இதே போல சில தினங்கள் முன்பு ரயிலில் இரவு 11 மணிக்கு செகண்ட் ஏ.சி. கோச்சில் குடித்து விட்டு வந்திருந்த ஆண் பயணிகள் இருவரின் டார்ச்சரிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரிய சக பெண் பயணிகள் நினைவுக்கு வந்தனர்.
தமிழகம் முழுவதும் குடித்துவிட்டு ரகளை செய்யும் ஆண்கள் தரும் தொல்லை நமது பெண்களுக்கு இன்று பிரதான பிரச்னைகளில் ஒன்றாகியிருக்கிறது. இதில் சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லை அதிக வேதனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கும் என்பதைத் தவிர.
தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் இந்த முக்கியமான பிரச்னை குறித்து சமுதாய சீர்திருத்தக் கருத்தரங்கிலே விவாதிப்பார்கள் என்று......... எதிர்பார்த்திருந்தால் அது என் தப்பாகத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை.
ஆனால், டாக்டர் ராமதாஸ் மதுவிலக்குப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வருவதாலும், பா.ம.க. மகளிர் அணியினர் மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதாலும், அதற்குப் பதில் சொல்லும் விதமாக, கடலூரில் கனிமொழி மதுவிலக்கு பற்றி ஏதாவது சொல்லுவார் என்று சின்னதாக எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு கூட தப்புதான். தமிழகப் பெண்களை உலுக்கும் பிரச்னை மதுவா என்ன, ராமர் பாலம்தானே.
என்றாலும், தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் கடுமையாக விமர்சித்து வரும் `மானாட, மார்பாட.... மன்னிக்கவும் மயிலாட' நிகழ்ச்சியை இனி கலைஞர் டி.வி நிறுத்தி விடும் என்று எதிர்பார்க்கலாம். கனிமொழி சொன்னால் சன் டி.வி கேட்காவிட்டாலும், கலைஞர் டி.வி கேட்கும் இல்லையா.
கடலூர், தமிழக அரசியல் வரலாற்றில் தவறான காரணங்களுக்காக இடம் பிடிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. கடலூர்க்காரர்களுக்கு என் அனுதாபங்கள். ஜெயலலிதா, கனிமொழி இருவரும் அங்கேதான் தங்கள் அரசியலின் அடுத்த கட்ட ப்ரமோஷனைப் பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தன் வாரிசாக ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலினுக்கு ஒதுக்கிய நேரத்தில் கனிமொழி பேச வைக்கப்பட்டிருப்பது ப்ரமோஷன்தானே.
முதல்முறையாக மாநில அளவில் ஒரு மாநாடு நடத்தியதில் தி.மு.க. தமிழகப் பெண்களுக்கு சொல்லியிருக்கும் செய்திதான் என்ன ?
செய்தி 1 : மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்ட ஒரே சிலை கண்ணகிக்குத்தான். கண்ணகிக்கு இரு முகங்கள் உண்டு. அரசனிடம் அஞ்சாமல் நீதி கேட்ட முகம் ஒன்று. இந்த முகத்தை தி.மு.க. இப்போது வலியுறுத்தவேண்டிய அரசியல் தேவை எதுவும் இல்லை. ஏனென்றால் அதுவேதான் ஆளுங்கட்சி. கண்ணகியின் இன்னொரு முகம்? அதுதான் பிரதான முகம். கணவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்து, அவனுக்கு தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்து, அவனிடம் தனக்கான நீதியைக் கேட்காமல், அவனுக்காக அரசிடம் நீதி கேட்டுப் போராடும் முழு அடிமையின் முகம் அது. இந்த முகத்தைத்தான் தமிழ்ப்பெண்களுக்கு கழகம் முன்வைக்கிறதோ?
செய்தி 2: வரலாற்றில் முதல்முறையாக ஒரே மேடையில் கலைஞர் கருணாநிதி தன் மனைவி, துணைவி இருவருடன் தோன்றினார். பிறந்த நாளன்று கூட அவர் இப்படி ஒரே மேடையில் அவர்களுடன் தோன்றியதில்லை. மகளிர் ஊர்வலத்தைப் பார்வையிட்ட மேடையில் கண்ட இந்தக் காட்சி மகளிருக்கு அளிக்கும் செய்தி என்ன? கண்ணகியின் இரண்டாவது முகத்தை எல்லாரும் ஏற்கச் சொல்லுவதா?
செய்தி 3: கலைஞர் கருணாநிதிக்கு யாரும் மார்க் போட முடியாது; அதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் போவதில்லை என்று கனிமொழி முழங்கியது இன்னொரு முக்கியமான செய்தி. பெரியாரையும் காந்தியையுமே விமர்சிக்கும் நாடு இது. இங்கே கருணாநிதியின் ஆட்சிக்கு மார்க் போடும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொல்வது அப்பட்டமான பாசிசம். கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் இருக்கும் பாசிட்டிவ்களின் கலவையாக கனிமொழி என்ற அரசியல்வாதி உருவாகலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது. இருவரிடமும் இருக்கும் நெகட்டிவ்களின் கலவையாகிவிடுவாரோ என்ற கவலையே ஏற்படுகிறது.
செய்தி 4: மாநாட்டில் கலைஞர் செய்த ஒரே முக்கியமான அறிவிப்பு எரிவாயு சிலிண்டர் விலையில் சலுகை பற்றியது. சமையலறை சமாசாரம்தான் பெண்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்ற சம்பிரதாய அணுகுமுறையின் இன்னொரு அடையாளமே இது. `என்னால் முடிந்தது எரிவாயு விலைக் குறைப்பு. ராமதாஸ் 2011ல் வந்து மதுக்கடைகளை மூடுவார்' என்றாவது தலைவர் சொல்லியிருக்கலாமே.
ஒரு பின்குறிப்பு: விமர்சகனின் விமர்சகர்களே, கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு அவசர அவசரமாக பார்ப்பனிய எதிர்ப்பு வாட்களை உருவத் தொடங்குமுன்பு தயவுசெய்து பொறுமையாக இன்னொரு முறை படிக்கவும். பகுத்தறிவுக்கு விரோதமாக ஒரு வரி இருந்தாலும், பிராயச்சித்தமாக மஞ்சள் சால்வை அணியத் தொடங்கிவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
-ஞாநி
நன்றி: குமுதம் 25-06-08
நன்றி: குமுதம் 25-06-08
4 கருத்துகள்:
//கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் இருக்கும் பாசிட்டிவ்களின் கலவையாக கனிமொழி என்ற அரசியல்வாதி உருவாகலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது. இருவரிடமும் இருக்கும் நெகட்டிவ்களின் கலவையாகிவிடுவாரோ என்ற கவலையே ஏற்படுகிறது.//
யோசிக்க வேண்டிய விவகாரம்
சுடுவது சுகமென்று கூறும் அன்பரே.
உங்கள் இந்தப் பதிவையும் அப்படியே சுட்டு வெறோரு பதிவு வெளியாகி இருக்கிறது.
பார்த்தீர்களா?
இது ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியில் பார்ப்பனக் கொழுப்பெடுத்த சோ கருணாநிதிக்கு மார்க் போட்டிருந்ததை குத்தி காட்டி சொல்லியதாக எனக்கு படுகிறது. மற்றபடி பதிவில் சொல்லியுள்ளவை சரியான விமர்சனங்களே. பிரச்சினை என்னவென்றால் அது ஞானி வாயிலிருந்து வருவதுதான். அதுவும் சமீபத்தில் அவரது அப்பட்டமான பார்ப்பனிய நிலைப்பாட்டை தழுவும் கருத்துக்களுடனும், கண்மூடித்தனமான கருணாநிதி எதிர்ப்பு அரசியலுடனும் சேர்த்துதான் இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது
//prognostic said
மற்றபடி பதிவில் சொல்லியுள்ளவை சரியான விமர்சனங்களே. பிரச்சினை என்னவென்றால் அது ஞானி வாயிலிருந்து வருவதுதான்.//
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
கருத்துரையிடுக