செவ்வாய், அக்டோபர் 14, 2008

'மீடியா வன்முறையும், அதீத மீடியா ஆர்வமும்...'

எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளைக் குற்றம் சொல்வதைப் போல 'மீடியா வன்முறை' என்று குற்றம் சாட்டுவதும் தற்போது பேஷனாகிவிட்டது இடுப்புக்குக் கீழே ஜட்டி தெரிய ஜீன்ஸ் போடுவதைப் போல.

கருத்தரங்குகளுக்குத் தோதான கட்டுரை வாசிக்கத் துணியும் எழுத்தாளர்கள் 'மீடியா வன்முறை மற்றும் மீடியா பயங்கரவாதம் தனிநபர் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மிகையான தாக்கம்' எனத் தலைப்பிட்டு வாசிக்கும் கட்டுரைகள் ஒரு விஷயத்தை மறைக்கின்றன. தமிழர்களின் 'அதீத மீடியா ஆர்வம்' எங்குமே பதிவு செய்யப்படுவதில்லை.

மீடியாக்கள் தனிநபர்களைப் பயன்படுத்துவது என்பது எப்படி விவாதத்திற்குரியதோ, அதைப் போல தனிநபர்கள் அசட்டுத்தனமாக மீடியாவில் பங்கு பெற நினைப்பது எந்தளவிற்கு உச்சக்கட்டமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. கதையைச் சொல்கிறேன். இதில் பயங்கரவாதி யார் என்பதைப் படிப்பவர்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

தனியார் தொலைக் காட்சியொன்றின் க்ரைம் ரிப்போர்ட் சார்ந்த நிகழ்ச்சி அது. நாள்தவறாமல் பிள்ளை பிடிக்கிறவனைப் போல, இராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மார்ச்சுவரிகளில் ஆம்னி வேன், கேமரா சகிதம் ஆஜராவோம். பச்சைக் குழந்தை பிணம் முதல் வெட்டுப்பட்ட மூத்த குடிமகனின் பிணம் வரை அத்தனையும் பார்த்துப் பார்த்து முகர்ந்து முகர்ந்து மனம் ஒருவிதமான வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டு விட்டிருந்தது. பிண வாடையை வைத்தே அது கொலையா, எனச் சொல்லும் அளவிற்கு பிணங்கள் குறித்த நிபுணத்துவம் எங்களுக்கு மார்ச்சுவரி பணியாளர்களால் சொல்லித்தரப்பட்டது.

எங்கள் தொலைக்காட்சிக் குழுவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அசைன்மெண்ட்டின் தாரக மந்திரம் 'எதையும் மாத்தி யோசி'!

காலை 11 மணிக்கே ஓல்ட் காஸ்க் ரம் ஆஃப் வாங்கி நானும் கேமரா மேனும் அடித்துவிட்டுத்தான் அடுத்த கட்ட வேலையைப் பற்றியே யோசிப்போம். இந்தக் காலகட்டத்தில்தான் வெட்டியான்களும் துப்புரவுத் தொழிலாளர்களும் காலை எழு மணிக்கே ஒயின் ஷாப் திறக்கும் போதே (அப்போது பிச்சைக்காரர்களைப் போல குடிகாரர்களை நடத்தும் டாஸ்மாக் இல்லை. தவிர அரசாங்கத்தின் புண்ணியத்தில் ஓல்டு காஸ்க்கும் தற்போது வழக்கொழிந்து விட்டது.) ஏன் முண்டியடிக்கிறார்கள் என்கிற தேவாமிர்த ரகசியம் புரிபடத் துவங்கியது.

மார்ச்சுவரி சகவாசமே வாழ்க்கையில் இனி வாய்க்கக்கூடாதென இல்லாத கடவுள்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக் கொண்ட காலகட்டமும் அதுதான். தினமொரு பிணம் தினமொரு கொலை என எங்கள் ஆம்னி வேன் சென்னையின் சுற்றுச் சாலைகளைச் சுற்றி வந்தது.

மெல்ல மெல்ல ஹிட் அடித்த அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போட்டோ போட்டியே நடப்பதுண்டு. எங்களுக்காகக் காவல்துறை உயரதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். சொன்னால் நம்புங்கள், நாங்கள் சரக்கடித்துவிட்டு சுற்றி வருகையில் தூக்கம் கண்களைச் சுழற்றினால், வட சென்னையிலுள்ள காவல்நிலையமொன்றில், காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் ஓய்வறையில்தான் தூங்குவோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அக்யூஸ்டுகளை 'சார் இன்னொரு தடவை அடிங்க சார்' என்றால் அடிப்பார்கள்.

நானேகூட காக்கிச் சட்டை போடாமல் காவல்துறை ஆய்வாளரின் சேரில் அமர்ந்து கொண்டு ஒரு முறை ஒரு குற்றவாளியை விசாரித்த போது எனக்குக் கிடைத்த மனநிலையை வார்த்தைகளில் கொண்டுவரமுடியாது.

காக்கிச் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு விசாரித்தால் எப்படியிருக்கும் என்று நினைத்த போதே குதூகலமாக இருந்தது.

காவல்துறையினர்களின் குரூர ஆக்கிரமிப்பு மனநிலை படிப்படியாக எப்படி உருவாகிறது என்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்தவன் என்கிற முறையில் அதைப் பற்றித் தனியாகவே இன்னொரு கட்டுரை எழுத முடியும்.

'கால் காசுனாலும் கவர்மெண்ட் காசு என்பதைப் போல, போலீஸ் காசு' என்று மாற்றிக் கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றத்துக் கோயில் படிக்கட்டுகளில் நடந்து வரும் போது கொண்டு வரும் பழங்களைத் தட்டிப் பறிக்கும் குரங்கு என்ன நினைக்கும்? அப்படித்தான் காவல்துறையினர் தட்டிப் பறிக்கும் போது நினைத்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்

காவல்துறையினர் முதல் சமூகத்தின் பல தரப்பினரும் விரும்பிப் பார்த்த அந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் நடந்த சம்பவத்தைச் சொல்வதற்குத்தான் இப்படிச் சுத்திச் சுத்தி வருகிறேன். நாங்கள் எங்கும் நுழையலாம் எதையும் செய்யலாம் என்கிற செல்வாக்குடையவர்களாக இருந்தோம் என்பதைச் சொல்லத்தான் இத்தனை 'பில்டப்'புகளும்.

நொளம்பூர் கொலை வழக்கு அது. கொல்லப்பட்டவர் ஓட்டேரியைச் சேர்ந்தவர். தலையில் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். நான் நெருங்கிப் பார்த்த போது மூன்று விரல்கள் உள்ளே செல்லும் அளவிற்குப் பின்னந்தலையில் ஒரு ஓட்டை இருந்தது. அடி பலமாக விழுந்ததால் ஆள் ஸ்பாட் அவுட். அக்யூஸ்டு சரண்டர்.

சாவுச் செய்திகளை இப்படித்தான் எந்தவித உணர்ச்சியுமின்றி வர்ணிப்போம்.

நொளம்பூரில் கொள்ளப்பட்டவருக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மனைவி. நாங்கள் அன்றைய நிகழ்ச்சிக்கே அந்தச் சாவை படம் பிடித்து ஒளிபரப்பத் திட்டமிட்டிருந்ததால், எங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி பாடியைக் கீழ்ப்பாக்கத்தில் சீக்கிரமே போஸ்ட்மார்டம் செய்து ஓட்டேரிக்குக் கொண்டுவந்து விட்டோம். உறவினர்கள் அயலார்கள் எனப் பெருங்கூட்டமே சாவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே சின்னத் தெரு அது என்பதாலும் கொலையின் காரணமாக ஒருவர் செத்திருக்கிறார் என்பதாலும் கூட்டம் மொய்த்தது.

அப்போதுதான் என்னுடைய கேமராமேனுக்கு அந்த விபரீத ஆசை உதித்தது. எதையும் மாத்தி யோசி என்கிற பார்முலாவைக் கடைப்பிடித்துப் பார்ப்பது எனத் தீர்மானித்துவிட்டான். ஏற்கனவே அடித்த ஓல்டு காஸ்க் குவாட்டரின் வேலையாகக்கூட அது இருக்கலாம்.

சின்னச் சின்ன வீடுகள் சேர்ந்த தொகுப்பு வீடுகள் டைப் என்பதால் வெளியே பிணத்தைக் கிடத்தியிருந்தார்கள். சுற்றிலும் அவரது உறவினர்கள் அமர்ந்திருக்க நடுவே அவரது மனைவி இரண்டு குழந்தைகளைப் பக்கத்தில் அமரவைத்து அணைத்தபடி அழுது கொண்டிருந்தார். "மாப்ள வழக்கமா ஷூட் பண்ணி பண்ணி போரடிச்சுருச்சு. ஒரு சேஞ்சுக்கு ஷாட் வைக்கலாம்டா!" என ஆரம்பித்த கேமரா மேன் அவனது யோசனையைத் தெரிவித்த போது நான் ஆடிப் போய்விட்டேன்.

எவ்வளவோ அசட்டுத்தனங்களைப் பத்திரிகையாளன் என்ற முறையில் செய்திருந்த நான் இந்த யோசனையைக் கேட்டு ஆடிப் போய்விட்டேன். அதாவது பிணத்தின் நெத்தியில் உள்ள ரூபாய் நாணயத்தில் கேமராவை போகஸ் பண்ணி அப்படியே மெதுவாக ஜூம் அவுட் செய்து முழுப் பிணத் தோற்றத்தையும் காட்ட வேண்டும்.

அப்படிச் செய்ய வேண்டுமெனில் கிடத்தியிருக்கிற பிணத்தின் இரண்டு புறமும் கால்களைப் போட்டுக் கொண்டு நின்றபடியே ஷூட் செய்ய வேண்டும். நடக்கிற காரியமா இது? ஆனால் எனது கேமரா மேன் பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியின்றித் தயங்கித் தயங்கி பிணத்தின் தம்பியை அணுகினேன்.

என்னை முந்திக் கொண்டு வந்த என்னுடைய கேமரா மேன், பிணத்தின் தம்பியிடம் 'சார் உங்க அண்ணார கடைசியா எப்ப பாத்தீங்க, அவரு என்ன சொன்னாரு' என அவரிடம் நேர்முகம் செய்து அதை கேமராவில் பதிவு செய்யவும் ஆரம்பித்துவிட்டான். அவரும் சளைக்காமல் சொன்னார்.

இடையிடையே சோடா குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். சந்துக்குள் சென்று இன்னொரு ஆஃப் வாங்கி நாங்கள் மூவரும் பருகினோம். மீண்டும் அவர் நேர்முகம் கொடுத்தார். கடைசியில் அந்த ஷாட்டை அப்படி எடுப்பது என்பதை நாங்கள் மூவரும் தீர்மானித்து விட்டோம்.

அத்தனை பேரும் பிணத்தை விட்டுத் தள்ளி அமரச் சொல்லிவிட்டு நாங்கள் வேலையை ஆரம்பித்த போது அத்தனை பேரும் எங்களைத்தான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சுதந்திரம் கிடைத்த திமிரில் என்னுடைய கேமரா மேன் இன்னொரு யோசனையையும் சொன்னான்.

'மாப்ள ஆம்பியன்ஸ் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்டா. நீ என்ன பண்றன்ன அந்தம்மா, அதாண்டா செத்தவரோட பொண்டாட்டி. அவங்க ஜாக்கெட் ஓரத்துல லேப்பிள் மைக்க குத்தி விடச் சொல்லு. அப்புறமா எல்லாரையும் இன்னும் கொஞ்சம் சத்தமா அழச் சொல்லு..." நான் தயங்கிய போது என்னுடைய கேமரா போர்வாள் அதையும் செய்து முடித்துவிட்டது.

நினைத்தபடி அன்று அந்த நொளம்பூர் கொலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. மறுநாள் எனக்கு ஒரு போன் வந்தது. "சார் அதான் நேத்து எங்க வூட்டுக்காரரு செத்தாரே. ஆமாம் ஓட்டேரி சார். அவங்க ஒயிப் பேசறேன் சார். ப்ரோகிராம் எப்ப சார் டீவியில வரும்".

-நித்திலன்

நன்றி: உயிர்மை.காம்

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

I have no words to express my feelings.
But Its too bad on both sides.

பெயரில்லா சொன்னது…

much thought provoking post

Dr.Rudhran சொன்னது…

excellent post

பெயரில்லா சொன்னது…

excellent post

கருத்துரையிடுக