வியாழன், மார்ச் 27, 2008

உலகம் என்னை விட்டுவிட்டு முன்னே சென்றுவிட்டது ( கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையானவர்களின் வாக்குமூலம் )

கோவை நகருக்கு நடுவே இருந்தாலும் அதனோடு ஒட்டாமல் விலகி நிற்கும் நெரிசலான பகுதி அது. குறுகிய தெருக்களில் சோடியம் வேபர் விளக்குகளின் செம்மஞ்சள் வெளிச்சமும், சந்துகளில் இருளும் விரவிக் கிடக்கின்றன.

அவருக்கு சுமார் முப்பது வயதிருக்கலாம். அந்த மெல்லிய தாடியும் கண்களில் தெரிந்த இறுக்கமும் மட்டும் இல்லாமலிருந்தால் எல்லா இளைஞர்களையும் போலத்தான் அவர் தோற்றமும் இருந்திருக்கும். இவர்தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து விடுதலையானவர்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று எனக்குக் காட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறவர்.

1‘குண்டு வெடித்த அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டில்தான் இருந்தேன். குண்டு வெடித்தது என்று தெரிந்ததும் எல்லோரும் வீடுகளுக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டோம். தெருவே வெறிச்சோடிப் போய் விட்டது. கொஞ்சநேரத்தில் ரேப்பிட் ஆக்ஷன் ஃபோர்ஸின் (ஆர்.பி. எஃப்) வண்டி வந்தது. உள்ளிருந்த பி.ஜே.பி. காரர்கள் முஸ்லிம் வீடுகளை அடையாளம் காட்டினார்கள். விதிவிலக்கில்லாமல் சிக்கிய அத்தனை ஆண்களையும் அடித்து நொறுக்கி வேனில் ஏற்றினார்கள். நானும் இழுத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவன். சுமார் 20 நாட்கள் போலிஸ் ஸ்டேசனிலேயே இருந்தேன். போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் அடிப்பார்கள். பெயருக்கு உணவுப்பொட்டலம் கிடைக்கும். அந்த 20 நாட்களும் நான் குளிக்கவே இல்லை. கோர்ட்டுக்கு கொண்டுபோகும் போது என் உடைகள் எல்லாம் தொளதொளவென்று ஆகிவிட்டன’.

‘பத்து ஆண்டுகள்... அதற்கு முன் நான் சிறையை பார்த்ததே கிடையாது. மூன்று மாதத்தில் வெளியே வந்துவிடலாம் என்றுதான் போலிஸ்காரர்கள் சொன்னார்கள். நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிர்வீட்டுக்காரர்கள் சொந்தக்காரர்கள் என சிறை முழுவதுமே முஸ்லிம்கள் மட்டுமே இருப்பது போல் தோன்றும். ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகத்தான் கழியும். வீட்டிலிருந்து யாராவது வந்துவிட்டால் அவ்வளவு தான் ஆறுமணிக்கு கொடி இறக்கப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டப் பின்பு பைத்தியமே பிடித்துவிட்டது போல் இருக்கும்.

என் குடும்பத்திலிருந்த எல்லாப் பெண்களும் கூலிவேலைக்குப் போகவேண்டி வந்தது. தனியாக வெளியே போகும் வழக்கமே இல்லாதவர்கள் அவர்கள். வேறுவழியே இல்லை. எப்படியோ வயிற்றுப் பாட்டையும் பார்த்துக்கொண்டு எனக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு தவறாமல் சிறைக்கு வருவார்கள். வேறென்ன, பப்ஸ்தான் வாங்கிவருவார்கள். அதற்காக ஒவ்வொரு முறையும் வார்டர்களோடு சண்டை நடக்கும். இதையெல்லாம் பார்த்த பிறகு அடிக்கடி வரவேண்டாம் என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன். சில நாட்களில் வெளியே போவோம் என்ற நம்பிக்கையே சுத்தமாக இல்லாமல் போய்விடும். சிலசமயம் கட்டாயம் வெளியே போவோம் என்று தோன்றும். ஆகஸ்டு 14 வேறு சிலரோடு நானும் விடுவிக்கப்பட்டேன்.’

‘வீடு திரும்பும்போது நகரம், இரைச்சல், தண்ணீர்ப்பாம்பு போல நெரிசலில் நீந்தி சென்ற ஆட்டோ... நான் திறந்த வாயை மூடவே இல்லை. ஆனால் ஏன் எனக்கு தூக்கி தூக்கிப் போடுகிறது, நெஞ்சு அடைத்துக் கொள்வதுபோல ஆகிறது என்று ஆட்டோவில் ஏறிய முதல் சில நிமிடங்களுக்கு என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்புதான் தெரிந்தது, வாகனங்கள் எதிரே வரும் என்பதும் விளக்குகள் நகர்ந்து வருவதும் எனக்கு மறந்தே போய்விட்டிருந்தது. பல ஆண்டுகளாக நான் எந்த வாகனத்திலும் பயணம் செய்யவே இல்லை. தவிர மாலை ஆறுமணிக்கே சிறைக்கதவுகள் மூடப்பட்டுவிடும் என்பதால் வாகனங்களின் விளக்குகளையும் நான் பார்க்கவே இல்லை. எனவே ஆட்டோவின் அதிர்வும் எதிரே வரும் வாகனங்களின் ஒளியும், வேகமும் எனக்கு பயத்தையும் விவரிக்க முடியாத வெவ்வேறு விதமான உணர்வுகளையும் ஏற்படுத்தின.’

‘வித்தியாசமாகத் தெரிந்த இன்னொன்று விளம்பர போர்டுகள். நான் போர்டு எழுதும் வேலையும் செய்திருக்கிறேன். ஸ்கீரின் பிரிண்டிங்கும் கொஞ்சம் தெரியும். எனவே இயல்பாகவே என் கவனம் புதிதாக வித்தியாசமாக தெரிந்த போர்டுகளின் மேல் சென்றது. என்ன இது என்றேன். ஃப்ளக்ஸ் போர்டு என்றார் ஆட்டோ டிரைவர். ஆயிரம் அதிசயங்களில் இது முதலாவது. என் கவனம் வேறுபுறம் திரும்பிவிட்டது.’

‘இந்த பத்தாண்டுகளில் அம்மாவைப் போலவே வீடும் நூறு ஆண்டுகள் ஆனதைப்போல கிழடு தட்டிப் போய்விட்டிருந்தது. சமீபத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை. வீட்டினுள் கட்டப்பட்டிருக்கும் கொடியில் தோரணமாக தொங்கிக் கொண்டிருக்கும் துணிகளையும் காணவில்லை. எல்லாம் சரியாகிவிடும்...’

‘வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்வரை எல்லாமே புதியவையாக இனிமையும் மகிழ்ச்சியும் நிரம்பியவையாக தோன்றின. இரவு வெகுநேரம் கழித்து படுத்தப் பின்புதான் முதல் அதிர்ச்சி ஏற்பட்டது. எனக்குத் தூக்கமே வரவில்லை. மூச்சு திணறுவது போலவும், நெஞ்சின் மேல் யாரோ ஏறி மிதிப்பது போலவும், கழுத்தை நெரிப்பது போலவும் தோன்றியது. என்ன இது, வேர்த்து வழிய கொஞ்சநேரம் விழித்தவன் கண்டுகொண்டேன். கொசுவர்த்தி. நிலைமையை புரிந்துகொண்ட அம்மா பக்கத்து வீட்டில் இருந்து ஒரு டேபிள் ஃபேன் கடன் வாங்கிவர அதற்கு கொசுவர்த்தியே பரவாயில்லை போலாகிவிட்டது. இரவு முழுவதும் என்னால் தூங்கவே முடியவில்லை.’

‘முதல் பத்து பணிரெண்டு நாட்களுக்கு நான் புதிதாக உலகைப் பார்க்கும் குழந்தை போலத்தான் இருந்தேன். இருசக்கர வாகனங்களும் பஸ்களும், கார்களும், லாரிகளும் நேராக என்மீதே மோதவருபவை போலத் தோன்றின. புதிதுபுதிதாக ஏதேதோ பெயர் தெரியாத வண்டிகள். தெருவைக் கடக்க வேண்டிய இடங்களில் சாலையை கடப்பதையே மறந்துவிட்டு விரையும் வாகனங்களையே பார்த்துக்கொண்டிருப்பேன். சாலையை கடக்கப் பழகவே பலநாட்கள் ஆகிவிட்டன’

‘உப்பு சப்பில்லாத ஜெயில் சாப்பாட்டுக்கு பழகிபோய் என்னால் வீட்டுச் சாப்பாடு சாப்பிடவே இயலவில்லை. காரத்தால் கண்களில் தண்ணீர் வந்துவிடும். இன்னொரு இட்லி... என்றால் ஆச்சரியத்துடன் அம்மாவையே பார்த்துக்கொண்டிருப்பேன்.’

‘ஆனால் முதன்முதலாக ஏதாவது வேலைதேடக் கிளம்பியபோதுதான் இந்த பத்தாண்டுகளை இழந்ததன் வலி எனக்கு முழுமையாக தெரிந்தது. ஆட்டோ டிரைவர், ஃப்ளக்ஸ் போர்டு என்ற சொல்லை உச்சரித்தபோது அதன் முழு பரிமாணமும் எனக்குப் புரியவில்லை. புதிதாக நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த புது போர்டுகள் என்னைப் போன்றவர்களுக்கு வேலை யில்லாமல் செய்துவிட்டன. நான் வேறு வேலைதான் தேடவேண்டும்...’

‘எல்லா இடத்திலும் எல்லாருக்கும் புத்தம் புதிதாக வேலைப் பழக வரும் பையன்கள்தான் வேண்டியிருக்சகிறது. எனக்கு இப்போது முப்பது வயது. ஆனால் பார்க்க முப்பத்தைந்துபோல் தெரிகிறது. உலகம் என்னை விட்டுவிட்டு முன்னே சென்றுவிட்டது. இன்னும் எனது வலது தோள் பட்டை வலிக்கிறது. பூட்ஸ் கால்களாலும், லத்திகளாலும் பத்தாண்டுகளுக்கு முன்பு துவைத்து எடுக்கப்பட்டதன் விளைவு.’

அவர் சிரித்தார். ஆனால் கண்களை மூடியிருந்த பனிப் போர்வை விலகவேயில்லை. ‘என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். வாங்க மற்றவர்களையும் பார்க்கலாம்.’

2

அது ஒரு பத்துக்கு எட்டு அறை. இப்போது, போன பிறவி போல தெரியும் அந்தக்காலத்தில் அவர் ஒரு ஒர்க்ஸ்ஷாப் தொழிலாளியாக இருந்தாராம். தாம் ஒரு முஸ்லிம் என்ற உணர்வே அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. மருதமலைக்குப் போய் மொட்டை அடித்ததுகூட உண்டாம்.

சிறையில் தன்னால் எல்லோருக்கும் தொந்தரவு என்கிறார் அவர் சிரித்துக்கொண்டே. தனக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்ற எண்ணத்தில் தொட்டதற்கெல்லாம் சண்டை பிடிப்பவராக ஆகிவிட்டாராம். மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு சிறையில் இருப்பதை நினைத்தால் நெஞ்சே வெடித்துவிடும் போலாகிவிடுமாம். அவர்கள் எப்படி சமாளிப்பார்கள்... அடுத்தவேளை உணவுக்கு உடைக்கு என்ன செய்வார்கள்? என்று யோசிக்க யோசிக்க சிறையில் இருக்கும் ஒவ்வொரு கணமும் ஒரு யுகம்போல் இருக்குமாம். ‘பத்துவருடம் எப்படி இருந்திருக்கும் பார்த்துக்குங்க..’. உள்ளே போகும்போது மகள் சின்னப்பெண். இப்போழுது பேத்திக்கு நாலு வயசு.

மனைவி, குழந்தைகள்... நான் சுற்றிலும் பார்த்தேன். அவர்களுக்கான எந்த அடையாளமும் இல்லை. கேட்கக்கூடாத கேள்விதான். ‘எங்கே அவர்கள்...?’ அவர் ரத்தநாளங்கள் புடைத்துத் தெரிந்த தனது கரங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரேயொரு கேள்வி கேட்டுட்டேன்...

3

நாங்கள் எழத் தயாரானபோது ஒருவர் உள்ளே நுழைந்தார். அகன்ற தோள்கள், மூங்கில் போன்ற உரமேறிய தேகம். தாடி அடர்ந்த ஒடுங்கிய கன்னங்கள் அவரை ஒரு விளையாட்டு வீரரைப் போல் காட்டின. அவரது கரம் இடுக்கியைப்போல் என் கையைப் பற்றியது. “நோயாளிப்போல் சிறைக்குப் போய் ஆரோக்கியமாக திரும்பி வந்தவன் நான் ஒருவன்தான். கைது செய்யப்படுவதற்கு முன்பு எனக்கு குடிப்பழக்கமும், புகைப்பழக்கமும் இருந்தது. சிறைக்குள் குடிக்க வழியில்லையே. கஞ்சா கிடைக்கும். ஆனால் கஞ்சா குடித்தால் எங்கள் ஆட்கள் ஒதுக்கிவைத்து விடுவார்கள். அது பெரிய தண்டனை. எனவே வேறுவழியில்லாமல் குடியை விட்டுவிட்டேன். பீடியும் குறைந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட புத்துணர்ச்சியில் உடற்பயிற்சியில் இறங்கினேன். படிப்பு உடற்பயிற்சி, படிப்பு உடற்பயிற்சி ... பத்தாண்டுகளில் எனது கூன் நிமிர்ந்துவிட்டது’’.

அவர் என் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தார். ‘அதற்காக சிறையை ஏதோ நல்ல இடம் என்று நினைத்துவிடாதீர்கள். உயிருக்கு உயிரான காதலர்களை சிறையில் போட்டுப் பாருங்கள்... எலியும் பூனையுமாகி விடுவார்கள். அன்றாட வாழ்க்கைக்கான போராட்டம் இருக்கிறதே அது எப்பேர்ப்பட்ட மனிதனையும் சுயநலமிக்கவனாக்கிவிடும். நீங்கள் சிறையில் ஒருவரிடம் ஒருநாள் சோப்பு கடன் வாங்கினால் உங்களுக்கு கிடைக்கும்போது அதைத் திருப்பி கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவரை அது பாதித்துவிடும். உங்கள் அலுமினியத் தட்டு உடைகள் பீடி அனைத்தையும் மறுநாளுக்காக நீங்கள் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும்.’

‘வெளியே வந்தபோது நகரம் எப்படி இருந்தது?’

‘அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது. கட்டடங்களைச் சொல்லவில்லை. வாழ்க்கை முறையை சொல்கிறேன். பணத்தைத் தேடி நடக்கும் இந்த ஜுர வேக ஓட்டப் பந்தயம் முன்பு இல்லை. எப்படியாவது ஒருநாளைக்கு இருநூறு முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆகவேண்டும். அடுத்தநாள் மீண்டும். முன்பும் இப்படித்தான். ஆனால் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாற்பது வயதானவன்- தொழிலாளி- தான் எதற்கும் உதவாதவன்- இனிமேல் பெட்டிக்கடை வைத்துவிட வேண்டியதுதான் அல்லது வாட்ச்மேன் வேலைக்கு போகவேண்டியதுதான் என்று உணரவேண்டி இருந்ததில்லை. இப்போது எல்லோருக்கும் பையன்கள்தான் வேண்டியிருக்கிறது. எண்பது ரூபாய் தருகிறார்கள். நாங்கள் எப்படி...?’

‘என்னோடு கடை வைத்திருந்தவர்கள் நிறையபேர் பெரிதாக வளர்ந்துவிட்டிருக்கிறார்கள். இந்த பத்தாண்டுகள் என்னிடம் இருந்து பறிக்கப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை நானும் அந்த இடத்தை அடைந்திருக்கலாம். வெளியே வந்ததிலிருந்து நான் ஜிம்முக்கே போகவில்லை. ஒரு புத்தகத்தையும் தொடவில்லை.’

‘எதிர்காலம் பற்றி?’

அவர் நிதானமாக சுற்றிலும் பார்த்தார். ‘இதை எனக்காக மட்டும் சொல்லவில்லை. எல்லோருக்குமாகத்தான் கேட்கிறேன். எங்களுக்கு மறுவாழ்வுக்கு உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். சிலருக்கு உதவிகள் கிடைத்தும் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் முழுமையாக கடன்கள் கொடுக்கப்படவேண்டும். பலர் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வெளியுலகத் தொடர்பே இல்லாமல் 10ஆண்டுகள் கழித்தவர்களுக்கு அரசு அலுவலகங்களில் சுற்றி அலைவது எவ்வளவு சிரமமானதாக இருக்கும். எங்களில் பலருக்கு சொந்தத் தொழில் செய்வதை தவிர வேறுவழியே இல்லை. கடன் கேட்டுப் போகும் அரசு அலுவலகங்களில் ஏதேதோ விபரங்கள் கேட்கிறார்கள். இந்த மறுவாழ்வுக்கான கடன் என்பதே அரசுத் திட்டம்தான். எங்களைப்பற்றி அரசுக்கு என்னதான் தெரியாது? எங்களைவிட துல்லியமாக எங்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் அரசும் காவல் துறையும் ஏன் இந்த நடைமுறைகளை எளிதாக்கக்கூடாது?

நாற்பத்தைந்து வயதுக்கு மேலானவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படமாட்டாது என்கிறார்கள். செல்போன் எங்களுக்குப் புதிதாக இருக்கிறது. ஃப்ளாட் ஸ்கிரீன் டிவிகளும் புதிய இரண்டு சக்கர வாகனங்களும் மின் சாதனங்களும் எங்களுக்கு ஆச்சரியமளிக்கின்றன. ஒரு எலக்ட்ரீசனோ, மின்சாதனங்களை பழுதுபார்ப்பவரோ, ஆட்டோமொபைல் மெக்கானிக்கோ இவற்றையெல்லாம் பழகிக்கொள்ள எவ்வளவு நாட்கள் பிடிக்கும்? புதிதாக பிறந்த குழந்தைகள் அல்லவா நாங்கள்.’

4.

‘தேசத்துரோகி’ ஒரு தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர். பழையத் துணிகள், பேப்பர்களும் வாங்குவார். அவருக்கு அப்போது சுமார் ஐம்பது வயதிருக்கும். அன்று காதலர் தினம் என்பது அவருக்கு ஒரு பொருட்டல்ல. சற்று முன்னதாகவே திரும்பிவிட்ட அவர் வண்டியில் குவிந்துக்கிடந்த பொருட்களை யோசனையுடன் பார்த்தபடி பீடி பிடித்துக் கொண்டிருந்தபோது கோவை நகரம் வெடித்துச் சிதறியது.

அடுத்த சிறிதுநேரத்தில் வேட்டைநாய்களைப் போல் பாய்ந்து வந்த, நீல உடையும் ஹெல்மெட்டும் அணிந்த இந்தி பேசும் காவலர்கள், மூடியிருந்த கதவுகளை உதைத்துத் திறந்து இஸ்லாமிய ஆண்களை இழுத்துச் சென்றபோது ‘தேசத்துரோகியும்’ கொண்டு செல்லப்பட்டார்.

ஏதோ தவறு நடந்திருக்கிறது, தன்னைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள் என்று உறுதியாக நம்பியிருந்தார் ‘தேசத் துரோகி’. சிறையில் தன்னைப் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் தனது வரவு செலவு நோட்டைப் பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி வற்புறுத்திச் சொல்வார். குண்டு வெடிப்புக்குப் பின்பு நடந்த கலவரத்தில் அவரது தள்ளுவண்டி எரிக்கப்பட்டுவிட்டது. பரவா யில்லை. வர வேண்டிய கடன்கள் உள்ளன. சமாளித்துக் கொள்ளலாம்.

மணிகள் நாட்களாகி, வாரங்களாகி, மாதங்களாகி, ஆண்டுகளாகின. ஒன்பதரை ஆண்டுகள் கழித்து ‘தேசத்துரோகி’ விடுவிக்கப்பட்டார். நரைத்து தளர்ந்து போயிருந்த மனைவியையும், வளர்ந்து வாலிபமாகி வறுமையின் சுவடுகளை முகத்தில் தாங்கியிருந்த மகன்களும், அவரை ஒரு இரவு நேரத்தில் ஆட்டோவில் அழைத்துவந்தனர். பிரிந்தவர் கூடியதும் அந்த இரவு உறக்கமின்றி கழிந்தது. காலையில் பீடி பற்ற வைத்தபடி தெருவில் நடந்த ‘தேசத்துரோகி’ திரும்பும் போது வீட்டை அடையாளம் காண முடியாமல் தடுமாறிப் போனார். பின்பு ஒருவழியாக உள்ளே வந்து உட்கார்ந்தவரிடம் அந்த நோட்டு தரப்படுகிறது. அது மட்டும்தான் இப்போது மீதி இருக்கிறது. 98 பிப்ரவரி 14 வரை வரவேண்டியத் தொகை ரூ.16,000/.

‘தேசத்துரோகி’ அந்த நோட்டை எடுத்துக் கொண்டு வசூலுக்குக் கிளம்புகிறார். வீடுகள் இருந்த இடங்களில் அப்பார்ட்மெண்ட்கள்... காம்ப்ளக்ஸ்கள்...அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருந்த தெருக்கள், மக்கள். நட்பும் தந்திரமுமாக தன்னிடம் பேரம்பேசி மல்லுக் கட்டிய பெண்களின் முகங்களை நினைவுபடுத்திக்கொள்ள முயல்கிறார். ‘அம்மா பத்து வருடத்திற்கு முன்பு நீங்க ரெண்டு பக்கெட்டும் சாமானும் வாங்கியதில் 135 ரூபாய் பாக்கி...

‘‘தேசத்துரோகி’ அந்த கசங்கி பழுப்பேறிய நோட்டை ஆட்டிக்காட்டியபடி கேட்கிறார் ‘எல்லா விவரமும் இதுல இருக்கு. பணத்தை வாங்கித்தர அரசாங்கம் ஏதாவது உதவி பண்ணுமா?’

5.

வைக்கோல் ஏற்றிய மாட்டுவண்டிபோல பஸ் செம்மச் செம்ம நிறைந்து ஒரு பக்கமாக சாய்ந்தபடி உக்கடத்திலிருந்து கிளம்புகிறது. அந்த பயணி ஓடிவந்து தொற்றிக் கொள்கிறார். படியில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் அவர் வயதைப்பார்த்து சற்றே நெளிந்து இடம்விடுகிறார்கள். பயணி உள்ளே நுழைகிறார். கூட்ட நெரிசலில் நச்சென்று ஒருவர் பயணியின் காலை மிதிக்கிறார். தான் முதலில் கோபப்பட்டுவிட வேண்டுமென்ற தற்காப்பு உணர்வுடன் திரும்பிய அவர் பயணியின் முகத்தில் தெரிந்த விநோதமான சிரிப்பைப் பார்த்து குழம்பிப் போகிறார்.

பயணி ஒரு தொழிலாளியாக இருந்தார் - பத்தாண்டுகளுக்கு முன்பு குண்டுவெடிப்பு வழக்கில் பத்தோடு பதினொன்றாகச் சேர்க்கப்பட்டு சிறைக்குச் செல்லும் வரை. சிறையிலிருந்த பத்தாண்டுகளில் நான்கே நான்கு முறைதான் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார். மொத்தம் 12 கி.மீ. அதுவும் கம்பிக் கவசம் பூண்ட ஜன்னல்கள் கொண்ட ச்போலீஸ் வாகனத்தில்தான். அவர் ஒவ்வொரு முறை பரோலில் வரும்போதும் உடன் இரும்புத் தொப்பி அணிந்த, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வருவார்கள். அவர்கள் முகம் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்.

காவலர்கள் பரோலில் செல்லும் கைதிகளுக்கு காவலாக செல்ல விரும்புவதில்லை. பெரும்பாலும் ஒற்றை அறை கொண்ட கழிப்பிடம் அற்ற அவர்களது விடுகள். இயற்கை உபாதைகளை அடைக்கிக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் ஆயுதங்களோடு நான்கைந்து மணிநேரம் காத்திருக்க வேண்டுமே?

டவுன்பஸ்சின் இரைச்சல், நெரிசல், உயிர்த்துடிப்பு பயணிக்கு பிடித்திருக்கிறது. சும்மா பஸ்ஸில் போய்க் கொண்டே இருக்கிறேன். இதுவரை இதற்கே ஆயிரம் ரூபாய் செலவழித்திருப்பேன். வேலை போய்விட்டது. பிழைப்புக்கு ஏதாவது வழிசெய்யவேண்டும். ஆனாலும்...

6.

நான் விடைபெற்றுக் கொண்டபோது அவர்கள் திரும்பவும் தங்கள் பெயர்களைக் குறிப்பிட வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்கள். ‘ஏன் இதில் இவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள்? நாம் அப்படி எதுவும் பேசிவிடவில்லையே...? என்றேன்.

‘நாங்கள் மக்கள்கூட்டத்தில் கலந்து மறைந்துவிட விரும்புகிறோம். அதுவொரு காரணம். எல்லோர் கதையும் ஒன்றுதான் என்னும்போது பெயர்களால் என்ன பயன்?- இது இரண்டாவது. எல்லாவற்றிலும் முக்கியமான காரணம் அதோ தெரிகிறதே, அது..’

இதைப் பார்க்காமல் எப்படி விட்டேன்? தெருமுனையில் ஒரு செக்போஸ்ட். காவலர் ஒருவர் மாலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார். எப்போதும் இங்கே நான்கு போலிஸ்காரர்கள் இருப்பார்கள் என்றனர் நண்பர்கள். ‘நாங்கள் எங்கே போகிறோம் வருகிறோம் என்பதையெல்லாம் தங்களிடம் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். பெண் பார்க்கப்போனால்கூட அதுபற்றிய முழு விவரமும் தங்களிடம் சொல்லப்பட வேண்டுமென்கிறார்கள்.

நகருக்குள் சிறைச்சாலை என்பது மாறி இந்த மக்களுக்கு நகரமே சிறைச்சாலையாகிவிட்டதோ என்று தோன்றியது.

இலக்கு தவறிய கோபம்.

அவர்கள் இந்துக்கள். பெரும்பாலான இந்துக் கோயில்கள், இந்துக்களின் வீடுகளில் வாசல்வரை செல்ல மட்டுமே அவர்களுக்கு அனுமதி உண்டு. இன்றோ நாளையோ இடிந்துவிழத் தயாராக இருக்கும் அவர்களது வீடுகள் இருக்கும் தெருக்கள் சந்தைக்கடை போல் இரைச்சல் மிகுந்திருக் கும். அருகே உள்ள டவுன்ஹாலின் கண்ணைப் பறிக்கும் பளபளப்பும், ரேஸ்கோர்சின் கம்பீரமான அமைதி தவழும் மாளிகைகளும், அவர்களுக்கு முற்றிலும் அன்னியமானவை.

தொலைவில் கேட்ட பம்மென்று அமுங்கிய குண்டு வெடிக்கும் ஒலியில் ஆண்டாண்டுகாலமாக உறங்கிக் கிடந்த கோபம் விழித்துக்கொண்டது. காக்கியும், காவியும் அணிந்தவர்கள் அவர்களை வழிநடத்தினார்கள். இவர்களை முன்னிருத்தி தாங்கள் பின்னே நின்று கொண்டனர். மறுநாள் ஆர்.பி.எப். வாகனம் ஒலிபெருக்கியோடு தெருவில் சென்றது. ‘கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இன்று மாலைக்குள் ஆர்.பி.எப். சாவடியில் ஒப்படைக்கப்பட வேண்டும்.’ ஒளித்து வைக்க இடம் இல்லாத, கோபம் வடிந்து சுயநிலை திரும்பிய அம்மக்கள் எல்லாவற்றையும் ஒப்படைத்தார்கள் சாவடியில். மீட்கப்பட்ட பொருட்களை அதன்பின்பு யாரும் காணவேயில்லை.

சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு 10.05.2005 அன்று ராம.கோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும் பகுதியான கோட்டைமேட்டை ஒட்டியுள்ள உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார். 1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்து போயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

அப்பகுதி இளைஞர்கள் அவரைத் தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமை உண்டு என்கிறார் ராமகோபாலன்.‘அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?’ ‘இங்கிருந்து 10கிலோமீட்டர் தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?’ இந்துக்களிடையேயான பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். ‘அப்படியானால் எல்லோரும் முதலில் காலப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோவிலுக்கு வருவோம் என்கின்றனர் இளைஞர்கள்.’ ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டு திரும்புகிறது காவிப்படை.

ஒருவாரம் கழித்து 24-5-2005 அன்று கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன். இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச்சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டு வந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

-இரா. முருகவேள்
நன்றி: புதுவிசை & www.keetru.com

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நன்றி: சுடுவது சுகம், புதுவிசை & www.keetru.com

பெயரில்லா சொன்னது…

Anonymous said...

நன்றி: சுடுவது சுகம், புதுவிசை & www.keetru.com


Repeatey........


-One more anony

பெயரில்லா சொன்னது…

அந்தக் கண்ணீர்த்துளிகளின் சூடு
மிகுந்து மிகுந்து
மனதை அமிலமாய் அரிக்கிறது.

கருத்துரையிடுக