உயிரியல் ரீதியாக ஆண் பெண் வேறுபாடும் சமூக ரீதியாக ஆண்மை - பெண்மை கற்பிதமும் கொண்ட இச்சமூகத்தில் வீட்டிலும் வெளியிலும் பெண்ணுக்கான பணிகளும் ஆணுக்கான பணிகளும் முற்றிலும் வேறானவை. கண்ணுக்குப் புலப்படாத புனைவு சார்ந்த இந்தக் கற்பிதங்கள் பெண்ணின் இயங்கு வெளியை ஆணிலும் சற்றுக் குறைவானதாகவே வரையறுத்திருக்கின்றன. இவ்வெளி பெண்சார்ந்திருக்கும் சமூகம், மரபு, நம்பிக்கைகள் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.
எழுதப்படாத இந்த விதிகளைத் தகர்த்து ஒரு பெண் தன் இயல்புபடி தன் வாழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை நிலைநிறுத்தி அவளுக்கான எல்லையை விரிவுபடுத்தும்போது அவள் படித்தவளாயின் சாதனைப் பெண்ணாக அறியப்படுகின்றாள். கவனிக்கப்படுகின்றாள். இதே பெண் படிப்பினால் தன்னை வெளிப்படுத்தாது தன் சூழலில் தமக்கான மரபுகளைத் தாண்டி இயங்கினாலும் தனது வெளியை விசாலப்படுத்தினாலும் நூற்றில் ஒருத்தியாகவே வாழ்வின் போக்கில் தன் பயணத்தைத் தொடர்கிறாள். இப்படிக் கண்டுகொள்ளப்படாத பெண்களில் மூவரை லீனா அடையாளங் கண்டிருக்கிறார். வெவ்வேறு வாழிடங்களைக்கொண்ட அவர்களை அவர்களது பணிச் சூழலிலேயே காட்சிப்படுத்தியிருக்கிறார்.
வயிற்றுப் பிழைப்புக்காகத் திருடுவதையும் உடம்பை விற்றுப் பிழைப்பதையும் தவிர வேறு எந்தத் தொழிலும் அவமானகரமான தல்ல என்று சொல்லும் லட்சுமியம்மாள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வாத்தியக்காரர்களிடம் கூலி பேசி லாரியில் ஏறிக்கொண்டு இறப்பு வீட்டிற்கு அழைத்துச்செல்வதும் இறப்பு வீட்டில் இறந்தவர் குறித்த தகவல்களைச் சேகரிப்பதும் இட்டுக்கட்டிப் பாட்டுப்பாடுவதுமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இவர் தொடர்பான பகுதிகள் படத்தின் யதார்த்தத்தை அதிகரிக்கின்றன. சாமி வந்து ஆடுவதும் தன் உடம்பில் காளி இருப்பதாகச் சொல்வதும் தவறாகப் பேசும் ஆண்களை எட்டி உதைப்பேன் என்பதும் குரங்குகளுக்கு ரொட்டி தருவதுமாக இடம்பெறும் காட்சிகள் படத்தினைத் தொய்வில்லாமல் நகர்த்த உதவுகிற இயல்பான காட்சிப் பதிவுகளுக்குச் சான்றுகள்.
ஊரில் இருப்பவர்கள் எங்கள் வண்டி கடப்பதற்குள் மூக்கைப் பொத்திக்கொண்டு போவார்கள்; சிலர் திட்டிக்கொண்டே செல்வார்கள். எந்த நிலையில் பிணம் இருந்தாலும் நான் எடுத்து அடக்கம் செய்கிறேன் என்கிற கிருஷ்ணவேணி, இரவும் பகலும் சுடுகாட்டில்தான் வேலை. பார்ப்பவர்கள் அருவருக்கத்தக்க யாருமற்ற பிணங்களை அடக்கஞ்செய்வதை நிறைவுடன் தான் செய்கிறேன் என்கிறார். சுடுகாட்டிற்குப் பெண்கள் போகக் கூடாது என்கிற சமூகத்தின் முகத்தில் பயமறியாத கிருஷ்ணவேணியின் செயல்பாடு கரிப்பூச்சில்லாமல் வேறென்ன?
பெண்கள் கடலுக்குச் சென்றால் தீட்டு, சாமி குத்தம் என்கிறார்களே, புருஷன் ஒழுங்கில்லாவிட்டால் பெண்தானே குடும்பத்தைப் பார்க்க வேண்டும்? சாமி எங்களை ஒன்னுஞ் செய்யலியே. எங்களுக்குக் கடல்தான் சாமி என்கிற சேதுராக்கு கடல்மீதான மீனவர்களின் பிணைப்பைப் புரியவைக்கிறார். கடல்தானே எங்கள் வாழ்க்கை, கடலைத் தவிர வேறென்ன தெரியும்? என்கிற அவர், சுனாமியின் பெயரைச் சொல்லி கடலை விட்டுத்தொலைவில் எங்களைக் குடிபெயரச் சொல்கிறார்கள். எங்களால் முடியுமா? எனக் கேட்கிறார். புனிதம், தீட்டு என்ற கருத்தாக்கங்கள¢ எல்லாம் இவர் வார்த்தைகளில் சிதறுகின்றன. பெண்ணியத்தை யாரும் கற்பித்துத் தரவில்லை இவர்களுக்கு. கடலில் மீன் பிடிக்க இறங்குவதும் சிப்பி அரிப்பதும் மாலை கோர்ப்பதுமாகத் தொகுக்கப்பட்ட காட்சிகள் படத்தொகுப்பின் தரத்தைக் காட்டுகின்றன. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்த்தியாக இருக்கின்றன.
திருவண்ணாமலை, இராமேஸ்வரம், பாண்டிச்சேரி என்று வெவ்வேறு இடங்களில் வசிக்கும் இந்தப் பெண்களின் வாழ்வைப் பதிவுசெய்த விதம் அவர்களின் மீதான பரிதாபத்தைக் கோருவதாக இல்லை. மாறாக அவர்கள் கொண்ட வாழ்வின் நம்பிக்கையை, அவர்களை அறியாமல் அவர்கள் செய்துகொண்டிருக்கிற அரிய செயல்களைக் காட்டுவதாகவே இருக்கின்றது. இந்தப் பெண்கள் ஆண்களால் மட்டுமே முடியும் என்ற பொய்யை மறுதலித்திருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு அவர்கள் மீது பரிவு ஏற்பட்டாலும் எஞ்சி நிற்பது அவர்கள் செய்துவரும் அற்புதங்களே!
பறை, மாத்தம்மா போன்று கவனிப்பிற்குரிய படங்களில் பெண்கள்மீதான அக்கறையை வெளிப்படுத்திய லீனாவிற்கு, அவரது ஆவணப்பட வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாய் இப்படமும் இணைந்துள்ளது. தேவதைகள் என்ற தலைப்பே அந்தப் படத்தில் மையமான பெண்களின் வாழியல்பைச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது. இடஒதுக்கீடு, பெண் உரிமை என்று பேசிக்கொண்டிருக்கும் படித்த வர்க்கம் தெரிந்துகொள்ள வேண்டியது, வாழ்வின் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் இப்படியும் பெண்கள் வாழ்கிறார்கள் என்பதைத்தான்.
'புகழ்பெற்ற' இம்மூன்று தேவதைகளும் எவ்வித மாற்றங்களுமின்றித் தம் வாழ்வைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள் இருத்தலுக்கான போராட்டங்களோடும் வலிகளோடும்.
***
இயக்கம்: லீனா மணிமேகலை,
ஒளிப்பதிவு: சன்னி ஜோசப்,
படத்தொகுப்பு: பி. தங்கராஜ்
தயாரிப்பு: சி. ஜெரால்டு
நேரம்: 42 நிமிடங்கள்
-ந. கவிதா
நன்றி: காலச்சுவடு, ஜூன் 2008
1 கருத்து:
நல்ல சுடுதல் முயற்சி. வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக