட் அடித்து தாசில்தார் நம்பர் போட்ட மரங்கள். எத்தனையோ மன்னர்களுக்கும் யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும் மெளன சாட்சியாய் நின்ற மரங்கள். இப்போது நம் டீசல் புகை வாகனங்களுக்கு வழி விடுவதற்காக எல்லாவற்றையும் வெட்டித் தள்ளிவிட்டார்கள்.

சியாரா க்ளப் சுற்றுச் சூழல் இயக்கத்தை ஆரம்பித்த ஜான் மியூர் ஒருமுறை சொன்னர்: "கடவுள் மரங்களைப் படைத்தார். வெள்ளம், வறட்சி, நோய் எல்லாவற்றிடமிருந்தும் நூற்றாண்டுகளாக அவற்றைப் பாதுகாத்து வந்தார். ஆனல் அவரால் முட்டாள்களிடமிருந்து மட்டும் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!''

-ராமன் ராஜா
நன்றி தினமணி கதிர், 27-07-08

திங்கள், ஜூலை 14, 2008

மதி கெட்ட மாமன்னன் மன்மோகனன்!

கொள்கைக்காக தன் ஆட்சியை, தன் கட்சியைக் கூட தியாகம் செய்யத் தயாராகிவிட்டார் மன்மோகன்சிங். தன் கொள்கையோடு ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள உதவுமானால் திரை மறைவு பேர அரசியலுக்கும் அவர் தயார்.இதுதான் மிடில் க்ளாஸின் மிஸ்டர் க்ளீன் மன்மோகன்சிங்கின் அசல் முகம்.

அப்படி என்ன கொள்கை அது ? புஷ்ஷுக்கு அளித்த வாக்குறுதியை அவர் காப்பாற்றியாக வேண்டுமாம். இதில் அவருக்கு இப்போது பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பிளேய்ருடன் போட்டி. இருவரில் யார் புஷ்ஷுக்கு அதிக விஸ்வாசம் காட்டியவர்கள் என்று பட்டி மன்றமே நடத்தலாம். பிளேய்ருக்கும் சரி, மன்மோகனுக்கும் சரி, தங்கள் தேச மக்களை விட புஷ்தான் முக்கியமானவர்.

மன்மோகனின் புஷ் அப்செஷன் பற்றி உளவியல் நிபுணர்களிடம்தான் கேட்க வேண்டும். சென்ற வருடம் மன்மோகன் உதிர்த்த முத்துக்கள் இவை: ``அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சுலபமானது. நாம் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொள்வார். என்னிடம் அன்பாக இருக்கிறார். இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களிலேயே இவர்தான் இந்தியாவிடம் மிகவும் சிநேகமாக இருப்பவர். உலகத்தின் ஒரே ஒரு சூப்பர் பவராக அமெரிக்கா ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை எந்த இந்திய அரசுக்கும் தன் அமெரிக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் தைரியம் இருக்கவில்லை. நாங்கள் மாற்றி வருகிறோம்.''

இதற்கு முன் கொள்கைக்காக தன் ஆட்சியை தியாகம் செய்த பிரதமர் என்று யாரையாவது சொல்வதானால் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியதால் ஆட்சியைத் தியாகம் செய்த வி.பி.சிங்கைத்தான் நியாயப்படி குறிப்பிடலாம். அவரோடு ஒப்பிடும்போது மன்மோகன் சிங் எனக்கு ஒரு அற்பப் புழுவாகத் தெரிகிறார். ஏனென்றால் இப்போதைய மன்மோகனின் கொள்கைப் பிடிப்பு அவரை பிரதமராக வைத்திருக்கும் நாட்டு நலன் சார்ந்தது அல்ல. வி.பி.சிங்கின் கொள்கையோ சமூக நீதிக்கானது.

அணு ஒப்பந்தத்தில் காட்டும் பிடிவாதத்தில் கால் சதவிகிதத்தைக் கூட அவர் பணவீக்கத்தினால் ஏற்பட்ட விலைவாசி உயர்வுப் பிரச்னையில் காட்டி, கடும் நடவடிக்கைகள் எடுக்க முன்வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் அது புஷ்ஷுடைய பிரச்னை அல்ல.

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் அதனால் இந்தியாவுக்கு லாபம் என்ற வாதங்கள் முற்றிலும் பொய்யானவை. அணுகுண்டு தயாரிப்பது, சோதனையாக அதை வெடித்துப் பார்ப்பது என்ற முட்டாள்தனத்தை இரு முறை இந்தியா செய்ததன் விளைவாக இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வேலையில் அமெரிக்கா தலைமையிலான அணுகுண்டு நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

அதன் இன்னொரு அத்தியாயம்தான் இந்த அமெரிக்க அணு ஒப்பந்தம். இந்தியாவின் அணு சக்தி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு ஐ.நா. சபை, சர்வதேச அணுசக்தி ஏஜன்சி முதலியவை வசம்தான் இருக்கும் என்று டெக்னிக்கலாக சொல்லப்பட்டாலும், இன்று இந்த அமைப்புகள் எல்லாம் அமெரிக்காவின் கைப்பாவைகளாகவே இயங்கி வருபவை என்பது நடைமுறை உண்மை. இல்லாத ஆயுதங்களை அழிப்பதற்காக இராக்கில் புஷ் நடத்திய யுத்தம் முழுக்க முழுக்க ஐ.நா. சம்மதத்துடன் நடத்தப்பட்டது சமீப வரலாறு.

இந்தியாவை தன் ஜால்ரா/அடியாள் கோஷ்டி வளையத்துக்குள் எப்படியாவது சாம தான பேத தண்ட முறைகளைப் பயன்படுத்தி கொண்டு வருவதற்கு அமெரிக்கா செய்யும் முயற்சிகள் அமெரிக்காவுக்கு அவசியமானவை. இந்த வட்டாரத்தில் சீனாவை சமாளிக்க இந்தியாவை அது பயன்படுத்த விரும்புகிறது.

ஆனால் இதில் நமக்கென்ன லாபம்? சீனாவுடன் நமது பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டு நண்பராகக் கைகோர்த்துக் கொள்வதுதான் தொலைநோக்கில் நமக்கு லாபம். மக்கள் சக்தியிலும், நிலப்பரப்பிலும், உழைப்பிலும், ஆற்றலிலும் பெரிய நாடுகள் நாம். மரபான தத்துவப் பார்வையினாலும் ஓரணியில் இருக்கவேண்டிய இரு பெரும் நாடுகள் நாம். நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் மேற்கத்திய நாடுகள் எப்போதும் செயல்பட்டு வருகின்றன. இப்போதும் அதேதான்.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தைப் போட்டேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் மன்மோகன் தரப்பில் இதற்குக் கூறும் நியாயங்கள்தான் என்ன? மண்டையைப் பிளக்கும் ஷரத்துகள், வாதங்கள் எல்லாவற்றையும் தொகுத்துக் கூட்டிக் கழித்துக் கடைசியில் பார்த்தால் ஒரே ஒரு வாதம்தான் எஞ்சுகிறது.

நமக்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணுசக்தித் தொழில் நுட்பத்தை விட்டால் வேறு வழி கிடையாது. அதையும் யுரேனியத்தையும் நமக்கு அள்ளி அள்ளித்தர அமெரிக்காவும் மேலை நாடுகளும் சம்மதிக்க வேண்டுமானால்,இந்த ஒப்பந்தத்தைச் செய்தே ஆக வேண்டும். இவ்வளவுதான் விஷயம்.

இது எல்லாம் பொய் என்று போன வருடமே `ஓ' பக்கங்களில் சொல்லியிருக்கிறேன். இப்போது மன்மோகனின் பிடிவாதத்தால் அவர் தன் பதவியை, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை எல்லாம் தியாகம் செய்து அத்வானியை பிரதமர் ஆக்கும் ஆபத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதால், மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 1,26,839 மெகாவாட். இதில், நிலக்கரி மூலம் கிடைக்கும் அனல் மின்சாரம் 66 சதவிகிதம். அணைகள் மூலம் பெறும் புனல் மின்சாரம் 26 சதவிகிதம். சூரிய சக்தி, காற்றாலை போன்ற சூழல் மாசாகாத தூய வழிகளில் பெறுவது சுமார் 5 சதவிகிதம். அணு உலைகள் மூலம் பெறுவது வெறும் 3 சதவிகிதம் மட்டுமே! அடுத்த 20 வருடங்களில் அணு மின்சார அளவை 6 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டுமானால், அதற்குத் தேவைப்படும் முதலீடு மட்டும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்.

இப்போது சூரியசக்தி, காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவிகித மின்சாரத்தைத் தந்து வருகின்றன. இப்போது அணுசக்திக்கு அரசு ஒதுக்கும் தொகை 3,897 கோடி ரூபாய். ஆனால், அவை தருவது வெறும் 3 சதவிகிதம்தான். (இவை எல்லாமே அரசின் புள்ளிவிவரங்கள்தான்.)

இங்கே, யுரேனியம் போதுமான அளவு இல்லை என்பதே தவறு. அடுத்த 40 ஆண்டுகளில் அணு மின்சார உற்பத்திக்கும் அணு ஆயுத உற்பத்திக்கும் (சுமார் 2,228 குண்டுகள்!) தேவைப்படும் யுரேனியம் அளவு சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன். நம்மிடம் இருப்பதோ 78 ஆயிரம் டன்கள்.

இதை வெளியில் எடுத்து பதப்படுத்திப் பயன்படுத்தத் தேவைப்படுவதெல்லாம், மக்கள் ஆதரவுடன் நில ஆர்ஜிதம் மட்டும்தான்! யுரேனியத்தைவிட அதிகமாக நம்மிடம் தோரியம் இருக்கிறது. உலகிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடி நம்மிடம்தான் தோரியம் உள்ளது. சுமார் 3 லட்சம் டன்கள்.

இதைக் கொண்டு 35 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதற்கான தொழில்நுட்பத்தை முழுக்க முழுக்க நம்முடைய அறிவிலேயே உருவாக்கியாயிற்று. இதை அடுத்த 40 வருடங்களில் முழுமையாகச் செயல்படுத்துவதுதான் நமது அணுசக்தித் துறை வைத்திருந்த திட்டம். அதை சீர்குலைப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

நான் அணுகுண்டை மட்டுமல்ல, அணுசக்தியையும் ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அணுசக்தி என்ற தொழில்நுட்பமும் பல தலைமுறைகளுக்கு சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. மின்சாரம் தயாரித்தாலும், குண்டு தயாரித்தாலும் சூழலைக் கெடுக்காமல், கதிரியக்கம் ஏற்படாமல் அணுக்கழிவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைப்பது எப்படி என்ற தொழில்நுட்பம் இன்னமும் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இப்போதைக்குப் பின்பற்றும் வழிகள் மிகப் பெரும் செலவையும், உத்தரவாதமற்ற தன்மையிலும்தான் உள்ளன.

இப்போதுள்ள அணுசக்தி திட்டப்படி, இன்னும் 25 வருடங்களில் 90 ஆயிரம் கோடி செலவிட்டாலும், நாம் தயாரிக்கப்போகும் அணு மின்சாரம் மொத்த மின்சாரத் தேவையில் 9 சதவிகிதத்தை எட்டாது. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டால், அணு உலை நிர்மாணிக்கும் செலவுதான் அதிகரிக்கும். இப்போது 7 கோடி ரூபாயில் நிர்மாணிக்கும் உலையை நிறுவ 9 கோடி செலவாகும்.

அணு உலையில் தயாரிக்கும் மின்சாரத்தின் அடக்க விலை வேறு எந்த வழியில் தயரிக்கும் மின்சாரத்தை விட இப்போதும் அதிகம்தான். எப்போதும் அதிகம்தான்.

நமது மின்சாரத் தேவைகளுக்கு, சூழலைக் கெடுக்காத மாற்று வழிகளைத் தான் நாம் அதிகரிக்க வேண்டும். அணு உலைகளுக்கு ஒதுக்கும் தொகையை மாற்றி, இவற்றுக்குத்தான் ஒதுக்க வேண்டும். உலகத்திலேயே காற்றுவழி மின் உற்பத்திக்கான இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதில், நாம் முன்னணியில் இருக்கிறோம். உலகிலேயே நான்காவது இடம். வட கிழக்கு மாநிலத்தில், புனல் மின்சாரத்துக்குப் பெரும் வாய்ப்பு இருக்கிறது. சுமார் 24 ஆயிரம் மெகாவாட் தயாரிக்கலாம். ஆந்திராவில் இயற்கை வாயு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக சின்னச் சின்ன காற்றாலைகள், சூரிய சக்தி ஆலைகள், வேலிக் காத்தான், உடை மரங்களை எரி வாயுவாக்கி மின்சாரம் தயாரிக்கும் சிற்றாலைகள் முதலியவற்றை கிராமங்கள் தோறும் நிறுவி அந்தந்த கிராமத்தின் மின் தேவையை சந்திக்கும் திட்டங்கள்தான் நமக்குத் தேவை. அதிகாரத்தைப் போல மின்சார தயாரிப்பும் டீசென்ட்ரலைசேஷனுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

நம்முடைய இந்தப் பலத்தை எல்லாம் அதிகரிக்காமல், அணுசக்தி பக்கம் பணத்தைத் திருப்புவதும் சரி, அதன் பேரால் அமெரிக்காவின் அரசியலுக்குள் சிக்கிக் கொள்வதும் சரி, நிச்சயம் புத்திசாலித்தனமானதே அல்ல.

ஆட்சி கவிழாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக முலாயம் சிங், அமர்சிங் காலில் சோனியா காந்தியை மன்மோகன் சிங் தள்ளியிருக்கிறார். ஒப்பந்தம் பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொல்ல மன்மோகனின் செக்யூரிட்டி ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்களை சந்தித்து விளக்கினாராம். கனவுத் தாத்தா கலாமை வேறு முலாயமும் அமரும் சந்தித்து கருத்து கேட்டார்களாம். `பேஷ், பேஷ். ஒப்பந்தம் நன்னா இருக்கு` என்று அவரும் சொன்னாராம்.

இவையெல்லாம் திரை மறைவு அரசியல் பேரங்களை மறைக்க அரங்கேற்றப்படும் நாடகங்கள்தான்.அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தை ஆதரிக்கும் மன்மோகன் வகையறாக்கள், ஏன் எதிர்ப்பவர்கள் கூட, கீழ்வரும் ஐந்து கேள்விகளுக்கு நியாயமான பதில்களைச் சொல்ல வேண்டும்.

1. ஹைட் சட்டம், 123 ஒப்பந்தம் எல்லாவற்றையும் தன் நாடாளுமன்றத்தில் விவாதித்து அங்கு ஏற்றுக் கொண்ட பின்னர்தான் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்பந்த வடிவத்தைத் தருகிறது. ஏன் இந்தியப் பிரதமர் மட்டும் இதே போல இந்திய நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெற்றபின்னர்தான் அமெரிக்க அரசிடம் செல்வது என்ற நடைமுறையை மறுக்கிறார்?

2. இந்தியா கையெழுத்திட்டபிறகும் ஹைட் சட்டத்துக்கு அந்த ஒப்பந்தம் பொருந்தி வருகிறதா என்பதை மறுபடியும் அமெரிக்க நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்ற விதியை அமெரிக்கா வைத்திருக்கிறது. இதே போன்ற சம உரிமையை இந்திய நாடாளுமன்றத்துக்கும் தரவேண்டும் என்ற விதியை ஏன் மன்மோகன் அமெரிக்காவிடம் வற்புறுத்தவில்லை?

3.இந்தியா அமெரிக்க உதவியில்லாமல் தயாரிக்கும் அணு மின்சாரத்தை விட, அமெரிக்க உதவியுடன் தயாரித்தால், செலவு அதிகரிக்கும் என்பது சரியா? தவறா?

4. எப்படித் தயாரித்தாலும், இன்னும் 30 வருடங்கள் ஆனாலும் அணு மின்சாரம் நம் மொத்தத் தேவையில் பத்து சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்யாது என்பது உண்மையா, இல்லையா?

5. அணுக் கழிவுகளை என்ன செய்வது என்பது இதர நாடுகளைப் போலவே இந்தியாவுக்கும் இன்னமும் பிரச்னைதான் என்பது உண்மையா, இல்லையா?

அணு மின்சாரத் திட்டம் என்பது உண்மையில் அணுகுண்டு திட்டம்தான் என்பது இடதுசாரிகளுக்குத் தெரியும். ஆனால் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் என்பது மின் தேவைக்கானது அல்ல; உலக அரசியலில் அமெரிக்காவின் அடியாளாக நம்மைப் பதிவு செய்துகொள்வதுதான் என்பது காங்கிரஸ், பி.ஜே.பி, கலாம், நாராயணன் உள்ளிட்ட எல்லா வலதுகளுக்கும் தெரியும். ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்....

-ஞாநி
நன்றி: குமுதம் 16-07-08

திங்கள், ஜூலை 07, 2008

அன்புள்ள கனவுத்தாத்தா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு, வணக்கம்!

அன்புள்ள கனவுத்தாத்தா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு, வணக்கம்.

எல்லாரையும் கனவு காணச் சொல்லியே உங்கள் குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தை ஓட்டி முடித்துவிட்டீர்கள். குழந்தைகள் முதல் உங்கள் வயதுக்காரர்கள் வரை கனவு கண்டுகொண்டே இருக்கிறார்கள். எல்லார் கனவுகளையும் தொகுக்க முடியுமானால், அவற்றைப் படித்து ஆராய்ந்து இந்தியாவிலிருந்து இன்னொரு சிக்மண்ட் ஃபிராய்ட் உருவாகும் வாய்ப்பு கூட இருக்கிறது.

உங்கள் கனவுகள் என்ன என்று அறிந்துகொள்வதற்கு எனக்கு எப்போதும் ஆவல்தான். அக்கினிச் சிறகுகள், விஷன் 2020 மாதிரி ஆவணங்களைப் படித்தால் எனக்கு தூக்கம் வந்துவிடுகிறது. அப்புறம் என் கனவுகள் ஆரம்பமாகிவிடுகின்றன. உங்கள் கனவு என்னவென்று தெரியாமலே போய்விடுகிறது.

உங்கள் கனவு என்று சொல்லி அண்மையில் ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அய்யோ! அதை நினைத்தாலே எனக்கு உடலெல்லாம் பதறுகிறது. இப்படி ஒரு விபரீதக் கனவு உங்கள் பெயரால் நனவாக்கப்படுவது பற்றி உங்கள் கவனத்தை ஈர்க்கத்தான் இந்தக் கடிதத்தை மதியத் தூக்கத்தையும் பகல் கனவையும் தியாகம் செய்துவிட்டு எழுதுகிறேன்.

இயற்பியல் துறையிலே ஒரு பெரும் ஆராய்ச்சிக்கான சோதனைக் கூடத்தை நீலகிரி மலைத்தொடரில் முதுமலை கானுயிர் பூங்காப் பகுதியில் பைக்காரா மின் நிலையம் அருகே சிங்கார கிராமத்தில் சுமார் 900 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இன்னமும் தமிழக அரசு இதற்கு இறுதி ஒப்புதல் தரவில்லை என்பதால்தான் இந்தக் கடிதத்தை அவசர அவசரமாக உங்களுக்கு எழுதுகிறேன். என் இதர கட்டுரைகளைப் படிப்பது போல இதையும் தமிழக முதல்வர் படித்துவிடுவார் என்ற நம்பிக்கையினால் அவருக்குத் தனியே எழுதவில்லை.

இது எதற்கான ஆராய்ச்சிக் கூடம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் சாதாரண மனிதர்களுக்கு எளிதில் புரியாது. சூரியனும் இதர நட்சத்திரங்களும் இடைவிடாமல் கோடிக்கணக்கில் உமிழ்ந்துகொண்டிருக்கும் நியூட்ரினோ எனப்படும் அணுவிலும் மெல்லிய துகளை வசப்படுத்தி ஆராய்ச்சி செய்வதற்குத்தான் இந்த சோதனைக்கூடம். நியூட்ரினோவைப் புரிந்துகொண்டால் இந்த பிரபஞ்சம் எப்படி உருவாயிற்று என்பதையும் சூரியனில் எப்படி சக்தி உருவாகிறது என்பதையும் புரிந்துகொள்ளமுடியலா....ம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

நியூட்ரினோவை வசப்படுத்த பூமிக்கடியில்தான் சோதனைக்கூடத்தை ஏற்படுத்தியாக வேண்டும் என்பதால், முதுமலை& நீலகிரி மலைத்தொடரில் பூமியைக் குடைந்து ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் ஏற்படுத்தி அதிலே சோதனைக் கூடத்தை கட்ட வேண்டும்.

பிரபஞ்ச ஆராய்ச்சியில் உங்கள் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவிட்டுப் போகட்டும். அதற்கு மக்கள் வரிப்பணமான 900 கோடி என்ன ஒன்பதாயிரம் கோடியைக் கூட செலவிடட்டும். ஆராய்ச்சி முடிவுகள் மனித குலத்துக்கு என்றோ ஒரு நாள் பயன்தரும் விடைகளைத் தரக்கூடும் என்ற நம்பிக்கையில் எங்கள் கொள்ளுப் பேரன் பேத்திகள் காலத்தில் கூட இதற்காக வரி கட்டுவார்கள். அதல்ல பிரச்னை.

சோதனைக்கூடம் வைப்பதற்கு நீலகிரி மலையை, முதுமலை கானுயிர் மண்டலத்தை, சிங்கார கிராமத்தை தேர்ந்தெடுத்திருப்பதுதான் பிரச்னை. உங்கள் விஞ்ஞானிகள் இன்னும் நூறு தலைமுறைகளுக்கு உழைத்தால் கூட திரும்ப உருவாக்கமுடியாத இயற்கை விஷயங்களை வரும் நான்கே ஆண்டுகளில் அழித்துவிடுவார்கள் என்பதுதான் பிரச்னை.

சோதனைக்கூடத்துக்குத் தேவைப்படும் இரும்பு மட்டும் முதல்கட்டத்தில் 50 ஆயிரம் டன். இரண்டாம் கட்டத்தில் இன்னொரு 50 ஆயிரம் டன். இவை தவிர, சிமெண்ட், ஸ்டீல், இதர உலோகங்கள் எல்லாமாக இன்னொரு 35 ஆயிரம் டன் பொருட்கள். இவை அத்தனையும் மைசூரிலிருந்தும் ஊட்டியிலிருந்தும் காட்டுச் சாலைகள் வழியே லாரிகளில் வந்து சேரவேண்டும்.

மலையில் குடைந்து எடுக்கப்படும் பாறையும் மண்ணும் மட்டும் மொத்தம் ஆறு லட்சத்து 25 ஆயிரம் டன் அளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவை லாரிகளில் அகற்றப்பட்டு இன்னொரு இடத்தில் கொண்டு போய் கொட்டப்படவேண்டும்.

அடுத்த நான்கு ஆண்டுகளும் இந்த வேலைகளுக்காக பெரும் லாரிகள் காட்டுப்பாதைகள் வழியே தினசரி 50 லிருந்து 75 டிரிப் அடித்தாக வேண்டும்.
அழிந்து வருகிற புலிகளைக் காப்பதற்காக இந்த வருடம்தான் பிரதமர் மன்மோகன்சிங் 600 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறார்.

புலிகள் வேகமாக அழியாமல் ஏற்கெனவே காப்பாற்றப்பட்டிருக்கும் பகுதி முதுமலை சரணாலயம். ஆசியாவில் இருக்கும் யானைகளில் 25 சதவிகிதம் இந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன. கணக்கற்ற செடி, கொடி, மர வகைகளும் சின்னப் புழு பூச்சி முதல் யானை, புலி வரையான கானுயிர்களும் நிறைந்திருக்கும் இயற்கையான மலைக்காடுகள் உலகில் மிகக்குறைவு. அவற்றில் ஒன்று நீலகிரியும் மேற்கு, கிழக்கு மலைத்தொடர்களும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இவையெல்லாம் இந்த சோதனைக்கூடம் அமைப்பதனால் கடுமையாக பாதிக்கப்படும். நியூட்ரினோ லேபை வேறு எங்கேனும் கூட அமைக்க முடியும். ஆனால் நீலகிரி முதுமலைக்காடுகளில் வாழும் உயிரினங்களை வேறு இடத்தில் குடியேற்றிக் காப்பாற்ற முடியாது. பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை உங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து முடிக்கிறபோது அவர்களுக்காக அழிந்த பிரபஞ்ச வினோதங்களை இயற்கையின் படைப்புகளை அவர்களால் ஒருபோதும் மறுபடியும் உருவாக்கவே முடியாது.

இந்த சோதனைக்கூடத்தை இங்கே அமைப்பதால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்பது போன்ற வழக்கமான சால்ஜாப்புகள் எதுவும் இதில் சொல்ல முடியாது என்பதை ஐ.என்.ஓ.வின் இணையதளமே ஒப்புக் கொள்கிறது. அது மட்டுமல்ல. மிக நுட்பமான, எளிதில் நொறுங்கிவிடக் கூடிய இயற்கைச் சூழலுக்கு நடுவே இதை அமைக்கப்போகிறோம் என்ற பிரக்ஞையும் தங்களுக்கு இருக்கிறது என்று வேறு சொல்கிறார்கள்.

இந்த சோதனைக்கூடத்துக்கு நிலம் தர இருக்கும் தமிழக மின் வாரியம் அடுத்திருக்கும் பைக்காராவில் புனல் மின் திட்டத்தை விரிவாக்கியபோது, சுரங்கம் தோண்டி எடுத்த மண் மொய்யாற்றில் போடப்பட்டு ஆறு மாசுபடுத்தப்பட்டது. மதகைத் திறந்து நீரையெல்லாம் அப்புறப்படுத்திதான் அப்போதைய சிக்கலைச் சமாளிக்க முடிந்தது.

சூழல் மாசுபடாமல் எல்லாவற்றையும் செய்கிறோம் என்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு அதை அலட்சியப்படுத்திவிட்டு நடந்துகொள்ளும் நிர்வாக இயந்திரம்தான் நம் நாட்டில் இருக்கிறது என்பது குடியரசுத் தலைவராக இருந்த உங்களுக்குத் தெரியாதா என்ன ? இன்னும் கூட நமது அணு நிலையங்களில் ஒவ்வொரு ஊழியருக்கும் எவ்வளவு கதிர் வீச்சு அளவு என்பதை பகிரங்கமாக தெரிந்து கொள்ளும் உரிமை தகவலறியும் உரிமைச்சட்டதின் கீழ் கூட இல்லையே.

நீலகிரி மலையில் முதுமலைக் காடுகளில் ஏற்கெனவே மனிதனுக்கும் காட்டு உயிர்களுக்கும் இடையே சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. தங்கள் பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடத்தொடங்கியதால், யானைக் கூட்டங்கள் பெரும் அல்லலுக்குள்ளாகியிருக்கின்றன. இதன் விளைவாக வழக்கமாக வராத கிராமங்களுக்குச் சென்று அழிவை ஏற்படுத்துகின்றன.

இந்த ஆண்டு மட்டும் இங்கே 38 பேர் யானைகளின் பாதையில் குறுக்கிட்டு செத்திருக்கிறார்கள். அத்தனை பேரும் அப்பாவி கிராம மக்கள். பிரபஞ்ச ரகசியம் தேடும் விஞ்ஞானிகளும் அந்தப் பட்டியலில் சேரவேண்டுமென்பது உங்கள் கனவா?

உலகத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடங்கள் இன்னும் நான்கு உள்ளன. அவை எதுவும் இப்படி இயற்கையை அழிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் இடங்களில் இல்லை. ஜப்பானில் காமியோகா, கனடாவில் சூட்பரி, அமெரிக்காவில் மின்னசோட்டாவில் சௌடான் ஆகிய மூன்று இடங்களிலும் அவை நிக்கல் போன்ற தாதுச் சுரங்கங்களிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தாலியில் கிரான் சாசோ மலைகளில் அமைக்கப்பட்டிருப்பது ஆல்ப்ஸ் பனிமலையின் ஒரு பகுதியும், நீலகிரி போல பெரும் இயற்கை உயிர் வளம் இல்லாத மலையுமாகும்.அவ்வளவு ஏன்? இந்தியாவிலேயே முதல் நியூட்ரினோ சோதனைக்கூடம் கோலார் தங்க வயல் சுரங்கத்தில்தான் 1965-ல் அமைக்கப்பட்டது என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். தங்கம் எடுப்பதை நிறுத்தி சுரங்கத்தை மூடியதும் லேபை மூடிவிட்டீர்கள். அதனால்தான் இப்போது முதுமலையை அழிக்கும் ஆபத்தான கனவு உங்கள் விஞ்ஞானிகளுக்கு வந்திருக்கிறது.

இதை உங்கள் கனவு என்கிறார்கள்.

அப்படி இருக்கக்கூடாது என்று நம்புகிறேன். நியூட்ரினோ துகள்களை வசப்படுத்த வேறு இடம் தேடலாம். கோலாரில் தங்கம் இல்லாவிட்டால் என்ன ? அந்த சுரங்கங்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் பயன்படுத்தலாமே. இந்தியாவில் ஏற்கெனவே சுரங்கங்கள் உள்ள பகுதிகள் பல இடங்களில் உள்ளன. அவற்றையொட்டி நியூட்ரினோ லேபை அமைப்பது பற்றி ஆராயலாமே.

இந்த வாரம் கூட ஒரு பத்திரிகையில் விஷன் 2020 பற்றி உங்கள் பத்து அம்சக் கனவை பட்டியலிட்டிருக்கிறீர்கள். அதிலே `சஸ்ட்டெயினபிள் க்ரோத்' ( நிலைத்து நீடிக்கக்கூடிய வளர்ச்சி) என்பதும் ஒரு கனவு. ஆயிரக்கணக்கான வருடங்களாக உருவாகியிருக்கும் இயற்கையை சக உயிரினங்களை அழித்துவிட்டு எப்படி நிலைத்து நீடிக்கும் வளர்ச்சி சாத்தியம் ?

பஞ்சாபிலே மாசுபடுத்தப்பட்ட காளி பெய்ன் ஆற்றை ஐந்து வருடங்களில் 3000 தொண்டர்கள் மூலம் மறுபடியும் தூய்மையாக்கிய பாபா பல்பீர் சிங்கை, இளைஞர்களுக்கான ரோல்மாடலாக சொல்லியிருக்கிறீர்கள். நீலகிரியை நியூட்ரினோ லேபிலிருந்து காப்பாற்றி உங்களை ஒரு ரோல் மாடலாக முதலில் நிரூபியுங்கள். இயற்கையை அழித்து பிரபஞ்ச ரகசியத்தைத் தேடுவது என் கனவு அல்ல என்று தயவு செய்து அறிவியுங்கள்.

உங்களை நான் நம்பாவிட்டாலும் எண்ணற்ற இளம் தலைமுறையினர் பெரிதும் நம்புகிறார்கள். அரசியல், நிர்வாகம், அறிவியல் அனைத்து துறையினருக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடல் என்று இளைஞர்கள் பலர் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை மதித்து தயவுசெய்து இந்தத் திட்டத்தை வேறு இடத்துக்கு அனுப்பி உங்கள் தாய்த் தமிழகத்தின் முதுபெரும் சொத்தைக் காப்பாற்றித் தாருங்கள்.

இதைப் படித்ததற்கு நன்றி. படித்துவிட்டு நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்பது என் இப்போதைய கனவு.

இதில் நீங்கள் மௌனம் காட்டினால், அது நீங்கள் யாரென்பதைக் காட்டிவிடும் என்று மட்டும் அன்புடன் அறிவுறுத்த விரும்புகிறேன்.

அன்புடன்

-ஞாநி.

நன்றி: குமுதம் 09-07-08

சனி, ஜூன் 14, 2008

"மக்கள் சட்டம்" நடத்தும் சட்டக் கருத்தரங்கம்

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?
.
நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?
.
நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது. என்ன காரணம்? இந்த தக்காளியோ, வாழையோ தோல் கருப்பதும், அழுகுவதும் நம் கண்களில் படுவதில்லையே! என்ன மர்மம்?
.
ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா, நீல்கிரிஸ் போன்ற நவீன அங்காடிகளில் பார்வைக்கு கவர்ச்சியாக விற்பனை செய்யப்படும் காய்கனிகள் எங்கிருந்து வருகின்றன? அவை எவ்வாறு விளைவிக்கப்படுகின்றன?
.
பாட்டிலிலும், டப்பாவிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜாம் வகைகளும், பழரச பானங்களும் பாதுகாப்பானவைதானா?
.
பருத்தி, கத்தரிக்காய், காலிஃபிளவர், சோயா மொச்சை, கடுகு, கோதுமை, அரிசி என்று பல்வேறு உணவுப்பொருட்களிலும் Bt என்ற புதிய வகை அறிமுகமாவதாக செய்திகள் வருகின்றன. இது நல்லதா? இல்லையா?
.
இவை தாவரங்களில், அதை உட்கொள்ளும் விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
.
மனிதர்களும், விலங்குகளும் உட்கொள்ளும் உணவுகளில் இத்தகைய மரபணு மாற்றங்கள் செய்வதைப்பற்றி பன்னாட்டு மற்றும் இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது? அந்த சட்டங்களை இயற்றுவது யார்? இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எந்த அளவுக்கு பங்கு உள்ளது?
.
இந்த சட்டங்களை செயல்படுத்துவதும் அதை கண்காணிப்பதும் யார்? மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? இழப்பீடுகளுக்கு வழி உண்டா?
.
இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண இதோ ஒரு வாய்ப்பு....
இடம்: YMCA அரங்கம், (உயர்நீதிமன்றம் எதிரில்) NSC போஸ் சாலை, சென்னை.
நாள்: 15-06-2008 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
சட்டம் குறித்த இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அல்ல.

சட்டம் குறித்தும், சமூகம் குறித்தும் ஆர்வம் கொண்ட அனைவரும் வரலாம்.

தமிழறிந்த பேச்சாளர்கள் அனைவரும் தமிழிலேயே பேசுவர்.

அனைவரும் வருக!

திங்கள், ஜூன் 09, 2008

கத்தரிக் காயை உண்ணும் மனிதன் மலடாகும் அபாயம் !

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருடன் - நேர்காணல்
சந்திப்பு : கதிர்
கே : கடந்த கால் நூற்றாண்டு அனுபவம் பற்றி....
.
பதில் : இந்த உலகம் அநீதியானது. சமநீதிக்கான போராட்டம் தொடர்கிறது. உழுது, விதைத்து அறுப்பார்க்கு உணவு இல்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வோர்க்கே செல்வமெலாம் உண்டு. உண்மை சொல்வோருக்கோ, எழுதமாட்டாத அளவுக்குப் பெருங்கொடுமைச் சிறையுண்டு, தூக்குண்டே மடிவதுண்டு. இப்படியொரு பார்வையுடன் பரவலாக்கப்பட்டிருந்த செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கித் திரும்பத் தொடங்கியது.

