ஞாயிறு, செப்டம்பர் 07, 2008

பகவத் கீதை பாடமும், பலான படங்களும்...!

ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை மாலை. குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள், கொத்துக் கொத்தாக. அவர்கள் தெருவைக் கடந்து போகச் சௌகர்யமாக வண்டியை நிறுத்தினார் பால்யூ. ஸ்கூட்டரின் பின்னால் நான் உட்கார்ந்திருந்தேன். தெருவின் இரண்டு பக்கமும் முருங்கை மரங்கள். அவரவர் வீடுகளுக்கு முன்னால் வளர்ந்திருந்த முருங்கை மரங்கள். கே.கே.நகர் என்று சுருக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நகருக்குள் மூன்று நகர்கள் இருந்தன. மூன்று பொருளாதாரத்தரத்தினர் வாழ்ந்த நகர்கள். தனித்தனியாக வீடுகள் கட்டிக்கொண்டு வாழும் அல்லது கடன் அடைத்துக்கொண்டு சிரமப்படும் உயர் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் நகர். அரசுக் குடியிருப்புகளாலான நகர். குடிசைகள் மற்றும் சின்னஞ்சிறிய கல்வீடுகள் கொண்ட ஒண்டுக் குடித்தனங்களால் ஆன, தொழிலாளர்களின் நகர். மூன்றாம் நகரின் ஒரு வீட்டு மாடியில் குடி இருந்த என்னை உறக்கத்திலிருந்து எழுப்பிக் குமுதம் ஆபீசுக்கு அழைத்துப் போகிறார் சர்வ வல்லமை பொருந்திய குமுதம் பத்திரிகையாளரான பால்யூ.
ஆக, நான் குமுதம் பத்திரிகையில் இணையப் போய்க்கொண்டிருக்கிறேன். என் விதிக்கப்பட்ட வாழ்க்கை. திணித்து வைக்கப்பட்ட ஆயிரம் அனுபவங்களால் ஆன ரகசியப் பெட்டியிலிருந்து சிலவற்றை உருவி என்முன் வீச இருக்கிறது. நிறைய மண்டை ஓடுகள், நிறைய அறுந்த செருப்புகள், நிறைய பழைய கிழிந்த சட்டைகள், நிறைய நடை வண்டிகள், நிறைய மரப்பாச்சி பொம்மைகள், நிறைய காதல் கடிதங்கள், பழிகள், பகைகள், கொலைவெறிகள், கூடிக் குசுகுசுத்துக் குருட்டறையில் இட்ட கருக்கள் என்று நீண்டுகொண்டே போகும் உன்னதமும் சின்னத்தனமும் கொண்ட ஜாபிதாக்களின் கொள்கலன் அந்த ரகசியப் பெட்டி.

வண்டி போய்க்கொண்டிருந்தது. 'அதிர்ஷ்டசாலி ஐயா, நீர்' என்றார் பால்யூ. இதை அவர் எட்டாவது தடவையாகச் சொன்னார் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கதவைத் தட்டிய சப்தம் கேட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தபோது இதே வார்த்தையைத்தான் சொல்லி அப்புறம் விஷயத்தைச் சொன்னார். 'ஆசிரியர் எஸ்.ஏ.பி. என்னைக் கையோடு அழைத்து வரச் சொன்னார். குமுதத்தில் உமக்கு ஆசிரியர் குழுவில் வேலை' என்று சொல்லி முடிக்கும் முன், சரியான அதிர்ஷ்டசாலி ஐயா, நீர்' என்றார். நான் குளியல் அறையில் சிறுநீர் கழிக்கும் போதும் அந்த வார்த்தைகள் என் பிடறியில் வந்து தாக்கின. முகம் கழுவி வந்துதுடைத்துப் பவுடர் போட்டுக்கொள்ளும் போதும் பேண்ட் போட்டுக் கொள்ளும்போதும், புறப்படும் போதும், ஸ்கூட்டர் பத்து உதைகளைக் கோரி அதன் பிறகு ஸ்டார்ட் ஆனது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்போது நாங்கள் புரசைவாக்கத்துக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு காலத்தில் புரசை மரங்களால் நிறைந்த பகுதி இது. கடற்கரையை ஒட்டிய ஊர்கள் பாக்கம் என்ற பெயரைப் பெறுகிற நியதியை ஒட்டி இது புரசைப் பாக்கம் ஆகி புரசைவாக்கம் ஆயிற்று. ஊர்ப் பெயர்களில் எனக்குக் கவர்ச்சி உண்டு. பழைய தமிழ் மரபில், ஊர்களின் பெயர்கள், நிலம் சார்ந்து, நிலத்தின் முக்கியத்துவம் சார்ந்து ஏற்பட்டன. ஆளுமைகள் சார்ந்து நேரு நகர், அண்ணா நகர், காந்தி நகர் என்பது அண்மை மரபு. அதிகாரம், ஆதிக்கத்தைக் கட்டமைத்த மன்னர்கள் பழைய ஊர்ப் பெயர்களை மாற்றித் தங்கள் பெயர்களை ஊருக்கு வைத்தார்கள். குறிப்பாகச் சோழ, பாண்டியர்கள். இது இடைக்கால மரபு. புரசைவாக்கம், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் இடைப்பகுதியில், அதாவது நானும் பால்யூவும் பிரவேசிக்கும் அந்தக் காலத்திலும், இப்போது மாதிரியே தான் அப்போதும் இருந்தது. மேலே எழுந்துவரும் புழுதி, தெருவோரம் மேடிட்ட குப்பைகள், ஜனக்கூட்டம் எல்லாம். அபிராமி தியேட்டரில் இருந்து ஒரு கூட்டம் வழிந்து வெளியேறிக்கொண்டிருந்தது. அபிராமிக்குப் பக்கத்துக் கட்டிடம்தான் குமுதம் அலுவலகம். குமுதத்துக்குப் பக்கத்துக் கட்டிடம்தான் அபிராமி என்று சொல்ல வேண்டுமோ? இரண்டுக்கும் என்ன பெரிய வேறுபாடு?

அழகற்ற வலிந்த தகரத்தால் ஆன வாயிலின் ஓரம், திட்டிக் கதவின் வழி நான் குமுதம் அலுவலகத்துள் பிரவேசிக்க, பால்யூ, திறக்கப்பட்ட வாயில் வழி உள்ளே வந்து, அங்கிருந்த பெரிய மாமரத்து நிழலில் தன் ஸ்கூட்டரை நிறுத்தினார். மரங்கள் வயசானவை. இவைகளின் எதிரில்தான், கோவலனும் கண்ணகியும் மாதவியும் காதலித்திருக்கிறார்கள். பி.யூ.சின்னப்பாவும், கண்ணம்பாவும் நடித்த கண்ணகி திரைப்படம் உருவான ஸ்டுடியோ வைத்தான் குமுதம் வாங்கியதாகப் பால்யூ சொன்னார். ஆசிரியர், பூஜையில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். நாங்கள் காத்திருந்தோம். நாங்கள் வந்திருக்கும் செய்தியை ஆசிரியருக்கு யாரோ சொல்லி இருக்கிறார்கள். எங்களை மேலே வரச்சொன்னார். உலகத்தில் இருக்கும் எல்லா ஆண் மற்றும் பெண் சாமிகளின் பெரிய சைஸ் படங்கள் மாலை சூட்டப்பட்டு இருந்தன. அவைகளின் எதிரே குமுதம் பத்திரிகை (அடுத்த நாள் வெளியாக இருக்கும் இதழ்) இருந்தது. இந்தப் பூஜை புனஸ்காரங்கள் பற்றித் தனியே பிறகு எழுதுவேன்.

எஸ்.ஏ.பி.க்கு முன் நான் நிறுத்தப்பட்டேன். நாங்கள் இருவரும் வணங்கிக் கொண்டோம். முதல்முறை நாங்கள் சந்திக்கிறோம். சராசரிக்கும் கொஞ்சம் குள்ளமான உயரம். கதர் சட்டை, கதர் வேட்டியில் இருந்தார். எப்போதும் இந்த ஆடைதான். 'வாருங்கள்' என்றபடி தன் அறைக்கு அழைத்துச் சென்றார். அலங்காரமற்ற அறை. சாதாரணமான மேசை, நாற்காலிகள். எதிரில் உட்காரச் சொன்னார். அதற்கு முன் வந்திருந்த என் கதைகள் பற்றிச் சிலாகித்துப் பேசினார். அவைகள் அக்காலத்து இலக்கியப் பத்திரிகைகளில் வந்தவை. கணையாழி, கண்ணதாசன், தாமரை, மற்றும் தினமணி கதிரில் வந்தவை. மிகுந்த நுட்பத்தோடு கூடிய பார்வை இலக்கியத்தில் அவருக்கு இருந்தது கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் பற்றியெல்லாம் பேசினார். எதுவும் மேலோட்டமான விமர்சனமோ, படித்ததை மீண்டும் ஒப்பித்தலோ இல்லை. சுயமாக உருவாக்கிக் கொண்ட விமர்சனங்கள். தெருப்புறம் பார்த்த ஜன்னல்வழி காற்று வந்துகொண்டிருந்தது. இடையில் ஒரு முறை, ஒரு சின்ன டம்ளரில் இளநீர் வந்தது. குமுதம் அலுவலகத்துக்குள் தேநீர், காபி போன்ற அன்னிய பதார்த்தங்கள் பகிஷ்கரிக்கப்பட்டவை. மிக முக்கியமான விருந்தினரிடம்கூட ஐந்து நிமிஷங்கள் மேல் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பேசுவதில்லை. பத்து நிமிஷம் பேச நேர்ந்தால், இளநீர் வரும். எனக்குத் தெரிந்து லால்குடி ஜெயராமன் இந்த உபசாரத்தை ஒருமுறை பெற்றார்.

குமுதம், தன் ஆசிரியர்குழுவில் இளைய தலைமுறை எழுத்தாளர்களைச் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்து இருப்பதாகச் சொன்னார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளனாகிய நான், ஆசிரியர் குழுவில் இணைவது அவருக்கு மகிழ்ச்சி என்றார். மறுநாள், என்னைப் பணியில் சேரச் சொன்னார்.

நான் அறையை விட்டு வெளியே வந்தேன். பால்யூ காத்திருந்தார். நான் சமாச்சாரத்தைச் சொன்னேன். 'எனக்குத் தெரியும்' என்றார். 'எப்படி' என்றேன். 'முதலில் இன்று வெள்ளிக்கிழமை. அதோடு முதன் முதலில் ஆசிரியரைப் பூஜையில் வைத்து, அத்தனை தெய்வ சான்னித்யங்களுக்கு முன்னால் பார்க்கும்படியாக நேர்ந்த போதே என் மனசுக்குள் பட்டுடுத்து, இது ஜெயம்னு' என்றார். தெய்வ சான்னித்யங்களுக்கு முன், குமுதம் இருந்தது என் நினைவுக்கு வந்தது. தெருவுக்கு வந்தோம். 'டீ சாப்பிடலாமா' என்று பால்யூவைக் கேட்டேன். அவர் வேணாம் என்றார். என்னைச் சாப்பிட அனுமதி தந்தார். தெருவோரக் கடைகளில் டீ சாப்பிட்டுக் கொண்டு நிற்பது கௌரவமான பழக்கமல்ல என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கலாம். எனக்கு எந்தக் காலத்திலும் கௌரவபுத்தி இருந்தது இல்லை. அபிராமி தியேட்டர் வாசலில் இருந்த பெட்டிக்கடையில் டீ சொல்லிவிட்டு, ஒரு சிகரட்டை வாங்கிப் பற்றவைத்துக் கொண்டேன். 'சிகரட் பிடியுங்கோ. . . தப்பு இல்லை. . . அது உங்க ஹாபிட். ஆனா, ஆசிரியர் பார்க்கும்படியாகப் பண்ணிடப்படாது' என்றார். ஆசிரியர் பார்க்காத படிக்கு நிறைய காரியங்களை நான் செய்ய வேண்டி இருக்கிறது என்றபடி என் எண்ணம் ஓடியது.

இந்த முதல் நாள், பால்யூ என் மேல் செலுத்திய அக்கறையை நான் குமுதத்தில் இருந்த இரண்டாண்டுக் காலமுழுதும் காண்பித்தார் என்பதை மனம் நிறைவோடு நான் இங்கு குறிப்பிடவேண்டும். எத்தனையோ பிரச்சினைகளில் நான் சிக்குண்டு மனம் நொந்த போதெல்லாம், எனக்கு ஆறுதலாக இருந்தவர் பால்யூ. குமுதம் தொடங்கப்பெற்று (1947-ம் ஆண்டாக இருக்கும்) இரண்டாம் இதழில் அவர் கதை வந்தது. ராகி படம் வரைந்திருந்தார். அட்டைப்படக் கதை அது. அதன் பின் எஞ்சிய சுமார் 50 ஆண்டுக்காலம், குமுதத்துடன் தன் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொண்டவர் அவர். தன் வாழ்க்கையைக் குமுதத்துக்கு அர்ப்பணித்த அவர் பெற்றது குறைவு. மிகவும் குறைவு. 'இந்த விசுவாசம், வைக்கக்கூடிய பாத்திரமா ஒரு ஸ்தாபனம்' என்று நான் ஒரு முறை கேட்டேன். அவர் வழக்கமாகச் சிரித்தபடி, ‘ராம, ராம என்பவனுக்கும் மோட்சம். மரா மரா என்பவனுக்கும் மோட்சம்’ என்றார். தொடர்ந்து உவமையில் இருந்த அதிகப்படி அவருக்கே புரிந்து தொடர்ந்தார். 'ராமனிடத்தில் நான் ஆசிரியரை வைத்திருக்கிறேன்' என்றார். ஆசிரியர் இவரை எவ்விடம் வைத்திருந்தார்?

குமுதத்தில் நடந்தது பற்றி என் மனைவியிடம் சொன்னேன். அவர் நிம்மதி அடைந்தது தெரிந்தது. மாதாந்திரப் பிரச்சினைகளின் பயங்கரம் எங்களுக்குத் தெரியும். அந்த நிம்மதி எனக்கு வருத்தத்தைத் தந்தது.

அன்று இரவுக்கு முந்தைய மாலையில் சுப்ரமண்ய ராஜுவைச் சந்திக்கப் போனேன். வழக்கமான சந்திப்பு அது. வாரத்தில் நாலைந்து நாட்களாவது நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்த காலமது. அவர் பணி ஏழு அல்லது ஏழரை மணிக்கு முடியும். அதன் பிறகு, டி.டி.கே.வுக்குப் பக்கத்திலும், சோழாவுக்கு முன்னும் இருக்கும் ஓட்டலுக்குச் செல்வோம். முதன் மாடி 'பாரில்' தான் எங்கள் மாலைகள் இனிய போதையோடு மெல்ல நடக்கும். வழக்கம்போல முதல் லார்ஜ் விஸ்கி வந்தது, துணைப் பதார்த்தங்களோடு முதல் விழுங்கலைச் செய்து முடித்து, நான் விஷயங்களைச் சொல்லத் தொடங்கினேன். ராஜுவுக்கு நான் குமுதத்தில் வேலைக்கு முயற்சித்தது தெரியும். எனக்கு அங்கு வேலை கிடைக்காது என்று அவர் நிச்சயமாக இருந்தார். என்னிடமும் சொன்னார். கடுமையான என் விமர்சனங்கள், மறைவும் நாசுக்குமற்ற பேச்சும் எனக்கு எதிரானவை என்று அவர் கருதினார். என்மேல் மிகுந்த அக்கறைகொண்ட சென்னை நண்பர்களில் முதல்வராக ராஜு இருந்தார். எனக்கு மட்டுமல்ல, சென்னையில் இன்றுள்ள முக்கியமான மூத்த மற்றும் என் சமகாலத்து எழுத்தாளர் பலர்க்கும் அவர் பெரும் உதவிகள் செய்து கொண்டிருந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்டதும், வழக்கத்துக்கு மாறாக இரண்டு கூடுதலான லார்ஜுகளில் அவர் மிதந்தார். உடனடியாக அவருக்குக் கவலையும் ஏற்பட்டுவிட்டது. சென்னையில் வாழ மனிதர்கள் கடைப் பிடிக்க வேண்டிய சில தர்ம சூத்திரங்களை அவர் சொல்லத் தொடங்கினார். 1. எதைப் பற்றியும் அபிப்பிராயம் சொல்லாதிருத்தல். 2. சொல்ல நேர்ந்தால் ஆகா, பேஷ், பிரமாதம் போன்ற விஷயங்களாகவே சொல்லுதல். 3. பாராட்டுக்கு அல்லாமல் வேறு எதற்கும் வாயைத் திறவாமல் இருத்தல். 4. பிரமுகர்கள் என்கிற மூடர்களுக்கு அவர்கள் மூடமையை இனம் காட்டாமல் விலகிச் செல்லுதல். 5. இரத்தத்தை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டு எந்தச் சமூக இழிவுக்கும் மனம் பொங்காமல் இருத்தல். 6. சண்டைக்கார இலக்கியக்காரர்களுடன் பொது இடங்களில் காணப்படாதிருத்தல் போன்றவைகளை எனக்கு ஓதினார். 'இதெல்லாம் இல்லாமல் இருப்பதால் தானே என்னை நீங்கள் மதிக்க நேர்ந்தது' என்று நான் கேட்டேன்.

மறுநாள் காலை பத்து மணிக்கு முன் அலுவலகம் வந்து சேர்ந்தேன். ஆசிரியர் அறைக்கு அடுத்த அறை துணை ஆசிரியர்களுடையது. வலது பக்கத்தில் நுழைவாயிலையொட்டி முதல் இருக்கை சண்முக சுந்தரத்துடையது. அடுத்த இருக்கை ஜ.ரா. சுந்தரேசனுடையது. இந்த இருக்கைகளுக்குப் பின் பலகைத் தடுப்புக்கு உள்ளே ரா.கி.ரங்கராஜன். சுந்தரேசனுக்குப் பக்கத்தில் என் இருக்கை.

சரியாகப் பத்து ஐந்துக்கு ஆசிரியர் வருகை புரிந்தார். கதவைத் திறந்துகொண்டு எட்டிப் பார்த்தார். நாங்கள் உள்ளே வரலாம் என்பதன் சமிக்ஞை அது. அறையின் உள்ளே நுழைவதையும் ஒரு ஒழுங்கோடு செய்ய நேர்ந்தது. முதலில் சீனியரான ரா.கி.ரங்கராஜன். அதன்பிறகு சின்ன சீனியரான சுந்தரேசன். அதன்பிறகு சின்னச் சின்ன சீனியரான சண்முக சுந்தரம். அதன்பிறகே படு சின்னப் புதுமுகமான நான். ஆசிரியர் இருக்கைக்குமுன் எங்கள் நாற்காலிகள். அதிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதல் நாற்காலி சீனியருடையது. அடுத்து அடுத்து உள் நுழைந்த வரிசைப்படி அமரவேண்டும். என் நாற்காலியில் நான் மட்டும் அமரலாம். ஒழுங்கு. ஒழுங்கு. ஒழுங்கு உயிரினும் மேலானது. ஆசிரியரை முதன் முதலில் பார்க்கும்போது, 'ஹரி ஓம்' என்று சொல்லி வணங்குவதே குமுத மரபு. வணக்கம் என்பதுக்குப் பதில் ஹரி ஓம். நாங்கள் ஹரி ஓம் என்றதும் அவரும் ஹரி ஓம் என்று வணங்குவார். முதல் நாள் ஆகையால், ஆசிரியர் எனக்கு பகவத் கீதை-திருச்சி திருப்பராய்த்துறைப் பதிப்பு-ஒரு பிரதியும், ஒரு ரைட்டர் பேனாவும் அன்பளிப்பு தந்தார்.

குமுதத்தில் ஒரு நாள் இப்படித் தொடங்கும். எனக்கும் முதல் நாள் இப்படித் தொடங்கியது.

முதலில் ஆசிரியர், பகவத் கீதையின், முதல் தொடக்கப் பாடல்களில் ஒன்றான 'ஓம் பார்த்தாயா பிரதி யோதிதா, பகவதாம்.. நாராயணேனஸ்வயம்' என்று தொடங்கும் பிரார்த்தனைப் பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு பக்தி பாவத்தோடு பாடுவார். ஆசிரியர் குழு தாமும் சேர்ந்து பாடும். பாட வேண்டும். நானும் சில நாட்களில் அதை மனப்பாடம் செய்து கொண்டேன். அதன் பிறகு, முந்தைய இடத்தில் நிறுத்தி இருந்த பகவத் கீதை பாடல் வரியிலிருந்து தொடங்கி ஆசிரியர் பாடம் நடத்தத் தொடங்குவார். ஆசிரியர் கீதைமேல் மிகுந்த மரியாதை கொண்டவராக இருந்தது தெரிந்தது. ஒவ்வொரு சுலோகமாக, முதலில் சமஸ்கிருதம், அதன் பிறகு தமிழ்ப் பொருள் முதலானவற்றைச் சொல்லி விளக்க உரை ஆற்றத் தொடங்குவார் ஆசிரியர். நாலைந்து சுலோகத்தைப் படித்துப் பொருள் சொல்லிக்கொண்டு வரும் போது ஆசிரியர் குழுவினர் இடையிட்டு ஐயங்களைக் கேட்டுக் கொள்ளலாம். ஐயம் கேட்பவனே சிறந்த சாதகன். பெரியவர்களில் யாரேனும் ஒருவர், கர்மத்தைப் பண்ணிப்பிட்டு பலனை எதிர்பாராமல் இருக்கிறது பெரியவாளுக்கு சரி. சின்னவாளுக்கு எப்படிப் பொருந்தும் என்பதுபோல் கேள்வி எழுப்புவாரெனில், ஆசிரியர் நிஜமாகவே சாட்சாத் பரமாத்மா ஆகவே மாறிவிடுவாரென எனக்குத் தோன்றும்படி, ஒரு பரவசத்துடனும், மந்தகாசப் புன்னகையுமாக அழகான விளக்கங்களைச் சொல்லத் தொடங்குவார். நாங்கள் அர்ஜுனர்கள் இல்லை. அவர் கிருஷ்ணராக இருக்க என்ன தடை?

இடையில் பதிப்பாளர் பார்த்த சாரதியும் வந்து சதசில் கலந்து கொள்வார்.

பகவத் கீதை முடிந்த பிறகு திருக்குறள் வாசிப்பு தொடங்கும். திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் தமிழ் உரைப்பதிப்பு ஆகியவைகளுடன் திருக்குறள் படிக்கத் தொடங்குவார் ஆசிரியர். முதலில் ஒரு குறள். அதன் சுருக்கமான, அகன்ற பொருள். மொழி பெயர்ப்பில் அதன் அர்த்தம், ஆராய்ச்சி என்று வகுப்பு தமிழ முதம் சொட்டச் சொட்ட நடைபெறும். இதில் ஐயம், சந்தேகம் உள்ளவர்கள் ஆசிரியரிடம் தெளிவு பெறலாம். ஐயம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்.

திருக்குறள்களில் சில படித்து முடித்தபின், சில வேளைகளில் ஒரு பிரார்த்தனை இப்படி இடம்பெறும்.

தொல்காப்பியர், சங்கப்புலவர், திருவள்ளுவர் முதலாகப் பாரதி வரையிலான புலவர்கள் ஆசிர்வாதம் காரணமாகக் குமுதம் சர்க்குலேஷன் அடுத்த ஆண்டுக்குள் . . . லட்சம் கூட வேண்டும் . . .

ஒரு வழியாகப் பத்தரை மணியளவில் இறை வணக்கம், பக்தி வியன்யாசம் முடியும். அதன் பின் நித்திய அலுவல். குமுதம் புகைப்படக் கலைஞர் கொண்டுவந்த சினிமா நடிகைகளின் புகைப்படங்கள் மேசைமேல் பரப்பப்படும். ஒரு மாதிரியான படங்கள். அட்டைக்கும், 36-ம் பக்கத்து மூலைக்குமான படங்கள். அந்தப் படங்களில் பெரும்பாலும் பெண்கள் பக்கவாட்டில் காணப்படுவார்கள். குறைந்தபட்ச ஆடைகளுடன் இருப்பார்கள். குனிந்தபடி, அப்படி இப்படித்தான். ஆசிரியர், பகவத் கீதை படித்த அதே 'ஒருமை' உணர்வோடு படங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்.

அந்த நேரம் பல முறை அவர் முகத்தை நான் கவனித்து இருக்கிறேன். எங்கேயாவது, கேலி, கிண்டல், விகடம், நகை ஆகியவற்றின் ஒரு ரேகையாவது தென்படுகிறதா என்று கூர்மையாக நான் கவனித்து இருக்கிறேன். இல்லை.


நிஷ்காம்ய கர்மம் என்பது இது தானோ?


-பிரபஞ்சன்

நன்றி: உயிர்மை, ஆகஸ்ட் 2008

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஹிஹி

பெயரில்லா சொன்னது…

பகவத் கீதையாகட்டும், பாலியல் உணர்வை தூண்டும் படங்களாகட்டும் இரண்டையும் கடமை உணர்வோடு பாவித்த குமுதம் ஆசிரியரின் கடமை உணர்வு புல்லரிக்க வைக்கிறது.

இதை சற்றே நகைச்சுவையோடு பதிவு செய்துள்ள பிரபஞ்சன் பாராட்டுக்குரியவர்.

கருத்துரையிடுக