அடுத்த வாரம் பிறக்க இருக்கும் ஒரு பெண் குழந்தை பற்றிய செய்தி படித்தேன்.தினம் தினம் குழந்தைகள் பிறந்துகொண்டும் இறந்துகொண்டும்தான் இருக்கின்றன. அடுத்த வாரம் பிறக்க இருக்கும் குழந்தையும் அதில் ஒன்றுதான். யாரும் அதை ஏசுவின் மறுவருகை என்றோ,கல்கி அவதாரம் என்றோ சொல்லி நம்மை மிரட்ட ஆரம்பிக்கவில்லை.
ஆனால், ஜூலை 3-ம்தேதி அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் பிறக்க இருக்கும் அந்தப் பெண் குழந்தை நம்முடைய பல சம்பிரதாயமான நம்பிக்கைகளைத் தகர்க்கும் குழந்தையாக ஏற்கெனவே ஆகிவிட்டது. காரணம், அதைப் பெற்றெடுக்க இருப்பவர் - இப்போது தன் வயிற்றில் சுமந்துகொண்டிருப்பவர் அதன் `அப்பா' !
`கர்ப்பிணி'யாக இருக்கும் தாமஸ் பீட்டி, சட்டப்படி ஓர் ஆண். அவர் மனைவி நான்சி ஒரு பெண்.இருவரும் திருமணம் செய்து பத்தாண்டுகளாகின்றன.
தாமஸ் பீட்டியும் பிறக்கும்போது உடலால் ஒரு பெண்ணாகத்தான் பிறந்தார். அப்போது அவர் பெயர் ட்ரேசி. ஆனால், தன்னை ஓர் ஆணாக உணர்ந்தார். ஆணாகவே வாழ விரும்பினார். இப்படிப்பட்டவர்களைத் தமிழில் மூன்றாம் பாலினர் என்று சொல்வதைத் தவிர, வேறு எந்தச் சொல்லும் எனக்குப் பொருத்தமான சொல்லாகப் படவில்லை. ஆண் பால், பெண் பால், (இரண்டுக்கும்) அப்பால் என்று கொஞ்சம் கவித்துவமாகச் சொல்லலாம்.
ட்ரேசி தன் உடலின் மேல்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் பெண் தோற்றத்திலிருந்து ஆணாக மாற்றிக் கொண்டார். மார்பகங்கள் வளராமல் இருக்க மருந்துகள் உட்கொண்டார். ஆணைப் போல முகத்தில் மீசையும் தாடியும் வளருவதற்கு, ஆண் சுரப்பான டெஸ்டெஸ்ட்ரோன் மருந்துகள் சாப்பிட்டார்.
இவற்றின் விளைவாக, ட்ரேசி தோற்றத்தில் ஆணாக மாறியது மட்டுமல்ல. அவர் உடலுக்குள் கருப்பையும் சினைப்பையும் இருந்தபோதும், எட்டாண்டுகளுக்கு முன்னரே அவருக்கு மாதக் கசிவு நின்று போய்விட்டது. சட்டப்படி ட்ரேசி தன் பெயரை தாமஸ் பீட்டி என்று மாற்றிக் கொண்டு ஆணாக அங்கீகரிக்கப்பட்டார்.
தாமஸும் நான்சியும் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று ஓரிரு வருடங்கள் முன்பு எண்ணத் தொடங்கினார்கள். நான்சிக்கு இருபது வருடம் முன்னாலேயே கருப்பையில் பிரச்னை இருந்ததால், அது அகற்றப்பட்டுவிட்டது. எனவே, நான்சி கருத்தரிக்க முடியாது.
தாமஸ் கருத்தரிக்க முடிவு செய்தார்.``குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டுமென்பது ஒரு பெண் உணர்வோ, ஆண் உணர்வோ அல்ல. அது ஒரு மனித உணர்வு அவ்வளவுதான்.'' என்பது தாமஸின் பார்வை.
டெஸ்டெஸ்ட்ரோன் மருந்துகளை நிறுத்தினார். இரு வருடங்களுக்குப் பின் எட்டாண்டுகளாக நின்று போயிருந்த சினைப்பை, கருப்பை சுரப்புகள் மறுபடியும் தொடங்கின. விந்து நன்கொடையாளரைத் தேடிப் பிடித்து செயற்கை முறையில் கருத்தரிப்பைச் செய்துகொண்டார். அடுத்த வாரம் குழந்தை பிறக்கப் போகிறது.
இத்தனையையும் செய்து முடிக்க தாமஸ் பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது.
காரணம், பல மருத்துவர்கள் இதற்கு உடன்படவில்லை. உடன்பட்டவர்கள் பெரும் தொகைகளை வசூலித்தார்கள். தான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவது ஏதோ தப்புக் காரியம் செய்வது போலிருக்கிறது என்று தாமஸை நினைக்கவைக்கும் அளவு நடந்துகொண்டார்கள்.
இது தாமஸின் இரண்டாவது முயற்சி.முதல்முறை கருத்தரித்தது கருப்பைக்கு வெளியில், அதுவும் மூன்று குழந்தைகளின் கருவாக வளரத் தொடங்கியதும், ஆபத்து என்பதால் அழிக்கப்பட்டது. இரண்டாம் முறை வெற்றிகரமாக ஒரு பெண் குழந்தை உருவாகி வளர்ந்து கொண்டிருக்கிறது.
தாமஸ்-நான்சி தம்பதிகளின் இந்த நடவடிக்கை வழக்கம் போல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. சம்பிரதாயமான ஆண்-பெண் குடும்ப அமைப்பில் உள்ளவர்கள் மட்டுமல்ல, பெண்-பெண், ஆண்-ஆண் ஓரின உறவு முறைக் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் மத்தியிலும் விவாதங்கள் நடக்கின்றன. அமெரிக்காவின் புகழ்பெற்ற டி.வி. விவாத ஊக்கியான ஓப்ரா வின்ஃபிரேயின் நிகழ்ச்சியில் தாமஸ் கலந்துகொண்டது விவாதத்தைப் பரவலாக்கியிருக்கிறது.
இதற்கு முன்பு அமெரிக்காவில் 1999-ல் பேட்ரிக்-மேட் என்ற தம்பதியரும் இதே போல குழந்தை பெற்றுக் கொண்டனர். இருவருமே பெண்ணாக இருந்து ஆணாகியவர்கள். அப்போது பிறந்தது ஆண் குழந்தை.
அமெரிக்கா,ஐரோப்பா முதலிய மேற்கத்திய நாடுகளில் பல மாநிலங்களில், சில நாடுகளில் ஓரின குடும்ப உறவுகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து மோதிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்தியாவில் ஓரின உறவு சட்டப்படி குற்றமாக இன்னமும் இருந்து வருகிறது. பல தார மணமும் இந்து சட்டப்படி குற்றம்தான். பல மேலை நாடுகளிலும் பல தார மணம் குற்றம். ஓரின உறவு குற்றம் அல்ல.
``தாமஸ்-நான்சி உறவு, பெண்-பெண் என்ற ஓரின உறவுதான். அதை மறைத்து தாமஸ் ஆண் என்று சொல்லப்படுகிறது. எனவே, இதை ஆண் கருவுற்ற செய்தியாக வெளியிடுவது தவறு'' என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். தாமஸ் தன்னை ஆணாக மாற்றிக் கொண்டு சட்டப்படி ஆண் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டபிறகு, அவர்கள் உறவை ஓரின உறவு என்று வர்ணிப்பது தவறு என்பது எதிர்த் தரப்பு வாதம்.
தாமஸ் ஆணா? பெண்ணா? பெண்ணாக இருந்து ஆணாக விரும்பி மாறி மறுபடியும் குழந்தை பெறுவதற்காக பெண்ணாக மாறித் திரும்பவும் ஆணாக இருக்க விரும்பும் மனிதரை என்னவென்று சொல்வது? முதலில் ஆண் யார்? பெண் யார்? அதைத் தீர்மானிப்பது எது? உடல் உறுப்புகள் மட்டும்தானா? அப்படியானால், அதில் எந்தெந்த உறுப்புகள்? உடலா? மனமா? எது தீர்மானிக்கிறது? ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கும் பெண், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் ஆண் என்பது மனமா? உடலா? பெரும் விவாதங்களையும் தேடல்களையும் எழுப்பும் கேள்விகள் இவை.
ஒவ்வொரு முறை இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் எழும் விவாதங்கள் திரும்பத் திரும்ப குடும்ப அமைப்பு என்பது என்ன என்ற அடிப்படைக் கேள்விக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. ஆனால் நம் சமூகம் அதற்குப் பதில் சொல்லத் தயங்குகிறது.
ஓர் ஆண், ஒரு பெண் கணவன்-மனைவியாகச் சேர்ந்து அமைக்கும் அமைப்புதான் குடும்ப அமைப்பு; மீதி எதுவும் குடும்பம் அல்ல என்பதே பெருவாரியாக வலியுறுத்தப்படும் கருத்தாக்கமாக இருக்கிறது. இது நியாயம்தானா, சரிதானா என்ற கேள்வியை ஒவ்வொரு தாமஸும் ஒவ்வொரு நான்சியும் ஒவ்வொரு பேட்ரிக்கும், ஒவ்வொரு மேட்டும், நம் முகத்தில் அறைவது போல் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் குழந்தையாக இருந்தபோது, அதே வீட்டில் குடியிருந்த இன்னொரு குடும்பத்தில் அப்பா, அம்மா இருவரும் இல்லை. ஒரு அக்கா, ஒரு அண்ணா, மூன்று தம்பிகள் இருந்தார்கள். யாரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னைத் தூக்கி வளர்த்தவர்கள் அவர்கள். இன்றும் எங்கள் குடும்ப நண்பர்களில் பல குடும்பங்களில் சகோதர சகோதரிகள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்துவருகிறார்கள்.
ஓட்டலுக்குச் சென்றால், `குடும்ப அறை' என்ற பகுதிக்குள் இரு ஆண்கள் செல்ல முடியாது. இரு சகோதரர்களைக் குடும்பமாக ஓட்டல் ஒப்புக் கொள்வதில்லை. ஓட்டல் மட்டுமல்ல, அரசும்தான். அரசு வழங்கும் குடும்ப அட்டைகள் எனப்படும் ரேஷன் கார்டு இன்று பல இடங்களில் முக்கியமான அடையாள அட்டையாக இருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் பல இளைஞர்களும் இளைஞிகளும் தனியே வீடு எடுத்து சமைத்து சாப்பிட்டு வாழ்கிறார்கள். அவர்களுக்கு `குடும்ப அட்டை' பெறும் உரிமை இல்லை. ஊரில் இருக்கும் குடும்ப அட்டையிலிருந்து தன் பெயரைப் பிரித்துக் கொண்டு , இங்கே ரத்த சம்பந்தம் இல்லாத இன்னொருவருடன் சேர்ந்து குடும்ப அட்டை வாங்கவும் யாரும் முயற்சிப்பதில்லை.
ஆம். ரத்த உறவு மட்டும்தான் இங்கே குடும்பம் என்று கருதப்படுகிறது. என் வாரிசு என் ரத்தமாக இருக்க வேண்டும் என்ற உள் மன வெறி அடங்காத சமூகம் நாம். அதனால்தான் இங்கே கருத்தரிப்பு மையங்களில் கூட்டமும் பணமும் வழிந்து ஓடுகின்றன. இங்கு மட்டுமல்ல. எங்கும்தான். அதனால்தான் தாமஸும் நான்சியும் குழந்தை வேண்டுமென்று நினைக்கும்போது எண்ணற்ற அனாதைக் குழந்தைகளில் ஒன்றைத் தத்து எடுக்காமல், உடலை வருத்திக் கொண்டு சொந்தக் குழந்தையைப் பெற முயற்சிக்கிறார்கள்.
ரத்த உறவை மட்டுமே தன் குடும்பமாகப் பார்க்கும் இதே பார்வைதான் அரசியலிலும் பிரதிபலிக்கிறது. `தம்பி வா, தலைமையேற்க வா' என்று சொந்தத் தம்பியை அழைக்காமல் மற்றவர்களை நம்பி அழைத்த அண்ணா நிச்சயம் அபூர்வமான மனிதர்தான். இப்போதெல்லாம் யாரும் கட்சித் தம்பிகளை `தலைமை' யேற்க அழைப்பதில்லை. தொண்டாற்றவும் பேரணியாகத் திரளவும் மட்டுமே அழைக்கிறார்கள். தலைமைக்குத்தான் ரத்தத்தின் ரத்தங்கள் இருக்கிறார்களே!.
-ஞாநி
நன்றி: குமுதம், 02-07-08
1 கருத்து:
அரை வேக்காட்டு அஞ்"ஞாநி" வழக்கம் போல் குழப்பி, சந்தடி சாக்கில் தமிழக முதலமைச்சர் மீதான அவரது வெறுப்பை கக்கியிருக்கிறார்.
ரத்த உறவுகளை மட்டுமே குடும்பமாக ஏற்பதை அவர் ஆதரிக்கிறாரா? இல்லையா? என்பதில் தெளிவில்லை.
அவர் வழக்கமாக ஆதரிக்கும் பொதுவுடைமைத் தத்துவத்தின் அடிப்படையில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கலாம்.
அதை விட்டுவிட்டு திமுக-வின் அரசியலை விமர்சிக்க புகுந்து விட்டார். நாடாளுமன்ற அரசியலை ஏற்றுக்கொண்ட அனைத்து கட்சிகளும் இந்தப் போக்கில்தான் செல்கின்றன.
கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைப் பதவியை பெறுவது எந்த லாபத்தையும் தராததால் கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாரிசுகள் அரசியல் துறவறம் பூண்டு "துட்டு" பார்க்கும் வேறு தொழில்களில் இறங்கி விடுகின்றனர்.
தம்மை அரசியல் விமர்சகன் என்று கூறிக்கொள்ளும் ஞாநி, விமர்சகர்களுக்கான அறநெறிகளையாவது கடைப்பிடிக்க வேண்டும்.
கருத்துரையிடுக