புதன், ஏப்ரல் 01, 2009

ஞாநியின் ‘தர்க்க வாதங்கள்’ - ஒரு விளக்கம்

'ராஜீவ் காந்தி கொலை செய்யப்படவில்லை; அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை’ என்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பேசியதை ‘கீற்று’ இணையதளம் வெளியிட்டிருந்தது.

‘குமுதம்’ பத்திரிகையில் வாரம்தோறும் ‘ஓ’ பக்கங்கள் எழுதி வரும் ஞாநி, இதைத் தேடி எடுத்து வெளியிட்டு, “மரண தண்டனையை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக் கொள்கிறதா? ராஜீவ்காந்தியுடன் இறந்த 20 அப்பாவி போலீசாருக்கும் மரணதண்டனை தரப்பட வேண்டுமா? அப்படியானால் ராஜீவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனையை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் கையெழுத்து இயக்கம் நடத்தலாமா?” என்ற கேள்விகளை ‘தர்க்க’ ரீதியாக எழுப்பியிருந்தார் (‘குமுதம்’ 4.3.2009).

கொளத்தூர் மணியின் அந்த உரையை பல லட்சம் மக்கள் படிக்கும் ‘குமுதம்’ இதழில் வெளிப்படுத்தியதற்காக அவருக்கு முதலில் நன்றி கூறுகிறோம். ‘குமுதம்’ இதழில் ஞாநி அந்த உரையை வெளியிட்டதற்குப் பிறகு தமிழக அரசின் காவல்துறை, முதல்வர் ஆணைக்கேற்ப கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது. கொளத்தூர் மணி இப்போது மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுவிட்டார்.

எல்லோரையும் ‘தர்க்க’ ரீதியாக மட்டுமே பார்க்கக் கூடியவர் ஞாநி. ஆனால், பார்ப்பன பாரதிக்கு மட்டும் விதிவிலக்கு தந்து விடுவார். எனவே கொளத்தூர் மணியின் இந்த பேச்சுக்கு காரணமாக இருந்த உணர்வுகளை, நியாயங்களை ஞாநியால் பார்க்க முடியாது. பாதிக்கப்பட்ட சமூகத்துக்கும், வர்க்கத்துக்கும் தானே அந்த ‘வலி’யும் உணர்வும் புரியும்.

கொளத்தூர் மணி இப்படி ராஜீவ் காந்தியைப் பற்றி விமர்சிக்க வேண்டிய காரணத்தை அவரே ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ஏட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி : ராஜீவ்காந்தி கொலையை நீங்கள் நியாயப்படுத்தி வருவதாக உங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறதே?
பதில் : அப்படி நாங்கள் ஆரம்பத்திலிருந்தே பேசியிருக்க வேண்டும். அப்படி பேசியிருந்தால், ஓர் இனமே அழிந்து கொண்டிருப்பதைவிட ஒரு மனிதர் இறந்ததுதான் பெரிதென்று அவர்கள் பேசாமல், அமைதியாக இருந்திருப் பார்கள். அப்படி நாங்கள் பேசாமல் விட்டதன் விளைவாகத்தான் அளவுக்கு அதிகமாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு, தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சும்மா அதையே இன்னும் பேசிக் கொண்டிருந்தால் எப்படி?என்று கொளத்தூர் மணி விளக்கியுள்ளார்.

இதே கருத்து, “ஞாநி ‘குமுத’த்தில் எடுத்துக்காட்டியுள்ள கொளத்தூர் மணி பேச்சிலும் இடம் பெற்றுள்ளது” என்றுதான் நாம் பேசியிருக்க வேண்டும் என்று கொளத்தூர் மணி, தனது உரையோடு சேர்த்து குறிப்பிட்டுள்ளார். 18 வருடங்களாக அந்த ஒரு சாவை மட்டுமே முன் வைத்து ஈழத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட வெறுப்பும், பகையும் தொடர்ந்து காங்கிரசாரால் வெளிப்படுத்தப்பட்டு வருவதற்கான எதிர் வினையே கொளத்தூர் மணியின் உரை.

ராஜீவ்காந்தி மரணத்தில் விசாரணை நடத்திய புலனாய்வுத் துறைக்கு உதவியவர் ஞாநி. எனவே ஞாநிக்கு இது தொடர்பான தார்மீகக் கடமைகள் உண்டு. ராஜீவ் கொலை விசாரணை நடந்து கொண்டிருந்த போது, சிவராஜன் என்பவர் திருவள்ளூரில் நடந்த வி.பி.சிங் கூட்டத்தில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருப்பதை ஞாநி ஒலிநாடா ஒன்றின் வழியாக கண்டுபிடித்தார். உடனே ‘இந்து’ பத்திரிகை ஆசிரியர் ‘ராம்’ உடன் தொடர்பு கொண்டு, அவரையும் அழைத்துப் போய் புலனாய்வுத் துறை இயக்குனர் கார்த்திகேயனிடம் அந்த ஒளி நாடாவை அளித்தார். ‘ஒரு இந்தியக் குடிமகன் என்ற கடமையுணர்வோடு இதை நான் செய்தேன்’ என்ற கருத்தையும் வெளியிட்டிருந்தார். எனவே அந்தக் கடமை உணர்வின் தொடர்ச்சியாக - ஞாநி இப்போதும் எழுதியிருக்கலாம். ஆனாலும் கொளத்தூர் மணி பேச்சின் நோக்கத்தை அதன் ஆதங்கத்தை தெளிவுபடுத்தியப் பிறகும், அதைப் புரிந்து கொள்ள பிடிவாதமாக ஞாநி மறுக்கிறார். அதற்கான காரணத்தை அவர்தான் விளக்க வேண்டும்!

உடனடியாக இந்த பதிலை நாம் எழுதாமைக்கும் காரணம் உண்டு. கொளத்தூர் மணியின் ஒரு மேடை பேச்சுக்காகவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் - ஞாநி ‘குமுத’த்தில் அதை வெளிப்படுத்தியது இந்தக் கைதுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஒரு கருத்தை பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை - கருணாநிதி பயன்படுத்தலாமா? என்ற “தர்க்கவாதத்தை” ஞாநி ‘குமுத’த்தில் எழுப்புவாரா என்று எதிர்பார்த்திருந்தோம். அப்படி இதுவரை - தனது ‘ஓ’ பக்கங்களில் அவர் எழுதவில்லை; அதற்காக ‘குட்டு’ வைக்கவில்லை; ஞாநியின் கணிப்பொறி தட்டச்சுப் பலகையில் அவரது கரங்கள் இந்த ‘தர்க்க வாதங்களை’ ஏன் தட்டாமல் போய்விட்டன என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது. கொளத்தூர் மணியைக் கைது செய்ததற்காக கலைஞர் கருணாநிதிக்கு நான் “பூச்செண்டு” தரவில்லையே என்றுகூட ஞாநி - இதற்கும்கூட தர்க்க வாதம் புரியலாம்.

ஆனால், வார்த்தைகள் - வாக்கியங்களில் - சொற்களை மட்டும் தேடிக் கொண்டிருக்காமல் உணர்வுகளைத் தேடுவது முக்கியம். ஆனால், அதைத் தேட வேண்டிய கவலையோ, உணர்வோ எனக்கில்லை என்பவரிடம் நாம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்? நிச்சயமாக ‘ஓ’ போட முடியாது.

-விடுதலை இராசேந்திரன்
நன்றி: புரட்சி பெரியார் முழ்க்கம், மார்ச் 2009, www.keetru.com

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஞாநியிடமிருந்து நல்ல கருத்துகளை எதிர்பார்க்க முடியாது. அவருடைய அனைத்து கருத்துகளும் பார்ப்பன முலாம் பூசியவையே. துக்ளக் சோவின் மற்றொரு பரிமாணம்தான் ஞாநி!

Unknown சொன்னது…

ஞானி என்ன சொன்னார் அஞ்ஞானி என்ன சொன்னார் என்று பார்ப்பதற்கு நேரமில்லை. ஆனால் எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் பேச்சால் தேச பாதுகாப்பிற்கு ஊறு விளைவிப்பதாக கூறி தேசிய பாதுகாப்ப்பு சட்டம் பயன்படுத்தப் படுவது வருந்தகக்கது. ஒருவர் மேல் சட்டம் பாய்வதிலும் வேண்டியவர்/ வேண்டாதவர் பார்ப்பதில் எந்த அரசும் விதிவலக்கல்ல.

கருத்துரையிடுக