திங்கள், ஏப்ரல் 13, 2009

ஸ்பெக்ட்ரம் - லட்சம் கோடி மெகா ஊழல்

ஒரு ரூபாய்... நூறு ரூபாய்... பத்தாயிரம்... லட்சம் ஊழல், பத்து லட்சம் ஊழல், ஒரு கோடி ஊழல், நூறு கோடி ஊழல், ஆயிரம் கோடி ஊழல் கேள்விப்பட்டிருக்கிறோம்!

லட்சம் கோடி ஊழல்... நம்ப முடிகிறதா? நடக்க சாத்தியம் உள்ளதா... 1947 முதல் 2007 வரை நாட்டில் நடந்த ஒட்டு மொத்த ஊழல்களைக் கூட்டினாலும், பெருக்கினாலும் வராத தொகை சில நூறு கோடி போபர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கியது. அரசையே மாற்றியது.

ஆனால் ஒரு லட்சம் கோடி ஊழல்! தேசத்தின் வருவாய்க்கு மிகப் பெரிய இழப்பு. வாங்கிய கடனை செலுத்த முடியாமல் நேர்மையான விவசாயிகள் ஒரு லட்சம் பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். பள்ளிக்கு செல்லும் வயதில் குழந்தைகள் செங்கல் சூளைகளில் இருக்கிறார்கள். வேலை இழந்த தொழிலாளிகள் தங்கள் வாழ்விற்காக சிறுநீரகத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். வைரம் மிக உயர்ந்த ஆபரணம். ஆனால் 71 பட்டை தீட்டும் தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்பது சமீபத்திய செய்தி. வைரத்திற்கு மதிப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் உயிர்க்கு மதிப்பு இல்லை.

ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக ஆனவர்களை பார்த்திருக்கிறோம். அதே தலைமுறையில் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனவர்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரே வருடத்திற்குள், எந்த வித வேலையும் செய்யாமல் 5000 கோடி சம்பாதிப்பது எப்படி? அதற்கும் வழி உள்ளது இந்த நாட்டில். தேவை தொலைதொடர்பு அமைச்சரின் கருணை மட்டுமே!

சுவான் டெலிகாம், யூனிடெக் டெலிகாம் இந்தப் பெயர்களை நீங்கள் யாரும் கேட்டிருக்கிறீர்களா! கேள்விப்பட்டு இருக்கிறீர்களா! ஒரு டவர் கூட அமைக்காமல் ஓர் ஆபிஸ் கூட இல்லாமல் ஒரு வாடிக்கையாளர் கூட இல்லாமல் ஒரு செல்போன் கம்பெனி 5000 கோடி சம்பாதித்திருக்கிறதே! சுவான், யூனிடெக் இவை எல்லாம் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். ஒரு நகரையே கட்டி முடித்தால் கூட கிடைக்காத லாபம்! ஒரே ஒரு உரிமத்தில் கிடைத்தது எப்படி? செல்போன் சேவை மட்டுமா ஹை டெக். அதில் நடைபெற்றிருக்கும் ஊழல்களும் ஹைடெக்தான்.

பிரதமர், நிதி அமைச்சர், மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆலோசனை, எல்லாவற்றையும் மீறி ஓர் அமைச்சர் செயல்பட முடியுமா? மத்திய அமைச்சரவைக்கு பதில் சொல்ல வேண்டாமா? ஆனால் அமைச்சர் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு, தனக்கு மட்டுமே அதிகாரம் என்று செயல்பட்டுள்ளார். தட்டிக் கேட்க பிரதம அமைச்சருக்கு தைரியம் இல்லை. மானியங்கள் இருக்கக் கூடாது என்று கூப்பாடு போடும் நிதி அமைச்சருக்கும் துணிவு இல்லை. கூட்டணி அவ்வளவு பலமாக உள்ளது.

இந்த ஊழலை யார்தான் தட்டிக்கேட்பது? இந்த ஊழலைப்பற்றி யாராவது தட்டிக் கேட்க வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் நோக்கம்.

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
(அறிவாலயம் பின்புறம்)
தேனாம்பேட்டை, சென்னை -600 018.

தொலைபேசி: 044-2433 2924

விலை ரூ. 5

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஊழலை விட அரசியல் காரணங்களுக்காக அந்த செய்தியை பிரசுரிக்க மறுக்கும் சன் தொலைகாட்சி மற்றும் தினகரன் பத்திரிகைகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

""பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, (அறிவாலயம் பின்புறம்)""

Super Match

hariharan சொன்னது…

மக்கள் மறந்துவிடப்போகிறார்கள்..

உண்மை தானா..அப்படியானால் சுவிஸ் வங்கியில் அந்த மந்திரிக்கு கணக்கு துவங்கப்பட்டுவிட்டது.

எதிர்கட்சிகள் குறிப்பாக சிபிஎம் இதை பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறதா என தெரியவில்லை.

கருத்துரையிடுக