2001ம் ஆண்டு புகையிலை பொருள் சட்டவிதிமுறையின் படி இந்தியாவில் சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது. ஆனால் விதிமுறைகளை அமல் செய்ய சரியான நடைமுறைகள் இங்கு இல்லை. சிறுவர்கள் தாராளமாக சிகரெட் பிடிக்கலாம். ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சிறுவன் கடைக்கு சென்று சிகரெட் கேட்டு வாங்கும் போது அவனுடைய வயதை உறுதி செய்ய மொபைல் எண் அல்லது கிரெடிட் கார்டு விபரங்களை கேட்கிறார்கள். சிறுவனிடம் போலி விபரங்களை அளித்து சிகரெட் பெறுவதற்கு பரிசோதனைக்காக போலீசாரே அனுப்புவார்கள். ஒருவேளை அவனிடம் புகையிலைப் பொருட்களை கடைக்காரர் விற்பனை செய்தால் கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் இந்தியாவில் இல்லாததால் சிறுவர்கள் எளிதில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டை புகையிலையை ஒதுக்கும் இளைஞர்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய சுவாச ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆர்.நரசிம்மன் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அவர் தெரிவித்தது:புகைபிடிக்க பழகி விட்டவர்கள் மத்தியில் அதை விடுவதற்கு செய்யும் முயற்சியில் பெரிய முன்னேற்றம் இல்லை. இந்தியாவில் 2 சதவீதம் பேர்தான் புகைப் பழக்கத்தை கைவிட முன்வருகிறார்கள். இது மற்றநாடுகளை விட மிகக் குறைவு. ஆகவே புகை பிடிப்பதற்கு முன்பே அதை தடுக்க வேண்டுமானால் பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும். இதற்காக நாங்கள் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு செய்து வருகிறோம். இதை பெரிய அளவில் செய்யும் போது 1015 ஆண்டுகளில் நல்ல விளைவு ஏற்படும்.இந்தியாவில் விளம்பரத் தடை, பொது இடங்களில் சிகரெட் பிடிக்கத் தடை இருந்த போதிலும் புகைக்கும் பழக்கத்தில் மாற்றம் இல்லை.
இந்தியாவில் புகைபிடிக்கும் பெண்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள். பீடி, சிகரெட், மூக்குப் பொடி எதுவாக இருந்தாலும் அது நமது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியதுதான். சிலர் குறைவாகத்தானே குடிக்கிறோம் என்று கூறி சமாதானம் செய்கிறார்கள். அது தவறு. கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அடுத்தவர் புகையை நாம் சுவாசித்தால் அது நமது உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதை கடந்த 1015 ஆண்டுகளாகத்தான் உணரத் தொடங்கி யிருக்கிறோம். இவ்வாறு நரசிம்மன் தெரிவித்தார். எதிர்கால இளைஞர்கள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க, பள்ளிகளில் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.புகையில் மறையும் வாழ்க்கை : புகை பிடிப்பவர்களின் ரத்த நாளங்களை நிகோடின் பாதிப்பதால் அதன் இயல்பு தன்மை மாறி, இருதய நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது. புகையால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. டி.பி. வருவதற்கும், சுவாச உறுப்புகளில் கேன்சர் ஏற்படவும், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படவும் காரணமாகிறது. புகை பிடிக்கும் ஆண்கள் 10 ஆண்டு வாழ்க்கையை இழக்கிறார்கள். புகையிலைப் பொருட்களால் உலகில் ஆண்டுக்கு 54 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பாதிப்பேர் மரணமடைய புகையிலையே காரணம்.நன்றி: www.vizhippu.net
1 கருத்து:
தேவையான பதிவு நன்றி.
கருத்துரையிடுக