திங்கள், மார்ச் 24, 2008

ஜீவன் வற்றிக் கொண்டிருக்கும் ஜீன் குளம்! by ராமன் ராஜா

சின்ன வயதில் எங்கள் வீட்டில் பெரிய கூட்டுக் குடும்பம். பந்தி பந்தியாக எப்போதும் யாராவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். பாட்டி ஒரு அன்னபூரணி. வெண்கலப் பானையில் அரிசி வேகும்போதே வாசனை வாசல் வரை தூக்கும். குதிரை வால் சம்பா, மணிச் சம்பா, மடு முழுங்கி, கவுனி, தூய மல்லி என்று அழகழகான அரிசி வகைகளின் பெயர்கள் எல்லாம் வீட்டில் புழங்கி வந்தன. பிறகு கற்பனை வறட்சியுடன் ஐ.ஆர்.8, சி.ஓ33 என்றெல்லாம் அரசாங்க இலாகாத்தனமாகப் பெயர் வைக்கப்பட்ட ஹைப்ரிட் அரிசிகள் வந்தன. ஒரு காலத்தில் இந்தியாவில் இரண்டு லட்சம் அரிசி வகைகள் இருந்ததாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரிச்சாரியா.

ஆனால் அந்தச் சுவையான பழைய அரிசிகள் எல்லாம் எங்கே காணாமல் போய்விட்டன? இப்போது சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் இயந்திரத்தில் பாக்கிங் செய்து பிராண்ட் முத்திரை பதித்த என்னவோ ஒரு அரிசிதான் கிடைக்கிறது; சோறு வடித்தால் சவக் சவக்கென்று இருக்கிறது. இந்த அவல நிலையைக் குறிப்பிட சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட வார்த்தை
BIO-DIVERSITY. ஒரு மண்ணுக்கே உரிய பயிர் வளமும் உயிர் வளமும் துடைத்து எறியப்படுவதுதான் பயோ டைவர்ஸிடி பிரச்னை எனப்படுகிறது. பூமியில் மனிதன் சாப்பிடத் தகுந்த தாவரங்கள் ஏழாயிரத்துக்கு மேற்பட்டவை உண்டு. இருந்தாலும் நாம் சுமார் 150 வகைகளை மட்டுமே உண்டு வாழ்கிறோம்.

நிலத்தில் எதைப் போட்டாலும் வேகமாக, நிறைய வளர வேண்டும் என்ற பச்சைப் புரட்சி அவசரத்தில் ஒரு சில ஒட்டு ரகங்களை மட்டுமே திரும்பத் திரும்பப் பயிரிட்டதில், நம் பாரம்பரியமான அரிசி பருப்பு வகைகளெல்லாம் ஓரம் கட்டப்பட்டு, நல்ல தமிழ் போல மெல்லச் செத்துக் கொண்டிருக்கின்றன. தடியங் காயும் தும்மிட்டிக் காயும் வழக்கொழிந்து போய் மார்க்கெட் பூரா இங்கிலீஷ் காய்கறிகள். கொல்லைப் பக்கத்தில் உயிரோட்டமான கண்களுடன் லட்சுமிகரமாக நின்றிருந்த காராம் பசுக்கள் எல்லாம் லாரியில் அடைத்துக் கேரளாவுக்குக் கடத்தப்பட்டு, கிழங்கு கிழங்காக ஜெர்ஸி பசுக்கள் வந்திருக்கின்றன; தொடர்ந்து ஹார்மோன் இஞ்செக்ஷன் போடாவிட்டால் அவை பால் கறக்க மறுக்கின்றன.

தாய் நாட்டுத் தாவரங்களை மறந்து வெள்ளைக்காரனிடமிருந்து விதைகளை வாங்கிப் பயிரிடுவதில் ஓர் ஆபத்து இருக்கிறது: இந்த விதைகளெல்லாம் மொன்சாந்தோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் பேடண்ட் உரிமம் பெற்றவை. விதை நெல்லை ஒரு வருடத்திலிருந்து அடுத்த வருடத்துக்கு எடுத்துப் பயன்படுத்த முடியாது. அவர்கள் சட்டப்படி அது குற்றம்; வம்பு வழக்குப் போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கிவிட்டு டிராக்டரைக் கொண்டு வந்து, கதிர் பிடித்த பயிரையெல்லாம் மடித்து உழுதுவிட்டுப் போய் விடுவார்கள். நம் விவசாயம் அவர்களுக்கு முழுவதுமாக அடிமைப்பட்ட பிறகு இஷ்டத்துக்கு விதையின் விலையை ஏற்றிக் கொண்டே போனால் என்ன செய்வது? ஒரு தலைமுறைக்கு மேல் விதைகள் முளைக்காமலே செய்யக் கூடிய பயங்கர டெர்மினேட்டர் ஜீன் கூட அவர்களிடம் இருக்கிறது. மஞ்சள், வேம்பு ஆகியவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி மேலை நாடுகளில் ஏராளமான பேடண்ட் வாங்கித் தள்ளிவிட்டார்கள். அத்தனையும் நம்முடைய பாட்டி வைத்திய அறிவு! இனிமேல் வேப்பம்பூ பச்சடி சாப்பிட ஆசை எழுந்தால் ஏதாவது அமெரிக்கக் கம்பெனி டப்பாவில் அடைத்து விற்பதைத்தான் வாங்க வேண்டும் போலிருக்கிறது.

இப்போது வரும் பல வகைப் பயிர்கள், மரபீனி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஜீன்கள் மாற்றப்பட்டவை. அதில் என்னென்ன வல்லடிகள் வரும் என்பதைக் காலம்தான் சொல்ல முடியும். பிளாஸ்டிக் அரிசியைச் சாப்பிடவே முடியாதபடி ஏதாவது வில்லங்கம் ஆகிவிட்டால் அப்போது கிச்சிலிச் சம்பாதான் காப்பாற்றும். அதற்காகவாவது நம் சம்பாக்களைப் பாதுகாப்பது அவசியம். லோக்கல் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப இயற்கை படைத்திருப்பது அவற்றைத்தான்.

காடுகள் அழிந்து ரியல் எஸ்டேட் ஆவதால், ஆறுகளில் ரசாயனக் கழிவுகள் கொட்டப்படுவதால், இன்னும் பற்பல சுயநலங்களால், உலகத்து உயிரினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. டோடோ பறவை முதல் தாடிப் புலி வரை, கடந்த முன்னூறு வருடங்களில் தொலைந்த பிராணிகளுக்கு யாரும் கணக்கே வைத்துக் கொள்ளவில்லை. ஓர் இனம் அழியும்போது அவற்றின் ஜீன் என்கிற மரபீனிகளில் சேகரிக்கப்பட்டிருந்த உயிரின் டிசைன் பற்றிய தகவலும் நிரந்தரமாக இழக்கப்படுகிறது. கடைசியாக ஒருநாள் குளோனிங் முறையில் ஆடு, மாடு, மனிதன் எல்லாம் தயாரிக்க ஆரம்பித்து விட்டால் நாம் அனைவருமே ஒரே அச்சில் வார்த்த பிள்ளையார் பொம்மைகள் மாதிரி பிறக்கப் போகிறோம்.

வள்ளுவன், இளங்கோ, பாரதியின் ஜீன்களுக்கெல்லாம் அன்றுடன் சமாதி.
.
ஒரு பிரதேசத்தின் மரபீனி வளத்தை ஜீன் குளம் (POOL OF GENE) என்று குறிப்பிடுவார்கள். நம்முடைய ஜீன் குளம் இப்போது வேகமாக வற்றிக் கொண்டிருக்கிறது! இதைக் கண்டு கவலை கொண்ட சில நல் இதயங்கள், ஆங்காங்கே ஜீன் வங்கிகளை ஏற்படுத்தி அவற்றைப் பாதுகாக்க முயற்சி செய்து வருகின்றன. பண்டைய கோயில் கோபுரங்களின் உச்சியில் வெள்ளத்துக்கு எட்டாமல் பெரிய கலசங்கள் அமைத்து அதற்குள் மரக்கால் கணக்கில் தானியங்களைச் சேகரித்து சீல் வைத்திருந்ததாகச் சொல்வார்கள். இது அவர்கள் டெக்னாலஜியால் முடிந்த வரை ஜீன் வங்கி ஏற்படுத்தும் உத்தியாக இருக்கலாம். லேசாகத் திறந்து பார்க்க அனுமதித்தால் ராஜராஜன் காலத்தில் சோழ நாட்டுக் கேழ்வரகு எப்படி இருந்ததென்று தெரிந்து கொள்ள ஆசை.

