புதன், நவம்பர் 18, 2009

உங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்? - ஆழியூரான்

இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால் அதிகாரத்தை நேரடியாக சுவைப்பவர்கள் ஒரு பக்கமும், அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி அதிகாரத்தை சுவைக்கத் துடிப்பவர்கள் ஒரு பக்கமுமான காலத்தில் நாம் வாழ்கிறோம். எழுத்திலும், படைப்பிலும் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தும் அறிவுஜீவிகள் பலபேர் தங்களை அதிகாரங்களுடன் பொருத்திக்கொள்வதில் கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அப்படியான வாய்ப்புகளை அவர்கள் ஒரு போதும் தவறவிடுவதில்லை அல்லது வாய்ப்புகளை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு வரும் எந்த விமர்சங்களையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை அல்லது சந்தர்ப்பவாதமாக பதில் சொல்லி கடந்து போகிறார்கள். இந்த ஒட்டுண்ணி அரசியலின் முற்றிய வடிவம்தான் பாதிரி ஜெகத் கஸ்பர்.

இவர் ஒன்றும் எழுத்தாளரோ, அறிவுஜீவியோ அல்ல. ஆனால் தமிழக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் தொடர்ந்து தன்னை ஒரு லாபி மேக்கராக நிலைநிறுத்த முயல்பவர். அதற்காக ஆளும் சக்திகளுடன் எப்போதும் நல்லுறவைப் பேணுபவர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரழிவான ஈழ யுத்தத்தையும் தன் சுய நலன்களுக்காக மடைமாற்றிவிட்ட இந்த பாதிரியின் டவுசர் இப்போது கிழிந்து தொங்குகிறது. அருகிலேயே அடுத்த கஸ்பரும் கண்ணடித்துக்கொண்டு நிற்கிறார்.

ஆளும் வர்க்க நலன்களுக்காக மக்களின் அரசியலை மழுங்கடிக்கும் தன்னார்வ குழுக்களின் வேலைத் திட்டம்தான் இவர்களின் நிகழ்ச்சி நிரல். அவற்றை இந்தியாவுக்குள் நிறைவேற்றித் தரும் முகவர்கள்தான் இந்த கஸ்பர் வகையறாக்கள். ஈழத்தில் மாபெரும் மனிதப் பேரழிவு நடந்து முடிந்ததும் அதைப்பற்றி மறக்க முடியாத வேதனையில் நக்கீரனில் தொடர் எழுதும் இந்த பாதிரி, கொடூரமான முறையில் போர் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்தார்? மக்கள் மனங்களில் எழுந்திருந்த அரச எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தும் தந்திரங்களைக் கையாண்டார். ‘யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. நாம் பகையுணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் அரை ஆதரவாளனாக இருப்பவனை முழு எதிர்ப்பாளனாக மாற்றிவிடுகிறோம்’ என்று பிரசங்கம் செய்தார். ‘தாழாது, தாழாது... தமிழினம் தாழாது’, ‘தாழ்த்தாது தாழ்த்தாது, தமிழினம் யாரையும் தாழ்த்தாது’ என்று கருணாநிதி தயாரித்துக் கொடுத்த கழிவிரக்க வசனங்களைப்போல ‘யார் மனதும் புண்படாமல் போராடுவது எப்படி?’ என்று வகுப்பு எடுத்தார். அதற்காக இந்த பாதிரி தேர்ந்தெடுத்த போராட்ட வடிவம் ‘மௌன ஊர்வலம்’. ஈழப் போரை நடத்திய இந்தியாவுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்தபோதுதான் கஸ்பர் மௌன ஊர்வலம் நடத்தினார்.

ஜனவரி தொடங்கி அடுத்து வந்த மாதங்களில் கருத்துரிமை மீது தமிழ்நாட்டில் மிக மோசமான அடக்குமுறை நிலவியது. ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு காவல்துறையால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஈழம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அரங்குகள் மறுக்கப்பட்டன. அனைவரும் மிரட்டப்பட்டிருந்தனர். துண்டு பிரசுரங்கள் அச்சடித்துத் தரக்கூடாது என்று அச்சகங்களுக்கு வாய்மொழி மிரட்டல் விடப்பட்டிருந்தது. (இந்த காரணத்தினாலேயே திண்டிவனத்துக்குச் சென்று துண்டு பிரசுரம் அச்சிட்டு வந்த தோழர்களை நான் அறிவேன்). ஆனால் ஜெகத் கஸ்பரின் மௌன ஊர்வலத்துக்கு எந்த தடையும், எந்த கட்டுப்பாடும் இல்லை. தீவுத் திடல் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டது. காரணம் மிக எளிதானது. மற்றவர்களின் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை. கஸ்பரின் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை அல்ல. அவர் எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தி அரசின் காலடியில் சமர்ப்பித்தார். இந்த இடத்தில்தான் அரசுக்கு கஸ்பர்கள் தேவைப்படுகின்றனர்.

அந்த மௌன ஊர்வலத்திலும், கஸ்பரின் இன்னபிற கூட்டங்களிலும் அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்களில் அதிகபட்சம் பேர் ஐ.டி. இளைஞர்கள்தான். மாநிலம் முழுவதும் ஒருவித கொந்தளிப்பான சூழல் நிலவிய அக்காலக் கட்டத்தில் ஐ.டி. இளைஞர்களும் குற்றவுணர்வு காரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். கேள்வியில்லாமல் திடீர் திடீரென வேலையை விட்டுத் தூக்கப்படும் தங்களின் சொந்த பிரச்னைக்காகக் கூட போராட வீதிக்கு வராத அவர்கள், ஈழத்தில் நடந்த மக்கள் படுகொலைகளைப் பொறுக்க முடியாமல் முதல் முறையாகப் போராடத் துணிந்தார்கள். ஆனால் அவர்களது அரசியல் குறைபாடு காரணமாக போராட்டத்தின் வடிவங்களும், தன்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த இளைஞர்களை வாகாக கையில் எடுத்தார் கஸ்பர். ‘துப்பாக்கிகளுக்கு இதயமில்லை - உங்களுக்கு’, ‘ஈழம் - கண்ணீர் தேசம்’ என்பது மாதிரியான அரசியலற்ற/ மய்யப்படுத்தப்பட்ட மனிதாபிமான வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அந்த இளைஞர்களுக்கு அணியத்தந்து ஒரு டி-சர்ட் புரட்சி நடத்தினார். ‘ஏதாச்சும் செய்யனும் பாஸ்’ என்று வந்த இளைஞர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. ‘நாமும் போராடிவிட்டோம்’ என்ற திருப்தி அவர்களுக்கும், ‘எப்பூடி அடக்குனோம்?’ என்ற வெற்றிக் களிப்பு கஸ்பருக்கும் கிடைத்தது. (போராட வந்த ஐ.டி. இளைஞர்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அதன் பிறகும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிலரை எனக்குத் தெரியும். ஆனால் பெரும்பகுதியானவர்கள் அத்தோடு திருப்தியடைந்து ஒதுங்கிக்கொண்டார்கள்).

இப்போது ‘ஈழம்... மௌனத்தின் வலி’ என்ற தலைப்பில் நூறு பேரின் கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் கஸ்பர். அதன் அபத்தங்களையும் அங்கு பேசிய பக்கி வாசுதேவ் போன்ற பன்னாடைகளின் பேச்சு பற்றியும் ஏற்கெனவே தோழர்கள் விரிவாக இணையத்தில் எழுதியிருக்கிறார்கள்.

நூறு கவிதைகள் என்கிறார்கள். ஆனால் அதில் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, ஜக்கி வாசுதேவ் போன்றவர்ளும் உண்டு. இவர்கள் எப்போது கவிஞர்கள் ஆனார்கள் என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் மேடையில் பேசிய பேச்சை எடுத்து வெளியிட்டு அதையும் கவிதை என்கிறார்கள். அருந்ததி ராய் ‘டைம்ஸ் ஆஃப் இன்டியா’வுக்கு எழுதிய கட்டுரையின் சில வரிகளும், பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதிய கட்டுரையின் சில வரிகளும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. அவையும் கவிதைகளாம். பலரும் பல்வேறு இடங்களில் பேசியவற்றை, எழுதியவற்றை துண்டு, துண்டாக எடுத்து வெளியிட்டுக்கொண்டு ஏதோ அவர்கள் எல்லோரும் இவர்களுக்கு ஸ்பெஷலாக எழுதிக் கொடுத்ததைப் போன்று ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். தோழர் துரை.சண்முகத்தின் கவிதை தணிக்கை செய்யப்பட்டது போன்றவை தனி மோசடி.

த.செ.ஞானவேல் என்பருக்குச் சொந்தமான ‘போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு’ம், ஜெகத் கஸ்பருக்கு சொந்தமான ‘நாம்’ அமைப்பும் இணைந்துதான் இந்த புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். கஸ்பரை உரிமையாளராகக் கொண்டு செயல்படும் நல்லேர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. முதலில் எங்கிருக்கிறது இந்த பத்திரிக்கையாளர் அமைப்பு? இதில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் யார், யார்? இலங்கையில் மிக மோசமான இன அழிப்புப் போர் நடந்துகொண்டிருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தனர்? ஒரு உண்ணாவிரதம், ஒரு ஆர்ப்பாட்டம்... எதை நடத்தினீர்கள்? அப்போதிலிருந்து தினசரி இணையங்களில் வெளிவரும் கோரமான புகைப்படங்களை சேகரித்து வைத்துக்கொண்டு இப்போது அவற்றை தொகுத்து கவிதை எழுதி பணம் பார்க்க முயல்கிறீர்கள் என குற்றம் சாட்டினால் அதற்கு உங்கள் மறுப்பு என்ன? ஆனால் அதுதான் உண்மை. ஈழத்தில் மக்கள் படுகொலைகள் நடந்தபோது மௌன ஊர்வலம் நடத்தி இந்திய, தமிழக அரசுகளின் துரோகத்தை மறைக்க முயன்றதன் மூலம் அப்போதைய ஆளும் சக்திகளுக்கு விசுவாச ஊழியம் புரிந்தார் கஸ்பர். இப்போது அவரது ‘நாம்’ அமைப்பும், ஞானவேலின் ‘போருக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றமும்’ தமிழ் மக்களின் பேரழிவையும், தோல்வியையும் அதிகார பீடங்களுடன் நெருங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கின்றனர்.

