திங்கள், அக்டோபர் 24, 2011

ஏன் மறைத்தார் சிவராசன்? #தூக்குக் கயிறே என் கதை கேள்! (9)

அரிபாபு நினைவுகளை என்னால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது! அவரைப் போல் சிவராசன் என்னை அழைத்திருந்தாலும், அன்றைக்கு ஸ்ரீபெரும்புதூருக்கு நானும் போயிருப்பேன். அங்கே அரிபாபு உடன் நானும் சிதறித் செத்திருந்தாலும், தினம் தினம் இன்றைக்கு இவ்வளவு உளைச்சலுக்கு ஆளாகிச் சாக வேண்டிய நிலை வந்திருக்காது.

சம்பவ இடத்துக்குப் போயும் உயிர் தப்பியவள் என் மனைவி நளினி. 'ராஜீவ் காந்தியைக் கொலை செய்யப்போகிறார்கள் என்பது நளினிக்குத் தெரியாது. சுபாவும் தணுவும் இலங்கைத் தமிழில் பேசினால் சந்தேகம் வரும் என்பதால்தான், தமிழ்ப் பெண்ணான நளினி அவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்’ என அரசுத் தரப்பு ஆவணங்களிலேயே எழுதப்பட்டு உள்ளது. சம்பவத்தை நிறைவேற்றும் கடைசிக் கணத்தில் கூட தனது திட்டத்தை சிவராசன் சொல்லவில்லை என்பது இதில் இருந்தே அப்பட்டமாகத் தெரிகிறது. 'நளினிக்குத் தெரியாமல் அது எப்படி நடந்திருக்கும்?’ எனக் கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்துக்குப் போனபோது, நளினியின் வயிற்றில் கரு உருவாகி இருந்த நேரம். வெடிச் சத்தத்தைக் கேட்டால்கூட விபரீதமாகும் என்கிற நிலையில்... அப்படி ஒரு சம்பவம் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் எப்படி நளினி அங்கே போயிருப்பார்? எங்கள் காதலின் அடையாளச் சின்னத்தை நாங்கள் எப்படிப் பூரிப்போடும் பெருமிதத்தோடும் பார்த்தோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். கரு உருவாகி வளர்வது தெரிந்து, வயிற்றின் சிறு மேடு தடவிச் சிலிர்த்த கணங்களை நினைத்துப் பார்க்கிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டத்துக்கு ராஜீவ் காந்தி வருகிறபோது அலையடித்த மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி நின்றவள் நளினி. நல்லெண்ண அடிப்படையில் ராஜீவுக்கு தணு மாலை அணிவிப்பதும், அதைப் புகைப்படம் எடுப்பதும்தான் சிவராசன் நளினியிடம் சொல்லி இருந்த தகவல். ராஜீவ் வந்தபோதோ, மக்கள் ஆரவாரித்தபோதோ இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்பது நளினிக்குத் தெரியாது. பதற்றமோ பரபரப்போ இல்லாமல் மிகச் சாதாரணமான முக பாவத்தோடு சிவராசன் இருந்திருக்கிறார். 'ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிப்பது மட்டுமே வேலை’ என்பதை நம்பவைக்க பல நாடகங்களையும் அவர் நடத்தி இருக்கிறார். அவருக்கு எதிராக நான் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். நிகழ்ந்த உண்மைகளை இறக்கிவைக்கிற நேரம் இது.

சிவராசன் செயல்பாட்டில் நல்ல எண்ணம் இருந்தது என்பதை நான் நம்புவதற்கு காரணம் என்ன? அந்த எண்ணத்தில் செயல்பட ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணின் உதவி எதற்கு? சிவராசன் என்னிடம் உண்மை நோக்கத்தை மறைப்பதில் உறுதியாக இருந்தமைக்கு காரணம் என்ன? எனப் பல கேள்விகள் உங்களிடத்தில் இருந்து எழலாம்.

'என்னைவிட சிவராசன் புலிகள் இயக்கத்தில் மூத்த உறுப்பினர். எனக்கு இங்கு ஒரு கமாண்டராகவும் பாஸாகவும் இருந்தார்!’ - இது அரசுத் தரப்பே சொல்லும் விளக்கம். ஒரே இயக்கத்தில் உள்ள என் போன்று கீழ் நிலையில் உள்ளவர்கள், மேல் நிலையில் உள்ள ஒருவரை எப்படி சந்தேகப்பட முடியும்? இயக்கம் கற்றுக்கொடுத்த கட்டுப்பாடும் பக்குவமும் மேல் நிலையில் உள்ளவர்களை சந்தேகப்படவைக்குமா? மேல் நிலையில் உள்ள சிவராசனிடம், 'ஏன்... எதற்கு... எப்படி?’ என்கிற சந்தேகங்களைக் கேட்பது சாத்தியமா? 'ராஜீவ் காந்தியுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்’ என சிவராசன் சொல்கிறபோது, அதில் சந்தேகப்பட ஒன்றுமே இல்லை. காரணம், ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியதும், அவர்களின் வெறியாட்டங்கள் எங்கள் மண்ணையும் மக்களையும் துண்டாடியதும், அதனால் அவர் மீது எங்கள் மண் ஆற்ற முடியாத ஆத்திரத்தில் இருந்ததும் எல்லோரும் அறிந்ததுதான். மறுபடியும் ராஜீவ் காந்தியுடன் நல்லெண்ணத்தை ஏற்படுத்த அரசியல்ரீதியான காரணங்கள் இருக்கலாம். அவருக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நல்லது என நம்பியதால்தானே, சிவராசன் சொன்னதற்கு எல்லாம் நாங்கள் தலையாட்டினோம். 'ராஜீவ் காந்தியைக் கொல்ல வந்த சிவராசன் உன்னை ஏன் சந்திக்க வேண்டும்?’ என்கிற கேள்வியும் உங்களிடத்தில் இருந்து எழலாம்.

இப்போது இருக்கும் சூழல் அன்றைக்குத் தமிழகத்தில் இல்லை. உணர் வாளர்களின் எழுச்சியான முன்னெடுப்புகள் விடுதலைப் புலிகள் மீதான கெடுபிடிகளையும், கண்காணிப்புகளையும் குறையவைத்து இருக்கின்றன. ஆனால், அன்றைக்கு புலி உறுப்பினர்கள் தமிழகத்தில் உலவுவது சாதாரணக் காரியம் இல்லை. மறைமுகமாகவும் ரகசியமாகவும் செய்ய வேண்டிய இக்கட்டுகள் அப்போது இருந்தன. கோடம்பாக்கத்தில் நடந்த பத்மநாபா கொலைக்குப் பின் இந்தியாவில் இருந்த விடுதலைப் புலிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே எழுதப்பட்டு உள்ளது. இலங்கையில் இந்திய ராணுவத்துக்கும் (மிறிரிதி), விடுதலைப் புலிகளுக்கும் சண்டை நடந்ததும் அத்தகைய கெடுபிடிகளுக்கு மிக முக்கியக் காரணம். கண்காணிப்புகள் அதிகம் இருந்த அப்போதைய காலச் சூழலில், எந்த அரசியல் தலை வருக்கும் பொதுக் கூட்ட மேடையில் மாலை போடுவது சுலபம் அல்ல. அதுவும் இலங்கைத் தமிழர் என்றால் சொல்ல வேண்டியதே இல்லை. எத்தகைய காரணத்தைச் சொன்னாலும், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகக் காவல் துறை இரக்கம் காட்டாது. இலங்கைத் தமிழர் எனத் தெரிந்தாலே, 'நீ புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன்தானே... யாரைக் கொலை செய்ய இங்கே வந்தாய்... பெட்ரோல் கடத்த வந்தாயா? பால்ரஸ் கொண்டுபோக வந்தாயா?’ எனத் துளைத்துவிடுவார்கள். அதனால், சிவராசன், தணு, சுபா மூவராலும் எந்தப் பொதுக் கூட்டத்துக்கும் போய் மாலை அணிவிக்க சாத்தியம் இல்லை. தமிழ்நாட்டுப் பெண் ஒருவர் உடன் இருந்தால் அதற்கு உதவியாக இருக்கும் என்பதை சிவராசன் சரியாகத் திட்டமிட்டு இருந்தார். அதற்குத்தான் அவர் எங்களைப் பயன்படுத்த நினைத்தார். 'இந்தியாவின் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லை. அதற்காக இந்தியத் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவது எமக்கு அவசியம். அந்த வேலைகளில் நான் தீவிரமாக இருக்கிறேன்’ என சிவராசன் என்னிடம் சொன்னார். அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அந்தக் கருத்தில் நான் மட்டும் எப்படி பிறழ்வு காட்ட முடியும்? இந்திய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுகிற அளவுக்கு அவர்கள் முன்வந்திருப்பதில் அப்போது எனக்கு ஏகோபித்த மகிழ்ச்சி. அதைத் தாண்டிய சந்தேகங்கள் எனக்கு ஏற்படவில்லை. புலிகள் இயக்கத்தின் கொள்கை குறித்த ஆராய்வுகளையோ, இந்தியத் தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்த பேரறிவோ எனக்கு அப்போது இல்லை. காரணம், அப்போது எனக்கு வயது 20. இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த என்னால் அப்போது எந்த அளவுக்கு சிந்தித்திருக்க முடியும் என்பதை மட்டும் மனக்கண்ணில் நிறுத்திப் பாருங்கள்.

'ராஜீவ் காந்தியைக் கொல்லப்போகும் விஷயத்தை சிவராசன் முருகனிடம் ஏன் மறைக்க வேண்டும்? புலிகள் இயக்கத்தைப்பற்றி நன்கு அறிந்த முருகனிடம், ராஜீவ் கொலை குறித்து சிவராசன் ரகசியம் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...’ எனப் புலனாய்வை மட்டுமே புத்தி யாக வைத்திருப்பவர்கள் கேள்வி கேட்கலாம். சந்தேகப்படுவதும் கேள்வி எழுப்புவதும்தான் இங்கே மிகச் சுலபமான வேலை. நம்முடைய கேள்வி அடுத்தவர் மனத்தை எப்படித் துன்புறுத்தும் என நெஞ்சுக்குள் ஒரு கணம் நினைத்துப் பார்க்கிற பழக்கம் குறைவாகிவிட்டது. சிவராசனைப்பற்றி இது காலம் வரை நான் வெளிப்படையாகப் பேசவில்லை. இறந்தவர்களை நோக்கிக் கை காட்டுவது ஈனத்தனம் என்பதை இறக்கும் சூழலில் இருக்கிற நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். 'ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய சிவராசன் ஏன் வந்தார்? அவரை இங்கே அனுப்பியவர்கள் யார்? அவருடைய கண்களில் நான் ஏன் சிக்கினேன்?’ இதற்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை. ஆனால், சிவராசன் என்னிடம் ராஜீவ் கொலைச் சதியை மறைத்ததற்கு இரண்டு காரணங்களை என்னால் சொல்ல முடியும். ஒன்று, சிவராசன் என்னை நம்பவில்லை; என் மீது அவருக்கு அதிருப்தி இருந்தது. இரண்டாவது, இந்த சதித் திட்டம் மிகவும் பாரதூரமானது. சிறிய அளவில் கசிந்தாலும் குறிக்கோள் நிறைவேறாமல் போகும்; அதோடு மட்டும் அல்ல... அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஆளை நெருங்கவே முடியாத அளவுக்குப் போய்விடும். சிவராசனின் பின்னணிகள் தோண்டப்பட்டு, அதன் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்குப் பேராபத்து நிகழவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் ராஜீவ் காந்தி கொலைச் சதியை மிகுந்த ரகசியத்தோடு சிவராசன் காத்துவந்தார். இலக்கை மிகச் சரியாக நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற தீவிரமும் எச்சரிக்கையுமே அவரிடம் இருந்தது. யார் மனம் எல்லாம் நோகும் என்பதை உணரும் நிலையில் அவர் இல்லை. எந்த ஒரு திட்டத்தையும் மிக மிக முக்கியமானவர்களுக்கு இடையிலும், அதை நேரடியாகச் செயல்படுத்துபவர்களுக்கு இடையிலும் மட்டுமே பகிர்ந்துகொள்வது, ஒவ்வோர் இயக்கத்திலும் பின்பற்றக்கூடிய வழக்கம்தான். அநாவசியமாக ஒரு நபரிடம் விஷயம் கசிந்தாலும் அது திட்டத்துக்கான பின்னடைவாக அமைந்துவிடும் என்பதுதான் சதிக் குழுக்களின் பால பாடம். இதையட்டிய கருத்துகளை நீதிபதி தாமஸ் அவர்களே, தீர்ப்பு பக்கங்கள் 84, 85-ல் கூறி இருக்கிறார். அதோடு, 'எல்.டி.டி.ஈ-யினர் தாம் இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இந்தியாவில் தமது அடையாளத்தை மறைத்துச் செயல்படுகின்றனர்!’ என்றும் நீதிபதி தாமஸ் அவர்கள் கூறி இருக்கிறார். இதை எல்லாம்விட தீர்ப்பில் மிக முக்கியமான பகுதி ஒன்று இருக்கிறது. 'முருகனுக்கும் நளினிக்கும் இருந்த ரகசிய உறவை அறிந்த சிவராசன், அதுபற்றி மேலிடத்துக்கு புகார் செய்தார். அதனால், முருகனை நம்பக் கூடாது என்றும் மேலிடத்துக்கு சிவராசன் செய்தி அனுப்பினார்!’ என தீர்ப்பு பக்கம் 320-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிவராசனுக்கும் எனக்கும் சரியான இணக்கம் இல்லை என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவை இல்லை. ஒரு விடுதலைப் புலி உறுப்பினர், பெண்களுடன் உறவு வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது என்பது அந்தக் காலகட்டத்தில் அனைவரும் அறிந்திருந்த ஒன்று.

'பொதுக் கூட்ட இடத்தில் சுபாவோ, தணுவோ பேசக் கூடாது. அவர்களுக்காக நளினிதான் பேசி ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க அனுமதி வாங்க வேண்டும். சுபாவும் தணுவும் இலங்கைத் தமிழர்கள் என்பது அங்கு யாருக்கும் தெரிந்துவிடாமல் இருக்க, நளினி அவர்களை மறைத்தபடி நிற்க வேண்டும்!’ என அரசுத் தரப்பு வாதம் சொல்கிறது.

21.05.91 அன்று மாலை சிவராசன் குழுவுடன் ஸ்ரீபெரும்புதூர் செல்ல நளினி உடன்பட்டார் என்று ஒப்புதல் வாக்குமூலத்தில் எழுதப்பட்டு உள்ளது. உண்மையிலேயே நளினி சுய விருப்பத்துடன்தான் சிவராசன் குழுவுடன் ஸ்ரீபெரும்புதூர் சென்றாரா?

(காயங்கள் ஆறாது)

நன்றி: ஜூனியர்விகடன், 26-10-2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக