நன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் என்கிற காரணத்துக்காகவே நளினி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். சம்பவ இடத் தில் நளினி எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த் தாலே, இது அவரைச் சிக்கவைப்பதற்காகவே புனையப்பட்ட கதை என்பது புலனாகும்.
அரசுத் தரப்பு ஆவணத்தில் 77-வது பக்கத்தில், 'சிவராசன் தமிழ்நாட்டுக்காரர் போல் பேசக்கூடிய ஆற்றல்கொண்டவர்’ என எழுதப்பட்டு உள்ளது. அவரே நன்கு தமிழ் பேசும்போது, மொழிப் பிரச்னைக்காக ஏன் நளினியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? அரசுத் தரப்பு சான்றுகளின்படி, குற்றமுறு சதியின் உறுப்பினர் ஹரிபாபுவும் (பத்திரிகைப் புகைப்படக்காரர்) அங்கு கூடவே இருந்துள்ளார். அவருக்கும் நன்றாகத் தமிழ் பேசத் தெரியும். 'காங்கிரஸ் பிரதேசப் பொறுப்பாளர் லதா கண்ணன் மற்றும் அவர் மகள் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்தில் நட்பாக இருந்தனர். (இதற்கு ஹரிபாபு எடுத்த புகைப்படமும் ஆதாரமாக உள்ளது). ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க நின்ற கூட்டத்துக்குள் சிவராசன், தணுவை நிறுத்த அவர்கள் முயற்சி செய்தார்கள். அதே நேரம் நளினியும் சுபாவும் கூட்ட இடத்துக்குப் போன பின் அங்கு இருந்த பெண்கள் பகுதியில் போய் அமர்ந்துகொண்டனர். ராஜீவ் காந்தி வந்து இறங்கிய வுடன் நளினியை சுபா அவசரகதியில் பிடித்து இழுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டார். அப்போதுதான் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது!’ என்று அரசுத் தரப்பு ஆவணங்களிலேயே எழுதப்பட்டு உள்ளது.
சிவராசனுக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே உதவக்கூடிய நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? ராஜீவ் காந்தியை தணு நெருங்க சிவராசனே முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். தணு மாலை அணிவிக்க அனுமதி வாங்கியதும், ராஜீவ் காந்தி அருகில் அவர் நெருங்க மறைப்புக் கொடுத்ததும் சிவராசன்தான். ராஜீவ் காந்தி வந்து இறங்கிய உடனேயே நளினி அந்த இடத்தில் இருந்து சுபாவினால் வேகமாகக் கூட்டி வரப்பட்டார். இத்தனை விடயங்களையும் அடித்துச் சொல்லும் அரசுத் தரப்பு, எந்த விதத்தில் ராஜீவ் கொலையில் நளினிக்கும் பங்களிப்பு இருப்பதாகச் சொல்கிறது? நளினிக்கே கொலைச் சதி தெரிந்திருக்கவில்லை என்கிறபோது, எனக்கு எப்படி இதுபற்றித் தெரிந்திருக்கும்? நான் எந்த விதத்தில் அவரைக் கட்டாயப்படுத்தி இருக்க முடியும்?7.5.91 அன்று சிவராசன், சுபா, தணு ஆகியோருடன் நானும் நளினியும் சென்னையில் நடந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பொதுக் கூட்டத்துக்குப் போனோம் என்றும், அங்கே கொலைச் சதிக்கான ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும் சித்திரிக்கிறது அதிகாரிகள் தரப்பு. அந்த கூட்டத்துக்குப் போனோம் என்பதற்கு எங்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும்தான் அதிகாரிகள் ஆதாரமாக வைக்கிறார்கள். ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய அந்தக் கூட்டத்தில் ஒத்திகை நடந்ததாகச் சொல்வது கொஞ்சமாவது பொருந்தக்கூடியதா? சரி, சிவராசன் அதனை ஒத்திகைத் தளமாகவே பாவித்து இருந்தாலும், அதை உறுதியாகச் சொல்ல அரசுத் தரப்பில் என்ன சாட்சி இருக்கிறது? ஆனால், என்னையும் நளினியையும் திட்டமிட்டு ஏமாற்றவே வி.பி.சிங் கூட்டத்துக்கு சிவராசன் அழைத்துக்கொண்டு போனார் என்பதற்கு நிறையச் சான்றுகள் இருக்கின்றன. கொடூரப் படுகொலையை நிகழ்த்த, தான் வரவில்லை என்பதையும், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் தனது எண்ணம் என்பதையும் சிவராசன் எங்களிடம் ஏற்படுத்த முயன்று இருக்கிறார். அதில், வெற்றியும் பெற்றார். 'வி.பி.சிங் கூட்டத்துக்குப் போனது மாதிரிதான் ராஜீவ் காந்தி கூட்டத்துக்கும் போக இருக்கிறோம்’ என்பதையும் சிவராசன் நம்பவைத்தார்.
சிவராசன் மேலிடத்துக்கு அனுப்பிய வயர்லெஸ் செய்தியைச் சுட்டிக்காட்டும் அரசுத் தரப்பு, 'எதிர் காலத்தில் இயக்கத்துக்கான ஆதரவை வளர்க்க மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கிறோம் என்று தான் சொல்லி இருக்கிறோம். எம் மூவரைத் தவிர (சிவராசன், தணு, சுபா) வேறு யாருக்கும் விஷயம் தெரியாது’ என 7.5.91 அன்று வி.பி.சிங் பொதுக் கூட்டத்துக்குப் போய் வந்த பிறகு தகவல் அனுப்பியதாக சொல்லப்பட்டு இருக்கிறது. கொலைச் சதி குறித்தோ, அதற்கான ஏற்பாடு கள் குறித்தோ சிவராசன் எங்களிடம் ஏதும் சொல்லவில்லை என்பதற்கு, இந்த வார்த்தைகள் போதாதா?
போலிப் புகைப்படக்காரர் அடையாள அட்டை, ஹரிபாபுவினால் எனக்குத் தயார் செய்து தரப்பட்டதாக அரசுத் தரப்பு சொல்கிறது. எதற்காக அந்த அடையாள அட்டை எனக்கு? அதை எங்கு, எப்போது, யார் தயார் செய்து கொடுத்தது? அதில் உள்ள எனது புகைப்படம் எங்கு எடுக்கப் பட்டது? யாரால் எடுக்கப்பட்டது? அதில் உள்ள கையப்பம் யாருடையது? எனது கைரேகை ஏதும் இருந்ததா? இப்படி எத்தனை எத்தனைக் கேள்விகள்... இது குறித்த விசாரணைகளை அதிகாரிகள் ஏன் மேற்கொள்ளவில்லை? சரி, அதெல்லாம் கிடக்கட்டும். ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் அந்த அடையாள அட்டையை எந்த விதத்தில் நான் பயன்படுத்தினேன்? இந்தியாவின் மிக உயரிய தலைவர் கொலை யான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவனின் போலியான அடையாள அட்டை கிடைத்தால், அது சம்பந்தமான அனைத்து ரிஷிமூலங்களையும் அதிகாரிகள் தோண்டித் துருவி இருக்க மாட்டார்களா?
எங்களைக் குற்றவாளியாக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக, விசாரணை அதிகாரிகள் விரித்த வலைகளில் ஒன்றுதான் அந்த அடையாள அட்டையும். இதை எல்லாம் சொல்வதால், என் மீதான தவறுகளை நான் சரிக்கட்ட நினைப்பதாகவோ, சிவராசன் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்வதாகவோ தயவுசெய்து யாரும் நினைக்க வேண்டாம். இனி தப்பித்து நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? காலையில் அலுவலகத்துக்கு வந்து மாலை 6 மணிக்குள் இல்லம் திரும்பத் தாமதமானால் உங்கள் மனம் எப்படி எல்லாம் தவித்துவிடுகிறது... 'அப்பா கிளம்பிட்டேன்டா செல்லம்... 10 நிமிஷத்தில் வந்துடுவேன்’ எனக் குழந்தைகளை சமாதானப் படுத்துவதும், 'கோவிச்சுக்காதம்மா, இந்தா வந்துட்டேன்’ என மனைவியிடம் உருகுவதும் ஒவ்வொரு குடும்பத் தலைவனும் நடத்தும் பாசப் பகிர்வுதானே? 21 வருடங்களாக என் குடும்பத்தைப் பிரிந்துகிடக்கிற நான் எத்தகைய வார்த்தைகளால் அவர்களை சமாதானப்படுத்த முடியும்? 'அப்பா...’ எனத் தெளிவான உச்சரிப்பில் அழைக்கும் குரலைக் கேட்பதற்கு முன்னரே மகளைப் பிரிந்து தவித்தோமே... இரண்டு வயதில் எங்களிடம் இருந்து ஆரித்ரா பிரித்து அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வை ஒரு தகப்பனாக தயைகூர்ந்து நினைத்துப் பாருங்கள். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அவள் இருக்கிறாள் என்பதைத் தவிர்த்து, எங்களுக்கு என்ன ஆறுதல்? ஒருவன் கொலையே செய்திருந்தாலும், அதற்கான தண்டனையைக் காட்டிலும், அதிகமான தண்டனையை நாங்கள் அனுபவித்துவிட்டோம். இளமை தொலைத்து - இல்லம் இழந்து - உலகம் பாராது - உணர்வுகள் மழுங்கிய உயிராக வாழும் வாழ்வெல்லாம் ஒரு வாழ்வா? அடைபட்டு வாழ்தல்தான் அதிகபட்சத் துயரம். உலகத்தின் மிகச் சிறிய கூண்டுக்குள் முடங்கி எதையுமே பாராது வாழும் வாழ்க்கை எவருக்குமே அமையக் கூடாது. 'நல்லவர்கள்’ எனச் சொல்லி இனி தப்பிப்பதால் மட்டும் நாங்கள் இழந்த எல்லாமும் எங்களுக்குக் கிடைத்துவிடப்போகிறதா? விசாரணை அதிகாரிகளிடம் எவ்வளவோ விளக்கிச் சொல்லியும், கடிதமாக மனுவாகக் கதறித் தீர்த்தும் நீங்காத எங்களின் சோதனை இப்போது விளக்கமாக எழுதுவதால் நீங்கப்போகிறதா? தண்டனைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக எங்களின் நியாயங்களை நாங்கள் எழுதவில்லை. மரணமே நிகழ்ந்தாலும், என்றைக்காவது எங்களின் விளக்கம் ஏற்கப்படும் என்கிற நிறைவுக்காகவே இதைச் சொல்கிறேன்.
நாங்கள் அணு அணுவாக மரணத்தை அனுபவித்தாயிற்று... 'இன்று, நாளை’ என ஏங்கி ஏங்கியே எல்லாத் துயரங்களையும் கடந்தாயிற்று... வெளியே வந்தாலும் 'உயிர் மட்டும் மிச்சம்’ என்கிற எண்ணத்தைத் தவிர, எங்களிடத்தில் வேறு என்ன உணர்வு ஏற்பட்டுவிடப் போகிறது? ஆனாலும், இந்த உலகத்தின் வெளிப்பரப்பில் நீந்த முடியாதா என்கிற ஏக்கம் அடிமனதில் இப்போதும் கிடக்கிறது. அதற்குக் காரணம், எங்களின் அன்பு மகள் ஆரித்ரா.
''அப்பா உங்களை எப்போ நான் பார்ப்பேன்? உங்களின் தூக்குக்கு நாள் குறிக்கப்பட்டது தெரிந்து நான் எப்படி எல்லாம் அழுதேன் என்பது தெரியுமா அப்பா? பாட்டிம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை... யாருமே இங்கு சாப்பிடவில்லை; தூங்கவில்லை. நமக்கு ஏன் அப்பா இப்படி ஒரு வாழ்க்கை? இரவு முழுக்கத் தூக்கம் இல்லாததால், உங்களின் கடிதங் களையும் ஓவியங்களையும் மட்டுமே தடவிப் பார்க்கிறேன். கற்பனைக் கதைகளில்கூட இப்படி ஒரு துயர வாழ்க்கை இருக்குமா என்பது தெரியவில்லை அப்பா. அம்மா ஓர் இடத்தில்... அப்பா ஓர் இடத்தில்... மகள் ஓர் இடத்தில் என எதற்காக இந்த வாழ்க்கையை வாழ்கிறோம்? நீங்கள் ஒரு தந்தையாக எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் உறவுகளே எனக்குச் செய்கிறார்கள். ஆனால், அப்பா எனக் கட்டிப் பிடித்து உங்கள் மடியில் புரளும் நாளுக்காக ஏங்கும் என் பாசத்தைக் குடும்பத்தினரால் கொடுக்க முடியுமா? உலகத்திலேயே இப்படி ஒரு பாவப்பட்ட ஜென்மம் என்று என்னைத் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்கள் அப்பா. உங்களைப் பார்க்காத ஒவ்வொரு நாளுமே எனக்கு நரகம்தான். சாப்பாடு, படிப்பு, தூக்கம் என எதையுமே செய்ய முடியாமல் தவிக்கும் என் நிலைமை என்றைக்குத்தான் சரியாகுமோ?''
- இப்படி ஒரு கடிதம் எழுதி இருக்கிறாள் ஆரித்ரா. வரிக்கு வரி அப்பா என்கிற வார்த்தையை அவள் சேர்த்து எழுதி இருக்கும் பக்குவத்தில் அவளுடைய அபரிமிதமான பாசத்தை உணர்கிறேன். மகளின் கையெழுத்தை மடியில்வைத்துத் தடவிப் பார்க்கிறேன். அதில் உள்ள ஒவ்வோர் எழுத்திலும் வழிகிற துயரத்துக்கு பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்கிறேன். 'அப்பா...’ என அழைக்கிற மறு கணத்திலேயே அவள் முன்னால் போய் நிற்க முடியாதா என தடுமாறித் தவிக்கிறது மனது. மகளே... நீ இருக்கும் திசை நோக்கி மண்டியிட்டு அழுகிறேன். உன் ஒவ்வொரு நாள் வளர்ச்சியிலும் உச்சி முகர்ந்து சிலிர்த்திருக்க வேண்டியவன், உன்னைக் காணாது கம்பிகளுக்குள் கதறிக்கிடக்கிறேன். 'எங்க அப்பாவைக் காப்பாத்துங்க’ என மீடியாக்களிடம் நீ கதறியதாகக் கேள்விப்பட்டேன். அம்மாவின் வயிற்றில் இரு மாதக் கருவாக இருந்தபோது குண்டு வெடிப்பு சத்தத்தில் உனக்கு என்ன ஆனதோ எனப் பயந்தேன். அம்மாவின் கருப்பைச் சுவரைக் கெட்டியாகப் பிடித்தபடி, உம்மைக் காத்துக்கொண்ட எம் மகளே... இரு மாதக் கருவிலேயே கற்றுக்கொண்ட அந்தப் பக்குவம்தான் இப்போதும் உன்னைக் காப்பாற்றுகிறதோ என்னவோ... எங்கள் வயிற்றில் பிறந்த பாவத்தாலே இத்தனை சுமைகளுக்கு ஆளாகித் தவிக்கிறாயே... உன்னை நோக்கி அழ மட்டுமே இந்த அப்பனால் முடிகிறது.
(காயங்கள் ஆறாது)
நன்றி: ஜூனியர்விகடன் 30-10-2011
1 கருத்து:
Murugan,
The same you are feeling about your daughter , Priyanka and Rahul would have thought on May 21st.
You killer bastard, when so many Tamilians are struggling to get seat in Engineering college in Tamilnadu, how come your daughter is studying in Canada?
கருத்துரையிடுக