அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஒரே கையெழுத்தில் 1405 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தவர், கருணை இல்லாதவராக இருக்க முடியுமா?
`ஆயுள் கைதிக்கு அறுபது வயதாகியிருந்தால் 5 வருடம் சிறைவாசமே போதுமானது. விடுதலை செய்யுங்கள்; அறுபதுக்குக் கீழே வயதா? 7 வருடம் சிறையில் இருந்திருந்தாலே போதும். விடுவியுங்கள்' என்று ஆயிரக் கணக்கானவர்களுக்குக் காட்டிய கருணையை ஏன் ஒரே ஒருவருக்கு மட்டும் காட்ட மறுக்கிறார்? அதுவும் 17 வருடங்களாகச் சிறையில் இருந்து வரும் நளினிக்கு?
ஆயுள் தண்டனை என்பது கொலைக் குற்றம் தொடர்பாக மட்டுமே தரப்படுவது. இந்த தண்டனை பெற்ற ஒரு கைதியை தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிக்க வேண்டுமானால், அதற்கான அதிகாரம் மாநில அரசிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை அரசுக்கு அளிக்கும் சட்டப்பிரிவுகள் இரு வகைப்பட்டவை.
அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுதலை அளிக்கலாம். குற்றவியல் சட்டம் எனப்படும் கிரி மினல் ப்ரொசீஜர் கோடின் 432, 433-ம் பிரிவுகளின் கீழும் செய்யலாம்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுவிப்பதில் பல நிபந்தனைகள் உள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவரானால், அவர் குறைந்தபட்சம் 14 வருடமாவது சிறையில் இருந்திருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் போதைப் பொருள் தடுப்பு போன்ற சட்டங்கள் தொடர்பான குற்றம் செய்திருந்தால், மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளின் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தால், மத்திய அரசை ஆலோசிக்காமல் விடுவிக்கக் கூடாது என்பது இன்னொரு நிபந்தனை.
இந்த நிபந்தனைகளின்படி இப்போது விடுவிக்கப்பட்டிருக்கும் 1405 கைதிகளில் நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்கவே முடியாது. அதனால்தான் குற்றவியல் சட்டத்தின் கீழ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்காமல், அதைவிட பெரிய சட்டமான அரசியல் சட்டத்தின் 161-ம் பிரிவின் கீழ் தனக்கு இருக்கும் தடையற்ற அதிகாரத்தின் கீழ் 1405 கைதிகளையும் தமிழக அரசு விடுவித்திருக்கிறது.
ஆனால் நளினியை மட்டும் விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. ஏன்? எந்த விதி அவருக்கு எதிராக இருக்கிறது? குற்றவியல் சட்டத்தின் நிபந்தனைகளின்படி மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதால் குறைந்தபட்சம் 14 வருடம் சிறையில் இருந்திருக்க வேண்டும். நளினி 17 வருடம் இருந்துவிட்டார்.
அவர் மீது வழக்குத் தொடுத்த அமைப்பு மத்திய அரசின் கீழ் இருக்கும் சி.பி.ஐ என்பதால், விடுதலை பற்றி மத்திய அரசை ஆலோசிக்க வேண்டும் என்பது இன்னொரு தேவை. ஆனால் இதுவரை தமிழக அரசு நளினியை விடுவிக்கலாமா என்பது பற்றி மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கவும் இல்லை. மத்திய அரசும் எந்த ஆலோசனையும் தரவும் இல்லை.
17 வருடங்கள் சிறையில் இருந்தபின்னர் இனியேனும் தன் மகளுடன் சேர்ந்து வாழ்வதற்காகத் தன்னை விடுவிக்கும்படி கோரிய நளினியின் மனுவை, பரிந்துரைக் குழு நிராகரித்தது. இந்தக் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்படுவது அல்ல. கருணாநிதியின் மாநில அரசு அமைக்கும் குழுதான். சிறையில் நன்னடத்தை உடையவர்கள் என்று இந்தக் குழு ஏற்றுக் கொள்ளும் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகிய ஆயுள் கைதிகளின் விடுதலை மனுவையும் குழு நிராகரித்துவிட்டது.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இன்னமும் போர் நடந்துகொண்டிருப்பதால் நளினியையும் இவர்களையும் விடுவிக்க முடியாது என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே தர்க்கப்படி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியைக் கொலை செய்த தி.மு.க ரவுடிகளையும் இப்போது விடுவித்திருக்கக்கூடாதே. தி.மு.க- மார்க்சிஸ்ட் கட்சிகளின் அரசியல் பகையால் அந்தக் கொலை நடந்தது என்றால், இப்போதும் இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டு பகைமையுடன் இருப்பதாகச் சொல்லலாமே. இன்னும் உயிரோடு இருக்கும் லீலாவதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து இருப்பதாக வாதிடமுடியுமே. இப்படிப்பட்ட வாதங்களை விடுவிக்கப்பட்ட 1405 கைதிகளால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களும் முன்வைக்க முடியுமே.
நீதிமன்றத்தின் முன்பு தமிழக அரசு சொல்லும் காரணங்களில் ஒன்று, சிறையில் நான்கு முறை நளினி செய்த `குற்றங்கள்'. என்ன குற்றம் அது? இலங்கையில் இருக்கும் தன் மகள் தன்னைக் காண வருவதற்கு விசா மறுக்கப்படுவதை எதிர்த்து இருமுறை உண்ணாவிரதம் இருந்தார். இது இரண்டு குற்றங்கள். பின்னர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்று விசா பெறப்பட்டது.
விதிகளின்படி தன்னை சந்தித்துப் பேச இன்னொரு தண்டனைக் கைதியான கணவர் முருகன் ஒருமுறை வந்தபோது, அவருடன் நளினி வாக்குவாதம் செய்து சண்டை போட்டார். இது குற்றம் எண் 3!
கருணாநிதியுடன் அவர் மனைவியோ துணைவியோ இது வரை வாக்குவாதம் செய்திருக்க மாட்டார்களா என்ன? இதையெல்லாம் ஒரு குற்றம் என்று சொல்லுவது நளினியை விடுதலை செய்யாமல் தடுக்கக் கண்டுபிடிக்கப்படும் சாக்குகளே தவிர வேறென்ன?
இதர சிறைக் கைதிகளை கலவரம் செய்யத் தூண்டினார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. எப்போது, எதற்கு, என்ன என்று எந்த சாட்சியமோ ஆதாரமோ அளிக்கப்படாத குற்றச்சாட்டு இது!
நளினியின் வழக்கைப் பொறுத்தமட்டில் அவரை ராஜீவைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவராகப் பார்க்கமுடியாது என்பதை உச்ச நீதிமன்ற மூவர் பெஞ்ச்சில் ஒருவரான நீதிபதி தாமஸ் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். கொலை செய்யப்போகிறார்கள், இன்னாரைக் கொலை செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் எதுவும் தெரியாமல் கொலைகார சதியாளர்களுக்கு உதவி செய்தவராகவும், கடைசி நிமிடத்தில் தெரிந்தபின்னரும் கூட கொலையைத் தடுக்கவோ, தப்பித்துச் செல்லவோ வழியற்றவராகவுமே அவரை தாமஸ் கருதுகிறார்.
இந்தச் சூழலில், இன்னாரைக் கொல்லுவது என்று முடிவு செய்து கொடூரமாக அரிவாள், குண்டுகளுடன் சென்று கொன்று குவித்த கூலிப்படையினரெல்லாம் ஏழு வருட சிறைவாசத்திலேயே அண்ணா பெயரால் மன்னிக்கப்படும்போது, நளினிக்கு மட்டும் வேறு நீதியை கருணாநிதி காட்டுவது ஏன்?
நளினியை விடுவிக்க மறுப்பதற்காக முன்வைக்கப்படும் வாதங்கள் எல்லாமே அர்த்தமற்றவை.
இந்த வாதங்களிலேயே உச்சமான அபத்தம் என்பது தமிழக அரசு நீதிமன்றத்தில் சொல்லியிருப்பதுதான் - ஆயுள் தண்டனை என்றால் ஆயுளுக்கும் தண்டனைதான். சாகும்வரை சிறையில் இருக்க வேண்டுமாம். 10, 14 ஆண்டு என்றெல்லாம் எதுவும் கிடையாதாம். இதை நளினி வழக்கில் சொல்லிவிட்டு அடுத்த வாரமே 1405 பேரை 5, 7 வருட தண்டனையோடு விடுவித்திருக்கிறது!
தமிழக வரலாற்றிலேயே கண்டிராத ஒரு புதுமையான நிகழ்வாக, தமிழகத்தின் பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்ட கோரிக்கை மனுவாகும். கவிஞர் தாமரையும் கவிஞர் கிருஷாங்கினியும் பா.செயப்பிரகாசமும் நெய்வேலி பாலுவும் இந்த அதிசயத்தை சாத்தியப்படுத்தினார்கள்.
தங்களுக்குள் கடும் முரண்பாடுகள் இருக்கக்கூடிய பல எழுத்தாளர்கள் - அசோகமித்திரன் முதல் அ.மார்க்ஸ் வரை, புஷ்பா தங்கதுரை முதல் நாஞ்சில் நாடன் வரை, சாரு நிவேதிதா முதல் பூமணி வரை, அம்பை முதல் இந்துமதி வரை, சுஜாதா முதல் தங்கர்பச்சான் வரை, ந.முத்துசாமி முதல் பெரியார்தாசன் வரை, வசந்தி தேவி முதல் சாலமன் பாப்பையா வரை, திருமாவளவன் முதல் தமிழருவி மணியன் வரை, வாலி முதல் ஞாநி வரை ஏறத்தாழ தமிழகத்தின் அத்தனை முக்கியமான பொது வாழ்க்கை மனிதர்களும் இந்த மனுவில் கையெழுத்திட்டார்கள்.
நளினியை விடுவித்தால், தமிழக அரசியலில் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து தி.மு.க.வின் எதிர்காலக் கனவுகளைத் தரைமட்டமாக்கிவிடுவாரா? எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நின்று தன் மகளுடன் ஒரு அமைதியான வாழ்க்கையை எஞ்சிய காலத்தில் வாழும் கனவைத் தவிர அவருக்கு வேறென்ன இனி மீதியிருக்கிறது?
அதை கருணாநிதி மறுப்பது ஏன்? முழுக்க முழுக்க அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்ட இந்த முடிவை எடுக்க அவர் தயங்குவது ஏன்? கனிமொழியின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற எந்த தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றும் பாசமுள்ள தந்தையான அவர் ஏன் கனிமொழியும் கையெழுத்திட்டிருக்கும் இந்த மனுவை மட்டும் புறக்கணிக்கிறார்?
அவரை பயப்படுத்துவது எது? யார்? நிச்சயம் சோனியா காந்தியாக இருக்க முடியாது. தன் கணவர் ராஜீவ் கொலைக்கு உடந்தையாக இருத்த நளினியின் சட்டபூர்வமான சாவைத் தடுத்து நிறுத்தியவர் சோனியா. நேரில் சந்தித்து மன்னித்தவர் சோனியாவின் மகள் பிரியங்கா. 1405 பேருடன் நளினியையும் கருணாநிதி விடுவித்திருந்தால், சோனியாவும் பிரியங்கவும் நிச்சயம் எதிர்த்திருக்கப் போவதில்லை.
அப்படியானால், கருணாநிதியைத் தடுப்பது எது? யார்? ஏன்?
1405 கைதிகள் விடுதலை பற்றி ஒரு நிருபர், பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் கருணாநிதியிடம் கேட்கிறார்: ``இந்த விடுதலையை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி தலைமை நீதிபதியை சந்தித்து வழக்கு தொடுக்கப்போவதாக செய்தி வந்திருக்கிறதே?''
கலைஞர் பதில் : ``கருணை உள்ளத்தோடு நீங்கள் எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்? ஏழு ஆண்டுகள் சிறையிலே இருந்தவர்களையெல்லாம் விடுவிப்பது சரியா, தவறா?''
கலைஞர் அவர்களே, கருணை உள்ளத்தோடு நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்? ஏழாண்டுகள் அல்ல, 17 ஆண்டுகள் சிறையில் இருந்தவரை விடுவியுங்கள் என்று தமிழகத்தின் பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் உங்களிடம் மனு கொடுத்தது சரியா? தவறா?
-ஞாநி
நன்றி: குமுதம், 24-09-08
1 கருத்து:
அற்புதமாக இருக்கின்றது கேள்விகள்!
ஞானியின் கட்டுரையைத் தந்தமைக்கு நன்றிகள் இப்பதிவாளருக்கு!
கருத்துரையிடுக