எந்த ஓர் அமைப்பிலும் கூடுதலாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதற்கு 65 சதவிகித பெண்கள் வேலை செய்யும் சென்னை மாநகராட்சியும் விதிவிலக்கல்ல. பெண்கள் எந்த ஆய்வாளரின் கீழ் வேலை செய்கின்றனரோ, அவரின் பாலியல் தொல்லைகளுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். ஆய்வாளர்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால், வேலையை விட்டு விரட்டப்படுவார்கள்; அல்லது கூடுதலாக 600 ரூபாய் ‘மாமூல்' செலுத்த வேண்டும். இதற்கு ஒத்துவரவில்லை என்றால் அந்தப் பெண், தான் செய்யாத குற்றத்திற்காக துறை சார்ந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஆனால், தவறு செய்யும் ஆய்வாளருக்குப் பதவி உயர்வுதான் தண்டனை.
சென்னை மாநகராட்சியில் உள்ள தணிகாசலம் என்ற ஆய்வாளருக்கு வேலையே பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதும், எதிர்த்துப் பேச முடியாத பெண்களை மிரட்டி உயர் அதிகாரிகளிடம் அனுப்புவதும்தான். இவர் மண்டலம் 3இல் பணியாற்றிய போது பாலியல் குற்றம் செய்தார் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதனால் மண்டலம் 2க்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கும் அதே குற்றத்தை செய்யத் தொடங்கினார். இங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ரமாதேவி என்ற தூய்மைப் பணியாளரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினார். விளைவு அந்தப் பெண்ணின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்ட போதும் நடவடிக்கை ஏதுமில்லை.
இந்தப் பிரச்சனை தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், எஸ்.சி. / எஸ்.டி. ஆணையம், தேசியப் பெண்கள் ஆணையம் ஆகியவற்றிடம் இந்திய குடியரசுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த 3 ஆணையங்களும் மாநகராட்சிக்கு நோட்டிஸ் அனுப்பியது. ஆனால் மாநகராட்சி வழக்கம் போல் அமைதியாகவே இருந்தது. மாநில மனித உரிமை ஆணையமும், எஸ்.சி. /எஸ்.டி. ஆணையமும் இதில் ஆர்வம் காட்டாமல் புகாரை கிடப்பில் போட்டுவிட்டன. இதனால் தேசியப் பெண்கள் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு நோட்டிஸ் அனுப்பியது. இதற்குப் பிறகு கொஞ்சம் அசைந்து கொடுத்த அப்போதைய மாநகராட்சி ஆணையர் விஜயகுமார், விசாரணைக்கு ஏற்பாடு செய்தார்.இதில் கொடுமை என்னவென்றால் பாதிக்கப்பட்ட பெண் தனியாக வர வேண்டுமாம். மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர், அவரது மனைவி மற்றும் சிலர் என ஒரு கூட்டமே விசாரிக்குமாம். இதனை எதிர்த்து இந்த விசாரணை நியாயமானதாக இருக்காது என்றும் புகார் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், யூனியன் மனு கொடுத்தது.
மிரட்டல்களும் அலட்சியப் போக்கும் தொடர்ந்ததால் தேசியப் பெண்கள் ஆணையத்தின் தென்மாநிலங்களுக்கான பொறுப்பாளர் நிர்மலா வெங்கடேஷ், சென்னைக்கு வந்து ஆணையரைப் பார்க்காமல் பிரச்சனைக்குரிய மண்டலத்திற்குப் பத்திரிகையாளர்களோடு நேரடியாகச் சென்று விசாரித்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு தணிகாசலத்தால் பதில் சொல்ல முடியவில்லை. ஆணையரின் ஆலோசனையின் பேரில் பத்திரிகையாளர்கள் முன்பு மன்னிப்பு கேட்டார். இவரை பணி இடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்துவிட்டு சென்றுவிட்டார் நிர்மலா. மாநகராட்சி வரலாற்றில் அலுவலர் ஒருவர் பத்திரிகையாளர்கள் முன்பு விசாரணை நடத்தி மன்னிப்பு கேட்டது இதுவே முதல் முறை. ஆனாலும் குறைந்தபட்சம் அவரை இடமாற்றம் கூட செய்யவில்லை.
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 4ஆவது மண்டலத்திற்கு தணிகாசலம் மாற்றப்பட்டார். அங்கும் அவரின் வக்கிரம் தொடர்ந்தது. இதற்கிடையில் தொடர் வற்புறுத்தலால் புகார் குழு ஒன்றை ஆணையர் உருவாக்கினார். ஆறு பேர் கொண்ட அந்தக் குழு விசாரித்தது. ஆனால், ஓராண்டாகியும் அறிக்கை கொடுக்கவில்லை. ஏன் அறிக்கை கொடுக்கவில்லை என்று யூனியன் மீண்டும் ஒரு மனு கொடுத்தது. பின்னர் அறிக்கை கொடுக்கப்பட்டது. அறிக்கையில் தணிகாசலத்திற்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே இருந்தது. அவர் செய்த குற்றம் குறித்தோ, தண்டனை குறித்தோ அது வாயே திறக்கவில்லை.
இந்நிலையில், தற்போதுள்ள ஆணையர் ராஜேஷ் லக்கானி பதவி ஏற்றார். இவரிடமும் புகார் கொடுக்கப்பட்டது. அதன் மீதும் நடவடிக்கை இல்லை. மாறாக, தணிகாசலத்திற்கு மேற்பார்வையாளராகப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, 3 ஆவது மண்டலத்திற்கு மாற்றப்பட்ட அவர், 31 ஆண்டுகளாக மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த 45 வயது சந்தோஷம்மாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். ஒரு கட்டத்தில் தொல்லை தாங்க முடியாத அவர் ஆத்திரம் கொண்டு தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருந்த துடைப்பத்தால் சாத்தினார். வழக்கம் போல பெண்ணை பணி இடை நீக்கம் செய்தது நிர்வாகம். மேற்பார்வையாளர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்தப் புகார் மீதான விசாரணை என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார், இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் அன்புவேந்தன். நவீன தீண்டாமை மற்றும் பாலியல் தொல்லைகளின் வதைகளனாக இருக்கும் மாநகராட்சியின் செயல்பாடுகளுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது?
நன்றி: தலித்முரசு, ஜூலை 2008
2 கருத்துகள்:
ஏதாவது அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராக அவர் இருக்கக் கூடும். அல்லது மேலதிகாரிகளுக்கு லஞ்ச புரோக்கராக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்..
இல்லாவிடில், இவ்வளவு நடந்தும் எதற்காக இந்தக் கயவனை இன்னமும் மாநகராட்சி காவல் காக்கிறது என்பது தெரியவில்லை..
கண் முன்னே நடக்கும் அநியாயத்திற்குக்கூட நீதிமன்றத்திற்குச் சென்று நியாயம் கேட்க வேண்டிய நம்முடைய ஜனநாயகத்தை என்னவென்று சொல்வது..
கேடு கேட்ட ஜனநாயகம்..
சுடுவது சுகம் ஸார்.. செய்தியை வெளியிட்டதற்கு நன்றி..
கொடுமையான ஆளா இருப்பான் போலருக்கே!
கருத்துரையிடுக