போருக்குப் பிறகான இலங்கை விவசாயத்தை மேம்படுத்துவது பற்றிய பேச்சுவார்த்தையின்போது ‘ஒவ்வொரு பேரழிவிலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னார் எம்.எஸ்.சுவாமிநாதன். தன்னார்வக் குழுக்கள் எப்போதுமே பேரழிவை வாய்ப்பாகத்தான் பயன்படுத்தும் என்பதை சுனாமி நிதி மோசடிகளில் கண்டோம். அமெரிக்க கிறிஸ்தவ நிறுவனம் சுனாமி நிவாரணத்துக்காக தென்னிந்திய திருச்சபைக்கு வழங்கிய 18 கோடி ரூபாயை அவர்கள் ஆட்டையைப் போட, இப்போது அமெரிக்க நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதைப்போலவேதான் இலங்கையில் நடந்திருக்கும் மனிதப் பேரழிவையும் இவர்கள் வாய்ப்பாக பார்க்கின்றனர். புலம்பெயர் தமிழர்களை வைத்து புராஜக்ட் போட்டுப் பணம் பார்க்கும் நோக்கம் இதற்குப் பின்னால் இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதற்கான எல்லா முகாந்திரங்களும் இருக்கின்றன. ஆம், ஒவ்வொரு பேரழிவிலும் சுவாமிநாதன்களுக்கும், கஸ்பர்களுக்கும், ஞானவேல்களுக்கும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

தமிழ் ஊடகங்களில் இந்த கஸ்பர் எப்படி அறிமுகமானார்? கனிமொழியுடன் இணைந்து ‘கருத்து’ என்ற அமைப்பை ஏற்படுத்தியபோது இவர் மீது ஊடகங்களின் கவனம் பதிந்தது. அடுத்தடுத்த வருடங்களில் உலகளாவிய மேட்டுக்குடி கலாச்சாரமான ‘மாரத்தான்’ என்பதை சென்னைக்கு அறிமுகப்படுத்தினார். பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம் பணம் பெற்று நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டியானது, முழுக்க, முழுக்க முதலாளிகளின் விளம்பர சந்தை. நிறுவனத்தின் விளம்பரத் தட்டிகளைப் பிடித்தபடி அதன் ஊழியர்கள் வரிசையாக வந்துகொண்டிருக்க, இந்த பாதிரி மேடையில் நின்று நிறுவனங்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் ஜெபம் செய்வதுபோல உச்சரிப்பார். இந்த கொழுப்பெடுத்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் கடற்கரை சாலை ஒதுக்கித் தரப்படுகிறது.

கடந்த 2008 ஆகஸ்ட் மாதம் கஸ்பர் நடத்திய மாரத்தான் போட்டியில் வேறொரு கொடுமையும் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓரம்பள்ளி என்ற பின் தங்கிய ஒரு கிராமத்தில் இருந்து படித்து முன்னேறி வந்த சந்தோஷ் என்ற மாணவர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி. படித்து வந்தார். கஸ்பர் கோஷ்டி, ‘மாரத்தானில் வெற்றி பெற்றால் லட்சம், லட்சமாகக் கொட்டும்’ என்று கிளப்பிவிட்ட ஆசையால், தான் வெற்றிபெற்றால் தனது ஏழ்மையான குடும்பத்துக்கு விடிவு கிடைக்குமே என்றெண்ணி மாங்கு, மாங்கென ஓடினார் சந்தோஷ். ஆனால் இறுதியில் அவர் மூச்சிரைத்து செத்துப்போனார்.

அதுபோலவேதான் இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியும். சபாக்களுக்குப் போய் கச்சேரி கேட்பது எப்படி முன்பு பார்ப்பனர்களுக்கு அந்தி நேரத்து நேரப்போக்காக இருந்ததோ, அதுபோல மத்திய வர்க்கத்தின் பொழுதுபோக்கு மனநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதுதான் இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி. மாநிலம் முழுவதும் இருக்கும் நலிவடைந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்களை அழைத்து வந்து சென்னையின் வீதிகளில் நாடகம் போட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்த காசில் பத்தில் ஒரு பங்குக் கூட அதில் கலந்துகொண்டவர்களுக்குத் தரவில்லை. தேர்தல் சமயத்தில் சென்னை சங்கமத்தில் கலந்துகொண்ட நாட்டுப்புற கலைஞர்களை தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார கருவியாகவும் பயன்படுத்திக்கொண்டார்கள். இதற்கெல்லாம் துணை நின்றவர்தான் இந்த கஸ்பர்.

எந்த வகை அரசியல் நிலைபாடும் அற்ற, பாசிச முதலாளித்துவ முகவரான இந்த கஸ்பர் தமிழ் தேசிய சக்திகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்த அடிப்படையிலேயே இவர் நக்கீரனில் இடம் பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த பாதிரிக்கு தமிழ் தேசியத்திலும் தெளிவில்லை, இந்திய தேசியத்திலும் தெளிவில்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் முதலாளித்துவ உளவு அரசியல் மட்டும்தான். இத்தகைய ஒரு நபருக்கு நக்கீரன் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நக்கீரன் கோபாலுக்கு கருணாநிதியைத் திட்டக்கூடாது, கஸ்பருக்கு ஆளும் வர்க்கத்தைப் பகைத்துக்கொள்ளக் கூடாது... இருவரும் சேர்ந்துகொள்ள இதுவே போதுமானது. ஈழம் என்பது இன்று விற்கக்கூடிய பண்டமாகவும், பிரபாகரன் என்பவர் விற்பனைக்கான பிராண்டாகவும் இருப்பதால் நக்கீரன் இத்தகைய அபத்தங்களை தொடர்ந்து வெளியிட்டும், ஆதரித்தும் வருகிறது. எந்தவித போர்ச்சூழலும் இல்லாத தமிழ்நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் மிகவும் பாதுகாப்பாக இருந்துகொண்டு அடுத்தக்கட்ட போர் பற்றி பேசுவதும், அந்த மக்களை போராடச் சொல்வதும் அயோக்கியத்தனமானது. பிரபாகரனின் உடலை ‘மம்மி’யாக்கி, அதை வைத்து பணம் பார்க்கும் இந்த பிழைப்புவாதத்தின் நாற்றம் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இதன்மூலம் அங்கு முகாம்களில் வாழும் மக்களின் வாழ்வு மேலும், மேலும் மோசமாக்கப்படுகிறது.

கஸ்பர் வகையறாக்களின் பட்டியலில் முன் வரிசையில் நிற்பவராகவும், அடுத்த ஜெகத் கஸ்பராவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளவராகவும் ஞானவேலைக் குறிப்பிடலாம். தனது பத்திரிக்கை அனுபவங்களின் மூலமாக நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற அதிகார மட்டங்களோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஞானவேல், ‘வாழை’ என்ற பெயரிலான‌ தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இயங்கியவர், தற்போது அகரம் பவுண்டேஷனுக்காக உழைத்து வருகிறார்.. ஞானவேல் அடுத்த கஸ்பராவதற்கு இவையே போதுமானவை. ஆனால் இந்தக் கட்டுரை உள்பட தற்போதைய விமர்சனங்கள் அனைத்தையும் ஞானவேல் பாராட்டுக் கட்டுரைகளாகவும், பிரபலமாவதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

நாட்டில் பிரபலம் அடைவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. கன்னட பிரசாத்தைக் கூடதான் பலருக்குத் தெரியும். அதற்காக அவரது வழியைப் பின்பற்றிவிட முடியுமா? ஒருவேளை ஞானவேலின் நோக்கம் அடுத்த ஜெகத் கஸ்பராவதுதான் என்றால் அதற்கு எங்காவது நடிகர்களை அழைத்துச் சென்று தையல் மிஷின் வழங்குவது, நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது போன்றவற்றை செய்யலாம். அதை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக குண்டுவீசி கொல்லப்பட்டதையும், வீரம் செறிந்த தமிழ் மக்களின் போர் துயரமான முறையில் முள்ளிவாய்க்காளில் முடிவுக்கு வந்திருப்பதையும், ஒரு இனமே அகதியாகி உலக வீதிகளில் அலைந்து திரிவதையும் சுய நலனுக்குப் பயன்படுத்துவது அசிங்கமும், அயோக்கியத்தனமுமானது!

- ஆழியூரான்


நன்றி: கீற்று

வியாழன், நவம்பர் 05, 2009

அண்ணாப் பல்கலைக் கழக முறைகேடு - தினமணி தலையங்கம்


அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மனை ஒதுக்கீடு, வீடு ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை என பலவற்றிலும் அமைச்சர் ஒதுக்கீடு அல்லது சிறப்பு ஒதுக்கீடு (Discretionary Quota) என ஒன்று இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சில சிறப்பு நேர்வுகளில் பயன்படுத்துவதற்காக அளிக்கப்பட்டுள்ள "வரம்' என்றும் இந்தச் சிறப்பு ஒதுக்கீடுகளைக் குறிப்பிடலாம்.

இந்தச் சிறப்பு ஒதுக்கீடுகள் வெளிப்படையாக இல்லாமல், மிகவும் ரகசியமாக மாறும்போது நிச்சயமாகத் தவறுகள் நடக்கும் என்பதற்கு உதாரணம்தான் அண்ணா பல்கலைக்கழகம் மீது தற்போது எழுந்துள்ள புகார்கள்.

சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் முறைகேடு இருப்பதாக, திண்டிவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரபா கல்விமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது முக்கியக் குற்றச்சாட்டு என்னவென்றால், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற காவல்துறை ஏடிஜிபி இருவரின் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதுபோல் சிறப்பு ஒதுக்கீட்டில் யாருக்கெல்லாம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும்தான். இதுதொடர்பான விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, இந்தச் சட்டம் உள்துறையைக் கட்டுப்படுத்தாது என தனக்குப் பதில் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தற்போது அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மையத்தின் இயக்குநர் தனக்கு அளித்துள்ள, சிறப்பு ஒதுக்கீடு எண்ணிக்கை விவரக் கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன்படி, 2000-ம் ஆண்டில் 21 பேர், 2001-ல் 39, 2002-ல் 53, 2003-ல் 49, 2004-ல் 40, 2005-ல் 61, 2006-ல் 105 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கவலைதரும் விஷயம் என்னவெனில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதியளித்துள்ள சிறப்பு ஒதுக்கீடு அளவு மொத்த மாணவர்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே! 2007-08-ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கை 800. இதன்படி 16 மாணவர்களை மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்த்துக்கொள்ள முடியும். ஆனால் 105 மாணவர்கள் வரை படிப்படியாக உயர்ந்திருக்கிறது.

அதிக மாணவர்களைச் சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்த்ததற்கு அமைச்சர்கள் மட்டுமே காரணமா, அல்லது பல்கலைக்கழகத் துணைவேந்தர் காரணமா, அல்லது வேறு யாராகிலும் உள்ளே புகுந்து ஊழல் செய்திருக்கிறார்களா என்பது விசாரணை நடத்தினால் மட்டுமே தெரியும்.

வெறும் எண்ணிக்கை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதற்குப் பதிலாக, சிறப்பு ஒதுக்கீட்டில் அனுமதி பெற்ற மாணவர்களின் பெயர், அவர்களது பெற்றோர் விவரம், மதிப்பெண் விவரம், யாரால் பரிந்துரைக்கப்பட்டார்கள் என்ற அனைத்துத் தகவல்களையும் வெளிப்படையாகப் பட்டியலிடுவார்களேயானால், இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்கள் யார் என்பதைக் கொண்டு முறைகேடுகளை முடிவு செய்யலாம்.

தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிப்பதால், பொதுஒதுக்கீட்டில் பாதிக்கப்படும் 19 சதவீதம் பேருக்குத் தனியாக இடம் உருவாக்கித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. அந்த 19 சதவீதத்தை ஒவ்வொரு பாடப்பிரிவிலும் எவ்வாறு பூர்த்தி செய்கிறார்கள் என்று தனியாகக் காட்ட வேண்டும். ஆனால் செய்வதே இல்லை.

பல்கலைக்கழகத்திலேயே இத்தகைய முறைகேடுகள் நடக்குமானால், தனியார் தொழிற்கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் தார்மிக பலம் இவர்களிடம் எப்படி இருக்கும்?

கட்-ஆப் மதிப்பெண்கள் 200-க்கு 198 எடுத்த மாணவர்கள்கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவது சிரமம் என்கிற நிலையில், ஆட்சியாளர்களுக்கு சிண்டிகேட் வழங்கிய 2 சதவீத அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டில் பயனடைந்திருக்கும் உயர்அதிகாரிகளின் பிள்ளைகளும், அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் நிச்சயமாக ஏழைகளாக இருக்கப்போவதில்லை. அவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் நன்கொடை இல்லாமலேயே ரத்தினக் கம்பளம் விரித்து இடம் கொடுக்க அந்தக் கல்லூரி நிறுவனர்கள் தயாராக இருப்பார்கள். அதைவிடுத்து, வெறும் கெüரவத்துக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் பெறுவதால், வாய்ப்பை இழப்பது நன்கு படித்த மாணவர்கள்தானே!

நன்றி: தினமணி, 05-11-09

பின்குறிப்பு: லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகியோர், ஊழல் வழக்கில் சிக்கிய செல்வி.ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளை, விசாரணை ஏதுமின்றி முடித்து விட்டு அதற்குப் பலனாக அண்ணா பல்கலைகழகத்தில், மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற தங்களது மகன் மற்றும் மகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செவ்வாய், அக்டோபர் 27, 2009

ஆலய அரசியலில் நுழைவு அவசியமா! (விவாதிப்போம் வாங்க)


எந்த ஓர் ஆலயத்திற்குள்ளும் தலித்துகள் நுழையக்கூடாது என்று சொல்வதைப்போன்ற காட்டுமிராண்டித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. "ஒன்றே மெய்ப்பொருளாகும் உயிர்கள் எல்லாம் அதன் வடிவம்' என்ற மெஞ்ஞானத்தை அது பொய்யாக்கிவிடும்.

மதுரையில் வைத்தியநாத ஐயர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டத்துக்கும், 70 ஆண்டுகள் கழித்து தற்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்தி வரும் ஆலய நுழைவுப் போராட்டத்துக்கும் நோக்கம் ஒன்றுதான் என்றாலும், மெல்லிய வேறுபாடு இருக்கிறது.

அப்போது இக்கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. நமக்கான சுதந்திர அரசும் அன்று இல்லை. ஆனால் இப்போது அரசு நம்முடையது. கோயில்களைப் பொறுப்பேற்க இந்து அறநிலையத் துறை உள்ளது.

தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஆலயங்கள் எந்தவொன்றிலாவது தலித்துகள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று யாரும் புகார் சொல்ல முடியாது. சொல்லப்போனால், இக்கோயில்கள் பெரும்பாலானவற்றில் தலித்துகள் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்கள் தெருவுக்குத் தெரு இருக்கின்றன. ஊருக்கு ஊர் புதிய கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தும், கூழ்வார்த்தும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இக்கோயில்களிலும் எல்லாரும் வழிபடுகிறார்கள், யாரும் யாரையும் தடுத்துவிடுவதில்லை.

இந்நிலையில், ஏதோ ஒரு தனியார் அல்லது ஒரு சமூகத்தாருக்குச் சொந்தம் என்று சொல்லப்படும் கோயிலில் தலித்துகளை அனுமதிக்கவில்லை என்பதற்காக, ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி, ஊடகங்கள் ஆதரவுடன், ஏதோ தமிழ்நாட்டில் எல்லா கோயில்களிலும் தலித்துகள் நுழைய முடியவில்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது கம்யூனிஸ்டுகள் நடத்தும் இப்போராட்டம்.

தனியாருக்குச் சொந்தமான அல்லது ஒரு சமூகத்துக்குச் சொந்தமான கோயில்களில் தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை என்றால், அத்தகைய கோயில்களை தமிழக இந்து அறநிலையத் துறை தன்பொறுப்பில் ஏற்று நடத்த வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைப்பதும் அதற்காக அரசை நிர்பந்திப்பதும் வேண்டுமானால் சரியான, நிரந்தரமான தீர்வாக இருக்க முடியும்.

வழிவழியாகத் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறிக்கொள்கிற சிலருடைய கோயில்களில் தலித்துகள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தால், அது பொது இடம் என்றில்லாத நிலையில் அரசு சட்டப்படியான முடிவுகள் எடுப்பதில் சிரமம் இருந்தாலும், ஒரு தலித் அங்கே வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் இருந்தால் அவரைக் கொண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து தமிழக அரசு முறைப்படி நடவடிக்கை எடுக்கக் கோருவதும் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

அதைவிடுத்து, ஆலய நுழைவுப் போராட்டம் என்ற பெயரில், அதிலும் கம்யூனிஸ்டுகள் ஈடுபடும்போது, இது அரசியல் நிறம் பெற்று, மாற்று சமூகத்தாரின் அரசியல் நிறங்களுடன் உரசுகிறது. இது வெறும் உள்ளூர் கோயில் பிரச்னை என்பதைவிட, இதை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வெற்றியாகப் பார்க்கும் நிலை உருவாவதால், எதிர்ப்புக் கிளம்புகிறது.

தற்போது அமைதி குலைந்திருக்கும் செட்டிபுலம், காங்கேயனூர் ஆகிய கிராமங்களில் , இந்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் அமைப்பினர் கையில் எடுத்ததாலேயே, அரசு அதிகாரிகளுடன் சமரசப் பேச்சில் உடன்பட்ட சமூகத்தவர், பிறகு எதிர்ப்புக்கொடியைத் தூக்கி நிற்கிறார்கள்.

வைத்தியநாத ஐயர் நடத்திய ஆலயநுழைவுப் போராட்டத்துக்கும் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி நடத்துவதற்கும் உள்ள வேறுபாடு- இப்போராட்டம் அரசியல் சாயம் பெற்றுவிட்டது என்பதுதான்.

உடல்முழுதும் காணப்பட்ட புண்ணுக்காக மருத்துவரிடம் போய் மருந்து வாங்கி, முற்றிலும் குணமாகிவிட்ட நேரத்தில், ஏதோ ஓர் இடத்தில் இன்னும் ஆறாமல் சிறு புண் இருக்கும் என்றால், அதையும் மருத்துவரிடம் மீண்டும் காட்டுவதற்குப் பதிலாக, ஆவேசமாகச் சொறிந்து புண்ணாக்கி, மருந்தே வேலை செய்யவில்லை என்பதைப்போல தோற்றம் காட்டுதல் தேவைதானா?

போராட்டங்கள் நடத்த தமிழகத்தில் பிரச்னைகளா இல்லை!

தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடைபெறும் அநியாயக் கல்விக் கட்டணங்களுக்காக அதிரடிப் போராட்டம் நடத்தி, தனியார் கல்லூரிகளை முற்றுகையிட்டு தடியடி வாங்கி, ரத்தம் சிந்தி, கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த அரசுக்கு நிர்பந்தம் தருவார்கள் என்றால், தமிழ்நாடு முழுதும் கம்யூனிஸ்டுகளை ஒவ்வொரு குடும்பமும் கைதொழும்.

அரசு ஊழியர் சங்கத்தில் உள்ள தங்கள் தோழர்களை, "மக்கள் உதவியாளர்'களாக அறிவித்து, மக்களுக்குச் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், ரத்துசெய்யப்பட்ட குடும்ப அட்டையை மீட்டுத்தருதல் ஆகிய பணிகளை லஞ்சமில்லாது கிடைக்கச் சமுதாய உதவி செய்தாலும் தமிழக மக்கள் எல்லாரும் கம்யூனிஸ்டுகளை கைதொழுவார்கள்.

"தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று புறப்பட்டாலும் கம்யூனிஸ்டுகளை தமிழகம் கைதொழும்.

வாழ்வாதாரத்துக்குப் போராட வேண்டிய கம்யூனிஸ்டுகள், வழிபாட்டுக்காகப் போராடுவது....

தலித் வாக்குகளுக்காக இப்போராட்டம் என்றால், அந்த வாக்குகளைத் தட்டிச் செல்ல தலித் அமைப்புகள் உள்ளன; நிச்சயம் கம்யூனிஸ்டுகளுக்கு அவை கிடைக்காது. இது மனித உரிமைப் போராட்டம் என்றால், இந்த ஆலய நுழைவுப் போராட்டம் காலாவதியான உத்தி. காலத்தோடு மட்டுமல்ல, கட்சிக்கும் பொருத்தமற்றது!

மதம் ஒரு அபின் அல்லவா!

"ஆலய' அரசியலில் நுழைவது அவசியமா?


நன்றி: தினமணி, 27-10-09

திங்கள், அக்டோபர் 26, 2009

'இலங்கை பிரச்சினையில் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?' - கனிமொழி


"போராட்டம் நடத்தியிருக்கிறோம்; கூட்டம் நடத்தியிருக்கிறோம். மனிதச் சங்கிலி நடத்தியிருக்கிறோம். முதல்வரே உண்ணாவிரதம் இருந்தார். இதற்கு மேல் இலங்கை பிரச்னையில், ஒரு மாநில அரசு, ஒரு மாநிலக் கட்சி என்ன மாதிரி நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை,' என, தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறினார்.

இலங்கை சென்றுவந்த தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் குழு உறுப்பினரான கனிமொழி, அங்குள்ள நிலவரம் பற்றியும், அடுத்தகட்ட நடவடிக்கைள் பற்றியும் அளித்த சிறப்பு பேட்டி:

செம்மொழித் தமிழ் மாநாடு உட்பட, எல்லாவற்றுக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடும் முதல்வர், இலங்கை பயணத்துக்கு மட்டும், கூட்டணியோடு சுருக்கிக்கொண்டது ஏன்?

இலங்கைத் தமிழர் பிரச்னையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் உட்பட, தொடர்ந்து முதல்வர் எடுத்த எந்த நடவடிக்கையிலும் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. மேலும், இது முதல்வருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு. அவர் நேரில் செல்ல இயலாத நிலை என்பதால், அவர் சார்பில், மத்திய அரசின் அனுமதியோடு கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் சென்றோம். இதில், அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க., இருக்கும் நிலையில், அனைவரையும் அழைத்திருந்தால், இந்த விமர்சனங்களையும் தவிர்த்திருக்கலாமே!

அரசியலில் விமர்சனம் என்பது, பல நேரங்களில் நியாயத்துக்கு அப்பாற்பட்டதாகத் தான் இருந்திருக்கிறது. தங்களையும் அழைத்திருக்க வேண்டும் எனக் கருதும் கட்சிகள், இப்படி ஒரு பேச்சு எழுந்தபோதே, தாங்களாகவே முன்வந்து இருக்கலாம் அல்லது, அவர்களாகவே போவதற்கான முயற்சி எடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல், வெறுமனே விமர்சனம் செய்துகொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களையும், இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களையும் எப்படி ஒப்பிடுவீர்கள்?

எங்கு இருந்தாலும், முகாம் என்பது முகாம் தான். இங்கு இருப்பவை, இன்னொரு நாட்டில் புகலிடம் தேடி வந்ததன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள். ஆனால், தமது சொந்த நாட்டிலேயே, எந்த மண்ணை நம்பி வாழ்ந்தார்களோ அங்கேயே அகதிகளாக முகாம்களில் அடைக்கப்படுவது, யாராலுமே நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம்.இங்கு இருப்பவர்களும், ஒரு வரையறைக்குள் தான் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. அதிலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகத் தான், முதல்வர் கருணாநிதி, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

வசதி வாய்ப்புகளின் அடிப்படையில், முகாம்களை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

முகாம்கள், மனிதர்கள் வாழும் இடம் இல்லை என்பதே என் கருத்து. ஐந்து நட்சத்திர ஓட்டலையே முகாமாக மாற்றினாலும், அது முகாம் தான். முதல்வர் சொன்னது போல, தங்கக் கூண்டாக இருந்தாலும், அடைபட்டுக் கிடப்பது வேதனை தானே!அதற்காக, முகாம்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல் மாதிரி இருப்பதாகச் சொல்லவில்லை. முகாமுக்கே இருக்கக் கூடிய பிரச்னைகள் அங்கு இருக்கின்றன. அதை மறுக்கவே முடியாது. அங்கிருக்கக்கூடிய சிலர் சொல்லலாம், "உங்கள் ஊர் முகாம்களை விட எங்கள் ஊர் முகாம் சிறப்பாகத் தான் இருக்கிறது' என்று. பிரச்னை அதில்லை. சொந்த நாட்டிலேயே அவர்கள் ஏன் அகதிகளாக இருக்க வேண்டும் என்பது தான் கேள்வி.

முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை நேரில் கண்ட பிறகும், தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று ராஜபக்ஷே அரசை எப்படி நம்புகிறீர்கள்?



தீர்வைக் கொடுக்கும் இடத்தில் அவர்கள் தானே இருக்கின்றனர்? அவர்களோடு தான் நாம் பேசியாக வேண்டும். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், அதைத் தவிர நம்மிடம் வேறு வழி இல்லை.இதை அரசியலாக்கும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இறுதி முடிவெடுக்கும் அதிகாரம், அவர்கள் கையில்தான் இருக்கிறது. அது ராஜபக்ஷேவாக இருந்தாலும் சரி; ரணில் விக்கிரமசிங்கேவாக இருந்தாலும் சரி. இலங்கை அரசாங்கத்தோடு தானே நாம் பேசியாக வேண்டும்!

வெறுமனே கோரிக்கை, வேண்டுகோள் என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, இலங்கைக்கு இந்தியா நெருக்கடி கொடுத்திருக்க வேண்டாமா?

என்ன பண்ணியிருக்க முடியும்; என்ன பண்ணியிருக்க முடியாது என்பதெல்லாம் கடந்துபோன விஷயங்கள். இதை அலச வேண்டிய காலகட்டம் இது இல்லை; இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்த பிறகு, இவற்றை எல்லாம் தோண்டி எடுத்துப் பேசி, அலசலாம்.இது அவசர நிலை. உடனடித் தேவை முதலுதவி. இந்த நேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசுவது சரியல்ல. மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், ஒரு நாடு இன்னொரு நாட்டு உரிமையில் குறுக்கிடுவது எந்த அளவு சாத்தியம் என்ற கேள்வி இருக்கிறது. இன்னொரு நாட்டுக்கு நெருக்கடி கொடுப்பது, ஒரு நிமிடத்தில் நடக்கக் கூடிய விஷயமில்லை.

ஏற்கனவே, அமைதிப்படையை அனுப்பிய அனுபவம் இந்தியாவுக்கு இருக்கிறதே...



இப்போதைய காலகட்டத்தில், அது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என நினைக்கிறேன். அது சரியான தீர்வாக முடியுமா என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இலங்கைக்கு சென்றுவந்த பிறகு, "ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்' என்கிறார் உங்கள் எம்.பி.,க்கள் குழு உறுப்பினரான திருமாவளவன்...


அது அவருடைய சொந்தக் கருத்து; நான் எதுவும் சொல்வதற்கில்லை.

"தமிழர்கள் ஒருகாலத்திலும் போலீசாக முடியாது' என ராஜபக்ஷே கூறியதாக சுதர்சன நாச்சியப்பன் சொல்லியிருக்கிறாரே...

ஒரு மாநிலம் என்ற அடிப்படையில், போலீஸ் அதிகாரத்தை தமிழர்கள் கையில் இப்போதைக்கு வழங்கத் தயாராக இல்லை என்று அவர்கள் கருதுவதாகத் தான் நானும் நினைக்கிறேன். ஆனால், அதுவும் காலம் செல்லச் செல்ல மாறும் என்பது என் நம்பிக்கை. அந்த அதிகாரத்தைக் கொடுக்கவில்லை என்றால், அதிகாரப் பகிர்வு என்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.

ஒரே கூட்டணியில் இருந்தாலும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் என மூன்று கட்சிகளுக்கும், இந்த பிரச்னையின் அடிப்படையிலேயே முரண்பாடு இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

மூன்றுமே வெவ்வேறு கட்சிகள்; வெவ்வேறு கொள்கைகளைச் சார்ந்தவர்கள்; ஒரு விஷயத்தை மூன்று விதமாக அணுகக் கூடியவர்கள். கூட்டணி என்பதால், எல்லா விஷயத்திலும் ஒரே பார்வை இருக்க வேண்டும் என்பது சாத்தியமே இல்லை. மூன்று கட்சிகளுக்குள்ளும் உடன்பாடும் இருக்கிறது; முரண்பாடும் இருக்கிறது. அதை ஏற்றுக்கொண்டு தானே, கூட்டணி என்பதே அமைகிறது.

பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்னையில் தி.மு.க.,வும் மத்திய அரசும் மிதமான போக்கைக் கைக்கொள்வதாக குற்றச்சாட்டு இருக்கிறதே...

இதற்கு மேல் ஒரு மாநில அரசு, ஒரு மாநிலக் கட்சி என்ன மாதிரி நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை. சர்வதேச பிரச்னையில் மத்திய அரசு தான் முடிவு எடுக்க முடியும்.போராட்டம் நடத்தியிருக்கிறோம்; கூட்டம் நடத்தியிருக்கிறோம். மனிதச் சங்கிலி நடத்தியிருக்கிறோம். முதல்வர் உட்பட அனைவரும் மாறி மாறி மத்திய அரசிடம் பேசியிருக்கிறோம்.முதல்வரே உண்ணாவிரதம் இருந்தார். அதன் பிறகு தானே, அப்பாவிகளைக் கொன்றழிக்கும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்தனர். இதற்கு மேல் என்ன பண்ண முடியும்? அமெரிக்கா போன்ற நாடுகளே, ஓரளவுக்கு மேல் என்ன நெருக்கடி கொடுக்க முடிந்தது?

எந்தப் பக்கம் சாய்வது என்ற தெளிவு இந்தியாவுக்கே இல்லாததால், உலக நாடுகளும் அடக்கி வாசித்தன என்ற கருத்து உள்ளதே!

தமிழர்களாக நாம் இப்போது செய்ய வேண்டிய விஷயம், இலங்கைத் தமிழர்கள் வாழ்வை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பது தான். எது சரி, எது தவறு என ஆராய வேண்டியது அவசியம். அதற்கான காலகட்டம் வரும்போது தான் அதைச் செய்ய வேண்டும். அதற்கான காலம் இது இல்லை. "இது தான் இதன் பதில்' என தெளிவாக யாராலும் சொல்ல முடியாது.

ஒட்டுமொத்தமாய், உங்கள் இலங்கைப் பயணத்தால் கண்ட பலன் என்ன?

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மீள்குடியமர்த்த வேண்டும் என்பது தான் எங்கள் முதல் கோரிக்கை. அதை ஏற்று தான், முதல்கட்டமாக 58 ஆயிரம் பேரை சொந்த ஊருக்கு அனுப்புவதாக உறுதியளித்தனர். தற்போது வரை 50 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது மிகப் பெரிய ஆறுதலான விஷயம். இதன் தொடர்ச்சியாக மற்றவர்களும் விடுவிக்கப்பட்டுவிடுவர் என்ற நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்துள்ளது.இதோடு முடிந்துபோகிற விஷயமும் இது இல்லை. ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்பது தான் நம் முக்கியமான குறிக்கோள்.

தமிழர்கள் விடுவிக்கப்படுவதற்கு காலக்கெடு எதுவும் இருக்கிறதா?

இதுவரை 50 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளனர். மீதமுள்ளோரையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

இதை எப்படி கண்காணிக்கிறீர்கள்?

அங்குள்ள தூதரகம் மூலமாகவும், செய்தியாளர்கள் மூலமாகவும் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

இலங்கைத் தமிழரின் மறுவாழ்வுப் பணிக்காக தி.மு.க., சார்பில் நிதிப் பங்களிக்கும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?

முதல்வரின் வற்புறுத்தலின் அடிப்படையில் தான் மத்திய அரசு 500 கோடி ரூபாய் அறிவித்தது. மேலும் 500 கோடி ரூபாய் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பிறகு, இது செலவிடப்படும். அதையும் தாண்டி நிதித் தேவை இருக்குமானால், மாநில அரசு சார்பிலோ, கட்சி சார்பிலோ வழங்குவதில் முதல்வருக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.இவ்வாறு கனிமொழி பதிலளித்தார்.

- நமது சிறப்பு நிருபர்
நன்றி: தினமலர், 25-10-09

சாட்சிகள் மாறும் சங்கரராமன் கொலை வழக்கு!

2004ஆம் ஆண்டு ஒரு தீபாவளித் திருநாளில் காஞ்சி மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்திய மடாதிபதிகளின் தலைமை பீடமே தன் பீடம்தான் என்று உலகுக்கே காட்டிக் கொண்டவர் அவர்! காஞ்சியிலே அவர் பொத்தானை அழுத்தினால் டெல்லியில் மணியடிக்கும் என்று சொல்வார்கள். அவ்வளவு ஆற்றலும், மறைமுக அதிகாரமும், கொண்ட மடாதிபதி கைதானார். தன் மடத்தில் பணிபுரிந்த, ஊழியத்தில் அர்ப்பணிப்புமிக்க சங்கரராமன் என்பவரை, சதி செய்து, கூலிப்படையை ஏவி கொலை செய்தார் என்பது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஜெயேந்திரர் அல்லாமல் மற்றும் பலர் கைது செய்யப்பட்டார்கள். சிலகாலம் சிறையிலே இருந்துவிட்டு, ஜாமீனில் வெளிவந்தார்.
கூலிப்படைக்குப் பணம் கொடுப்பதற்காக காஞ்சி மடத்தின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைபேசியப் பேசியது தெரியவந்தது. கொலையுண்ட சங்கரராமன் ஜெயேந்திரருக்கு எழுதிய ஒரு கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெயேந்திரர் கூலிப்படைக்குக் கொடுத்த பணத்தின் ஒரு பகுதி சில கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. காவல்துறை சாட்சிகளை விசாரித்து, கொலையில் காஞ்சிமடாதிபதி நேரடியாக ஈடுபடாவிட்டாலும், சதிச் செயலின் தலைவர் அவரே என்று கண்டறிந்து, அவர் மீதும் மற்றவர்கள் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல்செய்தது. தமிழ்நாட்டில் வழக்கு நடந்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று கூறி உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கு விசாரணைக்கு மாற்றல் பெற்றுக் கொண்டார் அவர். வழக்கு இப்போது புதுச்சேரி மாரியத்தில் நடந்து கொண்டிருக்கிறது நிலுவையில் இருக்கும் வழக்கைப் பற்றிப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் ஒருவரையறை உண்டு. அந்த எல்லையில் நின்று, சில கூறுகளைப் பார்ப்போம். செல்வாக்கு மிக்கவர்கள் குற்றம் இழைத்தவர்களாகக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்படும் போது, அவர்கள் பெரும்பாலும் தப்பித்துவிடுகிறார்கள். தவறி ஒரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும், மேல்முறையீட்டில், ஒரு சிராய்ப்பும் இல்லாமல் வெளியே வந்து விடுகிறார்கள்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? கீழ்வெண்மணியில் 44 உயிர்களை கொடூரமாகக் காவு கொண்ட கோபால கிருஷ்ணா நாயுடு கடைசியில் தப்பவில்லையா? வேலூர் இரத்தினகிரி பாலமுருக--- மேல்முறையீட்டில் வெற்றி காணவில்லையா? மத்திய அமைச்சர் அழகிரி தா.கிருட்டினன் கொலைவழக்கில் விடுதலையைப் பெறவில்லையா? சிதம்பரம் அருகே இருக்கும் பூண்டி வாண்டையார் பட்டப்பகலில் மக்கள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பார்க்கவில்லையா?

ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் எத்தனைபேர்? தண்டனையிலிருந்து தப்பியவர்கள் எத்தனை பேர்? முன்னாள முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் மேல்முறையீட்டில் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படவில்லையா? நள்ளிரவில் கைது செய்யப்பட்ட இந்நாள் முதல்வர் எந்த வழக்கிலாவது தண்டிக்கப்படாரா? யோசித்துப் பார்த்தால் பட்டியல் பத்து பக்கம் போகும்!

விதிவிலக்காக தண்டிக்கப்பட்டவர்களும் உண்டு. முன்னாள் கல்வி அமைச்சர் பொன்னுசாமிதான் வசமாக மாட்டிக் கொண்டவர். உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டில் ஏறியும் அவருக்குப் பலன் கிடைக்கவில்லை. பிரேமானந்தா வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது! என்ன ஆகுமோ! இப்படிச் சில விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்குகள் விதி அல்ல.

இப்போது செல்வாக்குமிக்க காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் வழக்கு, கொலை நடந்த ஐந்தாவது ஆண்டில் நடந்து கொண்டிருக்கிறது. சாட்சிகள் 'பல்டி' அடிப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. சாட்சிகளின் 'பல்டி' எதில் முடியும்?

குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பது ஒரு சட்டவியல் கோட்பாடு. அதனால்தான் குற்றம்புரியாத ஒரு நிரபராதி தண்டனைக்கு ஆளாகக்கூடாது என்பதில் நீதிமன்றங்கள் கவனமாக இருக்கின்றன. நிரபராதி தண்டனைக்கு உட்படக்கூடாது என்பதால்தான் வழக்கில் நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுந்தால், அந்தச் சந்தேகத்தின் பலனைச் குற்றவாளிகளுக்கு கொடுக்கிறது. இதன் பொருட்டே சாட்சிகள் கூறும் வாக்கு மூலங்கள் ஆழ்ந்து, கறாறாகப் பரிசீலிக்கப்படுகின்றன. அதனால்தான் குற்றவியல் வழக்குகளில் வழக்கை நியாயமான எல்லாச் சந்தேகங்களுக்கும் அப்பால் நிரூபிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

நல்ல எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட இந்தக் கோட்பாட்டை செல்வாக்கு உடையவர்கள் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொள்கிறார்கள்!

குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தாலும், புகாரை விசாரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது காவல்துறை ஆய்வாளர்தான்! பொறுப்பாக விசாரணையை மேற்கொள்ளாமல், அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் ஒட்டையும், சந்தும் பொந்தும் வைத்தால் அதன் வழியே குற்றவாளிகள் குதித்துப் போய்விடுவார்கள். வழக்கு வலுவாக இருந்தால் வக்கீலால் ஒன்றும் செய்ய முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டதற்கு உள்நோக்கம் உண்டா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஜெயேந்திரரைக் கைது செய்தது ஒரு ஆட்சி வழக்கு நடப்பது இன்னொரு ஆட்சியில்.

புதுச்சேரியில் நடக்கும் இந்த வழக்கு பற்றிய பத்திரிகைச் செய்திகள், காட்சிகள் 'பல்டி' அடிக்கின்றன என்று கூறுகின்றன!

பல்டி அடிப்பது என்றால் என்ன?

புகாரின் அடிப்படையில் புலன் விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை ஆய்வாளர் குற்றம் பற்றி அறிந்த சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்வார். சாட்சிகள் சொல்லும் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொள்வார். இதுகுற்றவிசாரணை முறைச் சட்டம் பிரிவு 161ன் கீழ் பதிவு செய்யப்படும். இந்த வாக்கு மூலத்தில் சாட்சிகள் கையெழுத்திட வேண்டியதில்லை. இந்தச் சாட்சிகளின் வாக்குமூலங்களும், இதர ஆவணங்களும், குற்றவாளிகளுக்கு குற்றப்பத்திரிகை கொடுக்கப்படும்போது வழங்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போ/ ஏற்கெனவே காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாட்சிகள் சாட்சியம் தர வேண்டும். அவர்கள் சாட்சியம் அப்படி அமையாவிட்டால் அவர்கள் 'பல்டி' அடிக்கிறார்கள் என்று பொருள். இப்படி 'பல்டி' அடிப்பதைச் சாட்சி மாறிவிட்டார், எதிராகப் போய்விட்டார் என்பார்கள். இத்தகைய சாட்சிகளை "பிறழ் சாட்சி" என்பார்கள். சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் இப்போது பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கை பலவீனப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

காவல்துறை ஆய்வாளரிடம் வாக்குமூலம் கொடுப்பது போலவே, குற்றவாளிகளும், குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களும், நீதித்துறை நடுவர் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளிப்பதும் உண்டு. அப்படி வாக்கு மூலம் அளிப்பவர்களும், காவல்துறையினர் அச்சுறுத்தியதால் குற்றத்தை ஒப்புக் கொண்டேன் என்று கூறி நீதிமன்றத்தில் மாறுவதும் உண்டு. சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டால் குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் அச்சாட்சிதான் அரசு தரப்பை ஆதரிக்கவில்லையே. ஆனால் அப்படிப்பட்ட பிறழ் சாட்சியை, நீதிமன்றத்தின் அனுமதியோடு அரசு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார்.

நாடே ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் சங்கரராமன் கொலை வழக்கில் பல பேர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால், கொலையுண்ட சங்கரராமனின் குடும்பத்தாரே பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டார்கள். இதன் பின்னணி என்ன என்பது காவல்துறைக்குத்தெரியும். சாட்சியங்கள் கலைக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கு உண்டு. இந்த வழக்கில் காவல்துறையும். தமிழக அரசும் அக்கறைகாட்டவில்லையோ என்ற ஐயம் இன்று வலுவாக எழுந்திருக்கிறது. ஜெயேந்திரருக்கு ஆதரவான சக்திகள் எப்படியாவது அவரை மீட்க வேண்டும் என்பதற்காகத் திரைமறைவில் தங்கள் திறமைகளைக் காட்டிக் கொண்டிருக்கக்கூடும். இதை எல்லாம் காவலதுறையும் அரசும் எதிர்பார்த்திருக்க வேண்டும்! ஒப்புக்கு வழக்கு நடத்தக்கூடாது.

குற்றவியல் வழக்குகளில் சாட்சிகள் தடம் மாறுவதும், புரள்வதும் புதிதல்ல. சில சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிடுவதாலேயே குற்றவாளிகள் விடுதலை பெற்றுவிடுவார்கள் என்று நினைப்பதும் சரியல்ல. மாறாத இதர சாட்சிகளின் வாக்குமூலங்கள், கோலையாகவும், முரண்பாடு இல்லாமலும், நம்பும்படியும் இருந்தால், அவைகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க முடியும். ஒரு சாட்சியின் சாட்சியத்தை இன்னொரு சாட்சி ஒத்துழைத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட இதர ஆவணங்கள் முதலியவையும் ஒரு குற்றவாளியைத் தண்டிக்க உதவும். வெறும் சந்தேகத்தின் பலனை வைத்து குற்றவாளி தப்பித்துவிட இயலாது. நியாயமான சந்தேகம் உதித்தால்தான் அதன் பலனைப் பெற முடியும். பல சாட்சிகள் குறுக்கு விசாரணையில் சிறிது 'உளறுவார்கள்'. அவைகள் மட்டுமே விடுதலைக்கு இட்டுச் செல்லாது.

சங்கரராமன் கொலை வழக்கில் இன்னும் விசாரிக்கப்பட வேண்டிய காட்சிகள் இருக்கிறார்கள். அப்படி ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை.

உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று செய்யாமல் காவல்துறையும், தமிழக அரசும் நேர்மையுடன் நடந்து கொண்டால், கொல்லப்பட்ட உயிருக்கு நியாம் கிடைக்கும். அது ஒரு உயிருக்கு அல்ல; ஊருக்கே கிடைத்த நியாயமாகும்.

- ச.செந்தில்நாதன்

(செம்மலர் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)



வியாழன், அக்டோபர் 22, 2009

ஈழம்: அடிவயிற்றை முறுக்கவில்லையா?

ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே! தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா?

கட்சிகளெல்லாம் கிடக்கட்டும்! எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது?

""ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு'' என்று தாய் மகளிடம் சினந்து கேட்டாளாம். ""போனவன் போயிட்டான்; நான் இருக்கேனே'' என்று மகள் புன்முறுவலோடு விடை இறுத்தாளாம்!

""கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்!

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் ஏதோ வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போல ராஜபட்சவுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறது. பஜ்ஜி மாவுக்குத் தனித்து எந்த மதிப்புமில்லை! அது வெங்காயத்தோடோ, வாழைக்காயோடோ சேரும்போதுதான் அதற்குப் பெயரும் கிடைக்கிறது; வடிவமும் கிடைக்கிறது!

இந்தப் பஜ்ஜி மாவுக்கெல்லாம் வடிவம் கொடுப்பவர் கருணாநிதி என்பது ராஜபட்சவின் எண்ணமாக இருக்கலாம்! அப்படிப்பட்ட கருணாநிதியின் உயிர்நாடியோ, சென்னைக் கோட்டையில் இருக்கிறது. சென்னைக் கோட்டையில் கருணாநிதி நீடிப்பதோ, சோனியாவின் தயவில் இருக்கிறது. சோனியாவோ சிங்களவர்களின் உற்ற நண்பர். ஆகவே, சோனியாவின் தோழமை இருக்கும்வரை இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கத் தேவையில்லை என்பது ராஜபட்சவின் எண்ணம்!
ஆனாலும் விடுதலைப் புலிகளைப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்ட திருமாவளவன், ராஜபட்ச "உன் கதையையும் முடித்திருப்பேன்' என்று சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய்த் திரும்பி வந்திருக்கலாமா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?

""ராஜபட்ச! உன் கதையை முடிப்பதற்குப் பதிலாகப் புத்திகெட்டுப்போய் இந்தியா ஈழத்தின் கதையை முடித்துவிட்ட காரணத்தால், உன்னால் இவ்வளவு எக்காளமாகப் பேச முடிகிறது. எந்த விடுதலை இயக்கத்துக்கும் பின்னடைவுகள் வருவது இயற்கை; ஆனால், ஒரு விடுதலை இயக்கம் என்றாவது ஒரு நாள் தன்னுடைய இலக்கை அடையாமல் முடிந்ததாக வரலாறு இல்லை''-என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருந்தால் திருமாவளவன் உலகத் தமிழினத்துக்கே தலைவராகி இருப்பாரே!
ராஜபட்சவின் நாட்டுக்கே போயும் ராஜபட்சவை நேருக்குநேர் நின்று உலுக்குகிற வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரே! அதுவும் ராஜபட்ச, "ஈழத்துக்கு நீ வந்திருந்தால் உன்னையும் சுட்டிருப்பேன்' என்று சொல்லி அசிங்கப்படுத்திய பிறகும், அங்கு வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இங்கே நம்முடைய மூலக்கடை முச்சந்தியில் நின்று கொண்டு, "இரத்தம் கொதிக்கிறது' என்று திருமாவளவன் முழங்குவதை, இனி யார் நம்புவார்கள்?

அப்படி நேருக்குநேர் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார் ராஜபட்ச? கொழும்புச் சிறைக் கொட்டடியில் அடைத்திருப்பாரா? அடைத்திருந்தால் திருமாவளவனை விடுவிப்பது ஆறு கோடித் தமிழர்களின் கடமையாகி இருந்திருக்குமே!
இப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தலையைக் கவிழ்ந்து கொண்டு, ராஜபட்ச அசிங்கப்படுத்தியதற்கு என்னென்னவோ அமைவுகளைத் திருமாவளவன் சொன்னாலும், யார் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்?

போன இடத்தில் அப்படியெல்லாம் பேசினால், "நன்றாக இருக்குமா?' என்று திருமாவளவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! தன்னுடைய நாட்டுக்கு வந்த விருந்தாளியிடம் அப்படிப் பேசியிருக்கலாமா என்று ராஜபட்ச கவலைப்படவில்லையே!

இகழ்பவனின் பின்னால் போய்ப் பெறப் போவதென்ன என்று நம்முடைய அப்பன் வள்ளுவன் கேட்பான்! ""என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை'' (966).

முன்பொருமுறை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உச்சத்திலிருந்தபோது மாநிலங்களின் அமைச்சர்களெல்லாம் பங்கேற்ற கூட்டத்தில், செல்வாக்குமிக்க மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய், "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை' என்று பேச, "இந்தி இருக்குமானால், இந்தியாவே இருக்காது' என்று அன்றைய தமிழக அமைச்சர் செ. மாதவன் பேசிவிட்டார் என்பதற்காக, ஊர்ஊராக நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செ. மாதவனை உட்காரவைத்து ஊர்வலம் விட்டு, ஐந்து ஆண்டு அரசியலை இதைச் சொல்லியே ஓட்டினார்களே தி.மு.க.வினர்!
அன்று மாமன்னன் அசோகன் இலங்கைக்குத் தன் மகள் சங்கமித்திரையை அனுப்பிப் பௌத்தத்தை வளர்த்ததுபோல, இன்று தன் மகள் கனிமொழியை அனுப்பிச் சிங்களவர்களோடு நேசத்தை வளர்க்கும் கருணாநிதி, ராஜபட்சவை எதிர்த்துத் திருமாவளவன் பேசுவதை ரசிக்க மாட்டார் என்றாலும், கருணாநிதி ரசிக்காததை எல்லாம் செய்யாமலிருப்பதற்குத் திருமாவளவன் என்ன தி.மு.க.வின் ஆயிரம் விளக்குப் பகுதிச் செயலாளரா?

தமிழுக்கும், தமிழனுக்கும் கேடு என்றால் சீறிவரும் சிறுத்தையாக இருந்தவரை, நாடாளுமன்றப் பதவியைக் கொடுத்து அடங்கிப் போகும் நிலைக்கு ஆளாக்கிவிட்டாரே கருணாநிதி!

முள்வேலி முகாம்களைப் பார்வையிட, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமைப் பாதுகாப்புக் கழகத்தினரையும், செய்தியாளர்களையும் அனுமதிக்காத ராஜபட்ச, காங்கிரûஸயும் தி.மு.க.வையும் மட்டும் அழைத்தாராம்! ஈழத்தைச் சுடுகாடாக்கிய ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி தங்களின் சிதைந்துபோன முகங்களைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சிதானே இது? பொத்துக்கிழிந்துபோன பெயரை இழுத்துவைத்துத் தைத்துக் கொள்ளும் முயற்சி அல்லாமல் வேறென்ன?

முள்வேலி முகாம்களில் ஈழத் தமிழர்களை ஆடுமாடுகளைப் போல் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துவதை ஓர் அமெரிக்கப் பெண்மணி சத்தம்போட்டு உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைத் தமிழ்நாட்டுக்கும் வந்து சொல்ல விரும்பியபோது, அவருக்கு "விசா' வழங்கவிடாமல் தடுத்து நிறுத்தியவர்தானே இந்தக் கருணாநிதி! அந்தப் பெண்மணியின் வருகை தன்னுடைய சாயத்தை வெளுக்கச் செய்துவிடும் என்னும் அச்சம்தானே காரணம்!

இந்தப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் "உல்லாசப் பயணத்தில்' இங்கிருந்தே இலங்கை அதிகாரிகள் உடன்வந்தார்களாம். கொழும்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாம்; ஹெலிகாப்டர்களில் பறந்தார்களாம்; ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கினார்களாம்; முப்பொழுதும் முப்பழங்களோடும் விருந்துகளாம்; வேதமே பாராட்டிய சோமபானங்களுக்கும் குறைவில்லையாம்! அரசியல் நெறியற்ற டக்ளஸ் தேவானந்தா கூட்டிவைத்த கூட்டத்தில் கலந்துரையாடினார்களாம்! இதற்குச் சிங்களவர்களோடேயே உரையாடியிருக்கலாமே ஈழத்துக்கான போர் சிங்களக்காடையர்களோடு மூன்றுமுறை நடந்தது; முப்பதாண்டுக் காலம் நடந்தது; அப்போதெல்லாம் இடையிடையே போர் நடக்கும்; சிங்களக்காடையர்கள் முண்டிப் பார்ப்பார்கள்; பின்பு பின்வாங்கி ஓடிப்போவார்கள்.
.
ஈழத்தில் வரிவசூல் நடந்தது; காவல் நிலையங்கள் இருந்தன; நீதிமன்றம் நடந்தது; பராமரிப்புப் பணிகளும், நிர்வாகப் பணிகளும் செவ்வனே நடந்தன. அந்தக் காலகட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத சுதந்திர நாடாகவே ஈழம் இயங்கியது!
.
நான்காம் ஈழப் போர் ஈழத்தைச் சுடுகாடாக்கியது. சிங்களக்காடையர்கள் ஒன்றும் ஓரிரவில் வீரர்களாய் மாறிவிடவில்லை. இந்தியப் பெருநாடு சிங்களவர்களை முன்னிறுத்தி அந்தப் போரை நடத்தி இந்தக் கொடுமையை அரங்கேற்றியது!
.
பாரதி சொன்னதுபோல எல்லாமே "பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே!'
.
நேற்றுவரை சிங்களத்துக்கு நிகராகத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை வேண்டும்; அரசு வேலைகளில் உரிய பங்கு வேண்டும்; இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழத்துக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றெல்லாம் போராடியவர்கள், இன்று முள்வேலிச் சிறைகளில் இருந்துகொண்டு குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் வேண்டும் என்று கண்ணீர்விடும் நிலைக்கு ஆளாகி விட்டார்களே! பிள்ளைக்குப் பாலில்லை; முதியோருக்கு மருந்தில்லை; கர்ப்பிணிப் பெண்கள் பிள்ளை பெற வசதியில்லை.
.
ஈழத்துக்கு முற்றாக விடுதலை கேட்டவர்கள் இன்று முள்வேலிச் சிறை முகாம்களிலிருந்து வீட்டுக்குப் போக மட்டும் விடுதலை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார்கள்; இந்த நிலைக்கு இவர்களை ஆளாக்கிய சோனியா காந்தி, கருணாநிதி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபட்சவைச் சந்தித்து,""நாட்டுக்கு விடுதலை கேட்கவில்லையே; வீட்டுக்குப் போகத்தானே விடுதலை கேட்கிறார்கள்; கொடுத்துவிட்டுப் போங்களேன்'' என்று எடுத்துச் சொல்லப் போய் இருக்கிறார்கள்! தமிழனின் தலைவிதியைப் பார்த்தீர்களா?
.
இவர்கள் போனதன் விளைவாக 50,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து மறுநாளே விடுவிக்கப்படுவார்கள் என்னும் அறிவிப்பு இலங்கையில் வெளியாகவில்லை; கோபாலபுரத்தில் வெளியாகிறது; ராஜபட்சவும் கருணாநிதியும் வேறுவேறல்லவே; யார் வெளியிட்டால் என்ன? ஆனால், வெளிவிடப்பட்டவர்கள் ஐம்பதாயிரம் பேரா? ஐயாயிரம் பேரா? அல்லது வெறும் அறிவிப்போடு முடிந்துவிட்டதா என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? யார் இதை அந்த அரக்கர் நாட்டில் சரிபார்க்க முடியும்?
.
இப்படிக் கருணாநிதி அறிவித்த மறுநாளே சிங்காரச் சென்னையில் சுவரொட்டிகள் மின்னின. ""நான்கே நாளில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கலைஞரை வணங்குகிறோம்.''
அண்ணா விடுதலை இயக்கமாகத் தோற்றுவித்த ஒரு கட்சியில் விடுதலை என்பதை எவ்வளவு கொச்சையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள அவலம்; அதையும் ரசிக்கிறார் கருணாநிதி என்பதுதான் அதைவிடப் பேரவலம்!
.
உலகத் தமிழ் மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. ஈழப் பேரழிவுகளுக்குப் பிறகு உலகத் தமிழர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதி நடத்துவதை ஏற்கவில்லை! சில மாதங்களுக்கு இந்த மாநாட்டைத் தள்ளிவைத்து அவர்களை அமைதிப்படுத்தலாம் என்னும் கருணாநிதியின் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயரை மாற்றி நடத்தப் போகிறார்கள். உலகத் தமிழர்களின் சினம் நியாயமானதுதானே!
.
உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார்; எம்ஜிஆர் நடத்தினார்; ஜெயலலிதா நடத்தினார்; ஆனால், கருணாநிதியால் நடத்தவே முடியால் போய்விட்டதே!
.
தமிழைத் தாயாக உருவகிப்பது தமிழர்களின் வழக்கம். தாய் ஒருத்தி; பிள்ளைகள் இருவர்! இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மார்பிலும் தமிழ்ப்பால் சுரந்தாள் அவள்! அவர்கள் இனத்தால், நிறத்தால், ரத்தத்தால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் அனைத்தாலும் ஒன்று; நிலத்தால் மட்டுமே வேறு, வேறு!
.
அண்மையில் அவளுடைய சிறிய பிள்ளைக்கு ஊறு நேர்ந்துவிட்டது; பொறுப்பாளா அவள்? அந்தப் பிள்ளைக்கு ஊறு விளைவித்த அரக்கன் அழிந்து, அந்தப் பிள்ளை தன்னுடைய மண்ணில் காலூன்றும் வரை உறக்கம் வருமா அவளுக்கு?
.
அந்தச் சிறிய பிள்ளையின் மண்ணைப்பிடுங்கிக் கொள்ள ஓர் அரக்கன் முயன்றான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அரக்கனுக்குத் துணைபுரிய தில்லிவாசிகள் விரும்பியதையும் புரிந்துகொள்ள முடிகிறது! ஆனால், மூத்த பிள்ளையின் மண்ணிலிருந்தே சிலர் தில்லியின் விருப்பத்தின்பேரில் அரக்கனுக்கு உதவியாக இருந்ததைத்தான் தாயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! கண்ணகி அழுததைப் போல் அரற்றி அழுகிறாள் தாய்! தன் இளைய மகனின் வம்சத்தில் எண்பதாயிரம் பேர் மண்ணைச் சிவப்பாக்கி விட்டு மாண்டுமடிந்ததை எண்ணி அழுகிறாள். இளைஞர்களெல்லாம் செத்து, இளம்பெண்களே விஞ்சி நிற்கும் கொடுமையை எண்ணி அழுகிறாள். அறத்தை "மடவோய்' என்று வாயாற வைகிறாள். நான் உயிர் பிழைத்திருப்பேனோ என்று அரற்றுகிறாள்!

மறனோடு திரியும் கோல் ""மன்மோகன்'' தவறு இழைப்ப
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ?''
(-சிலம்பு, துன்பமாலை 40).
.
இளைய பிள்ளையின் வம்சத்தை அழிக்க மூத்தபிள்ளையின் வழியினரில் சிலரே மாற்றானுக்கு உதவிவிட்டு, தன்னுடைய வெக்கை தணியத் தனக்கே விழா எடுக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் விழாவினைப் புறந்தள்ளி விட்டாள் தாய்! உலகத் தமிழ் மாநாட்டை அவள் ஏற்கவில்லை! தாயல்லளோ அவள்!
.
அது மட்டுமன்று; தமிழ் மாநாட்டில் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் காஞ்சிபுரத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார் கருணாநிதி!
.
சென்ற மத்திய ஆட்சிக் காலகட்டத்தில் சோனியாவோடு சேர்ந்துகொண்டு ஈழத்தைச் சுடுகாடாக்கியதை இது போன்ற தீர்மானங்களால் ஈடுகட்டிவிட முடியும் என்று கருதுகிறார் கருணாநிதி!
.
""ஈழத் தமிழர்களுக்கு எந்தச் சலுகைகள், உரிமைகள் அளித்தாலும் எனக்கு உடன்பாடே! ஆனால், இங்கே ஈழத் தமிழர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை. திபெத்தியர்கள், பர்மியர்கள், வங்கதேசத்தினர் என்று ஏராளமானோர் அகதிகளாய் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை மட்டும் மத்திய அரசு தனித்துப் பிரித்துப் பார்க்குமாறு கருணாநிதியால் செய்ய முடியுமா?
.
ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை என்றால் அவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்புப் போன்ற எல்லாம் உண்டா? அப்போது தானே அது முற்றான குடியுரிமையாய் இருக்க முடியும்!'' என்றெல்லாம் அடுக்கி அடுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கேட்டாரே! ஒன்றுக்காவது விடை சொன்னாரா முதலமைச்சர் கருணாநிதி?
.
கருணாநிதி தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசை ஏற்கும்படி செய்ய வேண்டும்; அல்லது அரசை விட்டு வெளியே வந்து அதற்காகப் போராட வேண்டும்! அப்படியெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு பேச்சுக்குப் போட்டு வைப்போம் என்று, தான் நம்பாததையே தீர்மானமாக்குவது முழு மோசடி இல்லையா?
.
ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசிலிருந்து என்ன உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் அனைவருக்கும் இசைவே!
.
கருணாநிதியும், சோனியாவும் அந்த இனத்துக்குச் செய்த கொடுமைகளுக்கு ஈடுகட்டவும், பாவங்களுக்குக் கழுவாய் தேடவும், எந்தச் சலுகை வேண்டுமானாலும் அளிக்கட்டும்; அளிக்க வேண்டும்! வெறும் 500 கோடி ரூபாயை அளித்துக் கைகழுவி விடும் ஏமாற்று வேலை வேண்டாம்!
.
ஆனால் அவர்கள் பிறப்பால் ஈழத் தமிழர்கள்; ஈழம் அவர்களின் தாயகம்! அங்கே அவர்களுக்கு வீடு வாசல், நிலம் கரை அனைத்தும் உண்டு. அவர்களுக்குச் சொத்துகளும் அங்கேதான்; சொந்தங்களும் அங்கேதான்!
.
ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி அரசியலில் ஆக்கம் இழந்த பிறகு.... அது நடக்காதா என்ன? முன்பு தெருவிலிருந்தவர்கள் இப்போது திருவை அடைந்திருக்கிறார்கள்; மீண்டும் திருவை இழந்து தெருவுக்குப் போக எவ்வளவு நேரமாகும்?
.
அப்போது தாங்கள் விரும்பும்வண்ணம் தங்கள் தாயகத்தை ஈழத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்!
.
தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் உண்டு. ஒன்று தமிழ்நாடு; இன்னொன்று ஈழம்!
.
போர்த் தோல்வி காரணமாகச் சோர்வுற்றிருக்கும் தமிழர்களை விரட்டிவிட்டால், இலங்கை முற்றாகச் சிங்களவர்களின் நாடாகிவிடும் என்பது ராஜபட்சவின் எண்ணம்! கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, தமிழ்நாடு என்று போனபோன இடங்களில் ஏதாவதொரு உரிமை பெற்று அவர்கள் ஆங்காங்கே இருந்துவிட வேண்டும் என்பதுதான் ராஜபட்சவின் விருப்பம்! அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிவிடும் எண்ணத்தைக் கைவிடச் செய்வதற்காகத்தான் கொடுமைகள் மிகுந்த முள்வேலிச் சிறை முகாம்களின் காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறார் ராஜபட்ச!
.
இறைமகன் ஏசுவை சிலுவையில் அறையக் காரணமான யூத மத போதகர்கள் யாரையாவது ஏசுவின் உண்மைச் சீடர்கள் பதினோரு பேரில் எவனாவது கட்டிப்பிடித்ததுண்டா?
.
யூத இனத்தையே கருவறுத்த மன நோயாளி ஹிட்லருக்கு எந்த யூதனாவது பட்டாடை போர்த்திப் பாராட்டியதுண்டா?
.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில், முன் தோன்றிய மூத்த தமிழினத்தைக் கருவறுத்த ராஜபட்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும் சிரித்து மகிழ்வதையும் சிலர் கட்டித் தழுவிக் கொள்வதையும் நிழற்படங்களில் பாருங்கள்!
.
அடிவயிற்றை முறுக்கவில்லையா?

-பழ.கருப்பையா

நன்றி: தினமணி, 19-10-09

புதன், அக்டோபர் 21, 2009

மனித உரிமை ஆணையங்கள் - பொழுது போக்கு மையங்களே! - கே. ஜி. கண்ணபிரான்

கே.ஜி. கண்ணபிரான், மனித உரிமைகளுக்காக வாதாடும் புகழ் பெற்ற வழக்குரைஞர். போலி மோதல் கொலைகளுக்கு (என்கவுன்டர் கொலை) எதிரான அமைப்பில் செயல்படுபவர். ‘ஆந்திர மாநில மக்கள் சிவில் உரிமைக் கழகத்'தின் தலைவராக 15 ஆண்டுகள் இருந்தபோது, மாநில காவல் துறையினரால் நடத்திய ‘என்கவுன்டர்' விசாரணை ஆணையங்களான தார்குண்டே குழு மற்றும் பார்கவா ஆணையத்தில் பங்கேற்றவர். தற்பொழுது சிவில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய 40 ஆண்டுக் கால பொது வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது, என் பொது வாழ்வின் பெரும் பகுதியை எண்ணற்ற மக்களின் விடுதலையை, நான் போராடி காத்து வந்துள்ளதாக உணர்கிறேன் என்று சுருக்கமாகக் கூறுகிறார்.

அண்மையில் ‘பிரண்ட்லைன்' (9.10.09) இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘போலி மோதல் கொலை'க்கு காரணமான காவல் துறை அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அந்தப் பேட்டியிலிருந்து...

போலி மோதல் கொலைகளுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வரும் நீங்கள், பிப்ரவரி 2009 இல் வெளிவந்த ஆந்திரப் பிரதேச தீர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஒவ்வொரு ‘என்கவுன்டரை' நிகழ்த்திய பிறகும் அதில் ஈடுபட்ட போலிஸ் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, முதல் தகவல் அறிக்கை காவல் துறையினரால் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கிறதே?

இது, இவ்வாறான முதல் தீர்ப்பு அல்ல. 1997 இல் மதுசூதன்ராஜ் (யாதவ்) வழக்கில் இதே போன்றதொரு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வந்த நீதிமன்றங்கள் இதற்கு முரண்பட்ட தீர்ப்புகளையே அளித்து வந்ததால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போதும் கூட, உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது. மே மாதம் நிகழ்ந்த சம்பவத்தில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு உறுப்பினர் பட்டேல் சுதாகர் (ரெட்டி) கொல்லப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தடை நீக்கப்படாதவரை, எந்த ஆணையையும் வெளியிட முடியாது.

'என்கவுன்டர்' விசாரணையில், தற்பொழுதுள்ள நடைமுறைகள் போதுமானவையாக இருக்கின்றனவா?

நிர்வாகத் துறை நடுவர் (Executive Magistrate) விசாரணைகள் கட்டுப்படுத்த முடியாதவையாக இருப்பதால், ‘செஷன்ஸ்' விசாரணைக்கு மாற்றாக நீதித் துறை நடுவர் விசாரணை இருக்க முடியாது. ஒரு ‘என்கவுன்டர்' நடந்து முடிந்த பிறகு, பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவரின் (அதாவது கொல்லப்பட்டவரின்) குற்றப்பட்டியல் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. கொலைக்குக் காரணமான காவல் துறையினரின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவதில்லை. இந்திய குற்றவியல் சட்டம் 157இன்படி, என்கவுன்டருக்குப் பொறுப்பேற்ற காவல் அதிகாரிக்கு – விசாரணை செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை உண்டு. ஆனாலும், அவர் அதற்கான காரணங்களை நீதிபதிக்கு அறிக்கையாகத் தர வேண்டும்.

விசாரணை தேவையில்லை என்று போலிஸ் முடிவு செய்தாலும், விசாரணைக்கு உத்தரவிட இந்திய குற்றவியல் சட்டம் 159இன் கீழ் நீதிபதிக்கு உரிமை உண்டு. விசாரணைக்கான நடைமுறைகளை வகுப்பதில் சட்டம் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறது. ஒரு என்கவுன்டர் முடிந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விடுவதால், விசாரணை இல்லாமல் வழக்கு முடிக்கப்பட்டு விடுகிறது. எனவே, காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்தால் அதை விசாரித்து தொடர்ந்து வழக்கு நடத்த முடியும்.

ஒவ்வொரு என்கவுன்டருக்குப் பிறகும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் சட்ட திட்டங்களில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளதே. அது போதாதா?

தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள் பல் பிடுங்கப்பட்ட அமைப்புகள். அவை சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்றவர்களால் நடத்தப்படும் சட்டப்பூர்வ பொழுதுபோக்கு மய்யங்கள். அதன் வழிகாட்டல்கள் சட்ட நூல்களிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சட்ட செயல்பாட்டு முறைகள் தவிர, வேறு எதுவும் மனிதனின் வாழும் உரிமையைத் தடுக்க முடியாது. கீழ் நீதிமன்றங்கள் அளிக்கும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்பதிலிருந்தே அரசமைப்பின் 21ஆவது பிரிவுக்கு சட்டப்பூர்வமான முக்கியத்துவம் இருப்பது தெரிய வருகிறது. ஆனால் என்கவுன்டரில் என்ன வகையான நடைமுறை பின்பற்றப்படுகிறது? அல்லது அது நடந்து முடிந்த பிறகுதான் என்ன மாதிரியான ஒழுங்கு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன?

சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளும், ராணுவ அமைப்புகளும் சிறப்பு சூழ்நிலைகளில் பணியாற்றுவதால், அதிகப்படியான அதிகாரங்களைக் கொண்டுள்ளதாக பலரின் வாதம் இருக்கிறதே?

தன் கையில் அதிகாரம் இருப்பதாலேயே விளைவுகளிலிருந்து தப்பித்து விடலாம் எனும் மனப்பான்மை அவர்களிடம் இருக்கிறது. சட்டப்படி மனித உயிரைப் பறிக்கும் உரிமை, இந்தியாவில் அரசு அளிக்கும் மரண தண்டனையில் மட்டுமே உள்ளது.

நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், சட்டப்படி மனிதக் கொலை என்ற பிரிவில் வராது. ‘ஆயுதப் படை (சிறப்பு அதிகார) சட்டம்' மற்றும் ‘பாதிக்கப்பட்ட பகுதி'யாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள சட்டங்கள் – பொது அமைதியை நிலைநாட்ட துப்பாக்கிச் சூடு நடத்தவோ, அதிகபட்சமாக மரணம் விளைவிக்கக்கூடிய தாக்குதல் நடத்தவோ உரிமை கொண்டவை. சட்டத்தின் இந்தப் பகுதி அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தாலும், சட்டப்பிரிவு 21இன் படி அது தவறு. இதேபோல, என்கவுன்டர் வழக்குகளில் ‘தற்காப்புக்காக' என்பது வாதத்திற்காகப் பலமுறை பயன்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றங்களால் முடிவு செய்யப்பட வேண்டியவை.

ஒரு போலிஸ் அதிகாரி தற்காப்புக்காகத்தான் செயல்பட்டார் என்று எப்படி அறிந்து கொள்வது? குறிப்பாக சாட்சிகள் இல்லாமல் நடக்கும் ‘என்கவுன்டர்' போன்ற நிகழ்வுகளில்...

ஆந்திர அரசு – எதிர் – ராயவரப்பு புன்னையா 1976 வழக்கில் நீதியரசர் (ரஞ்சித் சிங்) சர்க்காரியா கூறியபடி, எல்லா கொலைகளும் குற்றத்திற்குரிய மனிதக் கொலைகளே. ஒரு காவலர் தேவையையொட்டி அதிகப்படியான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறினால், அது கொலைக் குற்றம் சாட்டப்படக்கூடியது. ஆனால் கொலை அல்ல. ஆனால் காவலர் எந்த வன்மமும் இன்றி செயல்பட்டிருந்தால் மட்டுமே அது செல்லுபடியாகும். தன் உயிருக்கு ஆபத்து இருந்ததால் தேவையான சக்தியை பயன்படுத்த நேர்ந்ததாக அவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். நீதிமன்றத்தில் அவருடைய எண்ணத்தை கேள்விக்குட்படுத்தாமல், செயல்பட்ட விதத்தை அறிவுப்பூர்வமான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இங்கே விவாதத்திற்குரியது தற்காப்பிற்காக செயல்பட்டேன் என்பது – திட்டமிட்ட கொலையா, வன்மமற்ற கொலையா என்று விசாரிப்பதுதான்.

விசாரணை மட்டுமே ஒரு மரணம் கொலையா, வன்மமற்ற கொலையா, கொலைக் குற்றமா என முடிவு செய்யும் என்பதால் மட்டுமே குற்றம் சாட்டாமல் இருக்க முடியாது. இது, குற்றம் சாட்டப்பட்டவர் அச்சுறுத்தலுக்கு எப்படியான எதிர்வினையாற்றினார் என்பதைப் பொறுத்தே அமையும்.

உச்ச நீதிமன்றத்தில் வெளியிடப்படவிருக்கும் தீர்ப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

40 ஆண்டுகளாக நான் இதற்காகப் போராடி வருகிறேன். ஆந்திராவில் என்கவுன்டர் நடைபெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் சென்று விசாரணை நடத்தியிருக்கிறேன்; பத்திரிகையாளர் சந்திப்புகளையும் நடத்தியிருக்கிறேன். பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் முதல் தகவல் அறிக்கையாவது பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் சாதாரண மனிதர்களைப் போலவே காவல் துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்த முடியும் என்று மக்கள் அறிந்து கொள்ளச் செய்ய முடியும்.

ஒவ்வொரு குற்ற விசாரணையும் சமூகத்திற்குப் படிப்பினை. நான் ஒரு நியாயமான விசாரணைக்காகத்தான் போராடுகிறேன்.

தமிழில் : மாணிக்கம்

நன்றி: கீற்று இணையதளம்