புதன், நவம்பர் 09, 2011

அப்துல் கலாமின் அட்டகாசங்கள் - அ. மார்க்ஸ்

அப்துல் கலாம் அவர்கள் இரண்டு நாட்களாகத் தமிழ்நாட்டில் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை. மத்திய அரசின் கைப்பாவையாக இங்கே வந்து அணு உலை ஆதரவுப் பிரச்சாரத்தைச் செய்துகொண்டுள்ளார். கலாமுக்கு மக்கள் மத்தியில் ஒரு மரியாதையும் அங்கீகாரமும் இருக்கிறது. அவரது புத்தகங்கள் இங்கே ஏராளமாக விற்பனையாகின்றன. ஒரு முஸ்லிமாகப் பிறந்திருந்தும், முஸ்லிம் அடையாளம் எதையும் தரித்துக் கொள்ளாததாலும், முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தோ, அவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தோ வாய் திறவாமல் இருப்பதாலும் அவர் ஒருநல்ல முஸ்லிமாகபொதுப் புத்தியில் அடையாளம் காணப்படுகிறார் (முஸ்லிம்னா இப்டி இருக்கணும்பா”). அந்த அளவுக்குத் தனது பிற அடையாளங்களை அமுக்கிக் கொண்டு விஞ்ஞானிஎன்கிற ஒற்றை அடையாளத்தைத் துருத்தி நிறுத்திக்கொண்டவர் அவர். நான் ஒரு முறை அவரை விமர்சித்து ஏதோ எழுதியபோது விஞ்ஞானிஎன அவரை விளித்திருந்தேன். தொலைபேசியில் அழைத்த நண்பர் ராமாநுஜம், “அவரை ஏன் விஞ்ஞானி எனச் சொல்கிறீர்கள். அவரைக் குறிக்க ‘technocrat’ என்பதுதான் சரியான சொல்என்றார்.

ராமாநுஜம் சொன்னது நுற்றுக்கு நூறு சரி. Technocrat என்கிற சொல்லுக்கு ஏ.சி. செட்டியார் அகராதி சொல்லும் பொருள்: தொழில்நுட்ப அறிஞராட்சிக் கோட்பாட்டாளர்”. ஆம், அப்துல் கலாம் போன்றவர்கள் தொழில்நுட்ப அறிஞர்கள் மட்டுமல்ல. ஆட்சிக் கோட்பாட்டாளர்களும்கூட. Bureaucrat என்கிற சொல் எத்தனை வெறுப்புக்குரியதோ அத்தனை வெறுப்புக்குரிய சொல் Technocrat என்பதும். சிவில் அதிகார வர்க்கம்எப்படி அரசதிகாரத்தின் பிரதிநிதியாக இருந்து மக்களை அலட்சியப்படுத்தி முடிவுகளைச் செயல்படுத்துகின்றதோ அப்படியே இந்த விஞ்ஞான அதிகாரவர்க்கமும் மக்களை மயிரளவும் மதிப்பதில்லை. இதற்கொரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கலாம். விஞ்ஞானத்தை வழிபடுபவர். விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் ஏழை/பணக்காரன், உயர்ந்தோர்/தாழ்ந்தோர் முதலான எல்லாவிதமான வேறுபாடுகளுக்கும், கருத்தியல்களுக்கும் அப்பாற்பட்டவையாக நம்புபவர். குறிப்பாக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களிலிருந்து முற்றாக விஞ்ஞானத்தைப் பிரித்துப் பார்ப்பவர். ஃபுகுஷிமா விபத்திற்குப் பின் தனது நாட்டில் புதிய அணு உலைகளைக் கட்டுவதை நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ள ஜப்பான், அதே நேரத்தில் வியட்நாம் உள்ளிட்ட சிறு நாடுகளுக்கு அணு உலைகளை விற்பதைத் தொடர்வது ஏன் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி மனத்தைச் சஞ்சலப்படுத்திக் கொள்ளாதவர். ஜப்பானின் இந்த இரட்டை நிலைப்பாட்டை அங்குள்ள மனச்சாட்சி உடைய அறிவுஜீவிகள் எதிர்த்துள்ளனர். டோஷிபா, மிட்சுபிஷி, சுஸுகி என்கிற மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் சென்ற நிதி ஆண்டில் இத்தகைய விற்பனைகளின் மூலம் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துள்ளதுதான் இந்த இரட்டை நிலைபாட்டிற்குக் காரணம். விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் அரசியலுக்கும், கருத்தியலுக்கும் அப்பாற்பட்டதெனச் சொல்வது எத்தனை அபத்தம்.

மக்கள் குறுகிய நோக்கத்துடனும், உடனடிப் பலாபலன்களையும் கருதிச் செயல்படக் கூடியவர்கள்; ஆனால் தாங்களோ தொலை நோக்கிலும், ஒட்டு மொத்தமான நாட்டு நலன் என்கிற அடிப்படையிலும் சிந்திப்பவர்கள் என்கிற எண்ணமே அதிகார வர்க்கம் மக்களை அலட்சியம் செய்வதன் அடிப்படை. சில உடனடிப் பயன்களை மக்களிடம் காட்டினால் அவர்கள் மனம் மாறி விடுவார்கள் என்கிற எண்ணத்தில்தான் கலாம் இன்று கூடங்குளத்து மக்கள் முன் 200 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களை அவிழ்த்து விட்டுள்ளார். இவற்றில் பலவும் எல்லா கிராம மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டிய நலத் திட்டங்கள்தான். கூடங்குள மக்களுக்கு மட்டும் இந்தத் திட்டங்கள் என்பதன் பொருளென்ன? அவர்களின் சம்மதம் கோரிக் கொடுக்கப்படும் லஞ்சமா? இல்லை, பின்னால் வரப்போகிற ஆபத்திற்காக முன்கூட்டியே வழங்கப்படும் இழப்பீடா?

கூடங்குள அணு உலைகளால் எந்த ஆபத்தும் இல்லை என அடித்துச் சொல்கிறார் கலாம். ஏற்கனவே அணு உலை அதிகார வர்க்கம் சொல்லி வந்ததையே கிளிப் பிள்ளை போலத் திருப்பிச் சொல்லியுள்ளார். எனில் பெல்ஜியம், ஜப்பான் முதலிய நாடுகள் சுமார் 14 அணு உலைகளை மூட முடிவு செய்திருப்பதும், ஸ்விஸ் முதலான நாடுகளும் அப்படியான முடிவுக்கு வந்துள்ளதும் எப்படி? இது குறித்து ஏன் அவரிடம் இத்தனை பெரிய மௌனம்?

கூடங்குளம் அணு உலைகள் 6 ரிக்டர் நிலநடுக்கம் வரை தாங்கும் என உத்தரவாதம் அளிக்கிறார். இன்றைய நாளிதழ் ஒன்று கேலி செய்திருப்பதைப் போல 7 அல்லது 8 ரிக்டர் நில நடுக்கம் வந்தால் என்னாவது? வராது என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? 2004ல் அத்தனை பெரிய சுனாமி எப்படி வந்தது? 25 சத அணுக் கழிவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார். அவருடைய இந்தக் கணக்கீட்டையே நாம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தக் கழிவை என்ன செய்வது? கழிவுகளைத் தானே எடுத்துக் கொள்கிறேன் என்று ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த ரஷ்யா ஏன் திடீரெனப் பின்வாங்கியது?

பயந்தால் வரலாற்றுச் சதனைகளைப் படைக்க முடியாது என்கிறார் கலாம். நில நடுக்கம் வந்து வீழ்த்தினால் என்ன செய்வது என்று பயந்திருந்தால் ராஜராஜ சோழன் பிருகதீச்வரப் பெருவுடையார் கோவிலைக் கட்டியிருப்பானா எனச் சொல்லிப் புன்னகைக்கிறார். கதிரியக்க ஆய்வினூடாக கதிர்வீச்சுக்குப் பலியான மேடம் க்யூரியை நினைவுகூர்ந்து கண்கலங்குகிறார். தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் இதன் மூலம் மின்சாரம் கிடைக்கப் போகிறது எனச் சொல்லிக் கைதட்டிக் குதூகலிக்கிறார். ஆகா ஒரு நாடகமன்றோ நடக்குது.

அப்துல் கலாம் மிகப் பெரியவர். நமது நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர். கறை படாத கரங்களுக்குச் சொந்தமானவர். எளிமைக்குப் பெயர் போனவர். அவசரப்பட்டு நான் ஏதும் அவரைப்பற்றிச் சொல்லிவிடக் கூடாது. ஆனால் இதெல்லாம் என்ன ஒப்பீடுகள் சார்? வரலாற்றுச் சாதனைக்காக எத்தனையோ ஆயிரம் பேர்களை நசுக்கிப் பிழிந்த உதிரத்தால் கட்டப்பட்டத்துதான் தஞ்சைப் பெரிய கோவில். அதன் பின்னிருந்த அரசியலை வரலாற்றாசிரியர்கள் இனங்கண்டுள்ளனர். இதையெல்லாம் கூட விட்டுவிடுவோம். அப்படியே ஒரு கலைச் சின்னம் நில நடுக்கத்தால் அழிந்துபடுகிறதென்றே வைத்துக் கொள்வோம். அணு உலை வெடித்துச் சிதறுவதும் வரலாற்றுச் சின்னமொன்று பொடிந்து வீழ்வதும் இரண்டும் ஒன்றுதானா? ஒரு வரலாற்றுச் சின்னம் அழிவது வேதனைகுரிய ஒன்றுதான். ஆனால் அந்த அழிவு வரலாற்றுச் சின்னம் ஒன்றின் அழிவோடு முடிந்து விடுகிறது. மீண்டும் கூட அதை நாம் கட்டிவிடலாம். ்ரீரங்கம் கோவிற் கோபுரம் கட்டப்படவில்லையா? ஆனால் ஒரு அணு உலை அழிந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் அத்தோடு சேர்ந்தழியும்? எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதன் பலனை மனிதகுலம் சுமக்க வேண்டியிருக்கும்? ஒரு கலைச் சின்னத்தின் பயன்பாடு அது நிலைத்திருக்கும் வரை தொடரும். ஆனால் உங்கள் அணு உலையின் ஆயுள் எத்தனை ஆண்டுகள் அய்யா? அதன் பயன்பாடு ஓய்ந்தபின் இன்னும் எத்தனை ஆண்டுகள் அதன் சுமையை எந்தப் பயன்பாடும் இல்லாமல் நமது சந்ததிகள் சுமக்க வேண்டும் அய்யா?

26 ஆண்டுகளுக்கு முன் பிரமிடுகளும் அணு உலைகளும்என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன (பார்க்க: எனது தேவையா இந்த அணு உலைகள்?’ நூலின் முதல் கட்டுரை [amarx.org]). அதில்,

