வெள்ளி, நவம்பர் 04, 2011

கேள்விகள் தொடர்கின்றது #தூக்குக் கயிறே என் கதை கேள்! (11)

ங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கும் என்னுடைய கேள்விகள் தொடர்கின்றது.

கேள்வி 18: ''நீதிபதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்​பட்டவர்கள் அல்ல; அவர்களும் மனிதர்களே!'' - சட்டரீதியான, நீதி வழியிலான அற்புதமான இந்தக் கருத்தை பல வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதிவு செய்து இருக்கிறார்கள். ''மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்ச் சாட்சி​யங்களின் அடிப்படையில் அப்பாவிகள் தண்டிக்கப்பட வாய்ப்பு துளி அளவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. போதுமான அடிப்படைகளும், ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளையும், நீதிபதிகளின் முடிவுகளையும் மறுக்கவோ, விமர்சிக்கவோ சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்டப்படி உரிமை உண்டு!'' என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த வழக்கில் சிபி.ஐ-யினரின் சாட்சியங்களை அடிப்படையாகக்கொண்டும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்ட விதியினை அடிப்படையாகக் கொண்டும்தான் நாங்கள் நிரபராதிகள் என்று வலியுறுத்துகிறோம். எமக்கு இழைக்கப்பட்டு இருக்கிற அநீதிகளையும், சித்ரவதைகளையும் நாங்கள் வெளியே சொல்வதைக்கூட உங்களால் ஏற்க முடியவில்லை. 'தூக்கில் போடு’ எனக் குரல் எழுப்புகிறீர்கள். உங்கள் தலைவி சோனியா காந்தி அவர்களே எங்களை மன்னிக்கச் சொன்ன பிறகும் நீங்கள் உடன்பட மறுக்கின்றீர்களே... அப்படி என்றால், உங்களுக்கு இருக்கும் நாட்டுப் பற்று சோனியா காந்தி அவர்களுக்கு இல்லை என்றுதானே சொல்ல வருகிறீர்கள்? எங்களை மன்னித்து தண்டனையைக் குறைக்கும்படி பரிந்துரை செய்தது சோனியா காந்தியின் தனிப்பட்ட விடயம் என்று மேடைக்கு மேடை பேசுகிறீர்கள். நாட்டு நலனைவிட, சட்டத்தைவிட சோனியா காந்தி அவர்களுக்குத் தனிப்பட்ட உணர்வும், உணர்ச்சியுமே முக்கி​யம் என்று நீங்கள் பிரசாரம் செய்வது உங்களுக்கே தகுமா? ராஜீவ் காந்தியை தணு ஒரு முறைதான் கொலை செய்தார்.

ஆனால், பரபரப்பு அரசியலுக்குத் தேவைப்படும் போதெல்லாம், அந்த உடலை எடுத்துவைத்துஆராய்ச்சி என்கிற பெயரில் நீங்கள் 20 வருடங்களுக்கும் மேலாகக் கொலை செய்கிறீர்களே... இது என்ன நியா​யம்?

19. எமக்கு மரண தண்டனை வழங்​கிய தலைமை நீதிபதி அவர்கள் 2.9.2011 அன்று 'கிsவீணீஸீ கீமீதீ' என்ற இணையதளத்தில் தனது மனசாட்சியை இறக்கிவைத்தார். அதில், நாங்கள் அப்பாவிகளாக, நிரபராதிகளாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு எனச் சொல்லி இருக்கிறார். எமக்​குத் தூக்குத் தண்டனை வழங்கியது தவறு என்​கிறார். எம்மை தூக்கில் போட்டுக் கொன்றால், 2,000 வருடங்களுக்கு முன் நிரபராதியான ஏசுவை சிலு​வையில் அறைந்து கொன்றதுபோன்ற பெரும் தவறினை இப்போது செய்தது போலாகிவிடும் என்று மனசு துடிக்கச் சொல்லி இருக்கிறார். எமக்குத் தீர்ப்பு எழுதிய நீதிபதியின் மனக் குரலைவிட, எங்​கள் தரப்பின் நியாயத்துக்கு வேறென்ன பிடி​மானம் வேண்டும்? சி.பி.ஐ. சொல்வதை நம்பும் நீங்கள் - நீதிமன்றக் கருத்துகளை நம்பும் நீங்கள் - அந்த நீதிபதியின் ஆன்ம அலறலை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? உங்களின் சந்தேகத்துக்கு ஆதாரம்தான் என்ன? 'இலங்கைத் தமிழர்கள் இப்படித்தான் செய்வார்கள்’ என்கிற கருத்தா? இல்லை, 'குற்றவாளிகளாக நாங்கள் அடையாளப்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட

வெறுப்​பா?’

20. கேரளாவைச் சேர்ந்த மெர்வின் என்ற பெண்ணின் கணவர் பாபு எலியாஸ் அரபு நாட்டில் இருந்தார். அவரை நெல்லையைச் சேர்ந்த இரண்டு பேர் கொலை செய்துவிட்டனர். கொலையாளிகளுக்கு சட்டப்படி மன்னிப்பு வழங்கி இரு உயிர்களையும் காப்பாற்ற மெர்வின், 'கொலைக்குக் கொலைதான் தீர்வா? இரண்டு பேரின் உயிர்களை எடுப்பதால் என் கணவரின் உயிர் திரும்பக் கிடைத்துவிடுமா?’ என அவர் எழுப்பிய மனிதநேயக் குரலே நீதியின் கவனத்தைத் திருப்பி, அந்தக் கொலைகாரர்களைக் காப்பாற்றியது. சோனியா காந்தி அவர்களுக்கு மெர்வின் ஒரு கடிதம் எழுதினார். 'மிகச் சாதாரண பெண்மணியான நானே இரண்டு உயிர்கள் வாழ்வதற்குக் காரணமாக இருக்கிறேன். மிக உயரிய இடத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் கணவரின் கொலை வழக்கில் சிக்கி இருப்பவர்களுக்காக நிச்சயம் மனம் இரங்க முடியும்’ என அதில் கோரிக்கை வைத்திருந்தார். அந்த நிஜத்தைப் படித்த பிறகுதான் சோனியா காந்தி அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதினார். எமக்கான தண்டனையைக் குறைக்கப் பரிந்துரை செய்தார். அதன்பேரில் நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்​பட்டது. எமது தண்டனை கடந்த 10 வருட காலமாக அப்படியே இருக்கிறது. எங்களின் தண்டனைக் குறைப்புக்காக சோனியா காந்தி அவர்கள் கடிதம் கொடுத்தபோது அமைதியாக இருந்த நீங்கள், 10 வருடங்கள் கழித்து எம்மைத் தூக்கில் போட்டு சாகடிக்கும்படி உண்ணாவிரதம் இருக்கிறீர்கள். காரணம் தேசபக்தி என்கிறீர்கள்... ராஜீவ் காந்தியை மட்டும் அல்லாது சம்பவ இடத்தில் இருந்த 17 பேர்களையும் கொலை செய்தோம் என்கிறீர்கள்... அவர்களின் குடும்பங்களைத் திரட்டிவந்து எமக்கு எதிராகக் கொடி பிடிக்க வைக்கிறீர்கள். எங்களைக் காவு வாங்குவதற்காக இறந்தவர்களின் குடும்பத்தவர்களிடத்தில் பழைய வருத்தங்களைக் கிளறுகிறீர்களே... இதுதான் உங்கள் மனசாட்சியின் மகத்துவமா?

21. உச்ச நீதிமன்றம் முடிவு செய்துவிட்ட ஒரே காரணத்தினாலேயே சட்டக் கயிறு எங்களின் கழுத்தை இறுக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தும் நீங்கள், இரண்டு விடயங்களில் உச்ச நீதிமன்ற முடிவுக்கே எதிராக நிற்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் (TADA Act) வராது என்றும், ராஜீவ் காந்தி கொலை நாட்டுக்கு எதிரான குற்றம் அல்ல என்றும், அது ஒரு பயங்கரவாதச் செயல் அல்ல என்றும், 21.5.91 அன்று ஸ்ரீபெரும்புதூர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியைத் தவிர மற்ற எந்த நபருடைய இறப்புக்கும் நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்றும் உறுதியான வார்த்தைகளால் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பினை நீங்கள் உணர மறுப்பது ஏன்?

நீதிமன்றத் தீர்ப்புகளில்கூட உங்களுக்குஉகந்தது எது என்பதை மட்டுமே எடுத்துவைத்துப் பேசுகிறீர்களே... இதுதான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நீதிக்குக் கொடுக்கும் மரியாதையா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வார்த்தைகளை மறந்துவிட்டு 17 பேர்களின் குடும்பங்களைத் திரட்டிவந்து போராட்டம் நடத்தும் புண்ணியவான்களே... நீங்கள் செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

கொலைகாரர்களுக்கு ராஜீவ் காந்தியைக் கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். சம்பவத்தை நிகழ்த்தினால் எத்தனை பேர் சாவார்கள் என்பதை அவர்கள் சட்டை செய்திருக்க மாட்டார்கள். ஆனால், ராஜீவ் காந்தியோடு மட்டும் அல்லாது, இன்னும் பலரைச் சாகடிக்கிற சதித் திட்டத்தோடு கொலையாளிகள் வந்ததாக அர்த்தமற்ற அரசியல் கூச்சல் போடுகிறீர்கள். 'உங்கள் குடும்பத்தினரைக் கொன்​றவர்கள் இவர்கள்தான்... அவர்கள் தப்பிக்கலாமா? இறந்த​வர்​களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால், கொ​லைகாரர்கள் தூக்கில் போ​டப்பட வேண்டும்?’ என எம்​மைக் கைகாட்டி உணர்ச்​சியைக் கிளப்புகிறீர்கள் உங்களின் அரசியலுக்கு உறவு​களை இழந்தவர்களின் பரித​விப்பை ஊறுகாயாகப் பயன்​படுத்துகிறீர்கள். உங்களின் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... உங்களில் எத்தனை பேர் அந்த 17 பேர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லப் போனீர்கள்? அந்தக் குடும்பங்களின் நல்லது கெட்டதுகளில் நீங்கள் எத்தனை பேர் பங்கெடுத்தீர்கள்? 'எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியைப் பார்க்க வந்ததால்தானே உங்களுக்கு இந்த நிலை. உங்களின் கஷ்டங்களில் இனி நாங்கள் உடன் இருக்கிறோம்?’ என உளமார்ந்த ஆறுதலை உங்களில் எத்தனை பேர் சொன்னீர்கள்? அந்தத் துயர சம்பவத்தில் தன் உறவைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இன்றைக்கு வாழவே வழி இல்லாமல், அனுதினமும் அல்லாடித் தவிப்பது உங்களுக்குத் தெரியுமா? அவருடைய பெயரை நான் சொல்லப் போவது இல்லை. 17 பேர்களின் குடும்பங்களைத் திரட்டி வந்து தெருவில் நின்றீர்களே... அதேபோல், நான் கோடிட்டுக் காட்டும் அந்தக் குடும்பஸ்தனையும் தேடுங்கள். அப்படி ஒருவர் உங்களின் கண்ணுக்குத் தெரியாவிட்டால், அப்போது கேளுங்கள். காங்கிரஸ் கட்சியின் மிகக் கொடூர அரசியலை அம்பலம் ஆக்கும் விதமாக அந்த கஷ்ட ஜீவனக்காரரை உங்களின் கண் முன்னால் நிறுத்துகிறேன். ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை, - அதுவும் காங்கிரஸ் குடும்பத்தை வாழவைக்கத் தெரியாத நீங்கள் எங்களைச் சாகடிப்பதற்காக அவர்களின் கைகளைப் பிடித்து அழைத்து வருகிறீர்களே... இது எவ்வளவு பெரிய மோசமான காரியம்?

22. இத்தனைக் கேள்விகள் உங்களுக்குப் போதும். நான் வரிசைப்பட வைத்திருக்கும் அத்தனைக் கேள்விகளையும் அலசி ஆராய்ந்தவர்களாகச் சொல்லுங்கள். நாங்கள் குற்றவாளிகளா? ராஜீவைக் கொலை செய்யும் சதி உண்மையிலேயே நாங்கள் நிகழ்த்தியதுதானா? விசாரணை அதிகாரிகள் போகிறபோக்கில் எங்கள் வயிற்றில் அடித்த நிகழ்வுதானே இது. எங்களைத் தூக்கில் போடு​வதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? மரணப் போர்வை போர்த்தியபடிதானே இத்தனை நாட்களும் நாங்கள் வாடிக்கிடக்கிறோம். 21 வருடங்களாக அடைபட்டுக் கிடக்கும் எங்களின் நியாயம் நிச்சயம் உங்களின் நெஞ்சத்து நீதிபதியை கருணைகொள்ள வைத்திருக்கும் என்பது எமது நம்பிக்கை.

இதற்குப் பின்னரும், 'நீங்கள்தான் குற்றவாளிகள். உங்களைத் தூக்கில் போடுவதுதான் ஒரே தீர்வு!’ என நீங்கள் உறுதியாக நின்றால், அதை தைரியத்தோடு ஏற்றுக்கொள்ளத் தயார். அதற்கு முன் உங்களிடத்தில் ஒரு கோரிக்கை... மன்னிக்கிற மனோபாவத்துக்கும், உயரிய எண்ணங்களுக்கும் நீங்கள் வளராவிட்டாலும், விஞ்ஞானம் இன்றைக்கு பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. துல்லியமாக உண்மைகளைக் கண்டறியும் விஞ்ஞானப் பரிசோதனைகள் வந்துவிட்டன. ஒருவனை அந்த விசாரணைக்கு உட்படுத்தினால், பால்ய கால நினைவுகளைக்கூட அவனது மூளைச் சேமிப்பில் இருந்து எடுக்க முடியும் என்கிறார்கள். அத்தகைய சோதனைக்கு நீங்கள் என்னை உட்படுத்த வேண்டும். என்னைக் காப்பாற்றக் கோரி உங்களிடம் கதறினால்தானே தவறு. கடைசியாக என்னை ஒரு முறை விசாரிக்கச் சொல்கிறேன். என் மனக் கிடக்கையில் சொல்ல முடியாமல் கிடக்கும் ஆயிரமாயிரம் எண்ணங்களை அந்த விசாரணை முடிவில் அறிந்துகொள்ளுங்கள். மனிதர்களின் விசாரணையில் எமக்கு சம்மதம் இல்லை. விஞ்ஞானமும் எங்களின் ரணமான மனதோடு சில மணி நேரங்கள் விளையாடிப் பார்க்கட்டும். மரணத்துக்கு முந்தைய ஒப்புதல் வாக்குமூலமாக அதுவே மாறட்டும். அதைக் கேட்கிற உளத் துணிச்சலும் உண்மையைத் தாங்கிக்கொள்ளும் பக்குவமும் உங்களுக்கு இருந்தால், அந்த இறுதி வார்த்தைகளைக் கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னைத் தூக்கில் போட்டுக் கொன்றாலும் சரி... வெட்டி வைத்துத் தின்றாலும் சரி!

காயங்கள் ஆறாது

நன்றி: ஜூனியர்விகடன், 06-11-11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக