வியாழன், அக்டோபர் 09, 2008

அன்புள்ள (நடிகை) ஷகிலாவுக்கு...

திருநெல்வேலியில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றி கேள்விப்பட்டேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன். உடலைக் காட்டும் விதமாக ஆடை அணிவதை எதிர்த்து கலாச்சாரக் காவலர்கள் களமிறங்கும் மாநிலத்தில் இப்போது உடலை முழுதாக மறைத்து ஆடை அணிந்ததற்காக உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது வினோதமாக இருக்கிறது. பர்தா அணிவது ஒரு குற்றமா?

முதலில் உங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்கே அபத்தமானது. திருநெல்வேலியில் ஏதோ ஒரு திரையரங்கில் "அதிரடி (!) ரெய்ட்" நடத்திய போது அங்கு ஓடிய படத்திற்கு நடுவில் நீங்கள் நடித்த, சென்ஸார் செய்யப்படாத 'பிட்' காட்சிகள் ஓட்டப்பட்டனவாம். அதில் நடித்த "குற்றத்திற்காக" உங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இத்தகைய படங்களில் நடிப்பது குற்றம் என்றால் அந்தக் குற்றம் திட்டமிட்டு நடத்தப்படுவதற்கு காரணமான லட்சோப லட்ச ஷகிலா 'பிட்' பட ரசிகர்களுக்கு எதிராக என்ன பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரியவில்லை.அந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்த போது உங்கள் பாதுகாப்பிற்கு 20, 30 "மெய்க் காவலர்களுடன்" பர்தாவை இன்னொரு மெய்க்காவலராக அணிந்து வந்ததில் புதிதாக எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. உங்களைப் போலவே "சமூக இழிவு" என்று கருதப்படும் காரியங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றங்களுக்கு வரும் பல பெண்கள் இதைத்தான் செய்கிறார்கள்.

இந்தத் தருணத்தை வைத்து ஓ.சியில் காசு பண்ண நினைக்கும் ஊடுருவும் மீடியாவின் கண்களுக்கு பயந்தோ என்னவோ பாலியல் தொழில் நடத்தியதாக கூறப்பட்ட மகேஸ்வரி என்ற டிவி நடிகையும் இதே போல பர்தா அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் இப்போது "சமூக இழிவான காரியம் தொடர்பாக குற்றாம்சாட்டப்பட்ட" நீங்கள் பர்தா அணிந்து வந்ததுதான் இஸ்லாமிய கலாச்சாரத்தை அவமானப்படுத்துகிறது என்று திருநெல்வேலியில் உள்ள ஒரு முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த சிலர் கூறுவது எவ்வளவு பொருத்தமானது என தெரியவில்லை.

எத்தனையோ ஊர்களில், எத்தனையோ வழக்குகளில், எத்தனையோ பெண்கள், எத்தனையோ மதங்களைச் சேர்ந்த பெண்கள் இது போல பர்தா அணிந்து "பாதுகாப்பாக" நீதிமன்றங்களுக்கு வந்திருக்கிறார்கள்."நான் ஒரு முஸ்லிம். பர்தா அணிய எனக்கு முழு உரிமை உள்ளது" என்று இந்த விவகாரத்தில் நீங்கள் பதில் கூறியிருக்கிறீர்கள். அதற்குப் பிறகும் உங்களுக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது என்றால் இதில் வேறு ஏதோ தூண்டுதல் இருக்குமோ என்றும் தோன்றுகிறது.

