இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் மதிமுக தலைமை அலுவலகமாக தாயகத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கிய சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது.
முதலில் தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. ஆனால் இதை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ம.தி.மு.க தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரத இடத்தை மாற்றி இருந்து வருகின்றனர். பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் 21-04-09 மாலை 6.30 மணிக்கு திமுக எம்.பி. கனிமொழி உண்ணாவிரதம் இருக்கும் பெண்களை சந்திக்க தாயகம் வந்தார். தரையில் சோர்வுடன் படுத்திருந்த பெண்களுக்கு அருகே தரையில் அமர்ந்து உடல்நலன் குறித்து விசாரித்தார்.
அப்போது உண்ணாவிரதம் இருந்த பெண்களில் ஒருவர் இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு முன் எங்கள் 20 பேரின் உயிர் ஒரு பொருட்டு அல்ல என் கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையடுத்து கனிமொழியின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது. இதையடுத்து கனிமொழி அவர்களிடம் கூறுகையில், போர் நிறுத்தம் ஏற்பட முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உங்கள் கோரிக்கையை சோனியா காந்தி கவனத்திற்கு கொண்டுசெல்வேன்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை யாரும் நியாயப்படுத்த வில்லை. உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. நீங்கள் நலமாக இருந்தால்தானே இலங்கை தமிழர்களுக்காக போராட முடியும். எனவே, தயவு செய்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்து அங்கிருந்து கிளம்பினார்.
இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்த பெண்களில் 5 பேரின் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் போலீஸார் திடீரெனக் கைது செய்தனர். 22-04-09 அன்று அதிகாலை ஐந்தே முக்கால் மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களை வேனில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு தற்போது கைது செய்யப்பட்ட ஜெயமணி, சுமதி, சித்ரா தேவி, தங்கமணி, லோகநாயகி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், மிச்சமுள்ள 15 பெண்களும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களது போராட்டம் இன்று 13வது நாளை எட்டியது. இந்தப் பெண்கள் மிகவும் சோர்வுடன் காணப்படுகின்றனர். எழக் கூட முடியாமல் படுத்தபடியே உள்ளனர். இவர்களது உடல் நிலையை அவ்வப்போது டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பேராசிரியை சரஸ்வதி, மற்றும் பாண்டிமா தேவி, பழனியம்மாள், லிட்வின் மேரி, பிலோமினா, பொன்னுத்தாய் ஆகியோரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரியவந்ததால் ஆம்புலன்சும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
உயிரே போனாலும் பரவாயில்லை. போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனால் பதட்டத்துடன் உண்ணாவிரதம் நீடிக்கிறது.
இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெண்களே முன் நின்று நடத்தும் இந்த உணர்வுப் போராட்டத்தின் வலியை, பெண்ணாகிய நானும் உணர்வேன். என் அன்புச் சகோதரர் மணி உள்பட ஈழத்தமிழர்களுக்காக தங்கள் இன்னுயிரை 14 தமிழர்கள் மாய்த்துக் கொண்டும், கருணாநிதி போர் நிறுத்தத்திற்கு தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இலங்கைத் தமிழர்களுக்காக உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருப்பதை தவிர்த்து, பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இதுதான் இப்போதைய முக்கியத் தேவை.
எனவே, உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் அனைவரும் தங்களுடைய உண்ணாவிரத அறப்போராட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
போராட்டத்தை கைவிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரித்துவிட்ட இவர்கள் அவ்வப்போது தண்ணீர் மட்டுமே குடித்து வருகின்றனர்.
அவர்களை பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் சந்தித்து ஆறுதலும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
Courtesy: thatstamil
1 கருத்து:
A good effort is taken by women.
But except some political leaders and actors, no common man is bothered to visit the fasting women.
And except a few journalists, no eminent journalists are visiting the ladies.
Let us compare the solidarity shown by the common people to the fasting warriors in other countries for the same issue.
Thamiz naattu thamizarkalukku soodo soraniyo illai.
கருத்துரையிடுக