சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு சுட்டெரிக்கும் மதியப் பொழுதில் சென்னையின் பிரதான மருத்துவமனையின் நெரிசலான வளாகத்தில் அற்புதம் அம்மாளைச் சந்திக்க நேர்ந்தது. மருத்துவமனையில் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான முகங்களில் எந்த விசேஷ கவனமும் கோரக்கூடிய முகம் அல்ல அற்புதம் அம்மாளுடையது. முதுமையும் துயரமும் அவரது தோலில் சமமாக வரிகளை நெய்திருந்தன. யாரிடமாவது துயரத்தை இறக்கிவைக்க முடியாதா என்கிற கவலை அவரிடம் எப்போதும் இருக்கும் போல. இறக்கிவைக்க இறக்கிவைக்க, சுமை குறைவது போலவும் தெரியவில்லை.
அற்புதம் அம்மாளின் துயரத்துக்கு வயது 20. 1991இல் அது போல ஒரு ஜூன் மாத மதிய பொழுதில் தான் சும்மா விசாரணைக்கு என்று அவர் மகன் பேரறிவாளனை அழைத்துச் சென்றது காவல் துறை. விசாரணைக்கென்று சென்ற அறிவு இன்னும் வீடு திரும்பவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல் மட்டும் வந்தது. பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. இன்று அற்புதம் அம்மாளின் மகன் அறிவு ஒரு மரண தண்டனைக் கைதி.
சிறைக் கம்பிகளுடன் அறிவின் போராட்டம் தொடங்கிய அதே தருணத்தில் விடுதலையின், தண்டனைக் குறைப்பின் சிறு கீற்று காட்டும் அதிகாரமையத்தின் எல்லாக் கதவுகளோடும் அற்புதம் அம்மாளின் போராட்டம் தொடங்கியது. “ஏறி இறங்காத படி இல்லை. மோதாத கதவு இல்லை, என்ன நடக்குமோ என்று தெரியவில்லை” என்று ஒரு சமயம் துயரம் தோயப் பேசினாலும் அடுத்த நொடியே நம்பிக்கையை எங்கிருந்தோ தருவித்துக்கொள்கிறார் அற்புதம் அம்மாள். “எப்படியும் அறிவு எங்களுடன் வந்துவிடுவான், நாங்கள் அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக இருப்போம்” என்கிறார். 63 வயது நிறைந்த அற்புதம் அம்மாளுக்கும் அவருடைய கணவருக்கும் எஞ்சிய வாழ்க்கையை நகர்த்துவது என்பதே பேரறிவாளனின் விடுதலை பற்றிய நம்பிக்கைகளால்தான் சாத்தியப்படுகிறது.
ஆனால் கடந்த ஜூனோடு பேரறிவாளனும் அவரோடு கைதுசெய்யப்பட்ட ஏழுபேரும் சிறையில் 20 வருடங்களை நிறைவுசெய்திருக்கிறார்கள் என்பது அவர்களின் தீவிரமான நம்பிக்கையைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் செய்தி. பேரறிவாளன் உள்படச் சிறையில் இருக்கும் நான்கு மரண தண்டனைக் கைதிகளுக்கு 20 வருடங்களுமே மரணத்தை நோக்கிய பயணம். பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம், கொலையாளிகளுக்கு அவர் பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பதே. மரண தண்டனையைச் சட்டப் புத்தகங்களில் இன்னும் சுமந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமற்ற சமூகத்தில் பேட்டரி வாங்கிக்கொடுத்ததற்காக மரண தண்டனையை எதிர்கொள்வதென்பது உச்சபட்ச கொடுமை. அதனால்தான் தனது போராட்டத்தை உண்மைக்கான போராட்டம் என்கிறார் பேரறிவாளன். “மரணத்தின் வாயிலில் நிற்கும் மனிதன் நான், உண்மை தோற்றுவிடக் கூடாது என்று விரும்புகிறேன்” என்று கோருகிறார். தனது நிலையை விளக்கி தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்று பேரறிவாளன் எழுதியிருக்கும் ஒரு சிறு பிரசுரம் எந்தவொரு மன சாட்சியையும் உலுக்கக்கூடியது.
“இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடுதலை கிட்டவில்லையானால், இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை. வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ தற்போதே உறுதிசெய்யப்பட்டாக வேண்டும். அல்லது இன, மொழிப்பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என்று வரலாறு குறிக்கட்டும்” என்கிறார். ஆனால் பேரறிவாளனின் இந்தக் கோரிக்கைகளுக்கு, அற்புதம் அம்மாளின் உறுதியான போராட்டத்துக்கு இந்தச் சமூகம் இரண்டு தசாப்தங்கள் கழித்தும் எந்த எதிர்வினையும் பெரிதாக ஆற்றிவிடவில்லை.
மனித உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் ஒரு சிலரின் கோரிக்கைகள், 1999இல் பேரறிவாளனின் சொந்த ஊரில் நடந்த கடையடைப்பு, இது தாண்டி எதுவுமே நடக்கவில்லை. பேரறிவாளனுக்காகப் பேச வேண்டிய கடமை அவரது சொந்த ஊரான சொலையார் பேட்டை மக்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பது போலவொரு பாவனையில் வாழ்ந்துவருகிறோம்.
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தச் சமூகம் இப்படி மரத்துப்போனதற்கு என்ன காரணம்?
பொருட்படுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றி நாம் எப்போது மௌனம் காக்கத் தொடங்குகிறோமோ அன்று நமது வாழ்வு முடியத் தொடங்குகிறது என்று சொல்லியிருக்கிறார் மார்ட்டின் லூதர் கிங். பேரறிவாளனுக்குச் சமூகம் ஆற்றிக் கொண்டிருக்கும் எதிர்வினைகளைப் பார்க்கும்போது நமது சமூகம் அதன் மனசாட்சியின் துடிப்பை நிறுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.
19 வயதில் சிறை சென்று கடந்த 20 வருடங்களாகத் தனது இளமைக் காலத்தைச் சிறையின் அடர்ந்த இருள் பக்கங்களுக்குள் தொலைத்து விட்டு இப்போது இளமை முடிந்தும் மரணத்தின் வாயிலில் நின்றுகொண்டு தனக்காக அல்ல, நீதிக்காகவும் உண்மைக்காகவும் சிறு வெளிச்சம் தேடிக்கொண்டிருக்கும் பேரறிவாளனுக்கும் சிறைக்குள் நடக்கும் அவரது போராட்டத்துக்குச் சிறைக்கு வெளியே வெவ்வேறு வடிவங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் அற்புதம் அம்மாளுக்கும் இந்த முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டால் அது அவர்களுடைய தோல்வியாக மட்டுமே இருக்காது. அது மானுடத்தின் தோல்வியாக இருக்கும்.
நீதிமன்றம் விதிக்கிற தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வோர் அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது என்கிறார் நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண ஐயர்.
உலகிலுள்ள நாடுகளில் 135 நாடுகளில் சட்டரீதியாகவோ செயல்ரீதியாகவோ மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. மரண தண்டனையைச் சட்டப் புத்தகங்களிலும் செயல்வடிவங்களிலும் வைத்திருக்கும் 58 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்காவும் அதில் இருக்கிறது என்பதுதான் வேடிக்கை. அமெரிக்காவிலுள்ள ஒருசில மாநிலங்கள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளில் 90 சதவிகிதம் பேர் ஏழைகள். அவர்களால் அவர்களுக்கென்று வழக்கறிஞர் வைத்துக்கொள்ளக்கூட முடியாத ஏழைகள். அதேபோல் அமெரிக்காவில் மரண தண்டனை இல்லாத மாநிலங்களைவிட மரண தண்டனை அமலில் உள்ள மாநிலங்களில் கொலைக் குற்றங்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கின்றன.
மரண தண்டனைகளுக்கும் கருணை மனுக்களுக்கும் இடையிலுள்ள அரசியல் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு மரண தண்டனைக்கெதிரான கருத்தரங்கு ஒன்றில் பேச வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான நந்திதா ஹக்சர் சென்னை வந்திருந்தார். மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் அப்சல் குருவுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நந்திதா ஹக்சர். நாடாளுமன்றத் தாக்குதலில் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட கிலானியின் வழக்கறிஞராகவும் இருந்தவர்.
முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் பதவியிலிருந்து விலக ஓரிரு நாட்களே இருந்த சூழலில் நந்திதா, கலாமைச் சந்தித்து அப்சல் குருவின் கருணை மனு பற்றிக் கேட்டிருக்கிறார். மனு இன்னும் தனது கைகளுக்கு வரவில்லையென்று பதில் சொல்லியிருக்கிறார் கலாம். கருணை மனு கலாமின் கைகளுக்குச் சென்று விட்டால் அவர் அதை அங்கீகரிக்கக்கூடும் என்கிற அச்சம் காரணமாகக் கருணை மனு அவருக்கு அனுப்பப்படவில்லை, இதற்கு அரசியலே காரணம் என்கிறார் நந்திதா ஹக்சர்.
பேரறிவாளனுக்கு ஒரு பேட்டரி என்றால் கிலானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்குக் காரணம் ஒரு தொலைபேசி உரையாடல். காஷ்மீரி மொழியில் அவர் தன் சகோதரருடன் பேசியதை வைத்து அவருக்கு நாடாளுமன்றத் தாக்குதல்களில் பங்கு இருக்குமென்று முடிவு செய்து பொடா சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. காஷ்மீரியிலிருந்து ஆங்கிலத்தில் அந்தத் தொலைபேசி உரையாடலை மொழிபெயர்த்ததில் பல பிழைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் பழக்கம் இருந்ததைத் தவிர கிலானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேறு காரணங்கள் இல்லை. 2002 டிசம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிலானி, அவர்மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் அக்டோபர் 2003இல் விடுதலை செய்யப்படுகிறார்.
கிலானிக்கு ஆதரவாகப் பல மனித உரிமை அமைப்புகளும் அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்த காரணத்தால் ஆசிரியர் அமைப்புகளும் மாணவ அமைப்புகளும் போராடியது குறிப்பிடத்தக்கது. தனக்கு ஆதரவாகப் போராடியவர்களுக்கு எழுதிய மடல் ஒன்றில் கிலானி இப்படிக் குறிப்பிடுகிறார்: “நீங்கள் ஒரு தனிமனிதனுக்காகப் போராடவில்லை, ஜனநாயகம், நீதி போன்ற விழுமியங்களைக் காப்பாற்றுவதற்கும் அவை நிலைபெறுவதற்கும் நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்.”
பேரறிவாளனுக்கும் இது பொருந்தும்.
-கவிதா
நன்றி: காலச்சுவடு, ஆகஸ்ட்-2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக