திங்கள், ஆகஸ்ட் 08, 2011

இலங்கைப் போர்க் குற்ற அறிக்கை : அப்பாவிகளின் ரத்தத்தில் ஒளிந்திருக்கும் கொடூரம்

இலங்கைக்குள் பல ஆண்டுகளாகவே உள்நாட்டு யுத்தம் நடந்துவருகிறது. ஆனால் நான்காவது ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில், நடந்த கொடூரமான போர்க்குற்றங்கள் குறித்து, சர்வதேசச் சமூகத்தின் ஒரு பகுதியினர் கவலையடைந்திருக்கின்றனர். இது குறித்து விசாரிக்க, ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம், நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு ஒரு விசாரணைக் குழு அல்ல; ஆலோசனைக் குழு மட்டுமே என்றாலும் இந்தக் குழு அமைக்கப்பட்டது இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த அறிக்கை ஆரோக்கியமான விவாதம் எதையும் ஏற்படுத்தவில்லை. அம்மாதிரி ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். மனித உரிமைகள் விவகாரத்தில் இந்தியா தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் இந்தக் கட்டுரை கோருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்த அறிக்கை குறித்து விவாதம் வரும்போது முன்பு செய்ததைப் போல இந்தமுறையும் இலங்கையை இந்தியா காப்பாற்றக் கூடாது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து அங்கு நடக்கும் தாக்குதல்களையும் வன்முறைகளையும் கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும். இலங்கையில் வன்முறைத் தாக்குதல்கள் தமிழர் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை. 1988-90 காலகட்டத்தை இலங்கையில் பெரும் அடக்குமுறை இருந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. தென்னிலங்கையில் பாயும் இரண்டு பெரிய அழகிய நதிகளான கெலநிய கங்காவும் மஹாவெலி கங்கையிலும் இறந்த உடல்கள் மிதந்தன. தண்ணீர் ரத்தமாக ஓடியது. இரண்டு இனக் குழுக்களுக்குள் நடந்துகொண்டிருந்த மோதல்கள், ஒரே இனத்திற்குள் நடக்க ஆரம்பித்தன. “இனக்குழுக்களுக்குள் யுத்தம் நடந்த காலம் போய், ஒரே இனத்திற்குள் மோதல் நடக்க ஆரம்பித்து. தமிழர்கள் தமிழர்களைக் கொன்றார்கள். சிங்களர்கள் சிங்களர்களைக் கொன்றார்கள். அரசு எல்லோரையும்விட அதிகமாகச் சிங்களர்களையும் தமிழர்களையும் கொலைசெய்தது” என்று குறிப்பிட்டார் மானிடவியல் அறிஞரான வேலன்டைன் டேனியல்.

இந்தியா இலங்கை இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்குச் சென்றதும் ஜனதா விமுக்தி பெரமுண தனது இரண்டாம் கலகத்தைத் தொடங்கியது. சிங்களர்களிடமிருந்த வெறுப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஜேவிபி, சிங்களத் தீவிரவாதத்தைக் கையிலெடுத்துக்கொண்டது. தென்னிலங்கை முழுவதும் வன்முறையில் ஈடுபட்டது. ஆனால் விரைவிலேயே இலங்கை ராணுவம் இந்தக் கலகத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. எந்த மனசாட்சியும் இல்லாமல் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இளம் சிங்கள அரசியல்வாதி ஒருவர் ஜெனீவாவுக்குச் சென்று தன் மக்களைக் காப்பாற்ற, மனிதநேய அடிப்படையில் ஐ. நா. குறுக்கிட வேண்டுமென்று கோரினார். அவருக்கு வசுதேவ நாயனக்கார, திஸநாயகம் என்னுமிரு தோழர்கள் உறுதுணையாக இருந்தனர். அந்த இளம் அரசியல்வாதி தற்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே. மனித மதிப்பீடுகளைக் காப்பாற்றுவது, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையிலிருந்து மக்களை ஐ. நா. குறுக்கிட்டுக் காப்பாற்ற வேண்டுமென்ற அவரது முந்தைய நிலைப்பாடுகளை இப்போது நினைவுபடுத்துவதை மஹிந்த நிச்சயம் ரசிக்கமாட்டார்.

2009 மார்ச் மாதம் 23ஆம் தேதி ஐ. நா. வின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்ததையடுத்தே ஐ. நா. ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக இந்தோனேஷியாவைச் சேர்ந்த மர்ஸுகே தருஸ்மன் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென்னாப்பிரிக்காவின் யாஸ்மின் சூகா ஆகியோர் உறுப்பினர்கள். இந்தக் குழு உண்மை அறியும் குழு அல்ல. நடைபெற்றதாகச் சொல்லப்படும் மனித உரிமைமீறல்களின் அளவு, தன்மை பற்றிக் கணக்கிடுவதே இதன் நோக்கம்.

ஐ. நா. வின் பல மனித உரிமை ஒப்பந்தங்களில் இலங்கை கையெழுத்திட்டிருக்கிறது. அதனால், மனித உரிமைமீறல்களுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் கடமை அதற்கு இருக்கிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்தே மனித உரிமைமீறல்களுக்கெனப் பல்வேறு குழுக்களை அமைத்து, தவறு செய்தவர்கள்மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறது. 1977இல் அமைக்கப்பட்ட சாம்ஸோனி குழு, 1991இல் அமைக்கப்பட்ட கக்கடிச்சோலை குழு, 2001இல் இன வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அதிபரின் உண்மை அறியும் குழு, 2006இல் அமைக்கப்பட்ட அதிபரின் விசாரணைக் குழு போன்றவை இவற்றில் சில. 2010ஆம் ஆண்டில், படிப்பினைகள் மற்றும் சமாதானக் குழு ஒன்றை இலங்கை அரசு நியமித்தது. இந்த விசாரணைக் குழுக்களுக்கு என்ன ஆனது? பல சமயங்களில் விசாரணைக் குழுக்கள் அறிக்கைகள் எதையும் தாக்கல் செய்யவேயில்லை. அப்படியே இக்குழுக்கள் அறிக்கைகளைத் தாக்கல் செய்தாலும் அவற்றின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவற்றை ஓரம்கட்டியது. இந்த அறிக்கைகளில் ஒருபோதும் அரசு நிர்வாகம்மீதோ அதிகாரிகள்மீதோ எந்தக் குற்றச்சாட்டும் இருக்காது. அரசு தற்போது நியமித்திருக்கும் படிப்பினைகள் குழுவுக்கும் இதே கதிதான் நேரும் என இலங்கை விவகாரத்தைக் கவனித்துவரும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று ஐ. நா. ஆலோசனைக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை அதிகாரபூர்வமாகப் பதிப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே, இலங்கை ஊடகங்களில் இதன் சில பகுதிகள் வெளியாயின. இதையடுத்து இலங்கையில் ஐ. நா. வுக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ், இந்த விவகாரத்தில் இலங்கை அரசின் பார்வையைக் கோடிட்டுக் காட்டினார். இது ஐ. நா. வின் அறிக்கை அல்ல என்று குறிப்பிட்ட பெரிஸ், ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட முயற்சியால் அமைக்கப்பட்ட குழுதான் என்று குறிப்பிட்டார். அது உண்மை அறியும் குழுவோ அதற்கென ஆய்வுசெய்யும் அதிகாரமோ இல்லை எனப் பெரிஸ் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையுடன் அதற்கு முறையான எந்தத் தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டார். இலங்கை அரசு தமிழர்களுடன் நல்லுறவை உருவாக்க முயற்சித்துவரும் நிலையில், வெளிவந்திருக்கும் ஆலோசனைக் குழுவின் அறிக்கை சிங்கள, தமிழ்ச் சமூகத்திற்கு இடையிலான பிரிவைக் கூர்மைப்படுத்துவதாகக் குறிப்பிட்டார் பெரிஸ்.

குழுவின் முக்கியக் கண்டுபிடிப்புகள்

தருஸ்மன் அறிக்கையைப் பொறுத்தவரை, இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய இருவர்மீதும் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறது. அறிக்கையின் கடைசிப் பகுதியில் இருதரப்பும் செய்த மனித உரிமைமீறல்களைப் பட்டியலிடுகிறது. போரின் கடைசிக் கட்டத்தில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து தப்பிச்செல்ல முயன்றவர்களைச் சுட்டுக்கொன்றது, குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்த்தது, பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்தியது, கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகள் புலிகளின் மீது சுமத்தப்பட்டன. ஆனால், புலிகள் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டு, பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், இலங்கை அரசின் அத்துமீறல்கள் மீதே அனைவரது கவனமும் திரும்பும். தவிர, இலங்கை அரசு இதை எதிர்த்துவருவதோடு, அடக்கு முறையையும் தொடர்ந்துவருகிறது.

தருஸ்மன் அறிக்கையில் இலங்கை அரசு பின்வரும் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பரவலான குண்டுவீச்சின் மூலம் பொதுமக்களைக் கொலை செய்தது. மருத்துவமனைகளின் மீதும் மற்ற உதவியளிக்கும் கட்டடங்களின் மீதும் தாக்குதல் நடத்தியது. மனிதாபிமான உதவிகளை மறுத்தது, பாதிக்கப்பட்டவர்கள், போரில் தப்பியவர்கள் குறிப்பாக, இடம் பெயர்ந்தோர், புலிகளெனச் சந்தேகிக்கப்படுவோரின் மனித உரிமைகளை மீறியது, போருக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் ஊடகங்கள், அரசியல் எதிரிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் இலங்கை அரசின் மீது சுமத்தப்பட்டுள்ளன. சர்வதேசச் சமூகத்திடம் இலங்கை அரசு என்ன சொல்லி வந்ததோ அதற்கு முற்றிலும் நேர் மாறாகத்தான் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்துகொண்டது என தருஸ்மன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொதுமக்கள் யாரும் கொல்லப்படாமல், மனிதநேயரீதியில் உதவி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றுதான் இலங்கை அரசு கூறிவந்தது.

ஐ. நா. அதிகாரிகளையும் சர்வ தேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் போர் நடக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டதால், கிளிநொச்சி பகுதியில் என்ன நடந்தது என்பதைக் கணிக்க முடியவில்லை என ஆலோசனைக் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. போர் நடந்த பகுதியில் பணியாற்றிய டாக்டர் சத்தியமூர்த்தி, டாக்டர் வரதராஜா என்னும் இரு மருத்துவர்கள் விடுத்த அறிக்கையை இந்த அறிக்கை மேற்கோள் காட்டுகிறது. “அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் தேவையான மருந்துகளும் இருந்திருந்தால் மருத்துவமனையில் நேர்ந்த பெரும்பாலான மரணங்களைத் தவிர்த்திருக்கலாம். ஆன்டிபயோடிக் மருந்துகள் எங்களுக்கு வழங்கப்படவில்லை. சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய குளுகோஸ் திரவம் ஒரு பாட்டில்கூட வழங்கப்படவில்லை. உயிரைக் காப்பாற்றக் கூடிய அவசர அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிராதரவான நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்”.

இந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியாது என்றாலும் ஐ. நா. வின் உள்நாட்டுக் குழுக்கள் அளித்த அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வைத்துப் பார்த்தால், “சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள்வரை கொல்லப்பட்டிருக்கலாம்”. இதைவிட மோசம், “புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இலங்கை ராணுவத்தால் பிடித்துச்செல்லப்பட்டவுடன், சுட்டுக்கொல்லப்பட்டதுதான்” புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பின்னால் கைகள் கட்டப்பட்டு, இலங்கை ராணுவத்தால் கூட்டம் கூட்டமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளைப் பிரிட்டனின் சேனல் 4 நியூஸ் ஒளிபரப்பியது. தமிழ்ப் பெண்களின் மீது நிகழ்த்தப்பட்ட “பாலியல் பலாத்காரமும் பாலியல் வன்முறையும் மிக அரிதாகவே பதிவாயின” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இலங்கையில் நெருக்கடி நிலை ஒவ்வொரு மாதமும் நீடித்துக்கொண்டே செல்லப்படுவது, தற்போதும் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், யுத்தம் நடந்த பகுதிகளை முழுமையாக ராணுவமயப்படுத்துவது, ஊடகங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது போன்றவற்றால் போர்க் குற்றச் செயல்களுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்குத் தடை ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2010 மே மாதம் அதிபரால் நியமிக்கப்பட்ட (கற்ற பாடங்கள் மற்றும் மறுவாழ்வுக்கான கமிஷன்) Lessons Learnt and Reconciliation Commission (LLRC) ‘சுதந்திரமும் பாரபட்சமற்ற தன்மையும் இல்லாத காரணத்தால்’ எதையும் சாதித்துவிட முடியாது. மேற்கோள் காட்ட வேண்டுமென்றால், “சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கான சர்வதேசக் கோட்பாடுகளை எல். எல். ஆர். சி. கடைபிடிக்கத் தவறியதோடு, அதன் உறுப்பினர் நியமனங்களால் சமரசத்துக்குள்ளாக்கப்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கிடையில் தீவிரமான அக்கறைகள் சார்ந்த வேறுபாடுகளையும் கொண்டுள்ளது.”

முன்னாலிருக்கும் வழி

இந்த அறிக்கை, பொறுப்புடைமைக்கு இலங்கை அரசின் அணுகுமுறையானது “உண்மைக்கும் நீதிக்கும் அழுத்தம் கொடுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும் அடிப்படையான சர்வதேச மதிப்பீடுகளுக்குப் பொருந்தவில்லையென்று” என்பதைத் தீவிரமாக வலியுறுத்துகிறது. அதனால் ஒரு சுதந்திரமான சர்வதேச அணுகுமுறை அவசியம் என்கிறது அறிக்கை. இப்போது முடிவு, ஐ. நா. செயலரின் நீதிமன்றத்தில் இருக்கிறது. ஐ. நா. செயலர் பான் கீ முன் என்ன செய்வார் என்பதையும் அவருக்கு எவ்வளவு தூரம் அதிகாரம் வாய்ந்த சர்வதேச மையங்களின் ஆதரவு கிடைக்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்தமுறை ஐ. நா. வில் இலங்கையில் நடந்த மனித உரிமைமீறல்கள் பற்றி விவாதிக்கப்பட்டபோது இலங்கை, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவின் ஆதரவைப் பெற முடிந்தது. இந்தமுறை ஐ. நா. வில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்காமல் இருக்க வேண்டுமென்பது முக்கியம். சொல்லப்போனால் துன்பப்படும் தமிழர்களுக்கு ஆதரவாகத் தனது குரலை அது உயர்த்த வேண்டும். அவர்களுடைய துன்பமும் துயரமும் இந்தியப் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் வெளிப்பட வேண்டும்.

இந்த வருடம் ஜனவரியில் எனக்கு யாழ்ப்பாணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அறிவுஜீவிகள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், தன்னார்வ நிறுவனங்களில் பிரதி நிதிகள், சாதாரண மக்கள் என்று பலதரப்பட்டவர்களையும் சந்திக்க முடிந்தது. நான்காவது ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் அதைத் தடுத்து நிறுத்த இந்தியா, தமிழ்நாடு ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை என்பதில் அவர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்தோடு இருந்தார்கள். அவர்களுடைய கண்களில் கைவிடப்பட்டதன் வேதனை தெரிந்தது.

வாட்டர் சாங்க் என்ட்ஸ் என்னும் பாப்லோ நெருடாவின் கவிதையின் வரிகள் என் நினைவுக்கு வந்தன.

“இந்தப் போரும்,
நம்மைப் பிரித்த,
சாக வைத்த,
நமது கொலையாளிகளோடு சேர்ந்து நம்மையும் கொன்ற
போன்ற பிற போர்கள் போலவே கழியலாம்.

ஆனால் இந்தக் காலத்தின் வெட்கம்
அதன் சூடேறிய விரல்களை
நம் முகங்களின் மீது வைக்கிறது,
அப்பாவி ரத்தத்தில் ஒளிந்திருக்கும்
கொடூரத்தை யார் அழிப்பார்கள்?”

(Perhaps this war will pass like others which divided us
leaving us dead, killing us along with the killers,
but the shame of this time puts its burning fingers in our faces,
who will erase the ruthlessness hidden in innocent blood?) l

-வி. சூரியநாராயண்
தமிழில்: முரளிதரன்

நன்றி: காலச்சுவடு, ஜூலை 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக