அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 15, 2013

அன்று பராசக்தி... இன்று 'பல்டி'யேசக்தி!


'சாந்தா அல்லது பழனியப்பன்’ - இது கருணாநிதி  போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ’ - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.

ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது. அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, 'என்னது... சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது 'ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்... பச்சைத் துரோகம்!
முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால், இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
''இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில் 'முதல்வராக’ இருந்தபோது, ''நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப் பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்'' என்று சொல்லிச் சமாளித்தவர்.
லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை. 'கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். 'இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ''பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி'' என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!
''இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்'' என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை. 'போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ''அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே... அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் 'பாதுகாப்பான இடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டு கள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.
''நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி  உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?'' என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ''மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்'' என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. 'கொன்றுவிட்டார் கள்... கொடுமைப்படுத்தினார் கள்... சித்ரவதை செய்தார்கள்’ என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. 
அப்போதும் 'முதல்வர்’ கருணாநிதி, ''இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல'' என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ''போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை'' என்றார். அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.
''இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்'' என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். 'போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக் காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.
''போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல'' என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ''அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது'' என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும். ''ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்'' என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.
போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ''முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து'' என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ''அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை... பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்'' என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப் பட்டபோது, ''இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்'' என்று மிரட்டல் விடுத்து,  பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து... இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.
  
சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ''பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்'' என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ''விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்'' என்று கிண்டல் அடித்ததும், ''இன்று அனை வரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்'' என்பவர், அன்று, ''ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்'' என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.

ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு... என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ''ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!'' என்று தந்தை பெரியார் சொன்னார்.
அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?


Courtesy: Ananda Vikatan

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

இப்படித்தான் இருண்டது தமிழகம்!

நாய்க்குப் பேரு வெச்சீங்களே, சோறு வெச்சீங்களாடா?’- இது காமெடி.

'இலவசமா டி.வி. கொடுத்தீங்களே, மிக்ஸி குடுத்தீங்களே... கரன்ட் கொடுத்தீங் களா?’ - இது டிராஜெடி.

இப்போது இன்னமும் அழுத்தமாக முகத்தில் அறைகிறது, மின் கட்டணஉயர்வு. அதுவும் கொஞ்சநஞ்சம் இல்லை... 37 சதவிகித மின் கட்டண உயர்வு!

''கரன்ட் வர்றதே ரொம்பக் குறைவு. ஆனா ரேட்டைக் கூட்டி, நாம கட்டுற பணத்தை மட்டும் குறையாமப் பார்த்துக்கு றாங்க போலருக்கு!'' என்ற கடைக்கோடித் தமிழனின் வேதனை மொத்தத் தமிழ் நாட்டுக்கும் பொருந்தும்.

எந்த நேரத்தில் மின்சாரம் வரும், எப்போது போகும் என்பது யாருக்கும் தெரிய வில்லை. ''அது வந்தாலும் ஒண்ணுதான் வராட்டின்னாலும் ஒண்ணுதாங்க. காலை யில 8 மணிக்கு டாண்ணு போகுது. அவசர அவசரமா வேலைகளை முடிச்சுட்டு நிமிர்ந்து உட்கார்ந்தா, கொஞ்ச நேரம் வருது. அப்புறம் 11 மணிக்கு மறுபடியும் போயிருது. பகல் எல்லாம் புழுக்கத்துல வெந்து சாகணும். அப்புறம் வெயில் தாழ 4 மணிக்கு வரும். அதுக்குள்ள புருஷன், புள்ளைங்கல்லாம் வீட்டுக்கு வந்திருமேனு மறுபடியும் வீட்டு வேலைகளை ஆரம்பிக் கணும். ராத்திரி தூங்கலாம்னா, அப்பவும் நாலு மணி நேரம் நிறுத்திடுறாங்க. இந்த கரன்ட் கட்டால வீட்டுல உள்ள பொம்ப ளைங்க படுற அவஸ்தை, ரொம்பக் கொடுமை!'' என்று நீங்கள் புலம்பியிருக்கக் கூடும் அல்லது அந்தப் புலம்பலை நெருக்கத்தில் கேட்டிருக்கக் கூடும். குடும்பஸ்தர்கள், தொழில் செய்பவர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் வேட்டுவைக்கி றது மின்வெட்டு. 'இந்தப் பிரச்னை எப்ப தான் தீரும்?’ என்ற கேள்விக்குப் பதில் அறிய, இந்தப் பிரச்னை எப்படித் தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மின் வாரியத்தில் பணிபுரிந்தவரும் தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவருமான சா.காந்தியுடன் பேசினேன். ''தொண்ணூறுகளில் தமிழ்நாடு மின்மிகு மாநிலம். நம் தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்தோம். அப்போது மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராகக்கொண்ட மத்திய அரசு, பொதுத் துறையில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்கான அனுமதியை முடக்கியது. தனியார் மின் உற்பத்தியை ஊக்குவித்தது.

இதனால், தனியார் மின்சாரத்தை மாநில மின்சார வாரியம் விலை கொடுத்து வாங்கத் தொடங்கியது. இதற்கு இடையே திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக, நோக்கியா, செயின்ட் கோபியன், பாக்ஸான் போன்ற பிரமாண்ட நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் மாநிலம் முழுக்க முளைத்தன. இவை அனைத்தும் அசுரப் பசியோடு மின்சாரத்தைக் குடிக்க ஆரம்பித்தன. மறு பக்கம் பொதுமக்களின் மின் பயன்பாடும் அதிகரித்தது. இரு தரப்புகளின் தேவையையும் நிறைவு செய்ய முடியாமல் மின்சார வாரியம் தடுமாற ஆரம்பித்தது. பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவற்றுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கியே ஆக வேண்டும் என்பது அரசாங்கமே ஒப்புக்கொண்ட ஒப்பந்தம்.

தேவையான அளவுக்கு மின்சாரம் இருக்கிறதா, தர முடியுமா என்பதை எல்லாம் யோசிக்காமல் போடப் பட்ட இந்த ஒப்பந்தங்களால் மின்சார வாரியம் தடுமாறிப் போனது. வேறு வழியே இல்லாமல், தனியாரிடம் ஒரு யூனிட்டுக்கு 14 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி, 3.50 ரூபாய்க்கு விற்றார்கள். ஒரு பொருளை 10 ரூபாய்க்கு வாங்கி 2 ரூபாய்க்கு விற்றால் நஷ்டம் வருமா, வராதா? வந்தது! தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய மொத்தக் கடன் 53,300 கோடி ரூபாய். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கோ ஒப்பந்தப்படி தடையில்லா மின்சாரம் கொடுத்தாக வேண்டும். ஆகவே, இருக்கும் மின்சாரத்தில் அவர்களுக்குக் கொடுத்தது போக மீதி உள்ளதை மக்களுக்கு மின் வெட்டுடன் பகிர்ந்து தருகிறார்கள். திடீரென மின்வெட்டு அதிகரித்து வருவதன் பின்னணி இதுதான்!'' என்கிறார் காந்தி.

தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 2 கோடி டி.வி-க்கள் இருக்கின் றன. இவை நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 மெகா வாட் மின்சாரத்தை உறிஞ்சுகின்றன. இப்படிப் பொருளாதார வளர்ச்சியினால் மக்க ளிடம் அதிகரித்து இருக்கும் மின்னணுப் பொருட்களின் பயன்பாடு, மின் பகிர்மானத்தில் ஏற்படும் இழப்பு, மின் திருட்டு இவை எல்லாம் இதர காரணங்கள். மனிதர்கள் செய்துவந்த பல வேலைகளை இன்று இயந்திரங்கள்தான் செய்கின்றன. அவை அனைத்தும் அதிக மின்சாரத்தை உறிஞ்சுபவையே.

இந்த விவகாரம்பற்றிப் பேசிய தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ், ''வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு அரசு சொல்லும் முக்கியக் காரணம் வேலைவாய்ப்பு. ஆனால், உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களை விட, இங்கு உள்ள சிறு, குறு தொழில்களின் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள்தான் அதிகம். இத்தனைக்கும் பெருநிறுவனங்கள் வேலைவாய்ப்புத் தருவதாக சொல்லி வாட்ச்மேன் களாகவும் கூலித் தொழிலாளிகளாகவும்தான் நம் ஆட்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், எங்களுக்கு 8 மணி நேரம், 10 மணி நேரம் பவர் கட். அவர்களுக்குத் தடையில்லா மின்சாரம். கோவையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிறு, குறு தொழில்களைவிட்டு வெளியேறிவிட்டனர். நிலைமை இப்படியே தொடர்ந்தால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை இழந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும்!'' என்று எச்சரிக்கிறார்.

இந்த மின்வெட்டு பல்வேறு எதிர்பாராத திசைகளில் மக்களுக்குப் பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. கோவை மின் மயானத்தில் பிணங்கள் எரிந்துகொண்டு இருக்கும்போதே பாதியில் மின்சாரம் போய்விடுவதால், கேஸில் இயங்கும் வகையில் மயானத்தை மாற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பாக இன்குபேட்டரில் வைத்து இருக்க வேண்டும். மின் தடையால் அதிலும் சிக்கல். ''அன்னைக்கு ஒரு கல்யாணம். கரெக்ட்டா தாலி கட்டுற நேரத்துல கரன்ட் போச்சு. உடனே, ஜெனரேட்டர் போட்டாச்சுனு வைங்க. இருந்தாலும், எல்லாரும் அதை ஒருகெட்ட சகுனமா நினைச்சு முகம் சுருங்கிப்போயிட்டாங்க!'' என்றார் நண்பர் ஒருவர். இப்போதெல்லாம் பெண் பார்க்க/மாப்பிள்ளை வீடு பார்க்கச் செல்பவர்கள் மின்சாரம் இருக்கும் நேரம் பார்த்துதான் செல்கின்றனர்.

கோவை பஞ்சாலைகள் சிலவற்றில் நடப்பதாகச் சொல்லப்படும் செய்தி அதிர்ச்சியானது. ஒரு ஷிஃப்ட்டில் மின்வெட்டு ஆகும் நேரத்தின் பணியை அடுத்த ஷிஃப்ட்டில் சேர்த்துப் பார்த்துக் கழிக்க வேண்டும். இதனால் ஒரு தொழிலாளி 12 மணி நேரம், 15 மணி நேரம் தொழிற் சாலையில் இருக்க வேண்டி இருக்கிறது. இப்படி யூகிக்க முடியாத திசைகளில் இருந்தெல்லாம் மின்வெட்டு பிரச்னை களை ஏற்படுத்திவருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மாநிலம் முழுக்கப் பல்லாயிரம் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் ஷாப்பிங் மால்களும் முளைத்து உள்ளன. மக்களின் மின்உபயோ கமும் ஏ.சி. பயன்பாடும் அதிகரித்து உள்ளது. ஆனால், பொதுத் துறை மின் உற்பத்தி மட்டும் அப்படியே இருக்கிறது. சமீபத்திய பட்ஜெட்டில் முதல்வர் ஜெயலலிதா சில மின் உற்பத்தித் திட்டங்களை அறிவித்துஇருக்கிறார். அவை எல்லாம்செயல்பாட் டுக்கு வர மேலும் சில மாதங்களோ, வருடங்களோ பிடிக்கும். கோடை காலம் நெருங்கிவருகிறது. ஏ.சி. மெஷின்கள் முழு வீச்சில் திறக்கப்பட்டால், இந்த மின்வெட்டு இன்னும் கூடுதலாகும் சாத்தியம் அதிகம் உண்டு.

இந்திய மின்சாரச் சட்டத்தை 1948-ல் கொண்டுவந்த அம்பேத்கர், 'மின்சாரம் ஓர் அத்தியாவசியத் தேவை. அதை லாப நோக்கின்றி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்’ என்றார். ஆனால், 2003-ல் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு அந்த சட்டத்தை மாற்றி, 'கல்வி, மருத்துவம்போலவே மின்சாரமும் ஒரு விற்பனைப் பொருளே. அதை மக்களுக்கு மானிய விலையில் தரத் தேவை இல்லை. மின்சாரத்தின் விலை சர்வதேசச் சந்தை விலையுடன் அமைந்திருக்க வேண்டும்!’ என்று புதிய மின் சட்டத்தை இயற்றியது.

மின்சாரத்தை ஓர் இயற்கை வளமாக, அடிப்படைத் தேவையாகப் பார்க்காமல், பணம் உள்ளவன் பயன்படுத்தும் பண்ட மாகப் பார்ப்பதன் விளைவுதான், நிறுவனங் களுக்குத் தடையில்லா மின்சாரமும் மக்களுக்குத் தாள முடியாத மின் வெட்டும்!

=பாரதிதம்பி

நன்றி: ஆனந்தவிகடன், 11.04.2012

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஈழம் இன்று! -ப.திருமாவேலன்

ஈழம்... இந்த நூற்றாண்டின் சொல்லி மாளாத சோகம்!

இரண்டரை ஆண்டுகளைக் கடந்த பிறகும், மரண பீதி இன்னும் விலகவில்லை. கடவுளின் வரைபடத்தில்கூட இல்லாத தேசமாகிவிட்டது. சிதைக்கப்பட்ட இடங்களின் சிதிலங்கள் மீது சிமென்ட் பூசி மறைக்கும் காரியங்கள் மட்டும்தான் இந்த 30 மாதங்களில் நடந்துள்ளன. மிச்சம் இருப்பவர்களை உரிமை பெற்றவர் களாக அல்ல... உயிர் உள்ளவர்களாகக்கூட மதிக்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே உலகத்துக்கான சேதி!

இன்னமும் முறியாத முள் வேலி!

'விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல... மொத்தத் தமிழர்களும் போராளிகள்தான். அவர்களை வெளியே விடுவது ஆபத்து!’ என்று அனைத்துத் தமிழர்களையும் நடுக் காட்டுக்குள் திறந்தவெளிச் சிறைவைத்து... சுற்றிலும் இரும்பு முள் வேலி அமைத்தார் கள். அதில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டார்கள். இப்படி ஒரு மனித உரிமை மீறல் உலகத்தில் எங்கும் நடந்தது இல்லை என்று ஐ.நா. சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் திரும்பத் திரும்பச் சொல்லி, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் சூழ்நிலை வந்த பிறகுதான்... வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை வெளியே விட்டார்கள். முள் வேலிக்குள் இருப்பவர்களுக்கும் சரியான சாப்பாடு, குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்காமல்விட்டதில் பலரும் நொந்தே செத்துப்போனார்கள். கையில் பணமும் நகையும் வைத்திருந்தவர்கள், அங்கே இருந்த சிங்கள அதிகாரிகளுக்கு அதைக் கொடுத்து வெளி நாடுகளுக்குத் தப்பித்தார்கள். இப்படிப் பலரும், பல வழிகளில் தப்பியது போக.... இன்னமும் கதிர்காமர் மற்றும் ஆனந்த குமாரசாமி ஆகிய இரண்டு முகாம்கள் இருக்கின்றன. கதிர்காமர் முகாமில் 1,017 குடும்பங்களும் ஆனந்த குமாரசாமி முகாமில் 1,262 குடும்பங்களும் என, மொத்தம் 7,540 பேர் மட்டுமே இருப்பதாகக் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது.

முகாமைவிட்டு வெளியே வந்து தங்களது சொந்த ஊருக்குச் சென்ற பலருக்கும் அவர்களது வீடு இருந்த சுவடே இல்லை. மரங்கள் உள்ள இடத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள். அவர்களது சொந்த நிலம் எங்கே என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. 'அரசாங்கம் எடுத்துக் கொண்டுவிட்டது. பழைய பத்திரங்கள் செல்லாது!’ என்று சொல்லிவிட்டார்கள். மீன் பிடிக்கக் கடற்கரைக்கும் செல்ல முடியாது. இடிபாடுகள்கொண்ட பழைய கட்டடங்களையும் தெருக்களையும் பார்த்த படியே படுத்துக்கிடக்கின்றன தமிழ்க் குடும்பங்கள். 80 ஆயிரம் விதவைகள், 5,000 உடல் ஊனமுற்றோர் அநாதைகளாக அலைகிறார்கள். எங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று குவிந்த புகார்களில் இருந்து 49 குழந்தைகள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா கொடுத்த கோடிக்கணக்கான பணத்தைவைத்து இதுவரை 50 வீடுகள்கூடக் கட்டித் தரவில்லை என்கிறார் எம்.பி-யான சீ.யோகேஸ்வரன். 'எங்களை யாரும் கேள்வியே கேட்க முடியாது’ என்பதுதான் ராஜபக்ஷே, தமிழர்களுக்குச் சொல்லும் ஒரு வரிச் செய்தி!

எங்கும் ராணுவமயம்!

''வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது!'' என்று தமிழ் எம்.பி-க்கள் கூட்டமைப்பு சொல்கிறது. அதை உறுதிப்படுத்துவது மாதிரியே திரும்பிய பக்கம் எல்லாம் ராணுவம்... ராணுவம்... ராணுவம் மட்டுமே!

''போர் முடிந்துவிட்டதே... அப்புறம் எதற்கு ராணுவத்தினரை இந்த அளவுக்கு நிறுத்திவைத்து இருக்கிறீர்கள்? அவர்களை வாபஸ் வாங்க வேண்டியதுதானே?'' என்று தன்னைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவிடம், ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன் கேட்டார். ''அவர்கள்தான் இப்போது தமிழர்களுக்குச் சேவை செய்கிறார்கள். அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களை யும் அமல்படுத்த அவர்களைத்தான் பயன் படுத்துகிறோம்!'' என்றார் ராஜபக்ஷே. துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமூக சேவை செய்பவர்களை இலங்கையில்தான் பார்க்க முடியும். வடக்கில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. கிழக்கில் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், யாழ்ப்பாணத்தில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படிப்பட்ட யாழ்ப்பாணத்திலேயே இன்னும் 44 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருப்பதாக, அந்த மாவட்டத்து எம்.பி. சொல்கிறார். அதன் மொத்த மக்கள் தொகையே 6 லட்சம்தான்!

இலங்கை முழுவதும் ஆறு ராணுவப் படைத்தளங்கள் உள்ளன. அதில் நான்கு, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி ஆகிய இடங்களில் உள்ளன. ராணுவத்தின் 17 டிவிஷன்கள் அங்கு உள்ளன. சிங்களப் பகுதியில் நான்கு டிவிஷன்கள் மட்டுமே இருக்கின்றன. 'இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதற்காகவே இவர்களை நிறுத்திவைத்து இருக்கிறார்கள்!’ என்று தமிழ் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டுகிறார்கள்!

சிங்களமயமாகும் தமிழ் நிலம்!

''வடக்கும் கிழக்கும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம். எனவே, இது தமிழர் தாயகம். இவை இரண்டையும் இணைத்து தமிழ் ஈழம் அமைப்போம்!'' என்பதுதான் தமிழர்கள் இதுநாள் வரை வைத்த கோரிக்கை. வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைப் பெரும்பான்மை ஆக்கிவிட்டால்? தமிழர் தாயகம், இணைப்பு, தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே செல்லாததாக ஆகிவிடும் அல்லவா? ராஜபக்ஷேவின் திட்டம் இதுதான். இப்போது தமிழர் பகுதியில் இதுதான் நடக்கிறது.

தமிழர் கையில் இருந்த நிலங்களை வித்தியாசமான தந்திரத்தின் மூலம் பறிக்கிறார்கள். 'ஊர்க் காவல் படைக்கு இடம் வேண்டும்’, 'ராணுவத்துக்கு இடம் வேண்டும்’ என்று சொல்லி, மொத்தமாக அரசாங்கம் எடுத்துக்கொள்கிறதாம். பிறகு, இந்த இடங் கள் ராணுவ வீரர்களுக்குத் தரப்படுகின்றன. அவர்கள் சிங்கள மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இந்த மாதிரி கையகப்படுத்தப்பட்டு சிங்களவர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. ''புதிய முகாம் அமைத்தல், ராணுவத்துக்கான இடவசதிகள், ராணுவத்தின் தேவைகள் ஆகியவற்றுக்காக காணிகளை எடுப்பது என இடங்கள் பறிக்கப்படுகின்றன. மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்று தங்களது வாழ்க்கையைத் தொடங்க முடியாமல், அவர்களது வாழ்க்கையே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது!'' என்கிறார் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தம். இதனால், ஓமந்தை என்ற இடம் 'ஓமந்த’ என்ற சிங்கள உச்சரிப்புடன் சொல்லப்படுகிறது. கொச்சன்குளம் என்ற ஊர் 'கால பொவசெவெள’ என்று மாற்றப்பட்டு விட்டது. தமிழில் எழுதப்பட்ட பலகை கள் அழிக்கப்பட்டு... சிங்களம், ஆங்கிலத் தில் எழுதப்படுகின்றன. கிளிநொச்சியில் பிரதான தெருவுக்கு 'மகிந்த ராஜபக்ஷே மாவத்தை’ என்று சூட்டப்பட்டு உள்ளது. இந்து, கிறிஸ்துவக் கோயில்கள் இடிந்த நிலையில் கிடக்க... புத்த விகாரைகள் புத்துணர்வு பெற்று எழுகின்றன!

நடுங்கும் ராஜபக்ஷே!

''இலங்கைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் என் மீது தாக்குதல் நடப்பதற்கான சூழல் இருக்கிறது. அதனால்தான் ராணுவ பலத்தை நான் அதிகப்படுத்தி வருகிறேன்!'' என்று கொழும்பு கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ராஜபக்ஷே பேசும்போது சொன்னார். இலங்கைப் பகுதியில் அதிக அளவில் விழாக்களில் அவர் பங்கேற்பது இல்லை. பெரும்பாலும் அலரி மாளிகை விழாக்களில் மட்டுமே கலந்துகொள்கிறார். லண்டனுக்கு அவர் சென்றிருந்தபோது புலம்பெயர் ஈழத் தமிழர்கள், அவர் தங்கி இருந்த இடத்தைச் சுற்றி வளைத்தபோது 'எப்படித் தப்பினார்?’ என்று வெளியே தெரியாத அளவுக்கு கொழும்பு வந்து குதித்தார். இதன் பிறகு அவரது வெளிப் பயணங்கள் பலதும் தள்ளிவைக்கப்பட்டன!

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ராஜபக்ஷே மீது 'போர்க் குற்றவாளி’ என்று குற்றம்சாட்டும் வழக்குகள் பாய்ந்துவருகின்றன. இதனாலும் பயணங்கள் தள்ளிவைக்கப்படுகின்றன. ராஜபக்ஷேவுக்கு அடுத்த நிலையில் அவரது தம்பி பசில் வருவாரா அல்லது அவரது மகன் நிமல் வருவாரா என்ற உள்வீட்டுக் குழப்பம் இப்போதே தொடங்கிவிட்டது. தனது மகனைக் கொண்டுவர வேண்டும் என்பதில் மகிந்தாவின் மனைவி ஆர்வமாக இருக்கிறார். விடுதலைப் புலிகள் பேரால் கூறப்படும் ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக இலங்கை அதிகப்படியான கடன் சுமைகளில் மூழ்கிவருவதும்... இதனால் பொருட்களின் விலை அதிகமாகி வருவதும் சிங்கள மக்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கி உள்ளன. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ராணுவத்துக்கு மட்டும் 229.9 மில்லி யன் ஒதுக்கிவிட்டு உட்கார்ந்துவிட்டார் ராஜபக்ஷே. நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடந்துகொண்டு இருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து ஒருவர் தண்ணீர் பாக்கெட்டைத் தூக்கிப் போட... வெடிகுண்டு விழுந்ததைப் போல அத்தனை பேரும் பதறிப்போனார் கள். அனைவரையும்விட அதிகமாகப் பதறியவர் ராஜபக்ஷே!

கண்துடைப்பு கமிஷன்!

''ராஜபக்ஷே மீது போர்க் குற்ற வழக்கைப் பதிவுசெய்துக் கைது செய்'' என்பதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரல். இதற்கு அவர் சொன்ன பதில், ''இலங்கையில் போர் விதிமீறல் நடந்திருக்கிறதா என்று நாங்களே ஆய்வு நடத்தி, அப்படித் தவறு செய்தவர்களைக் கண்டிப்போம்!'' என்பது. அதாவது, இலங்கை ராணுவத்தினர் செய்த தவறுகளை இலங்கை அரசே விசாரிக்கும் காமெடி இது!

'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ என்று இதற்குப் பெயர். 338 பக்கம்கொண்ட இந்தக் குழுவினரின் அறிக்கை ராஜபக்ஷேவிடம் கடந்த 20-ம் தேதி தரப்பட்டது. ''மொத்த சம்பவங்களைப் பூசிமெழுகும் காரியம் இது'' என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். சிங்கள மொழி பேசியபடியே தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கும் காட்சியும்... தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் நிர்வாணமாக்கி, கண்ணைக் கட்டி சுட்டுக் கொல்லும் காட்சியும்... சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பானது. உலகத்துக்கு உண்மையைச் சொன்ன ஒரு சில நிமிடங்கள் அவைதான். அந்தக் காட்சியே பொய்யா னது என்று இந்த அறிக்கை சொல்கிறதாம். ''ராணுவத் துக்கு வேறு வழி இல்லை. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ராணுவம் நினைத்திருந்தால், தீவிரவாதிகளது கை ஓங்கி இருக்கும்!'' என்று காரணமும் சொல்கிறதாம். அதையும் மீறிச் சில சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கு சரத் ஃபொன்சேகாவும் அவரது ஆதரவு ராணுவ அதிகாரிகள் சிலரும்தான் காரணம் என்று கைகாட்டுகிறதாம் இந்த அறிக்கை. நாடாளுமன்றத்தில் இன்னமும் தாக்கல் செய்யப்படாத அந்த அறிக்கையின் சில தகவல்களை சிங்களப் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்து உள்ளன. ''இந்த அறிக்கையை ஏற்க முடியாது!'' என்று சிங்களக் கட்சிகளே சொல்ல ஆரம்பித்துஉள்ளன!

எப்படி இருக்கிறார் ஃபொன்சேகா?

மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சரத் ஃபொன்சேகா, கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கிறார். அவரது விடுதலைக்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் பொய்த்துவிட்டன. தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுத் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார் ஃபொன்சேகா. யார் இந்தத் தண்டனையைக் கொடுத்தாரோ... அதே நீதிபதிக்குப் பதவி உயர்வைக் கொடுத்து, அந்த அப்பீல் மனுவையும் அவரையே விசாரிக்கச் சொல்லிவிட்டார் ராஜபக்ஷே. பிரிந்த இந்த இரண்டு மாஜி நண்பர்களுக்குள் நடக்கும் அரசியல்தான் இன்றைய இலங்கை அரசியல். ''என் கணவரைக் காப்பாற்றுங்கள்!'' என்று ஃபொன்சேகாவின் மனைவி தான் தினமும் அறிக்கை விடுகிறார். ஃபொன் சேகாவை எப்போது எல்லாம் மருத்துவமனையில் காட்ட வேண்டுமோ... அப்போது எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அங்கு அழைத்துச் செல்ல மறுத்துவிடுகிறார்களாம். இந்த நிலையில், ஃபொன்சேகாவின் விடுதலைக்காக சிங்க ளக் கட்சிகளை ஒன்றுதிரட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குரல் கொடுத்துள்ளார். உடனே, ரணில் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் (ஹோமோ செக்ஸ் மாதிரியான புகார்கள்) சொல்லிக் கேவலப்படுத்தும் காரியங்கள் தொடங்கி இருக்கின்றன. 'ஃபொன்சேகா உயிரோடு வெளியே வர மாட்டார்!’ என்கிற அளவுக்கு அவருக்கு நெருக்கடிகள்ஏற்பட்டு விட்டனவாம்!

பேசிப்பார்க்கும் தமிழ் எம்.பி-க்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அணி திரண்டுள்ள தமிழ் எம்.பி-க்கள் மட்டும்தான் ஈழத் தமிழர்களுக்காக அந்த மண்ணில் இருந்தபடி தயங்காமல் பேசுகிறவர்கள். நாடாளுமன்றத்திலும் இவர்கள் பேச்சு நம்பிக்கை தருவதாக உள்ளது. பயன் இருக்கிறதோ இல்லையோ, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். இதுவரை 13 முறை இவர்கள் பேசி இருக்கிறார்கள். டிசம்பர் மாதம் மட்டும் நான்கு நாட்கள் பேசுவதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது. மீள் குடியமர்வு, புனர்வாழ்வு, வீட்டுவசதி, தொழில்வாய்ப்பு, அத்தியாவசியத் தேவைகள் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைப்பதோடு, அரசியல் தீர்வையும் வலியுறுத்துகிறார்கள். ''நாங்கள் எங்களுக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டோம். அரசு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை!'' என்கிறார் சம்பந்தம்.

''இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் நிதானமாகச் செயல்படுவோம். எமது மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களை விட்டுத்தர மாட்டோம்!'' என்கிறார் சம்பந்தம். இன்னும் எத்தனை சுற்று பேசுவார்கள் எனப் பார்ப்போம்!

தமிழர்களின் மௌன எழுச்சி!

தமிழர்கள் முதலில் அடி வாங்கியதும், திருப்பி அடிக்க ஆரம்பித்ததும் யாழ்ப்பாணம்தான். எல்லாவற்றுக்கும் ஆரம்பம் அதுதான். இப்போது அங்கும் சில ஒளி மின்னல்கள் கடந்த வாரத்தில் தெரிந்தன. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நவம்பர் 27 மாவீரர் நாளுக்கான நிகழ்வாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டதாம்.

'சத்திய லட்சிய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்க உறுதி பூணுவோம்!’ என்று எழுதப்பட்டதைப் பார்த்து, தமிழ் மாணவர் கள் உணர்ச்சி அடைய... அடுத்த சில நிமிடங்களிலேயே ஆறு பைக்குகளில் முகமூடி அணிந்து (ராணுவத்தினர் என்று சொல்லப்படுகிறது!) வந்தவர்கள் அந்த சுவரொட்டியைக் கிழித்துச் சென்றுவிட்டார்களாம். கானா நகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்துக்கும் பண்டத்தரிப்பான் குளம் ஸ்ரீசுந்தரேசன் பெருமாள் கோயிலுக்கும் வந்த கடற்படை வீரர்கள், 'இந்த ஒரு வாரத்துக்கு கோயிலில் மணி அடிக்கக் கூடாது!’ என்று உத்தரவிட்டார்களாம்.

மீறி ஒலித்திருக்கிறது 'மாவீரர்’ மணிஓசை!


நன்றி: ஆனந்த விகடன், 07-12-2011

திங்கள், நவம்பர் 21, 2011

சிதம்பரமும் அவரது மகனும் ஜமீன்தார் நினைப்பில் இருக்கிறார்கள் - சுதர்சன நாச்சியப்பன்

காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையைக் கலைத்துவிட்டு, ப.சிதம்பரம் மீண்டும் காங்கிரஸுக்குத் தாவிய​போது அவருக்காக சிவகங்கை நாடாளு​ மன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தவர் சுதர்சன நாச்சியப்பன். அவர்தான் திடீரென இப்போது சிதம்பரத்திற்கு எதிராக சீறுகிறார்.

''திடீரென சிதம்பரத்துக்கு எதிராக ஏன் இந்த ஆவேசம்?''

''2004-ம் ஆண்டு நான் தொகுதியை விட்டுச் சென்றபோது காங்கிரஸ் கட்சி 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கிற மாதிரி தொகுதியை வைச்சிருந்தேன். இப்போது இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கும் நிலை. கடந்த ஏழு வருஷத்தில் சிதம்பரம் செய்த சாதனை இது மட்டும்தான். உள்துறை அமைச்சரின் தொகுதியில் ஒரு நகராட்சி சேர்மனுக்குக்கூட ஆளை நிறுத்த முடியாத அளவுக்கு, காங்கிரஸை முடமாக்கிப் போட்டிருக்காங்க. ஜெயிக்கக்கூடிய ஆட்க ளுக்கும் 'கை’ சின்னம் கொடுக்காததால், அவர்கள் எல்லாம் சுயேச்சையாக நின்று ஜெயித்திருக்கிறார்கள். சிதம்பரத்தின் சொந்த ஊரிலேயே காங்கிரஸுக்கு நான்காவது இடம். இதுதான் இந்த மாவட்டத்தில் அப்பா வும் மகனும் கட்சி வளர்த்த லட்சணம். இனியும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், அது கட்சிக்கும் தலைமைக்கும் செய்த துரோகம் ஆகிவிடும் இங்கே காங்கிரஸ் கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டிய சூழல் வந்திருக்கு. அந்த நல்ல காரியத்தைச் செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட அன்னை சோனியாவிடம் வாய்ப்புக் கேட் பேன். நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி; அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டேன்.''

''அடிக்கடி தொகுதிக்கு சிதம்பரம் வந்து போகிறார்​தானே?''

''நிதித் துறை, உள்துறைன்னு இரண்டு முக்கியமான பொறுப்புகளைச் சிதம்பரத் துக்குக் கொடுத்தோம். ஆனால், என்னு டைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே குறியாய் இருந்தார். இந்தத் தொகுதி வளர்ச்சியில் அவர் அக்கறை காட் டவே இல்லை. எனது காலத்தில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்புதல் வாங்கிக் கொடுத்தேன். அந்தச் சாலையை மேற்கொண்டு விரிவுபடுத்துவதற்கான எந்த முயற்சியையும் சிதம்பரம் எடுக்கவில்லை. இதேபோல் தொண்டி - மதுரைச் சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு டி.ஆர்.பாலு மூலம் முயற்சி எடுத்தேன். அதற்கான கோப்பில் நிதி அமைச்சர் என்ற முறையில் சிதம்பரம் கையெழுத்துப் போட வேண்டும். ஆனால், அதற்கு மறுத்தார். அதனால், திட்டக் குழுத் துணைத் தலைவரும் டி.ஆர்.பாலுவும் மட்டுமே கையெழுத்துப் போட்டு அந்தத் திட்டத்துக்கு அப்ரூவல் கொடுத்தார்கள். திருச்சி - மானாமதுரை பிராட்கேஜ் பாதையை நான் கொண்டுவந்தேன். அதில் இயக்கப்பட்ட ரயில்களைக்கூட சிதம்பரத்தால் முழுமையாக இயக்கவைக்க முடியவில்லை. தனக்கு இணக்கமான தி.மு.க. ஆட்சி இருந்தபோதே சாதிக்காதவரா, விரோதியாக நினைக்கும் ஜெயலலிதா ஆட்சி யில் சாதிக்கப்போகிறார்?''

''தொகுதி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதால் சிதம்பரத்திற்கு என்ன லாபம்?''

''சிவகங்கையை சிங்கப் பூராக்கும் எனது கனவுத் திட்டத்துக்கு உறுதுணையா இருப்பார்னு நினைச்​​சுத்தான் இவருக்கு எனது தொகுதியை விட்டுக் கொடுத்தேன். ஆனால், தொகுதியை வளரவே விடவில்லை. சிதம்பரமும் அவரது மகனும் இன்னமும் ஜமீன்தார் நினைப்பிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் தொகுதியை காபி எஸ்டேட் மாதிரியும் மக்களை ஓட்டுப் போடும் ஏ.டி.எம். மெஷின் மாதிரியும் பார்க்கிறார்கள். இனி அவர்களின் ராஜ்யம் இங்கே எடுபடாது.''

''காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்களும் முயற்சி செய்தீர்கள். அதற்கு சிதம்பரம் ஏதாவது தடங்கல் ஏற்படுத்தி, அந்த ஆதங்கத்தில் இப்படி அவருக்கு எதிராக சீறுகிறீர்களா?''

''இவங்க போடுற முட்டுக்கட்டை எல்லாம் நாம பார்க்காததா? நான் மூன்று முறை காங்கிரஸ் தலைவராக வர இருந்தபோதும் முட்டுக்கட்டை போட்டவர் சிதம்பரம்தான். எனக்கு மத்திய அமைச்​சராகும் வாய்ப்பு வந்தபோதும் தட்டிவிட்டார். இரண்டாவது முறையாக நான் ராஜ்ய சபாவுக்குப் போய்விடக் கூடாது என்பதிலும் முனைப்போடு இருந்தார். ஆனால், எனக்குத் தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இந்த முடிவுக்கு வரவில்லை. தலைவராக வந்திருந்தாலும் இதே முடிவைத்தான் எடுத்திருப்பேன். ஒருவேளை, தலைவராக வராவிட்டால் நமக்குப் போட்டியாக வர மாட்டான் என சிதம்பரம் நினைத்திருக்கலாம். அவரது நினைப்பு பொய்யாகப் போகிறது''

''பிரதமர் வேட்பாளர் என்கிற அளவுக்குப் பேசப்படும் சிதம்பரத்தை எதிர்த்து உங்களால் சாதித்துவிட முடியுமா?''

''முதலில் உள்துறை அமைச்சர் பதவியை அவர் பாதுகாத்துக்கொள்ளட்டும்; அப்புறம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம். அவர் பதவியில் நீடிப்பதே சுப்ரீம் கோர்ட் கையில்தான் இருக்கு. எப்படி இருந்தாலும் இனி சிதம்பரத்திற்கு சிவகங்கையில் வேலை இல்லை. அவரும் அவரது பையனும் வெளிநாட்டில் இருக்கும் தொழில் முதலீடுகளைக் கவனிக்கப் போகட்டும். காங்கிரஸ் கட்சியையும் தொண்டனையும் நாங்க பத்திரமாப் பாத்துக்குவோம்'' - புழுக்கத்தை எல்லாம் பொலபொலவென கொட்டித் தீர்த்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட்டார் நாச்சியப்பன்.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

நன்றி: ஜூனியர் விகடன், 23 நவம்பர் 2011

புதன், நவம்பர் 09, 2011

அப்துல் கலாமின் அட்டகாசங்கள் - அ. மார்க்ஸ்

அப்துல் கலாம் அவர்கள் இரண்டு நாட்களாகத் தமிழ்நாட்டில் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை. மத்திய அரசின் கைப்பாவையாக இங்கே வந்து அணு உலை ஆதரவுப் பிரச்சாரத்தைச் செய்துகொண்டுள்ளார். கலாமுக்கு மக்கள் மத்தியில் ஒரு மரியாதையும் அங்கீகாரமும் இருக்கிறது. அவரது புத்தகங்கள் இங்கே ஏராளமாக விற்பனையாகின்றன. ஒரு முஸ்லிமாகப் பிறந்திருந்தும், முஸ்லிம் அடையாளம் எதையும் தரித்துக் கொள்ளாததாலும், முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தோ, அவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தோ வாய் திறவாமல் இருப்பதாலும் அவர் ஒரு “நல்ல முஸ்லிமாக” பொதுப் புத்தியில் அடையாளம் காணப்படுகிறார் (“முஸ்லிம்னா இப்டி இருக்கணும்பா”). அந்த அளவுக்குத் தனது பிற அடையாளங்களை அமுக்கிக் கொண்டு “விஞ்ஞானி” என்கிற ஒற்றை அடையாளத்தைத் துருத்தி நிறுத்திக்கொண்டவர் அவர். நான் ஒரு முறை அவரை விமர்சித்து ஏதோ எழுதியபோது ‘விஞ்ஞானி’ என அவரை விளித்திருந்தேன். தொலைபேசியில் அழைத்த நண்பர் ராமாநுஜம், “அவரை ஏன் விஞ்ஞானி எனச் சொல்கிறீர்கள். அவரைக் குறிக்க ‘technocrat’ என்பதுதான் சரியான சொல்” என்றார்.

ராமாநுஜம் சொன்னது நுற்றுக்கு நூறு சரி. Technocrat என்கிற சொல்லுக்கு ஏ.சி. செட்டியார் அகராதி சொல்லும் பொருள்: “தொழில்நுட்ப அறிஞராட்சிக் கோட்பாட்டாளர்”. ஆம், அப்துல் கலாம் போன்றவர்கள் தொழில்நுட்ப அறிஞர்கள் மட்டுமல்ல. “ஆட்சிக் கோட்பாட்டாளர்களும்” கூட. Bureaucrat என்கிற சொல் எத்தனை வெறுப்புக்குரியதோ அத்தனை வெறுப்புக்குரிய சொல் Technocrat என்பதும். “சிவில் அதிகார வர்க்கம்” எப்படி அரசதிகாரத்தின் பிரதிநிதியாக இருந்து மக்களை அலட்சியப்படுத்தி முடிவுகளைச் செயல்படுத்துகின்றதோ அப்படியே இந்த விஞ்ஞான அதிகாரவர்க்கமும் மக்களை மயிரளவும் மதிப்பதில்லை. இதற்கொரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கலாம். விஞ்ஞானத்தை வழிபடுபவர். விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் ஏழை/பணக்காரன், உயர்ந்தோர்/தாழ்ந்தோர் முதலான எல்லாவிதமான வேறுபாடுகளுக்கும், கருத்தியல்களுக்கும் அப்பாற்பட்டவையாக நம்புபவர். குறிப்பாக அரசியல் மற்றும் பொருளாதார நலன்களிலிருந்து முற்றாக விஞ்ஞானத்தைப் பிரித்துப் பார்ப்பவர். ஃபுகுஷிமா விபத்திற்குப் பின் தனது நாட்டில் புதிய அணு உலைகளைக் கட்டுவதை நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ள ஜப்பான், அதே நேரத்தில் வியட்நாம் உள்ளிட்ட சிறு நாடுகளுக்கு அணு உலைகளை விற்பதைத் தொடர்வது ஏன் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி மனத்தைச் சஞ்சலப்படுத்திக் கொள்ளாதவர். ஜப்பானின் இந்த இரட்டை நிலைப்பாட்டை அங்குள்ள மனச்சாட்சி உடைய அறிவுஜீவிகள் எதிர்த்துள்ளனர். டோஷிபா, மிட்சுபிஷி, சுஸுகி என்கிற மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் சென்ற நிதி ஆண்டில் இத்தகைய விற்பனைகளின் மூலம் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துள்ளதுதான் இந்த இரட்டை நிலைபாட்டிற்குக் காரணம். விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் அரசியலுக்கும், கருத்தியலுக்கும் அப்பாற்பட்டதெனச் சொல்வது எத்தனை அபத்தம்.

மக்கள் குறுகிய நோக்கத்துடனும், உடனடிப் பலாபலன்களையும் கருதிச் செயல்படக் கூடியவர்கள்; ஆனால் தாங்களோ தொலை நோக்கிலும், ஒட்டு மொத்தமான நாட்டு நலன் என்கிற அடிப்படையிலும் சிந்திப்பவர்கள் என்கிற எண்ணமே அதிகார வர்க்கம் மக்களை அலட்சியம் செய்வதன் அடிப்படை. சில உடனடிப் பயன்களை மக்களிடம் காட்டினால் அவர்கள் மனம் மாறி விடுவார்கள் என்கிற எண்ணத்தில்தான் கலாம் இன்று கூடங்குளத்து மக்கள் முன் 200 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களை அவிழ்த்து விட்டுள்ளார். இவற்றில் பலவும் எல்லா கிராம மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டிய நலத் திட்டங்கள்தான். கூடங்குள மக்களுக்கு மட்டும் இந்தத் திட்டங்கள் என்பதன் பொருளென்ன? அவர்களின் சம்மதம் கோரிக் கொடுக்கப்படும் லஞ்சமா? இல்லை, பின்னால் வரப்போகிற ஆபத்திற்காக முன்கூட்டியே வழங்கப்படும் இழப்பீடா?

கூடங்குள அணு உலைகளால் எந்த ஆபத்தும் இல்லை என அடித்துச் சொல்கிறார் கலாம். ஏற்கனவே அணு உலை அதிகார வர்க்கம் சொல்லி வந்ததையே கிளிப் பிள்ளை போலத் திருப்பிச் சொல்லியுள்ளார். எனில் பெல்ஜியம், ஜப்பான் முதலிய நாடுகள் சுமார் 14 அணு உலைகளை மூட முடிவு செய்திருப்பதும், ஸ்விஸ் முதலான நாடுகளும் அப்படியான முடிவுக்கு வந்துள்ளதும் எப்படி? இது குறித்து ஏன் அவரிடம் இத்தனை பெரிய மௌனம்?

கூடங்குளம் அணு உலைகள் 6 ரிக்டர் நிலநடுக்கம் வரை தாங்கும் என உத்தரவாதம் அளிக்கிறார். இன்றைய நாளிதழ் ஒன்று கேலி செய்திருப்பதைப் போல 7 அல்லது 8 ரிக்டர் நில நடுக்கம் வந்தால் என்னாவது? வராது என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? 2004ல் அத்தனை பெரிய சுனாமி எப்படி வந்தது? 25 சத அணுக் கழிவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார். அவருடைய இந்தக் கணக்கீட்டையே நாம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தக் கழிவை என்ன செய்வது? கழிவுகளைத் தானே எடுத்துக் கொள்கிறேன் என்று ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த ரஷ்யா ஏன் திடீரெனப் பின்வாங்கியது?

பயந்தால் வரலாற்றுச் சதனைகளைப் படைக்க முடியாது என்கிறார் கலாம். நில நடுக்கம் வந்து வீழ்த்தினால் என்ன செய்வது என்று பயந்திருந்தால் ராஜராஜ சோழன் பிருகதீச்வரப் பெருவுடையார் கோவிலைக் கட்டியிருப்பானா எனச் சொல்லிப் புன்னகைக்கிறார். கதிரியக்க ஆய்வினூடாக கதிர்வீச்சுக்குப் பலியான மேடம் க்யூரியை நினைவுகூர்ந்து கண்கலங்குகிறார். தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் இதன் மூலம் மின்சாரம் கிடைக்கப் போகிறது எனச் சொல்லிக் கைதட்டிக் குதூகலிக்கிறார். ஆகா ஒரு நாடகமன்றோ நடக்குது.

அப்துல் கலாம் மிகப் பெரியவர். நமது நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர். கறை படாத கரங்களுக்குச் சொந்தமானவர். எளிமைக்குப் பெயர் போனவர். அவசரப்பட்டு நான் ஏதும் அவரைப்பற்றிச் சொல்லிவிடக் கூடாது. ஆனால் இதெல்லாம் என்ன ஒப்பீடுகள் சார்? வரலாற்றுச் சாதனைக்காக எத்தனையோ ஆயிரம் பேர்களை நசுக்கிப் பிழிந்த உதிரத்தால் கட்டப்பட்டத்துதான் தஞ்சைப் பெரிய கோவில். அதன் பின்னிருந்த அரசியலை வரலாற்றாசிரியர்கள் இனங்கண்டுள்ளனர். இதையெல்லாம் கூட விட்டுவிடுவோம். அப்படியே ஒரு கலைச் சின்னம் நில நடுக்கத்தால் அழிந்துபடுகிறதென்றே வைத்துக் கொள்வோம். அணு உலை வெடித்துச் சிதறுவதும் வரலாற்றுச் சின்னமொன்று பொடிந்து வீழ்வதும் இரண்டும் ஒன்றுதானா? ஒரு வரலாற்றுச் சின்னம் அழிவது வேதனைகுரிய ஒன்றுதான். ஆனால் அந்த அழிவு வரலாற்றுச் சின்னம் ஒன்றின் அழிவோடு முடிந்து விடுகிறது. மீண்டும் கூட அதை நாம் கட்டிவிடலாம். ஶ்ரீரங்கம் கோவிற் கோபுரம் கட்டப்படவில்லையா? ஆனால் ஒரு அணு உலை அழிந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் அத்தோடு சேர்ந்தழியும்? எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதன் பலனை மனிதகுலம் சுமக்க வேண்டியிருக்கும்? ஒரு கலைச் சின்னத்தின் பயன்பாடு அது நிலைத்திருக்கும் வரை தொடரும். ஆனால் உங்கள் அணு உலையின் ஆயுள் எத்தனை ஆண்டுகள் அய்யா? அதன் பயன்பாடு ஓய்ந்தபின் இன்னும் எத்தனை ஆண்டுகள் அதன் சுமையை எந்தப் பயன்பாடும் இல்லாமல் நமது சந்ததிகள் சுமக்க வேண்டும் அய்யா?

26 ஆண்டுகளுக்கு முன் “பிரமிடுகளும் அணு உலைகளும்” என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன (பார்க்க: எனது ‘தேவையா இந்த அணு உலைகள்?’ நூலின் முதல் கட்டுரை [amarx.org]). அதில்,

“எகிப்திய பரோவாக்கள் பிரமிடுகளைக் கட்டினார்கள். இராசராச சோழர்கள் பெரிய கோவில்களை எழுப்பினார்கள். பிரமிடுகளும் பெரிய கோவில்களும் பண்டைய கலைஞர்களின் மகத்தான சாதனைகள் மட்டுமல்ல. அன்றைய ஆட்சியாளர்களின் பிரதான வெளிப்பாடுகள் மட்டுமல்ல. அன்றைய ஆட்சியை நிலை நிறுத்தும் ஆதார அம்சங்களாகவும் அவையே விளங்கின………இன்றைய இந்திராக்களும் ராஜீவ்களும் பரோவாக்களிலிருந்தும் இராசராசன்களிலிருந்தும் அவ்வளவு வேறுபட்டவர்களல்ல…..ஆனால் கவிஞர் இன்குலாப் சொன்னது போல இடையில் ஆயிரம் ஆண்டுகள் தான் ஓடிவிட்டன. இன்றும் பிரமிடுகளையும் பெரிய கோவில்களையும் கட்டிக் கொண்டிருக்க முடியாது. அதனாலென்ன? ஆர்யபட்டா, கலர் டெலிவிஷன், அணு உலை…இவை இல்லையா? வாருங்கள் இவற்றோடு 21ம் நூற்றாண்டுக்குள் ராஜீவைப் பின்தொடர்வோம்”

என்று குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய அன்றைய சொற்களுக்கு எத்தனை சரியான நிரூபணமாக அமைந்துள்ளது பார்த்தீர்களா இன்றைய அப்துல் கலாமின் உரை. எகிப்திய பரோவா, இராசராச சோழன், இந்திரா, ராஜீவ், மன்மோகன், இந்த வரிசையை நியாயப்படுத்தும் அப்துல் கலாம்…ஆகா, என்ன ஒரு தொடர்ச்சி.

இரு மாதங்களுக்கு முன், ஐ. நா மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும்போது விமானத்திலிருந்தவாறே மன்மோகன் அளித்த பேட்டியில் இன்றைய பொருளாதாரச் சிக்கலைப் பற்றிச் சொல்ல வரும்போது, “எல்லாம் உலகமயத்தின் பின் விளைவுகள்” என அலுத்துக் கொண்டதைப் படித்திருப்பீர்கள். இந்தியப் பொருளாதாரத்தையும் சந்தையையும் உலகமயத்திற்குத் திறந்து விட்டவரென மார் தட்டிக் கொண்ட மன்மோகன் சிக்கல் வரும்போது எல்லாம் உலகமயத்தின் விளைவு எனச் சொல்லிக் கை கழுவுவதை நாம் கவனிக்க வேண்டும். நாளைக்கு ஏதேனும் ஒரு அணு உலை வெடித்துச் சிதறினால், புவி அதிர்ச்சியும் சுனாமியும் ஒன்றாக வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றோ, அணு உலை என்றால் எப்போதாவது ஒரு முறை இப்படி நடக்கத்தான் செய்யும் என்றோ அப்போதைக்கு ஏதாவது சொல்லி இவர்கள் நழுவத்தான் போகிறார்கள்.

இந்தியாவை வலுவாக்குவது என்பது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ரொம்பவும் புரட்சிகரமான கருத்துக்களை நான் இதில் சேர்க்கவில்லை. உலக அளவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட மைய நீரோட்டக் கருத்துக்களிலேயே இரு ஒன்றுக்கொன்று எதிரான நிலைபாடுகள் உள்ளன. அவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக நாம் இங்கே இருவரை அடையாளம் காணலாம்.

ஒருவர் அப்துல் கலாம். இவரைப் பொருத்த மட்டில் இந்தியாவை வலுவாக்குவது என்பது ஏவுகணைகள், துணைக் கோள்கள், அணு குண்டுகள், அணு உலைகள், உயர் தொழில் நுட்பங்கள், நேநோ டெக்னாலஜி, நால் வழிச் சாலைகள் முதலான அகக் கட்டுமானங்கள் ஆகியவற்றை உருவாக்குதல் என்கிற மட்டத்தில் அமைகிறது.

மற்றவர் அமார்த்ய சென். இவரது அணுகல் முறை முற்றிலும் எதிரானது. இது கீழிருந்து வலுப்படுத்தும் அணுகல் முறை. எல்லோருக்கும் சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ நலம், வேலை வாய்ப்பு ஆகியவற்றை அளித்து வலுமிக்க குடிமக்களை உருவாக்கி அதன் மூலம் வலுவான நாட்டை உருவாக்குவது என்பது இவரது அணுகல் முறை.

அப்துல் கலாம் கூடங்குளப் பிரச்சினையில் என்ன பேசுவார் என எதிர்பார்த்தோமோ அதைத்தான் அவர் பேசியுள்ளார். இதில் வியப்பேதுமில்லை.

Tail Piece: அப்துல் கலாம் அவர்களை ‘நல்ல முஸ்லிம்’ என்று சொன்னேன். எந்த அளவிற்கு நல்ல முஸ்லிம் என்றால் குடியரசுத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க வேட்பாளராகத் தெர்வு செய்யப்படும் அளவிற்கு ‘நல்ல முஸ்லிம்’. இவருக்கு முன் அந்தப் பதவியில் இருந்த கே. ஆர். நாராயணன் அவர்கள் தான் பதவியில் இருந்த காலம் வரை பா.ஜ.க அரசு முன்மொழிந்ததை ஏற்று பாராளுமன்றத்தில் சாவர்கரின் படத்தைத் திறக்கச் சம்மதிக்கவில்லை. கலாம் அந்தப் பதவியில் அமர்ந்தவுடன் கிஞ்சித்தும் தயக்கமின்றி காந்தி படத்திற்கு எதிரில் சாவர்கரின் படத்தைத் திறந்து வைத்தார். அந்த அளவிற்கு கலாம் ஒரு ‘நல்ல முஸ்லிம்’.

நன்றி: அ. மார்க்ஸ்