எகிப்திய பரோவாக்கள் பிரமிடுகளைக் கட்டினார்கள். இராசராச சோழர்கள் பெரிய கோவில்களை எழுப்பினார்கள். பிரமிடுகளும் பெரிய கோவில்களும் பண்டைய கலைஞர்களின் மகத்தான சாதனைகள் மட்டுமல்ல. அன்றைய ஆட்சியாளர்களின் பிரதான வெளிப்பாடுகள் மட்டுமல்ல. அன்றைய ஆட்சியை நிலை நிறுத்தும் ஆதார அம்சங்களாகவும் அவையே விளங்கின………இன்றைய இந்திராக்களும் ராஜீவ்களும் பரோவாக்களிலிருந்தும் இராசராசன்களிலிருந்தும் அவ்வளவு வேறுபட்டவர்களல்ல…..ஆனால் கவிஞர் இன்குலாப் சொன்னது போல இடையில் ஆயிரம் ஆண்டுகள் தான் ஓடிவிட்டன. இன்றும் பிரமிடுகளையும் பெரிய கோவில்களையும் கட்டிக் கொண்டிருக்க முடியாது. அதனாலென்ன? ஆர்யபட்டா, கலர் டெலிவிஷன், அணு உலைஇவை இல்லையா? வாருங்கள் இவற்றோடு 21ம் நூற்றாண்டுக்குள் ராஜீவைப் பின்தொடர்வோம்

என்று குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய அன்றைய சொற்களுக்கு எத்தனை சரியான நிரூபணமாக அமைந்துள்ளது பார்த்தீர்களா இன்றைய அப்துல் கலாமின் உரை. எகிப்திய பரோவா, இராசராச சோழன், இந்திரா, ராஜீவ், மன்மோகன், இந்த வரிசையை நியாயப்படுத்தும் அப்துல் கலாம்ஆகா, என்ன ஒரு தொடர்ச்சி.

இரு மாதங்களுக்கு முன், ஐ. நா மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும்போது விமானத்திலிருந்தவாறே மன்மோகன் அளித்த பேட்டியில் இன்றைய பொருளாதாரச் சிக்கலைப் பற்றிச் சொல்ல வரும்போது, “எல்லாம் உலகமயத்தின் பின் விளைவுகள்என அலுத்துக் கொண்டதைப் படித்திருப்பீர்கள். இந்தியப் பொருளாதாரத்தையும் சந்தையையும் உலகமயத்திற்குத் திறந்து விட்டவரென மார் தட்டிக் கொண்ட மன்மோகன் சிக்கல் வரும்போது எல்லாம் உலகமயத்தின் விளைவு எனச் சொல்லிக் கை கழுவுவதை நாம் கவனிக்க வேண்டும். நாளைக்கு ஏதேனும் ஒரு அணு உலை வெடித்துச் சிதறினால், புவி அதிர்ச்சியும் சுனாமியும் ஒன்றாக வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றோ, அணு உலை என்றால் எப்போதாவது ஒரு முறை இப்படி நடக்கத்தான் செய்யும் என்றோ அப்போதைக்கு ஏதாவது சொல்லி இவர்கள் நழுவத்தான் போகிறார்கள்.

இந்தியாவை வலுவாக்குவது என்பது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ரொம்பவும் புரட்சிகரமான கருத்துக்களை நான் இதில் சேர்க்கவில்லை. உலக அளவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட மைய நீரோட்டக் கருத்துக்களிலேயே இரு ஒன்றுக்கொன்று எதிரான நிலைபாடுகள் உள்ளன. அவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக நாம் இங்கே இருவரை அடையாளம் காணலாம்.

ஒருவர் அப்துல் கலாம். இவரைப் பொருத்த மட்டில் இந்தியாவை வலுவாக்குவது என்பது ஏவுகணைகள், துணைக் கோள்கள், அணு குண்டுகள், அணு உலைகள், உயர் தொழில் நுட்பங்கள், நேநோ டெக்னாலஜி, நால் வழிச் சாலைகள் முதலான அகக் கட்டுமானங்கள் ஆகியவற்றை உருவாக்குதல் என்கிற மட்டத்தில் அமைகிறது.

மற்றவர் அமார்த்ய சென். இவரது அணுகல் முறை முற்றிலும் எதிரானது. இது கீழிருந்து வலுப்படுத்தும் அணுகல் முறை. எல்லோருக்கும் சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ நலம், வேலை வாய்ப்பு ஆகியவற்றை அளித்து வலுமிக்க குடிமக்களை உருவாக்கி அதன் மூலம் வலுவான நாட்டை உருவாக்குவது என்பது இவரது அணுகல் முறை.

அப்துல் கலாம் கூடங்குளப் பிரச்சினையில் என்ன பேசுவார் என எதிர்பார்த்தோமோ அதைத்தான் அவர் பேசியுள்ளார். இதில் வியப்பேதுமில்லை.

Tail Piece: அப்துல் கலாம் அவர்களை நல்ல முஸ்லிம்என்று சொன்னேன். எந்த அளவிற்கு நல்ல முஸ்லிம் என்றால் குடியரசுத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க வேட்பாளராகத் தெர்வு செய்யப்படும் அளவிற்கு நல்ல முஸ்லிம்’. இவருக்கு முன் அந்தப் பதவியில் இருந்த கே. ஆர். நாராயணன் அவர்கள் தான் பதவியில் இருந்த காலம் வரை பா.ஜ.க அரசு முன்மொழிந்ததை ஏற்று பாராளுமன்றத்தில் சாவர்கரின் படத்தைத் திறக்கச் சம்மதிக்கவில்லை. கலாம் அந்தப் பதவியில் அமர்ந்தவுடன் கிஞ்சித்தும் தயக்கமின்றி காந்தி படத்திற்கு எதிரில் சாவர்கரின் படத்தைத் திறந்து வைத்தார். அந்த அளவிற்கு கலாம் ஒருநல்ல முஸ்லிம்’.

நன்றி: அ. மார்க்ஸ்

10 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கலாமுக்கு கவர்னர் பதவி உறுதி....!!!

பெயரில்லா சொன்னது…

ஊழல், கருப்பு பண விவகாரத்திலும் இவ்வளவு அக்கறை, வேகம் இல்லாதது ஏன்?

nagaraj சொன்னது…

ஊழல், கருப்பு பண விவகாரத்திலும் இவ்வளவு அக்கறை, வேகம் இல்லாதது ஏன்?

நிவாஸ் சொன்னது…

விலைக்கு போயிட்டீங்களே ஐயா
விலைக்கு போயிட்டீங்களே

பெயரில்லா சொன்னது…

கலாம் பற்றிய உண்மைகளை காலம் உணர்த்திவிட்டது.நன்றி.

kumar சொன்னது…

intha katturaikku doctor kalam avarkalin pathil enna

inba சொன்னது…

avar india vin sothu. avarukku athil anubavam irukkirathu. ithai purinthu kollaadha makkalai ninaithaal varuthamaaga irukkirathu.

VANJOOR சொன்னது…

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

*****
ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம்.
****

.

Kumar சொன்னது…

கம்னிஸ்ட் எதை ஏற்றுகொண்டது இதை ஏற்றுகொள்ள ?!
தகவல் தொழில்நுட்ப புரட்சி வந்தபோது கூட , வேலை வாய்ப்பு இருக்காது என்றனர்..இப்போ அது தான் இன்றைய (இளைய) சமுதாயத்துக்கு சோறு போடுது.
7 அல்லது 8ரிக்டர் நில நடுக்கம் இன்றைக்கு வந்தால் கூட தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் பக்கத்து மாவட்டங்களும் இருக்காது.

niyas சொன்னது…

கலாமின் உண்மையான அறிவு என்ன என்பதும் நாட்டு மக்களின் மீது அவர் கொண்டுள்ள அக்கறை என்ன என்பதும் இவ்விசயத்தில் நமக்கு தெளிவாகிறது . பாமரனும் அச்சப்படும் ஒரு ஆபத்தை கண்டு கொள்ளாமல் அந்நிய சக்திகளின் அடிவருடியாகவும் ஆளும் வர்க்கத்தின் ஊது கோலாகவும் தன்னை காட்டி கட்டையில் போகும் வயதில் என் இந்த ...........................

கருத்துரையிடுக