பைபிளில் ஒரு கதை உண்டே.. பிரளயம் வந்து உலகமே அழிய இருந்தபோது நோவா எல்லாப் பிராணிகளிலும் ஒவ்வொரு ஜோடியைக் கப்பலில் ஏற்றிப் போய்க் காப்பாற்றினாராம். (இந்தக் கொசுவை மட்டும் கப்பலில் இடமில்லை என்று சொல்லி இறக்கிவிட்டிருக்கலாம்!) நோவாவின் கப்பல்தான் உலகின் முதல் மிதக்கும் ஜீன் வங்கி. ஆனால் இப்போது உலகம் அழிவதற்கு, கடவுள் பொறுமையிழக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. நாமே சொந்த முயற்சியில் எல்லா வகைக் கொலை ஆயுதங்களையும் படைத்து விட்டோம். பறவைக் காய்ச்சல், எய்ட்ஸ் போன்ற கொள்ளை நோய்களால் நாமும், நாம் சாப்பிடும் பசு பட்சிகளும் பெரிய அளவில் அழிய நேரலாம். குளோபல் வார்மிங் என்று கார்பன் புகையால் உலகம் சூடாகி இட்லி மாதிரி வெந்து கொண்டிருப்பதால், கடல்கள் பொங்கி மலைகள் உருகி அது வேறு ஆபத்து காத்திருக்கிறது. எனவே நம் ஜீன்களைச் சேகரிப்பது அவசரமான தேவையாகிவிட்டது.

நார்வே நாட்டில் பிரளய காலத்துக்கு விதைகளைச் சேமித்து வைக்க ஒரு பெட்டகம் கட்டியிருக்கிறார்கள். வட துருவ வட்டத்தில் பனி மலைக்குள் குடைந்து கான்க்ரீட் குகை அமைத்து, உள்ளே ஹை டெக் அலமாரிகளில் இரண்டரை லட்சம் விதை ரகங்களைச் சேகரித்திருக்கிறார்கள். ஃபாயில் காகிதத்தில் சுற்றி மைனஸ் பதினெட்டு டிகிரியில் உறைய வைத்திருப்பதால் விதைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு வீணாகப் போகாது. அப்படியே ஏதாவது அணு குண்டு வெடித்து நிரந்தரமாக மின்சாரம் போய்விட்டாலும் ஆர்க்டிக்கின் ஐஸ் மலைக்குள் புதைந்திருப்பதால் நீண்ட காலம் விதைகள் உயிருடன் இருக்கும். வெளியே காவலுக்கு வெள்ளைக் கரடிகள் இருக்கின்றன.

இந்த விதைப் பெட்டகத்துக்கு எல்லா நாடுகளும் தத்தம் உள்ளூர் விதை ரகங்களை அனுப்பி வைத்திருக்கின்றன. பார்லியில் மட்டுமே கிட்டத்தட்ட நாலாயிரம் வகைகள் சேர்ந்திருக்கிறது. உலகமெல்லாம் அழிந்து புதிய மனிதர்கள் பிறந்தவுடன் முதல் வேலையாக பீர் காய்ச்சிக் குடிக்க பார்லி தேவையாக இருக்கும். பெரிய அளவில் யுத்தம், வைரஸ் தாக்குதல் என்று வந்து உலகத்து விளை நிலங்கள் எல்லாம் தரிசாகப் போய்விட்டால் இந்த விதைகள் அப்போது கை கொடுக்கும்.

போரில் சாகாமல் மிச்சமிருக்கும் ஜனங்கள் மணப்பாறை மாடு கட்டி மரக் கலப்பையால் உழுது கமலையில் தண்ணீர் இறைத்து, மறுபடி மொகஞ்சதாரோ மனித நாகரீகத்தை ஆரம்பிக்கலாம்.
.
-ராமன் ராஜா
.
நன்றி: தினமணிக்கதிர் (09-03-2008)

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

யாருப்பா அது? இந்த மாதிரி சுட்ட பழத்துக்காக பிளாக் ஆரம்பிச்ச புத்திசாலி.

பரவாயில்ல. இதுவும் நல்லாதான் இருக்கு. கன்டின்யூ பண்ணு கண்ணு!

கருத்துரையிடுக