சனி, ஜூன் 07, 2008

விழி பிதுங்க வைக்கும் விலைவாசி உயர்வு!

ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்' என்று சொல்வார்கள். ஆனால், நமது தலைமுறையில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. நாம் பார்த்ததில்லை. அந்தக் குறையை இன்றைக்கு மன்மோகன் சிங் அரசு போக்கிக்கொண்டிருக்கிறது.
மூக்கணாங்கயிறை அறுத்துக்கொண்ட முரட்டுக்காளையாக இன்றைக்கு விலைவாசி வெறியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், மன் மோகன் சிங் அரசு கவலையின்றி தத்துவ முத்துக்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
.
`உலகம் முழுமையும் விலைவாசி உயர்ந்து வருகிறது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் விலைவாசி உயருகிறது' என்று வேதாந்தம் பேசுகிறார்கள்.
.
விலைவாசி உயர்வை பெட்ரோல், டீசல் விலையும் நிர்ணயிக்கும் என்று கூறுகிறார்கள். உலக வங்கியின் பரமார்த்த சீடர்களுக்கு இது தெரியாதா? தெரியும்.
.
இன்றைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் மலேசியா, இந்தோனேஷியா சிங்கப்பூர் நாடுகளைவிட இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம். காரணம், இறக்குமதியாகும் அந்த எண்ணெய்க்கு நிதி அமைச்சர் சிதம்பரம் சுங்கவரியும் விதிக்கிறார். உற்பத்தி வரியும் விதிக்கிறார்.
.
அந்த வரியைக் குறைக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சராக இருந்தபோது, மணிசங்கர அய்யர் போராடினார். கடைசிவரை அந்த வரியைக் குறைக்கமுடியாது என்று சிதம்பரம் உறுதியாக இருந்தார்.
.
இன்றைய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, சென்ற ஆண்டு இதே கோரிக்கையை வைத்தார். நிதி அமைச்சர் நிமிர்ந்து கொண்டார். இறுதியாக, பிரச்னையை இந்த ஆண்டு சோனியாவின் கவனத்திற்கு முரளி தியோரா கொண்டு சென்றார். பஞ்சாயத்து நடைபெற்றது. ஏதோ கொஞ்சம் குறைக்க நிதி அமைச்சர் இணங்கியிருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது.
.
உலகத்தில் தன்னைவிட அறிவாளி எவரும் இல்லை என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் நமது நிதி அமைச்சர்.


.
பெட்ரோல், டீசலைப் பயன்படுத்துகிறவர்களில் கணிசமான பேர் நடுத்தர மக்கள் என்பதனை அவர் கண்டுகொள்வதில்லை. இன்றைக்கு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை என்பது மன்மோகன் சிங் அரசை எரிமலையின் சிகரத்தில் அமர்த்தியிருக்கிறது என்பதனையும் அவர் கண்டுகொள்வதில்லை.
.
சென்ற ஆண்டு மே மாதம் `விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்' என்றார். அதன்பின்னரும் பணவீக்கம் உப்பிப் பெருக்க, விலைவாசி உயர்ந்துகொண்டே வந்தது.
.
ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதியில் நிதி அமைச்சர் என்ன வாக்குமூலம் கொடுக்கிறார்? `சென்ற ஆண்டை விடப் பணவீக்கம் அதிகமாகி விலைவாசி உயர்ந்துதான் இருக்கிறது' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். விலைவாசி உயர்வு சிக்கலானதுதான். ஆனால், அடுத்துவரும் மாதங்களில் விலைவாசி குறைய வாய்ப்பு இருப்பதாக கிளிஜோசியம் சொல்கிறார். விலைவாசி உயர்விற்குத் தாங்கள் செயல்படுத்தும் பொருளாதாரத் திட்டங்கள்தான் காரணம் என்பதனை அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
.
விலைவாசி உயர்விற்கு இணையதள யூகபேர வணிகம் பிரதான காரணம் என்பதனை அனைத்துத் தரப்பினரும் கரடியாகக் கத்தி எடுத்துக் கூறிவிட்டனர். மன்மோகன் சிங் அரசு மவுனம் சாதிக்கிறது.

.
யூகபேர வணிகத்திலிருந்து உணவுப் பொருட்களையாவது விடுவிக்க வேண்டும் என்று அதற்குரிய நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்தது. அதனை மன்மோகன் சிங் அரசு அலட்சியம் செய்துவிட்டது.