ஒவ்வொரு முறை நீங்கள் பர்தாவில் வரும் போதும் உங்கள் முக தரிசனம் கிடைக்காமல் பத்திரிகை புகைப்படக்காரர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் "போச்சே, போச்சே, எல்லாம் போச்சே, கைக்கெட்டனது வாய்க்கு எட்டலையே" என்று திருவிளையாடல் படத்து தருமியைப் போல் புலம்பி வருகிறார்கள். ஒரு கவர்ச்சி 'பிட்' செய்தி போடுவதற்கான வாய்ப்பு இப்படி வீணாய்ப் போனதில் அவர்களுக்கு நிச்சயம் வருத்தம் இருந்திருக்கும்.இந்த விஷயத்தில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. இப்போது உங்களுக்கு எதிராக போராடுவதாக அறிவித்தவர்களில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களில் பலர் திருநெல்வேலியின் கல்யாணி திரையரங்கில் உங்கள் திரைப்படத்தை மெய் மறந்து பார்த்தவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய முடியுமா?. "ஏ" படங்களுக்கும், "பிட்" படங்களுக்கும் பேர் போன அந்த திரையரங்கு இப்போது மூடிக் கிடக்கிறது.

ஏனெனில் பிற்போக்கு முகமூடி அணிந்துகொள்ளும் சமூகத்தில் இணையம், டி.வி.டிகள் மூலம் எந்த போலீஸ் கெடுபிடியும் இல்லாமல் இளைய தலைமுறையினர் தங்களின் உணர்வுகளுக்கு வடிகால் தேடத் தொடங்கி விட்டார்கள். தியேட்டர்களுக்கு வந்து சில விநாடிகள் ஓடி மறையும் 'பிட்'களுக்காக காத்திருக்கும் பொறுமை குறிப்பாக தொழில்நுட்பக் கருவிகளுக்கு பழகிவிட்ட இளைய தலைமுறைக்கு இல்லை.

இன்னும் தியேட்டர்களின் ஏ படங்களையும் பிட் படங்களையும் நம்பியிருப்பது முந்தைய தலைமுறை பெருசுகள்தான். ஏ படங்களுக்கென்றே இயங்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், நடத்தப்படும் ரெய்டுகள், நடத்தப்படாத ரெய்டுகள் மூலம் அதிகாரிகளுக்கு கிடைக்கும் வருவாய் குறைந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை, இப்போதுதான் நேர்மையை முதல் முதலாக கண்டுபிடித்தது போல சினிமாவை விட்டே ஒதுங்கியிருக்கும் உங்களை வைத்து நீதியை நிலை நாட்ட போராடுகிறார்கள்.இது வரை பிட் படம் ஓட்டிய விவகாரத்தில் எத்தனையோ வழக்குகள் உள்ளன. முழு போர்னோ படங்களையும் அதிலிருந்து பிட் படங்களையும் தயாரிப்பது சற்று காலம் முன்பு வரை ஒரு தனி தொழிலாக இருந்து வந்தது. அதில் எல்லாம் நடித்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருந்தால் இந்நேரத்திற்கு அந்த வழக்குகளை விசாரிக்க ஒரு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டியிருந்திருக்கும். அது மீடியாவுக்கு செமை தீனியாக இருந்திருக்கும். ஆனால் உங்களை நீதிமன்றத்தில் ஆஜராக்குவதால் காட்சி இன்பம் கிடைத்திருக்கக்கூடிய பலருக்கு நீங்கள் பர்தா அணிந்து வந்ததில் பெருத்த ஏமாற்றம் இருந்திருக்கும்.

என்ன உடை அணிந்து வருவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை என்பதால், இந்த விவகாரத்தில் நீங்கள் குற்ற உணர்வு அடைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தில் நீங்கள் மிகத் துணிவாக பதில் கூறியிருப்பது உங்களின் தன்னம்பிக்கையையும் மனத் தெளிவையும் காட்டுகிறது. மீண்டும் ஒரு முறை நீதிமன்றத்திற்கு பர்தாவுடன் வந்தால் எங்களது மகளிர் பிரிவை வைத்து செருப்படி கொடுப்போம் என்று ஒரு முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாக ஊடகங்களில் வெளியான பிறகு, அதைக் கண்டு அஞ்சாமல், "நானும் ஒரு முஸ்லிம், இந்த ஆடையை அணிய எனக்கு முழு உரிமை உண்டு என கூறியிருக்கிறீர்கள்."

ஆனால் ஒரு முஸ்லிம்தான் பர்தா அணிய வேண்டும் என்ற கட்டாயம்கூட இல்லை. ஒரு காலத்தில் வளைகுடா நாடுகளின் புழுதிப் புயலை சமாளிக்க எவ்வாறு உடலை முழுதும் மூடிய ஆடை தேவையாக இருந்ததோ அதைப் போலவே இன்றைய தமிழ்ச் சமூகத்தின் போலியான ஒழுக்கக் காவலர்களிடமிருந்து தப்ப உடலை மறைக்கும் ஆடை தேவைப்படுகிறது.

ஸ்ரேயாவின் கவர்ச்சியை சினிமாவிலும் டிவி மூலமாக வீட்டில் வரவேற்பறையிலும் காண்பதில் அவர்களுக்கு கூச்சமே இல்லை. ஆனால் மேடையில் அவர் இழுத்துப் போர்த்திக்கொண்டு வராவிட்டால் வீட்டுக்குப் போய் டிரஸ் மாற்ற வைத்துவிடுவார்கள்.கலியுக துச்சாதனர்கள் பொது சபையில் இருக்கும் பெண்களின் விருப்பத்தை மீறி அவர்கள் மீது ஆடைகளை போர்த்தி மூடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதில் முழுமையாக உடன்பாடு இல்லாவிட்டாலும் பழமைவாதிகள் அல்லாத பெரும்பான்மையினர் வாய் மூடி மெளனமாக இருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய தமிழர்களிடம் தனிப்பட்ட கருத்து என்ன என்று கேட்டால் ஒன்றைச் சொல்வார்கள். பொதுக் கருத்தாகக் கேட்டால் வேறொன்றை சொல்வார்கள். அதற்கெல்லாம் மாறாக யாருக்குமே தெரியாமல் மனதிற்குள் தங்கள் நிஜமான கருத்தாக வேறொன்றை கொண்டிருப்பார்கள்.

இத்தகைய தமிழ்ச் சமூக போலித்தனங்களையும் கையாலாகத்தனங்களையும் பயன்படுத்திக்கொள்ளும் போலி ஒழுக்கவாதிகளாலும் அவர்களின் சங்கராச்சாரியாராக இருக்கும் தமிழ் ஊடகங்களாலும் துன்புறுத்தப்படும் பல பெண்களில் நீங்கள்தான் லேட்டஸ்ட் பலிகடா. ஆனால் உங்கள் விஷயத்தில் உடலை ஆடையால் மூட வேண்டும் என்பதைத் தாண்டி, என்ன மாதியான ஆடையால் போர்த்த வேண்டும் என சமூகத்திற்கு தீர்மானிக்க உரிமை இருக்கிறது என சிலர் வாதம் செய்கிறார்கள்.

ஒரு பூகோளத் தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவான பர்தா பிற்பாடு அந்தக் கலாச்சார ஆடையாக மாறியது. ஆனால் அது ஒரு மதத்தவர் மட்டுமே அணியும் ஆடை என வரையறுக்க முடியுமா? ஆடையை மதத்தோடு தொடர்புபடுத்தினால் சீக்கியர் அல்லாதோர் சுடிதார் அணிய முடியுமா? இந்துக்கள் பிளேசர், டை அணிய முடியுமா? அல்லது 'ஒழுக்கமானவர்கள்'தான் இத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்று வரைமுறைபடுத்தினால் என்னாவது? அப்படியானால் மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு எந்தக் கலாச்சாரத்தையும் சாராத ஒரு புதிய உடையை தயார் செய்து அதை uniform போல அணிய கொடுக்க வேண்டியிருக்கும்.

நமது கலை, இலக்கியம், சினிமா, இசை ஆகியவை பெருமளவில் ஆண்களால், ஆண்களுக்காக உருவாக்கப்படுபவை என்று ஓஷோ சொன்னது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. போர்னோ படங்கள் அதற்கு விதி விலக்கல்ல. ஆண்களின் தேவைக்காக, ஆண்களால் தயார் செய்யப்படும் ஒரு காரியத்தில் நடிப்பவர்கள்தானா இங்கு குற்றவாளி?

என்ன செய்வது, இந்திய அரசியல் சாசனம் இத்தகைய ஆண் சார்பு பார்வைக்கு பேர் போனது. ஆண்களின் பாலியல் இச்சையை ஊற்றுக் கண்களாகக் கொண்ட பாலியல் தொழிலில் அதை பூர்த்தி செய்யும் பெண்தான் நமது சட்டத்தின் கண்களில் குற்றவாளி. தவிர்க்கவே முடியாத பாலியல் தொழிலுக்கும் போர்னோ படத் தயாரிப்புக்கும் சட்ட பூர்வ அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அவற்றை புறக்கணித்து வரும் இந்திய அரசு இப்போது முதல் முறையாக நிஜமான பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப் பார்க்கிறது. அதாவது, பாலியல் தொழில் செய்யும் பெண் மட்டுமல்ல, அதற்கு மூலக் காரணமாக இருக்கும் காசு கொடுத்து பாலியல் இச்சையைப் போக்க வரும் ஆணும் இனி குற்றவாளி. இந்தத் திருத்தத்தை ஆண்களே கணிசமாகக் கொண்ட ஆளும் வர்க்கம் அனுமதிக்குமா என தெரியவில்லை.

இதே விதியை போர்னோ படங்களுக்கும் விரிவுபடுத்தினால் அந்த நிலைமை மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாலியல் படங்களை தயாரிப்பவர்கள், நடிப்பவர்கள் மட்டுமல்ல; அதைப் பார்ப்பவர்களும் குற்றவாளிகள்! அந்தச் சட்டம் அமலுக்கு வரும் போது இந்தியாவின் பாதிக்கும் சற்று அதிகமான ஜனத்தொகையை, அதாவது ஆண்கள் அனைவரையும் ஏதாவது ஒரு வயதில் சிறையில் அடைக்க வேண்டியிருக்கும். அந்த கெட்டதிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அதற்குப் பிறகு முழுமையாக பெண்கள் கையில் இருக்கும் இந்தியா மிக சுபிட்சமாக இருக்கும். போர்களிலும் அழிவிலும் அதிக நாட்டம் கொண்ட ஆண்கள்தான் சிறையில் இருப்பார்களே!

அப்படி ஒரு சூழல் வரும் வரை உங்களுக்கும் பிற பெண்களுக்கும் ஏற்படப் போகும் துன்பங்களுக்கு முடிவேதும் இல்லை.

அன்புடன்

மாயா
நன்றி: உயிர்மை.காம்

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

யாருப்பா அது?

பெயரில்லா சொன்னது…

//பாலியல் படங்களை தயாரிப்பவர்கள், நடிப்பவர்கள் மட்டுமல்ல; அதைப் பார்ப்பவர்களும் குற்றவாளிகள்! அந்தச் சட்டம் அமலுக்கு வரும் போது இந்தியாவின் பாதிக்கும் சற்று அதிகமான ஜனத்தொகையை, அதாவது ஆண்கள் அனைவரையும் ஏதாவது ஒரு வயதில் சிறையில் அடைக்க வேண்டியிருக்கும். அந்த கெட்டதிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அதற்குப் பிறகு முழுமையாக பெண்கள் கையில் இருக்கும் இந்தியா மிக சுபிட்சமாக இருக்கும். போர்களிலும் அழிவிலும் அதிக நாட்டம் கொண்ட ஆண்கள்தான் சிறையில் இருப்பார்களே!//

ஹெஹெஹெ
நல்ல கற்பனை
ஹெஹெஹெ

பெயரில்லா சொன்னது…

சரியான ரசனை கெட்ட ஜென்மங்கள்.

ஷகிலா படம் எத்தனை இருக்கு.

அதெல்லாம் போடாம ஒரு பதிவு.

கருத்துரையிடுக