ஞாயிறு, அக்டோபர் 19, 2008

நளினிக்கு வேண்டியது கருணையல்ல; நீதி

ராஜீவ் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாகச் சிறையில் வாடிவரும் நளினி மற்றும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துத் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி திரு. எஸ். நாகமுத்து அளித்த தீர்ப்பின் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

'மனுதாரர்கள் முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக சிறை விதிகளைப் பின்பற்றாமல் ஆலோசனைக் குழு எடுத்துள்ள முடிவு, கைதியின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையிலும் நீதியை மறுக்கும் வகையிலும் உள்ளது. இதை மேலோட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது. சிறை விதிகள் பின்பற்றப்படாமல் நளினியின் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. அரசால் விதிக்கப்படுள்ள சிறை விதிகளை அரசு அதிகாரிகளே மீறியுள்ளனர்.'

நளினியின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்படும் எதிர்க்கருத்துகள் எதுவும் சிறிதும் நியாய உணர்வற்றவையாக உள்ளன. "ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டியதுதான்" என்பது போன்ற கருத்துகள் சட்ட-நீதி அமைப்பிற்கு சவால் விடுவதாகும். நளினி ஒரு கொடுங்குற்றவாளி அல்ல. ஒரு கொடுங்குற்றத்திற்கு அவருக்குத் தெரியாமலேயே உடந்தையாக்கப்பட்டவர். ஈழப் போராளிகளுக்குத் தமிழகத்தில் எத்தனையோ உதவிகளை எவ்வளவோ தமிழ்க் குடும்பங்கள் செய்திருக்கின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறார்கள். மறைமுகமாக உதவியிருக்கிறார்கள். இன்றும் உதவி வருகிறார்கள். நளினி செய்த குற்றமும் அத்தகையதே. இதற்காக அவருக்குக் கிடைத்த தண்டனை மிக அதிகம் என்பதை அற உணர்வுள்ள யாரும் புரிந்துகொள்ளலாம்.

நாகரிக உலகின் நீதியமைப்புகளைப் பின்பற்றாதவை எனக் கருதப்படும் அரபு நாடுகளில்கூட கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மன்னிப்பைப் பெற்றால் தண்டனையைக் குறைப்பது போன்ற நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால் சோனியா காந்தி நளினியை மன்னித்தாலும் நம் நீதிமன்றங்கள் அவருக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று விரும்பினாலும் அதையெல்லாம் தாண்டி நளினியைச் சிறையிலேயே சாகவிடவேண்டும் எனத் தீர்மானிக்கும் சக்திகள் எவை? தமிழக முதல்வர் தன்மேல் புலிகளின் ஆதரவு முத்திரை விழுந்துவிடும் எனப் பயந்து இதைச் செய்வதாகக் கருத முடியாது. தனது ஈழத் தமிழர் ஆதரவிற்காக ஒருமுறை ஆட்சியையே தி.மு.க. இழந்திருக்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் எனக் கருதப்படும் ஒரு அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவருக்கு இரங்கல் கவிதை எழுதிடும் அளவு மன திடம் கொண்ட தமிழக முதல்வர் பரிதாபத்திற்குரிய ஒருவரின் விடுதலைக்கு எதிராக இருக்கமாட்டார் என்று நம்புவோம்.

-மனுஷ்ய புத்திரன்
நன்றி: உயிர்மை.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக