செவ்வாய், ஏப்ரல் 01, 2008

விலை கொடுத்து வாங்கும் அவமானம் by சோலை

அமெரிக்க ராணுவ வட்டத்திற்குள் இந்தியாவை மன்மோகன் சிங் அரசு இழுத்துச் செல்கிறது என்பதனை, தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். அதன் ஒரு விளைவு இப்போது அம்பலமாகி இருக்கிறது.

பழைய இரும்புக் கடைக்கு அனுப்பவேண்டிய ஒரு கப்பலைச் சீவிச் சிங்காரித்து இந்தியாவின் தலையில் அமெரிக்கா திணித்துவிட்டது. அதற்கும் வண்ணம் பூசி ஐ.என்.எஸ். என்று நாமம் சூட்டி, நமது கப்பற்படையிலேயே இணைத்துவிட்டனர். இந்த மாபெரும் மோசடி இப்போது அம்பலமாகி இருக்கிறது.

அமெரிக்கக் கப்பற்படையில் யூ.எஸ்.எஸ். டிரென்டன் என்ற கப்பல் இணைந்திருந்தது. தொடர்ந்து முப்பது ஆண்டுகள் அந்தப் போர்க் கப்பல் பணி செய்து முடித்துவிட்டது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களில் அரும்பணி ஆற்றியிருக்கிறது.

1971_ம் ஆண்டு கட்டப்பட்ட அந்தக் கப்பலுக்கு அமெரிக்கக் கப்பற்படையும் பிரியாவிடை கொடுத்துவிட்டது. 2003_ம் ஆண்டு பணி முடித்த அந்தக் கப்பலை உடைப்பதற்கும் தயாராக இருந்தனர். ஏனெனில், கப்பல் கட்டுவதற்குப் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. வளர்ந்தும் வருகின்றன. அந்தக் காலத்துத் தொழில்நுட்ப அடிப்படையில் கட்டப்பட்ட அந்த டிரென்டன் கப்பலைப் பழுது பார்க்கவும் முடியாது. பழுது பார்த்தாலும் அதன் ஆயுள் மாதக்கணக்கில்கூட நீடிக்காது. எனவே, அந்தக் கப்பலை உடைக்கும்படி 2006_ம் ஆண்டே அமெரிக்கக் கடற்படை அறிவித்தது.

சுருக்கமாகச் சொல்கிறோம். 1971_ம் ஆண்டு கட்டப்பட்ட அந்தக் கப்பல் முப்பதாண்டுப் பணி முடித்தபின்னர் அதன் அடுத்த பணி பற்றி முடிவு செய்யவேண்டும். எனவே, 2003_ம் ஆண்டு அந்தக் கப்பல் தனது கடல் பயணத்தை நிறுத்தியது. அந்தக் கப்பலை உடைத்துவிடலாம் என்று 2006_ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கின் கண்டுபிடிப்பின்படி அமெரிக்கா இந்தியாவின் நண்பன் அல்லவா? எனவே, பயன்படாத அந்தக் கப்பலை இந்தியாவிற்கே விற்பது என்று அமெரிக்கா முடிவு செய்தது. ஏனெனில், வேறு எந்தப் பித்துக்குளி நாடும் அந்தக் கப்பலை வாங்காது. ஆகவே, அந்தக் கப்பலை அமெரிக்கா 217 கோடிக்கு விற்றிருக்கிறது. எந்தவித பேரமும் இல்லை. அமெரிக்கா சொன்னதுதான் விலை. இந்த வெட்கக்கேட்டை விலை கொடுத்து வாங்கியதில் கப்பற்படைத் தளபதிகளுக்கும் பங்கு உண்டு என்று இந்திய அரசின் தணிக்கைக்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்தக் கப்பலின் வரலாறு _ தொழில் நுட்பத்திறன் _ இனி எந்த அளவிற்குப் பயன்படும் என்பதுபற்றியெல்லாம் எந்த ஆய்வும் நடைபெறவில்லை. கையில் காசு. வாயில் தோசை என்று இந்த ஓட்டைக் கப்பலை இந்தியாவின் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்றும் அந்தத் தணிக்கைக் குழு சுட்டிக் காட்டியிருக்கிறது.

இந்தக் கப்பல் அமெரிக்காவிடம் இருந்தபோது நச்சு வாயு தாக்கி மூன்று மாலுமிகள் இறந்துவிட்டனர். இப்போது இந்தியா பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், அதே நச்சு வாயுக் கசிவால் ஆறு மாலுமிகள் இறந்து விட்டனர். இன்னும் எத்தனை உயிர்களை இந்தக் கப்பல் காவு கேட்கும்?
உண்மையிலேயே இந்தக் கப்பலின் மாலுமிகள் அச்சப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ரஷ்யா உள்பட எத்தனையோ நாடுகளிலிருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கியிருக்கிறது. இப்படி கசாப்புக் கடைக்குப் போக வேண்டிய மாட்டை நல்ல விலைக்கு விற்றதுபோல் வேறு எந்த நாடும் நமது தலையில் கட்டியதில்லை. இனி இந்த ஓட்டைக் கப்பல் பழுதுபட்டால் அதனைச் சரிசெய்யவும் அமெரிக்க ஆசாமிகள்தான் வரவேண்டும்.

இந்த அவமானத்தை விலைகொடுத்து வாங்கிய இந்தியாவிற்கு, அமெரிக்கா இன்னொரு நிபந்தனை விதித்திருக்கிறது. இந்தக் கப்பலில் என்னென்ன போர்த்தளவாடங்கள் ஏற்றப்படுகின்றன என்று அவ்வப்போது பரிசோதிக்க அமெரிக்காவிற்கு உரிமை உண்டாம். தேவையில்லாமல், அவசியமில்லாமல் இந்தக் கப்பலை வாங்கியதற்கு அமெரிக்கா இந்தத் தண்டனையையும் அளிக்கிறது.

என்றைக்கு விலைகொடுத்து வாங்கிவிட்டோமோ, அப்போதே அந்தக் கப்பல் இந்தியாவிற்குச் சொந்தமாகிவிட்டது. அதன் பின்னர் அந்தக் கப்பலை அலசி ஆராய வேண்டிய அவசியம் என்ன? அமெரிக்காவிற்கு எதற்கு இந்தச் சுதந்திரம்? இந்தியாவின் மானம் மரியாதை என்ன ஆனது?

காயலான்கடைக்கு அனுப்பவேண்டிய இரும்புக் குப்பையை விலை கொடுத்து வாங்குவதற்கும் நிபந்தனையா? கப்பல் கட்டும் துறை புதிய புதிய தொழில் நுட்பங்களோடு வளர்ந்து வருகிறது. அத்தகைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய கப்பல்களைக் கட்டும் வல்லுனர்கள் உண்டு. அவர்கள் ஏற்கெனவே புதிய கப்பல்களைக் கட்டியிருக்கிறார்கள். நமது வல்லுனர்களைக் கொண்டே காலத்தின் தேவைக்கு ஏற்ற புதிய போர்க் கப்பல்களைக் கட்ட முடியும்.

நமது பாதுகாப்பிற்கு அமெரிக்க ஓட்டைக் கப்பல்கள் எப்படிப் பயன்படும்? பாதுகாப்பு உடன்பாடுகள் ரகசியமானவை. ஆனால், அந்த விதியையே பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா தனக்குப் பயன்படாத தளவாடங்களை நமக்கு விற்பனை செய்கிறது. ஆனால், இந்தியாவின் பாதுகாப்பைப் பலப்படுத்தத்தான் அமெரிக்கா நமக்கு உதவ முன் வருகிறது என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

அமெரிக்காவோடு இன்னும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது என்கிறார். அந்த ஒப்பந்தங்கள் இந்தியாவை எந்த அளவிற்கு ஏமாளியாக்கும் என்பதற்கு அமெரிக்க ஓட்டைக் கப்பல் வாங்கியதே ஓர் உதாரணம்.

இந்தியாவிற்கே தெரியாமல் அமெரிக்காவோடு மன்மோகன் சிங் அணுசக்தி உடன்பாடு கண்டிருக்கிறார். அந்த உடன்பாடு ரொம்ப ரகசியமாக இருந்தது. ஆனால் படிப்படியாக அந்த உடன்பாட்டின் உட்பிரிவுகள் கசிந்து வந்தன. அதன் பின்னர்தான் இந்தியா அமெரிக்காவின் வலைப் பின்னல்களில் வகையாகச் சிக்கவைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது. நாடே துடித்துப்போனது.

அந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் ஆயுள் கைதியாக்குகிறது. இந்தியாவின் இறையாண்மையையே பலி கேட்கிறது என்பதனை இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்ல, பிற கட்சிகளும் கண்டித்தன. ஏன்? இந்த உடன்பாட்டிற்குப் பிள்ளையார் சுழி போட்ட பி.ஜே.பி.யே அதில் நாட்டிற்குப் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன என்று எதிர்க்கிறது.
மூன்றே சதவிகித மின்சார உற்பத்திக்காக அமெரிக்க அடிமைச் சாசனம் நமக்குத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்பாட்டை இந்தியாவின் தலையில் கட்டியே தீருவது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. என்ன காரணம்?

அணுமின் உலைகளை அமைத்துத் தரும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவை கோடீஸ்வரர்களுக்குச் சொந்தம். பதினைந்து ஆண்டுகளாக அந்த ஆலைகள் செயல்படவில்லை. காரணம், எந்த நாடுமே தமக்கு அணு உலை அமைத்துத் தரும்படி அமெரிக்காவை கேட்டதில்லை. எந்தவித நிபந்தனையோ, ஒப்பந்தமோ இல்லாது தொடர்ந்து நமக்கு அணு உலைகளை ரஷ்யா அமைத்துத் தருகிறது.

துருப்பிடிக்கும் நிலையிலிருக்கும் அமெரிக்க அணு உலை நிறுவனங்களுக்கு நிரந்தர வேலை தேவை. அதனை நிறைவு செய்துகொள்ள மன்மோகன் சிங்கை அமெரிக்கா பிடித்தது. அமெரிக்க ஓட்டைக் கப்பலை போர்க் கப்பலாக்கி இந்தியாவின் தலையில் சுமத்தியதுபோல், அணு உலைகளையும் இந்தியாவில் இறக்குமதி செய்ய அமெரிக்கக் கோடீஸ்வரர்கள் துடிக்கிறார்கள். ஏன் இன்னும் தாமதம் என்று ஒவ்வொரு அமெரிக்க வி.ஐ.பி.யும் ஓடிவருகிறார்கள். இந்திய நலன்களில் அக்கறை கொண்டா அவர்கள் வருகிறார்கள்?

பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், அமெரிக்காவோடு போடும் ஒப்பந்தங்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கப்படவேண்டியவை என்பதனை ஓட்டைக் கப்பல் போர்க்கப்பலாக உருமாறி வந்த நிகழ்வே சரியான உதாரணமாகும்.

-சோலை
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Wonderful article. Keep on posting such articles like this....

கருத்துரையிடுக