வ.கீதா : "குடும்ப வாழ்க்கை பயங்கரமானது; குழந்தைகளை அச்சுறுத்தக்கூடியது. ‘குழந்தைப் போராளி’ சைனா கெய்ரெற்சி தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை இயல்பானதாக நினைத்து வாழ்கிறார் என்பதை இவருடைய சுயசரிதை சொல்கிறது. குழந்தைகளை கொடூரமாக நடத்துவது இயல்பானது என்று கருதும் சூழலில் அவர் வாழ்கிறார். அதனால் தான் மிகச் சாதாரணமாக யாராவது அன்பு காட்டினால் கூட, பெரிய அதிசயம் நடந்துவிட்டதாக அவர் உணர்கிறார். அரச எதிர்ப்பு போராளிக் குழுவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கசிலிங்கி என்பவர் அவளை வன்புணர்ச்சி செய்து கொடுமைப்படுத்தி இருந்தாலும், அவர் எப்போதோ காட்டிய அன்புக்கு விசுவாசமாக, அவர் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் போது உதவ முன்வருகிறார் சைனா.
இந்த சுயசரிதை ராணுவமும், குடும்பமும் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தக் குழந்தைப் போராளிகளின் வாழ்க்கையை நமது தமிழ்ச் சமூகத்தோடு பொருத்திப் பார்ப்பது மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன். நமக்கு வெகு அண்மையில் உள்ள இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவத்தினர், விடுதலைப் புலிகள், கருணா குழுவினர் என அனைவருமே குழந்தைகளை தங்களது படைகளில் வலுக்கட்டாயமாக சேர்த்து வருகின்றனர். குறிப்பாக புலிகள் அமைப்பினர் குழந்தைகளை அதிகம் சேர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை அவர்கள் மறுத்தாலும் யாருக்காக ஈழம் உருவாகப் போகிறது என்பது முக்கியம். அடுத்த தலைமுறைகளை அழித்துப் புரட்சி நடத்திவிடுவதால் என்ன பயன்? எந்தக் குழந்தைகளை வைத்துப் போரை வெல்கிறார்களோ அதே குழந்தைகளை அழித்துவிடுகிறார்கள். 13 வயது குழந்தை செத்தாலும் பரவாயில்லை, தமிழ் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களை நினைத்தால் பயமாக உள்ளது''
ம. மதிவண்ணன் : “எழுத்துப்பிரதி பல தளங்களில் பலவாறு செயல்படும். படிக்கும் வாசகனுக்கு நிறைவை ஏற்படுத்தும் செய்நேர்த்தி பாதிக்கப்பட்டவர்களின் எழுத்துகளில் கிடைக்கும். இயல்பான விதத்தில் தன் கதையைச் சொல்வதால் நெஞ்சைத் தொடுகிறது இந்த சுயசரிதை. குடும்பம், ஆண் தன்மைகளில் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. இது பெரிய வன்முறை. இந்த குழந்தைப் போராளிக்கு குடும்ப வன்முறை என்பது அப்பா, பாட்டி மற்றும் சிற்றன்னை வடிவத்தில் இருக்கிறது. குழந்தை மற்றும் பெண் என்னும் அடிப்படைகளில் சைனா பெரும் வன்முறையைச் சந்தித்துள்ளார் என்பதை உள்ளம் உணர்கிறது.''
வேதா : “குழந்தைகள் வெளிநாடுகளில் மட்டுமல்ல, நம் நாட்டிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 13 மாநிலங்களில் இருந்து 12,446 குழந்தைகளை மாதிரியாகக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி ஆணையம் ஓர் ஆய்வு செய்தது. அதில் 53 சதவிகிதத்திற்கு மேல் பாலியல் பலாத்காரத்திற்கு குழந்தைகள் உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், 22 சதவிகிதம் படுமோசமாக பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்றும், 50 சதவிகித குழந்தைகள், தன் குடும்பத்தாராலும், தன் நெருங்கிய ரத்த உறவுகளாலும், அண்டை வீட்டாராலும், நண்பர்களாலும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
அதேபோல பெங்களூரை மய்யமாகக் கொண்டு ‘சம்வேதா' என்ற அமைப்பு 1996இல் ஓர் ஆய்வை நடத்தியது. அதில் 62 சதவிகித குழந்தைகள் ஒரு முறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள்; பாதிக்கப்பட்ட 38 சதவிகிதத்தினர் மீண்டும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று கூறுகிறது. பல இன்னல்களை சந்திக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை அதன் உலகத்தை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இனி அவர்களை கவனிக்க வேண்டும் என்று ‘குழந்தைப் போராளி’ நூல் சொல்கிறது. குழந்தை வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதற்கான ஆவணப்படுத்துதலே இந்தப் புத்தகம்.''
கவின் மலர் : மனநல மருத்துவத்தின் ஒரு பகுதியாகத்தான் கஷ்டங்களை பொய்யின்றி உண்மையாக சைனா எழுதியிருக்கிறார். பெண்ணாக இருப்பதால் பலர் இவரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். ராணுவத்திலும் படைத்தளபதி போன்ற உயர் அதிகாரிகள் செய்த வன்புணர்ச்சி கொடூரத்தை இவர் வெளியில் சொல்வதால்தான் தெரிகிறது. இல்லாவிட்டால் யாருக்குத் தெரியும்? வாழைப்பழம் என்பது எனக்கு ஒரு சாதாரண பழம். ஆனால் சைனாவுக்கு வாழைப்பழத்தின் மீது காதல்! அதைப் பார்க்கும் போதெல்லாம் ‘குழந்தைப் போராளி' ஞாபகம் வந்துவிடுகிறது. இலங்கைத் தமிழில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இலங்கைப் போர்ச் சூழலோடு ஈழத்தமிழில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது இலங்கைக்கும், குழந்தைப் போராளிகளுக்கும் ஒரு தொடர்புள்ளதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
புன்னகை பூக்கும் குழந்தைகளின் முகங்களை எதிராளிகளை சந்திக்கும் போர்முனையில், கேடயம் போல் முன்வரிசையில் நிற்க வைத்துப் போரிட வைப்பதற்கான காரணம் ‘குழந்தைப் போராளிகள்தான் எதிர்த்துப் பேசமாட்டார்கள்’ என்ற வரிகளை நான் படிக்கும்போது அடுத்த வரியை என்னால் படிக்க முடியவில்லை. அதே போல, நான் ஆண் குழந்தையாய் பிறந்திருந்தால் என் அம்மாவும், அப்பாவும் பிரிந்திருக்க மாட்டார்கள் என்று சைனா சொல்லும்போது உகாண்டாவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் பெண் குழந்தைகள் பிரச்சனைக்குரியவர்களாக உலகெங்கும் மாற்றப்பட்டுள்ளனர் என்று புரிகிறது.
யுத்த பூமியில் இருந்து தப்பி வந்த சைனா, ராணுவத் தலைவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் : “மேதகு முசேவென்! நீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில் ஒருத்தியான சைனா கெய்ரெற்சி பேசுகிறேன். என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது, அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகிறது. எனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகிறாய். எனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது. உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை ரத்தம் சிந்த வைத்தன. நான் உனது விளையாட்டை விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று. நீ என் கைகளில் திணித்த துப்பாக்கியின் கனம் என்னை நிலைகுலைய வைத்தது'' என்று இன்னும் நீளும் இந்தக் கடிதத்தையும், புத்தகம் முழுமையும் படிக்கும் போது மனதில் இனம் புரியாத ஒரு கலவரம் ஏற்பட்டு விடுகிறது.''
ஆதவன் தீட்சண்யா : ஆயுதம் தாங்கிய குழுக்கள், அதன் அதிகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு முன்பு குடும்பம், குழந்தைகள் பற்றி இந்நூல் எழுப்பும் கேள்விகள் குறித்த விவாதம் முக்கியமானது. அம்மா, அப்பா அரவணைப்பில் வாழும் குழந்தை ஒரு நல்ல குழந்தையாக வளரும் என்ற மயக்கத்தை இந்நூல் கொடுக்கிறது. இந்த விஷயத்தை இந்தியாவில் பொருத்திப் பார்க்க முடியுமா என்பது பெரிய கேள்வி. அதிகாரம் யார் கையில் இருந்தாலும் அது அடுத்தவரை காப்பாற்றக் கூடியதாக இல்லை என்பது தான் உண்மை; அது குழந்தையாக இருந்தாலும் கூட.
சைனாவை வெளியுலகம் ஒரு போராளியாக, ஆணாக மாற்றினாலும், அவர் தன்னை ஓர் அச்சு அசலான பெண்ணாக மாற்றிக் கொள்ளவே விரும்புகிறார். இந்த மனநிலையில் தான் அவர் தன் அம்மாவைத் தேடி செல்கிறார். இந்த விஷயங்கள் எல்லாம் நாம் பேசுகின்ற நுண் அரசியலை மறுப்பதாக இருக்கிறது. பல இடங்களில் ஆதரிப்பதாகவும் இருக்கிறது. ஆயுதம் தாங்கிய குழுக்கள் உருவாகும் போது, அவை கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாறிவிடுகிறது. அதுவரை ஆயுதங்களை அதிகார வர்க்கத்திடம் பார்த்த மக்கள், குழுக்களிடம் ஆயுதங்களைப் பார்க்கும்போது விலகியே நிற்கிறார்கள்.
மூன்றாம் உலக நாடுகளில் உள்ள சிக்கல்களுக்கு ஜனநாயக முறையில் நின்று தீர்வினை எட்டுவதா? அல்லது ஆயுதக் குழுவின் தேவையே கிடையாதா? என்கிற கேள்வியும் நூலின் இயல்பில் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இணக்கம் ஏற்படும் என்ற மயக்கம் எல்லோரிடமும் உண்டு. அப்படி ஒன்று இல்லை என்பதை இந்நூல் சொல்கிறது. வேறொரு மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு இந்நூல் வரும் போது, சிறுமியின் மொழி, அலைக்கழிக்கப்பட்ட பெண்ணின் மொழியை வசமாக கைப்பற்றி அழகாக மொழிபெயர்த்துள்ளார் சுவிஸ் தேவா.
-அநாத்மா
நன்றி:
ஏப்ரல், 2008
2 கருத்துகள்:
நல்ல நூல்தான். ஆனால் இதில் சொல்லப்பட்ட விஷயங்களைவிட சொல்லப்படாத விஷயங்களே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
"ஷோபா சக்தி" இந்த நூலின் பொறுப்பாசிரியர் என்னும்போது இந்த நூலை இலங்கைச் சூழலோடு இணைத்துப் பார்ப்பது தவிர்க்க இயலாதது.
உகாண்டாவில் முசெவெனியின் கட்டுப்பாட்டில் சைனா கெய்றெற்சி குழந்தைப் போராளியாக இருந்ததற்கு முசெவெனி மட்டுமே காரணமல்ல.
அதனை ஊக்குவித்தவர்களும், ஆயுதம் விற்றவர்களும், தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தவர்களும்கூட குழந்தைப்போராளிகள் உருவாவதற்கு காரணம்தான். இந்தப் புரிதலுடன் குழந்தைப்போராளி புத்தகத்தைப் படித்தால் பல்வேறு சொல்லப்படாத தகவல்களும், அவை தவிர்க்கப்பட்ட காரணங்களும் புரியலாம்.
மண்டையோட்டை கால்பந்தாக விளையாடும் சிறுவர்களின் படம் சூழலின் அவலத்தைக் கூறுகிறது.
உலகின் (ஆயுதம் தயாரித்து, விற்று) முன்னேறிய நாடுகள் எதிலும் இத்தகைய குழந்தைப் போராளிகள் இருப்பதாக தெரியவில்லை.
ஏழை நாடுகளில் மட்டுமே இவர்கள் இருப்பதாக தெரிகிறது. இந்தக் குழந்தைப் போராளிகளை உருவாக்குவதில் ஏகாதிபத்திய அரசுகளே மறைமுகமாக ஆனால் முன்னிலையில் செயல்படுகின்றன.
ஆனால் இந்தப்புத்தகமோ எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோவதாகத் தோன்றுகிறது.
கருத்துரையிடுக