வியாழன், மே 29, 2008

M.S. சுவாமிநாதன் - நேற்று விவசாயி, இன்று மீனவ நண்பன்...

கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கையைத் (COASTAL REGULATION ZONE NOTIFICATION) துடைத்தெறிந்துவிட்டுக் கடல்சார்சமூகங்களைக் கடற்கரையிலிருந்து வெளியேற்றித் தனியார் ஏகபோகத்துக்குக்கடற்கரையைத் தாரைவார்க்கும் உள்நோக்கத்தின் கவர்ச்சியான வடிவமே எம். எஸ். சாமிநாதனின் கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிக்கை (COASTAL ZONE MANAGEMENT NOTIFICATION).

விவசாயிகளின் தற்கொலைகளைத் தொடர்ந்து இந்தியக் கடலோரம் முழுவதும் பரவி வாழுகிற பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்ளும் நெருக்கடி உருவாகி வருகிறது. நடுவண் அரசின் குருட்டுத்தனமான ஆழ்கடல் மீன்பிடிக் கொள்கையினால் (1991) 2.02 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்புள்ள இந்தியத் தனியுரிமைப் பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone) அந்நிய ஆலைக் கப்பல்களால் சூறையாடப்பட்டு வருகிறது. ‘மீன்வள வளர்ச்சி’ என்ற பெயரில் பாரம்பரியக் கடலோர மீனவர்களின் எதிர்காலத்தைச் சூன்யமாக்கும் கொள்கைகளை அரசுகள் முனைப்புடன் நிறைவேற்றி வருகின்றன.
.
அரசு கொண்டுவர விரும்பும் ஒரு மேலாண்மைத் திட்டத்தில் தல சமூகங்களின் (பயனாளிகளின்) கருத்துப் பங்களிப்பு இருக்க வேண்டும். திட்டமிடுதலிலும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அங்கு வாழும் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆனால் தனியாரின் இலாபதோக்கு நடவடிக்கைகளைத் தாராளமாய் அனுமதிக்கும் நோக்குடன் சுற்றுச்சூழல் சட்டங்களையும் ஒழுங்காற்று விதிகளையும் வளைப்பது அல்லது ஒழிப்பது என்பதான போக்கினை நெடுங்காலமாக அரசு மேற்கொண்டு வருகிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த அணுகுமுறையின் இன்னொரு வடிவமாகவே கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிக்கை அமைந்திருக்கிறது. அறிவியல் கருத்துகளை ஆயுதமாகப் பிரயோகித்துக் கடற்கரைகளைத் தனியாரின் பெருந்தொழில் முதலீடுகளுக்குத் தாரைவார்க்கும் அரசின் இரகசியத் திட்டம் இந்த அறிவிக்கையில் பூடகமாகத் தெரிகிறது. பெரும் தொழிற்சாலைகளைக் கடற்கரைகளில் நிறுவுவதற்கு ‘இடையூறாக’ இருக்கும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை விதிகளையும் பிற சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதிகளையும் துடைத்தெறிவதே சாமிநாதன் அறிவிக்கையின் மைய இலக்காகத் தென்படுகிறது.
.
இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளில் குடியிருக்கும் மீனவர்கள் ஒரு கோடி கடல் மீன்வளங்களை மட்டுமே நம்பி வாழும் இந்தப் பூர்வகுடிகளின் வாழ்வாதாரத்திற்கும் வாழிடங்களுக்கும் புதிய வடிவங்களில் அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருக்கின்றன. வன உயிர்ப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம், மீன்பிடி ஒழுங்காற்றுச் சட்டம், கடற்கரை ஒழுங்காற்றுச் சட்டம்-இப்படி ஒவ்வொரு காலத்திலும் வருகிற சட்டங்கள் வறுமையுற்ற மக்களுக்கு எதிராகவே பாய்கின்றன். மீன் இறக்குமதிக் கொள்கை, அந்தியக் கப்பல்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி உரிமம் வழங்கும் கொள்கை, பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகள் (Marine Protected Areas) கொள்கை என்று பலப்பல அரசுக் கொள்கைகளால் கடல்சார் சமூகங்கள் தொடர்ந்து பேரிழப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த வேளையில் இந்தியாவின் ஒட்டுமொத்த கடலோர மக்களுக்கும் பேரிடியாக விழுந்திருக்கும் ஒரு அறிவிக்கைதான் கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிக்கை. இந்தியப் பசுமைப் புரட்சியின் பிதாமகர் என்று புகழப்படும் ம. சா. சாமிநாதனின் தலைமையிலான கமிட்டி பிப்ரவரி 2005இல் கடற்கரை மேலாண்மை மண்டல வரைவுக் கொள்கையை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு 2007 மே மாதம் கடற்கரை மேலாண்மை மண்டல வரைவு அறிவிக்கையை (Draft Notification on Coastal Management Zone) வெளியிட்டுள்ளது. இவ்வரைவு வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குப்பின் மத்திய அரசு இதனைப் பரிசீலித்து ‘அறிவிக்கை’ (சட்டம்) ஆக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
.
பாரம்பரிய மீனவர்கள் இருவேளை உணவுக்கே திண்டாடும் நிலையில் கரைக்கடலும் கடற்கரையும் பாரம்பரிய உரிமையாளர்களாகிய மீனவர்களிடமிருந்து பறிக்கப்படும் சூழ்நிலையை மத்திய அரசின் தேசியக் கொள்கைகள் உருவாக்கி வந்திருக்கின்றன. ஆண்டுக்கு 2.25 மில்லியன் டன் புரத உணவினை நாட்டுக்கு அறுவடை செய்து வழங்குகிற, ஆண்டுக்கு ரூபாய் 6300 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி ஈட்டித் தருகிற பூர்வகுடி மீனவனுக்கு இனி கடற்கரை சொந்தமில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்குறது.
.
மத்திய அரசு 1991இல் கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையை அறிமுகம் செய்த்தும் அதனடிப்படையில் கடலோர மாநில அரசுகள் தங்கள் மாநிலக் கடற்கரைப் பகுதிக்கான ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மைத்திட்டத்தைத் (Integrated Coastal Zone Management Plan) தயாரித்து நடுவண் அரசின் ஒப்புதலோடு நடைமுறைப்படுத்த நடுவண் அரசு ஆணை பிறப்பித்ததும் பழைய கதை.
.
கடற்கரையில் பெருந்தொழிற்சாலைகள் நிறுவவும் பெருந்தொழில் சுற்றுலா நடவடிக்கைகளைத் துவக்கவும் கடற்கரைப் பொழுதுபோக்குப் பண்ணைகள் நிறுவவும் கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை 2003 வரை 19 முறை திருத்தம் செய்யப்பட்டது. கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை (1991) வகைப்படுத்தியுள்ள நான்கு வகைக் கடற்கரை மண்டலங்களில், குறிப்பாக மீனவ சமூகங்களின் குடியிருப்புகளை உட்படுத்துகிற இரண்டாம் வகை மண்டலத்தில் தொழிலதிபர்கள் நடத்திவரும் விதிமீறல்கள் இன்றுவரை இந்த அறிவிக்கையின்கீழ் தண்டிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் கிழக்குக் கடற்கரைச் சாலைத் திட்டம் ஏராளமான மீனவக் குடியிருப்புகளை இடம்பெயரச் செய்தவேளையிலும் ஊடகங்கள் மௌனம் காத்து நின்றன. பாரம்பரிய மீனவர்கள் இதனால் கடற்கரையிலிருந்து பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தொலைவுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். பாரம்பரிய மீனவர்கள் தினமும் கடலைத் தொட இருபத்தைந்து ரூபாய் செலவிடவேண்டும். பணம் படைத்தவர்களின் பண்ணை விடுதிகளோ அலைவாய்க் கரையில் அமைக்கப்பட்டு தொலைவிலிருந்து வரும் சுற்றுலா அன்பர்கள் கடலை முகமுகமாய்த் தரிசிந்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
.
இந்த வேளையில்தான் 2004 டிசம்பர் ஆழிப்பேரலை இந்தியக் கடலோரத்தைத் தாக்கி 14,000 பேரைக் காவு கொண்டதுடன் மதிப்பிட முடியாத உடமைகளையும் பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்தியது. மக்களின் காவலர்கள் அப்போது புதிய அவதாரம் எடுத்தனர். குடும்பத்தின் வருவாய் ஈட்டும் உறுப்பினரையும் உற்றாரையும் இழந்து துயர்ப்பட்டு நின்ற மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அந்தக் கட்டத்திலேயே மீனவ மக்கள் கடல் விளிம்பிலிருந்து இடம்பெயர்ந்து உட்பகுதிக்குப் போய்விட வேண்டும், அதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பானது என்று ஓதத் தொடங்கினார்கள்.
.
இயற்கைப் பேரிடர் அச்சத்தில் ஆட்பட்டிருந்த மக்களை இடம்பெயர்த்த பிறகு கடற்கரையைப் பெருமுதலீட்டாளர்களுக்குத் தாரைவார்க்கும் அரசின் இரகசியத் திட்டத்தைப் பல மீனவர் நல இயக்கங்கள் மக்களுக்கு உயர் வெளிச்சம் போட்டுக் காட்டின. சில தொண்டு நிறுவனங்கள் “மீனவர்களுக்குப்பழைய இடத்திலேயேதான் வீடுகட்டித் தருவோம்” என்ற தெளிவான நிலைப்பாட்டுடன் இயங்கின. விளிம்பு நிலையினர் சார்பு நிலைப்பாடு என்னும் வகையில் இவை பாராட்டுக்குரிய நடவடிக்கைகளாகும்.
.
பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகள் (Marine Protected Areas) என்னும் ஒரு புதிய கொள்லையை 1980களில் அறிவித்த நடுவண் அரசு இந்தியக் கடல்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மூன்று விழக்காடு பரப்பை அடையாளப்படுத்தி அங்கெல்லாம் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதித்தது. மாநில அரசுகளின் வனத்துறையினர் கடற்கரைக் காட்டுப் பகுதிகளில் மீனவர்களுக்குப் பல்வேறு வகையில் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில் ஜம்புதீப் கடல் தீவுப் பகுதி மீனவர்கள் பயன்படுத்தி வந்த பகுதி. மஹாராஷ்டிராவின் மால்வான் பகுதியும் அதுபோன்றதே. கடந்த சில ஆண்டுகளாக, பாரம்பரிய மீனவர்களுக்கு இங்கெல்லாம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாற்பது வருடங்களாகப் பத்தாயிரம் மீனவர்கள் புழங்கிவந்த ஜம்புதீப் தீவிலிருந்து அவர்களை 2002 செப்டம்பரில் மேற்கு வங்காள வனத்துறை வெளியேற்றியது.
.
‘பாரம்பரிய மீனவக் குடிகளின் கடற்கரைக் குடியிருப்புப் பகுதிகளையும் அவர்களின் கடலியல் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் நோக்குடன்’ என்கிற கவர்ச்சி வாசகத்துடன் தொடங்குகிறது சாமிநாதனின் கடற்கரை மேலாண்மை வரைவு அறிவிக்கை. கடற்கரைச் சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் காப்பதை முதன்மை நோக்கமாகப் பிரஸ்தாபித்துக் கொள்ளும் சாமிநாதன் கமிட்டியானது, கடற்கரையில் கனிம வண்டல் மற்றும் கனிமங்களைத் தோண்டியெடுப்பது தேசிய முன்னுரிமை என்கிறது.
.
கரைக்கடல் மீன்வள வளர்ச்சிக்குக் கழிமுகங்கள் மிக முக்கியமானவை. சாமிநாதன் கமிட்டி கழிமுகப் பகுதிகளின் நீடித்த மேலாண்மைக்கான எவ்விதமான கொள்கையையும் வெளிப்படையாகப் பேசவில்லை. கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நன்னீர் வளங்களைக் காப்பதற்கும்கூட எந்தவிதமான வழிமுறைகளோ, கொள்கையோ இந்த வரைவு அறிவிக்கையில் இல்லை. 1991இல் அமல்படுத்தப்பட்ட கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையில் கடல் ஏற்றவற்றப் பகுதியில் (Interidal area) அமைந்திருக்கும் மீனவர் குடியிருப்புகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாமிநாதன் வரைவு அறிவிக்கையில் இக்குடியிருப்புகளுக்கான பாதுகாப்பு உரிய முறையில் வலியுறுத்தப்படவில்லை.
.
‘கடற்கரை வளங்களை அறிவியல் ரீதியாக மேலாண்மை செய்யும்’ நோக்கத்தை முன்வைத்துப் பேசும் சாமிநாதன் அறிக்கையில் கடல் ஏற்றவற்றப் பகுதியில் பல்கிப்பெருகும் உயிரின வளங்களும் அவற்றின் வாழிடங்களும் பற்றிய புரிதல் சற்றும் இல்லை. கரைக்கடலின் அடித்தளத்தில் உயிர்வாழுகிற, எளிதில் அழிந்துவிடும் பல்லுயிர்ப் பெருக்கங்கள் குறித்து இந்த மேதாவிலாச அறிக்கையில் ஏதும் மேசவில்லை. நீடித்த மீன்வளத்திற்குஇப்பல்லுயிர்ப் பெருக்கம் இன்றியமையாதது என்பதை சாமிநாதன் குழு புரிந்துகொள்ளவில்லையா?
.
சாமிநாதன் வரைவு அறிவிக்கை முழுவதும் பல மாயையான சொல்லாடல்கள் விரவி வருகின்றன. 1991இல் அமல்படுத்தப்பட்ட ‘ஒழுங்காற்றுதல்’ (Regulation) என்ற பதத்துக்குப் பதிலியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையின் அரசியலைக் கூர்மையாகப் பார்க்க வேண்டும். இங்கு பிரயோகிக்கப்படும் ‘மேலாண்மை’ என்ற வார்த்தை கடற்கரை வளங்களைத் தனியார் ஏகபோகத்துக்குத் திறந்துவிடப் பரிந்துரைக்கும் அளவில் விளக்கப்படுகிறது. கடற்கரை ஓழுங்காற்று அறிவிக்கை அமலில் இருந்த காலத்தில் அரசுத் துறையினரின் ‘நல்லாசியுடன்’ தனியார் நிறுவனங்கள் கடற்கரையில் பல்வேறு அத்துமீறல்கள் செய்தன். எனினும் 1991 ஒழுங்காற்று அறிவிக்கையின் அடிப்படையில் பொதுநலன் கருதி நீதித்துறை தலையீடு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
.
கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை தந்து வரும் பாதுகாப்பு

* கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை (1991) மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட்டு பாதிப்படைந்தோருக்கு நீதி வழங்க வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டின் கடலோரங்களில் மக்கள் இயக்கங்களின் நடவடிக்கைகளாலும் நீதிமன்றத் தலையீடுகளாலும் மேற்சொன்ன இரு அறிவிக்கைகளின் மூலமாக பல அழிவுப்பூர்வமான திட்டங்கள் முடக்கப்பட்டன; இதனால் மீனவ மக்களின் கடலோரக் குடியிருப்புப் பகுதிகளும் கடற்கரை வளங்களின் மீதான அவர்களின் பாரம்பரிய உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

*கடலோரத்தில் உவர்நீர் இறால் பண்ணைகள் உச்கநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தடை செய்யப்பட்டன.

*மன்னார் வளைகுடாப் பகுதியிலிலுள்ள கடல் உயிர்ககோளச் சூழலியலைப் பாதுகாத்திடும் பொருட்டு வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் துறைமுகம் தடைசெய்யப்பட்டது.

*செய்யூரில் அமையவிருந்த அனல்மின் நிலையம் தடை செய்யப்பட்டுக் கழிவேலிக் கழிமுகம் பாதுகாக்கப்பட்டது.
.
ஆனால் சாமிநாதன் அறிவிக்கை அந்த அத்துமீறல்களையெல்லாம் சட்டபூர்வமாக்கிவிடுகிறது. அதுபோலவே ‘தடை’ என்ற சொல்லுக்குப் பதிலாகக் ‘கட்டுப்பாடு’ என்ற சொல் உள்நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாசுக்குறைப்பு செய்யாமல் ஆலைக் கழிவுகளைக் கடலில் கொட்டுவதைத் தடை செய்யும் பேச்சுக்கே இந்த அறிவிக்கையில் இடமில்லை. இந்தக் கோணத்தில் நோக்கினால் ‘அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான சீர்திருத்தம்’ என்ற சொற்பிரயோகம் பூர்வகுடி கடலோர மக்களின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது.

கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கையில் (1991) பூர்வகுடி மீனவர்களுக்குப் பாதகமான பல கூறுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ‘கடற்கரை நிர்பந்தமாய்த் தேவையுறும் நடவடிக்கைகளுக்காக மட்டுமே கடற்கரைப் பகுதி பயன்படுத்தப்படலாம்’ என்ற கருத்தியல் அணுகுமுறைதான் கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையில் மக்களுக்குச் சாதகமாக இருக்கும் சிறப்பு அம்சம். அதனால் கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையைச் செயல்படுத்துவதில் மக்களின் ஒப்புதல் ஒரளவு இருந்தது. ஆனால் சாமிநாதன் பரிந்துரைக்கும் கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிக்கையானது மேற்சொன்ன ஒழுங்காற்று அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

கடற்கரை மேலாண்மை அறிவிக்கை ‘பலவீனக் கோடு’ (Set back line) என்ற புதிய பதத்தைப் புகுத்திக் கடற்கரைக்குத் தொடர்பில்லாத பல்வேறு நடவடிக்கைகளை அங்கே அனுமதிக்க வழிசெய்கிறது:

*நடப்பிலுள்ள ஒழுங்காற்று அறிவிக்கையில் கடற்கரை மண்டலங்கள் 2 மற்றும் 3இல் பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலாண்மை அறிவிக்கையோ அந்தத் தடைகளனைத்தையும் நீக்கிக் கிராமப்புறங்களை நகர்மயமாக்கிட வழிகோலுகிறது.
.
*ஒழுங்காற்று அறிவிக்கையில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (மண்டலம் ஒன்று) என்று குறிக்கப்பட்ட இடங்களில் மேலாண்மே அறிவிக்கை பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை அனுமதிக்கிறது. இதனால் கடற்கரைச் சூழலியல் வளங்கள் முற்றாய் அழிந்துவிடும் அபாயமிருக்கிறது.

.
*இப்படியெல்லாம் அனுமதிக்கப்படவிருக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் முறைமைகள் ஏதும் மேலாண்மை அறிவிக்கையில் சொல்லப்படவில்லை. கடற்கரை மேலாண்மை அறிவிக்கையானது கடற்கரைப் பாதுகாப்பை முன்வைத்துத் தயாரிக்கப் பட்டதல்ல என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

.
*1991 கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கையின் ‘குறைபாடுகளைச்’ சுட்டிக்காட்டும் சாமிநாதன் அறிவிக்கையில் தரப்படும் பரிந்துரைகள் மீனவர்களின் கடல் உரிமைக்கும் (sea access) வாழ்வாதார உரிமைக்கும் (right to livelihood) கடும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.
.
கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கையில் பாரம்பரிய மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்கள், விதிவிலக்குகள் மற்றும் பாதுகாப்புகள் சாமிநாதன் குழு தயாரித்துள்ள கடற்கரை மேலாண்மை மண்டல வரைவுத் திட்டத்தில் காணாமல் போயின. கடற்கரை மற்றும் கடல் பகுதிகளின் பல்வகைப் பயன்பாடுகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற 1991 க. ஒ. சட்டத்தின் மையச் சரடு சாமிநாதன் திட்டத்தில் அறுந்து கிடக்கிறது.
.
‘மேலாண்மை’ என்ற வளர்ச்சி வாசகம் தாங்கிவரும் இந்த சாமிநாதன் வரைவு அறிவிக்கை அனைத்துத் தரப்புப் பங்காளிகளுடன், குறிப்பாக மீனவ மக்கள் மற்றும் மீனவ இயக்கங்களுடன் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதே மீனவர்கள் முன்வைக்கும் முதல் கோரிக்கை. ‘ஒழுங்காற்று’ (முறைப்படுத்தல்) என்ற அணுகுமுறைக்குப் பதிலாக ‘மேலாண்மை’ (சாமிநாதன் பரிந்துரை) என்ற பிரயோகம் நுழைந்திருப்பதை மீனவ சமூகந்தின் வாழிட - வாழ்வாதார உரிமைக்கே அச்சுறுத்தலாக மீனவர்கள் கருதுகின்றனர்.
.
கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை அமுல்படுத்தப்பட்டு 16 ஆண்டுகள் ஓடிவிட்டன். சுனாமி பேரிடருக்கு முன்னர் எத்தனை கடலோர மாநிலங்கள் ‘ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மைத் திட்ட’ வரைபடங்கள் தயாரித்து நடுவண் அரசிடம் சமர்ப்பித்திருந்தன? எத்தனை மாநிலங்கள் தங்கள் கடற்கரைகளில் கடல் ஏற்றக் கோட்டிலிருந்து (High Tide Line) 500 மீட்டர் எல்லையை வரையறுத்திருந்தன?
.
சாமிநாதன் பரிந்துரைக்கும் புதிய அறிவிக்கையை நடப்பாக்குமுன் நடுவண் அரசு 1991இல் வெளியிட்ட ஒழுங்காற்று அறிவிக்கையை கடலோர மாநில அரசுகள் எந்த அளவு நடைமுறைப்படுத்தியிருக்கின்றன என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை இரண்டாவது மண்டலமாகக் குறிப்பிட்டுள்ள பகுதிகளை சாமிநாதன் வரைவு அறிவிக்கை மாற்ற முனைவது மீனவ சமூகங்களுக்கு ஏற்புடையதல்ல. சிறப்புப் பொருளாதார மண்டலம், துறைமுகங்கள், சுற்றுலா, கடற்கரை அழகுபடுத்தும் திட்டம், சுரங்க அகழ்வு முதலிய நடவடிக்கைகளுக்காகக் பாரம்பரிய மீனவர்களின் பூர்வீக வாழிடங்களாய் இருந்துவரும் கடற்கரை நிலங்கள் ஒதுக்கப்படக்கூடாது.
.
தொன்றுதொட்டு நீடித்துவரும் கடற்கரை நிலங்களின் மீதான மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பது பற்றி சாமிநாதன் அறிவிக்கை எள்முனையளவுகூடப் பேசவில்லை. இது இந்த அறிவிக்கையின் விசித்திரமான விடுபடல்களில் ஒன்று. க. ஒ. அறிவிக்கை (1991) இந்த உரிமையைத் தெளிவாக உறுதி செய்திருந்தது. சுற்றுலா வளர்ச்சிக்குச் சாமிநாதன் அறிவிக்கை காட்டியிருக்கும் தாராளம் மீனவர்களைக் கடற்கரைகளிலிருந்து இடம்பெயர்க்கும் அபாயத்தை உருவாக்குகிறது.
.
கடற்கரைப் பகுதிகளில் மீனவர்கள் குடியிருக்கும் உரிமை, மீன்பிடி தொழில் தேவைகளுக்குக் கடற்கரை நிலங்களைப் பயன்படுத்தும் உரிமை, கடல் வளங்கள் மீதான தொடர்பு உரிமை (access right to marine resources) என்கிற மூன்றும் மீனவர்களின் பிரிக்க முடியாத உரிமைகளாகும். இந்த வாழிட, வாழ்வாதார உரிமைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பறித்துவிட வழிவகுக்கும் எந்தவொரு சட்டத்தையும் இந்தியாவின் ஒரு கோடி மீனவர்களும் ஒட்டுமொத்தமாய் எதிர்த்துப் போராடுவார்கள்.
.
கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் (Coastal Regulation Zone) போலவே கரைக்கடல் ஒழுங்காற்று மண்டலம் (Littoral Regulation Zone) என்னும் மற்றோர் விஷயம் இருக்கிறது. சாமிநாதன் கமிட்டியோ 12 கடல் மைல் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளை க. மே. மண்டலத்தில் உட்படுத்திவிட வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறது. பாரம்பரிய மீனவர்களுக்குப் பாதகம் செய்யும் ஒரு எத்தனிப்பு இது. கடற்கரை மற்றும் கரைக்கடல் பகுதிகளை மேலாண்மை செய்வதில் மீனவர்களின் முழுமையான பங்கேற்பை உட்படுத்த வேண்டும் என்றோ, மீனவர்களின் ஜீவாதார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றோ சாமிநாதன் அறிக்கையில் எங்கும் சொல்லக்காணோம். சÊ£மிநாதனின் ஆர்வங்கள் எந்தத் திசையில் நகர்கின்றன என்பதை மீனவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
.
இந்தியாவின் கடலோரங்களில் வாழும் ஒரு கோடி மீனவர்களின் வாழ்க்கையை ஒரேயடியாய்ப் புதைத்தொழிக்கும் சூட்சுமத்துடன் சாமிநாதன் கமிட்டி சமர்ப்பித்துள்ள இந்தக் கடற்கரை மேலாண்மை மண்டல வரைவு அறிவிக்கையினை எல்லைக்கடலுக்கு அப்பால் எறிந்துவிடவேண்டும் என்பதே மீனவர்களின் நிலைப்பாடு. பூர்வகுடி மீனவர்களின் வாழ்வுரிமை காத்திட இவ்வறிவிக்கைக்கு எதிராக ஒட்டுமொத்த கடற்கரைச் சமுதாயத்தினரும் திரண்டெழுந்து நாடுதழுவிய எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.
.
கடல்சார் சமூகங்கள் நடுவண் அரசிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன?
*சாமிநாதன் வரைவு அறிவிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும்.
*1991 கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கையை (1991) முழுமையாக அமல்படுத்த மேண்டும்.
*1991 அறிவிக்கைக்கு எதிராக அத்துமீறல் செய்தவர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.



-வறீதையா கான்ஸ்தந்தின்
நன்றி: http://www.wwfishers.net/

1 கருத்து:

அகராதி சொன்னது…

M.S. ஷ்ஸ்வாமிநாதனை விவசாய விஞ்ஞானி என்றுதானே நேற்றைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் முதல் நாளைய முதல்வர் விஜயகாந்த் வரை சொல்லிக் கொண்டிருந்தனர்.

அவருக்கும் கடலுக்கும் என்ன தொடர்பு? விவசாயிகளை கொன்றது போதாது என்று மீனவர்களையும் கொல்ல அவர் புறப்பட்டு விட்டாரா?

கருத்துரையிடுக