உங்கள் பிறப்பு, பெற்றோர் குறித்து தெரிந்து கொள்ளலாமா?
என்னோட அப்பா, அம்மா இதே ஊர்தான். அப்பா ராமகிருஷ்ணன், ரிக்ஷா ஓட்டினார். அம்மா நகராட்சி துப்புரவுத் தொழிலாளியாக வேலை செஞ்சாங்க. நான்தான் கடைசி. எனக்கு ஒரு அண்ணன், இரண்டு அக்கா. அண்ணன் இப்போது இல்லை. இறந்து விட்டார். இரண்டு அக்காவும் சென்னையில இருக்காங்க. நான் 3ஆவது வரை படிச்சி நின்னுட்டேன். ரிக்ஷா ஓட்டுனதால அப்பா நிறைய குடிப்பார். அதனாலயே அவருக்கு உடம்பு சரியில்லாம போனது. அம்மாவும் இறந்துட்டாங்க. அண்ணன், அக்கா எல்லாம் கல்யாணம் ஆயிபோயிட்டாங்க. 3ஆவது வர படிச்சிட்டு வீட்ல சும்மா இருந்த நான், என்னோட அப்பாவ காப்பாத்தறதுக்காக கட்டடம் கட்டறதுக்கு சித்தாள் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.
உங்களோட திருமணம், குடும்பம் பற்றி சொல்லுங்கள்...
எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மனோகரன் அவரோட பேரு. அவரும் ரிக்ஷாதான் ஓட்டுனாரு. எங்க அப்பா மாதிரியே குடிச்சி, உடம்பு சரியில்லாம இருந்து செத்துட்டாரு. அதுக்கப்புறம் சித்தாள் வேலைக்குதான் போயிக்ச்கிட்டு இருந்தேன். அதுல கிடைக்கிறத வச்சிதான் என் பொண்ணு, பையன் ரெண்டு பேரையும் வச்சிகிட்டு வாழ்ந்தேன். இப்ப என்னோட பொண்ணு வள்ளிக்கு வயது 18, மகன் மணிமாறனுக்கு 13 வயது ஆவுது, 8ஆவது படிக்கிறான்.
கட்டட வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நீங்க, இந்த வேலைக்கு எப்படி வந்தீங்க?
என்னோட வீட்டுகிட்ட இருந்து மரகதம்னு ஒருத்தவங்க, ஆஸ்பத்திரில பெருக்கி, கூட்ற வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு தடவ உடம்பு சரியில்லாம போனப்ப, என்ன கூப்பிட்டு, உனக்குதான் அடிக்கடி வேலை கிடைக்கலையே, பசங்கள வேற வச்சிகிட்டு கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்கிற, எனக்கும் உடம்புக்கு சரியில்லாம இருக்கு. ஆஸ்பத்திரிக்கு கூடமாட வந்து ஒத்தாசை செஞ்சீன்னா, உனக்கும் ஏதோ வருமானம் வந்த மாதிரி இருக்கும்னு சொன்னாங்க. அப்ப அவங்க கூட ஆஸ்பத்திரிக்குப் போக ஆரம்பிச்சேன்.
அவங்களோட சேர்ந்து பிரசவ வார்டெல்லாம் சேர்த்துப் பெருக்குவேன். அதுக்கு அவங்க எப்பவாது 5 இல்ல 10 ரூபா தருவாங்க. இது 13 வருசத்துக்கு முன்னாடி. அப்புறம் ஆஸ்பத்திரிக்கு தினமும் போக ஆரம்பிச்சேன். அப்ப என்னோட பெரியப்பா மகன் துளசியண்ணன்தான் ஆஸ்பத்திரியில பிணம் அறுக்குற வேலையை செஞ்சிகிட்டு இருந்திச்சி. இப்படி ஆஸ்பத்திரியில பெருக்கி, கூட்டுறது, அப்புறம் யாராவது டாக்டர், நர்ஸ் சொல்ற வேலைகளை செஞ்சிகிட்டு இருந்தேன்.
ஒரு இரண்டு வருசம் இப்படிப் போச்சு, அப்புறம் எங்க அண்ணன் துளசி இறந்து போயிட்டாரு. அப்பதான் எங்க அண்ணன் கூட வேலை செஞ்ச நடராஜன்கிறவரு என்ன உதவிக்கு கூப்பிட்டாரு. நானும் அண்ணன் செஞ்ச வேலைதானேன்னு போனேன். அறுத்து, போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சி, தைச்சி வச்சிருக்கிற பாடிய நல்லா துணி சுத்தி, எடுத்துக்கிட்டு போற மாதிரி பேக் பண்ற வேலையைத்தான் முதல்ல செஞ்சேன். இப்படி ஒரு மூணு மாசம் அறுக்கறதையும், தைக்கறதையும் கூடவே இருந்து பார்த்தேன்.
கொஞ்சம், கொஞ்சமா பாடிகிட்ட போய் அறுக்கும்போதும் கூடவே நின்னு, அறுக்கறதுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன். அந்த மாதிரி பாடிய அறுத்து, தைக்கும்போது மனசு பாதிச்சு வேலை பாதியில நின்னுடாம இருக்கறதுக்காக, பாடிய அறுக்கும்போது குடிச்சிட்டா ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிப் பழக்கப்படுத்தினாங்க.அதுக்கப்புறம் நான் தனியாவே நின்னு, அறுத்து, டாக்டர் சொல்றத எடுத்துக் கொடுத்திட்டு, தைக்கறது, பேக் பண்றதுன்னு எல்லா வேலையும் நானே செய்ய ஆரம்பிச்சேன். முதல்ல பாடிய அறுக்கும் போது மட்டும் குடிக்க ஆரம்பிச்ச நான், கொஞ்ச நாளைக்கப்புறம் நிறைய பாடி வர, வர ரொம்ப மனச பாதிக்க ஆரம்பிச்சதும், ஆஸ்பத்திரிக்கு வரும்போதே குடிக்க ஆரம்பிச்சேன்.
ஒரு உடலை அறுக்கும்போது உங்களுக்கு மனசுல எத்தகைய உணர்வுகள் தோன்றும்?
எனக்கு எதுவும் தோணாது. ஏன்னா, அந்த மாதிரி எதுவும் தோணக்கூடாதுன்னுதான் குடிச்சிட்டுப் போறது. இதுவரைக்கும் ஒரு பாடிய கூட நான் குடிக்காம தொட்டதே கிடையாது. குடிக்காம போனா தொடவே முடியாது. அதையும் மீறி சில நேரத்தில் மனசு சங்கடமா, அருவருப்பா தோணும். எதுன்னா, தண்ணில ஒரு வாரம், இல்ல 10 நாளுன்னு ஊறுன பாடி எல்லாம் ஊதிப்போய், அழுகிப்போய் பாக்கவே அருவருப்பா வரும். அந்த நேரத்தில் கூட கொஞ்சம் தண்ணிய போட்டுக்கிட்டு போய் செஞ்சிடுவேன். பாத்து, பாத்து மனசு ரொம்ப மரத்துப் போச்சி, எதிலயும் பிடிப்பே இல்லாம ஆயிடுச்சி.
அந்த மாதிரி அதிகம் கெட்டுப்போன உடலை அறுக்கும்போது மருத்துவர் உடன் இருப்பார்களா? தொற்று ஏற்படாம இருக்க என்ன செய்வீங்க?
எல்லா பாடிக்கும் டாக்டர் இருப்பாங்க. ஒரு 10 அடி தள்ளி நிப்பாங்க. பாடிய அறுத்ததும், அவங்க சொல்றத, கேக்குறத எடுத்துக் கொடுத்திட்டு தச்சிடுவேன். ஒரு வாரம், 10 நாளுன்னு தண்ணில ஊறியும், எங்கயாவது காடு, கீடுன்னு கண்காணாத இடத்துல வெட்டிப்போட்டு அழுகிப்போயும் வர்ற பாடிய செய்யும் போது, ரூம்ல நிறைய டெட்டால், ஸ்பிரே அடிச்சி விட்ட பிறகு டாக்டர் வருவாங்க. நான் அந்த மாதிரி பாடி வரும்போது வழக்கமா குடிக்கிறத விட, கூட கொஞ்சம் குடிச்சிடுவேன்.
எப்பவுமே கையில் கிளவ்ஸ் போட்டுகிட்டு, முகத்துல துணி கட்டிக்குவேன்.எதுவும் பிரச்சனை இல்லாத பாடியா இருந்தா 10 நிமிஷத்தல அறுத்து, தைச்சி முடிச்சிடுவேன். ஆக்சிடெண்ட் ஆன பாடியும், கொலை செய்யப்பட்டு வர்ற பாடியும்தான் செய்யறதுக்கு கூட கொஞ்சம் நேரம் ஆகும். ஏன்னா அந்த பாடியெல்லாம் சரியா இல்லாம சிதைஞ்சி போயி வரும். இந்த மாதிரி பாடியயெல்லாம் பெரிசா ஒண்ணும் டெஸ்டுக்கு எடுக்க மாட்டாங்க.
சிதைஞ்சி போயி வர்ரத சரியா வச்சி, தச்சி, பேக் பண்ணி கொடுக்கணும். ஆனா, பாய்சன் கேஸ் வந்தாதான் விஸ்ரா எடுக்கனும். விஸ்ரானா, பொணத்தோட கிட்னி, ஈரல், உணவுக்குழல், குடல். இந்த நாலிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தனித்தனியா 4 பாட்டிலிலும், உப்புத்தண்ணி 1 பாட்டிலும் என மொத்தம் ஒரு பொணத்துக்கு 5 பாட்டில்ல எல்லாம் எடுத்ததும் தச்சி கொடுத்துடுவோம். இந்த விஸ்ராவ செங்கல்பட்டுக்கு டெஸ்ட்டுக்கு கொடுத்தனுப்புவாங்க.
ஒரு நாளில் எத்தனை உடல்கள் வரும், எத்தனை செய்வீர்கள்?
இதுக்கெல்லாம் கணக்கு கிடையாது. முன்னாடி சொன்ன மாதிரிதான் 10 நிமிஷத்தில இருந்து 20 நிமிஷத்தில ஒரு பாடிய அறுத்து முடிச்சுடுவேன். பெரும்பாலும் ராத்திரியில செய்றது இல்ல. சாயங்காலம் 6 மணிக்குமேல செய்ய மாட்டாங்க. ஆனா, எப்பவாது, ஏதாவது எம்.எல்.ஏ., மந்திரின்னு யாராவது சொன்னாங்கன்னா ராத்திரியில செய்யச் சொல்வாங்க. அந்த மாதிரி நேரத்துல மட்டும் ராத்திரியில செய்வோம். இத்தனைதான்னு கணக்கெல்லாம் இல்ல. எத்தனை இருக்கோ செய்வேன். ஒரே நாள்ல அதிகமா செஞ்சது போன வருசம், இங்க திண்டிவனம் பக்கத்துல செண்டூர் ஊர்ல குண்டுவெடிச்சு செத்துப் போனவங்கள கொண்டு வந்தாக. அதுலதான் ஒரே நாளில் அதிகமா 14 உடம்ப செஞ்சிருக்கேன்.
அறுத்து முடிச்ச பிறகு எப்படி உணர்வீர்கள்?
அதை என்னான்னு சொல்றது? யாருகிட்டயும் எதுவும் பேசவோ, சொல்லவோ தோணாது. எனக்குள்ள நானே அமைதியா ஆயிடுவேன். வெறுமையா இருக்கும். அறுத்து முடிச்சிட்டு நேரா வீட்டுக்குள்ள போக மாட்டேன். குளிச்சிட்டு, துணி மாத்திட்டுதான் வீட்டுக்குள்ளே போவேன். முடியல்லன்னா வீட்டுக்கு வெளிய மரத்தடியில் படுத்திருந்திட்டு, அப்புறம் எப்ப எழுந்திருக்கிறனோ அப்ப குளிச்சிட்டுதான் வீட்டுக்குள்ள போவேன். பாடி அறுக்க ஆரம்பிச்ச இந்த 13 வருசமா கறி எதுவுமே சாப்பிடத் தோணல. இதுமட்டுமில்லாம சாதாரண சாப்பாடே சரியா உள்ள போகமாட்டேங்குது. சாப்பிடணும்னு தோணமாட்டேங்குது.
ஏதாவது உடலைப் பார்க்கும்போது உங்களுக்கு சங்கடமா இருந்திருக்குமே?
அப்படி ஒண்ணும் பெரிசா தோணாது. ஆனாலும் சின்ன சின்ன குழந்தைங்க பாடிய பாக்கும் போதெல்லாம் மனசுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கும். எவ்வளவுதான் குடிச்சிருந்தாலும் என்னையும் அறியாம கண்ணுல தண்ணி கலங்கும். அதே மாதிரி கல்யாணம் ஆவாத பொண்ணு, பையங்க பாடிய பாத்தாலும் இந்த வயசில இப்படி ஆச்சே என்று சங்கடப்படும் மனசு.
அப்படி ஏதாவது உங்கள ரொம்ப பாதிச்சிருக்கா?
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கை இல்லாம ஒரு பாடி வந்திருந்தது. அதை முடிச்சி கொடுத்தேன். அன்னிக்கு ராத்திரி தூக்கத்துல என்னோட மகன் மணிமாறன் கையைப் பிடித்து இழுத்து, “அந்த பாடிக்கு கை இல்ல உன்னோட கையை குடுடா'' ன்னு கத்திக்கொண்டே அறுக்குற மாதிரி செஞ்சிருக்கிறேன். சத்தம் கேட்டு என்னோட மகனும், மகளும் எழுந்திருச்சி என்ன எழுப்பினாங்க. கனவுதான்னாலும் எல்லாரும் பயந்துட்டோம். அதிலிருந்து நான் வீட்டுல பசங்க கூட படுக்கறது இல்ல. வெளியில தனியா படுக்குறேன்.
உங்களுக்கு வருமானம் எப்படி?
எங்க கூட இருக்கிற நடராஜன் சார்கிட்டதான் சொந்தக்காரங்க கொடுப்பாங்க. செத்துப்போனவங்க கொஞ்சம் நல்ல வசதியா இருந்தா 600 இல்ல, 700 ரூபாய் தருவாங்க. அதுல நடராஜன் எனக்கு 60 இல்ல 70 ரூபாய் தருவாரு. என்ன மாதிரி இல்லாதப்பட்டவங்களா இருந்தா 300 இல்ல 400 ரூபாய் தருவாங்க, அதுல எனக்கு 30 இல்ல 40 ரூபாய் தருவாறு நடராஜன் சார். இதான் எனக்கு வருமானம். வேற வருமானம் எதுவும் இல்ல. இப்படி அடிக்கடி எனக்கு உடம்புக்கு முடியாம ஆவறதால, முன்ன மாதிரி தினமும் ஆஸ்பத்திரிக்குப் போகமுடியல. அதனால இப்ப என் பொண்ணு லெதர் கம்பெனிக்கு வேலைக்குப் போவுது, மாசம் 800 ரூபா சம்பளம். இத வச்சிதான் எங்க குடும்பத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன்.
உங்கள் உடலில் என்ன பிரச்சனை?
பொணத்த அறுத்து, பாத்துப் பாத்து மனசு மரத்துப்போச்சு. அறுக்கும்போது எதுவும் தோணாம இருக்க குடிக்க ஆரம்பிச்சது; பாடி கெடாம இருக்க ஆசிட், பவுடர் போன்ற கெமிக்கல்ஸ் போடறது, நாள் பட்ட அழுகிய பொணத்த அறுக்க அதிக கெமிக்கல் பயன்படுத்தினது. இது எல்லாம் சேர்ந்து கொஞ்சம், கொஞ்சமா சாப்பாடு சாப்பிட முடியாம போனது. சத்து இல்லாம, ரத்தம் இல்லாம ஆச்சி. ரெண்டு கையும் முழங்கை வரையில் வெளுத்துப்போய் வேற வீட்டு வேலை எதுவும் செய்ய முடியாம பாதிக்கப்பட்டிருச்சி. இப்ப கொஞ்ச நாளா துணைக்கு என்னோட பையனையும் நான் கூட்டிக்கிட்டு போய் செய்றேன். கூட வந்த பழக்கத்துல இப்ப 8ஆவது படிக்கிற என்னோட பையன் மணி மாறன் தனியாவே பாடிய அறுத்து, தைக்கிற வேலையை செய்றான். என்னால முடியாத நேரத்துல அவன்தான் போய் செய்றான்.
உங்களோட மகனும் இதே வேலையை செய்வது கஷ்டமா இல்லியா?
8 வது படிக்கிற பையன் இந்த வேலையை செய்றது கஷ்டம்தான். ஆனா வேற வழியில்லையே என்னா செய்றது? பள்ளிக் கூடமும் ஆஸ்பத்திரியுமா அவன் வாழ்க்கை போகுது. இப்ப அவன் படிக்கிற பள்ளிக்கூடம் 8ஆவது வரைக்கும் தான். வர வருசம் என்னா செய்றதுன்னு தெரியில.
இந்த 13 ஆண்டுகளாக பல்வேறு வகையிலான உடல்களை பிரேத பரிசோதனை செய்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதுவரைக்கும் 1000க்கும் மேலான பாடிய அறுத்திருக்கேன். பாடிய அறுத்தத மட்டுமே வேலையா பாக்கல. இந்த ஆஸ்பத்திரியில 13 வருசமா நான் பாத்தது எல்லாம் ரத்தமும், சதையும்தான். முதல்ல ஆஸ்பத்திரிய கூட்டி பெருக்கிட்டு இருந்தப்போ பிரசவ வார்டுல விழுற அவ்வளவு உதிரத் துணியையும் வெறுங்கையால அள்ளிக்கிட்டு போய் வெளியில் கொட்டியிருக்கேன். தூமத்துணியை அலசிப் போட்டிருக்கேன். அதுக்கப்புறம் பொணம் அறுக்க ஆரம்பிச்ச பிறகு, ஆக்சிடெண்ட் ஆகி தொடக்கூட முடியாம ரத்தக்குவியலா வர்றத எல்லாம் தூக்கியிருக்கேன்.மத்தவங்க பாக்கக்கூட முடியாத அழுகி, நாத்தம் அடிக்கிற சதையை எல்லாம் அறுத்து தைச்சிருக்கேன்.
13 வருசமா ஆஸ்பத்திரியில மத்தவங்களோட ரத்தமும், சதையுமா வாழ்ந்துகிட்டு இருக்கேன்னுதான் சொல்லணும். ஆனா, இப்ப எனக்கு ரத்தம் இல்லாம போச்சி. உடம்பு சதையெல்லாம் உருகிக்கிட்டே போகுது. இந்த 13 வருசமா தெனம் தெனம் நான் எத்தனையோ பேரோட வாழ்க்கையின் கடைசி கட்டத்த நல்லபடியா முடிச்சி வச்சிருக்கேன். எனக்கு எப்படின்னு தெரியல. இதையே நம்பி இருந்து வாழ்ந்துட்ட நான், என் பிள்ளைகளோட வாழ்க்கை எப்படியாகுமோன்னு இப்பத்தான் நினைக்கிறேன்.
சந்திப்பு: ரா. முருகப்பன்
நன்றி:
மார்ச் 2008
7 கருத்துகள்:
பேட்டியைப் படித்ததும் மனம் முழுதும் பாரமாகிவிட்டது.என்ன சொல்ல?
8 ஆவது படிக்கும் இவரது மகனும் இதில் ஈடுபடுத்தப்படுவது நிறுத்தப்படவேண்டும்.
எந்த வகையிலாவது உதவ முடிந்தால் நன்று.
பேட்டியை இங்கு தந்தமைக்கு நன்றி நண்பரே !
மனதை உலுக்கும் பேட்டி.
மனம் அல்லது மனிதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் "இந்தியா ஒளிர்கிறது" என்று பாடலாம்.
மற்றவர்கள் தலைகுனிய வேண்டிய விஷயம் இது.
நாளை முனியம்மாவின் வாரிசுகள் அரசுக்கு எதிராக செயல்பட்டால் அதை கண்டிக்கவும் நம்ம ரவிச்ரீனிவாஸ், ஜடாயு போன்றவர்கள் கிளம்பி விடுவார்கள்.
மனசுக்குச் சங்கடமா இருக்குங்க.
அந்தப் பையனுக்குப் படிக்க எதாவது உதவி செய்யலாமா?
மனசு சங்கடப்பட்டுப் போனது...
முனியம்மாவின் குடும்பத்திற்கு உதவ விரும்புகிற நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Editor,
Dalit Murasu,
203, Jeyam Block,
Chitra Complex apartments,
9, Choolaimedu high road,
Chennai -600 094.
மின்னஞ்சல்: ambedkar@md.vsnl.net.in
இணையம்: http://www.dalithmurasu.com/
என்ன கொடுமை சார் இது?
ஏதோ மொக்கைப் பதிவுன்னு நினைச்சு படிச்சா உலுக்கிட்டீங்களே.
அது சரி ராசா... சுடற விஷயம்தான் என்றாலும் மனசாட்சியை தொடற விஷயமா தொடற நீ யாரு? எந்த ஊரு?
பதிப்பித்த நண்பருக்கும், பதிலெழுதிய நண்பர்களுக்கும் வணக்கம்.
முனியம்மாவை பேட்டி கண்டவன் என்ற முறையில் சில கருத்துகளைச் சொல்ல நினைக்கின்றேன்.
இன்றுதான் தற்செயலாக, சென்னை நண்பர் ஒருவர் மூலமாக கேள்விபட்டு இப்பக்கத்தைப் பார்த்தேன்.
தங்களின் அனைத்து உணர்வுகளையும், ஆதரவையும் புரிந்தோம்.
தம்பி மணிமாறனை படிக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்தச் சூழலைவிட்டு, விடுதியில் தங்கி படித்தால்தான் அவனால் படிக்கமுடியும் எனக்கூறி முயற்சித்துவருகிறோம்.
தாயும், மகனும் பிரிவதற்கு மனமின்றி உள்ளனர். தொடர்ந்து பேசி வருகிறோம்.
எங்கு படித்தாலும் அவனுக்கு உதவிகள் அவசியம். உதவி செய்ய நினைப்பவர்கள் தலித்முரசையோ அல்லது என்னையோ தொடர்புகொள்ளலாம்.
மேலும், முனியம்மா பிரச்சனையில் தலையிடக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு முடிந்தவர்கள் மனு அல்லது கடிதம் எழுதலாம் அல்லது கோரிக்கை விடுத்து தங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.
மேலும் தொடர ira.murugappan@blogspot.com
ra.murugappan@gmail.com
9790037104
தோழமையுடன்,
ரா.முருகப்பன்.
கருத்துரையிடுக