காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையைக் கலைத்துவிட்டு, ப.சிதம்பரம் மீண்டும் காங்கிரஸுக்குத் தாவியபோது அவருக்காக சிவகங்கை நாடாளு மன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தவர் சுதர்சன நாச்சியப்பன். அவர்தான் திடீரென இப்போது சிதம்பரத்திற்கு எதிராக சீறுகிறார்.
''திடீரென சிதம்பரத்துக்கு எதிராக ஏன் இந்த ஆவேசம்?''
''2004-ம் ஆண்டு நான் தொகுதியை விட்டுச் சென்றபோது காங்கிரஸ் கட்சி 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கிற மாதிரி தொகுதியை வைச்சிருந்தேன். இப்போது இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கும் நிலை. கடந்த ஏழு வருஷத்தில் சிதம்பரம் செய்த சாதனை இது மட்டும்தான். உள்துறை அமைச்சரின் தொகுதியில் ஒரு நகராட்சி சேர்மனுக்குக்கூட ஆளை நிறுத்த முடியாத அளவுக்கு, காங்கிரஸை முடமாக்கிப் போட்டிருக்காங்க. ஜெயிக்கக்கூடிய ஆட்க ளுக்கும் 'கை’ சின்னம் கொடுக்காததால், அவர்கள் எல்லாம் சுயேச்சையாக நின்று ஜெயித்திருக்கிறார்கள். சிதம்பரத்தின் சொந்த ஊரிலேயே காங்கிரஸுக்கு நான்காவது இடம். இதுதான் இந்த மாவட்டத்தில் அப்பா வும் மகனும் கட்சி வளர்த்த லட்சணம். இனியும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், அது கட்சிக்கும் தலைமைக்கும் செய்த துரோகம் ஆகிவிடும் இங்கே காங்கிரஸ் கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டிய சூழல் வந்திருக்கு. அந்த நல்ல காரியத்தைச் செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட அன்னை சோனியாவிடம் வாய்ப்புக் கேட் பேன். நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி; அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டேன்.''
''அடிக்கடி தொகுதிக்கு சிதம்பரம் வந்து போகிறார்தானே?''
''நிதித் துறை, உள்துறைன்னு இரண்டு முக்கியமான பொறுப்புகளைச் சிதம்பரத் துக்குக் கொடுத்தோம். ஆனால், என்னு டைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே குறியாய் இருந்தார். இந்தத் தொகுதி வளர்ச்சியில் அவர் அக்கறை காட் டவே இல்லை. எனது காலத்தில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்புதல் வாங்கிக் கொடுத்தேன். அந்தச் சாலையை மேற்கொண்டு விரிவுபடுத்துவதற்கான எந்த முயற்சியையும் சிதம்பரம் எடுக்கவில்லை. இதேபோல் தொண்டி - மதுரைச் சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு டி.ஆர்.பாலு மூலம் முயற்சி எடுத்தேன். அதற்கான கோப்பில் நிதி அமைச்சர் என்ற முறையில் சிதம்பரம் கையெழுத்துப் போட வேண்டும். ஆனால், அதற்கு மறுத்தார். அதனால், திட்டக் குழுத் துணைத் தலைவரும் டி.ஆர்.பாலுவும் மட்டுமே கையெழுத்துப் போட்டு அந்தத் திட்டத்துக்கு அப்ரூவல் கொடுத்தார்கள். திருச்சி - மானாமதுரை பிராட்கேஜ் பாதையை நான் கொண்டுவந்தேன். அதில் இயக்கப்பட்ட ரயில்களைக்கூட சிதம்பரத்தால் முழுமையாக இயக்கவைக்க முடியவில்லை. தனக்கு இணக்கமான தி.மு.க. ஆட்சி இருந்தபோதே சாதிக்காதவரா, விரோதியாக நினைக்கும் ஜெயலலிதா ஆட்சி யில் சாதிக்கப்போகிறார்?''
''தொகுதி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதால் சிதம்பரத்திற்கு என்ன லாபம்?''
''சிவகங்கையை சிங்கப் பூராக்கும் எனது கனவுத் திட்டத்துக்கு உறுதுணையா இருப்பார்னு நினைச்சுத்தான் இவருக்கு எனது தொகுதியை விட்டுக் கொடுத்தேன். ஆனால், தொகுதியை வளரவே விடவில்லை. சிதம்பரமும் அவரது மகனும் இன்னமும் ஜமீன்தார் நினைப்பிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் தொகுதியை காபி எஸ்டேட் மாதிரியும் மக்களை ஓட்டுப் போடும் ஏ.டி.எம். மெஷின் மாதிரியும் பார்க்கிறார்கள். இனி அவர்களின் ராஜ்யம் இங்கே எடுபடாது.''
''காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்களும் முயற்சி செய்தீர்கள். அதற்கு சிதம்பரம் ஏதாவது தடங்கல் ஏற்படுத்தி, அந்த ஆதங்கத்தில் இப்படி அவருக்கு எதிராக சீறுகிறீர்களா?''
''இவங்க போடுற முட்டுக்கட்டை எல்லாம் நாம பார்க்காததா? நான் மூன்று முறை காங்கிரஸ் தலைவராக வர இருந்தபோதும் முட்டுக்கட்டை போட்டவர் சிதம்பரம்தான். எனக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு வந்தபோதும் தட்டிவிட்டார். இரண்டாவது முறையாக நான் ராஜ்ய சபாவுக்குப் போய்விடக் கூடாது என்பதிலும் முனைப்போடு இருந்தார். ஆனால், எனக்குத் தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இந்த முடிவுக்கு வரவில்லை. தலைவராக வந்திருந்தாலும் இதே முடிவைத்தான் எடுத்திருப்பேன். ஒருவேளை, தலைவராக வராவிட்டால் நமக்குப் போட்டியாக வர மாட்டான் என சிதம்பரம் நினைத்திருக்கலாம். அவரது நினைப்பு பொய்யாகப் போகிறது''
''பிரதமர் வேட்பாளர் என்கிற அளவுக்குப் பேசப்படும் சிதம்பரத்தை எதிர்த்து உங்களால் சாதித்துவிட முடியுமா?''
''முதலில் உள்துறை அமைச்சர் பதவியை அவர் பாதுகாத்துக்கொள்ளட்டும்; அப்புறம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம். அவர் பதவியில் நீடிப்பதே சுப்ரீம் கோர்ட் கையில்தான் இருக்கு. எப்படி இருந்தாலும் இனி சிதம்பரத்திற்கு சிவகங்கையில் வேலை இல்லை. அவரும் அவரது பையனும் வெளிநாட்டில் இருக்கும் தொழில் முதலீடுகளைக் கவனிக்கப் போகட்டும். காங்கிரஸ் கட்சியையும் தொண்டனையும் நாங்க பத்திரமாப் பாத்துக்குவோம்'' - புழுக்கத்தை எல்லாம் பொலபொலவென கொட்டித் தீர்த்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட்டார் நாச்சியப்பன்.
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்
நன்றி: ஜூனியர் விகடன், 23 நவம்பர் 2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக