இந்திய கற்பழிப்பு சட்டம் கற்பழிப்பாளர்களுக்கு பலவகைகளில் ஆதரவானது. உதாரணமாய் இதைப் படியுங்கள்.
பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டம்: "ஒரு ஆண் கற்பழிப்பு அல்லது வற்புறுத்தப்பட்ட பாலுறவுக்காய் நீதிவிசாரணை செய்யப்படும்போது, குற்றத்துக்கு பலியானவர் பொதுவாய் ஒழுக்கமீறியவராய் காட்டப்படலாம்"
அதாவது பாலியல் ஒழுக்கம் மீறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை செல்லுபடியாகாது என்று இச்சட்டம் சொல்லுகிறது. இங்கு ஒழுக்கம் என்ற வார்த்தையை கவனிக்கவும்.
கேரளாவில் சகீனா எனும் 16 வயது பெண், ஒரு விபச்சார விடுதியில் அடைத்து வைத்து, மிரட்டி பணியவைக்கப்பட்டு 18 மாதங்கள் வெவ்வேறு அரசியல்வாதிகள், அரசு உயர்அதிகாரிகளால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாள். காவல்துறையால் காப்பாற்றப்பட்ட சகீனா பெற்றோர் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த போது, மாட்சிமை பொருந்திய ஒரு நீதிபதி இவ்வாறு அவதானித்து வழக்கை ரத்து செய்தார்: "புணர்ச்சிக்காக பணம் செலுத்தும் ஒரு ஆண் விருப்பமற்ற பெண்ணை நெருங்குவான் என்பதை நம்பமுடியாது; இத்தகைய நடத்தை கொண்ட (அதாவது வன்முறையால் பாலியல் தொழில் நடத்த வற்புறுத்தப்பட்ட) பெண்ணின் வாதம் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுபடியான புனிதத்தன்மை படைத்ததல்ல".
இங்கே மனித உரிமை அடிப்படையில் இரண்டு அபத்தங்கள் உள்ளன. (1) பாலியல் தொழிலாளிக்கும் வன்புணர்ச்சியிலிருந்து தன்னை பாதுகாக்கும் உரிமை உண்டு. அதை ஒரு நீதிமன்றம் மறுப்பதே மிகப்பெரிய அநீதி. (2) பாலியல் ஒழுக்கத்திலிருந்து விலகியவர்களின் வாக்குமூலம் புனிதமற்றது என்று மறுப்பதன் மூலம் நீதிமன்றம் அவர்களை பொருட்படுத்த வேண்டாதவர்களாய் ஒதுக்கி வைக்கிறது. இவை மேரி மெக்தலின் மீது அன்று வீசப்பட்டவற்றில் இன்றும் மீதமுள்ள 2 கற்களே.
1972-இல் மகாராஷ்டிரா சந்திரபூர் மாவட்டத்தில் மாதுரா எனும் இளம்பெண் கன்பத் மற்றும் துகாராம் எனும் காவல்துறையினர் இருவரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாள். 1974-ஆம் ஆண்டு இவ்வழக்கில், ஒரு செஷன்ஸ் நீதின்மன்றம் மாதுரா "நடத்தை கெட்டவள்" என்றும், "பொய் சொல்கிறாள்" என்றும் கூறி, வன்புணர்ச்சியாளர்களை விடுவித்து தீர்ப்பளித்தது. அடுத்து மும்பை நீதிமன்றம் இந்த காட்டுமிராண்டித் தீர்பை தள்ளி வைத்து இரண்டு காக்கிக் குற்றவாளிகளுக்கும் தலா 5 மற்றும் 1 வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளித்தது. பொறுங்கள், 'சபாஷ்' சொல்வதற்கு கதை இங்கும் முடியவில்லை. உச்ச நீதிமன்றம் கோதாவில் இறங்கி இரண்டு காக்கிகளையும் விடுவித்தது. வன்புணர்ச்சியின் போது மாதுரா கூக்குரல் எழுப்பவில்லை என்பதும், அவளுடலில் வெளிக்காயங்கள் இல்லை என்பதுமே நீதிபதி சொன்ன காரணங்கள்.
குழப்பமாக உள்ளதா? நீங்கள் இந்தியனாய் இருப்பதற்கே தகுதியற்றவர்கள்.
ஆனாலும் சில பாமர சந்தேகங்கள்: துப்பாக்கி முனையில் வன்புணர்ச்சி செய்யப்படும் பெண்ணுக்கு கூச்சலிடும் தைரியம் எங்கிருந்து வரும்?
துப்பாக்கி முனையில் கற்பழிக்கும் காக்கிச் சீமான்கள் என்ன பிளேடு பக்கிரிகளா வெளிக்காயங்கள் ஏற்படுத்த?
மேலும், நம்மூரில் காவல் வன்புணர்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஊடக சாகசங்கள் இன்னும் நிகழவில்லை. வன்புணர்ச்சிகள் பொதுமேடைகளிலல்ல தனியறைகளிலும், காவல் நிலையங்களிலுமே பெரும்பாலும் நடக்கின்றன (சட்டசபை மானபங்க முயற்சி குற்றசாட்டு வேறு தினுசு!). வன்முறை, மிரட்டல் மூலம் பணிய வைக்கப்பட்டு நடத்தப்படும் வன்புணர்ச்சியை நம் நீதிமன்றங்கள் ஒருபக்க சாய்வுடன் ஆணாத்திக்க சார்போடுதான் அணுகுகின்றன.
(1) கொலை வழக்குகளில் நிகழ்வது போல், கற்பழிப்பு வழக்குகளில் சூழ்நிலை சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறது? குற்றம் நடக்கும்போது பெண் கூச்சலிட வேண்டும், காயங்கள் பெற வேண்டும், நேரடி சாட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அடுக்கிக் கொண்டே போகும் நம் சட்டம் ஆணைப் பாதுகாப்பதில் குறியாய் உள்ளதை கவனிக்கலாம்.
(2) சட்டத்தின் நம்பிக்கையைப் பெற பாலியல் ஒழுக்கம் இத்தனை முக்கியமாய் உள்ளது ஏன்? ஒரு பாலியல் தொழிலாளி கற்பழிக்கப்படும் போது அது அவள் விருப்பப்படி நடப்பதாய் நீதிமன்றம் நாடகம் ஆடுவது ஏன்? பாலியல் ஒழுக்கம் = மதக்கட்டுப்பாடு என்பது தாண்டி உயிரியல் பின்னணியைப் பார்ப்பது மற்றொன்றைப் புரியவைக்கும். பழப்பூச்சி, சில பட்டாம்பூச்சி வகைகள் போன்று மனிதனும் தன் ரத்தவழியை கலப்பின்றி வைத்திருக்க ஒரு ஏமாற்று வித்தை வைத்திருக்கிறான்: கற்பொழுக்கம். பழப்பூச்சி புணர்ச்சிக்குப் பின் தனக்கான சின்ன அளவில் பெண்துணையின் புழையை புரதபொருள் கொண்டு அடைக்கும், அடுத்து வரும் ஆண்பூச்சியை தடுக்க. மனிதனோ பாலியல் ஒழுக்கம் பற்றிய கற்பிதங்கள் கொண்டு, கோடிக்கணக்கான ஆண் பெண்களை கட்டிப் போட்டிருக்கிறான். பாலியல் சட்டங்களை மீறுபவர்களுக்கு சமூகம் அடிப்படை மனித உரிமைகளை மறுத்து தள்ளி வைக்கும். இவர்கள் குப்பைத்தொட்டியில் நிரம்பி வழியும் குப்பைப் பொருட்கள் போன்று. யார் வேண்டுமானாலும் மிதிக்கலாம்.
ரத்தவழி சுத்திகரிப்பு பற்றிய ஆணின் நிரந்தர பதற்றம் தான் கற்பழிப்புச் சட்டங்களை ஒருதலை சார்பாய் இப்படி திருகி வைத்திருக்கிறது.
மகாராஷ்டிர மாநில மதுர்க்கர் vs. மர்திக்கர் வழக்கில் , நீதிமன்றங்களின் இந்த மனித உரிமை மீறல் போக்கை உச்ச நீதிமன்றமே கடுமையாக விமர்சித்துள்ளது.
கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூல உண்மையை வருணாசிரம முறைப்படி மறுத்த கொடுமையும் நடந்தது. பன்வாரி தேவி வழக்கில் நீதிபதி ஒருவர் பன்வாரி தேவி ஒரு தலித் என்பதால் அவரை ஒரு உயர்சாதி நபர் வன்புணர்ச்சி செய்திருக்க முடியாது என்று அபத்தமானதொரு தீர்ப்பு வழங்கினார்.
இந்தியாவில் பெண்களுக்கான நீதி ஆணாதிக்கவாதிகளால் செய்யப்பட்டு, ஆணாதிக்கவாதிகளாலே வழங்கப்படுகிறது. குரங்கு அப்பம் பங்கிட்டது போல்!
