வெள்ளி, செப்டம்பர் 19, 2008

சாலை விபத்துகளைக் குறைக்கவே முடியாதா?

தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகள் அதிகம் என்று சமீபத்தில் சென்னைக்கு வந்து சென்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சதாசிவம் கூறியிருந்தார். இதே கருத்தை அதற்கும் சில வாரங்களுக்கு முன்னால் தமிழக முதலமைச்சரும் தெரிவித்திருந்தார்.

நன்கு பராமரிக்கப்படாத வாகனங்கள், சரியாகப் பயிற்சி பெறாத ஓட்டுநர்கள், மோசமான சாலைகள், சாலைப் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்புடன் அமல்படுத்தாத காவல்துறை அதிகாரிகள், சாலை விதிகள் என்றாலே என்னவென்று தெரியாத மக்கள், சாலையோர ஆக்கிரமிப்புகள், ""வாகனங்களுக்கு இடம் இல்லாவிட்டால் என்ன, வியாபாரம் நடந்தால் சரி'' என்று நினைக்கும் சிறு வியாபாரிகள் என்று பல்வேறுபட்ட காரணங்களால்தான் விபத்துகள் நடக்கின்றன.

அனுமதி இல்லாமல் ஜல்லி, மணல், செங்கல் ஏற்றிச்செல்லும் லாரிகள், கழிவுநீர், குடிநீர் லாரிகள் போன்றவை நகர்ப்புறங்களில் இரவில்தான் அதிகம் பறக்கின்றன. அதிக நடை ஓட்டினால்தான் லாபம் என்பதால் முதலாளிகளின் ""அன்புக்கட்டளை''களை ஏற்று அசுர வேகத்தில் இவை செல்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் ""உண்மையான'' அதிகாரம் எவருக்கும் இல்லை.

போதிய ஓய்வு, தூக்கம், நல்ல சாப்பாடு இல்லாமல் பஸ், லாரி, டூரிஸ்ட் டாக்சி ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்கிறது.

வண்டி ஓட்டும்போது செல்போனில் பேசுவது, கிளீனரின் சம்பளத்தையும் சேர்த்து வாங்கிக்கொண்டு கிளீனர் இல்லாமலேயே கனரக வாகனங்களை ஓட்டுவது (சென்னையில் கன்டெய்னர் லாரிகள் பெரும்பாலும் கிளீனர் இல்லாமல்தான் ஓட்டப்படுகின்றன), எதிரில் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்த்தால் அந்த இடத்திலேயே வாகனத்தை நிறுத்திக்கொண்டு அவரை அழைத்துப் பேசுவது, பஸ்களாக இருந்தால் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, இறக்குவது போன்றவற்றால் விபத்துகள் நேர்கின்றன.

40 அடி அகலமுள்ள சாலையானாலும் நடுவில் 18 அடிக்கு மட்டுமே தார்ச்சாலையாக வைத்துக்கொண்டு எஞ்சிய மண் சாலையைச் சேறும் சகதியாகவோ, மேடு பள்ளமாகவோ அலட்சியமாக விட்டுவைப்பதால் இருட்டில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன.

குடியிருப்புகளும் மக்கள் நடமாட்டமும் உள்ள பகுதிகளில்கூட நல்ல வெளிச்சத்தில் தெருவிளக்குகளை எரியவிடாமல் இருட்டாக்குவதால் பாதசாரிகள் திடீரென வாகனங்களுக்கு எதிரில் வந்து அடிபடுகின்றனர்.

ரயில்வே கேட் பகுதியில் நடைபெறும் விபத்துகள் தனி ரகம். கேட்டில் ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருபுறமும் பார்த்துவிட்டு மெதுவாகக் கடந்து செல்லலாம் என்று எண்ணாமல் அவசரப்பட்டோ, ஏதோ சிந்தனை வயப்பட்டோ கடப்பதால் அடிபட்டு உயிரிழக்கின்றனர்.

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் மோட்டார் சைக்கிளில் கணவர், குழந்தையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த ஓர் இளம்பெண் மின்சார ரயில் வருவதைப் பார்த்த பிறகும், அது ரயில் நிலையத்தில் நிற்கும் என்று தவறாக நினைத்து பாதையை நடந்து கடக்க முயன்று குழந்தையுடன் விபத்தில் பலியாகிவிட்டார். இந்த விபத்தை நேரில் பார்த்த கணவர் அதிர்ச்சியில் உறைந்தார். அருகில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மேலே தூக்கப்படும்வகையில் ரயில்வே கேட்டுகளை நவீனப்படுத்தியதே தவறோ என்று எண்ணும் அளவுக்கு வாகன ஓட்டிகள் அங்கு பொது ஒழுங்கைக் காற்றில் பறக்க விடுகின்றனர். நூறு வண்டிகள் ரயில்வே கேட்டில் ஓரம் கட்டி நிற்கும்போது 5 முதல் 10 வாகன ஓட்டிகள் அவற்றைக் கடந்து வெகு வேகமாக முன்னே சென்று, கேட்டைத் திறந்ததும் முண்டியடித்து கேட்டைக் கடந்து ஏதோ அரிய சாதனை செய்துவிட்டதைப் போல பறக்கின்றனர் (தள்ளித் திறக்கும் கேட்டுகளில், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு சற்றே பின்னே தள்ளி வாகனத்தை நிறுத்திக்கொள்வார்கள்).

சில வேளைகளில் இவர்களுடைய இந்த அடாவடிப் போக்கு பிடிக்காமல் வரிசையில் நிற்கும் வாகனங்கள் அங்குல அங்குலமாக முன்னேறி இவர்களுக்கு இடம் தராமல் தடுக்க முற்படும்போது அந்த இடமே போர்க்களம்போல தேவையற்ற வாகன நெரிசலால் திமிலோகப்படுகிறது. ரயில்வே கேட்டுகளில் போக்குவரத்துப் போலீஸாரோ, சட்டம்ஒழுங்கு போலீஸாரோ கிடையாது.

ரயில்வே கேட் கீப்பருக்கு இந்த வாகன ஓட்டிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ அதிகாரம் கிடையாது. எனவே அங்கே ஒருவகை ""காட்டு ராஜ்யம்''தான் நடக்கிறது.

சைக்கிள் ஓட்டுகிறவர்கள் ரிஃப்ளெக்டர் எனப்படும் சிவப்பு விளக்குகளை சைக்கிளின் பின்புறத்தில் வைப்பதே இல்லை. பெல், பிரேக் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வண்டி ஓட்டுவதே இல்லை.

டூவீலர்கள், ஃபோர் வீலர்கள் இருக்கும்போது சைக்கிள்களைப் பிடித்து பெல், பிரேக், விளக்கு இருக்கிறதா என்று கேட்பதே தங்களுடைய அந்தஸ்துக்குக் குறைவு என்று போக்குவரத்துப் போலீஸார் விட்டுவிடுகின்றனர்.

மோட்டார் சைக்கிள் என்றால் 3 பேருக்குக் குறையாமல் கட்டாயம் போயாக வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பதைப்போல இளைஞர்களும் சில குடும்பத் தலைவர்களும் செல்கின்றனர்.

போக்குவரத்தை முறைப்படுத்த சட்டம் இருக்கிறது. அதை ஒழுங்காக நடத்த வேண்டும் என்ற எண்ணம் அதிகாரிகளுக்கு இல்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கும் இல்லை. விளைவு சாலை விபத்தில் தமிழகம் முதலிடம் என்ற அவப்பெயர்

-ஈயுண்ணி

நன்றி: தினமணி
-

1 கருத்து:

DHANS சொன்னது…

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே, இதில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதையும் சேர்த்துக்கொள்ளவும்

கருத்துரையிடுக