மே மாத தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் மார்ச் மாதத்தில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தன. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி சேரும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந் தது. அ.தி.மு.க.வுடன் காங்கிரசுக்கு 1991 தேர்தலின் போது ஏற்பட்ட கூட்டணி நீடித்தது. எனினும் தமிழக காங்கிரசார் பலரும் அ.தி.மு.க. கூட்டணியை தொடர விருப்பமின்றி இருந்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்று அறிவித்தார். அவ ருடைய அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஜி.கே.மூப்ப னார், மத்திய அமைச்சர்களாக இருந்த ப.சிதம்பரம், அருணாசலம் உள்ளிட்டோர் டெல்லியில் இருந்தனர்.
கூட்டணி அறிவிப்பு வெளியான மறுநாள் சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இவர்களில் சிலர் அ.தி.மு.க.வுடன் சேர எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. நரசிம்மராவுக்கு எதி ரான கோஷங்கள் வலுத்தன. கோஷம் போட்ட தோடு நின்றுவிடவில்லை. அங்கு வைக்கப் பட்டிருந்த நரசிம்மராவின் கட்-அவுட்களையும் உடைத்து சேதப்படுத்தினார்கள். இன்னும் சிலர் கட்-அவுட்களுக்கு தீ வைத்தனர். சத்தியமூர்த்தி பவன் யுத்தக் களமானது.
காலை தொடங்கி மாலை வரை நடை பெற்ற அனைத்து ரகளைகளையும் சன் டி.வி. நிருபர் கருப்பசாமி கேமராவில் பதிவு செய்தி ருந்தார். அலுவலகத்திற்கு அவரை அழைத்து கேசட்டை போட்டும் பார்த்தபோது எல்லா காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. ஏப்ரல் 1-ந் தேதிதான் செய்தி ஒளிபரப்பு ஆரம்பம் என் றாலும், மார்ச் கடைசி வாரத்திலேயே சோத னை ஒளிபரப்பை ஆரம்பிக்க இருந்தோம். அன்று சோதனை ஒளிபரப்பு ஆரம்பம் என்பதால் முதல் நிகழ்ச்சியாக சத்தியமூர்த்தி பவன், எதிர்ப்புக் காட்சிகளை சிறப்பு செய்தியாக ஒளிபரப்பினோம்.
தமிழ்நாட்டில் அதற்கு முன் இது போன்ற அரசியல் போராட்டங்கள் நடை பெற்றது உண்டு. ஆனால் அவை அப்படியே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது இல்லை. எனவே சன் டி.வி.யில் அன்று இரவு ஒளிபரப்பான சத்தியமூர்த்தி பவன் ரகளை. தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. ஆயிரக்கணக்கானவர்கள் சன் டி.வி. அலுவலகத்தை தொடர்பு கொண்டு மறு ஒளி பரப்பு செய்யுமாறு கேட்டனர். அவர்களுக்காக மீண்டும் ஒருமுறை ஒளிபரப்பப்பட்டது.
அ.தி.மு.க. கூட்டணியை விரும்பாமல் டெல்லியில் இருந்த மூப்பனார், இந்த காட்சியைப் பார்த்ததும் உத்வேகம் அடைந்தார். சத்தியமூர்த்தி பவன் ரகளைக் காட்சிகளை சன் டி.வி.யில் பார்த்த அவர், அ.தி.மு.க.வுடன் காங் கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளை உணர்ந்து இனி காங்கிரசில் நீடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். த.மா.கா. என்ற தனிக்கட்சியை தொடங் கினார். சென்னை திரும்பி தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்டபோது மூப்பனார், "தொண்டர்களின் எதிர்ப்பை சன் டி.வி.யில் பார்த்ததை அடுத்தே தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் உருவானது' என்று கூறினார். செய்தி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு சன் டி.வி.யில் ஒளிபரப்பான முதல் நிகழ்ச்சியே தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்தே சன் டி.வி. செய்திகளுக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு கூடிப் போனது. முதல் செய்தியே பெரும் வெற்றியாக அமைந்தது என்னால் மறக்க முடியாத ஒன்று.
2006-ம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மன்மோகன் சிங், கியூபா மற்றும் பிரேசிலுக்கு சென்றார். செய்தி சேகரிப்பதற்காக அவருடன் என்னையும் எங்கள் எம்.டி. அனுப்பி வைத்தார். கியூபா பயணம் உறுதியானவுடன் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மற்ற நாடுகளைவிட கியூபா மீது அலாதி பிரியம் உண்டு. காரணம் பிடல் காஸ்ட்ரோ, மற்றும் சேகுவேரா இவர்கள் மீது கொண்ட ஈர்ப்பால் கியூபா எப்போதும் மனதில் குடிகொண்டிருந்தது.
கியூபா தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகள் மாநாட்டில் உரையாற்ற தான் மன்மோகன்சிங் சென்றார் மாநாட்டுக்கான ஏற்பாடு களை அதிபர் பிடல்காஸ்ட்ரோ தலைமையிலான அரசு செய்து வந்தது. மாநாட்டின் தலைமை உரை பிடல்காஸ்ட்ரோ. கியூபா செல்வதே மகிழ்ச்சி என்றால், அதுவும் பிடல் காஸ்ட்ரோ பேசுவதை நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி இரட்டிப்பானது.
மாநாடு நடை பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன் பிடல் காஸ்ட்ரோ குடல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு காஸ்ட்ரோ உடல்நலம் தேறிவருகிறார் என்றும், ஏற்கெனவே அறிவித்தபடி அணிசேரா நாடுகளின் மாநாட்டை தலைமையேற்று நடத்துவார் என்றும் வெளியான செய்திகள் ஆறுதல் அளித்தன.
தலைநகர் ஹவானாவை நமது பிரதமரின் தனி விமானம் மாநாடு தொடங்குவதற்கு முதல் நாள் மாலை சென்றடைந்தது. எங்கள் குழுவில் இருந்த அனைவருமே காஸ்ட்ரோ நாளை காலை மாநாட்டில் பங்கேற்க வருவாரா என்பதை விசா ரித்தபடி இருந்தோம். காஸ்ட்ரோ உடல் நலம் தேறிவந்தாலும், மாநாட்டில் பங்கேற்கும் அளவுக்கு குணமடையவில்லை என்று வெளியான தகவலே, விசாரிப்புகளுக்கு காரணம்.
ஹவானாவிலிருந்து அன்று காலை வெளியான நாளேடுகளில் மாநாடு பற்றிய செய்திகள் விரிவாக இடம் பெற்றி ருந்தாலும் காஸ்ட்ரோ பங்கேற்பாரா என்ற தகவல் எதுவும் இல்லை. அங்கு பத்திரிகைகள் அனைத்தும் அரசால்தான் நடத்தப்படுகின்றன. எனவே நமது நாடு போன்று யூகச் செய்திகளை வெளியிட முடியாது.
மாநாடு நடைபெற்ற அந்த பிரமாண்ட அரங்கத்திற்கு காலை 9.00 மணியளவில் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். அணிசேரா அமைப்பில் இடம் பெற்றிருந்த நாடுகளின் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆனால் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காஸ்ட்ரோ மட்டும் வரவில்லை. காஸ்ட்ரோ ஆற்ற வேண்டிய தலைமை உரையை அவருடைய தம்பி ராவல் காஸ்ட்ரோ வாசித்தார். (இவர் தற்போது பிடல்காஸ்ட்ரோவுக்குப் பதிலாக கியூபாவின் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்.)
காஸ்ட்ரோ பங்கேற்காதது எனக்கு மட்டுமின்றி அங்கு வந்திருந்த அனைவரையும் வருத்தப் படச் செய்தது. சரி, இன்னும் மூன்று நாட்கள் ஹவானாவில் இருக்க வேண்டியுள்ளது. அதற்குள் காஸ்ட்ரோவை நேரில் பார்த்துவிடலாம் என்று மனதை சமாதானம் செய்துகொண்டோம்.
மறுநாள் இரவு 11 மணி இருக்கும். நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த இந்திய தூதரக அதிகாரிகள், பத்திரிகைக் குறிப்பு ஒன்றையும் புகைப்படம் ஒன்றையும் கொடுத்தனர். அதில் சற்று முன்பு இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசியதாக இருந்தது. ஹவானாவில் உள்ள கம்யூனிஸ்ட்டு கட்சி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றதாகவும், இருவரும் 30 நிமிட நேரம் பேசிக் கொண் டிருந்ததாகவும், பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தில் மன்மோகன் சிங்கும், காஸ்ட்ரோவும் எதிர் எதிராக உட்கார்ந்து பேசும் காட்சி இடம் பெற்றிருந்தது. பிடல் காஸ்ட்ரோ மிகவும் மெலிந்து பலவீனமாக இருந்தார்.
மன்மோகன்சிங் சந்திப்பின்போது காஸ்ட்ரோவுடன் கை குலுக்கி விடலாம் என்ற எதிர்பார்ப்பும் முடிவுற்றதால் இந்திய பத்திரிகையாளர்கள் மேலும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். நானும்தான்! அன்றிலிருந்து இன்றுவரை காஸ்ட்ரோ பொதுநிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. சில தினங்களுக்கு முன் அவர் அதிபர் பொறுப்பையும் தமது சகோதரர் ராவல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.
இனி அவரை நேரில் பார்க்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு இல்லை. கியூபா வரை சென்று விட்டு காஸ்ட்ரோவை நேரில் பார்க்க முடியாமல் திரும்பியதைவிட பெருத்த ஏமாற்றம் இதுவரை ஏற்பட்டதில்லை.
--சன் டி.வி. நியூஸ் எடிட்டர் ராஜா!
நன்றி: நக்கீரன் இணையதளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக