எனது தந்தை ராஜீவ் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற தீய நோக்கம் நளினிக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்று பிரியங்கா தெரிவித்தார்.
தன்னைச் சூழ்ந்திருந்த சிக்கல்களால் கொலை சதிக்கு நளினி உடந்தையாகிவிட்டதாகவே தெரிகிறது என்றும் அவர் கூறினார்.
பழிவாங்க வேண்டும்; தீங்கு செய்ய வேண்டும் என்ற நோக்கம் நளினிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. மேலும் பெரிய கொடூரத்தைச் செய்ய துணை போகிறோம் என்பதையும் அவர் உணர்ந்திருந்ததாகத் தெரியவில்லை என்றார் பிரியங்கா.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினியை கடந்த ஆண்டு வேலூர் சிறையில் பிரியங்கா சந்தித்தார். இந்தச் சந்திப்பு அப்போது பரபரப்பாக பேசப்பட்டாலும் சந்திப்பின் நோக்கம் பற்றியோ நளினியிடம் பிரியங்கா பேசிய விவரங்களோ முழுமையாக வெளிவரவில்லை.
இந்த நிலையில், தற்போது தேர்தல் பிரசாரத்தையொட்டி செய்தியாளர்களை அடிக்கடி சந்திக்கும் பிரியங்கா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நளினியைச் சந்தித்தது பற்றி குறிப்பிட்டார்.
எனது தந்தை ராஜீவ் காந்தியை கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே, நளினி இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம். நளினியைச் சிறையில் சந்திக்கும்போது அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தந்தையை இழந்து நான் துயரப்படுவதைப் போலவே அவரும் ஒரு வகையில் துயரத்தில் சிக்கியுள்ளார் என்பது அவரைச் சந்தித்தபோது தெரிந்தது என்றார் பிரியங்கா.
ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது, அது, சோனியா காந்தியின் கருணையால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் நளினியின் கணவர் ஸ்ரீகரன் உள்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Courtesy: Dinamani, 16-04-09
1 கருத்து:
அதெல்லாம் சரிதான்.
ஒரு உயிருக்காக இலங்கையில் இத்தனை உயிர் போகுதே அதற்கு என்ன சொல்றீங்க? சின்ன மேடம்!
கருத்துரையிடுக