ஞாயிறு, மார்ச் 23, 2008

அணுசக்தி - பகல்கனவு ஒரு கொடுங்கனவு by குட்டி ரேவதி

அணுசக்தியை மானுடசக்தியினும் மிகுதியாக மதிப்பிடும் நூற்றாண்டாகிவிட்டது, இருபத்தியோராம் நூற்றாண்டு. எப்பொழுதெல்லாம் ஒரு பெரிய தத்துவம், ஆற்றல் அல்லது தந்திரம் மானுடசக்தியினைச் சிறிய பொறியாக்கி, தன்னை ஒரு பெரிய பிழம்பாக, எரிமலைக்குழம்பாகக் காட்டும் விவாதத்தைக் கிளப்புகிறதோ மானுடம் சமூகஅறமற்ற ஒருவனைத் தலைமையாகக்கொண்டு இயங்குவதாகத்தான் காலம் பொருள்கொள்கிறது. அவ்வாறான ஓர் ஆற்றல் வாய்ந்த தற்காலத் தந்திரம்தான் இந்த அணுஆற்றல். அணுஆற்றலின் மகிமைகள் அனைத்தையும் அமெரிக்காவின் பேராண்மைச் செயல்பாடுகள் வழியாகவும், காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் போன்ற அச்சுறுத்தல்களை நாம் விரட்டியடிக்க வேண்டும் என மொழியும் 'கன்னிஉரைகள்' வழியாகவும் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியது அன்று. அதிகப்பதற்றமும் சிதறுத்தன்மைகளையும் உடைய கதிரியக்கஊக்கிகளைத் தன்னகத்தே ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், மனச்சிதைவுக்குள்ளானவரைக் கனத்த சங்கிலியால் கட்டிப்போட்டுக் குழந்தையை அச்சுறுத்தும் வதை போன்ற ஓர் அடக்குமுறையும், அதைப் பிளக்கும்போது வெளிப்படும் கட்டறுத்த அதிகச் சிதறல்களுடைய ஓர் ஆற்றல்தான். எலியைப்பிடிக்க வீட்டை எரித்த கதையாக மின்சார உற்பத்திக்கு மின்நிலையம்.


அமெரிக்காவின் அருகில் இட்டுச்செல்லும் அரசியல் ஆதாயத்திற்கு 123 ஒப்பந்தமானது மட்டுமே கடைசிக்கதவு என முழங்கும் அரசியல்வாதிகள் ஏற்கெனவே அனுபவித்த ஆதாயங்கள் போதுமானவையாக இல்லை. ஏனெனில் கண்மூடித்தனமான ஆண்மைத்தத்துவம் தனக்கான நிரூபணங்களையோ, உண்மைகளையோ தேடிப்பெறவேண்டிய அவசியமில்லை. இதற்கு முன்பு பூமியில் பரீட்சித்துப்பார்க்கப்பட்ட ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மதஅடிப்படைவாதம், தீவிரவாதம் எல்லாமே எந்த அடிப்படைக்கொள்கை மற்றும் உண்மையின்பாற்படாமல் காலத்திற்கேற்றவாறு தமது வல்லாண்மையை வடிவமைத்துக்கொள்ளும் சாத்தியப்பாடுகளுடன்தாம் எழும்பியுள்ளன. எந்த நெருக்கடியான நிலையிலும் தமது அழிவிலிருந்து தாம் விரும்பிய புதுஉருவுடன் மூர்க்கமாய் எழுந்துவர இயலும். மேலும் இத்தகைய தத்துவங்கள் காலப்போக்கில் நலிந்தவரையும், எளியவரையும், பெண்கள், குழந்தைகளையும் தம்மை நோக்கி இழுத்துவரும் வல்லமையையும் பெறுகின்றன. ஏனெனில் ஏற்கெனவே அதிகாரத்தை அனுபவித்தவர்கள், எந்த உடல்உழைப்பிலும் ஈடுபடாது இன்னும் இன்னும் அதிகமாய் அதிகாரத்தைச் சுகிக்க மேற்சொன்ன தத்துவங்கள் உதவுகின்றன. உண்மைகளைக் கொள்கைகளாக்க இயலாதவர்கள்தாம் இத்தத்துவங்களிடம் சரணடைந்துவிடுகின்றனர். ஆகவே, இன்று மற்ற நாடுகளுக்கு எதிராகத் தனது ஆண்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது, 'அணுசக்தி' எனும் செயல்திட்டம் வழியாக.


காலனியாதிக்கத்தைப்போன்றதே, அமெரிக்காவுடனான இந்த அணுசக்தி ஒப்பந்த உறவும். இயற்கை வளங்களைச் சுரண்ட, மக்களைக் கொத்தடிமைகளாக்க, (இன்று வரை நீள்கிறது அடிமைகளின் வரலாறு!) வெள்ளைமனிதர்களின் வரலாறுகள் பொறிக்கப்பட ... என விளங்க சில நூற்றாண்டுகளை நமது முன்னோர்கள் இரத்தத்தாலும் வியர்வையாலும் மொழியாக்க இயலாத வரலாறுகளுடன் வாழ்ந்து தீர்த்தனர். வல்லரசு என்பது தன் இறையாண்மையை, அடகுவைத்துப் பெறவேண்டியது என்பதையே பிரதமர் மன்மோகன்சிங்கின் வாசகங்கள் மொழிபெயர்க்கின்றன. ஆக, இன்னொரு அடிமைத்துவக் காலகட்டத்திற்குள் நாம் எல்லோரும் நுழைய நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்பதற்கான தருணமாகவே இதை உணரமுடிகிறது.


அணுசக்தி ஒப்பந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருப்பவர்கள் அணுசக்தி குறித்துக் கொண்டிருக்கும் அறிவுச் சேகரத்தினும் அவ்வொப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் ஆய்ந்து சேமித்திருக்கும் ஞானம் அதிகம். டாக்டர் ஹோமி பாபா அன்றிலிருந்து சொல்லிவரும் அதைக் காதுகளுக்குப் பூச்சூட்டும் வாசகமான, "அணுசக்தித்துறை என்பது நமது மின்சாரத் தேவையை நிறைவேற்றிக்கொள்ளவே உருவாக்கப்பட்டது,'' என்பதை மீண்டும்மீண்டும் அவர் வழியிலேயே அரசியல், அதிகாரஆதாயம் தேடுபவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், இன்று நடுநிலை வகுப்பில் படிக்கும் ஒரு பிள்ளைக்குக்கூடத் தெரியும், 'அணுஉலைகளால் வெறுமனே மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்பது மட்டுமல்லாமல்; அணுகுண்டுகளும் தயாரிக்கலாம்' என்பது. வெறும் மின்சாரம் தயாரிக்க அணுஉலைகள் எதற்கு?


மேலும் ஏற்கெனவே 'செர்னோபில்'லில் உருவாக்கப்பட்ட அணுஉலைகளில் சிலவற்றைத் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக மூடவேண்டியதாகியுள்ளது. பழுதாகி முற்றிலும் ஓய்ந்துபோன உலையும் உண்டு. அணுஉலை சார்ந்த அவர்களின் தொழில்நுட்பஅறிவே பூரணமாய் இல்லாத பட்சத்தில், ஹோமி பாபா காலத்திலிருந்து நமது மின்சாரத் தேவையை, அணுமின் உலைகளால் பூர்த்தி செய்யமுடியும் என்ற ஓர் உத்தரவாதத்தைத்கூட காப்பாற்ற முடியவில்லை, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும். இந்தியர்களின் அணுசக்தித்துறைத் தொழில்நுட்பஅறிவு அத்தகையதாக இருக்கிறது! காலனியாதிக்கத்தால் பாரம்பரிய அறிவுத்தொகைமையை இழந்ததுபோல இன்று அமெரிக்கஏகாதிபத்தியத்தால் நமது பகுத்தறிவுச்சிந்தனையையும் தர்க்கஅறிவையும் ஒட்டுமொத்தமாக இழக்கத் தயாராகிறோம். எப்போதுமே இந்திய அணுசக்தித் துறை மிகப்பெரிய சத்தியப்பிரமாணங்களை எடுத்துக்கொண்டு மிகக் குறைந்த அளவிலான செயல்பாட்டையே காட்டுகிறது.



அப்படியே அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதென்று கொண்டாலும் 1962ன் அணுசக்திச் சட்டத்தின்படி, சில குறிப்பிட்ட நோக்கங்களுடையதாக இருக்க வேண்டும். இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புணர்வை ஊக்கப்படுத்துவதுடன் நாட்டின் வளர்ச்சிக்காக அதன் இயற்கைவளங்களையும் திறன்களையும் பாதுகாக்க வேண்டும். அணுசக்தியைப் பயன்படுத்துவதன் மற்றும் கட்டுப்படுத்துவதன் மூலம் மக்கள்நலம் மற்றும் அமைதி பேணப்படவேண்டும். ஆனால் உண்மையில் இந்தச் சட்டம் எல்லாவகையிலும் தனது அணுகுமுறைகளால் தோற்றுப்போய் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில்தாம் இறங்கியுள்ளது. இந்தியச் சமூகத்தின் மெலிந்துபோயிருக்கும் சனநாயக உணர்வைக்கூடக் கொன்றுவிட்டு, அணுசக்தி ஒப்பந்த விமர்சகர்களை அச்சுறுத்தும் இயந்திரமாகிவிட்டது. பொதுமக்களின் நன்மை, இந்தியா எனும் வல்லரசு, நாட்டு முன்னேற்றம் எனப் பொதுமக்களின் பாதுகாப்புணர்வைக் காயடித்து அதன் ஆதாயங்களை அறுவடை செய்யக்கூடியவர்களாய் அரசியல்வாதிகள் மாறிவிட்டனர்.


இந்தியா கடந்த நூற்றாண்டுகளில் ஏற்பட்ட போர்களாலும் பஞ்சங்களாலும் காலனியாதிக்கத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் தனது நிறைய வளங்களைப் பறிகொடுத்துள்ளது. இதனால் ஏற்பட்ட நசிவுகளாலும் பொருளாதாரஏற்றத்தாழ்வினாலும் இன்னும் நிறைய துறைகளில் தன்னிறைவு அடையாத நாடாகவே உள்ளது. மத்தியஅரசு அறிவியல்ஆராய்ச்சிக்காக ஒதுக்கும் நிதியில் 11 _ 12 % அணுசக்தித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவஆராய்ச்சிக்கழகம் 1 . 1 % மட்டுமே அந்நிதியில் எடுத்துக்கொள்கிறது. மருத்துவம் மற்றும் சுகாதாரநிலையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் கிராமங்களுக்கு எந்தவிதமான மருத்துவநலனும் போய்ச்சேரவில்லை. குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் மருத்துவ நலனை நுகர்வதற்கு ஏற்ற விழிப்புணர்வையும், அவர்கள் அதைத் தேடியடையும் வசதிவாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுக்க எந்தச் செயல்திட்டமும் இல்லை. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அரசின் அணுகுமுறையில் குடிகொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வினாலேயே ஏற்படுகின்றன என்பது நம்நாட்டு மருத்துவத்துறைக்குச் சாலப்பொருந்தும். மேலும் நில, நீர் வள ஆதாரங்களைப் பேணும், முறையாகப் பயன்படுத்தும் எந்த அடிப்படை ஆர்வமும் இல்லாத ஓர் அரசு, மனிதவள ஆதாரமான துறைகளில் தன்னிறைவு அடையாத ஓர் அரசு அணுசக்தித்துறைக்கு இவ்வளவு செலவிடுவதும், அதன் வாதங்களுக்கு ஆதரவாய் இவ்வளவு மெனக்கெடுவதும் அரசின் இறையாண்மையின் மீது சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது.



இவை எல்லாவற்றினும் இந்தியா அமெரிக்காவிடம் அடிமைஉறவு கொள்ளும் இடம் வெளிப்படையானது. டிசம்பரின் (2006) அமெரிக்கா நாட்டின் மக்களவையில் இயற்றப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கான சட்டத்தின்படி இந்தியா அமெரிக்காவிடமிருந்து அணுஉலைகளையும் அணுஎரிபொருளையும் விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் ஆனால் மொத்தமாக வாங்கிச் சேமித்துவைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், கனிமவளம், எண்ணெய்வளம் மிக்க நாடுகளைப்போன்று அணுசக்திவளம் மிக்கதாக இந்தியா மாறிவிடக் கூடாது. ஒவ்வொரு முறை எரிபொருள் வாங்கியபின்னும் அது முழுமையும் சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதா எனக் கங்காணி வேலை செய்ய அமெரிக்க அணுசக்திஅதிகாரிகளை அணுஉலைகளுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். அடுத்து, எரிபொருளில் இருந்து உண்டாகும் உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுத்திகரிப்பு செய்யக்கூடாது; மறுசுத்திகரிப்பினால் கிடைக்கும் புளூட்டோனியத்தை இந்தியா தனது ஃபாஸ்ட் பிரீடர் அணுஉலைகளில் உபயோகிக்கக்கூடாது. ஆக, இந்திய அறிவியல்விஞ்ஞானிகள் ஒருபொழுதும் அணுசக்தித்துறை சார்ந்த தமது அறிவையோ, ஆய்வையோ விருத்திசெய்துகொள்ள முடியாது. இவ்வாறு இன்னும் தொடர்கிறது அமெரிக்காவின் அடிமைச்சாசனம். இன்னொரு முறை, இந்திய அரசு அணுஆயுதங்களைப் பரிசோதனை செய்தாலோ, அணுகுண்டு வெடிப்புப்பரிசோதனையை நிகழ்த்தினாலோ, அமெரிக்கஅரசு எந்தவிதப் பேச்சுவார்த்தையுமின்றி தனது ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிடும்.



1986 ஏப்ரல் 26ம்தேதி நிகழ்ந்த செர்னோபில் விபத்து, பணியாளர்கள் அணுஉலையின் பாதுகாப்பு அமைப்புகளின் மீதான பரிசோதனையை நிகழ்த்தியபோதுதான் ஏற்பட்டது. கணினி வழி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளப்படும் பாதுகாப்புஅமைப்புகள் அதன் கட்டுப்பாட்டை இழந்து குளிரூட்டியைப்பெறாமல் அபரிமிதமான வெப்பத்தை உருவாக்கியது. இதனால் ஏற்பட்ட விபத்தின்போது வெளியான கதிரியக்கத்தின் விளைவுகளுக்கும், நிவாரணங்களுக்கும் அந்நாடு அதிகச் செலவு செய்யவேண்டியிருக்கிறது. ஐரோப்பா முழுக்கவும் குழந்தைப்பருவ நோய்களுக்குக் கதிரியக்கக் கலப்படமிக்க பால்தான் காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. மனிதசெல்கள் தமது இயல்பான கட்டமைப்பும் செயல்பாடும் இழந்து புற்றுநோய் செல்களாகின்றன. வெளியில் பரவி சுவாசிக்கப்பட்ட கதிரியக்கஅளவினும் உணவுப்பொருள் வழியாக உட்கொள்ளப்படும் கதிரியக்க அளவு அதிகமாக உள்ளது. இத்தகைய தருணங்களில் அறிவியலும் அரசியலும் ஒன்றுக்கொன்று முரணான நியாயங்களுடன்தாம் கைகோர்த்துக்கொள்கின்றன. செர்னோபில் விபத்து, 3 இலட்சம் மக்களை இடம்பெயரச்செய்தது. பிறப்புக் குறைபாடுகள், புற்றுநோய்அதிகரிப்பு என அன்றாடம் மக்கள், அறிவியலின் தீயவிளைவிலிருந்து என்றென்றும் தப்பிக்க இயலாதவாறு பாதிக்கப்பட்டிருக்கையில் அதையெல்லாம் பொருட்படுத்தாது அரசியல்வாதிகள் தமது சுயஆதாயங்களுக்காக, அதிகாரஅறுவடைகளுக்காக வேறுதுறைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்; தமது அரசியல்கொள்கைகளை முழங்கிய வண்ணமே இருக்கின்றனர். செர்னோபில் விபத்துக்கெதிரான படைப்பிலக்கிய உலகமே அங்கு உருவாகியிருக்கிறது. மனிதன் நிகழ்த்திய கொடுங்கனவை வேறெப்படி வெல்வது?



மனிதப் பரிணாமவளர்ச்சியின் பாதையைப் பின்னோக்கிப் பார்க்கையில், மனிதன் தனது பதற்றங்களையெல்லாம் தணித்து சூழலோடு இயைந்த, ஒத்திசைவான ஒரு வாழ்வியலைக் கண்டடையும்போதெல்லாம் தனது பரிணாம ஏணியின் அடுத்த படியில் ஏறியிருக்கிறான். அபரிமிதமான பகுத்தறிவையும் உழைப்பையும் கோடானுகோடி மனிதர்கள் அதற்காகக் கொடுத்திருக்கின்றனர். பௌத்தம், இஸ்லாம், கிறித்துவம் என எல்லாத் தத்துவங்களும் கூட மனிதனின் மனப்பதற்றத்தைக் குறைக்கும் எத்தனத்தையே வாசகங்களாக்குகின்றன. யுரேனியம் எனும் தாதுப்பொருள் பதற்றம் மிக்கது. அதன் கதிரியக்கத்தன்மை நிலைகொள்ளாத் தன்மையை அதற்குக் கொடுக்கிறது. புளூட்டோனியமோ அதனினும் பதற்றம் மிக்கது; கதிரியக்க வெளிப்பாடு உடையது. இத்தகைய தாதுப்பொருட்களோடு ஊடாட மனிதச்சமூகம் தன்னை அனுமதிக்கும் போதும், அத்தாதுப்பொருட்கள் அடிப்படையிலான ஒரு பயன்பாடு தன்னை ஆக்கிரமிக்க அனுமதிக்கும்போதும் மரபணுப்பாரம்பரியம் சிதைவுற்று மனிதன் பரிணாமவளர்ச்சியின் எதிர்த்திசையில் நடக்கத்தொடங்குகிறான். கொடுங்கனவை, பகல்கனவாகக் கண்டுகொண்டிருக்கிறான்.

-குட்டி ரேவதி
நன்றி: குமுதம் தீராநதி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

//அணுஆற்றலின் மகிமைகள் அனைத்தையும் அமெரிக்காவின் பேராண்மைச் செயல்பாடுகள் வழியாகவும், காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் போன்ற அச்சுறுத்தல்களை நாம் விரட்டியடிக்க வேண்டும் என மொழியும் 'கன்னிஉரைகள்' வழியாகவும் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியது அன்று.//

கவிஞர் குட்டி ரேவதி யாருடைய கன்னி உரைக்கு பதில் அளிக்கிறார் என்பது புரிகிறது.

முக்கியமான விவகாரம் குறித்து விவாதம் நடத்தினாலும், சற்று எளிய மொழிநடை இருந்திருந்தால் இன்னும் எளிதாக புரியும்.

எனினும் கவிஞர்கள் எல்லாம் இந்த அணுசக்தி வில்லங்கம் குறித்து விவாதிக்கிறார்கள் என்பதே ஆறுதல்தான்.

கருத்துரையிடுக