இயற்கை மருத்துவம் தமிழகத்தில் புத்துயிர் பெறப்பாடுபட்டவர்களில் ஒருவர், கோபிச் செட்டிப் பாளையம் வெள்ளிமலை ஆவார். உழவு குறித்த பாதையில் பணிபுரிவோர் குறைவு. அதில் பார்வையைக் குவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். வாழும் சூழலும் உழவும் இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஆதலால், இரண்டும் குறித்த தேடலும் பகிர்தலுமாகக் காலாண்டு ஓடியுள்ளது. இந்தியா முழுவதும் சுற்றிய அனுபவங்கள், வெளிநாடுகளில் கண்டவை, கேட்டவை இவற்றை உழவர்களிடம் பரிமாறியபோது அவர்கள் செய்து பார்த்துத் திருத்தம் செய்தார்கள். நாற்பதாண்டுப் பயணத்தில் சில திருப்பங்களை நினைத்துப் பார்ப்பது நலம் பயப்பதாகும்.
.
1963க்கும் 1969 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கோவில்பட்டி மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தேன். 11 விஞ்ஞானிகளும் 22 உதவியாளருமாக பணிபுரிந்தோம். டெல்லியிலிருந்து ஒட்டுக் கட்டி சொத்தை (வீரிய) விதைகள் இறக்குமதியாயின. உப்பு உரங்கள் பரிந்துரைக்கப்பட்டன. பூச்சிக்கொல்லி இரசாயணங்கள் புகுத்தப்பட்டன. 158 ஏக்கர் பண்ணையில் ஒரு சிறு துண்டு நிலத்தில் கூட லாபம் வரவில்லை. இந்த உழவியல் முறை நீடித்தால் நமது உழவர்கள் கடன் படுவார்கள். நிலம் தரிசு போடப்படும். இதற்கு உழவன் மகனாகிய நம்மாழ்வார் துணை போகவேண்டியதில்லை என்று முடிவெடுத்து வெளியேறினேன். அன்று கண்ட முடிவு சரி என்பதையே காலம் நிரூபித்துள்ளது.
.
1969க்கும் 1979க்கும் இடையில் களக்காடு ஒன்றியத்தில் பணிபுரிந்தேன். அது நோபல் பரிசு வாங்கிய அருட்தந்தை டோமினிக் பியர் தொடங்கிய நிறுவனம். அந்த நிறுவனம் உழவர்களுக்கு தண்ணீர் வசதி செய்துகொடுத்து, உழவு மருத்துவம் போன்ற சேவையும் அளித்தது. நாளைக்கு 18 மணி நேரம் உழைத்தோம். 10 ஆண்டுக்குப் பிறகு பார்த்தபோது உழவர் எல்லாம் கடனாளியாக இருந்தார்கள். வியாபாரிகள் எல்லாம் பணக்காரர்களாகிவிட்டார்கள். முக்கியத் திருப்பம் தர்மபுரி மலைகளில் இருந்தது. 1979க்கும் 1981க்கும் இடைப்பட்ட காலம் அது. காடுகள் கரியானதால் வாழ்க்கை கருகிப் போயிருந்த மக்களுக்கு நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களிடம் இருந்து கற்கத் தொடங்கினேன். அதுவே தொடர்கல்வியாக எனக்கு அமைந்துவிட்டது.
.
1983ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோடையில் வறட்சி. குளிர்காலத்தில் (மூன்று நாள் மழையில்) வெள்ளம். ஒரே ஆண்டில் வெள்ளமும் வறட்சியும் தோன்றுவது எதனால்? ஒரே விடை, மரம் இல்லை. வெள்ளைக்காரன் வெளியேறியபோது நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு காடாக இருந்தது. மூன்றில் ஒரு பங்கு நிலம் காடாக இருந்தால் நாட்டிற்கு நல்லது என்றார்கள். பணம் ஒதுக்கினார்கள். படைவீரர்களுக்குரிய அதிகாரத்தோடு வன அதிகாரிகள் தர்பார் நடத்தினார்கள். 1982 கணக்குப்படி 17 விழுக்காடு பரப்பு காடாக உள்ளதாக கதை விட்டார்கள். 1986ஆம் ஆண்டு ஆப்பிள், அதுதான் நாம் வான்வெளியில் சூழல்விட்ட செயற்கை நிலா எடுத்தனுப்பிய படத்திற்கு விஞ்ஞானிகள் வண்ணம் தீட்டிப் பார்த்தார்கள். 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியது. அதில் மூன்று விழுக்காடு வெறும் முற்புதர்கள்.
.
சமூக நலம் காக்க காடு வளர்ப்பீர், என்று வெளிநாட்டவர் திட்டமும் நிதியும் கொடுத்தார்கள். தமிழ் நாட்டிற்கு சுவீடன் நாடு 110 கோடி ரூபாய் நிதியளித்தது. அது கொண்டு வனத்துறையினர் ஏரி, குளங்களில் கருவேல மரமும் (அதுவும் இறக்குமதியானது) மேய்ச்சல் நிலங்களில் தைல மரங்களும் (மாடு தின்னமுடியாதது) மட்டுமே நட்டு வளர்த்தார்கள். காணாமற் போனது சமூக நிலம். இது குறித்து அன்று அரசு ஆலோசகராக இருந்த வங்காளி திரு.கி.ரத்தீன்ராய் நமது கவனத்தைத் திருப்பினார். அவர் மூலம் நம் கைக்கு வந்து சேர்ந்த புத்தகம் ஒரு வைக்கோல் புரட்சி. அது முதற்கொண்டு இயற்கை வழி உழவான்மை பற்றிய தீ உள்ளத்தில் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.இயற்கை வழி உழவாண்மை ஒன்றே நிலைத்தும் நீடித்தும் இருக்க வல்லது.
.
இயற்கை வழி என்பது யூரியாவுக்குப் பதிலாகச் சாணி போடுவது இல்லை. உயிர் உள்ள இயற்கை. உயிர் இல்லா இயற்கை இவற்றுக்கிடையில் உள்ள உறவுகளை அறிந்த பயிர் செய்வது இயற்கை வழி. எடுத்துக்காட்டாக, பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம். அவற்றைத் தின்னும் பூச்சிகளும் குருவிகளுமே உலகில் அதிகம். பூச்சிகளைக் கொல்வதற்கு என்று நஞ்சு தெளித்த போது நன்மை செய்யும் பூச்சிகள் மடிந்தன.பறவைகள் மறைந்தன. ஆகவே பூச்சி கொல்லி தெளிப்பதாலேயே பெருகுகின்றன.
.
பயிற்சியளித்த மற்றுமொரு தகவல், இரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்துவதற்காக உற்பத்தி செய்யப்பட்டவையல்ல. உலக போரின் பொழுது, போர்க் காலத்தில் வெடியுப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு போரில்லாக் காலத்திலும் இலாபம் குவிப்பதற்காகவே இரசாயன உரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அது போலவே, பூச்சி கொல்லி நஞ்சுகள் பூச்சியைக் கொல்லுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. இரண்டாம் உலகப் போரில் உருசியப் படைவீரர்களைக் கொல்லுவதற்காகக் கிணற்றிலும் ஆற்றிலும் கொட்டுவதற்காக ஹிட்லர் படை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவை இவை. போர் முடிந்த பிறகும் கம்பெனிகள் இலாபம் குவிக்க வேண்டும் என்பதற்காகவே பூச்சி மருந்து என்ற பெயரில் இந்த நஞ்சுகள் உழவர் தலைகளில் கட்டப்பட்டன.
.
இதன் விளைவாக தானியம், பருப்பு, காய், கனி, இறைச்சி, முட்டை, பால், தாய்ப்பால் எல்லாமே நஞ்சாகிப் போயின. இதனை 1984ஆம் ஆண்டிலேயே கோவைப் பல்கலைக் கழகம் கண்டறிந்தது. அதனால், இயற்கை வழிப் பயிர் பாதுகாப்புத் துறை என்று ஒரு துறையையும் திறந்திருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாக இயற்கை வழிப் பயிர் பாதுகாப்பு உத்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் நேர்மையை சோதனைக்குள்ளாக்குகிறது.
.
1996ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் இருந்தது. அங்கெல்லாம் சிறு அளவு இயற்கை உழவர் பண்ணைகளில் வெற்றிக் கொடி பறந்து கொண்டிருந்தது. பெரிய அளவு பண்ணைகள் எளிதில் இரசாயனங்களையும் எந்திரங்களையும் கைவிட முடியாத நிலை உள்ளது. நாட்டு மக்கள் தொகையில் நூற்றில் இரண்டு அல்லது மூன்றுபேர் மட்டுமே கிராமப்புறத்தில் வாழ்கிறார்கள். இரசாயனப் பூச்சிக் கொல்லிகளின் கொடுமையை எல்லாரும் உணர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து இயற்கையில் விளைந்தவை அங்கு இறக்குமதி ஆக வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். 1996ஆம் ஆண்டின் இறுதியில் பிலிபைன்ஸ் நாட்டில் இருந்தேன். 12 நாடுகளைச் சேர்ந்த 18 பேர் ஆய்வுப் பட்டறையில் இருந்தோம். பயிற்சி காலம் ஒரு மாதம். தஞ்சை மாவட்டம் போன்று அங்கு வளம் மிகுந்த பகுதி மணீலா.
.
பசுமைப் புரட்சி செய்து நிறைய விளைச்சல் எடுத்த பகுதி. நிலம் வளமிழந்து தரிசாகக் கிடக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு மாடு நீண்ட கயிற்றில் கட்டப்பட்டிருக்கிறது. அது இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பெரு முதலைகளான ராக்பெல்லர் எண்ணெய் கம்பெனியும், போர்டு மோட்டார் கம்பெனியும் அவர்களது கூட்டாளிகளும், கூடி உருவாக்கிய நெல் ஆராய்ச்சி நிலையம் பிலிபைன்ஸில் உள்ளது. இங்குதான் ஐ.ஆர்.8, ஐ.ஆர்.5 போன்று சொத்தை விதைகளை எல்லாம் உற்பத்தி செய்தார்கள். இந்தியாவில் இருந்த பல்லாயிரம் விதைகளை இந்த கம்பெனிக்கு வாரிக்கொடுத்ததற்காக எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இங்கு இயக்குநர் பதவி கிடைத்தது. ஐ.ஆர்.ஆர்.ஐ. ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த பயிர்களை விடவும் மழைகளில் மாடிப்படி போல அமைந்த அந்த நாட்டு விவசாயிகள் செய்திருந்த பயிர் சிறப்பாக இருந்தது. பயிற்சிகாலம் முடிவில் இப்படி எழுதினோம்.
.
1960க்கு முன்பு உலகில் இருந்த வேளாண்மை 1960க்குப் பின்பு வந்தது வேளாண் வணிகம். இந்த வேளாண் வணிகத்தின் தன்மை இப்படி இருந்தது.
.
1. எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது.
.
2. ஏற்றுமதி செய்வதற்காகவே உற்பத்தி செய்வது.
.
இந்த புரிதலுடன் இவற்றுக்கு எதிராக மக்கள் தேவைக்காகவும் உள்ளுர் ஆதாரங்களைப் பயன்படுத்தியும் செய்வதுவே இயற்கை வழி வேளாண்மை. தொடர்ந்து அதை மக்களிடம் கொண்டு செல்லப் பாடுபடுகிறேன்.
.
கே : இயற்கை வேளாண்மைக்கு அதிக கால்நடைகள் தேவைப்படும் என்றும். அந்த கால்நடைகளின் கழிவுகள் மூலம் வெளியாகும் மீதேன் காற்று மூலம் ஓசோன் திரையில் பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு குறித்து?
.
பதில்: வாழும் சூழலை நாசப்படுத்தும் ஆலைகளை நடத்தும் வியாபாரிகளின் கையாள்களே இப்படி பிரச்சாரத்தைக் கிளப்புகிறார்கள். ஓசோன் திரையில் ஓட்டை போடுவது குளோரோ புளூரோ கார்பன் இந்த கலவை காற்று ஏர்கண்டிசன், வீடு, அலுவலகம், கார்கள் வழியாக வெளியேறுகிறது. குளிர் சாதனப் பெட்டி உபயோகித்தால் வெளியேறுகிறது. தீயணைப்பு கருவி வழியாக வெளியேறுகிறது. பொருள்கள் உடையாமல் பெட்டிகளில் அடைத்து பயன்படும் நெழிவு அட்டை தயாரிப்பில் வெளிப்படுகிறது. இவைகளுக்கு மாற்று உத்திகள் கண்டறியப்பட வேண்டும் என்று கோரிக்கைக்கு அமெரிக்கா உடன்படவில்லை. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா? இயற்கை உழவாண்மைக்குத் தேவைப்படும் கால்நடை கழிவுகளில் மீதேன் வரும் என்பவர்கள் இறைச்சிக்காக இலட்சக்கணக்கில் கால்நடைகளை வளர்க்கிறார்களே அது என்னவோ இயற்கை வழி என்பது கால்நடை வளர்ப்பு மட்டுமல்ல. அதன் கழிவை எரிசாணக் கிணற்றில் இட்டு மீதேன் காற்றை எரித்து விடவும் செய்வோம்.
.
கே : உழவர்கள் படுகொலைகள் மலியும் இந்த வேளையிலும் எம்.எஸ்.சுவாமிநாதனும் இராமசாமியும் மரபணு மாற்றுப் பயிர்கள், விதைகளுக்காகப் பிரச்சாரம் செய்வது என்ன?
.
ப : கடந்த இருபது ஆண்டுகளாக 30,000 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது சுவாமிநாதனுக்கும் இராமசாமிக்கும் சரத் பவாருக்கும் தெரிகிறது. ஆனாலும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் மண்ணுக்கும் உழவுக்கும் மனிதகுலத்துக்கும் கேடுவிளைவிக்கும் மரபணு மாற்று விதைகளை உழவர் நிலத்தில் புகுத்துவதில் கடும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஏன் என்று தெரியவில்லையா? இவர்கள், இவர்களை ஒத்தவர்களுக்காகத்தான் பாரதியார் பன்றிக் கதை சொல்லி வைத்தார்.
.
கே : பிரதமர், குடியாட்சித் தலைவர் இருவரும் இரண்டாம் பசுமைப் புரட்சி பற்றிப் பேசுகிறார்கள்.... அது பற்றி...?
.
ப. இவர்கள் இருவருக்கும் வேளாண்மையும் தெரியாது, உழவர் நிலையும் புரியாது. அப்படிப் புரிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எம்.எஸ். சாமிநாதன் போன்றோரின் இராஜதந்திர தர்மம். ஓராண்டுக்கு முன்பு டாக்டர் வந்தனாசிவாவுடன் ஏழு மாநிலப் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பச்சைப் புரட்சியின் கருகிய விளைவுகளையும் இயற்கை வரி உழவாண்மையின் சிறப்பையும் சுமார் அரைமணி நேரம் விளக்கினோம். அனைத்தையும் கேட்ட பிறகு பிரதமர் இரசாயனம் இல்லாமல் வேளாண் உற்பத்தி சாத்தியமில்லை, என்று எம்.எஸ்.சுவாமிநாதன் சொல்கிறாரே? என்று பதில் உதிர்த்தார். பைநிறைய கொண்டு போயிருந்த வந்தனாசிவா எழுதிய புத்தகங்களையும் மரபணு விதையும் விதைச்சட்டமும் வேண்டாம் என்று எழுதி 10,000 பேர் கையயாப்பம் இடம் கோரிக்கைகளையும் பிரதமர் கையில் ஒப்படைத்துத் திரும்பினோம்.புரட்சி பச்சையாகவும் இராது. அது இரண்டாவதாகவும் தேவையில்லை. நமது உழவர்கள் முதுகில் பலர் குதிரை சவாரி செய்கிறார்கள். உழவர்கள் நிமிர்ந்து கொண்டால் போதுமானது. பிறருக்கு மாடாக உழைப்பதை உழவர்கள் நிறுத்த வேண்டும். மாறாக மாடுகளை உழவர்கள் செல்வர்களாகப் பார்க்க வேண்டும். உலக முதலாளிகள் பெட்ரோல் விலையை உயர்த்தும் போதெல்லாம் கடைச்சரக்கின் விலை உயரும் என்பதை உயர வேண்டும்.
.
கே : பச்சைப் புரட்சி வெற்றி என்கிறார்கள். உபரி உற்பத்தி என்கிறார்கள். கப்பலில் கோதுமையை இறக்குமதி செய்கிறார்கள். கிட்டங்கியில் தானிய மூட்டை அடுக்கிக் கிடக்கிறது. ஆனாலும் மக்கள் பசியோடு தூங்கப் போவது கொடுமை, கேவலம் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது. ஏன், இந்தக் கொடுமை?
.
ப : பச்சைப் புரட்சி காலத்தில் வைக்கோலைக் குறைத்து தானிய விளைச்சலை உயர்த்தியது உண்மை. சத்து மிகுந்த தானியங்கள் விளைந்த நிலங்களில் கோதுமையும் நெல்லும் விளைவித்ததால் நெல் கோதுமை தானிய விளைச்சல் உயர்ந்தது உண்மை. நிறைய அணைகளைக் கட்டியும் ஆழ்குழாய்க் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கியும் நீர்ப்பாசன வசதியைக் கூட்டினார்கள். அதனால் ஒரு போகம் விளைந்த நிலங்களில இரண்டு போகம் விளைந்தது. இரண்டு போகம் விளைந்த நிலங்களில் மூன்று போகம் விளைந்தது. அதனால் கோதுமை, நெல் தானிய விளைச்சல் உயர்ந்தது உண்மை.
.
ஆனால், அது பழங்கதையாகிப் போனது. இன்று சுவாமிநாதனின் பல்லவி வேறு விதமாக உள்ளது. இரசாயனங்களைக் கொட்டியதால் நிலங்கள் உப்பாகிப் போய் விட்டன. கோதுமை தானிய விளைச்சல் குறைந்து விட்டது. ஆனால் தானிய விளைச்சல் குறைந்ததால்தான் இறக்குமதி செய்ய வேண்டும் என்பது இல்லை. எப்போதும் இறக்குமதியில் ஆளும் கட்சிக்கு இலாபம் இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் எழுதுகிறார்.
.
வாணிபப் பயிர் உற்பத்தி, இரசாயன உரங்கள், எந்திர வேளாண்மை இவை புகுந்ததால் ஊர்ப் புறங்களில் வேலை இல்லாத் திண்டாட்டத்தைத் தோற்றுவித்தது. காடுகளை இழந்ததால் மழை மறைந்தது. அதனால் சாகுபடி இழப்பு, வடிகால்கள், ஏரிகள் தூர் வாராததால் வெள்ளப்பெருக்கு, அதனால், சாகுபடி இழப்பு இப்படி மக்கள் கையில் காசு இல்லாமல் போனது. உச்ச வரம்புச் சட்டம் என்ற பெயரால் மிச்ச வரம்புத் திட்டம் செயல்படுத்தியதால் ஏழை - பணக்காரர் இடைவெளி பெரிதாகியது. இத்தனை அவலங்களும் சேர்ந்ததால் கிட்டங்கியில் உணவு ஒருபுறம் இருக்க மறுபுறம் பட்டினிச்சாவும் நடந்தேறுகிறது.
.
கே : நம்முடைய பாரம்பரிய விதைகள் இன்றுள்ள சூழலுக்குப் பொருந்தாது என்று விஞ்ஞானிகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் சொல்லுகிறார்கள். இது உண்மையா?
.
ப : 1960ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இவர்கள் உற்பத்தி செய்த குறுகிய கால பெருமையாக ஆராய்ச்சி நிலையத்தார் கூறியது எல்லாம் பொய். அதே போன்றதுதான் இந்தப் பொய்யும், செங்குறுவை,கருங்குறுவையயல்லாம் 90 நாட்களில் விளையும் பாரம்பரிய ரகங்கள்தான். அறுபது நாளில் விளையும் அறுபதாம் குறுவை கூட நமது முன்னோர்களின் கண்டுபிடிப்புதான்.
தரக் குறைவான விதைகளையே விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.
.
இவர்கள் கண்டுபிடித்த ஏ.டீ.டி43 அரிசி கிலோ 12 ரூபாய்க்கு விற்கும்போது உழவர் வித்தான வெள்ளைப் பொன்னி அரிசி கிலோ 22 ரூபாய்க்கு விற்கிறது. நீண்ட கால இரகங்களான கிச்சடிச்சம்பா, சீரகச்சம்பா எல்லாம் இயற்கை வழியில் பயிரிடப்படுகிறது. மக்கள் விரும்பி பண்ணுகிறார்கள். தண்ணீர் தேங்கியுள்ள நிலங்களில் மடு மழுங்கிதான் சிறந்தது. கடல் தண்ணீர் புகும் கடற்கரைப் பகுதிக்கு குழியடுச்சான், குடைவாழை போன்றவையே ஏற்றவை.நீர் குறைந்த பகுதிகளுக்கு வாடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, புழுதி விரட்டி, ஒசுவக்குத்தாளை இவையே ஏற்றவை. சுவை வேண்டுமானால் தூயமல்லி, சம்பா மோசனம் இவையே.
.
இவையெல்லாம் விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு கலாச்சாரமும் தெரியாது, வரலாறும் தெரியாது. எதைத் தின்னுகிறோம் என்பதும் தெரியாது. அவர்கள் மனைவி, குழந்தைக்கு வரும் மார்புப் புற்று, கர்ப்பப்பை புற்று எதனால் வருகிறது என்பதும் தெரியாது.
.
கே : இயற்கை உழவாண்மைக்குப் போனால் நல்ல விளைச்சல் பார்க்க குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் அச்சுறுத்துகிறார்களே?
.
ப : இவர்கள் சொன்னதைக் கேட்டு இரசாயனத்தையும் நஞ்சையும் நிலத்தில் கொட்டியவர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்களே! அதை விட இது சிறந்தது தானே?இயற்கை உழவாண்மை மெதுவாகவே பலன் தரும் என்பதை எங்கு சென்று படித்தார்கள்? குருடர்கள் யானையைப் பார்த்தது போல இவர்கள் பேச்சு இருக்கிறது.
.
பலவகைத் தானியங்களை வளர்த்து மடக்கினால் நிலம் 60 நாட்களில் வளமாகும். நெய்வேலிக் காட்டாமணக்கை வெட்டி வாய்மடையில் போட்டால் எந்த உரமும் இல்லாமல் பயிர் விளையும். அமுதக் கரைசலில் 24 மணி நேரத்தில் பயிர் பச்சை காட்டும். ஆவூட்டம், ஆட்குட்டம் தெளித்தால் விளைச்சலும் கூடும், சுவையும் கூடும். இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குவோம்.
.
கே : வாழ்வாதாரத்தையே அழிக்கும் விதைச் சட்டத்தின் பின்னணி என்ன?
.
ப : பதவியில் இருப்பவர்களுக்குத் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கம்பெனி விதைகளால் விளைச்சல் உயரும், கத்தரிக்காயைப் பூச்சி தின்னாது. அரிசி சாப்பாட்டால் கண் விளங்கும் இப்படியயெல்லாம் கம்பெனிகள் விஞ்ஞானிகளைப் பேசவைக்கிறார்கள். கடந்த 40 வருடங்களாக தேசிய விதைக் கார்ப்பொரேசன் குட்டிக்கரணம் போட்டும் 80 சதம் உழவர்கள் தங்கள் விதைகளையே பயன்படுத்துகிறார்கள். இன்று தேசீய விதைக் கார்ப்பொரேசன் விதை கம்பெனி பன்னாட்டு கம்பெனிகளிடம் தன்னை விற்றுக் கொண்டுவிட்டது.
.
இதற்குப் பெயர்தான் தனியார் மயமாக்கம். தனியார் கம்பெனிகள் தான் கொடுப்பதை மட்டுமே உலக மக்கள் உண்ண வேண்டும். இலாபம் மலை மலையாய்க் குவிய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அப்படியானால், உழவர் வீட்டில் விதை இருக்கக்கூடாது. அதற்காகத்தான் விதைச்சட்டம். விதை இன்ஸ்பெக்டர் எந்த வீட்டிலும் எந்த நேரத்திலும் புகலாம். எந்த பெட்டியையும் எந்தக் கதவையும் உடைக்கலாம். எந்தப் பூட்டையும் உடைக்கலாம். சான்று பெறாத விதை இருந்தால் உழவரை ஆறுமாதம் சிறையில் போடலாம். 25000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். இவையெல்லாம் எதற்காக? நெற்றி வேர்வை சிந்தி, சேற்றில் நடந்து. வெய்யிலில் காய்ந்து நாட்டுக்குச் சுவையான உணவு உற்பத்தி செய்து கொடுத்ததற்காக உழவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு கொடுக்கும் பரிசு இது.
.
கே : பாரம்பரியக் கால்நடைகளை அழித்துவிட்டு வெளிநாட்டுக் கால்நடைகளை இறக்குமதி செய்யும் அபாயம்.... குறித்து....?
.
ப : இடத்திற்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் வளர்ச்சியுறும் கால்நடைகள் வேறுபடுகின்றன. காங்கேயம், உம்பளாச்சேரி, திருவண்ணாமலை, தருமபுரி, ஓங்கோல், கிர் இப்படி மாடுகளை ஊர்ப் பெயர் சூட்டி அழைப்பதிலிருந்தே இந்த உண்மை வெளிப்படும். வெளிநாட்டு மாடுகள் குளிர் சீமையில் வளர்பவை. அவை நமது தட்ப வெப்ப நிலைமைக்கு ஏற்றவை இல்லை. இதை 1955 ஆம் ஆண்டு வாக்கிலேயே வேளாண் நிபுணர் வீ.டி.சுப்பையா முதலியார் கூறியுள்ளார். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இறக்குமதி செய்த காளை கொண்டு நமது கால்நடை இனங்களை அழிக்கிறார்கள். உயிரியல் பன்மயமே வளமைக்கு அடிப்படை என்று அவ்வப்போது பேசவும் செய்கிறார்கள்.
.
கே : நீர் நிலைகள் சிதைக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் ஆலைச் சாக்கடையாக மாற்றப்பட்டும் வருகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு 80% தண்ணீர் உழவுக்குப் பயன்படுத்தப்படுவதே காரணம் என்று குற்றச் சாட்டு உள்ளதே?
.
ப: 95% ஆற்று நீர் உழவுக்குப் பயன்படுத்தப்பட்ட காலம் இருந்தது. அன்று குடி நீர்த் தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாடு தண்ணீர் வளம் குறைந்த மாநிலம். அதனால் நமது முன்னோர்கள் 65,000 ஏரி, கண்மாய், குளம், குட்டைகளை வெட்டி, பராமரித்து வந்தார்கள். அவற்றின் கரைகளை வெட்டித் தண்ணீரை வடிய விட்டு விட்டு இன்று பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், நீதிமன்றம் எழுப்புகிறோம்.
.
தேயிலைத் தோட்டம், இரப்பர் தோட்டம், ஆலைக்கு மரம் வளர்ப்பு, நகர மயமாக்கம், சாலை விரிப்பு என்ற பெயரில் காடுகளையும் நஞ்சை நிலங்களையும் மொட்டையடித்துவிட்டு நமக்குக் காதுகுத்தப் பார்க்கிறது சூது செய்யும் கூட்டம். அதே நேரத்தில் உழவர்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். பூமியை ஆழமாகத் துளைத்து தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டி தென்னை. வாழை, கரும்பு பயிர் செய்வதெல்லாம் அடாவடித்தனம்.
.
வெளிநாட்டவர் கோவணம் கட்ட வேண்டும் என்பதற்காக திருப்பூரில் ஆலைகளை நிறுவி, சாக்கடைகளை நொய்யல் ஆற்றில் கட்டி அதைத் தீண்டத் தகாததாக ஆக்கிய குற்றவாளி யார்?அந்நியர் செருப்பு அணிய வேண்டுமென்பதற்காக ஆம்பூர் வாணியம்பாடியில் தோல்பட்டறை தொடங்கிப் பாலாற்றைத் தீண்டத்தகாததாக மாற்றியது எவர்குற்றம்?இவையயல்லாம் காலம் கடத்தாமல் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.
.
கே : விதர்பா பகுதியில் ஐந்து மணி நேரத்திற்கு ஒரு தற்கொலை நடைபெறுகிறது. நிதியமைச்சர் அறிவித்துள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் தற்கொலையைத் தடுத்து நிறுத்துமா?
.
ப : மன்மோகன்சிங் மந்திரிசபை பதவி ஏற்றவுடன் முதன் முதலாக அவர் செய்தது என்ன? ஆந்திர மாநிலத்திற்குப் பறந்து சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கினார். அப்போதே உழவர்க்குக் கடன் கொடுப்பதற்காக அதிக நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
.
அவருக்குப் பதில் கூறிய டாக்டர் வந்தனா சிவா பின் கண்டவாறு கூறினார். கிணற்றில் விழுந்தவனைக் காப்பாற்ற ஒரு கயிற்றை விட வேண்டும். மாறாக, நமது நிதியமைச்சர் ஒரு வாளி தண்ணீரைக் கொட்டுகிறார். கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். அதற்கான காரணம் என்ன? சாகுபடி செலவு அதிகரிக்கிறது. தொடர்ந்து இரசாயனம் இட்டதால் மண் வளத்தை இழந்தது. உணவுப் பயிர் செய்வதற்குப் பதிலாக வாணிபப் பயிர் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்பட்டார்கள். மான்சாண்டோ கம்பெனிப் பருத்தி வியாபாரி சொன்னது போல் விளையவில்லை. விளைந்த பருத்திக்கு சரியான விலை கிடைக்கவில்லை. இக்காரணங்களைக் களையாது மேலும் கடன் கொடுப்பதால் தற்கொலையைத் தடுக்க முடியாது என்று வந்தனா கூறினார். வந்தனா அன்று கூறியது இன்றைக்கும் பொருந்தும்.
.
கே : விதர்பா பகுதி தற்கொலைகளை எதிர்கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன், காந்தி, உழவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக நீண்ட காலம் முகாமிட்டிருந்த விதர்பா பகுதியில் தற்கொலை தொடர்வது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனாலும் அவர் இரண்டாம் பச்சைப் புரட்சியை செயல்படுத்த முனைப்பாக இருப்பது ஏன்?
.
ப : சுவாமிநாதனின் சாமர்த்தியமே இங்குதான் உள்ளது. பச்சைப் புரட்சிக்கு மூன்று அப்பா. ஒருவர், அமெரிக்க சனாதிபதி ஜான்சன், இரண்டாவது அப்பா முன்னாள் உணவு அமைச்சர் சி. சுப்பிரமணியம், மூன்றாவது அப்பா, நம்முடைய சுவாமிநாதன். சுப்பிரமணியம் இன்று உயிருடன் இல்லை. பச்சையாகப் புரட்சி நடத்தி நாட்டைப் பாலைவனமாக்கியதற்காக சுவாமிநாதன்தான் வெட்கப்பட வேண்டும். ஆனால், நாம் வெட்கப்பட வேண்டும் என்று நம்மையும் கூட்டுக் களவாணியாக்குவதில் தான் சுவாமிநாதன் வெற்றி அடங்கியுள்ளது. அவர் இப்போது முழக்கத்தை மாற்றிவிட்டார். பச்சை வேளாண்மை என்று தலைப்பை மாற்றிக் கொண்டு விட்டார். அவர் மீர்ஜாபர் நம்பர் 1.
.
கே : தங்களை விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்ளும் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் சிலர் நோக்கம், தகுதி பற்றிக் கூறுங்கள்?
.
ப : பச்சைப் புரட்சியின் அப்பா நான் தான் என்று மார்தட்டிக் கொண்ட சுப்பிரமணியத்தில் இருந்து தொடங்குவோம். பிரதமர் ஜவகர்லால் நேரு அகால மரணமடைந்தார். லால்பகதூர் பிரதம மந்திரியானார். அவர் காமராசருக்கு வேண்டியவர். சுப்பிரமணியத்தைப் பழிவாங்குவதற்காக உழவு, உணவு அமைச்சராக நியமித்தார். இவை பற்றி எதுவும் தெரியாத சி.சுப்பிரமணியம் விவசாய விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பேசினார். அவர்கள் சம்பளம் போதவில்லை என்று அழுதார்கள். விவசாய விஞ்ஞானிகள் மூன்றாம் தர விஞ்ஞானிகளாக நடத்தப்படுவதாக முறையிட்டார்கள். அவர்கள் சமூகத்தின் மூன்றாம் தர மக்கள் மத்தியில் இருந்து வந்த முதல் தரமானவர்கள் என்ற முடிவுக்கு வந்தார் அமைச்சர்.
.
இவையெல்லாம் நான் சொல்லவில்லை. சுப்பிரமணியம் பச்சைப் புரட்சி என்று தலைப்பிட்ட தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். சுப்பிரமணியம் அமெரிக்க மந்திரி ஃபிரிமன் என்பவருடன் ரோமாபுரியில் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார்.
.
இந்தத் திட்டத்திற்கே பின்னர், பச்சைப் புரட்சி என்று பெயர் சூட்டப்பட்டது. இதை நிறைவேற்றுவதற்காக சுப்பிரமணியம் தேர்ந்தெடுத்துக் கொண்ட நபர்தான் இன்னொரு அப்பா, சுவாமிநாதன்.
.
சுப்பிரமணியத்தின் இரகசிய ஒப்பந்தப்படி அமெரிக்கர்கள் இந்திய விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் இவர்களில் 2000 பேர்களை அமெரிக்காவுக்கு அழைத்துப் போய் நம்மூர் பொருட்காட்சி சாலையில் பெற்றோர் குழந்தைகளைச் சுற்றிக் காட்டுவது போல சுற்றிக் காட்டித் திருப்பியனுப்பினார்கள். திரும்பி வந்தவர்கள் அமெரிக்கா பற்றித் துதி பாடினார்கள். அப்படிப் போய் வந்தவர் நால்வரை எனக்குத் தெரியும். அடிப்படை அறிவியல் கூட தெரியாமல் வந்தார்கள்.
.
சுப்பிரமணியம் ஒப்பந்தப்படி இந்தியாவில் 32 பல்கலைக்கழகங்களையும் 200 ஆராய்ச்சி நிலையங்களையும் நிறுவினார்கள். எல்லா ஆராய்ச்சிகளையும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களோடு இணைத்தார்கள். மக்கள் வரிப் பணத்தில் ஊதியம் வாங்குகிறோம் என்ற நினைப்பே இவர்களுக்கு இருப்பது இல்லை, இவர்களின் இருப்பிடம் முட்டாள்களின் சொர்க்கம்.
.
கே: பி.டீ. என்றால் என்ன? கத்தரிக்காய் வெண்டைக் காயிலும் பீ.டீ. இருக்கிறதா?அது என்ன பீ.டீ. கத்தரிக்காய்?
.
ப: டீ.பீ கேட்டிருக்கிறீர்களா? எண்புருக்கி நோய். அதை உண்டு பண்ணுகிறது. பேசில்லஸ் டியூபர்குளோசிஸ் என்று ஒரு கிருமி, அது போல இதுவும் ஒரு பேசில்லஸ் கிருமிதான். இதற்குப் பெயர் பேசில்லஸ் துரிஞ்சி பென்சிஸ். இது கத்தரிக்காயுடன் ஒட்டிக் கொண்டது எப்படி? கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.
.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உணவு உற்பத்தியில் வணிகம் இறக்கை கட்டிக் கொண்டது. ஒட்டு விதைகள், இரசாயண உரம், பூச்சிகொல்லி, களைக்கொல்லி என்று பலவற்றையும் விற்று பன்னாட்டுக் கம்பெனிகளும் லாபம் குவித்தன. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட பூச்சிகொல்லி நஞ்சுகள் எண்ணிக்கை 147. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பூச்சிகொல்லி நஞ்சைக் குடிக்கும் உழவர் இறந்து போகிறார். பூச்சி சாக மறுக்கிறது.
.
கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் பறிப்பதற்கு இரண்டு நாள் முன்பு கூட பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் தெளிக்கப்படும் பூச்சி கொல்லியின் அளவு எழுபத்தைந்தாயிரத்து நானூற்றிப் பதினேழாயிரம் ஆயிரம் கிலோ. இதனால், பூச்சி கொல்லிக்குப் பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டன. நஞ்சானது காய்கறி, பால், பழம், தாய்ப்பால் எங்கும் எதிலும் காணப்படும் பொருளாயிற்று. உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். கனடாவில் உள்ள அனைத்துலக வளர்ச்சி ஆராய்ச்சி மையம் கணித்தபடி ஆண்டுதோறும் உலகில், 10,000 பேர் பூச்சிகொல்லியால் மடிகிறார்கள். இன்னுமொரு நான்கு லட்சம் பேர் பலவகை நோய்க்கு ஆட்பட்டு அல்லற்படுகிறார்கள். இதில் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், இரசாயண பூச்சிகொல்லிகள் தெளித்தனாலேயே பூச்சிகள் பெருகுகின்றன. பறவைகளும் பூச்சி உண்ணும் பூச்சிகளும் மடிந்து போயின. எதிர்ப்பு இல்லாமற் போனதால் செடியுண்ணும் பூச்சிகள் மலிந்து போயின.
.
இதன் விளைவாக உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு புழக்கத்திற்கு வந்தது. நம்மைப் போன்றவர்கள் மூலிகைச் சாற்றைத் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்த மக்களுக்குச் சொல்லித் தருகிறோம்.கோடீசுவரக் கம்பெனிகள் மரபணுமாற்று விதை உற்பத்தியில் கால்வைத்தார்கள்.
.
ஆமா! மரபணு மாற்று, அது என்ன? கேட்கத் தோன்றுகிறதா?
.
முன்பெல்லாம் கலப்பினங்களைத் தோற்றுவிக்கப் பெற்றோர்களை மாற்றினார்கள். இப்போது மரபணுக்களை இடம் மாற்றுகிறார்கள். உதாரணத்திற்கு, சீமைக் காளையை நாட்டுப் பசுவுடன் இணை சேர்த்தார்கள். கொஞ்சம் மடி பெரிசாக ஒரு பெண் கன்றோ ஏர் அல்லது வண்டிக்கு உதவாத ஒரு ஆண் கன்றோ பிறந்தது. காளையையும் எருமையையும் இணை சேர்த்தால் கன்று பிறக்கவில்லை.ஆனால் ஜீன் மாற்றம் மிகவும் நுட்பமானது. செடி, கொடியின் (ஜீன்) மரபணுவை விலங்கில் பொருத்தலாம். ஒரு விலங்கின ஜீனை ஒரு செடியில் பொருத்த முடியும். கோடி கோடியாகச் செலவழித்து கட்டப் பெற்ற ஆய்வுக்கூடம் கோடி கோடியாய் சம்பளம் பெறும் நிபுணர்கள் தேவை. அதற்குரிய சாதக பாத சூழலில் தான் பீ.டீ. கத்தரி ஏவப்படுகிறது.
.
மதுரை உழவியல் கல்லூரி முதல்வர் சொன்னார். நான் கத்தரிக்காயை வாங்கும்போது பூச்சி துளைத்ததாகப் பார்த்து வாங்கி வருகிறேன். ஏனென்றால் அதுதான் பூச்சி கொல்லும் விசம் இல்லாதது, அரியும் போது புழுவை அப்புறப்படுத்தலாம். விசத்தை அப்புறப்படுத்த முடியாது - அதுபோலத்தான் பேசில்லஸ் துரிஞ்சென் சில ஜீனும், அரிந்து அப்புறம் போட முடியாது.
.
இன்னொரு ஆபத்தும் உள்ளது. வேலூர் முள்ளுக் கத்தரிக்காய், திருச்சி ஐயம்பாளையம் கத்தரிக்காய், தஞ்சை தூக்கனாம் பாளையம் கத்தரிக்காய் என்று ஊருக்கு ஒரு கத்தரிக்காய் வைத்திருக்கிறீர்களே, அவை காணாமற் போகும். அப்படித்தான் பசுமைப்புரட்சி வந்தபின்பு நமது நெல் வகைகள் காணாமற் போயின.மேலும் ஒரு ஆபத்தும் உண்டு. ஜீன் தாவும் என்று சொன்னோம். கம்பெனிகள், வெறும் 50 மீட்டர் தூரம் தான் இந்த மரபணுக்கள் பரவும் அபாயம் உள்ளது என்று சொல்லுகிறார்கள். சமீபத்தில் அமெரிக்கக் கோல்ப் கிளப் மைதானத்துச் செடியின் மகரந்தத் தூள் 21 கிலோ மீட்டர்தூரம் தள்ளிப் பயணம் செய்திருப்பது கண்டு நீடிக்கப்பட்டுள்ளது. நமது தோட்டத்துச் செடியில் ஜுன் மாசு வந்தால் மான்சேன்ட்டோ நமக்கு இழப்பீடு நாம் கம்பெனிக்கு ராயல்ட்டி கொடுக்க வேண்டும். இப்படி கம்பெனி வயல் பார்த்து வழக்காடி சம்பாதிப்பதற்காக ஒதுக்கப்பட்டது ஒரு கோடி டாலர்கள். பணிபுரியும் ஆட்கள் 75 பேர். சர்வதேச விஞ்ஞானிகள் ஊதும் எச்சரிக்கைச் சங்கு இதுதான்.
.
மரபணு மாற்று உணவு நஞ்சுள்ளதாக இருக்கக்கூடும்.
மனித உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணும்.
.
மரபணு மாற்று மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைச் சிதைக்கும்.
.
மரபணு மாற்று உயிரினப் பன்மயத்தை அழிக்கும்.
.
பீ.டீ மரபணு கத்தரிக்காயுடன் அடங்கிப் போகும் ஒன்றல்ல. அடுத்து, வெண்டை, தக்காளி, நிலக்கடலை, சோளம், கடுகு, மக்காச் சோளம், பப்பாளி, நெல், உருளைக் கிழங்கு, வாழைப்பழம் என்று உண்ணும் பொருள் அத்தனையையும் மாசுபடுத்தும் ஆராய்ச்சி போய்க் கொண்டிருக்கிறது.
.
இந்தியப் பல்கலைக் கழகங்கள் இது போன்ற ஆராய்ச்சிக்குள் இறங்குவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.
.
மான்சேன்ட்டோ பீ.டீ. கத்தரிக்கு இப்படியொரு எதிர்ப்பு கிளம்பியதால்தான் தடைபட்டு நிற்கிறது. மரபணு மாற்று விதை, உணவு போன்றவற்றை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு ஒரு கமிட்டி உள்ளது. மக்கள் எதிர்ப்பு கண்டு இந்தக் கமிட்டி ஒப்புதல் தருவதைத் தள்ளிப் போட்டு வருகிறது.
.
பீ.டி. மரபணு புகுந்துவிட்டால் எதையுமே இயற்கையில் விளைந்தது என்று சான்று பெறமுடியாது. ஏற்றுமதி செய்ய இயலாது.
.
உத்தராஞ்சல் முதல்வர் எனது மாநிலத்தில் பீ.டிக்களை நுழைய விடமாட்டேன் என்று உறுதி கூறியுள்ளார். ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பீ.டீ உணவைப் புறக்கணித்துள்ளன. பட்டினி கிடக்கும் ஆப்பிரிக்கா, எங்கள் விதைகள் அழிந்து போகும் பீ.டீ, சோளம் வேண்டாம் என்று மறுத்துவிட்டது.
.
பீ.டீ. கத்தரிக்காய் முதல் முதலாகத் தமிழ் மக்களுக்குத்தான் ஊட்டி விடப்படவுள்ளது. என்ன செய்யப் போகிறோம்? கை கட்டி வாங்கிக் கொள்ளப் போகிறோமா? நிலாக் காட்டி ஊட்டிவிடவும் இங்கு ஆட்கள் உண்டு
.
கத்தரிக்காய் தின்னும் மனிதர் உறுப்புக்களில் என்ன மாறுதல்களை ஏற்படுத்தும்?
.
முன்பே அளவுக்கதிகமான பூச்சிகொல்லி தெளிப்பால் சர்க்கரை நோய்; புற்றுநோய், கிட்னி ப்ராப்ளம், நரம்புக் கோளாறு, ஆண் மலடு என்று மனிதரைத் தொற்றும் நோய்கள் நூறு விதம்.
.
ஜீன் உயிர் விட்டு உயிர் தொற்றும் போக்கு ஜீன் மாசுபாடு என்று அழைக்கப்படுகிறது. இதை நியூஸிலாந்து விஞ்ஞானி ஒருவர் கேலிச் சித்திரமாக்கிக் காட்டினார். ஒரு வெள்ளாட்டிற்கு வாய் கீழ்நோக்கி உள்ளது. அது மனிதனுக்கு உள்ளதுபோல் முன்பக்கம் அமைந்து சிரிக்கவும் செய்தால்.... கற்பனை செய்து பாருங்கள். வெட்ட மனம் வராது.
.
தலை பெருச்சாளி போலவும், உடல் பன்றி போலவும், கால்கள் மனித கால்களாகவும், பாதம் ஆட்டுக்கு உள்ளது போலவும் அமைந்தால் அந்த விலங்கை என்ன பெயரிட்டு அழைப்போம்? இப்படி ஒரு கேள்வி எழுப்பினார்கள் உலக மரபணு தொழில் நுட்ப வல்லுநர்கள்.
.
கம்பெனிகளுக்கு இதுபற்றியெல்லாம் அக்கறையில்லை. அவர்கள் விதை விற்று லாபம் பார்க்க வேண்டும். ஆந்திர மாநிலம் வாராங்கல் வட்டாரத்தில் 2006 முதல் 3 மாதங்களில் பீ.டீ. பருத்தி இலைகளை மேய்ந்து 1500 ஆடுகள் செத்துப் போயின. மைய அரசு கால்நடைத் துறை விஞ்ஞானிகள் நஞ்சு உட்கொண்ட சாவுதான் என்று உறுதி செய்துள்ளார்கள். 21.5.2006 இந்து நாளேடு இந்தச் செய்தியை வெளியிட்டது.
.
பெரம்பலூர் மாவட்ட உழவர்கள் ஆடுகளை பீ.டீ. பருத்திக் காட்டில் ஓட்டி விட்டார்கள். ஆடுகள் அவற்றை தின்ன மறுத்து வெளியேறிவிட்டன.
.
ஆந்திரா மாநிலத்தில் பருத்தியை எடுத்த பிறகு செடியை மேய்ந்த 1500 ஆடுகள் செத்துப் போயின. லால்குடி வட்டத்தில் உள்ள சிறு களம்பூர் உழவர்கள் கம்பெனி விதையை விதைத்து ஏக்கருக்கு 5 கிலோ பஞ்சு கூட எடுக்கவில்லை. ஏக்கருக்கு 16,000 ரூபாய் செலவு. இழப்பை சரிசெய்ய அரசும் முன்வரவில்லை. விதை விற்ற தரகன் போன இடம் தெரியவில்லை. அருப்புக் கோட்டை உழவர்கள், காய்பிடிக்காத பருத்திச் செடியை பிடுங்கி வந்து மாவட்ட ஆட்சியர் முன்பு போட்டார்கள். சேலம் பகுதி உழவர்கள் காய்பிடிக்காத பருத்திச் செடிகளை பிடுங்கி எறிந்தார்கள்; அவர்கள் சிறுநீரகத்தை விற்று கடன் அடைத்தார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மட்டும் 33,000 ரூபாய்க்கு விதை வாங்கி முளைக்காமல் போனதைச் சொல்லி உழவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
.
மரபணு மாற்றுப் பயிர்களால் ஏற்படும் இழப்பிற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ஒரு பெரு நிதி சேமிப்பு வேண்டும் என்று தேசிய உழவர் கமிசன் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் எழுதுகிறார்.
.
இது இன்றைய நிலவரம். தண்டனைக்குரியவர்கள் கம்பெனியார்கள்.
.
அப்படியிருக்க உழவர் வீட்டுக் கதவை உடைப்பது எதற்காக? என்று கேட்டுச் சமூக விஞ்ஞானிகளும், உழவர்களும் குமுறுகிறார்கள். இவர்கள் மாநிலம் தோறும் மாநாடுகள் நடத்திக் கொண்ட மராட்டிய உழவர் குடும்பங்களைத்தான் அண்மையில் பிரதம அமைச்சர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிவந்தார். பீ.டீ மரபணு உழவரைத் தற்கொலைக்குத் தள்ளுவதோடு கதை முடியவில்லை.
.
கத்தரிக் காயைப் புழுதின்னவில்லை என்றால் என்ன பொருள்? கத்தரிக்காய் நஞ்சாகி விட்டதுதானே.
.
மனித உடலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
.
மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைச் சிதைக்க வல்லதாக இருக்கிறது.மரபணு உயிரினம் கடந்து செயல்பட முடியும்.
.
விதை முளைத்து வளரும் போது கூடவே பீ.டீ மரபணுவும் வளர்ச்சி அடைந்து மகரந்தத்தை மலடாக்குகிறது. அதனால் பீ.டீ. பயிரில் இருந்து மறு உற்பத்திக்கான விதை கிடைக்காது. வண்டு, தேனீ வழியாக மற்ற உழவர் பயிருள்ளும் புகுந்து அந்தச் செடிகளையும் மலடாக்கும் அபாயம் உள்ளது. பருத்தி விதைகளை உண்ணும் பசுவும் மலடாகும் அபாயம் உள்ளது.
.
கத்தரிக் காயை உண்ணும் மனிதன் மலடாகும் அபாயம் உள்ளது.
.
மேலும், பீ.டீ. கிருமிகளும் காய்ப்புழு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டு விட்டால் பருத்தி, கத்தரி, வெண்டை, தக்காளி, நிலக்கடலை, சோளம், கடுகு, மக்காச் சோளம், பப்பாளி, நெல், உருளைக் கிழங்கு, வாழை என அத்தனைப் பயிர்களின் சாகுபடியும் அற்றுப் போகும் வாய்ப்புள்ளது.
.
நன்றி:
நவம்பர் - டிசம்பர் 2006