சனி, டிசம்பர் 06, 2008

தகவல் உரிமைச் சட்டத்தில் மாற்றம் தேவை!

தகவல் உரிமைச் சட்டம் 2005 அமலுக்கு வந்து 3 ஆண்டுகள் முடிவுறும் நிலையில் இச்சட்டத்தின் கீழான பயன்பாடுகள் பிரமிக்கதக்க வகையில் உள்ளன. அனைத்துப் பகுதி மக்களும் இச்சட்டத்தின் பயனை உணர்ந்து அதன் கீழ் நிவாரணம் காண விழைந்துள்ளது இச்சட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். மாணவர்கள் தங்களுடைய கல்வி, தேர்வுமுறை குறித்தும், விவசாயிகள் வீட்டுமனைப் பட்டா, இலவச மின்சாரம், நீர்ப்பாசன முறை, புறம்போக்கு இடம், நில உரிமைகள் போன்ற விவரங்களையும், பெண்கள் குடிநீர்ப் பிரச்னைகள், ரேஷன் கார்டு போன்ற விவரங்களையும், தொழிலாளர்களும், மத்திய, மாநில அரசு ஊழியர்களும் தங்களுடைய பணி நிலைமை குறித்தும் உரிய அதிகாரியிடம் விண்ணப்பித்து விவரங்களைப் பெற்று வருகிறார்கள். அதிகாரிகள் பல உண்மைகளை மிகவும் கஷ்டப்பட்டு பதில் சொல்லக்கூடிய நிலையில் உள்ளனர். அவர்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், செய்யத் தவறிய கடமைகளைச் செய்ய வைக்கவும் நேர்மையான முறையில் பணியாற்றவும் இச்சட்டம் பெரிதும் உதவுகிறது.

அதிகாரிகள் கோப்புகளில் எழுதும் ரகசியக் குறிப்புகள் கூட தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட வேண்டிய விஷயமாகும். ரகசியக் கோப்பு குறிப்புகளை அளிக்க வகைசெய்யும் சட்டப்பிரிவு 2(ஐ)னை அகற்ற அதிகாரிகள் பெருமுயற்சி எடுத்தனர். இதனை எதிர்த்து நாடு தழுவிய கிளர்ச்சிகளில் அனைத்துப் பகுதி மக்களும் ஈடுபட்டு அதனைத் தடுத்து நிறுத்தினர். அதிகார வர்க்கத்தின் இந்த சட்ட திருத்த முயற்சியை கைவிட வைத்தது ஜனநாயகத்திற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

தகவல் உரிமைச் சட்டம் அனைத்து நிர்வாக, நீதிமன்ற அமைப்புகளுக்கும் பொருந்தும். பிரிவு 22ன் படி இதர சட்டங்களை விட இது மேலோங்கி நிற்கும் தன்மை வாய்ந்த, வல்லமை வாய்ந்த சட்டமாகும். இந்த சட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பொது தகவல் அதிகாரி மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களை நியமனம் செய்து விண்ணப்பக் கட்டணத்தையும் நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ""தகவல் உரிமை சட்டத்திலிருந்து நீதிமன்றங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்'' என பல சந்தர்ப்பங்களில் கூறி வருவது வியப்பை அளிக்கிறது.

தகவல் உரிமைச் சட்டம் உருவாவதற்கு அடிப்படையாக இருந்ததே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான். 1975ல் உத்தரப்பிரதேச அரசுக்கும் ராஜ் நாராயணனுக்கும் இடையில் நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கீழே கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.

""பொது மக்களுக்காக பொது ஊழியர்கள் வெளிப்படையாகச் செய்யும் அனைத்துப் பணிகளையும் மக்கள் அறிந்து கொள்ள உரிமை உண்டு.''
உச்ச நீதிமன்றம் உள்பட நீதிமன்றங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றம் நினைத்திருக்குமேயானால் அத்தகைய விதிவிலக்கு அளித்து தகவல் உரிமைச் சட்டம் இயற்றி இருப்பார்கள். ஆனால், அவ்வாறு சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.

நாடாளுமன்றம், சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை விமர்சனம் செய்து அவை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுள்ளதா என கூற வேண்டிய உச்ச நீதிமன்றம் தனது வரம்பை மீறி "விதிவிலக்கு கேட்பது' எந்த வகையிலும் சரி அல்ல. இந்த விதிவிலக்கு நிராகரிக்கப்பட வேண்டியது ஒன்றாகும்.
தகவல் உரிமைச்சட்டம் 2005ஐ இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் பயன்படுத்தலாம் என சட்டப் பிரிவு 3 கூறுகிறது. அரசு சாரா அமைப்புகள், சங்கங்கள், பதிவு பெற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இச்சட்டத்தின் கீழ் தகவல் கோரமுடியாத நிலை இருந்தது. இச்சட்டத்தை அனைத்துப் பகுதியினரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய தகவல் ஆணையம் ஒரு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அனைத்து ""அமைப்புகள், சங்கங்கள்'' இச்சட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தீர்ப்பளித்துள்ளது வரவேற்கதக்க, முன்னேற்றகரமானதாகும்.

அதேபோல, மாநில துறைகளுக்கு விண்ணப்ப கட்டணம் நீதிமன்ற வில்லையாக ஒட்டினால் போதுமானதாகும் என்பதும் ஆவணங்களை பெறுவதற்கான கூடுதல் கட்டணம் மணியார்டர் மூலம் கட்டினால் போதுமானது என்பதும் வரவேற்கத்தக்க திருத்தங்களாகும். சென்னை உயர் நீதிமன்றம் உள்பட பல பொது நிறுவனங்களில் தகவல் பெற விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 என்று உள்ளது. இந்த கட்டணம் உடனடியாகக் குறைக்கப்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணங்களின் நகல் பெற பக்கம் ஒன்றுக்கு ரூ.2 ஜெராக்ஸ் கட்டணம் என்று உள்ளது. தற்போது ஜெராக்ஸ் பக்கம் ஒன்றுக்கு 50 பைசாவிற்கு எடுக்கப்படும் நிலையில் இந்த கட்டணத்தை பக்கம் ஒன்றுக்கு ரூ. 1 என குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அரசு நிறுவனங்களும் இச்சட்டத்தின் கீழ் வருவதைப்போல மத்திய தகவல் ஆணையமும் ஒரு பொது நிறுவனம் என்ற முறையில் அதன் பணிகள் சம்பந்தமான விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள "பொது தகவல் அலுவலர்' மற்றும் "மேல் முறையீட்டு அலுவலர்கள்' நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இது வரவேற்கத்தக்க அம்சமாகும். இதேபோல தமிழ்நாடு தகவல் ஆணையமும் ஒரு பொது நிறுவனம் என்ற முறையில் அதன் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள "பொது தகவல் அலுவலர்' மற்றும் "மேல் முறையீட்டு அலுவலர்' பதவியிடங்களை அமைக்க வேண்டும். இதற்கான உத்தரவுகளை மாநில அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு நிறுவனங்களுக்குத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பும் பணியை தற்போது தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செய்து வருகிறது. இதேபோல மாநில அரசு நிறுவனங்களுக்கும் விண்ணப்பங்களைப் பெற்று அனுப்ப தாலுகா அளவில் ஒரு பொருத்தமான அலுவலர் அல்லது தபால் துறையினரையே ஏற்பாடு செய்தல் அவசியமான ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம் தகவல் கோரும் நடவடிக்கைக்கு உத்வேகம் கிடைக்கும்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மேல் முறையீடுகள் அல்லது புகார் மனுக்கள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு வருகிறது. 6 மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கைக்கு உள்படாத மனுக்கள் பல ஆயிரங்கள் உள்ளன. தகவல் ஆணைய புள்ளி விவரப்படி 31.12.07 இறுதியில் 41068 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நிலையில் பல ஆயிரம் மனுக்கள் உள்ளன. தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மீது நம்பிக்கையற்ற நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. முன்பு 3 ஆணையர் இருந்த இடத்தில் தற்போது 4 ஆணையர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும் முன்னேற்றம் இல்லை. இதன் செயல்பாடுகளை உயர்நிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து தேவையான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதுமான பணியாளர் நியமனம், தேவையான நிர்வாக கட்டமைப்பு உள்ளிட்டவற்றை உடனடியாகச் செய்தல் வேண்டும்.

மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம் என உணரப்படுகிறது. உடனடியாக தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைத்து அதன் கட்டமைப்பை சீர்செய்ய வேண்டும். மேலே கூறப்பட்ட ஆலோசனைகளை ஏற்று உரிய வழியில் உத்தரவுகள் பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.
-பொ. இசக்கிமுத்து
நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக