கடந்துவிட்ட காலம், விடுக்கப்பட்ட வார்த் தைகள், தொடுக்கப்பட்ட அம்பு ஆகிய மூன்றும் திரும்பப்பெற முடியாதவை. ஆனால், நம் அரசியல்வாதிகள் வாய்மலர்ந்த வார்த்தைகள் மட்டும் எளிதில் திரும்பப் பெறக் கூடியவை. 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்றான் பாரதி. நம் விதியெழுதும் அரசியல் வித்தகர்கள், அன்றாடம் புதிதாய்ப் பிறப்பவர்கள். அதனால்தான், நேற்று சொன்ன வார்த்தையும், செய்த செயலும் அவர் களைக் கட்டுப்படுத்துவதில்லை. அரசியல் அரங்கில் அவர்கள் நடத்தும் நவீன திருவிளையாடல்களைக் காவியமாக்க எந்தக் கவிஞனாலும் இயலாது!
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 20 ஆண்டுகளாக மரணத்தின் நிழலில், இளமை முழுவதையும் இழந்து சிறைக்கம்பிகளுக்குள் சீரழிந்து நிற்கின்றனர். அவர்கள் குற்றமே இழைத்திருந்தாலும்... ஓர் ஆயுள்தண்டனைக் காலத்தை விட அதிகமான நாட்களைக் காராக்கிருகத்தில் கழித்துவிட்டனர். இனியாவது அவர்களை வாழ அனுமதிப்பதுதான் சட்டத்துறைக் கோட்பாட்டுக்கு (Jurisprudence) எல்லா வகையிலும் ஏற்புடையது என்று மனித நேயம் சார்ந்த மக்கள் சிந்தித்ததன் விளைவாக மாநிலம் முழுவதும் மூவரின் மரணதண்டனைக்கு எதிராக உணர்வலைகள் பொங்கிப் புரண்டன.
சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் மகுடம் இழந்தார். ஜெயலலிதா மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்தார். தி.மு.கழகம் மரணப் படுக்கையில் கிடத்தப்பட்டது. விழுந்த கலைஞர் எழத் துடித்தார். ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, கழகத்தின் கதை முடிக்க நினைத்தார். இனத்துரோகத்தில் ஈடுபட்டதனால்தான் இழிந்த தோல்வி நேர்ந்துவிட்டது என்று கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி’ இடித்துரைத்தது. மீண்டும் கலைஞர் 'தமிழினத் தலைவர்’ வேடமேற்று நடிக்க விரும்பினார். மூவரின் மரண தண்டனை அவருடைய நவீன நாடகத்துக்கு வசதியான மேடையானது. திரைக்கதை திருத்தி எழுதப்பட்டது. நெஞ்சை உருக்கும் வசனங்கள் கலைஞரின் பேனாவிலிருந்து கசிந்தன. திரைச் சீலை அகன்றது. வசனம் பேச கலைஞர் வாய் திறந்தார்.
'ஐயகோ! மூன்று இளைஞர்கள் மரணத்தின் மடியில் மயங்கிக் கிடப்பதை மனச்சான்று உள்ள தமிழர்கள் இனியும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது முறையோ? ஜெயலலிதா அம்மையார் நினைத்தால் அமைச்சரவையைக் கூட்டி மூவரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படி ஒரு தீர்மானம் தீட்டி ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் போதுமே. அப்படித்தானே நளினியைக் காலனின் பிடியிலிருந்து நான் காப்பாற்றினேன்...’ என்ற கலைஞரின் 'காகிதப்பூ’ வசனம் காதில் விழுந்ததும் உள்ளாட்சித் தேர்தல் ஜெயலலி தாவின் கண்முன்னால் ஊசலாடியது. 'வீதி நாடகம்’ நடத்துவதில் நம் முதல்வருக்கு முன் அனுபவம் அதிகம் என்பதை கலைஞர் மறந்துவிட்டார். போட்டி நாடகம் சட்டப் பேரவையில் அரங்கேற்றப்பட்டது. ஜெயலலிதா பேசிய ஒவ்வொரு வசனமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. கலைஞர் நாடகத்தில் கூட்டம் குறைந்தது.