.
இமாசலப்பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் தோல்வியைச் சந்தித்த பின்னர், யூகபேர வணிகம் பற்றி மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று வீரப்பமொய்லி தெரிவித்தார். அவருக்கு என்ன தெரியும் என்று நமது அதிமேதாவிகள் ஏளனம் செய்துவிட்டனர்.
.
யூகபேர வணிகத்திற்கும் விலைவாசி உயர்விற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதனை ஆராய, மத்திய அரசே ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவிற்கு பொருளாதார மேதை அபிஜித் சென் தலைமை ஏற்றார்.
.
விலைவாசி உயர்விற்கு யூகபேர வணிகம்தான் பிரதான காரணம் என்று அந்தக் குழுவும் அறிக்கை சமர்ப்பித்துவிட்டது. `இப்படி உலகமே இது தீமை என்று சொன்னாலும் கேட்பதற்கு இல்லை' என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். அதனை பிரதமர் மன்மோகன் சிங்கும் வழிமொழிந்தார். உலகம் சொல்வதைக் கேட்கமுடியாது. தாங்கள் சொல்வதைத்தான் உலகம் கேட்கவேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
.
இந்தப் பிடிவாதம் காங்கிரஸ் கட்சிக்குக் கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. மன்மோகன்சிங் அரசு அமைந்த பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது.

.

கோவாவிலும், ஜார்க்கண்டிலும் காங்கிரஸ் அரசுகள் தூக்குக் கயிற்றைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. இதனைப் பற்றி சோனியா காந்தியே கவலைப்படாதபோது, நாம் கவலைப்பட்டு என்ன பயன்?
.
ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கண்ட பாவத்திற்காகத் தோழமைக் கட்சிகளும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தேர்தலின்போது மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை தி.மு.கழகம் அளித்ததோ, அந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், விலைவாசி உயர்வு என்ற காட்டாற்று வெள்ளம், கலைஞர் அரசின் சாதனைகளின் பலன்களையெல்லாம் அடித்துச் சென்றுவிடுமோ என்ற அச்சம் பிறந்திருக்கிறது.
.
கிராமங்களுக்குப் போனால் மக்கள் என்ன சொல்கிறார்கள்? `சொன்னபடி கலைஞர் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுறாரு. டி.வி. யெல்லாம் கொடுத்திட்டாரு. ஆனால், தாளிக்க எண்ணெய் வாங்க முடியலையே. கல்யாணம் என்றால் தாலிக்குத் தங்கம் வாங்க முடி யலையே. எல்லாம் யானை விலை, குதிரை விலை விற்குது. விழி பிதுங்குது' என்று ஆதங்கத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். கலைஞர் அரசிற்கு சோதனைதான்.
.
ஆனால், மக்கள் என்னென்ன பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது என்று சொல்கிறார்களோ, அந்தப் பொருட் களெல்லாம் யூகபேர வணிகச் சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. தங்கத்தின் விலையை எப்படி சென்னை நகை வியாபாரிகள்கூட தங்கள் பங்கிற்கு கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்துக்கொள்கிறார்கள் என்பதனை அண்மையில் சன் டி.வி. அழகாகப் படம் பிடித்துக் காட்டியது.
.
`தாளிக்க எண்ணெய் இல்லை. தாலிக்குத் தங்கம் இல்லை' என்ற மக்களின் மனக்குமுறல் அரசியல் முழக்கமாக உருவாவதற்கு முன்னர், யூகபேர வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டுமே. அதற்கு கலைஞராவது முன் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையேல் விலைவாசி உயர்வு என்கிற காட்டாற்று வெள்ளத்தில் கலைஞர் அரசும் அடித்துச் செல்லப்பட்டுவிடும்!

-சோலை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 12-06-08

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

//உலகத்தில் தன்னைவிட அறிவாளி எவரும் இல்லை என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் நமது நிதி அமைச்சர்.
//

இல்லை நண்பரே அவருக்கு அப்படியெல்லாம் நம்பிக்கை இருக்காது என்பது என் நம்பிக்கை.

ஒரு தரகு முதலாளியாக நேரடியாக கொள்ளையடிப்பது மட்டுமல்லாது அப்படி கொள்ளையடிப்பதை தங்கு தடையில்லாமல் செய்வதற்காக மட்டுமே நிதீயமைச்சராக அவர் வலம் வருகிறார் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறா என்பதே எனது நம்பிக்கை.

முக்காலமும் உணர்ந்த முனிவன்

அகராதி சொன்னது…

ஏதோ மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் மட்டுமே மனசாட்சி இல்லாதவர்கள் போலவும், கருணாநிதி வகையறாக்கள் மக்கள் நலம் சார்ந்தவர்கள் போலவும் இருக்கிறது.

அவர்கள் அதிகாரத்திற்கு அகில இந்தியாவையும் சுரண்டுகின்றனர். இவர்கள் அதிகாரத்திற்கு தமிழ்நாட்டை சுரண்டுகி்ன்றனர். அவ்வளவே.

மாட்டின் வால் ஓரடி சுழல்கிறது. ஆட்டின் வால் அரையடி சுழல்கிறது.

கருத்துரையிடுக