புதன், ஆகஸ்ட் 17, 2011

(ராஜீவ் கொலையில்) விசாரிக்கப்படாத மர்ம மனிதர்கள் இன்னும் வெளியில் இருக்கிறார்கள்!

''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைச் சதிகாரர்களைப் பிடிக்​காமல் விட்டுவிட்டு, மூன்று பொடியன்களுக்குத் தூக்குத் தண்டனை வாங்கித் தந்த சி.பி.ஐ-யில் வேலை பார்த்ததற்கு வெட்​​கம், வேதனை, அவ​மானம், குற்ற உணர்ச்சி ஆகியவற்றால் குமுறுகிறேன்... கொந்தளிக்கிறேன்!'' - இப்படி தன் வீட்டுச் சுவரில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்து இருக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன்ராஜ். இவர், ராஜீவ் கொலை வழக்கு விசாரணைக் குழுவில் இடம் பெற்ற அதிகாரிகளில் ஒருவர்!

'ஏன் இந்தத் திடீர் ஆவேசம்?’ என்று கேட்கும் முன்பே, சுவரில் அடித்த பந்தாக வந்தது பதில்!

''நான் புலிகளுக்கு ஆதரவாளன் அல்ல. 'விசாரணை முழுமை அடையாமல், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரைத் தூக்கிலிடக் கூடாது.’ என்பதே எனது கருத்து. சி.பி.ஐ-க்கு விருப்பப்பட்டுப் போன நான், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை நடந்த விதத்தைப் பார்த்து, வெதும்பிப்போய் வி.ஆர்.எஸ். வாங்கினேன். இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே உயர் அதிகாரிகள் பலர் அலட்சியப் போக்குடன்தான் இருந்தனர். ஒரு நூல் கிடைத்தால், குறிப்பிட்ட லெவலுக்கு மேல் அதை விசாரிக்காமல், அப்படியே நிறுத்தி விடுவார்கள். ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது விடுதலைப் புலிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்குக் காரணகர்த்தாவாக இருந்து பெரும் நிதி உதவி கொடுத்துப் பின்னால் இருந்து இயக்கியவர்கள், வேறு பல உதவிகள் செய்தவர்கள் எனப் பல மர்ம மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே? அப்படிப்பட்டவர்களை அரசியல் காரணங்களுக்காகப் பொத்திப் பொத்திப் பாதுகாத்தார்கள் என்பதுதான் உண்மை.

ஒற்றைக்கண் சிவராசன் பெங்களூரு கோனேகொண்டா பகுதியில் தங்கி இருந்த வாடகை வீட்டை நாங்கள் முற்றுகை இட்டதும், தாக்குதலுக்காக உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்டோம். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அனுமதி கொடுக்காமல் வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார்கள். தாக்குதல் நடத்த உடனே அனுமதி கொடுத்திருந்தால், சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியும். 'இந்தக் கொலையில் யார் யாருக்கு என்னென்ன பங்கு?’ என்ற மொத்த விவரங்களையும் கறந்திருக்கலாம். ஆனால், அந்தத் தாக்குதலை உடனே நடத்த விடாமல் ஏன் தடுத்தார்கள் என்பது இது வரை எனக்குப் புரியாத புதிர்தான்!

ராஜீவ் கொலைக்கான பணப் பரிமாற்றத்தில், சந்திராசாமி, கே.பி. என்கிற பத்மநாதன் ஆகியோருக்குப் பங்கு இருக்கிறது. இவர்கள் இருவருமே வெளியில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தண்டனை வாங்கித் தராமல், உல்லாசமாக உலவ விட்டது ஏன்?

ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகர், 'அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப் போய்விட்டேன்...’ என்று சொன்னார். ஆனால், அவர் ஆஸ்பத்திரிக்குப் போகவில்லை. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்தான் மரகதம் சந்திரசேகரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார் என்பது பின்னர்தான் தெரியவந்தது. லலித் சந்திரசேகரின் இந்தத் தவறான வாக்குமூலத்தை மேலும் விசாரிக்கவில்லை. இந்த முரண்பாடுகள் குறித்து நான்கூட கேட்டேன். ஆனால், யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. முதலில் பார்க்கும்போது, அடிபடாமல் இருந்திருக்கிறார் லலித் சந்திரசேகர். ஆனால், நான்கு நாட்கள் கழித்து காலில் கட்டுப் போட்டுக் கொண்டு நடமாடி இருக்கிறார்.

'மல்லிகை’ இல்லத்தில்தான் எங்களது விசாரணைகள் நடந்தன. மல்லிகைக்கு முன்னால் சந்தேகத்​துக்கு இடமான வகையில் ஒருவ​னைப் பிடித்தோம். 'அமெரிக்​காவில் இருக்கும் ஒரு பெண், மல்லிகை இல்லத்தின் முகவரியைக் கேட்டார். அதனால்​தான் முகவரியைக் குறிக்க வந்தேன்.’ என்று அந்தப் பையன் சொன்​னான். அமெரிக்காவில் இருந்து இந்தத் தகவலைக் கேட்ட பெண்ணின் பெயர் பவானி. அவரது கணவர் பெயர் டேரியல் பீட்டர். இவர், லலித் சந்திரசேகரின் நண்பர். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களில் இவரும் ஒருவர்.

எங்களிடம் பிடிபட்டவனின் வீட்டைச் சோதனை செய்தோம். அங்கு ஒரு கடிதம் கிடைத்தது. 'இந்த லலித்தால்தான் இந்த நிலைமை. இதை கார்த்தி​கேயனிடம் சொல்ல வேண்டும்.’ என்று அமெரிக்காவில் இருந்த பவானி, அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தார். அதைக் கைப்பற்றினோம். இதற்காகத்தான் மல்லிகை முகவரியை அவர் கேட்டிருந்தார். எங்கள் அதிகாரிகள் இரண்டு பேர் அப்போது அமெரிக்காவில்தான் இருந்தார்கள். அவர்களிடம் இந்த முகவரியைக் கொடுத்து விசாரிக்கலாம் என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். உயர் அதிகாரிகள் தகவல் தந்திருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், அமெரிக்காவில் இருந்த அதிகாரிகளுக்கு இந்தத் தகவல் சொல்லப்படவே இல்லை. பிடிபட்ட கடிதம் அடங்கிய கோப்பு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் என்னிடம் திருப்பித் தரப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் இருந்து எழுதப்பட்ட அந்தக் கடிதம் கோப்பில் இல்லை. ஏன் அதை மறைத்தார்கள்? இதுபோல பல நபர்களை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை.

இந்த சந்தேகங்களை நான் தொடர்ந்து எழுப்பி வருகிறேன். ஆனால், சி.பி.ஐ. இதற்கு உரிய பதிலை இதுவரை தரவில்லை. 'உண்மைகள் உள்ளது உள்ளபடி வெளிவர வேண்டும்’ என்பதே என் எண்ணம். ராஜீவ் கொலை சதியில் ஈடுபட்ட பெரும்புள்ளிகளின் தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக, பல்வேறு உளவு நிறுவனங்களின் நிபுணர்களை உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்பு ஏஜென்ஸி (எம்.டி.எம்.ஏ.) அமைக்கப்பட்டது. இந்த ஏஜென்ஸி யார் யாரைக் குற்றம் சாட்டுகிறதோ, அவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள். அந்த முதலைகளை முதலில் கழுவில் ஏற்றிவிட்டு, அதன் பிறகு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தண்டனை கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும். எனவே, அதுவரை இவர்கள் மீதான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் படி ஏறப் போகிறேன்...'' என அதிரடி அஸ்திரம் ஏவினார் மோகன்ராஜ்.

-தி. கோபிவிஜய்

நன்றி: ஜூனியர் விகடன் 21 ஆகஸ்ட் 2011

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சிபிஐ (CBI) துறையினர் எம்மைத் துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒரு நாள் ஆய்வாளர் என்னை அழைப்பதாக கூறி நானிருந்த அறையிலிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக்காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், “ஏன்டா நாடு விட்டு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்?” என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே “இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான்” என்றார். உடனே என்னை திரும்பவும் உள்ளே அனுப்பிவிட்டனர்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், யார் என்ற விபரம்கூட தெரியாமல், என்ன குற்றமிழைத்தார் என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி, குற்றவாளிகளாக்கி, பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல்துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜூ.

“பேரறிவாளன் எழுதிய தூக்குக் கொட்டடியில் இருந்து ஒரு மடல்” நூலில், பக்கம் எண்: 115-116

பெயரில்லா சொன்னது…

சிபிஐ க்கு உண்மை குற்றவாளிகள் யாரென்பது நன்கறியும். எனினும் அவர்களின் வாய்களை அரசில் செல்வாக்கும் பணபலமும் மூடவைத்து விட்டன. என்றெனும் ஒரு நாள் உண்மை வெளிவரும் போது இவர்கள் தங்கள் முகங்களை எங்கே கொண்டு வைக்கப்போகின்றார்கள். அன்று இவர்கள் இன்று தூக்கிலிடத் துடிக்கும் இந்த அப்பாவிகளின் உயிர்களை மீட்டுத் தர முடியுமா?

பெயரில்லா சொன்னது…

தீமையை அலட்சியப்படுத்துவதும் .. தீமை செய்வதற்கு நிகரானது...
இந்த தீர்ப்புப் பற்றிய சந்தேகங்கள் களையப்பட வேண்டும் ....

கருத்துரையிடுக