'கருணாநிதி முதல்வராக இருந்தபோது 20-04-2000 அன்று கூட்டப்பட்ட அமைச்சரவையில் நளினிக்கு மட்டும் மரண தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், மற்ற மூவருக்கும் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன்படியே ஆளுநர் ஆணை பிறப்பித்தார்’ என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா வீசிய வெடிகுண்டு சத்தத்தில் விழித்துக்கொண்ட பூனை, கலைஞர் மறைத்து வைத்திருந்த கோணிப் பையிலிருந்து வெளியே வந்து விழுந்தது. அமைச்சரவையைக் கூட்டி மூவரின் மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றும் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பும்படி இன்று ஜெயலலிதாவுக்கு இலவச ஆலோசனை வழங்கும் கலைஞர், நேற்று அதைச் செய்யத் தவறியது ஏன்? அவரைச் செய்ய விடா மல் தடுத்த 'கை’ எது? அந்த மனித நேயமற்ற 'கை’யை முற்றாக முறித்து விட்டு விலகும் மனத்துணிவு கலைஞருக்கு உண்டா?
'கனிமொழி ஜாமீனில் வெளியே வரும் வரை சோனியாகாந்தியை நான் சந்திக்கப் போவதில்லை. உடல் நலம் விசாரிக்கச் சென்றாலும் உள்ளர்த்தம் கற்பிக்கப்படும்’ என்று சொன்ன கலைஞர், கனிமொழி திகார் சிறையில் இருக்கும்போதே புதுடெல்லி சென்று சோனியாவையும், பிரதமரை யும் சந்தித்தார். 'கனிமொழியின் ஜாமீன் குறித்து இருவரிடமும் நான் எதையும் பேசவில்லை’ என்று அவர் சொன்னதை நாம் நம்புவோம். எவற்றையெல்லாமோ நம்பி நைந்துவிட்ட நமக்கு, இதை நம்புவதால் புதிதாக இழக்க எதுவும் இல்லை. கலைஞரின் டெல்லிப் பயணத்துக்கும்... சி.பி.ஐ., கனிமொழி ஜாமீன் விவகாரத்தில் அடக்கி வாசிப்பதற்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதையும் நம்புவோம். சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட சீஸரின் மனைவி அல்லவா நம் சி.பி.ஐ.!
கலைஞர் எழுதி, இயக்கி, நடிக்கும் 'இனவுணர்வு’ நாடகத்தில் இரண்டாவது காட்சி. 'தூக்குத் தண்டனை பெற்றிருக்கும் மூவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடுவதால், இதுவரை அனுபவித்த தண்டனை போதுமானது என்ற முறையில் அவர்களுடைய உயிர்களைக் காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தினேன்’ என்று பத்திரிகையாளர்களிடம் வெளிப்படுத்தினார் கலைஞர். நிராயுதபாணி யாக நிற்கும்போது நெஞ்சில் கசிந்த கரிசனம், சகல அதிகாரங்களும் கையில் இருந்த போது ஏன் காணாமற் போனது? முதல்வர் என்ற முறையில் பிரதமரிடம் அப்போது வலியுறுத்த ஏன் வாய் வரவில்லை? 'மத்திய அரசு உதவிட வேண்டும்’ என்றாராம். அந்த மத்திய அரசில் இவருடைய கட்சியும்தானே இடம் பெற்றிருக்கிறது? கூட்டணி தர்மப்படி ஆட்சி நடத்தும் 'கலியுக தருமர்’ நம் பிரதமர். கூட்டணி தர்மத்துக்காக அலைக்கற்றை ஊழலை அனுமதித்தவர், மூவரின் மரண தண்டனையை நிறுத்த முடியாதா என்ன? கலைஞரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால்... கழகம் மத்திய அரசிலிருந்து விலகி விடுமா? 'இந்த மேடையில் அந்த நாடகம் இன்னும் எத்தனை நாளம்மா?’ என்ற கண்ணதாசனின் பாடல்தான் கவனத்துக்கு வருகிறது.
கலைஞர் நடத்தும் நவீன நாடகம் பொதுமக்கள் பார்த்துச் சலித்த பழைமையான நாடகம்தான். ஆனால், நம் முதல்வர் நடத்தும் நாடகமோ காட் சிக்குக் காட்சி அதிரடி திருப்பங்கள் நிறைந்தது. 'ஈழத் தமிழர்’ நாடகத்தில் ஜெயலலிதா அரங்கேற்றிய முதல் காட்சியே யாரும் எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது. 'இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்’ என்று சட்டப் பேரவையில் சங்கநாதம் செய்து, நிறைவேற்றிய தீர்மானம் கண்டு உலகத் தமிழர்கள் உவகை அடைந்தனர். முருகன், சாந்தன், பேரறிவாளன், பிரச்னை எழுந்தபோது, 'கருணாநிதி அமைச்சரவை தீர்மானத்தின்படி ஆளுநர் கருணை மனுவை நிராகரித்த பின்பு, என்னால் ஒன்றும் செய்ய இயலாது. இந்த அரசுக்கு அதை மாற்றும் அதிகாரமில்லை. வேண்டுமானால், மூவரும் குடியரசுத் தலைவரிடம் மீண்டும் கருணை மனு சமர்ப்பிக்கட்டும்’ என்று முதல்வர் கை கழுவியதும் வீதி நாடகத்துக்கு வேண்டிய விறுவிறுப்பு குறைந்தது. பார்வையாளர் அரங்கில் கூச்சல் எழுந்தது.
உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை நாடகத்தை வெற்றிகரமாக நடத்திப் பார்வையாளர்களைத் தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று உணர்ந்த முதல்வர், அடுத்த நாளே அதிரடி திருப்பத்தை அறிமுகப்படுத்தினார். 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேதகு குடியரசுத் தலைவரைத் தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ என்று ஒரு தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர், மக்களின் உணர்வுக்கும், அரசியல் கட்சிகளின் கருத்துக்கும் மதிப்பளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொண்டார். நாடகத்தின் புதிய திருப்பம் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த தமிழர் கூட்டம், 'தாயே! தெய்வமே! தமிழனத்தின் உண்மையான தலைவியே! புரட்சியின் புதிய வடிவமே!’ என்று பாரெங்கும் 'பஜகோவிந்தம்’ பாடத் தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தல் வந்தது. அசுர வெற்றியை அ.தி.மு.க. பெற்றது. நாடகத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் மூவர் கருணை மனுவுக்கு எதிராக ஜெயலலிதா அரசு தாக்கல் செய்த குறிப்புகள்தான் யாருமே கனவிலும் எதிர்பார்த் திராத நாடகத்தின் உணர்ச்சி நிலை வீழ்ச்சி (anti-climax)ஆகும். 'மூவரின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துத் தமிழக அரசு எதுவும் கூற முடியாது’ என்று குறிப்பிட்டதோடு நில்லாமல், 'மூவரும் தாக்கல் செய்த மனுக்கள் தகுதியற்றவை என்பதால் அவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றும் ஜெயலலிதா அரசு தெளிவாகத் தெரிவித்துவிட்டது. இதன் மூலம் மூவரும் தூக்கில் தொங்குவது தமிழக அரசுக்குச் சம்மதமே என்று மறைமுகமாக உணர்த்திவிட்டார் ஜெயலலிதா. அப்படியானால், 60 நாட்களுக்கு முன்பு சட்டப் பேரவையில் மூவர் உயிர் காக்க ஏன் ஒரு தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார்? இடையில் நடந்தது என்ன? ஏன் இந்த இரு நிலைப்பாடு? 'அடிமைப் பெண்’ படத்தில் இரு வேடங்களில் அற்புதமாக நடித்ததில் அவருடைய ஆற்றல் வெளிப்பட்டது. ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின்பும் இரு வேடங்களில் நடித்தால் அவருடைய சந்தர்ப்பவாதம்தான் சாயம் வெளுக்கும். ஜெயலலிதாவின் கட்சிச் சின்னம் 'இரட்டை இலை’ என்பதற்காக, அவருடைய அரசியல் நடவடிக்கைகளிலும் இரட்டை நிலை இருப்பது அவருக்கு ஒரு போதும் பெருமை சேர்க்காது. மூன்று உயிர்களின் மரண மேடையில் கலைஞர், ஜெயலலிதா என்ற இரண்டு நடிப்புச் சுதேசிகளின் நாடகம் நன்றாகவே நடக்கிறது. பார்வையாளர்களாக நாம் எவ்வளவு நாள் பார்த்து ரசிக்கப் போகிறோம் என்பதுதான் விடைகாண வேண்டிய கேள்வி!
-தமிழருவி மணியன்
நன்றி: ஜூனியர்விகடன், 06-நவம்பர்-2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக