புதன், செப்டம்பர் 28, 2011

தூக்குக்கயிறே என் கதை கேள்! (2) தூங்கியும் தூங்காமலும்..!

சித்ரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்ரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எல்லாம் விதம்விதமாகச் சிதைக்க முடியும் எனக் குரூரத்தோடு யோசித்து, பரிசோதனை எலியாக என்னைப் பயன்படுத்தினார்கள்.

இரவு 10 மணிக்கு ஒரு அதிகாரி என்னை அழைத்தார். ஈரக்குலை நடுங்க உயிரைக் கையில் பிடித்தபடி நின்றேன். 'அந்தக் கொலை விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் என்னிடம் சொல்’ என்று மிரட்டினார். இதேபோல் எத்தனையோ தடவை அதிகாரிகள் என்னை விசாரித்து இருக்கிறார்கள். நானும் எனக்குத் தெரிந்த தகவல்களைக் கண்ணீரோடு அவர்களிடம் சொல்வேன். புதுமுக இயக்குநரிடம் கதை கேட்கும் தயாரிப்பாளர் போல் அலட்டிக்கொள்ளாமல் கேட்பார்கள். 'இவராவது நம் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்வாரா?’ என ஏக்கத்தோடு நடந்த விஷயங்களைச் சொல்வேன். எந்த பதிலும் சொல்​லாமல், பிரம்பைக் கையில் எடுப்பார்கள்.

என்ன நடக்கப்போகிறதோ என்கிற பதற்றத்தில் என் நரம்புகள் எல்லாம் உடலுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளும். ரத்தச் சிவப்பைப் பார்த்தால்தான் பிரம்புகளுக்கு நிறைவு வரும்.

ஆனால், மௌனத்தோடு என் முகத்தை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டு இருந்த அந்த அதிகாரி மீது எனக்கு மெல்லிதாக நம்பிக்கை வந்தது. 'நிச்சயம் இவர் என்னைப் புரிந்துகொள்வார்’ என என்னை நானே தேற்றிக்கொண்டு, நடந்த விஷயங்களை சொல்லத் தொடங்கினேன். பல முறைச் சொல்லிச் சொல்லி என் வேதனைகள் எனக்கே பழகிப்போய் இருந்தன.

தலை குனிந்தபடி சொல்லிக்கொண்டு இருந்த நான் சற்று நிமிர்ந்து பார்த்தேன். அவர் டேபிளில் சாய்ந்தபடி கண்களை மூடி இருந்தார். இவ்வளவு கோரங்களைக் கேட்டபடி ஒருவர் தூங்குகிறார் என்றால், குரூரத்தின் எத்தகைய ரசனையாளராக அவர் இருந்திருப்பார்?

என் கண்ணீரும் ஒப்பாரியும் அவருக்குத் தாலாட்டுப் பாடல் மாதிரி இருந்திருக்குமோ என்னவோ... தன்னை மறந்து நாற்காலியில் சாய்ந்துகிடந்தார். 'இவரிடம் பேசி என்னாகப் போகிறது? எதுவுமே செய்ய முடியாதவனின் கடைசி வெளிப்பாடுதான் கண்ணீர். ஆனால், அதனையும் அலட்சியப்படுத்துபவர்களிடம் நாம் என்ன செய்ய முடியும்? என நினைத்தபடி, என் பேச்சை நிறுத்தினேன். ஆலங்கட்டி மழை தகரக் கூரையில் விழுந்தால் எப்படி இருக்கும்? சடசடவென அப்படி ஒரு சத்தம்... லத்தியை எடுத்து முதுகு, முகம் என விளாசத் தொடங்கிய அந்த அதிகாரி, பெரும் குரலெடுத்து அலறினார்.

'என்னையா ஏமாத்தப் பார்க்குறே... நாயே...’ எனக் காட்டுக் கத்தல் கத்தியபடி பிரம்பால் விளாசித் தள்ளினார். நாய் என்கிற வார்த்தையின் தொடர்ச்சியாக அவர் சொன்ன... இல்லை இல்லை... அவர் உமிழ்ந்த அசிங்க வார்த்தைகள் இப்போதும் என் நெஞ்சுக்குள் அமிலத் துளிகளாக அரிக்கின்றன. 'மன்னிச்சுக்கங்க சார்... நீங்க தூங்கிட்டீங்கன்னு நெனச்சு பேச்சை நிறுத்திட்டேன்’ என ஈனஸ்வரத்தில் புலம்பினேன்.

'என்னையப் பார்த்தா சினிமா போலீஸ் மாதிரி தெரியுதா? விசாரணை செய்யிறப்பவே நான் தூங்குவேனாடா நாயே...’ எனக் கொந்தளித்தார்.

மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து கொட்டத் தொடங்கினேன். வழக்கம்போல் நாற்காலி மீது சாய்ந்தார்; கண்களை மூடியபடி படுத்தார். தூங்கிவிட்டார் என நினைத்துப் பேச்சை நிறுத்தினாலும் மிருகம்போல் அடிப்பாரே என நினைத்து, அவரை அந்த அறையின் ஐந்தாவது சுவராக நினைத்து முழு விஷயங்களையும் சொல்லி முடித்தேன். நேரம் நள்ளிரவைத் தொட்டது. காயங்களால் கிழிந்து தொங்கிய உடல் சாய்வுக்காக ஏங்கியது. என்னையும் மீறி உடல் தடுமாறத் தொடங்கியது.

'டேய்... முழுசும் சொல்லிட்டியா?’ - டேபிள் மீது கிடந்த அதிகாரி தலையை உயர்த்திக் கேட்டார். ஆமாம் எனத் தலையாட்டினேன். 'சரி, நீ பேசிக்கிட்டு இருந்தப்ப நான் தூங்கிட்டேன். அதனால, மறுபடியும் ஆரம்பத்தில இருந்து சொல்லு...’ என்றார்.

'தண்ணி’ எனக் கேட்கக்கூட என் தொண்டைக்கு சக்தி இல்லை. தூக்கம் இல்லாமலும், கால் கடுக்க நின்றதாலும் தொண்டைக்குக் கடுமையான வறட்சி... 'தண்ணி கொடுங்க’ என்பதைக் கைகளைக் காட்டி சைகையாகச் சொன்னேன். ''ஏண்டா, வேசி மகனே... என்னையவே முறைக்கிறியா..?'' எனத் திட்டியபடியே கண்மூடித்தனமாக அடித்தார். அவருக்கு கை வலிக்கும் என நினைத்து இன்னும் சில காவலர்கள் அடிப்பதற்குத் தோதாக என்னைத் தூக்கிப் பிடித்துக்கொண்டார்கள்.

அடித்து, திட்டி, காறி உமிழ்ந்து, 'இன்னிக்கு இது போதும்’ எனச் சொல்லி அவர் என்னை விடுவித்தபோது மணி அதிகாலை 4. அறையில் வந்து விழுந்ததுகூட எனக்கு நினைவு இருக்காது. அதிகபட்சம் ஒரு மணி நேரம்கூட நகர்ந்திருக்காது. மறுபடியும் தலைக்குப் பக்கத்தில் லத்தியால் தரையைத் தட்டுவார்கள். தூக்கமும் அசதியும் போன இடம் தெரியாமல், மறுபடியும் உடல் பதறிப்போய் துடிக்கும். அவ்வளவுதான்... அதன் பிறகு என்னைத் தூங்க அனுமதிக்க மாட்டார்கள். நிற்க முடியாமல், மண்டியிட்டுக் கெஞ்சிக் கூத்தாடுவேன். மனதில் இரக்க நரம்புகளே இல்லாத மிருகங்களைப்போல், வார்த்தைகளால் துளைத்தெடுப்பார்கள். நக்கல் அடித்துச் சிரிப்பார்கள், நான் புனிதமாக மதிக்கும் உறவுமுறைகளைத் தவறாகச் சித்திரித்துச் சிரிப்பார்கள். அவ்வளவு அசதியிலும், அந்த வார்த்தைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு பதில், ஒரே வெடுக்கில் நாக்கைப் பிடுங்கிப்போட்டு இறந்தே போகலாம். ஆனால், உறவுகளைக் கொச்சைப்படுத்திப் பேசுவது​தான் எனக்கு வலிக்கிறது எனத் தெரிந்து, துன்புறுத்தித் துடிக்கவைக்கும் வழியைக் கண்டுபிடித்தவர்களைப்போல், அதே மாதிரியான வார்த்தைகளையும் அசிங்க வர்ணிப்புகளையும் செய்தார்கள்.