இங்கிலாந்து சட்டம் 'துளைப்பு வழி தாக்குதல்' எனும் குற்றமுறையை அடையாளம் காண்கிறது. இதன்படி குற்றவாளி ஒருவரது அனுமதி இன்றி அவரது புழை, வாய் அல்லது ஆசன வாயை உடலின் ஏதாவது பகுதி அல்லது பொருள் கொண்டோ துளைக்கும்பட்சத்தில் இக்குற்றத்திற்கு உள்ளாகிறார். ஆனால் குடுமி கலையாத நம் இந்திய பிற்போக்கு சட்டமோ நடைமுறை பாலியல் குற்றமுறைகளை கருத்தில் கொள்ளாமல், பெண்ணின் குறியைத் துளைப்பதை மட்டுமே வன்புணர்ச்சி என்று முரண்டு பிடிக்கிறது. 1997-இல் ஒரு 8-வயது பெண்குழந்தையை (பெயர், பிற விபரங்களை தவிர்ப்போம்) அவள் தந்தை புழை, ஆசனவாய், வாய் என மூன்று வழிகளில் வன்புணர்ச்சி செய்தார். சி.எஸ்.ஓ சாக்ஷி எனப்படும் பெண்கள் அமைப்பு இக்குழந்தையின் நீதிக்காக தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் தந்தை அக்குழந்தையை ஆண்குறியால் துளைப்பு செய்யவில்லை, ஆண்குறி நுழைப்பு மட்டுமே சட்டப்படி கற்பழிப்பு எனச் சொல்லி, வழக்கை தள்ளுபடி செய்தது.
கொஞ்சம் விலகி, மற்றொரு முக்கியமான கேள்வி. ஒருபால் உறவுகள் சட்டரீதியாய் அங்கீகரிக்கப்படாத நிலையில், ஒருபாலுறவாளர் மற்றொரு ஒருபாலுறவாளரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டால் நீதிக்கு யாரிடம் செல்ல வேண்டும்?
சில ஒப்புமைகள்:
இங்கிலாந்து சட்டப்படி ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்தது கணவனே என்றாலும் தண்டனை உண்டு. நம்மூரில் மனைவியை மண்ணெணெய் ஊற்றிக் கொளுத்தும் உரிமையே உள்ளபோது, கணவனது கற்பழிப்பு பொருட்படுத்தத் தகுந்த ஒன்றல்ல.
இந்தியாவில் கற்பழிப்பு வழக்கில் பெண்ணின் வன்புணர்ச்சிக்கு துணை நிற்கும் மற்றொரு பெண்ணை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை. ஆனால் இங்கிலாந்து சட்டம் இவர்களை குற்றவாளிகளாக கருதி விசாரிக்கும்.
பெண்கள் இந்தியாவில் ஒரு ஆணை கற்பழிக்கலாம். சட்டப்படி இத்தகைய கற்பழிப்பு செல்லுபடியாகாது. ஆண்களில் உடல் பலவீனர்கள், நோயாளிகள், ஊனமுற்றவர்கள் ஆகியோரது பாதுகாப்பின்மையை கருத்திற் கொள்கையில், கனடாவில் உள்ளது போல், இங்கும் கற்பழிப்புக் குற்றம் இருபாலாருக்குமானதாய் மாற்றப்படுவதில் தவறில்லை.
பாகிஸ்தானில் கற்பழிப்பு சட்டம் மேலும் பிற்போக்கானதுதான். கற்பழிக்கப்பட்ட பெண் நீதியைப் பெற, கற்பழித்தவர் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது கற்பழிப்பை பார்த்த நான்கு ஆண்கள் சாட்சி சொல்ல வேண்டும். மான், முயலுக்கெல்லாம் சிங்கம் நீதி வழங்கிய கதைதான்.
ஒப்பிடுவதில் பயனில்லை. நமது ஆணாதிக்கவாத, பிற்போக்குச் சட்டங்கள் திருத்தப்படுமா? தர்மம் எப்படியும் வெல்லும் என்கிறது கீதை. அதை விடுங்கள், அடிப்படை உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை கூட நாம் இந்தியர்களுக்கு இல்லை. ஆனால் ஓட்டப்பந்தயத்தில் ஆமை எப்படியும் ஜெயித்து விடும் என்பதைத் தவிர.
-ஆர்.அபிலாஷ்
நன்றி: உயிர்மை.காம்
1 கருத்து:
நல்ல பதிவு. தகவலுக்கு நன்றி.
கருத்துரையிடுக