செவ்வாய், மே 27, 2008

பாமரனின் ஃபாசிசக்குரல் - மு.சிவகுருநாதன்

லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறையினர் நடத்திய ‘கனாக்காலம் - 2007’ என்ற கருத்தரங்கில் ‘சினிமாவும் சமூகமும்’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்த கவிஞர் லீனா மணிமேகலை ‘துப்பட்டா’அணியாததால் கல்லூரிவாசல் வரை சென்று திரும்பினார்.

அந்த கருத்தரங்கில் பாலு மகேந்திரா, அஜயன்பாலா, ஞாநி, பாமரன் போன்றோர் கலந்து கொண்டனர். இது பற்றி கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை ‘இந்த இடம் எங்களுக்கு கோயில் போன்றது’ என்று கூறுகிறார். அவருடைய பார்வையில் அது சரியானதுதான். ஆனால், அந்த விழாவில் கலந்து கொண்ட பாமரன் பண்பாடு, நம்பிக்கைகள் பற்றி நிறைய பிதற்றியிருக்கிறார் (குமுதம் ரிப்போர்ட்டர் - 27.12.2007).
பாமரனைப்போல வள்ளலாரையும், சங்காரச்சாரியையும் பெரியார் ஒன்றாகப் பார்க்கவில்லை; வேறுபடுத்தித்தான் பார்த்தார். விநாயகர் சிலை உடைத்தல், ராமர் படத்தை செருப்பால் அடித்தல் போன்ற எதிர்க் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெரியாரை பாமரன் பண்பாட்டின் பெயரால் கொச்சைப்படுத்துகிறார். “இந்துக்கள் தவிர பிற மதத்தினர் உள்ளே வரக் கூடாது. ஆண்கள் மேலாடையுடன் வரக் கூடாது, பெண்களே வரக்கூடாது” என்றெல்லாம் விதிகள் உள்ளது செருப்பைக் கழற்றிப் போட வேண்டும் என்பதைப் போல.
.
மேலும் ‘தலித்கள், சூத்திரர்கள் கோவிலுக்கு நுழையக்கூடாது, அர்ச்சகர் ஆகக் கூடாது, தேர் இழுக்கக் கூடாது, டீக்கடையில் தனி கிளாஸில்தான் டீ குடிக்க வேண்டும்... என்றெல்லாம் விதிகள் உள்ளன. பண்பாடு கருதி பாமரன்கள் இவற்றைக் கடைபிடிக்கட்டும். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை.
“சண்டைக்கோழி வசனப் பிரச்சினையில் போராட்டம் செய்தவர்கள் ‘சிவாஜி’ ‘அங்கவை, சங்கவை’ பிரச்சினையில் எங்கே போனார்கள்?" என்றெல்லாம் ‘சோ’வைப்போல மிகவும் அறிவுப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல் நாமும் கேள்வி எழுப்பலாம். எல்லாவற்றிற்கும் முன் நிபந்தனைகள் விதிக்கும் பாமரன் போன்றவர்கள் எதற்கு குரல் கொடுத்தார்கள் - கொடுக்கவில்லை என்று விரிவாக எழுத இங்கு இடமில்லை.

தமிழ் சினிமா சிறுபான்மையினர், தலித்கள், பெண்கள், அரவாணிகள், மாற்றுத்திறனுடையோர் போன்றோரை ஒவ்வொரு படங்களிலும் இழிவான முறையில் சித்தரித்து வருகிறது. தொடக்க கால கருப்பு-வெள்ளைப் படங்களிலிருந்து பாமரன் போன்றவர்கள் போற்றும் பருத்திவீரன், கற்றது தமிழ் போன்ற படங்கள் வரை இந்நிலைதான்.
.
அதைப்பற்றியெல்லாம் பாமரன் உள்பட பலர் தட்டிக் கேட்டதில்லை. ‘சிவாஜி’ படத்தில் ‘அங்கவை-சங்கவை’ கதாபாத்திரங்கள் மூலம் இவர்கள் கருமை நிறமுடைய பெண்களை கொச்சைப் படுத்தப்பட்டதற்காக கொதிக்கவில்லை.

பதிலாக தமிழ்க் கலாச்சாரம், தமிழ்க்குடிப்பெருமை மீதான தாக்குதல் என்று தாங்கமுடியவில்லை இவர்களால். அங்கவை-சங்கவைக்குப் பதிலாக குட்டி ரேவதி, லீனா மணிமேகலை என்று பெயர் வைத்திருந்தால் பாமரன்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
.
அப்படி நடந்திருந்தால் ரஜினி, சுஜாதா, சங்கர், மன்னிக்கவும் ஷங்கர், சாலமன் பாப்பையா போன்ற வியாபாரிகளுக்கு பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள். பாமரன் போன்றவர்கள் எழுதியும், பேசியும் வருபவை மாற்றுச் சிந்தனைகள் என்ற போர்வையில் கலாச்சார போலீஸ்களின் பாசிசக் குரலையே.

-மு.சிவகுருநாதன்
நன்றி:
மார்ச் - மே 2008

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

போடு..அப்படிப் போடு..

லொள்ளு பாமரனுக்கே லொள்ளா?

போடு..அப்படிப் போடு..

கருத்துரையிடுக