அவற்றை விளக்கமாகச் சொல்வதே என்னை இன்னொரு முறை நானே அவமானப்படுத்திக்​கொள்வதற்குச் சமம். என் மனைவி, தாயார், சகோதரிகள், மாமியார் ஆகியோரை மற்ற ஆண்களுடன் தொடர்படுத்தித் திட்டினார் அந்த அதிகாரி. என் மாமியார் அவர்களை நான் என் தாய்க்கு நிகராக மதிப்பவன். அந்தப் புனிதத்தை எல்லாம் மதிக்காமல் அடிப்படைப் பண்புகளே அற்றுப்போனவர்களாக அந்த அதிகாரி சொன்ன வார்த்தைகள் என்னை ஒரேயடியாகப் பொசுக்கிப்போட்டன. எதையுமே செய்ய முடியாத என் சொரணை அவமானத்தில் சுருண்டுபோனது.

இதேபோல் தொடர்ந்து 20 நாட்கள் விசாரித்தார்கள். என் மனைவி நளினிக்கும் இதேபோல் சித்ரவதை. எட்டு கண்காணிப்பாளர்கள் மாறி மாறி நளினியை அடியாலும், அமிலத்தைப் போன்ற வார்த்தைகளாலும் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் எமது ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்த அதிகாரி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கொடூரர். அவர் பெயரைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் மனு போட்டோம். சி.பி.ஐ., எஸ்.ஐ.டி-யில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றியதால், சித்ரவதை செய்தவர்களின் பெயர்களைக்கூட எங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை. எமக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகள் பற்றி குறுக்கு விசாரணையின்போது பதிவு செய்தேன்.

அந்த வழக்கில் என் மனைவி நளினியை அப்ரூவர் ஆக்க சி.பி.ஐ, எஸ்.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் மூலம் அதிகாரிகள் விருப்பப்படி என்னை முதன்மை எதிரியாக மாற்ற நினைத்தார்கள். இதற்காக அவர்கள் செய்த சதிதான் சகிக்க முடியாதது. அதற்கு முன்னர் இன்னொருவருக்கு நடத்தப்பட்ட சதியைச் சொல்கிறேன். நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் அந்தக் கொடூரத்தை நான் கண் முன்னால் எதிர்கொண்டவன்.

அந்தக் கொலை வழக்கில் ரங்கநாத் (ஏ-26) என்பவரைக் கைது செய்த பின்னர், அவரது மனைவி மிருதுளாவை அவரிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்தார்கள். ரங்கநாத்துக்கு எதிராக சாட்சி சொல்ல​வைத்து டிரையல் கோர்ட்டில் மரண தண்டனை வாங்கிக் கொடுத்தனர். ரங்கநாத் அவர்களின் மனைவி மிருதுளாவை ஒரு சி.ஆர்.பி.எஃப். அதிகாரிக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். 36 வயதுக்கு மேலான மிருதுளாவுக்கு அரசு விதிகளை மீறி மத்திய அரசில் வேலையும் வாங்கிக் கொடுத்தனர்.

சித்திரிப்புகளுக்காகக் கல்யாணக் கலாட்டாக்களைக்​கூட அதிகாரிகள் நடத்தினார்கள். இதேபோல் என் மனைவியை எனக்கு எதிராக மாற்ற சாம, பேத, தான, தண்ட உத்திகளை எல்லாம் கையாண்டார்கள். என் மனைவிக்கு ஒரு போலீஸ் அதிகாரியைத் திருமணம் செய்துவைக்கவும், அரசு வேலை பெற்றுத்தரவும், சொந்த வீடு வாங்க அரசு உதவி பெற்றுத் தரவும், பாதுகாப்பு கிடைக்கவும் ஆசை காட்டினார்கள். அடி உதைக்கு மசியாதவர்கள் ஆசை வார்த்தைகளில் சிக்கிக்கொள்வார்கள் என்பது அதிகாரிகளின் சிறுபிள்ளைத்தனமான எண்ணம்.

அந்த வார்த்தைத் தூண்டில்களில் நளினி சிக்க​வில்லை. அடுத்தபடியாக இன்னொரு அஸ்திரம் எடுத்தார்கள். நளினி என்னை எப்படியாவது வெறுக்க வேண்டும் என நினைத்து என்னைப் பற்றி அவதூறு பரப்ப ஆரம்பித்தார்கள். எனக்கும் நளினிக்கும் இடையேயான வயது வித்தியாசத்தை நளினியிடம் சுட்டிக் காட்டினார்கள்.

'அவன் சிலோன்காரன்... உன்னைய ஏமாத்திட்டுப் போயிடுவான். நாங்க விசாரிச்ச வரைக்கும் உன் மேல அவனுக்கு அன்பே கிடையாது. அவனுக்கு ஏற்கெனவே பல பொண்ணுங்களோட தொடர்பு இருக்கு. அதை எல்லாம் எங்க விசாரணையிலேயே அவன் ஒப்புக்கிட்டான். ஆனா, உன்கிட்ட அவன் நடிக்கிறான்!’ என விதம் விதமாகத் திரைக்கதை எழுதி, நளினியிடம் சொன்னார்கள்.

நளினி கடைசி வரைக்கும் அசைந்து கொடுக்காத​தால், அதே வித்தைகளை என்னிடமும் பரப்பத் தொடங்கினார்கள். 'அவளுக்கு ஏற்கெனவே ரெண்டு லவ்வர்ஸ் இருக்காங்க. நளினியின் பழக்கவழக்கம் தப்பானது. நீ நம்பவில்லை என்றால், நாங்கள் நிரூபித்துக் காட்டுகிறோம். நீ அவளைவிட சின்னப் பையன். அதனால்தான் உன்னைய சுளுவா ஏமாத்திட்டா..!’ என ஆபாசக் கதைகள் எழுதும் ஆசாமி​களைப் போல் சொன்னார்கள்.

இருவருமே இந்த அபவாதங்களை நம்பாத நிலையில், சின்னஞ்சிறு சிசுவாக நளியின் வயிற்றில் வளர்ந்த எங்களின் வாரிசு மீது அவர்களின் பார்வை திரும்பியது. வரம்புமீறலையே வாய்ப்பாடாக வைத்திருப்பவர்களுக்கு எங்களின் சிசுவைச் சிதைப்பது சிரமமே அல்ல. ஆனால், எங்கள் தாம்பத்தியத்தின் அடையாளம் அந்த சிசு. ரத்தச் சுவடுகளுடன் கர்ப்பப்பையில் வளரும் அபாக்கியக் குழந்தை அது. என் வாரிசுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்கிற அவஸ்தையில், எதற்கும் ஒப்புக்கொள்ளும் மனநிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

- காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர் விகடன், 02-10-2011

திங்கள், செப்டம்பர் 26, 2011

டக்ளஸ் தேவானந்தா... சுட்ட அன்று சூளைமேடு!

வம்பர் 1-ம் தேதி... தீபாவ​ளியன்று மதியம் நண்பர் ஒருவரைக் காண சூளைமேடு போயிருந்தோம். நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கும் சமயம்... திடீரென்று சற்றுத் தொலைவில் இருந்து வெடிச் சத்தம் கேட்டது! பட்டாசு சத்தம் மாதிரி தோன்றவில்லை... பின்? துப்பாக்கிச் சத்தமா? உடனே -

சத்தம் வந்த திசை நோக்கி நண்பருடன் ஓடினோம். எதிரே எக்கச்சக்க ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தலைதெறிக்க ஓடிவந்து கொண்டிருந்தனர். சிலரை நிறுத்தி விவரம் கேட்க முயன்றோம். நம்மைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள்...

பார்வையை ஓட்டினோம்... நம் வயிற்றை லேசாகக் கலக்கியது. காரணம் - நமக்கு சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரண்டு பேர் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டபடி, வெறித்தனமாகக் கூச்சலிட்டபடி ஓடிவந்து கொண்டிருந்தனர்... பளிச் என்று பயம் நம்மைச் சூழ்ந்துகொண்டது.

அதற்குள், ''ஏய்... அரசைச் சுட்டுட்​டாங்கடா...'' என்றும், அதைத் தொடர்ந்து, ''அந்தப் பசங்களை கல்லை எடுத்து எறிஞ்சு கொல்லுங்கடா...'' என்றும் குரல்கள்! ஒரு கும்பலைப் பின்தொடர்ந்து சென்றோம். அங்கே -மார்பின் வலது பக்கம் குண்டு பாய்ந்து, அதில் இருந்து ரத்தம் குபுகுபுவென வெளியேறிக்கொண்டு இருந்த நிலையில் ஒருவர் கீழே கிடந்தார்.

இடது தோளில் இருந்து சதை சற்றுப் பிய்ந்து தொங்க, 'ஓ’ வென அலறித் துடித்தபடி இன்னொருவர்...

குண்டு பாய்ந்து கீழே புரண்டு புரண்டு கதறியபடி மற்றொருவர்...

தரை எல்லாம் ரத்தம்! கும்பலின் கோபம் மிக அதிகமானது...

''அந்தக் கத்தியை குட்றா...''

''என்கிட்ட அருவாமணைதான் இருக்கு...'', ''பெட்ரோல் வாங்கியாந்து அவனுகளை வீட்டோட எரிச்சிடலாம்...'' - இப்படி ஆவேசமாக பல்வேறு கருத்துகள்(?) பரிமாறிக்​கொள்ளப்பட்டன.

நம் நண்பரிடம், ''பக்கத்துலே ஏதாச்சும் ஆட்டோ கொண்டாங்க... அப்படியே பக்கத்து ஸ்டேஷனுக்கும் தகவல் சொல்லிட்டு வாங்க...'' என்றோம். நண்பர் சென்றார். அருகில் நின்ற ஒருவரின் லுங்கியைப் பிடுங்கி, மார்பில் குண்டு பாய்ந்தவரின் காயத்தின் மேல் நாம் இறுகக் கட்டினோம். நம் கைக்குட்டையை எடுத்து, கையில் காயம் பட்ட மற்றொரு நபருக்கு 'பாண்டேஜாக்கினோம்’.

இதற்குள் நிறையக் கூட்டம் சேர்ந்தது. அதில் ஒரு சாரார். ''அவர்களை ஒரு கை பார்ப்போம்...'' என்று கூவியபடி 'அந்தக் கொலையாளிகளின்’ வீட்டை நோக்கி ஓடினர். பலரின் கைகளில் அரிவாள், அரிவாள்மணை, மண்ணெண்ணெய் டின் இத்யாதிகள்...

இதற்குள் நண்பர் ஒரு ஆட்டோவுடன் வர, அடிபட்ட மூவர் மற்றும் துணைக்கு இரண்டு பேர் ஆகியோரை வண்டியில் (திணித்து) ஏற்றி அனுப்பினோம்.

பின்னர், மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க்​கொண்டு இருந்த 'வீட்டை’ நோக்கி நாமும் ஓடினோம்.

அந்தக் 'கொலையாளி​கள்’ சுமார் 7 பேர், வீட்டின் மொட்டை மாடியில் நின்று சரமாரியாக சுட்டுக்கொண்டு இருக்க...

கும்பல், குண்டு படாதவாறு மறைந்து நின்று கற்களை, மண்ணெண்ணெய் டின்னை கிழித்து தீக்குச்சிகளை எறிய... இரண்டு போலீஸ் வேன்கள் படுவேகமாக வந்து நின்றன.

நாமும் பின்வாங்கி ஒரு கடைக்குள் சென்று கன்ட்ரோல் ரூம் மற்றும் கமிஷனர், ஐ.ஜி. இல்லங்களுக்கு போன் மூலம் தொடர்புகொண்டோம்.

திரும்பி வந்து பார்த்தபோது ஐ.ஜி-யான ஸ்ரீபால் வந்திருந்தார். போலீஸாரை கண்டதும் கும்பல், ''அவங்க எல்லாத்தையும் சுட்டுத் தள்ளுங்க...'' என்றபடி கோபத்துடன் கத்தியது.

பதிலுக்கு ஸ்ரீபால், ''முதல்லே நீங்கள்லாம் அமைதியா இந்தப் பக்கம் வாங்க... ப்ளீஸ்...'' என்றார் குரலை உயர்த்தி. கும்பல் அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நகர்ந்தது. பிறகு ஸ்ரீபால் ஒரு இன்ஸ்பெக்டரை (மோகன்சிங்) அருகே அழைத்து ஏதோ பேசியபடி அந்த வீட்டை நெருங்கினார். மாடி இளைஞர்கள் சுடுவதை நிறுத்திக்கொண்டனர்.

தொடர்ந்து மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, ''நான் ஐ.ஜி... ஸ்ரீபால்!'' என்றார். மாடியில் இருந்து, ''நாங்கள் அறிவோம்...'' என்று பதில் வந்தது!

''நான் சொல்றதைக் கேளுங்க... ஆயுதங்களைப் போட்டுட்டுக் கீழே இறங்கி வாங்க...'' என்றார் ஸ்ரீபால்.

கொலையாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்​கொண்டனர். தொடர்ந்து ஆயுதங்களுடன் கைகளை மேலே தூக்கியபடி இறங்கினர். பார்த்துக்கொண்டு இருந்த நமக்கு 'திக், திக்...’ அச்சமயம் - வெகுவேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய கமிஷனர் தேவாரம், நேராக ஸ்ரீபால் அருகே போய் நின்றார். பிறகு அவசரமாகப் போய் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தார். தொடர்ந்து, ''நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள்...'' என்று தேவாரம் சொன்னார்.

'போராளிகள்’ தலையசைத்துக் (சம்மதம்?) கொண்டனர்.

துப்பாக்கிக்காரர்கள் வேனில் ஏற்றப்பட்​டனர்.

ஐ.ஜி-யுடன் ஒட்டிக்கொண்ட நாம், அந்த வீட்டுக்குள் சென்றோம். உள்ளே ஏராளமான ரிவால்​வர்கள், பிஸ்டல்கள், கையெறி குண்டுகள் சகட்டுமேனிக்குக் கிடந்தன. சீட்டு விளையாடிக்கொண்டு இருந்ததற்கான அடையாள​மாகச் சீட்டுகள், ரூபாய் நோட்டுக்கள்...

கிடைத்த தகவல்கள்: கடந்த ஒரு வருடமாகவே இந்த வீட்டில் வசித்து வருகின்றனர் ஈழப் போராளிகளில் ஒரு பிரிவினரான ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பை (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) சேர்ந்த சிலர்.

அந்தத் தெரு இளைஞர்கள் நம்மிடம், ''தினசரி குடித்துவிட்டு தெருவில் போகும் பெண்களைக் கிண்டலடிப்பது. அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று 'பழம் குடுப்பா...’ என்று கேட்டு வாங்கி விட்டு, 'ஈழம் கிடைச்சதும் காசு தர்றோம்...’ என்று மிரட்டிவிட்டுச் செல்வதும்... வாடிக்கை நிகழ்ச்சி கள்!'' என்றனர்.

உச்சகட்டமாக துப்பாக்கியால் சுட்டது தீபாவளி​அன்று நடந்துவிட்டது.

வழக்கம்போல், ரோட்டை மறித்தவாறு நடந்து வந்துகொண்டு இருந்தார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பைச் சேர்ந்த நால்வர். எதிரே அரிஜனக் காலனியைச் சேர்ந்த ஓர் இளைஞர் வர, நால்வரில் ஒருவர் இளைஞரிடம் வம்பு செய்தார். இளைஞர், 'உங்களை உள்ளே விட்டதே தப்புடா...'' என்றிருக்கிறார். அவ்வளவுதான், இளைஞரை அடித்து துவம்சம் செய்துவிட்டனர் நால்வர். கூட்டம் ஆட்சேபித்து இருக்கிறது.

நால்வரில் ஒருவர் ஓடிப்போய் தன்(?) வீட்டுக்குள் நுழைந்து சகாக்கள் இருவருடனும் கையில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் வந்து சுட ஆரம்பிக்க...

மார்பில் குண்டு பாய்ந்து இறந்தே போய்விட்ட திருநாவுக்கரசு, கையில் குண்டு பாய்ந்து துடித்த குருமூர்த்தி, தோள்பக்கம் பாதிக்கப்பட்ட ரவி... - இந்த சூழ்நிலையில்தான் நம் பிரவேசம்!

- அபராஜித்

இந்த வழக்கின் இன்றைய நிலவரம் இதுதான்!


துப்பாக்கியால் திருநாவுக்கரசுவைச் சுட்டதாகப் பதிவான வழக்கின் முக்கியக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா, இன்று இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவர். இந்த துப்பாக்கிசூட்டுடன் ஒரு சிறுவனைக் கடத்தி பணம் பறிக்க முயற்சித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1994-ம் ஆண்டு முதல் இவர் தமிழ்நாட்டின் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டவர். அவர் அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுடன் டெல்லிக்கு வந்து நம்நாட்டு ஜனாதிபதி அளித்த விருந்தில் கலந்து கொண்டார். ''தேடப்படும் குற்றவாளியான அவரை ஏன் கைது செய்யவில்லை?'' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடுத்தார். ''இந்தியாவுக்கு அரசு சுற்றுப்பயணமாக வந்ததால் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது. அவர் மந்திரியாக இருப்பதால் தூதரக ரீதியான சட்டப்பாதுகாப்பு அவருக்கு உள்ளது. அதை மீறி அவரைக் கைது செய்ய முடியாது!'' என்று மத்திய வெளிவிவகாரத் துறையின் சார்புச் செயலாளர் சுஹல் மாதா பிரபுல்ல சந்திர சர்மா சொல்லி இருக்கிறார். வழக்கின் விசாரணை ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி : ஜூனியர் விகடன், 28-09-2011

தூக்குக்கயிறே என் கதை கேள்! முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை

ர்ப்பாட்டங்கள்... ஆவேசங்கள்... தீக்குளிப்புகள் என மொத்தத் தமிழகமும் கைக்​கொண்ட போராட்டங்களும், சட்ட ரீதியான முன்னெடுப்புகளும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய மரண தண்டனைகளுக்கு இடைக்​காலத் தடையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

மரணத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலும் அந்த மூவரும் உரக்கச் சொன்னது, ''நாங்கள் அப்​பாவிகள்!'' என்றுதான். 'தூக்குத் தண்டனைக்கு ஆளாக வேண்டிய ஆட்கள்தான் இவர்கள்’ என்பதற்கு அதிகாரிகள் காட்டும் ஒரே ஆதாரம் இவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தைதான். ''ராஜீவ் கொலையில் சம்பந்தம் இருப்பதை முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் அவர்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்டார்கள். அப்படியிருக்க, வேறு சாட்சி எதற்கு?'' என்கிறது சி.பி.ஐ. தரப்பு.

''மனதில் நினைத்ததையும், மனசாட்சி இல்லாமல் கற்பனை செய்ததையும் மொத்தமாக எழுதி, சித்ரவதை​களின் அத்தனை வடிவங்களையும் எங்கள் மீது காட்டிக் கையெழுத்துப் பெற்றதுதான் ஒப்புதல் வாக்குமூலமா?'' என்கிறார்கள் இந்த மூவரும்.

வழக்கறிஞர்கள் சிலர் மூலமாக... ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட விதம் குறித்து நாம் முருகனிடம் விசாரித்தோம். ராஜீவ் கொலை சம்பவத்துக்குப் பிறகு, விசாரணை வளையத்தில் சிக்கியது தொடங்கி, ஒப்புதல் வாக்குமூலத்துக்காக அனுபவித்த சித்ரவதைகள் வரை தன் நெடுந்துயரத்தை வாசகர்கள் முன்பு தன் தரப்பாக இறக்கி வைக்க முன்வந்தார் ஸ்ரீகரன் என்கிற முருகன். வழக்கறிஞர் வாயிலாகவே வந்திறங்கும் அவருடைய வார்த்தைகள் இங்கே உங்கள் முன்...

மரண மேகம் சற்றே விலகி நிற்கிறது. நிரந்தரமாக அது எப்போது எம்மைவிட்டு நீங்கும் என்பது தெரியவில்லை. களத்தில் நெல் காயப் போட்டவர்கள் கறுத்திருக்கும் மேகத்தை எப்படிக் கவலையோடு பார்ப்பார்களோ, அதே தவிப்பில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிறைக்குள் பரிதவித்துக் கிடக்கிறோம்.

வெளி உலகம் எப்படி இருக்​கிறது? உறவுகள் எப்படி இருக்​கிறார்கள்? போக்கு​வரத்து தொடங்கி பூகோள அமைப்புகள் வரை எப்படி மாறி இருக்கின்றன என்பது தெரியாமல் சிறைக் கம்பிகளின் அரவணைப்புக்குள் 21 வருடங்களாக அடைபட்டுக் கிடப்ப​வர்கள் நாங்கள். 'சிறு வெளிச்சக்கீற்று எம் மீது விழாதா?’ என ஒவ்வொரு நாள் விடியலையும் ஏக்கத்தோடும் இயலாமையோடும் வெறிச்சிட்டுப் பார்க்கிறோம். 'இவ்வளவு​தான் வாழ்க்கையா?’ என்கிற இயலாமை மேலிட்ட சலிப்பு அடிக்கடி மனதுக்குள் எட்டிப் பார்க்கிறது. 'செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு’ என்கிற செய்தியை அரசாங்கம் அறிவித்தபோது, 'இறுதி வரை எமது நியாயமும் தவிப்பும் எடுபடாமல் போய்விட்டதே’ என்கிற ஆதங்கமே இதயத்தில் திரையிட்டது. அப்படியே 14.06.91 என்கிற தேதிக்கு எம்மை நினைவு சுழல் இழுத்துச் செல்கிறது...

ஸ்ரீகரன் (கி3) என்கிற நானும், நளினி (கி1) என்கிற என் மனைவியும் அன்றுதான் கைது செய்யப்பட்டோம். எம்மை சி.பி.ஐ. எஸ்.ஐ.டி-யைச் சேர்ந்த ஓர் உதவி ஆய்வாளரும் இரு காவலர்களும் சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள். 'எதற்காக’ என்கிற கேள்வி எம் கண்ணில் நீராக உருண்டபோதும், அவர்கள் எவ்வித பதிலும் சொல்லாமலே ஒரு ஆட்டோவில் எங்களை ஏற்றிச் சென்றார்கள். அவர்களது விசாரணை அலுவலகமான 'மல்லிகை’யில் ஆட்டோ நின்றது.

பிடிக்கப்பட்ட - கொண்டு செல்லப்பட்ட சிறு கணப் பயணத்துக்குள் நாங்கள் அனுபவித்த துயரம் எழுத்தில் சொல்ல முடியாதது. குரூரமும் வக்கிரமுமாக நகர்ந்த அந்தப் பயணத்தை என்னால் வாழ்விலும் மறக்க முடியாது. என் மனைவி நளினி அப்போது இரண்டு மாத கர்ப்பவதி. ஆட்டோவின் பின் இருக்கையில் எங்கள் இருவரையும் நடுவில் அமரவைத்து, என் மனைவியின் பக்க ஒரமாக ஓர் உதவி ஆய்வாளரும், என் பக்கமாக ஒரு காவலரும் ஏறிக்கொண்டனர். மூன்று பேர் மட்டும் அமரக்கூடிய அந்தக் குறுகிய இடத்தில் நான்குபேர் அமர்ந்து இருந்த சூழலை உதவி ஆய்வாளர் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார் தெரியுமா? கர்ப்பிணி என்றுகூடப் பார்க்காமல், என் கண் எதிரிலேயே என் மனைவி மீது அங்கச் சேட்டைகளில் ஈடுபட்டார். புழுவாகத் தவித்த என் மனைவியின் அவஸ்தையைத் தடுக்கக்கூட இந்த இயலாமைக்காரனால் முடியவில்லை.

'எமக்கான கொடூர நரகம் தொடங்கிவிட்டது’ என்பதை அந்த நிகழ்வே எனக்குப் புரியவைத்தது.

'ஒரு வார்த்தைப் பேசினாலும் தவறு’ என்கிற சூழலில் அருகே அமர்ந்திருந்த நளினியை வேதனையோடு பார்த்தேன். கண்ணீரும் கடும் துயரமுமாக தலைகுனிந்து இருந்​தாள்.

மல்லிகை எஸ்.ஐ.டி. அலுவல​கத்தில் ஆட்டோ நின்றது. அங்கே இருந்த உயர் அதிகாரி முன்னால் எங்களைக் கொண்டுபோய் நிறுத்தி​னார்கள். ''இந்த இரு நாய்களின் முதுகுத் தோலையும் அடித்து உரியுங்கள்!'' என உத்தரவு போட்டார். அத்தகைய ஏவலுக்​காகவே காத்திருந்​தவர்கள்போல, என்னைப் பக்கத்து அறைக்கு இழுத்துச் சென்றார்கள். எதிரே என் மனைவி நளினி.

கணவன் இழுத்துச் செல்லப்​படுவது கொல்லப்​படுவதற்காக என்றுகூட அவள் நினைத்திருக்கலாம்; பதறி இருக்கலாம். பரிதவிப்போடு ஏதோ சொல்ல நினைத்தாள். கண்ணீரைக்கூட சுதந்திரமாக உதிர்க்க முடியாத அந்தக் கொட்டடியில் அவளால் என்ன பேசியிருக்க முடியும்?

தனி அறைக்கு என்னைக் கொண்டுவந்த அதிகாரிகள் முதலில் என் ஆடைகளைக் களைந்தார்கள். உலகின் பெருந்துயரம் - பிறர் முன்னால் ஆடைகள் அற்றுப்போய் அவமானம் சுமந்து நிற்பது. நிர்வாணத்துக்கு லத்திக் கம்புகளாலேயே வரிவரியாய் ஆடை வரைந்தார்கள் அதிகாரிகள். ஆவேசம் என்றால் அப்படியரு ஆவேசம்... பிரம்புகளே பிய்ந்து தொங்குகிற அளவுக்கு அடித்தார்கள். ஊரே கேட்கும் அளவுக்குக் கதறிய என் ஓலம் அந்த அதிகாரிகளின் மனதைக் கொஞ்சம்கூட அசைக்கவில்லை. மயக்கத்தின் முதல் நிலையில் மௌனம் சுமந்து கிடந்தேன். இனி அலறத் தெம்பில்லை. அலறியும் பலன் இல்லை.

உடல் எங்கும் கன்றிப் போய், உதடுகளில் ரத்தம் வழிந்த நிலையில் தூக்கி நிறுத்தினார்கள். 'செத்தேன்’ என்கிற வார்த்தையோடு என் மூச்சு இழுத்துக்கொண்டு இருந்தது.

திடீரென, ''அய்யோ...'' என்கிற அலறல். மயக்கம் தெளிந்து நிமிர்ந்தால் எதிரே கதறி அழுதபடி என் மனைவி நளினி. என் கோலத்தைக் காட்டுவதற்காக அவளைக் கொத்தாக இழுத்து வந்திருக்கிறார்கள். நான் ரத்தம் சொட்ட நின்றதும், அதிகாரிகளின் பிடியில் சிக்கியபடியே தலையில் அடித்துக்கொள்ள முடியாமல் நளினி கதறியதும் இப்போதும் மனதுக்குள் தகிப்பாகக் கொதிக்கின்றன.

''நாங்க சொல்கிறபடி எல்லாம் நடந்துக்கலைன்னா, உனக்கும் இதே கதிதான்!'' என நளினியை நோக்கிக் கத்தினார்கள். அவள், ''அவரை ஏன் இப்படி அடிச்சீங்க?'' எனக் கதற, ''உன்னோட காதலனை அடிச்சாத்​தானே உனக்கு வலிக்கும். அடி மட்டும் இல்லை... அவனைக் கொன்னே புடுவோம்...'' என மிரட்டி அவளை இழுத்துச் சென்றார்கள்.

என்னை அவர்கள் கொன்றாலும் சரி... அறுத்துப்​போட்டு தின்றாலும் சரி... கர்ப்பவதியாக இருக்கும் என் மனைவியைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும் என்கிற சிறு ஆறுதலோடு வீழ்ந்து கிடந்தேன். என்னை அடித்துக் களைத்த அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்காக விட்டிருந்த இடைவேளை அது. சில நிமிடங்கள்தான் கடந்திருக்கும். 'ஆ... அய்யோ...’ என்கிற பெரு அலறல். பக்கத்து அறையில் இருக்கும் நளினியின் குரல் அது என்கிற யூகிப்பு என்னைத் தவிக்க வைக்கிறது. சிறு சிறு உறுப்புகளாக முழு வடிவம் சுமக்கப்போகும் குழந்தைக்குத் தாயின் அமைதியான சூழலும் நிம்மதியும்தான் மிக முக்கியத் தேவை. ஆனால், அந்தப் பச்சை சிசுவின் நிலையைக்கூட நினைத்துப் பார்க்காமல், அவளை பிரம்புகளால் பின்னி எடுத்திருக்கிறார்கள். பிறகு, ஒரு நாள் அவளை எதிர்கொண்டபோது, எப்படி எல்லாம் சித்ரவதை செய்தார்கள் என்பதை அவள் சொன்னாள். என் நிலை பரவாயில்லை என்கிற அளவுக்கு அவள் சுமந்த வேதனைகள் கொடூரமானவையாக இருந்தன.

நாள்வாரியாக தினமும் நடந்த சித்ரவதைகள் பற்றி இங்கே சொல்ல ஆரம்பித்தால், சித்ரவதைகளின் கொடூரம் உங்களுக்கே பழகிப்போகலாம். மனதின் ஈரம் இற்றுப்போகிற நிலையை உங்களுக்கு ஏற்படுத்திவிடக்கூடாது என்பது என் எண்ணம்.

சித்ரவதைகள் செய்வதற்கு சிறப்பு பயிற்சிகள் பெற்றவர்கள்போல் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் என்னை அவர்கள் வதைத்த விதம் தாங்க முடியாதது. மரண பயத்தின் பீதியும், மோசமான விரக்தி மனநிலையும் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும்படி செய்தன அத்தனை சித்ரவதைகளும். உண்மையான குற்றவாளியைக்கூட இந்த அளவுக்கு வதைக்க மாட்டார்கள். ஆனால், எதையோ நோக்கி வழக்கை நகர்த்திச் செல்ல அதிகாரிகள் போட்ட திட்டம், என்னை அணு அணுவாக நரகத்தின் வயிற்றுக்குள் திணித்தது.

-காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர் விகடன், 28-09-2011

புதன், செப்டம்பர் 14, 2011

இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள் - இந்திக ஹேவாவிதாரண

சித்திரவதையென்பது, மனித வர்க்கத்தினால் தனது சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் மிகவும் கீழ்த்தரமான செயல்களிலொன்று என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. இலங்கை கூட அதனை ஏற்றுக் கொண்டு '1994ம் ஆண்டின் 22ம் இலக்கச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அச் சட்டத்தின் மூலம் குரூர, மனிதாபிமானமற்ற மற்றும் அவமரியாதையான சித்திரவதைகளுக்கு எதிராக நடந்துகொள்ள வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு நடந்துகொள்வதற்காக காவல்துறையினருக்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் சாதாரண பொதுமக்கள் எந்தவிதமான சித்திரவதைகளுமற்று வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தப்படுவதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பிறகு, சித்திரவதையைத் தடுப்பதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையினராலேயே அதிகளவில் மக்கள் சித்திரவதைகளுக்கும், குரூரமான நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு கடந்த 17 வருட காலத்துக்குள் நாட்டின் மிகப் பரந்தளவிலான மக்கள் தொகையினர் மீது காவல்துறையினரால் பல்வேறு விதமான சித்திரவதைகளும், குரூர நடவடிக்கைகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எனக் கூறி நடத்தப்படும் இச் சித்திரவதைகளினதும் குரூர நடவடிக்கைகளினதும் காரணத்தால் பொதுமக்கள் இறந்துபோன, ஊனமான நிலைக்கு ஆளாகிய மற்றும் நிகழ்ந்த அவமானத்தின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அனேகம்.

இங்கு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மிகவும் வருந்தத்தக்கதாக 2002 ஆம் ஆண்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது, ஹினிதும எனும் பிரதேசத்தில் 10, 12 வயதுகளையுடைய பாடசாலை மாணவர்கள் இருவரை, திருட்டொன்றை நடத்தியதாகக் குறிப்பிட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாகும். தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எனக் கூறி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் முழங்காலில் இருக்கப் பணித்தல், காதுகளிரண்டையும் பிடித்துக் கொண்டு உயரப் பாய்தல், கால்களைக் கம்புகளால் தாக்குதல், நகங்களுக்குள் பல்வேறு விதமான பொருட்களை உட்செலுத்துதல், அந்தரங்க உறுப்புக்களை இழுப்பறையொன்றுக்குள் தள்ளிப் பூட்டுதல் போன்ற குரூரமான சித்திரவதைகள் காவல்நிலையத்துக்குள் வைத்து இச் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளன.

அன்றிலிருந்து காவல்துறையினரால் பிரயோகிக்கப்பட்ட பல்வேறு விதமான சித்திரவதைகளும் மிக வருந்தத்தக்கதான சம்பவங்களாக மக்கள் மத்தியில் சென்றடைந்தபோதும், பாரிய அளவிலான சித்திரவதைகளும் குரூரமான நடவடிக்கைகளும் சம்பந்தமான நிலைப்பாடு இன்னும் இரகசியமான முறையிலேயே இருக்கிறது.

அண்மையில் மிகப் பெரியளவில் பிரசித்தமான சம்பவமாக அங்குலானை காவல்துறையினரால் இளைஞர்கள் இருவர் பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதன் பிற்பாடு சுட்டுக் கொல்லப்பட்டதைக் குறிப்பிடலாம். அப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் கிண்டல் செய்ததே, 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி நடைபெற்ற இச் சம்பவத்தின் பின்னணியாக அமைந்திருந்தது. கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கிணங்கி சட்டத்தைக் கையிலெடுத்த காவல்துறையினர், இளைஞர்கள் இருவரையும் பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாக்கிய பின்னர் சுட்டுக் கொன்றிருந்தனர்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்று வந்த நிபுன ராமநாயக்க எனும் மாணவனைத் தாக்கியதற்கு எதிராக இன்னும் ஒழுங்கான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் காவல்துறை அதிகாரியொருவரின் மகனுடன் ஏற்பட்ட சிறு தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் சிலரால் கடத்திச் செல்லப்பட்ட இம் மாணவன் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். பிறகு இம் மாணவன் தாக்கப்பட்டது சம்பந்தமாக மாணவனின் தாயாரினால் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இம் முறைப்பாட்டைப் பதிவு செய்த குறிப்புப் புத்தகம் கூட தற்பொழுது காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது. இது நம் நாட்டுக் காவல்துறையினர், மாணவனொருவனை மிக மோசமான முறையில் தாக்கி, பிரசித்தமான இரண்டாவது சம்பவமாகும்.

இதற்கு மேலதிகமாக கல்கிஸ்ஸ பிரதேசத்தில், இரயிலொன்றுக்கு கல்லெறிந்ததாகக் குறிப்பிட்டு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனொருவரை கடற்கரையில் வைத்துத் தாக்கி, அவரைக் கடலில் மூழ்கி இறக்கும்படி செய்ததுவும், தெமட்டகொட பிரதேசத்தில் ஹோட்டலொன்றில் கடமை புரிந்த இந்திய சமையல்காரரொருவரைக் கொல்லத் திட்டமிட்டதுவும் இந் நாட்டில் குரூர சித்திரவதைகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரே. கொட்டாவ பிரதேசத்து காவல்நிலையத்துக்குள் வைத்து இளைஞரொருவரைத் தாக்கி, கை விலங்குடனேயே இறப்பை எய்தச் செய்ததுவும், சிறையறைக்குள் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டு சடலத்தை உறவினர்களிடம் கையளித்ததுவும் கொட்டாவ காவல்துறையினராலேயே நடைபெற்றது.

தலங்கம பிரதேசத்தில் ஒருவர் திருடனொருவனைப் பிடித்துக் கைவிட்டதால், அந் நபரைத் திருடனெனக் கூறிக் கைது செய்ததில் மனமுடைந்து, காவல்துறையினரின் சித்திரவதைகளைத் தாங்க முடியாததன் காரணத்தால்தான் இறந்துபோனார்.

இவ்வாறாக பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் குரூர சித்திரவதைகளுக்கு மேலதிகமாக பாதாள உலகோடு சம்பந்தப்பட்ட நபர்கள் சிக்கும்போது எந்தவொரு சட்டத்தையும் பின்பற்றாது அவர்களைச் சுட்டுக் கொல்வதுவும் இந்நாட்டில் அமைதியைக் காப்பதற்காக இருக்கும் காவல்துறையினரே. காவல்துறை மீது வெடிகுண்டெறிய முயற்சித்தல், துப்பாக்கியால் சுட முயற்சித்தல் மற்றும் தப்பிச் செல்ல முயற்சித்தல் ஆகிய காரணங்களைக் காட்டி இவ்வாறான நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சட்டத்தைத் தமது கையிலெடுத்து செயலாற்றி வரும் காவல்துறையினருக்கு எதிராக இன்றும் கூட நீதி நிலைநாட்டப்படவில்லை. இதில் கடந்த ஆகஸ்ட் 24ம் திகதி புதன்கிழமையன்று கிரிந்திவலை காவல்நிலையத்தில் நடைபெற்றதை மிகவும் அண்மையில் இடம்பெற்ற சம்பவமாகக் குறிப்பிடலாம்.

ரதாவான பிரதேசத்தில் இடம்பெற்ற சிறிய சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு 38 வயதேயான சமிந்த சனத்குமார எனப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எந்தவொரு சுகவீனமுமற்ற நிலையிலிருந்த இந் நபர் காவல்நிலையத்துக்குள் வைத்து மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் சுகவீனமுற்ற இந் நபர் காவல்துறையினரால் ரதாவான ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிறகு இந் நபரின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் இந் நபர் சுகவீனமுற்ற காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை வீட்டினராலேயே அனுமதிக்கப்பட்டதாகச் செய்து தரும்படியும் வீட்டினரிடம் கேட்டுள்ளனர். வீட்டினரால் அவ் வேண்டுகோள் மறுக்கப்பட்டுள்ளது. உடனே காவல்துறையினர், ரதாவான வைத்தியசாலைக்குச் சென்று வீட்டினராலேயே இந் நோயாளி அனுமதிக்கப்பட்டதாகக் குறிப்பிடும்படி வைத்தியசாலை அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளனர். எனினும் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது.

பிற்பாடு, சம்பந்தப்பட்ட நபர் மிகக் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அங்கிருந்து வத்துபிடிவல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் கதைக்க முடியாத நிலையில் மிக மோசமான உடல்நிலையோடு இருக்கும் இந் நபரின் முடிவு என்னவாகும் என்பதை எம்மால் கூற இயலாது. இலங்கை காவல்துறையானது, சித்திரவதைக்கு எதிராக நடந்துகொள்வது இவ்வாறுதானா?

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி: உயிரோசை இணையம்


செவ்வாய், செப்டம்பர் 13, 2011

 அன்னா ஹசாரேவின் சமூகப் பாசிசம் - காஞ்சா அய்லைய்யா

லோக்பால் பிரச்சனை குறித்து அண்மையில் டெல்லியைச் சுற்றி நிகழ்ந்தவை மக்களின் வெற்றி என்றும் அன்னா ஹசாரேயின் அணியால் நிகழ்த்தப்பட்டவை என்றும் ஊடகங்களால் கொண்டாடப்படுகின்றன. ஆனால் இந்த நாட்டின் நிறுவனமயமாக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்க சூழல்களில் வாழ்ந்து கொண்டிக்கும் ‘வெகுமக்களில்’ பெரும்பான்மையினர், வெற்றிபெற்ற குழு கூறிக்கொண்டிருப்பது போல இன்னும் “குடிமைச் சமூகத்தின்” பகுதியாக இல்லை.

அதனால், ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்று கூறிக்கொள்ளப்படும் இயக்கம் பல பரிமாணக் கண்ணோட்டத்திலிருந்து பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, நான் அதை நவீன மனுவாத முடியரசு எதேச்சாதிகரத்தின் வெற்றி என்று காண்கிறேன். நவீன முடியரசின் எழுச்சியைக் கொண்டாட மனுவின் நவீன சீடர்கள் காந்தி குல்லாவினால் அலங்கரித்துக் கொண்டு ராமலீலா மைதானத்திற்குள் நுழைந்தார்கள்.

anna_hazare_35021 ஆம் நூற்றாண்டின் சமூக “முடியரசர்” ஊழலின் எதிரியாக மைதானத்தில் நுழைந்தார், ஆனால் அவர் அரசியல் சட்டத்தை ஒதுக்கித் தள்ளவும் (அது ஒரு தலித்தின் தலைமையில் வரைவுசெய்யப்பட்டதால் இருக்கலாம்) வர்ணாசிரம தர்மத்தின் வடிவில் நூற்றாண்டுகளாக நிலவி வந்த பாசிச சமூகக் கட்டமைப்புக்களைக் கலைக்க‌ வந்த பாராளுமன்றத்தின் அதிகாரத்தை தூக்கி எறியவும் முயற்சி செய்தார். வந்தே மாதரம் அதன் முழக்கமாகவும் தேசியக் கொடி (அதன் சொந்தக் கொடி அல்ல) அதன் தெரு அதிகாரத்தின் அடையாளமாகவும் இருந்தது.

சமூகப் பாசிசம் தனக்குத் தானே ஒரு ஒழுக்க அடிப்படையை கட்டமைத்துக் கொள்ளும் குடிமைச் சமுதாயத்தின் உண்மை நிலையாக ஆகிறது. தன்னைச் சுற்றிலும் ஒரு பலமான சாதிக்கோட்டையை எழுப்பிக்கொண்டுள்ள இந்தியாவுடையதைப் போன்ற ஒரு நடுத்தர வர்க்கம், ஒழுக்கமானது அதன் சொந்த நலன்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அது அன்றாடம் ஊழல் நடவடிக்கைகளால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றாலும், ஊழல் என்பது பொதுவாக அதன் அன்றாட பஜனையில் கண்டனத்திற்கான நாகரீகச் சொல்லாக ஆகிறது. எடுத்துக்காட்டாக, நடுத்தரவர்க்க அரசாங்க அல்லது அரசாங்கம் சாரா நிறுவன அதிகாரி ஒரு லட்சம் ரூபாய்கள் அல்லது அதற்கு மேலாக ஊதியமாகவும் மேலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை கவுரவ ஊதியமாகவும் அமர்வுக் கட்டணமாகவும் பெற்றுக் கொள்வதற்குத் தயங்குவதில்லை, ஆனால் அதே நபர் மாதம் ரூ.5000/- ஊதியம் வாங்கும் ஒரு கடைநிலை ஊழியரை கூடுதல் வேலைக்காக ரூ.200 கேட்டால் ஊழல்வாதியாக நடத்துகிறார்.

ஊழல் எதிர்ப்புப் போருக்குத் தலைமை தாங்கும் குடிமைச் சமுதாயம், கார்பரேட் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை லஞ்சமாக கொடுப்பதை ஊழலாகப் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினரோ அரசாங்க அதிகாரியோ லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டால் அது ஊழலாகப் பார்க்கப்படுகிறது. இது ஏனென்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் “அவாளின்” கரங்களில் இருக்கின்றன. அதேவேளையில் அரசியல் மற்றும் அதிகாரப் பதவிகள் “பிறவிலேயே ஊழல்வாதிகளாக உள்ள” மனிதர்களின் கரங்களுக்கு நழுவிச் செல்லுகின்றன.

எடுத்துக்காட்டாக, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை எடுத்தக் கொள்வோம். அவர்கள் ஊழல்வாதிகளாக நடத்தப்படுகிறார்கள், ஆனால் லஞ்சம் கொடுக்கும் கார்பரேட் நிறுவனங்கள் மிக மலிவான விலைகளில் மிகப்பெரிய ஒப்பந்தங்களை தட்டிக்கொண்டு போவதை ஊழலாகக் கருதுவதில்லை. அதே கார்பரேட் நிறுவனங்களும் அவர்களது ஊடகங்களும் ஊழலுக்கு எதிராகப் போராட 'காந்திக் குல்லாய் குடிமைச் சமூகத்தை' மைதானங்களில் திரட்டுகின்றன.

எந்த நீதியுமற்ற முதலாளித்துவ சந்தையில், ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களில் அதிகநேரம் இடம்பிடிப்பவர்கள், தங்களைத் தாங்களே தூய்மையானவர்களாகக் காட்ட முடியும். அதே ஊடகங்கள் அவர்கள் விரும்பும் வகையில் ஊழலை வரையறுக்க கும்பலைத் திரட்டுவதற்கும் பயன்படுகின்றன‌. ஊழலை வரையறுக்கும் வேறு எந்த முறைமையும் படிப்பறிவற்ற சொல்லலங்காரமாக நடத்தப்படுகின்றன.

வந்தே மாதரம் என்ற மந்திரம் குடிமைச் சமுதாயத்திற்கு அதிகாரமளிக்கும் என்றால், அதே மந்திரம் ஏழைகளின் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் குறிப்பாக இந்தியாவின் முஸ்லிம்களுக்கும் வாழ்க்கையைத் தரக்கூடிய ஜனநாயக நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையை இழக்கச் செய்யும் சக்தியையும் கொண்டிருக்கிறது.

இந்து நடுத்தரவர்க்கம் நின்று கொண்டிருக்கும் உயர்ந்த ஒழுக்க அடித்தளம் சமூக பாசிசதிற்கான பிறப்பிடம் ஆகும்.

ஏழைகளும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் கடந்த இருப்பது ஆண்டுகளாக காவியுடை சமூக பாசிஸ்டுகளைத் தடுத்து நிறுத்த பெரும் போராட்டங்களை நடத்தி வந்தருக்கின்றனர். இப்பொழுது அதே பாசிசசக்திகள் காந்தி குல்லாயை அணிந்து கொண்டு அதிகார மையத்தைக் கைப்பற்ற வந்திருக்கின்றன. காந்தி குல்லாயுடன் ராம்லீலா மைதானத்திற்கு வந்த அனைவரும், காந்தி உடையணிந்த முறைகளைப் பின்பற்றி, தங்கள் குழந்தைகளை உடை அணியச் செய்து பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் வீட்டுக்குத் திரும்பியதும் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டும் கோட்டும் பூட்டும் அணிவித்து மகிழ்வார்கள், அந்தக் குழந்தைகள் செயின்ட் மேரி, செயின்ட் பீட்டர் பள்ளிகளுக்கு செல்வார்கள், மகாத்மா காந்தி அல்லது அன்னா ஹசாரெ பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். ஊழல் என்பது வெறும் ஒரு பொருளாதார நடைமுறை மட்டுமல்ல, அது கலாச்சார நடைமுறையும் ஆகும். அத்தகைய ஒரு இணைப்பு இருந்தாலும், சமூகப் பாசிசம் அந்த இணைப்புக் கண்ணியை நாம் காணக் கூடாது என்று விரும்புகிறது.

சமூகப் பாசிசம் எப்போதும் மோசடித் தன்மையிலேயே வாழ்கிறது. அது சமஸ்கிருதத்தை அதன் ஆலய மொழியாகப் பயன்படுத்துகிறது. இந்தியை மைதானப் பேச்சுக்கு வைத்துக்கொள்கிறது, ஆங்கிலத்தை அதன் அலுவலக மொழியாகப் பயன்படுத்துகிறது. பாசாங்குத்தனம் அதன் உள்ளார்ந்த கலாச்சார இருத்தலாக இருக்கிறது. அது பொது வாழ்க்கையில் எளிமையாக இருப்பதாக நடிக்கிறது, ஆனல அதன் உணவு மேசையில் முத்திரைப் பெயர்களுடன் கார்பரேட் சந்தை வழங்கும் அனைத்துப் பணடங்களையும் வைத்திருக்கிறது.

இந்திய கார்பரேட் நிறுவனங்கள் ஊழல் நிறைந்தவை என்று அன்னா ஹசாரே அணி எண்ணுவதில்லை ஏனென்றல் அவை அவர்களைக் காந்தியின் புதிய அவதாரத்தில் வந்த போர்வீரர்களாக காட்டுவதற்கான தொலைகாட்சி ஒளிப்படக் கருவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. சமூகப் பாசிச சித்தாந்தம் ஊழலை ஒருவழிச் செயல்முறையாகக் காட்டுகிறது.

இந்தியச் சூழலில் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கும் பணம் சென்று சேரும் எந்த ஒரு செயல்முறையும் ஊழல் அல்லது பொருளாதார வீணடித்தலாகக் காட்டப்படுகிறது. ஆனால் அரசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் மிகப்பெரிய லாபத்தை ஈட்டும் ஏகபோக வர்த்தகர்கள் சந்தை விலையை உயர்த்தும் போது அது ஊழலாக கருதப்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக, ஊழல் எதிர்ப்பு படையணியில் சேர்ந்துகொண்டுள்ள அனைத்து பாலிவுட் நாயகர்கள், நாயகியர்களில் பெரும்பாலானவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களே. மக்களிடையே சமத்துவத்தை நிறுவுவதற்கான உள்ளாற்றல் கொண்ட அல்லது குறைந்தபட்சம் ஒடுக்கப்பட்ட வெகுமக்களின் அடிப்படை வாழ்க்கையை மாற்றுகிற நிகழ்ச்சிநிரல்கள் தேசிய உரையாடலில் இருக்கவே தேவையில்லை என்று அன்னா ஹசாரெ அணி நம்புகிறது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுநிலையை கட்டுப்படுத்தி, சூழ்ச்சித் திறம் மேற்கொண்டுவந்த பாரதமாதாவின் தோற்றத்தில் தேசம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும் பிறர் அதைக் கண்டாலே நடுங்கச் செய்கிற வகையில் அந்தத் தோற்றம் ஒவ்வொரு நிமிடமும், 24x 7, காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாசிசம் இப்பொழுது அனைத்து வசதிகளும் நிறைந்த வீடுகளில் வாழ்கிறது, ஜனநாயகம் கொட்டடிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

சமூகப் பாசிசம், சமுதாயத்தின் சாதிஅடுக்கு நிலையை இயற்கையானதாகக் கருதுகிறது. அரசால் அல்லது ஒரு குடிமைச் சமுதாய அமைப்பால் முன்வைக்கப்படும் எந்த ஒரு பொருளாதார மறுவிநியோக அமைப்புமுறையும் ஊழலாகவும் நெறிமுறைக்கு மாறானதாகவும் காட்டப்படுகிறது.

இந்த ஆதிக்கசாதி நடுத்தரவர்க்கத்தின் மூக்குக்கண்ணாடி வழியே ஊழல் காணப்படும் போது, அதற்கு ஒரு சட்டத் தீர்வு இருக்கிறதாகவும் அந்த சட்டமுறை அதன் சொந்த நிபந்தனைகளால் உருவாக்கபடுகின்றன என்றும் அவர்களுக்குத் தோன்றுகிறது. ஒடுக்குபவரின் தர்மம் எப்போதும் ஒடுக்கப்படுவோரின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது என்பதை அது புரிந்து கொள்ள விரும்புவதில்லை.

ஒரு தேசம் ஒழுக்க நம்பிக்கையின் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கிற போது சமூக பாசிசம் தோன்றுகிறது. அது குடிமைச் சமுதாயத்தின் அடுக்குகளில் தன்னை உருவாக்கிக்கொண்டு அரசியல் அதிகாரத்தின் வாயிலை ஆக்கிரமித்துக் கொள்வதை நோக்கி நகர்கிறது. இது ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிற நாடுகளில் நிகழ்ந்தது. சமூக பாசிசம் வெற்றிகரமாகத் தோன்றிய அனைத்து நாடுகளிலும் அது தனக்கான ஒரு உயர்ந்த ஒழுக்க அடித்தளத்தை வலியுறுத்தும் நடுத்தர வர்க்கத்திடமிருந்துதான் பரவியது. அந்த உயர்ந்த ஒழுக்க அடித்தளம் பொதுவாக ஊழல்மறுப்பு கோட்பாட்டைச் சுற்றிதான் நிறுவப்படுகிறது.

-காஞ்சா அய்லைய்யா

(http://www.asianage.com/columnists/anna-s-social-fascism-579)
தமிழில்: வெண்மணி அரிநரன்

நன்றி: கீற்று.காம்