வெள்ளி, நவம்பர் 14, 2008

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?

கடந்த அக்டோபர் 6, 2008 தேதியிட்ட நாளிதழ்களில் மிக மிக முக்கியமான - அச்சமூட்டும் தகவலொன்று வெளியாகியிருந்தது. பொருளாதார நெருக்கடி, மின்சாரத் தட்டுப்பாடு, பங்குச்சந்தைப் பிரச்சனைகள், அரசியல் அறிக்கைகள், கேபிள் டிவி குடும்பச் சண்டைகள் என்று வேறு பல முக்கிய நிகழ்வுகளில் மக்களின் கவனம் மூழ்கியிருந்ததால் வழக்கம்போல இந்த முக்கியமான செய்தி உரிய கவனத்தைப் பெறவில்லை.

நாளிதழ்களைத் தவிர வேறு தொலைக்காட்சிச் செய்தியறிக்கைகளில் இந்தத் தகவல் நமக்குத் தெரிந்தவரையில் இடம்பெறக்கூட இல்லை. பாவம், மதுரையில் காதல் விழுந்து கிடக்கும் பிரச்சனையையும் சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற முடிவற்ற பட்டிமன்றத்தையும் வேறு பல தலைபோகிற விவகாரங்களையும் சொல்லி முடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை - அவர்கள் என்னதான் செய்வார்கள்?நாளிதழ்களில் வெளியான அந்தச் செய்தியின் சாரம் இதுதான் -

"தமிழகம் உட்பட 19 மாநிலங்களில் 200 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அசுத்தமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் பயன்படுத்தும் நீரில் உப்புத்தன்மை, இரும்பு, புளோரைட், நச்சுத்தன்மை ஆகியவை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கும். நீரில் அதிக அளவிலான புளோரைட் பற்களையும் எலும்புகளையும் பாதிக்கும். நச்சுத்தன்மை அதிகம் உள்ள நீரைக் குடித்தால் தோல் நோய்களும் தோல் புற்று நோயும் ஏற்படும். மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது."


சமுதாயத்தின் மீது மிகச் சிறிய அளவில் அக்கறை கொண்டவர்களுக்குக்கூட இந்தத் தகவல் பேரதிர்ச்சியாக இருந்திருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் ஏனோ இந்தச் செய்தி வெளியான பிறகும் பரவலான கவனத்தை ஈர்க்கவில்லை. மக்களின் விழிப்புணர்வைத் தகுந்த நேரத்தில் தகுந்த விஷயத்திற்காகத் தட்டியெழுப்பவேண்டிய தார்மீகக் கடமை கொண்ட அத்தனை ஊடகங்களும் இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக்கொண்டன.

Water Tablet என்றழைக்கப்படும் நிலத்தடி நீர்த்திட்டுக்கள் தனித்தனியே தீவாக உருவானவை அல்ல. பூமியின் அடியாழத்தில் அவை ஒரே தளமாக இணைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் அற்புதங்களுள் இதுவுமொன்று. ஆக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் கழிவுநீரால் மாசுபடுத்தப்படும் நீர் இந்த இணைப்பால் மற்ற பகுதிகளுக்கும் எளிதாகப் பரவுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் பல்வேறு இடங்களிலும் சகட்டு மேனிக்கு மாசுபாடு நிகழும்போது ஒட்டு மொத்த நீர்த்திட்டும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.


நிலத்தடி நீர் எதனால் மாசுபடுகிறது? இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய துறைகளும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? மிக முக்கியமாக, இத்தனை நாட்கள் - ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக - இந்த அளவிற்கு நாசமாகாத நிலத்தடி நீர் திடீரென்று இத்தனை தூரம் அசுத்தமானது எப்படி? நாம் பெருமையோடு பீற்றிக்கொள்ளும் விஞ்ஞானமும் நவநாகரீகமும் அந்த அளவிற்கு வளராத பண்டைய காலங்களில் நிலத்தடி நீரை எவ்வாறெல்லாம் காப்பாற்றினார்கள்?கேள்விகள் மலைபோல எழுகின்றன. பதில் கூறுவாரில்லை. "இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கும்" என்னும் ஒற்றை வரி மனதைப் பெரிதும் பிசைகிறது.இதற்கான காரணங்களாகக் கீழ்கண்ட காரணிகளைச் சுட்டலாம்.- விரிவடைந்துவரும் நகரங்களின் தேவைக்கு ஏற்றவாறு அதனைச் சுற்றிய நீர் ஆதாரங்களைப் பெருக்கிக்கொள்ளத் தவறியது- அப்படித் தவறியதோடு மட்டுமன்றி இருக்கும் பண்டைய நீர் ஆதாரங்களான ஏரிகளையும் குளங்களையும்கூட பிளாட் போட்டுக் கூறுபோட்டுக் கூவி விற்றது- அல்லது ஏரி / குளங்களின் நீரை சுகாதாரமான முறையில் பாதுகாக்கத் தவறியது / சுழற்சி முறையில் தூர் வாராமல் அவற்றை சீரழிய விட்டது- மழைநீர் அருகில் உள்ள குளம் குட்டைகளில் சேருவதற்கான கால்வாய்களையோ வாய்க்கால்களையோ அமைக்காமல் இருக்கும் நீர்வழிகளையும் அடைத்து விட்டது- தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் சரியான முறையில் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் வெளியேற்றப்படுகின்றனவா என்பதை அறவே அலட்சியப்படுத்தியது (அல்லது உரிய லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டு சுற்றுச் சூழல் மாசுபாடுச் சான்றிதழ் வழங்கியது)இதெல்லாம் தெரிந்த விஷயம்தான் - இதற்கும் வரலாற்றுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது.


பண்டைய தமிழகக் கல்வெட்டுக்களைப் பதிப்பித்திருக்கும் புத்தகங்களில் - தென்னகக் கல்வெட்டுக்கள், மத்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் ஆய்வறிக்கைகள், தமிழகத் தொல்லியல் துறையின் பதிப்புக்கள் - இவற்றில் ஏதாவதொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் ஏதேனும் பத்துக் கல்வெட்டுப் பாடங்களைப் படியுங்கள். அது எந்த மாவட்டக் கல்வெட்டாக இருந்தாலும் சரி - எந்தத் திருக்கோயில் கல்வெட்டாக இருந்தாலும் சரிதான். பத்தில் குறைந்த பட்சம் ஐந்திலாவது அந்த ஊரின் ஏரிகளோ கண்மாய்களோ குறைந்தபட்சம் வாய்க்கால்களோ இடம்பெற்றிருக்கும்.

அக்காலத்தில் ஏரிவாரியத்தையும் ஏரி வாரிய உறுப்பினர்களையும் கவனமாகத் தேர்ந்தெடுத்ததைப் பற்றி மட்டும் விபரமாக உரைக்கும் கல்வெட்டுக்களெல்லாம் உண்டு. இன்னார் இன்ன கோயில் கட்டினார் என்பதைப்போல இன்னார் இன்ன ஏரி எடுப்பித்தார் என்று கூறும் கல்வெட்டுக்களும் உண்டு. ஏரியின் நீரைக் கட்டுப்படுத்த உதவும் மதகுகளில் பல முக்கியக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

தஞ்சைக்கு அருகில் அமைந்திருக்கும் மதகுக் கல்வெட்டு அந்த மதகை இயக்கிய கிராமத்து ஊழியருக்குக் கொடுக்கப்பட்ட நிவந்தத்தையும் அவருடைய கடமைகளையும் விரிவாக விளக்குகிறது. இந்த நிவந்தத்தை அமைந்த மிகப்பெரிய அரசாங்க அலுவலர் இத்தர்மத்தைக் காப்பாற்றுபவர்கள் பாதங்கள் என் தலை மேலென என்று பணிந்து பரவுகிறார் !

வீராணம் திட்டம் என்ற பெயரில் அரசியல்வாதிகளால் பல்வேறு அசிங்கமான சர்ச்சைகளுக்கு இடமான நீர்த் திட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வீரநாராயண ஏரி சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. கடலளவு பிரம்மாண்டமாக விரிந்து பரந்திருக்கும் இந்த ஏரி ஆயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்ட இன்றைய நிலையிலும் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது சென்னையிலிருக்கும் பெருமக்களுக்கும் உபயோகப்படுவதை எவராவது அணுவளவாவது சிந்தித்திருப்போமா?

முதலாம் இராஜேந்திர சோழர் தன்னுடைய வடநாட்டு வெற்றியைப் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினாராம்... எப்படித் தெரியுமா? மிகப்பெரிய ஜலஸ்தம்பம் - அதாவது ஏரியை - உண்டாக்கிக் கொண்டாடினார். ஜெயஸ்தம்பம் நட்டு வெற்றியை வெறுமனே பறைசாற்றிக்கொள்வதற்கு பதில் ஜலஸ்தம்பம் உருவாக்கி அது மக்களுக்கும் பயன்படும் வகையில் பார்த்துக்கொண்ட அவரது மாண்பை எந்தப் பாடப்புத்தகம் சொல்லித்தருகிறது?


ஒவ்வொரு கோயில்களின் முன்னாலும் ஒரு பெருங்குளம் புனித தீர்த்தமாக அமைக்கப்பட்டது. ஊரில் பெருக்கெடுக்கும் மழைநீர் இதில் வந்து சேருவதற்கான கால்வாய்களும் அமைக்கப்பட்டன. இன்றைய நிலைமையில் ஏதாவது ஒரு புனிதத் தீர்த்தத்திலிருது ஒரு குவளை நீரை தைரியமாக எடுத்துக் குடிக்க முடியுமா? சொல்லுங்கள்.ஏரிகள் மற்றும் குளங்களின் நிலைமை இவ்வாறென்றால் ஆறுகளின் நிலைமை அதைவிட மோசம்.

"நதிக்கே நங்கூடம் பாய்ச்சிய அதிசயம் நம் ஊரில் மட்டும்தான் !" என்று வியக்கிறார் கவிஞர் வைரமுத்து. பிரிட்டிஷார் காலத்தைய 18 - 19ம் நூற்றாண்டு ஆவணங்களையும் ஓவியங்களையும் பார்க்கும்போது உதிரம் கொதித்துப் போகிறது. அடையாறு என்பது உண்மையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆறு என்பது உங்களில் எவருக்காவது தெரியுமா?

சென்னை முகப்பேரில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் இன்று அமைந்திருக்கும் இடத்தில் ஒரு ஏரி இருந்தது. அட, சாக்கடைச் சமுத்திரமாக விளங்கும் கூவமும் கூட ஒரு காலத்தில் நதிதானைய்யா!கீழ்க்கண்ட படத்தைப் பாருங்கள். இது அடையாறு கடலில் கலக்கும் காட்சி. தூரத்தில் தெரிவது பரங்கிமலை.நம்பமுடியவில்லையல்லவா? இது ஏதோ கற்பனை ஓவியமென்று நினைத்துவிடாதீர்கள். அன்று தெரிந்த நிஜக்காட்சி இது.http://i356.photobucket.com/albums/oo9/chndru007/Madras-AdyarRiver.jpg

நகர்ப்புற வளர்ச்சியில் இப்படிப்பட்ட விஷயங்கள் ஏற்படுவது சகஜம்தான் என்று நினைக்கிறீர்களா ? கிடையவே கிடையாது. அளவில் சென்னைப் பெருநகரை விடச் சிறியதான சிங்கப்பூரில் நிலத்தின் ஒவ்வொரு அடியும் மதிப்பு மிக்கதுதான். அதற்காக அவர்கள் இருக்கும் ஏரிகளைக் கூறுபோட்டு விடவில்லை. நாட்டிற்கு நடுவே மிகப்பெரிய இரண்டு ஏரிகளைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறார்கள். ஏரியில் எந்நேரமும் படகில் ஒருவர் சவாரி செய்து ஆங்காங்கே கடற்பாசிகளை இறைத்துக்கொண்டிருப்பார். நீர்ப்படுகையை ஆரோக்கியமாக வைக்கும் வழிமுறை இது. இந்தப் பணி 365 நாட்களும் நடக்கும்!

இதுபோல் ஏரிப்பராமரிப்பை எப்போதாவது நாம் பார்த்ததுண்டா சொல்லுங்கள். ஏரியின் கரைகளும் படுசுத்தமாகக் காட்சியளிக்கும். பொங்கி வரும் மழை நீரை இந்த ஏரியில் வந்து கொண்டு சேர்க்கும் கால்வாய்களும் உண்டு.

திருச்சியில் சில காலத்திற்கு முன் ஒரு சீக்கிய மாநகராட்சி ஆணையாளர் மாற்றலாகி வந்தார். மற்றவர்களைப்போல் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அனுசரித்துக்கொண்டுபோய் பணம் பண்ணாமல் வேண்டாத விவகாரங்கள் பலவற்றிலும் இறங்கினார். சீக்கியரல்லவா ? இயற்கையாகவே அந்த இனத்திற்கென்று இருக்கும் வீரம் அவரிடம் (தமிழர்களைப்போல் ஒட்டு மொத்தமாக ஒழிந்துபோய் விடாமல்) கொஞ்சம் மிச்சமிருந்தது. அவர் செய்த வேண்டாத வேலைகளில் ஒன்று - இருந்த ஏரிகளையும் குளங்களையும் கணக்கெடுக்கத் துவங்கியதுதான்.

திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய ஏரி ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதனை அவர் எங்கு தேடியும் காணவில்லை. என்ன ஆயிற்றென்று விசாரித்த போதுதான் அதே இடத்தில் மாரீஸ் என்ற பெயரில் மூன்று பெரும் திரையரங்கங்கள் கட்டப்பட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மக்களுக்குக் கலைச்சேவை ஆற்றிக்கொண்டிருக்கின்றன என்கிற அதிர்ச்சிகரமான விஷயம் வெளியாயிற்று.

பாவம் ! திருச்சிவாசிகளே செளகரியமாக மறந்து போய்விட்ட அந்த விஷயத்தை எப்படியோ கலெக்டர் கண்டுபிடித்து விட்டார். நியாயமாகப் பார்த்தால் அந்த அரங்கங்களை இடித்திருக்க வேண்டும். ஆனால் எத்தனையெத்தனையோ அதிகாரிகளைக் "கவனித்துக்" கட்டிய இடமாயிற்றே? விட்டுவிடுவார்களா ? ஏரி அங்கு இருந்து என்ன பெரிதாகக் கிழித்துவிடப் போகிறது? அந்தப் பகுதியின் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அதனால் மாமூல் அளிக்கமுடியுமா ? அல்லது மக்களைத்தான் கேளிக்கை இன்பத்தில் ஆழ்த்த முடியுமா? அல்லது இதற்காகத் திருச்சிவாசிகள்தான் போராட்டம் நடத்தப் போகிறார்களா ? கிடக்கிறது கழுதை என்று விட்டுவிடுங்கள் என்று கலெக்டரை சரிசெய்து விரைவில் அவரது பணிமாற்றத்தை நிறைவேற்றித் திருச்சியை விட்டுத் துரத்துவதற்குள் அதிகாரிகளுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

நமக்குத் தெரிந்து சென்னை வில்லிவாக்கத்தில் இருபது இருபத்தைந்து வருடங்களுக்குமுன் ஒரு பிரம்மாண்டமான ஏரி இருந்தது. நிஜமாகவே மிகப்பெரிய ஏரி. நல்ல மழை பெய்யும் நாட்களில் அக்கரைக்கு இக்கரை நீர் ததும்பிக்கொண்டிருக்கும். பின் ஒரு காலத்தில் அதிகாரிகளின் தயவால் ஒரு ஓரத்தில் வீட்டுப்பகுதிகள் முளைத்தன. இன்று அந்த ஏரி எங்கிருந்தது என்று வில்லிவாக்கம்வாசிகளுக்கே தெரியாது. அந்த அளவிற்கு அப்பகுதியில் வீடுகள் முளைத்துவிட்டன.

இதே கதைதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை வாசகர்கள் சொல்லாமலே அறிவார்கள்.அமைச்சர்களும் அதிகாரிகளும் எதையெதையோ திறந்து வைக்கிறார்களே - எவராவது ஒருவர் கடந்த 70 வருடங்களில் ஒரு ஏரியைக் கட்டுவித்தார் - ஒரு குளத்தைத் வெட்டினார் - குறைந்தபட்சம் ஒரு வாய்க்காலைத் தூர் வாரினார் என்று படித்திருக்கிறோமா? சங்ககாலத்திற்கோ சோழர்காலத்திற்கோ கூடப் போகவேண்டாம்.

ஒரு முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்ப்போம். அப்போதெல்லாம் 'குடிமராமத்து' என்றொரு வழக்கம் கிராமங்களில் இருந்ததே! தெரியுமா? இன்று கிராமங்களில் இருப்பவர்களுக்கே அது தெரியுமா என்பது சந்தேகம். ஏரிநீர் மற்றும் ஆற்றுநீர்ப் பாசனங்களுக்கான பராமரிப்புகளை அந்தந்தக் கிராம மக்களே குழு அமைத்துக் கவனித்துக் கொண்டார்கள். அரசாங்கம் வந்து செய்யும் என்று யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை.

ஆனால் இன்று? தெருமுனையில் ஒரு குழாய் பழுதடைந்துவிட்டால்கூடப் பொதுப்பணித்துறைதான் வரவேண்டும். பொருளாதாரத் தேடலில் மனிதநேயத்தையும் சமூகசிந்தனைகளையும் தொலைத்துவிட்டு நிற்கிறோம். மனிதகுலத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் யாராவது ஒரு சூப்பர் ஹீரோ வந்து தீர்த்துவைப்பான் என்று சினிமாப் பார்த்து மூளையை மழுங்கடித்துக் கொண்டோம்.

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒரேயொரு பிரதமரும் ஒரேயொரு பொதுப்பணித்துறை அமைச்சரும் ஒரேயொரு மேயரும் எத்தனை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள்?

நம்மை அடிமை செய்து ஆண்ட வெள்ளையர்கள்கூடச் செய்யாத அத்தனை அட்டுழியங்களையும் கடந்த அறுபது எழுபது வருடங்களில் நாம் செய்து முடித்துவிட்டோம். பணத்தாசை மற்றும் பேராசை பிடித்த அரக்கர்களாக மாறி இயற்கையன்னையின் பாலை மட்டுமல்ல - மார்பகங்களையே கடித்து இரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் துவங்கிவிட்டோம். "தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு" என்று முடங்கிவிட்டோம். சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் எவனோ பார்த்துக்கொள்வான் - உனக்கும் எனக்கும் என்ன ஆயிற்று? என்று நமது பங்கிற்கு நம் வீட்டின் கழிவு நீரையும் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையில் கலந்தோம்.

வெட்கமில்லாமல் குற்றவாளிக் கூண்டில் சிரித்தபடி ஏறி நிற்கும் நம்மை வருங்காலத்தின் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

அன்புடன்
ஆசிரியர் குழு
வரலாறு - மாத இதழ்

2 கருத்துகள்:

DHANS சொன்னது…

what you told here is true but the problem is no one want to check this, all wanted to have immediate result.

பெயரில்லா சொன்னது…

நல்ல மேட்டரைத்தான் சுட்டிருக்கீங்க.

அடிக்கடி சுடுங்க. நல்ல மேட்டரா சுடுங்க.

கருத்துரையிடுக